
யாராவது ஏதாவது ஆறுதலாகச் சொல்வார்களா என்று தலையைத் தூக்கிப்பார்த்த பெரியன்னை, எல்லாருமே அரைக்கண் மூடியபடி மயக்கத்தில் ஆழ்ந்திருப்பது கண்டு எரிச்சல் அடைந்தார். அப்படியே திடீரென கண் விழித்தாலும் பேய்க்கனவு கண்டது போல அலறியபடி "பெரியன்னை மாதாஜீக்கு ஜே! ஜெய் ஹோ!" என்று கத்திவிட்டு மீண்டும் வாயைப்பிளந்தபடி தூங்கத்தொடங்கினர். கைத்தடி இன்றி நடக்கும் ஒரே தலைவரும் பேரிக்கா நாட்டின் நம்பிக்கைக்கு உரியவருமான மனோன்மணிசிங்கை நீங்க உங்க கருத்தை சொல்லுங்க" என்று பெரியன்னை கேட்டுக்கொண்டதும், "நமஸ்தே அம்மா! நமது கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்றால் ஒரு இளைய நட்சத்திரம் இப்போது அவசியம் தேவை. நாடு ரெண்டாம் பட்சம். பார்க்க சிவப்பா மூக்கும் முழியுமா வெள்ளையும் சொள்ளையுமா இருந்தா நமது மக்களை சமாளிச்சுடலாம், ஜெய் ஹோ!" என்று கூற, எல்லாரும் கோரசாக "அச்சா! பஹூத் அச்சா!" என்று கோரஸ் பாட, "சைலன்ஸ்! அப்படி யார் இருக்காங்க?" என்று மனோன்மணிசிங்கைப் பார்க்க "அம்மா! நீங்க தப்பா நினக்க கூடாது! நான் ரெண்டு நாளா தீவிரமா யோசிச்சுப் பார்த்ததுல நம்ம இளவரசர் தவிர வேறு யாருக்கும் இந்த தகுதி இல்லன்னு முடிவுக்கு வந்திருக்கேன்" என்று பவ்யமாகக் கூறினார். வேறு யாரை சொன்னாலும் உடனடியாக காரியக்கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து கடாசி எறியப்படுவது உறுதி என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர் அவர். "ஆ பேஸ் பேஸ்! அச்சா சாய்ஸ்! இளவரசர் ஜிந்தாபாத்! ஜெய் ஹோ! சூரத் மாதா கி ஜே!" என்ற கோசங்கள் ஏ.சி.அறையைப் பிளந்தன. இளவரசர் வேறு யாருமல்லர், பெரியன்னையின் மூத்த மகன்தான்.
ஹெலிகாப்டர் ஓட்டியாக வேலைபார்த்து தனது குடும்பத்திற்காக ஒரு நாளைக்கு 32 பர்கானா சம்பாதித்துக் கொண்டிருந்தவர் இளவரசர்; இந்த 32 பர்கானா வருமானத்தில் தனது குடும்பத்தாருக்கு பீட்சா, பர்கர், மட்டன், மீன் என சமாளிப்பதும், பென்ஸ் காருக்கு பெட்ரோல், ரீபோக், உட்லேண்ட்ஸ் ஷூ, டான் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் என வாழ்க்கை நடத்த ரொம்பவே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர் இளவரசர்; பல நேரங்களில் கடன் கழுத்து வரை நெறிக்கும்போது க்விஸ் வங்கியில் கஷ்டப்பட்டு சேர்த்து வைக்கும் பணத்தை எடுத்து செலவு செய்வார்; இவரை கட்சிக்குள் எப்படிக் கொண்டு வருவது என்ற பிரச்னை தலைதூக்கியது. சதிடில்லி ரயில்வே ஸ்டேசனுக்கு அடுத்துள்ள உலகப்பிரசித்தி பெற்ற சாக்கடையில் குதித்தாலும் குதிப்பேனே தவிர அரசியலில் குதிக்க மாட்டேன் என்று சபதம் எடுத்தவர் இளவரசர். அவரை சமாளித்து அரசியலில் குதிக்க வைப்பது எப்படி என்ற கேள்விதான் இப்போது அறையில் துர்நாற்றத்தை விடவும் பயங்கரமாக சுழன்றடித்தது.
தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக