ஞாயிறு, செப்டம்பர் 29, 2013

அழிவுப்பாதையில் தமிழருவி மணியன்


1)தமிழருவி மணியன். தனது வளமான சிந்தனையாலும் வலிய தமிழ்ப்பேச்சாற்றலாலும் தமிழ் மக்களின் அன்பைப் பெற்றவர். காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர். ஆம், காந்திய இயக்கம். இன்றைய தி ஹிந்து செய்தியேட்டின் முதல் பக்க செய்தி: இந்திய மக்களின் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் தீ வைத்துக்கொளுத்துவதே தம் முக்கிய  பணியாக சபதம் ஏற்றுள்ள பிஜேபி தலைவர் ராஜ்னாத் சிங்கை மணியன் அவர்கள் சந்தித்ததாகவும் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் பிஜேபி அணியில் விஜயகாந்த் கட்சி, வைகோ, வன்னியர் ராம்தாசு கட்சிகளை கொண்டு வருவதற்கான வேலைகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

2)இதற்கு இவர் சொல்லும் காரணம்: திமுக அதிமுக இரண்டுக்கும் மாற்றாக பிஜேபி அணியாம்! இது நியாயமான காரணமா? நாடாளுமன்றத்துக்கான தேர்தல் எனில் காங்கிரஸ், பிஜேபிக்கு மாற்று என்று யோசிப்பதுதானே சரியான சிந்தனையாக இருக்கும்? பிஜேபி மதவாத அதிதீவிர இந்துத்துவா கட்சி என்பதும் காங்கிரஸ் ஒரு மிதவாத இந்துத்துவா கட்சி என்பதும் மணியன் அவர்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை; ஆனால் தெருவில் இந்த இரண்டு கட்சிகளும் ஏதோ பரம்பரை எதிர்களைப்போல் கட்டிப்புரண்டாலும் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும் பிஜேபி ஆதரித்தே இன்று வரை வாக்களித்து வந்துள்ளது என்பதும், நாட்டின் பொருளாதார அஸ்திவாரத்தை இரண்டு கட்சிகளும் சேர்ந்தே அரித்து நாசம் செய்து வருகின்றன என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. ஆக உண்மையில் காங்கிரஸ் பிஜேபிக்கு எதிரான ஒரு அணியைக்கட்ட வேண்டும், அதற்குத்தான் மணியன் போன்ற காந்திய சிந்தனையாளர்கள் உதவி செய்ய வேண்டும்.

3)மேலும் தமிழகத்தில் மிகப்பெரும் சாதீய பிரிவினை சக்தியாக, தலித் மக்களின் விரோதியாக உருவெடுத்துள்ள பாமகவையும் இந்த அணிக்கு அழைத்துள்ளதாகவும் மணியன் அவர்கள் கூறியுள்ளார். இவை யாவும் உண்மை எனில் மணியன் அவர்கள் உண்மையில் மக்கள் விரோத காங்கிரசுக்குத்தான் (குறைந்த பட்சம் தமிழக அளவில்) மறைமுகமாக உதவி செய்கின்றார் என்பது பட்டவர்த்தனம்.

4)தன் வாழ்நாளெல்லாம் இந்து முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை போதித்து வந்தவரும் அந்த காரணத்துக்காகவே (பிஜேபியின் தாய்க்கழகமான) இந்து மகா சபையை சேர்ந்த கொடியவன் கோட்சேயால் கொல்லப்பட்டவருமான காந்தியடிகளின் பேராலான இயக்கம் பிஜேபி அணிக்கு ஆள் திரட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று மணியன் அவர்கள் விளக்க கடமைப்பட்டுள்ளார்; ஆசிய யூத இன மக்களை எதிரிகளாக பிரகடனம் செய்து லட்சக்கணக்கான யூத மக்களை கொன்று குவித்த ஹிட்லரை தம் லட்சிய புருஷனாகவும் அவனது கொள்கைகளை தம் லட்சியமாகவும் அவனது சின்னமான ஸ்வஸ்திக்கை தம் சின்னமாகவும் ஏற்றுக்கொண்டுள்ள ஆர் எஸ் எஸ்சின் கிளையான பிஜேபி; ஹிட்லரின் மறுவடிவமான நரேந்திரமோடி, அத்வானி வகையறா. காந்தியத்துக்கும் பிஜேபிக்கும் என்ன அய்யா தொடர்பு? மணியன் அவர்களே, உண்மையில் நீங்கள் யாருக்கு உதவி செய்கின்றீர்கள் என்பது உங்கள் மனதறியும்; ஆனால் தமிழகத்தில் காலூன்ற பிஜேபி கடந்த காலத்தில் திமுக அதிமுக கட்சிகளிள் தோளில் சவாரி செய்த்தும் அந்த இரண்டு கட்சிகளும் மதச்சார்பற்ற சக்திகளின் விமர்சனத்துக்கு ஆளானதும் தாங்கள் அறியாதது அல்ல; அதே விமர்சனத்துக்கு நீங்களும் ஆளாகின்றீர்கள்; தமிழக வரலாற்றில் உங்களது இந்த வேலை கரும்புள்ளியாக காலத்துக்கும் நிற்கும்.

5)ஒரு விசயம் இங்கே பொருத்தமாகப்படுகின்றது: தனது குறிப்பிட்ட கால கட்ட திரைப்படங்களில் தொடர்ந்து இஸ்லாமிய மக்களை பாகிஸ்தானிய உளவாளிகளாகவும் வெடிகுண்டு தீவிரவாதிகளாகவும் சித்தரித்து தமிழக மக்கள் மனத்தில் இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்புணர்வு ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர் விஜயகாந்த்; இது அப்பட்டமான ஆர் எஸ் எஸ்,பிஜேபி பிரச்சாரமே. இந்த கருத்தாக்கத்தை இன்று வரையிலும் கூட பொதுவில் நியாயமாக சிந்திக்கின்ற இந்து சகோதரர்கள் மனத்தில் இருந்து துடைக்க முடியவில்லை; வாஜ்பேயி அரசு இஸ்லாமிய மக்களை மனத்தில்கொண்டு வரைந்ததுதான் பொடா; இந்த சட்டத்துக்கு ஆதரவாக மூச்சைப்பிடித்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் ஒரு மணி நேரம் சங்கொலி செய்தவர் வைகோ; பொடாவின் முதல் பலியே அவர்தான் என்பது வரலாற்றுப்பாடம்! பிஜேபியின் அதிதீவிர இந்துத்துவா சிந்தனை மனு தர்மத்தில் இருந்து எழுவது; மனு தர்ம்ம் சாதீயத்தை கெட்டியாக பிடிக்கின்றது போதிக்கின்றது; தமிழகத்தில் மனுவின் நவீன அவதாரம் மருத்துவர் ராமதாஸ். இந்த மூன்றுபேரும் பிஜேபி அணியில் இருப்பது மிகவும் பொருத்தமானதே. அந்த வகையில் உங்கள் முயற்சி ஒரு அடையாளம் காட்டும் முயற்சிதான்.


6) இறுதியாக: நரவேட்டை மோடி திருச்சியில் தன் திருவாயால் ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டுஎன்ற நாமக்கல் கவிஞரின் பாடலை (யாரோ எழுதித்தந்ததை) வாசித்ததாக செய்தி. நாமக்கல் கவிஞரின் மற்றுமொரு பாடலை மணியன் அவர்களுக்கு நாம் நினைவூட்டுவோம்: ‘புத்தரையும் கர்த்தரையும் நபிகள் எனும் நாயகரையும்  கற்றும் கேட்டும் அறிந்திட்டோம்; அப்படியொரு உத்தமரை மகாத்மாவின் வடிவிலே கண்டுவிட்டோம்’. மணியன் அவர்களே, எந்த மாமனிதரின் பேரால் நீங்கள் இயக்கம் நடத்துகின்றீர்களோ அந்த மனிதரை குண்டுகளால் துளைத்த ஆர் எஸ் எஸ்சின் கோட்சேவின் இன்றைய வடிவமான நரவேட்டை மோடிக்கும் அப்பேர்வழியின் கட்சிக்கும் உங்கள் இயக்கமும் சிந்தனையும் துணைபோகின்றது; இக்கட்சி மொழிவாரி மாநிலங்கள் என்ற கோட்பாட்டையும் பல்வேறு கலாச்சாரங்கள் என்ற உண்மையையும் பல்வேறு மதங்கள், வழிபாடுகள் என்ற உண்மையையும் நிராகரிக்கின்றது. ‘இந்து, இந்தி, அகண்டபாரதம்’ என்ற ஒற்றைவாதத்தை முன்வைக்கின்றது; இத்தகைய பிற்போக்கு சக்திக்கே  உங்கள் இயக்கமும் சிந்தனையும் துணைபோகின்றது;தமிழக மக்கள் கடந்த காலத்தைப்போலவே நாளையும் மதவாதசக்திகளோடு உங்கள் இயக்கத்தையும் சேர்த்தே புறக்கணிப்பார்கள்; நீங்கள் உணரும்போது காலம் கடந்திருக்கும்.

ஞாயிறு, மே 19, 2013

'ஹலோ, ஸ்கோர் என்ன?’ (அல்லது) ப்ரீமியர் லீக்கும் வால்மார்ட் பூச்சிமருந்தும்


  1)  இந்தியா ஒரு விவசாய நாடு, கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பு என்று காந்திஜி சொல்லியிருக்கின்றார். மே 18 ஹிந்து நாளிதழில் பீ.சாய்நாத் எழுதியுள்ள கட்டுரை:’...1995 தொடங்கி இன்று வரை குறைந்தது 2,70,940 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். இது தேசிய குற்றப்பதிவுத்துறையின் தகவல்....2001 தொடங்கி ஒவ்வொரு நாளும் 46 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றார்கள், அல்லது ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒருவர் தற்கொலை செய்துகொள்கின்றார்... 2011இல் மட்டும் ஐந்து மாநிலங்களில் மட்டும் 15652 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். உண்மை நிலவரத்தை பல மாநிலங்கள் மறைத்து விடுகின்றன, அதாவது விவசாயிகள் தற்கொலையை வெளியே சொல்வதில்லை, பதிவதில்லை...’.
 2) பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டுகொண்டிருந்த நாடுகளில் ப்ரிட்டிஷ் அதிகாரிகளின் பொழுதுபோக்கிற்காக அவர்கள் இறக்குமதி செய்து விளையாடிய விளையாட்டுத்தான் கிரிக்கெட். ஆசியாவில் பெரும் மக்கள்தொகை கொண்ட இந்தியா, பக்கத்தில் உள்ள இலங்கை, ஆப்பிரிக்க கண்டத்தின் சில பகுதிகள் என கிரிக்கெட் விளையாடும் நாடுகளை எண்ணலாம். பிரிட்டனின் பக்கத்திலேயே இருக்கின்ற ஃப்ரான்சிலோ பிற ஐரோப்பிய நாடுகளிலோ கிரிக்கெட் ஏன் இல்லை என்று கேள்வி கேட்டுக்கொண்டால் இது புரியும். இந்த நாடுகளில் பிற கள விளையாட்டுக்களுக்கும் அவற்றை விடவும் தடகள விளையாட்டுக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றார்கள் என்பதை ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்கள் நிரூபிக்கின்றன; இந்தியாவில் உள்ள பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றும் அந்தந்த மாநில மக்கள் தத்தமது பொருளியல் வாழ்க்கை சார்ந்த, உடல் வலிமையைக்காட்டும் பாரம்பரிய விளையாட்டுக்களை பல நூறு வருடங்களாக விளையாடி வருகின்றார்கள்; இத்தகைய மண்ணின் விளையாட்டுக்களை ஊக்குவிக்க இதுகாறும் ஆண்ட மத்திய மாநில அரசுகள் என்ன முயற்சி செய்தார்கள் என்பதை ஆய்வு செய்தால் விரக்தியே மிஞ்சும். மாறாக சர்வதேச விளையாட்டுக்கள் இந்தியாவில் நடந்தால் எத்தனை கோடிகளை சுருட்டலாம் என்றுதான் திட்டமிடுகின்றார்கள்; தெரியாதவர்கள் சுரேஷ் கல்மாடியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

 3)  பழைய காலத்தில் டெஸ்ட் போட்டி என்று விளையாடுவார்கள், பல நாட்கள் நடக்கும். 1990களூக்கு பிறகு உலகமயமும் தாராளமயமும் தலைவிரித்து ஆடத்தொடங்கிய பொழுதில் பாரம்பரிய காசு பார்க்கும் வியாபாரத்துறையில் எப்படியும் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற உலகமய விதி தீவிரமாக அமலாக்கப்பட்டபின் அதன் வீச்சு விரிவாக்கப்பட்டு மொட்டைத்தலைகளிலும் பிருஷ்ட பாகத்திலும் சர்வதேச கம்பெனி விளம்பரங்கள் எழுதப்பட்டபின் அந்தந்த நாடுகளின் கலை பண்பாட்டுத்தளங்களிலும் உலகமயம் தலையிட்ட்து, நோக்கம் ஒன்றே ஒன்றுதான்: எப்படியும் காசு சம்பாதி. விளையாட்டுத்துறையையும் உலகமயத்தின் லாபவேட்கை விட்டுவைக்கவில்லை. விளைவாக மிகப்பெரும் மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் இயற்கையாகவே இருக்கின்ற மிகப்பெரும் வணிகச்சந்தையை கிரிக்கெட் என்னும் விளையாட்டு மூலம் வளைக்க திட்டமிடப்பட்டது, விளைவாக ஒரு நாள் போட்டிகள் நடத்தப்பட்டன; கிரிக்கெட் விளையாட்டு என்ற நிலையில் இருந்து நகர்ந்து சூதாட்டம் என்ற நிலையை எட்டியது; திரைமறைவில் போட்டியின் முடிவை மட்டும் இன்றி ஒவ்வொரு பந்து வீச்சையும் கூட சர்வதேச மாஃபியாக்கள் தீர்மானித்தார்கள்; சில நேரம் இது அம்பலத்துக்கு வந்தபோதும் கூட அது விரைவில் ஊடகங்களால் பின்னுக்குத்தள்ளப்பட்டு கிரிக்கெட் ஒரு புனிதமான பசு என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டது; உதாரணமாக தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஹிந்து நாளேடு, இந்த ஏட்டுக்கு என படிப்பாளிகள் மத்தியில் இப்போதும் ஒரு மரியாதை இருக்கின்றது, ஆனால் இந்த ஏடும் கூட கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது முதல் பக்கத்திலேயே (அன்றைய அரசியல் செய்திகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு) பரபரப்பான தலைப்புக்களோடும் புகைப்படத்தோடும் செய்தி வெளியிடுகின்றது என்றால் அது சொல்ல வருவது என்ன? மரியாதையான ஹிந்து கிரிக்கெட்டுக்கு முதல்பக்க முக்கியத்துவம் தந்தால் கிரிக்கெட் இப்போதும் ஒரு புனிதப்பசுதான், அதில் சூதாட்டம் எல்லாம் கிடையாது, அல்லது சூதாட்டத்தின் வலைக்குள் கிரிக்கெட் விழுந்துவிடாது, அது சூதாட்டங்களுக்கு இடம் கொடாத ஒரு இரும்புக்கோட்டைஎன்பதுதானே? உண்மை அவ்வாறு இல்லை;  இன்றைய தேதியில் ஆகப்பெரும் வணிகமயமாக்கப்பட்ட விளையாட்டு கிரிக்கெட்டுத்தான்; சூதாட்ட்த்தின் மறுபெயரும் அதுவே; விளையாட்டு வீரர்களை ஆடு மாடுகள் போல சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு ஏலம் விடும் கேவலம் கிரிக்கெட் தவிர வேறு எதிலாவது உள்ளதா? இப்படியான ஒரு சூதாட்டத்தில் சாதாரணமாக ஒரு விளையாட்டுக்கும் ரசிகனுக்கும் இருக்க வேண்டிய உறவின் தன்மை என்ன, மரியாதை என்ன? ஏலத்தில் எடுக்கப்பட்ட 22 மிருகங்களுக்கும் அவற்றின் பின்னால் இருந்து இயக்குகின்ற கறுப்புப்பண கார்ப்பொரேட்டுக்களுக்கும் இவர்களின் கூட்டாளிகளான சர்வதேச மாஃபியாக்களுக்கும் சாமானிய ரசிகனுக்கும் உள்ள உறவுதான் என்ன? இது ஏதோ கான்சி க்ரோஞே, ஸ்ரீசாந்த் போன்ற தனிநபர்கள் சார்ந்த விசயம், மற்றப்படி கிரிக்கெட் என்பது மனிதர் உணர்ந்து கொள்ள மனித விளையாட்டு அல்ல, அதையும் தாண்டி புனிதமானது என்பதாக ஊடகங்களும் காவல்துறை கெடுபிடிகளும் சாமானிய ரசிகனுக்கு நம்பவைக்க வேர்வை சிந்தி முயற்சி செய்கின்றன.

 4) விவசாயம். இந்திய விவசாயிகள் விவசாயத்தொழிலை விட்டு வெளியேற வேண்டும்; விவசாயத்தில் முதலீடு செய்துவிட்டு பின்னர் ‘ஐயோ நஷ்டம்என்று புலம்புவதை தவிர்க்க வேண்டுமெனில் விவசாயிகள் விவசாயத்தை கைவிட வேண்டும்”. இப்படி உபதேசித்தவர் விவசாய நிலங்களை அபகரிக்கத்திட்டமிட்ட ஏதோ ஒரு கார்ப்பொரேட் முதலை அல்லர், இந்தியக்குடியரசின் பிரதமர் மனுமோஹனேதான். உலகமயத்தின் தந்தையான அமெரிக்கா என்ன சொல்கின்றது? ‘இன்சூரன்ஸ் துறையை ஒழித்துக்கட்டு; விவசாயத்துறையில் இன்சூரன்ஸை ஒழி; மானியத்தை ஒழி’. இவ்வாறு போதிக்கின்ற அமெரிக்கா தன் நாட்டில் விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கின்றது, விவசாயத்துக்கு இன்சூரன்ஸ் கொடுக்கின்றது; அமெரிக்காவின் அடிமைகளான நமது பிரதமருக்கும் சிதம்பரத்துக்கும் மாண்டேக் சிங் அலுவாலியாவுக்கும் இது தெரியாத்து அல்ல; இதுவும் தெரியும், கிரிகெட்டுக்கு பின்னால் உள்ள மாஃபியா கும்பலையும் அவர்கள் அறிவார்கள், அரசு எந்திரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் அல்லவா? கோடிக்கணக்கான இந்திய மக்கள் கூட்டம் மத்திய அரசின் லஞ்ச ஊழல் லாவண்யங்களில் இருந்தும், ஏறும் விலைவாசிக்கான காரணங்களை அறியும் ஆராய்ச்சியில் இருந்தும், உலகமயம் தனியார்மயம் ஆகிய ஆட்கொல்லிகளின் கொடுமைகள் தந்திரங்களை  அறிந்துகொள்ளும் ஆய்வில் இருந்தும் திசைதிரும்பி பலமணி நேரங்கள் கிரிக்கெட் சூதாட்டமே கதி என்று கிடப்பது நமது பிரதமருக்கும் சிதம்பரத்துக்கும் மாண்டேக் சிங் அலுவாலியாவுக்கும் தேவையான ஒன்றாக இருக்கின்றது; அதனால்தான் பல கோடி ரூபாய்கள் புழங்குகின்ற ஊழல் நாற்றமெடுத்து வீசுகின்ற கிரிக்கெட் கண்ட்ரோல் போர்ட் தனியார்கள் கையில் இருந்தும் மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. இங்கேதான் அரசுக்கும் கார்ப்பொரேட்டுக்களுக்கும் மாஃபியாக்களுக்கும் ஆன கள்ள உறவு கொடிகட்டிப் பறக்கின்றது.

    5)  ஒரு இந்திய விவசாயிக்கு வேண்டியதெல்லாம் சில தேவைகள்தான்: தனது நிலத்தில் விதை விதைப்பது தொடங்கி அறுவடை முடியும் காலம் வரை போட்ட முதலீட்டை குறைந்தபட்சம் நஷ்டம் இல்லாமல் மீட்டு எடுக்க வேண்டும், இதற்கு அரசு கடன் கொடுக்க வேண்டும், கந்துவட்டியில் விழுந்துவிடாமல் அரசு காக்க வேண்டும், வறட்சி வெள்ளம் போன்ற இயற்கை அழிவுகள் நேரிட்டால் அரசு நஷ்ட ஈடு கொடுத்து தம்மைக் காப்பாற்ற வேண்டும். அவ்வளவே. அரசோ இந்தக் கோரிக்கைகளை சமூகம் சார்ந்த முக்கியமான விசயமாகப் பார்க்காமல் ஏதோ விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய விவசாயிகள் கூட்டு சேர்ந்து அரசாங்கத்தை ஏமாற்றிவிட திட்டம் போடுவதாக நினைக்கின்றதோ? கிரிக்கெட் சூதாட்டத்தில் புரளும் ஒரு நாள் கறுப்புப்பணம் கூட இதுபோன்ற விவசாயிகளில் செலவுகளுக்கு போதுமானதாக இருக்கும், லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்தவும் போதுமானதாக இருக்கும். ஆனால் அமெரிக்கா, உலகவங்கி, சர்வதேச நிதிநிறுவனம் போன்ற அமெரிக்கசார்பு நிதிக்கொள்ளையர்கள் இடும் கட்டளைகளை தலைமேல் சுமந்து நிறைவேற்றும் மனுமோஹன் கும்பல் இன்சூரன்ஸ் துறையையும் விவசாயத்துக்கு மானியத்தையும் ஒழிக்க ராப்பகலாக கடுமையாக உழைக்கின்றது. விளைவு விவசாயிகள் தமது தொழிலை கைவிட்டு நகர்ப்புறங்களுக்கு நாட்கூலி வேலைக்கு இடம்பெயர்கின்றார்கள்; அரசு கண்டுகொள்வதில்லை; இன்றைய தேதியில் கையில் பணம் உள்ளவனால் விலை உயர்ந்த அரிசியை வாங்கிவிட முடியும், ஆனால் பணம் இருந்தாலும் அரிசியோ பிற தானியங்களோ கிடைக்காமல் திண்டாடப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதனை உணர்ந்துதான் அரசு மிக எச்சரிக்கையாக ரேசன் முறையை ஒழித்து அதற்கான மானியத்தை ரேசன் அட்டைதாரரின் வங்கிக்கணக்கில் போட்டுவிடுவதாக சொல்கின்றது; அதாவது இந்த மானியத்தொகையை கொண்டுபோய் வால்மார்ட்டில் அரிசி கிலோ ஒரு ரூபாய்க்கோ இரண்டு ரூபாய்க்கோ வாங்கிகொள்ளலாம் என்று மனுமோஹனும் மாண்டேக்சிங்கும் நமக்கு சொல்கின்றார்கள்! ஒருவேளை இந்த விலையில் தரமான பூச்சிமருந்து கிடைக்கலாம். 


6) வெறியேற்றப்பட்ட ரசிகர்களோ டிக்கெட்டுக்களுக்கு ஆயிரக்கணக்கில்செலவு செய்கின்றார்கள்; அவர்களுக்கு எல்லாம் தெரியும், ஆனாலும் கூட ரயில்களிலும் பேருந்துகளிலும் ஸ்கோர் என்னஎன முன்பின் தெரியாதவர்களிடம் கூடக் கேட்டுக்கொடு திரிபவர்களின் மூளையில் என்ன உள்ளது என்று தெரியவில்லை. இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கையில் கிரிக்கெட் மட்டையுடனோ அல்லது கிரீஸ் தடவப்பட்ட பந்துடனோ பிறப்பதாக அவர்கள் நம்புகின்றார்கள்! அவ்வாறு என்னிடம் கேட்பவர்களுக்கு ‘எனக்கு கிரிக்கெட் தெரியாதுஎன்றும் சொல்லிருக்கின்றேன், ‘இரண்டு, மூன்றுஎன்றும் சொல்லியிருக்கின்றேன். கண்ணை சுருக்கி நெற்றியை உயர்த்தும் அவர்களிடம்நேற்று காஸ்மீரில் இரண்டு பேரை ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது, நேற்றைய ஸ்கோர் அதுதான்’ என்றும் ‘நேற்று ஆந்திராவில் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள், நேற்றைய ஸ்கோர் அதுதான்என்றும் சொல்லியிருக்கின்றேன்.  



செவ்வாய், பிப்ரவரி 19, 2013

இது விஸ்வரூபம் விமர்சனம் அல்ல...




வாஷிங்டன் மாநகர். நேரம் நள்ளிரவு 12 மணி. வெள்ளைமாளிகையின் வாசல் திறக்கப்படுகின்றது. வந்து நிற்கும் காரின் கதவுகளை மிகப்பணிவுடன் பணியாளர் திறந்து விடுகின்றார். உள்ளேயிருந்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் மதிப்பிற்குரிய செயலாளர்ஜி இறங்கி நேராக அமெரிக்க அதிபர் ஒபாமாஜியின் அறைக்கு செல்கின்றார்.  அங்கே நீள்வட்ட வடிவ நீண்ட மேஜையில் இரண்டு கைகளையும் முழங்கைகளால் ஊன்றியபடியும் இரண்டு உள்ளங்கைகளால் கன்னங்களை தாங்கியபடியும் அடக்கமுடியாமல் குமுறி குமுறி அழுதபடி இருப்பவர்   ஒபாமாஜி. இடதுபுறம் அமர்ந்திருக்கும் வெளியுறவுத்துறை செயலாளரும் வலதுபுறம் அமர்ந்திருக்கும் உள்துறைசெயலாளரும் (நமது பாஷையில் மந்திரிகள்) அவரை சமாதானப்படுத்த முயல்கின்றார்கள். “சரி விடுங்க, அழுது புரண்டு என்ன பிரயோசனம்? ஏதோ நம்மால் ஆன உதவிகளை அவங்களுக்கு செய்வோம், அழாதீங்க. இதோ பாருங்க, ஐ.நா.பொதுச்செயலாளரும் வந்துட்டாரு, இனிமே நாம் கவலைப்பட வேண்டாம், சர்வதேச சமுதாயமும் நம்ம பக்கம்தான் என்றபடியே ஐ.நா.செயலாளர்ஜியை வரவேற்க, அவரோ தன்னையும் மீறி ஏற்கனவே அழுதுகொண்டிருந்த ஒபாமாஜியை கட்டிப்பிடித்து பெருங்குரலெடுத்து இப்படியும் நடக்குமா? ஐயோ!வென கதறி அழுகின்றார். அருகில் உட்கார்ந்திருக்கும் புஷ்ஜி, கிளிண்டன்ஜி, வால்மார்ட் முதலாளிஜி, பெட்ரோலிய கம்பெனிகளான எக்சான் மோபைல், ப்ரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல், கொனொகோ ஃபிலிப்ஸ், செவ்ரோன், ஆக்சிடெண்டல், எமெர்சன் ஆகியவற்றின் முதலாளிஜிக்களும், கொகொகோலா முதலாளிஜி, பெப்சி முதலாளிஜி, யூனியன் கார்பைடு முதலாளியான வாரன் ஆண்டர்சன்ஜி, மான்சாண்டோ முதலாளிஜி, கார்கில் முதலாளிஜி, என்ரான் முதலாளிஜி, சி ஐ ஏ, எஃப் பி ஐ இயக்குனர்கள்ஜி அனைவரும் அவரை சமாதானப்படுத்த முயல்கின்றார்கள்.

********************
அதே நேரம் பாரத்தேசத்தின் தலைநகரம் டெல்லியில் ராணுவத்தலைமையகத்தின் முன் ஒரு கறுப்புக்கலர் கார் வந்து நிற்கின்றது. தரைப்படைத்தளபதி, விமானப்படைத்தளபதி, கடற்படைத்தளபதி மூவரும் சேர்ந்து காரின் கதவைத்திறக்க அதிலிருந்து இறங்கியவருக்கு விரைப்புடன் மூவரும் சல்யூட் வைக்கின்றனர். கைகுலுக்கி அவரை வரவேற்று உள்ளே ஒரு அறைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கே ஏற்கனவே ராஹுல்ஜி. மன்மோஹன்ஜி, சிதம்பரம்ஜி, அத்வானிஜி, ராஜ்நாத்ஜி, மோடிஜி, மாண்டேக்சிங் அலுவாலியாஜி, அனில் அம்பானிஜி, முகேஸ் அம்பானிஜி, டூஜி, த்ரீஜி ஆகியோரோடு உளவுத்துறையான ரா இயக்குனர்ஜியும் இவரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். காரில் வந்தவரை மன்மோஹன்ஜி கைகுலுக்கி வரவேற்க மறு விநாடியே வந்தவர் குமுறிக்குமுறி புரண்டு அழுகின்றார். “சரி விடுங்க, அழுது புரண்டு என்ன பிரயோசனம்? ஏதோ நம்மால் ஆன உதவிகளை அவங்களுக்கு செய்வோம், அழாதீங்க. இதோ பாருங்க, ஒபாமாஜியும் ஐ.நா.பொதுச்செயலாளர்ஜியும் அங்கே காத்துக்கிட்டு இருக்காங்க என்றபடியே அவரை சமாதானப்படுத்துகின்றார் மன்மோஹன்ஜி. அவர் இருக்கையில் அமர்ந்தவுடன் தளபதி சைகை காட்ட விளக்குகள் அணைக்கப்பட தலைக்குமேல் ப்ரொஜெக்டரில் இருந்து படம் விழுகின்றது திரையில். அதே படம் அதே நேரத்தில் வாஷிங்டனில் வெள்ளைமாளிகையிலும் தெரிகின்றது. திரையில் இராக்கின் தலைநகரான பாக்தாத். வீதிகளில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என லட்சக்கணக்கானோர் கூடி நின்று ஆக்ரோசமாக கோஷம் இடுகின்றார்கள். சதாம் உசேன் ஒழிக! கடலை மிட்டாயை ஒழித்துவைத்த சதாம் உசேன் ஒழிக! கடலைமிட்டாயை ஒழித்துவைத்து எங்களை பட்டினி போடும் சதாம் ஒழிக! என்று கோஷம் வானத்தை ரெண்டாகப் பிளக்கின்றது. பாக்தாத் மட்டும் இன்றி இராக் தேசமே இக்கோஷத்தால் திமிலோகப்படுகின்றது.  இது பற்றியெல்லாம் ஒருதுளிகூடக் கவலைப்படாமல் அரண்மணையின் சாப்பாட்டு அறையில் யாருக்கும் தரமாட்டேன் என்றபடியே தட்டுத்தட்டாக கடலைமிட்டாய்களை தின்றபடியே இருக்கின்றார் சதாம் உசேன்.

*****************************************
டெல்லியிலும் வாஷிங்டனிலும் படம் முடிகின்றது. இப்போது டெல்லியில் காரில் வந்தவர் மீண்டும் ஓவென அழத்தொடங்க ரா இயக்குனர் அவரை ஆசுவாசப்படுத்துகின்றார். அழாதீங்க! இப்போதான் நீங்க தைரியமா இருக்கணும்! இராக் குழந்தைகளுக்கு கடலைமிட்டாய் கிடைச்சே ஆகணும்கறதுல பாரத் சர்க்காரும் ஒபாமாஜியும் புஷ்ஜியும் உறுதியா இருக்கறோம்! இதுக்கு யாரு தடையா இருந்தாலும் அவங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிச்சுக்கட்டுறதுன்னு பாரத்மாதா மேல சத்தியம் செய்துருக்கோம்! இந்த ஆக்சனுல நீங்கதான் நேரடியா இறங்கப்போறீங்க! இதுக்கு ஐ.நா.செயலாளர்ஜியும்  அனுமதி கொடுத்துட்டாரு! இன்னிலேயிருந்து உங்க பேரு ராமசாமி ரஹ்மத்துல்லா காஷ்மீரி! இந்தாங்க ஃப்ளைட் டிக்கட். இன்னிக்கு ராத்திரி 12 மணி ஃப்ளைட்டுல நீங்க அமெரிக்கா போறீங்க! இதோ இந்தப் பையிலே கதக், கதகளி, கரகாட்டம், டப்பாங்குத்து டான்ஸ் காஸ்ட்யூம், ஷாம்பூ, கத்திரி, சவரக்கத்தி, சலங்கை, ஜதிக்கட்டை, தொப்பி, ஒட்டுத்தாடி, ஜிப்பா, 30 நாள்ல உருது, புஷ்டு, அரபி, ஹிந்தி கத்துக்கறது எப்புடி புக்ஸ் எல்லாம் இருக்கு! இது இல்லாம 20 டஜன் கைக்குட்டை தனியா இருக்கு! அழுதா துடைச்சுக்குங்க! ஆல் தி பெஸ்ட்! வாஷிங்டன்ல பாரத் தூதர் உங்களுக்காக எல்லா அரேஞ்மெண்டும் செய்வார்! பாரத் மாதா கீ ஜே! என்று சொல்ல, அனைவரும் வாசல் வரை வந்து வழியனுப்ப, ராமசாமி ரஹ்மத்துல்லா காஷ்மீரி காரில் ஏறி இந்திராகாந்தி இண்டெர்னேஷனல் ஏர்போர்ட்டுக்கு விரைகின்றார்.

********************************
வாஷிங்டன் வெள்ளைமாளிகை வாசல். ஒபாமாஜி, புஷ்ஜி உள்ளிட்ட பல ஜிக்களும் சி ஐ ஏ, எஃப் பி ஐ இயக்குனர்கள்ஜிக்களும் காத்திருக்க ஒபாமாஜியின் தனிச்செயலாளர் ஒபாமாஜியின் காதில் ஏதோ சொல்ல வாவ்! ஒண்டர்ஃபுல்! என்றவாறே பக்கத்தில் நிற்கும் ஜிக்களை உள்ளே அழைத்து செல்கின்றார். அங்கே அறையில் ஏற்கனவே ராமசாமி ரஹ்மத்துல்லா காஷ்மீரி உட்கார்ந்திருக்கின்றார். குட் மார்னிங் ஒபாமாஜி அண்ட் அதர் ஜீஸ்! நாம இறங்கப்போறது அதிரடி ஆக்சன்ங்கறத மறந்துடாதீங்க! யாருக்கும் துளியளவு கூட தெரியக்கூடாது! நம் எதிரிகள் உஷார் ஆகிடுவாங்க! அதனால பின் வாசல் வழியா வந்தேன்! என்று சொல்ல இண்டர்னேஷனல் பயங்கரவாதத்தை அடக்கும் அதிரடி ஆக்சனுக்கு ஒட்டுமொத்த குத்தகை எடுத்து திமிரோடு திரியும் சி ஐ ஏ, எஃப் பி ஏ இயக்குனர்கள் கூட வெட்கத்தில் தலை குனிந்தார்கள். வாவ்! இண்டியன்ஸ் ஆர் க்ரேட்! என்று ஒபாமாஜி வியக்க, உடனடியாக ஒரு பாராட்டு சான்றிதழ் டைப் செய்யப்பட்டு ரா.ர.காஷ்மீரிக்கு வழங்கப்பட்ட்து. கூட்டம் முடியும்போது பாரதப்பிரதமரிடம் இருந்து ரா.ர.காஷ்மீரிக்கு தொலைபேசி வந்தது. ரா.ர.காஷ்மீரி இறங்கப்போகும் அதிரடி ஆக்சனுக்கு பிரதமர் வாழ்த்து சொல்ல ரா.ர. ஜெய் ஹிந்த்! என்று பேச்சை முடிக்க ஒபாமாஜி முறைக்க ரா.ர.காஷ்மீரி தன் தவற்றை உணர்ந்து காட் சேவ் அமெரிக்கா! என்று முடிக்கின்றார்.

************************************
திட்டமிட்டபடி ராமசாமி ரஹ்மத்துல்லா காஷ்மீரி ஃப்ளொரிடா மாகாணத்தில் தோண்டப்பட்ட ஒரு பாதாளச்சாக்கடை வழியாக இராக் வந்து பாக்தாத்தின் நெரிசலான ஒரு மார்க்கெட்டின் மேலே வந்து விடுகின்றார். சதாம் உசேனுக்கு லாலிபாப் என்றால் கொள்ளை ஆசை என்று சிஐஏ மூலம்தெரிந்துகொண்டு ஒரு பை நிறைய லாலிபாப்புடன் சதாமின் அரண்மணைக்கு முன்னால் சலங்கை கட்டி கதக், ஒடிசி, கதகளி, டப்பாங்குத்து, கரகாட்டம் என கலந்துகட்டி டான்ஸ் ஆடுகின்றார். ஆடிக்கொண்டிருக்கும்போதே லாலிபாப்களை அள்ளிஅள்ளி வீச அது அப்படியே விரிந்து சதாமின் அரண்மணைக்கு முன்னால் மலைபோல் குவிந்துவிடுகின்றது. இதைக்கேள்விப்பட்ட சதாம் ராமசாமி ரஹ்மத்துல்லா காஷ்மீரியை அரண்மணைக்குள் வரச்சொல்கின்றார். சிஐஏ,எஃப் பி ஐ, ரா எல்லோரும் எதிர்பார்த்ததும் இதுதான். யாரப்பா நீ? என சதாம் வினவ ரா.ர.காஷ்மீரி என் சொந்த ஊர் கைபர் கணவாய், ஊர் ஊராப் போயி டான்ஸ் ஆடி ஜனங்களை சந்தோசப்படுத்துறதே என் தொழில் என சொல்கின்றார்.  ஏற்கனவே திட்டமிட்டபடி இருபது லாரி நிறைய லாலிபாப் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை சதாமிடம் இருந்து பெறுகின்றார். ஆனால் லாரியில் வந்து இறங்கியதோ அத்தனையும் வெடிகுண்டு, ஏவுகணைகள், துப்பாக்கிகள். லாரியை ஓட்டிவந்த டிரைவர்கள் கிளீனர்கள் எல்லோரும் சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீர்ர்கள். திட்டமிட்டபடி அரண்மணைக்குள் நுழைந்து சதாமைக் கைது செய்கின்றார்கள். சதாமின் படைவீர்ர்கள் சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த பதிலுக்கு இவர்கள் தாக்குதல் நடத்த சதாமின் ராணுவம் மொத்தமும் க்ளோஸ். 

சதாம் ஏற்கனவே ஆயிரம் வருடங்களாக பூமிக்கு அடியில் புதைத்து மறைத்து வைத்துள்ள கடலை மிட்டாய்களை சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீரர்கள் தோண்டியெடுத்து ஆய்வு செய்ததில் அது இராக் மக்களுக்கு ஒத்துக்கொள்ளாது, அலர்ஜி ஆகும் என்று தெரிகின்றது. எனவே கடலைமிட்டாய்களை ஆஃப்கானிஸ்தான் வழியாக அமெரிக்காவுக்கே கொண்டு செல்வதென்று முடிவானது. இதற்கு தடையாக இருக்கும் அனைவரும் சர்வதேச பயங்கரவாதிகள் என்று ஐ.நா.செயலாளர்ஜி டிவியில் அறிவிக்கின்றார். இராக் மக்களோ எங்கள் மண்ணில் விளைந்த கடலைமிட்டாய் எங்களுக்கே சொந்தம், எடுத்துச் செல்ல விடமாட்டோம் என  சி ஐ ஏ, எஃப் பி ஐ அதிரடைப்படைகளை எதிர்த்து வீதிகளில் போராடுகின்றார்கள். அதிரடி ஆக்சன் வீரர்கள் இவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றார்கள், ஆனால் சிஐஏ, எஃப் பி ஐ வீசும் குண்டுகளும் ஏவுகணைகளும் கூட்டமாய் கூடி நிற்கும் இராக் பெண்கள் குழந்தைகள் மீது  விழுந்தால் அவை உடனடியாக ரோஜா, மல்லிகை என புஷ்பங்களாக மாறிவிடும் மாயமும் நடந்தது.

அடுத்தகட்டமாக இராக்கில் இருந்து ஆஃப்கானிஸ்தான் வழியாக அமெரிக்காவுக்கு ரோடு போடும் வேலை ஆரம்பமானது. ஒரு காலத்தில் அமெரிக்காவின் பிசினஸ் பார்ட்னராக இருந்து பின்னர் பிசினசில் தகராறு ஏற்பட்டு பிரிந்து சென்ற ஒசாமாஜி ஆஃப்கானிஸ்தானத்தில் இருப்பதாக சிஐஏ, எஃப் பி ஐ, ரா மூலம் அறிந்த ராமசாமி ரஹ்மத்துல்லா காபூல் மார்க்கெட் நடுவில் நின்று கதக், கதகளி, பரதம், ஒயிலாட்டம் ஆட மறைந்து நின்று பார்த்த ஒசாமாஜியின் குடும்பம் மொத்தமும் வாயில் நுரை தள்ளி சாகின்றார்கள். கூடவே அல்கைதா, தாலிபான் பயங்கரவாதிகள் எல்லோரும் தாமாகவே முன்வந்து தற்கொலை செய்துகொள்கின்றார்கள். பாப்ரக் கார்மலை எந்த விளக்குக்கம்பத்தில் தூக்கில் போட்டார்களோ அதே கம்பத்தில் சதாம் உசேனையும் தூக்கில் போடுகின்றார்கள் சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீர்ர்கள். சே குவாரா, சால்வடார் அலண்டே, பாட்ரிஸ் லுமும்பா, கென் சாரோ விவா, யாசர் அராஃபத், நஜிபுல்லா ஆகியோர் புதைக்கப்பட்ட அதே இட்த்தில் சதாமையும் புதைத்துவிடுகின்றார்கள் சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீர்ர்கள்.
********************************
சென்னை. கூவம் நதியோரம் ஒரு பங்களாவிலிருந்து கேட்கின்றது அந்த ஒலி தாதா தைதை தாதா தைதை தகதிமி தைதை... உள்ளே சலங்கை ஜதிக்கட்டை சீராக ஒலிக்க ராமசாமி ரஹ்மத்துல்லா என்ற ராமத்துல்லா  ரஹ்மத்சாமி என்ற ரஹ்மத்சாமி ராமத்துல்லா ஏழெட்டுப்பெண்கள் சூழ கதக், ஒடிசி, கும்மியாட்டம் என்று கலந்துகட்டி ஆடிக்கொண்டிருக்கின்றார். தொலைபேசி மணி ஒலிக்கின்றது. தகதிமி தகதிமி தகதிமி தகதிமி என அபிநயம் பிடித்தபடியே தொலைபேசியை எடுத்து காதில் வைக்க,  “மிஸ்டர் ரா.ர.! உடனடியாக டெல்லிக்கு புறப்படுங்க! இரானில் ஒரு அதிரடி ஆக்சனில் இறங்க வேண்டியிருக்கு! உங்க வீட்டுக்கதவை திறந்து பாருங்க, ஃப்ளைட் டிக்கட் கிடக்கும்! உடனே புறப்படுங்க! இன்னிலயிருந்து உங்க பேரு... என எதிர்முனை பேசுகின்றது. தாதா தைதை தாதா தைதை...


ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

கமலஹாசன் அவர்களுக்கு (2)

அன்பிற்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு,

கருத்து சுதந்திரம் பற்றி விரிவாக பேசப்படுகின்றது. உண்மைதான். விஸ்வரூபம் வெளிவரட்டும். ஆனால் படைப்பாளிக்கு சுதந்திரமும் வேண்டும், சமூகப்பொறுப்பும் வேண்டும் என்பது கமலஹாசன் விசயத்தில் மட்டும் மறந்து விடுமோ?


1) ‘ஹுசேன் கடல்கடந்தால் ஹாசன் கடக்க கூடாதா?’ – கமலஹாசன். ஹுசேன் ஒருபோதும் ஒரு குறிப்பிட்ட மதத்து மக்களை தீவிரவாதிகளாக சித்தரித்து ஓவியம் தீட்டியது இல்லை. உன்னைப்போல் ஒருவனில் வரலாறு பேசுகின்றேன் என்ற பெயரில் கமல்ஹாசன் வரலாற்றை புரட்டவில்லையா? ஹுசேனுடன் தன்னை ஒப்பிட்டுபேசுவது துணைக்கு ஆள் சேர்க்கும் முயற்சி. 




2) ‘என் சொத்துக்கள் அத்தனையும் விற்றுவிட்டேன், இனி என்னிடம் எதுவும் இல்லை’-கமலஹாசன். இந்திய இஸ்லாமியர்களின் பொருளாதார நிலையை சொல்லும் ராஜீந்தர் சச்சார் குழுவின் அறிக்கையை அவர் வாசிக்க வேண்டும்.
3) தலித்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற சிறுபான்மை மக்களைவிடவும் முஸ்லிம்கள் மிக மோசமாகத் தாழ்ந்து கிடக்கிறார்கள்
• நாடு முழுதும் மிகக் குறைந்த வருமானம் முஸ்லிம்களுக்கு
• நகர்ப்புற ஏழை இந்தியர் சராசரி விகிதம் 22.8% ; ஆனால் முஸ்லிம்கள் 28%
• நீதித்துறையில் மிகப் பிற்படுத்தப் பட்டோர்/ தாழ்த்தபட்டோர் 23% மற்றும் 20%; ஆனால் முஸ்லிம்கள் வெறும் 7.8% மட்டுமே!
• 14 லட்சம் பப்ளிக் சர்வீஸ் பணிகளில் முஸ்லிம்கள் வெறும் 7.2%; அதுவும்கூட மிகக் கீழ்மட்டப் பணிகளில்தான்.
• நாட்டின் உயர் அரசுப் பணிகளில் வெறும் 3% (ஐ.ஏ.எஸ்: 3%; ஐ.எ•ப்.எஸ்: 1.8%; ஐ.பி.எஸ்: 4%)
• மாநில வாரியாக முஸ்லிம் மக்கள் தொகைக்கும் அவர்களது வேலைவாய்ப்பு நிலைக்கும் சம்பந்தமே இல்லாத நிலைமை நிலவுகிறது:

உதாரணம்:

அஸ்ஸாம்: முஸ்லிம்கள் 30.9% ; ஆனால் பணியில் 11.2% மட்டுமே
மேற்குவங்கம்: முஸ்லிம்கள் 25.2% ; ஆனால் பணியில் 4.2% மட்டுமே
உத்தரப்பிரதேசம்: 18.5%; 5.1%
பீஹார் : 16.5% ; 7.6%
தமிழ்நாடு : 5.6%; 3.2%
கேரளா : 24.7% ; 10.4%
ஆந்திரா : 9.2%; 8.8%
கேரளா மற்றும் ஆந்திராவில் மட்டுமே சற்றே அதிக விகிதாச்சாரம்.


3)’இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டுக் கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.’ இதுதான் இந்திய இஸ்லாமியர்களின் நிலைமை. பொருளாதாரத்தில் நலிந்து கிடக்கும் இஸ்லாமிய மக்களை, உங்கள் சொத்துக்களை அடகு வைத்து 100 கோடி செலவில் மோசமாக சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன சார்? (படம் பார்த்தவர்கள் அப்படித்தான் சொல்கின்றார்கள், சொல்வதை தள்ள முடியுமா?).


4) உங்கள் சக நண்பர்களான விஜயகாந்த், அர்ஜுன் (ஐயோ, இந்த ரெண்டு பேர் மட்டும் இல்லைன்னா இந்தியாவை பாகிஸ்தான்காரன் எப்போவோ திருடிட்டு போயிருப்பான்!) படங்கள் சித்தரித்தது என்ன? இந்திய இஸ்லாமிய மக்களுக்கு 24 மணி நேரமும் பாகிஸ்தானுக்கு உளவு சொல்வதைத்தவிர வேறு வேலையே இல்லை என்பதைத்தானே! கோடம்பாக்கத்தில் ஒட்டுத்தாடியும் குல்லாவும் அஞ்சு ரூபாவுக்கும் பத்து ரூபாவுக்கும் சல்லிசாக விற்கின்றது என்பதற்காக வில்லன்கள் எல்லாருக்கும் முஸ்லிம் பெயரை வைத்து முஸ்லிம்கள் அனைவரையும் தேசத்துரோகியாக்கியது என்ன நியாயம்? ஒரு படமா இரண்டு படமா, எத்தனை படங்கள் வரிசையாக? இவர்களோடு சேர்ந்து நீங்களும் இஸ்லாமியர்களை உன்னைப்போல் ஒருவனில் தீவிரவாதிகளாகத்தானே காட்டினீர்கள்?


5) திரை உலகமும் கலை உலகமும் கமலஹாசனுக்கு பின்னால் திரண்டு நிற்கின்றதாம். கருத்து சுதந்திரமாம். கருணாநிதி ஆதரவு தருவதுபோல் ஜெயலலிதாவுக்கு எதிராக கேவல அரசியல் நடத்த முயல்கின்றார்; ரஜினி கடிதம் எழுதுகின்றார். விஜயகாந்தும் அர்ஜூனும் தொடர்ந்து இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக பாகிஸ்தானிய உளவாளிகளாக சித்தரித்த போது இந்த கோடம்பாக்கத்து கலையுலகமும் கருணாநிதியும் ரஜினியும் இன்னபிற கருத்துசுதந்திர வக்கீல்களும் எங்கே போனார்கள்? விஜயகாந்தையோ அர்ஜூனையோ படம் எடுத்த இயக்குனர்களையோ ஒற்றை வார்த்தை சொல்லி கண்டித்ததாக ஏதாவது சான்று உண்டா? நீங்கள் மட்டுமல்ல, அரசியல் கட்சிகளும் இதை மௌனமாக வேடிக்கைதான் பார்த்தார்கள்; ஒருவேளை விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்க கூடும், அந்த நேரத்தில் அவரோடு கூட்டணி வைக்கவும் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வாக இருக்கலாம்.

6) ’வெளிநாட்டில் குடியேறுவேன்’-கமலஹாசன். கடல்கடந்து குடியேறும் அளவுக்காவது அவரிடம் பொருளாதார வசதி உள்ளது. ஆனால் பாபர் மசூதிக்குப்பின் நடந்த பல குண்டுவெடிப்புக்களுக்கு பின் தமிழகத்தின் பல பகுதிகளில் வாடகைக்கு குடியிருந்த முஸ்லிம் மக்களை வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர்கள் வற்புறுத்தி வெளியேற்றியதை நீங்கள் அறிவீர்களா? குறிப்பாக கோவை குண்டுவெடிப்புக்களுக்குப் பின் கோவையில் வசித்த இஸ்லாமிய மக்கள் கூட்டம் கூட்டமாக கோவையை விட்டு வெளியேறும் அளவுக்குத்தான் நிலைமை இருந்தது. நீங்களோ வெளிநாட்டில் குடியேறுவேன் என சொல்ல, தமிழக இஸ்லாமியர்களோ சொந்த நாட்டில் வீடில்லாமல் அலைந்தார்கள். 2002க்கு பிறகு குஜராத்தில் இஸ்லாமியர்களின் நிலை இப்போதும் இப்படித்தானாம்.

7) நீங்கள் எடுக்கும் காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் வரலாற்று ஆதாரங்கள் இருப்பதாக கூறுகின்றீர்களாம். உங்கள் விஸ்வரூபம் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம் இருக்கிறதாமே: “அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும்””””. ’’இதுக்கு ஆதாரம் உண்டோ உங்களிடம்? அரவாக் இனமக்களின் படுகொலை தொடங்கி அமெரிக்கா கட்டிய கட்டுகின்ற சமாதிகளின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டும் என்பது உங்களுக்கு தெரியாது என்று நாங்கள் நம்ப வேண்டுமா?

திங்கள், ஜனவரி 28, 2013

கமலஹாசன் அவர்களுக்கு...


கமலஹாசன் அவர்களுக்கு...

1) 
தீவிரவாதிகள் என்றால் துப்பாக்கி தூக்கி அடுத்தவனை சுட்டு ரத்தம் வரவைப்பவன் என்ற இந்திய/தமிழ்  சமூகத்தின் பொதுப்புத்தியையே நீங்களூம்  உன்னைப்போல் ஒருவனில் முன்வைத்தீர்கள். நன்றாக சவரம் செய்து கோட்டு சூட்டணிந்து இலக்கணம் தவறாத ஆங்கிலம் பேசி கடப்பாரை தூக்கி  வழிபாட்டுத்தலத்தை இடித்த (லாஹூர் கல்லூரியில் படித்த) எல்.கே.அத்வானிநியூக்ளியர் ஃபிசிசிஸ்ட்  டாக்டர் முரளிமனோஹர் ஜோஷி போன்றோர் தீவிரவாதிகள் இல்லையாவிடுதலை பெற்ற இந்தியாவில் முதல்முதலாக ஆர்கனைஸ் செய்யப்பட்ட கூட்டத்தை திரட்டி ஒரு வழிபாட்டுத்தலத்தை இடித்த கூட்டத்தின் தலைவர் அத்வானி தீவிரவாதி இல்லையாதேசப்பிரிவினைக்குப் பின் மிகப்பெரும் மதக்கலவரங்களுக்கு விதை போட்டது பாபர் மசூதி இடிப்பு எனில் அதற்கு காரணமான ஆர் எஸ் எஸ்பாஜக தீவிரவாத இயக்கங்கள் இல்லையாஅதன் தலைவர்கள் தீவிரவாதிகள் இல்லையாவரலாற்று அடிப்படையில் திரைப்படம் எடுப்பதாக சொல்லும் நீங்கள்  பாபர் மசூதி இடிப்பு குறித்து தனது அடுத்த படத்தை எடுக்க வேண்டும். ஒரு நாள் நள்ளிரவில் எப்படி மசூதிக்குள் ராமர் சிலை வந்தது என்பதில் இருந்து தொடங்க வேண்டும். படத்தை எடுத்துவிட்டு உத்தவ் தாக்ரேயிடம் போட்டுக்காண்பித்துவிட்டு வெளியிடக்கூடாது (பம்பாய் படத்தை சூப்பர் சென்சார் பால் தாக்ரேயிடம் காண்பித்து அப்ரூவல் வாங்கிய பின் மணிரத்னம் வெளியிட்டது போல).
 
2) 1990களில் புதிய பொருளாதாரம் என்ற பெயரில் இந்தியப் பொருளாதாரத்தை அமெரிக்க- ஐரோப்பிய நலன்களுக்கு அடகுவைத்த மன்மோஹன்சிங்-காங்கிரஸ் கூட்டணி செய்ததும் செய்வதும் தீவிரவாதம் இல்லையா? விவசாய நாடான இந்தியாவில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியது இதே கொள்கைகள்தான் எனில் இக்கொள்கையை வடிவமைத்துப்புகுத்திய மன்மோஹன்சிங்-காங்கிரஸ் கூட்டணி தீவிரவாதிகள் இல்லையா? ஜனவரி 1 முதல் வால்மார்ட் போன்ற ராட்ச்சர்களை இந்தியாவுக்குள் அனுமதித்து நமது தெருக்களின் சில்லறை வியாபாரிகளை அழிப்பது இக்கொள்கைதான் எனில் இக்கொள்கையை வடிவமைத்துப்புகுத்திய மன்மோஹன்சிங்-காங்கிரஸ் கூட்டணி தீவிரவாதிகள் இல்லையா?

3) 
சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில்தான் தான் படங்கள் எடுப்பதாக நீங்கள் கூறுகின்றீர்களாம். உங்களது உன்னைப்போல் ஒருவனின் வரலாற்று நிகழ்வுகளை முன்பின்னாக அடுக்கியது நேர்மையான செயலா? ’ஆரிஃப் பாய்பெஸ்ட் பேக்கரியில் நம்ம ஆளுங்களை கொளுத்திட்டாங்கஅதுனாலதான் நான் தீவிரவாதி ஆனேன்’ என்று அமானுல்லா கூறுவது புரட்டு அல்லவா? 2002இல் நடந்த பெஸ்ட் பேக்கரி கொடுமைக்கு 1993இல் மும்பையில் அல்லது 1998இல் கோவையில் அமானுல்லா வெடிகுண்டு வைத்தான் என்பது நீங்கள் செய்த வரலாற்றுப்புரட்டு அன்றி வேறென்ன? ஆர் எஸ் எஸ்-ம் பாஜக-வும் இதைத்தானே செய்கின்றார்கள்? என்ன பெரிதாக நீங்கள் வரலாறு பேசுகின்றீர்கள்? அதுவும் உங்கள் படம் உள்ளிட்ட தமிழ், இந்திப்படங்களில் இந்திய முஸ்லிம்களில்  தீவிரவாதிகளாக இருப்பவர்கள் பாகிஸ்தானிய உளவாளிகளாக இருப்பதும் தேஷபக்தி கொண்ட ‘நல்ல’ முஸ்லிம்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக இருந்து அதே ‘முஸ்லிம்’ தீவிரவாதிகளை கண்டுபிடித்து உதைப்பதும் எப்படி சார்? விஜயகாந்தும் அர்ஜூனும் இதைத்தானே தங்கள் படங்களில் செய்தார்கள்? குருதிப்புனலிலும் (அர்ஜுனின் பெயர் அப்பாஸ்) உன்னைப்போலிலும் இப்படித்தானே? தனக்கு சாதகமான ஒத்திசைவு கொண்டவராக இருந்ததால்தானே அப்துல்கலாமை இவரு ரொம்ப நல்லவரு’ அதாவது நல்ல முஸ்லிம்’ என்று ஆர் எஸ் எஸ்-ம் பாஜகவும் ஜனாதிபதி அந்தஸ்துக்கு உயர்த்தின? தீவிரவாதிகள் என்றால் இஸ்லாமியர்கள்தான் என்ற இந்திய/தமிழ்  சமூகத்தின் பொதுப்புத்தியில் முதலீடு செய்துதான் விஜயகாந்தும் அர்ஜூனும் லாபம் சம்பாதித்தார்கள், நீங்களும் உன்னைப்போலொருவனில் லாபம் பார்த்தீர்கள், இதில் என்ன உங்களிடம் பெரிய வரலாறும் அதற்கு ஆதாரமும் வேண்டிக்கிடக்கின்றது? (ஆர்.கே.செல்வமணி என்ற மிகப்பெரும் அறிவாளி டைரக்டர் புதியதலைமுறை விவாதத்தில் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு இப்படி சொன்னார்: ‘என் நண்பர் யார் தெரியுமா, அ.செ.இப்ராஹிம் ராவுத்தர்!’. அதாவது இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பெரீய்ய்ய உதாரணமாம்! இப்படிப்பட்ட அறிவாளிகள்தான் உங்களோடு இருக்கும் தமிழ்ச்சினிமா இயக்குனர்களாம்!)

4) தீவிரவாதிகளை அழித்துவிட்டால் தீவிரவாதம் ஒழிந்துவிடும்’ என்ற உங்களது உயரிய அறிவார்ந்த’ தத்துவத்தை ஏற்றுக்கொள்ளலாமாஅதுவும் அமெரிக்காவும் ஆர் எஸ் எஸ்-பாஜகவும் சொல்கின்ற இஸ்லாமிய தீவிரவாதம்’ குறித்து மட்டும்தான் நீங்கள் மீண்டும் மீண்டும் பேசுவீர்களாஅப்படியெனில் ‘இந்துதீவிரவாதிகளை ஒழித்துவிட்டால் இந்து தீவிரவாதம் ஒழிந்துவிடும்’ என்ற ஃபார்முலாவை நீங்கள் முன்வைப்பீர்களா? மெக்கா மசூதிமாலேஹாவ்ன்சம்ஜௌதா ரயில் போன்ற வெடிகுண்டு சம்பவங்களில் ஈடுபட்ட இந்துதீவிரவாத அமைப்புக்கள் குறித்து நீங்கள் பேச வேண்டும்தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பிகள்பொய் (ஒட்டு) தாடிகள் ஆகியவை காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்ட்து குறித்தும், ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பிகள்பொய் (ஒட்டு) தாடிகளுக்கு என்ன வேலை என்பது குறித்தும் நீங்கள் படம் எடுக்க வேண்டும். புனாவில் உள்ள கோபால் கோட்சேவின் வீட்டில் நாதுராம் கோட்சேயின் சாம்பல் இப்போதும் கரைக்கப்படாமல் கலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருவது ஏன் என்பது குறித்து நீங்கள் படம் எடுக்க வேண்டும்.

5
நீங்கள் பெரிய படிப்பாளி, படைப்பாளி. காந்தஹார்மசூத் அசார்முல்லா ஒமர்பின்லேடன் குறித்தெல்லாம் படம் எடுக்கும் நீங்கள், தமிழ்நாட்டுக்குள்ளேயே தாமிரபரணி தமிழர் படுகொலைஉத்தப்புரத்தில் தீண்டாமை சுவர் கட்டியது-அதை இடித்ததுஒரு மாசத்துக்கு முன் தர்மபுரியில் இந்து மதத்தை சார்ந்த வன்னியர்கள் அதே இந்து மதத்தை சார்ந்த தலித் மக்களின் வீடுகளை தீ வைத்து கொளுத்தியதுமுப்பது மைல் தொலைவில் உள்ள இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை ராஜபக்சே ராணுவம் படுகொலை செய்தது போன்றவையும் வரலாற்று நிகழ்வுகள்தான், நீங்கள் இவற்றையும் திரைப்படமாக எடுக்க வேண்டும். உங்கள் சொந்த ஊரான பரமக்குடியில் தேவர் சாதி மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே என்ன பிரச்னை என்பது குறித்தும், தேவர் குருபூஜை என்றால் துப்பாக்கியோடு காவல்காக்கும் தமிழக அரசு இம்மானுவேல் சேகரன் குருபூஜை என்று சொன்னாலே துப்பாக்கி சூடு நடத்துவது ஏன் என்பது குறித்தும் திரைப்படமாக எடுக்க வேண்டும். தேவைப்படும் எனில் இந்த நிகழ்வுகள் குறித்து உங்களுக்கு வரலாற்று ஆதாரங்களை கொடுத்து உதவ நான் தயார்.

6
நீங்கள் பெரிய படிப்பாளி, படைப்பாளி. காந்தஹார்மசூத் அசார்முல்லா ஒமர்பின்லேடன் குறித்தெல்லாம் படம் எடுக்கும் நீங்கள், ‘ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக நாங்கள் சொன்னது பொய்’ என்று அமெரிக்கா சொன்னதையும்அப்படியானால் அமெரிக்கா அங்கே படையெடுத்து சதாம் உசேன் உட்பட பல லட்சம் மக்களை படுகொலைகள் செய்தது புல் புடுங்கவா என்பதையும் படமாக எடுக்க வேண்டும். படைப்பாளியான உங்களுக்கு நானோ பிறரோ கட்டளை போட முடியாதுஉங்களை நான் வேண்டிக் கொள்ளலாம், அவ்வளவே.

7)இறுதியாக: விஸ்வரூபம் நான் இன்னும் பார்க்கவில்லை, எனவே கருத்து சொல்லவில்லை. விஸ்வரூபம் திரைக்கு வர வேண்டும் என்பதே என் ஆசை. கமலஹாசன் யார் என்பதை இஸ்லாமிய சமூகம் மட்டுமல்ல, தமிழ்ச்சமூகம் மொத்தமும் புரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?

வியாழன், ஜனவரி 10, 2013

’மாவோ நூல்கள்’ மொழிபெயர்ப்புக்கு ஆனந்தவிகடன் விருது 2012

                                                                                    


அன்புத்தோழர்களே!

அலைகள்-விடியல் வெளியீட்டகங்கள் இணைந்து 2012 செப்டம்பரில் வெளியிட்ட ‘மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்க’ளை (9         தொகுதிகள்) ஆனந்தவிகடன் 2012ஆம் 
ஆண்டின் 

சிறந்த மொழிபெயர்ப்பு
 நூலாக தேர்ந்தெடுத்துள்ளது. தொகுதிகள் 5, 9 ஆகியவற்றை நான் மொழிபெயர்த்துள்ளேன் என்ற மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். ஆனந்தவிகடனுக்கு நன்றி! மொழிபெயர்க்கும் வாய்ப்பை அளித்த அலைகள் சிவம் அவர்களுக்கும் நன்றி!


பிற தொகுதிகளை மொழிபெயர்த்த தோழர்கள் மயிலை பாலு, நிழல்வண்ணன், வான்முகிலன்,பாஸ்கர், பாலன், மணிவாசகம், தங்கப்பாண்டியன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!


வாழ்த்துகின்ற தோழர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல....!