புதன், மார்ச் 26, 2014

சாம்பல்தேசம்-3 (நெடுங்கதை)



தும்பை கடற்கரையில் இறங்கிய ராபர்ட் கிளைவ், பாரம்பரிய முறைப்படி கேட்வே ஆஃப் எல்பிஜிவழியே நுழைந்து வந்தார்; இந்த கேட் வழியே உள்ளே நுழைபவர்கள் தொலைதூரத்தில் உள்ள தலைநகர் சதிடில்லிக்கு நொடியில் சென்றடைந்துவிடலாம் என்பது இக்கேட்டின் சிறப்பு. கிளைவுக்கு தேசியக்கட்சியின் மூத்ததலைவர் மனோன்மணிசிங் மாலைமரியாதையோடு பூரணகும்ப மரியாதையும் செலுத்த, ராஷ்ட்ரீயக்கட்சியின் தலைவர் அருக்காணி ஜெனெரல் டயருக்கு மாலையிட்டு குஜராத்தில் இருந்து கொண்டுவந்த ரத்தத்தில் குங்குமம் இட்டது ஒரே கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததை உலகத்தில் உள்ள அத்தனை டிவி சானல்களும் நேரடியாக ஒளிபரப்பின.

சிமுக தலைவர் எப்போதும்போல எட்டுத்தொகை பத்துப்பாட்டு போன்ற நூல்களில் இருந்து அடிமையாய் இருப்பதில் அளவற்ற ஆனந்தம் இருப்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளி வீசி இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இப்படியேதான் எல்பிஜி குடியரசு இருக்கும், பேரிக்காவின் நலனின் பொருட்டே தனது குடும்பமாகிய கட்சியும் கட்சியாகிய குடும்பமும் கடந்த அறுபது வருடங்களாகப் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றது, இதெல்லாம் டான்சி ராணிகளுக்கு புரியாது என்ற உறுதிமொழியையும் கிளைவுக்கு அளித்தார். பொன்னிறத்தலைவன் காலத்தில் இருந்தே தனது கட்சியும் இதன் பொருட்டே பாடுபட்டுக்கொண்டிருப்பதாகவும் இதெல்லாம் சிமுக துரோகிகளுக்கு புரியாது என்றும் ஆனால் புரிய வேண்டியவர்களுக்குப்புரியும் என்றும் அதே இடத்தில் அஇசிமுக தலைவர் சூடான பதிலடி கொடுத்தார்; இந்த இருவரையும் கூட இருந்து பார்த்தவன் நான், இருவரும் துரோகிகள், என்னை ஏமாற்ற முடியாது; பேரிக்கா நாட்டின் நலனுக்காக பாடுபடுவதில் வீரேந்திரமூடியை  விஞ்ச எந்தக்கொம்பனாலும் முடியாது, நாடெங்கும் வீரேந்திரமூடியின் அலை வீசுது பார்! என கருப்புத்துண்டை இடுப்பில் கட்டியபடியே ஒரு ஆவேச நடனம் ஆடினார் புரட்சிப்புயல் புண்ணாக்கோ. இவை அனைத்தையும் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக்கொண்டிருந்த பேரிக்கா ஜனாதிபதி மனோன்மணிசிங்கை தொலைபேசியில் அழைத்து அவருக்கும் அவரது சகாக்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

அன்றைய இரவை மும்பானிஜியின் புதிதாகக் கட்டப்பட்ட 44 மாடிகொண்ட வீட்டில் கழித்தனர் ராபர்ட்கிளைவும் டயரும். தேசியக்கட்சி, ராஷ்ட்ரீயக்கட்சி, அந்தர் ராஷ்ட்ரீய, உப்பர் ராஷ்ட்ரீய, பாஹர் ராஷ்ட்ரீய, சிமுக, அஇசிமுக, ஆகிய கட்சிகளோடு தேசிய, அகில, திராவிட, புரட்சிகர, மக்கள், ஜனநாயக, முற்போக்கு, தொழிலாளி, விவசாயி...உள்ளிட்ட சொற்களை முன்னாலும் பின்னாலும் கொண்ட அனைத்துக்கட்சிகளின் தலைவர்களும் புரட்சிப்புயல் புண்ணாக்கோ, தமிழ்க்கிணறு மணியன், கம்பவுண்டர் அய்யா போன்றோரும் கீழ்த்தளத்தின் வரவேற்பறையில் ஜமக்காளம் விரித்து ஒற்றுமையாக தூங்கினார்கள்.     

மறுநாள் முறைப்படி சதிடில்லியில் எல்பிஜி குடியரசின் அனைத்துக்கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்த ராபர்ட்க்ளைவ், ஜெனரல் டயர் இருவரும் பேரிக்கா ஜனாதிபதியின் நிபந்தனையான ‘கடந்த அறுபது வருடங்களில் எல்பிஜி குடியரசை அதிக அளவில் சாம்பலாக்கிய கட்சியின் தலைவரே அடுத்த மத்திய பஞ்சாயத்துதலைவராக வர முடியும்என்பதை அறிவித்து தேர்தல் இந்த திசையில்தான் செல்லும் என்று முடிவு செய்தார்கள். தவிர ஒவ்வொரு கட்சிக்கும் ஆன தேர்தல் அறிக்கை பேரிக்காவில் ப்ரிண்ட் ஆகி வருவதாகவும் வந்தவுடன் கையில் கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார்கள். 
 
இதனை நேரடி ஒளிபரப்பு செய்த ஒண்டூத்ரீ சானலின் பிரபல செய்தியாளரும் தேர்தல் ஆரூட நிபுணருமான பிரமாதராய் வரும் தேர்தலில் தேசியக்கட்சிக்கும் ராஷ்ட்ரீயக்கட்சிக்கும் சரியான போட்டியிருக்கும் என்றும்  இரண்டு கட்சிகளுக்கும் இடையே வெற்றிதோல்வி என்பது 0.0001 சதவீதத்தில் ஊசலாடுவதாகவும் எப்போதும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது உள்ளங்கை விளக்கெண்ணெய் போல தெளிவாகி விட்டது என்பதால் வரும் முப்பது நாட்களும் ஜேம்ஸ்பாண்ட் பட ரேஞ்சுக்கு வினாடிக்குவினாடி சஸ்பென்ஸ்தான் என்றும் உசுப்பேத்தினார். 


ஆனால் அடுத்து அவர் கூறியது இந்த தேர்தலின் திசையையே மாற்றிவிடக் கூடியதாய் இருந்தது; ரயில்வே ஸ்டேசன், பஸ்ஸ்டாண்ட், பொதுக்கக்கூஸ், ரேசன்கடை, டாஸ்மாக் கடை, பீடா கடை, கிரிக்கெட் மைதானம், பள்ளிக்கூட அட்மிசன் போன்ற ஜனநடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் அவர் நடத்திய கருத்துக்கணிப்பில் மத்திய பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரோஸ் கலரில் கன்னமும் சிரிக்கும்போது கன்னத்தில் குழியும் விழும் இளைஞர் யார் நின்றாலும் 99.99 சதவீத வாக்கு கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் திட்டவட்டமாகத் தெரிந்தது. மக்களின்  எதிர்பாராத இந்த தீர்ப்பு கட்சிகள் இடையே பெருத்த அதிர்ச்சியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தி பீதி கிளப்பியது. கிளைவும் டயரும் பேரிக்கா ஜனாதிபதியும் கூட எதிர்பாராத இந்தத் திருப்பத்தால் அதிர்ச்சியில் உறைந்தார்கள். உலகமே ஒன்று நினைக்க எல்பிஜி மக்கள் வேறொன்றை நினைப்பார்கள் என்பது இந்த முறையும் உண்மையாகி விட்டதே! இவங்களப் புரிஞ்சுக்கவே முடியலியே!  திடீரென ரோஸ் கலர் தலைவருக்கு எங்கே போவது?

தொடரும்.... 

செவ்வாய், மார்ச் 25, 2014

சாம்பல்தேசம்-2 (நெடுங்கதை)



பேரிக்கா நாட்டின் தலைநகரில் கொள்ளைமாளிகை ரகசிய ஆலோசனை அரங்கம். நேரம் நள்ளிரவு 12 மணி.  இண்டர்நேஷனல் தண்டல்காரரும் கொலம்பசின் பத்தாவது தலைமுறைப் பேரனும் பேரிக்காவின் இன்றைய ஜனாதிபதியும் ஆன மாண்புமிகு ஜார்ஜ்ரீகன்புஷ்ஒபாமா நடுநாயகமாக உட்கார்ந்திருக்கின்றார். பேரிக்கா நாட்டின் சிறப்பம்சமே குடியரசுக்கட்சி ஜனநாயகக்கட்சி இப்படி எந்தக்கட்சியின் ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் கொலம்பசின் கொள்ளுப்பேரன்களாகவே இருப்பதை கடந்த ஐநூறு வருச கால வரலாறு தொடர்ந்து நிரூபித்து வந்துள்ளதாக மரபணுவியல், வரலாற்று, மானுடவியல், மருத்துவ, வேதியியல், கணிதவியல்.... ஆய்வாளர்கள் இன்றைய தினம் வரையில் சொல்லிச்சொல்லி மாய்ந்து போகின்றார்கள்; இதன் ரகசியம் டாவின்சி கோடை விடவும் சுவாரசியமானது என்றும் அடித்துச் சொல்கின்றார்கள்.


இடதுபுறம் ராபர்ட்க்ளைவும் வலதுபுறம் ஜெனரல் டயரும், தொடர்ந்து  வெளியுறவுத்துறை செயலாளரும்  உள்துறைசெயலாளரும் (எல்பிஜி தேச அகராதிப்படி மந்திரிகள்) உட்கார்ந்திருக்கின்றார்கள்.  அருகில் உட்கார்ந்திருக்கும் கிளிண்டன்ஜி, வால்மார்ட்ஜி, பெட்ரோலிய கம்பெனிகளான எக்சான் மோபைல், ப்ரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல், கொனொகோ ஃபிலிப்ஸ், செவ்ரோன், ஆக்சிடெண்டல், எமெர்சன் ஆகியவற்றின் முதலாளிஜிக்களும்கொகொகோலா முதலாளிஜி, பெப்சி முதலாளிஜி, யூனியன் கார்பைடு முதலாளியான வாரன் ஆண்டர்சன்ஜி, மான்சாண்டோ முதலாளிஜி, கார்கில் முதலாளிஜி, என்ரான் முதலாளிஜி, எல்பிஜி தேசத்து ஒண்ணாம்நம்பர் முதலாளிகளான அனில் தும்பானிஜி, முகேஷ் தும்பானிஜி, மோட்டாஜி, விட்டல்ஜி, வேதாந்தாஜி, டூஜி, திரீஜி, சி ஐ ஏ, எஃப் பி ஐ இயக்குனர்கள்ஜி அனைவரும் ஜனாதிபதியின் சொல்லுக்காக காத்திருக்கின்றார்கள்.



இது பேரிக்கா நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற விசயம் என்பதால் பொறுப்பை நம்பகமான ஒருவரிடம் மட்டுமே ஒப்படைக்க முடியும். நீண்ட விவாதத்துக்குப் பிறகு கடந்த பல நூறு ஆண்டுகால வரலாற்றையும் தெளிவாக ஆய்ந்த பின்னர் எப்போதும்போல் இப்போதும் ராபர்ட் கிளைவ்விடமே பொறுப்பை ஒப்படைப்பது என தீர்மானிக்கப்பட்டது. துணைக்கு வேண்டுமெனில் கிளைவ்வோடு ஜெனரல் டயரையும் அனுப்பலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது. காட்! சேவ் பேரிக்கா!என்ற தேசியகீதம் பாடப்பட்டதுடன் கூட்டம் முடிந்தது.



கூட்டம் வெற்றிகரமாக முடிந்ததைக் கொண்டாடும் விதத்தில் மதுப்பீப்பாய்கள் திறக்கப்பட்டன; இராக், ஆஃப்கானிஸ்தான், லெபனான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் இருந்து அன்போடு அழைத்துவரப்பட்ட பெண்களின் நடனம் விடியவிடிய நடந்தது.



அதிகாலையில் பேரிக்கா தலைநகர் கடற்கரையில் இருந்து கப்பல்கள் ராபர்ட் கிளைவ் தலைமையில் எல்பிஜி தேசம் நோக்கி புறப்பட்டன; கிளைவுக்கு மிகவும் பிடித்தமான ‘பர்ர்ர்ர்தேசி பர்ர்ர்ர்ர்தேசி ஜானா நஹிஎன்ற பாட்டு பயணமெங்கும் கர்ணகடூரமாக ஒலித்ததில் திமிங்கலங்களும் முதலைகளும் இன்னபிற கடல்வாழ் பயங்கர உயிரினங்களும் கப்பலின் பாதையிலிருந்து விலகி பல நூறு நாட்டிகல் மைல்கள் தப்பித்து ஓடியதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் துல்லியமாக காட்டின.



எல்பிஜி குடியரசின் அரபிக்கடலோரம் அமைந்த வரலாற்றுப்புகழ் பெற்ற நகரமும் குடியரசின் வணிகத்தலைநகரம், எல்பிஜியின்வால்ஸ்ட்ரீட், தலைஸ்ட்ரீட், கார்பொரேட் கொள்ளையர்களின் தலைநகர் போன்ற பெரும்புகழுக்கு உரியதும் ஆன தும்பை நகரின் துறைமுகத்தில் இந்த கப்பல்கள் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு கரை சேருமாறு பயணத்திட்டம் இருந்தது.




அந்த நாளும் வந்தது. இரண்டு நாளுக்கு முன்பாகவே கரையில் டெண்ட் அடித்துக்காத்திருந்த தேசியக்கட்சி, ராஷ்ட்ரீயக்கட்சி, அந்தர் ராஷ்ட்ரீய, உப்பர் ராஷ்ட்ரீய, பாஹர் ராஷ்ட்ரீய, சிமுக, அஇசிமுக, கம்பவுண்டர் கட்சி ஆகிய கட்சிகளோடு தேசிய, அகில, திராவிட, புரட்சிகர, மக்கள், ஜனநாயக, முற்போக்கு, தொழிலாளி, விவசாயி...உள்ளிட்ட சொற்களை முன்னாலும் பின்னாலும் கொண்ட அனைத்துக்கட்சிகளின் தலைவர்களும் புரட்சிப்புயல் புண்ணாக்கோ, தமிழ்க்கிணறு மணியன் போன்றோரும் தொலைதூரத்தில் கப்பலின் உச்சியில் பறக்கும் பேரிக்கா கொடி கண்ணில் பட்டதும் ‘அண்ணன் ராபர்ட் கிளைவ் வாழ்க! தளபதி ஜெனரல் டயர் வாழ்க! இந்தப்படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?போன்ற நரம்புகளை சுண்டிவிடுகின்ற ரத்தத்தை கொதிக்கவைக்கின்ற கோசங்களைப் போட்டனர்; 1947இல் ஜெனரல் டயர் கொடுத்துவிட்டுப்போன துப்பாக்கியை ஒருவர் பின் ஒருவராக வாங்கி வானத்தை நோக்கி சுட்டார்கள்; தான் கொடுத்துவைத்துவிட்டுப்போன துப்பாக்கியை இக்கட்சிகளின் தலைவர்கள் கட்சிவேறுபாடுகளை மறந்து கண்ணின்மணிபோல் பாதுகாத்து பத்திரமாக வைத்திருப்பதை அறிந்து டயர் மகிழ்ச்சியடைந்து தன் ரிவால்வரை எடுத்து பதில் மரியாதைக்காக வானத்தை நோக்கி சுட்டார். பட்டாசுகளும் வாணவேடிக்கைகளும் அரபிக்கடல் வானத்தை கிடுகிடுக்க வைத்தன.
தொடரும்...

சாம்பல்தேசம்-1 (நெடுங்கதை)



1757 ஜூன் மாதம் வங்காளத்தின் பிளாசியில் வங்காளத்தின் நவாப் சிராஜ் உத் தவ்லாவுக்கும் ஆங்கிலேய கவர்னரான ராபர்ட் க்ளைவுக்கும் இடையே நடந்த போர்தான் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின், அதாவது காலனிய ஆட்சியின் அஸ்திவாரக்கல்லாக அமைந்தது. நவாபின் தளபதி மீர் ஜாஃபரை க்ளைவ் விலைக்கு வாங்கினான்; மீர் ஜாஃபர் போரின் சரியான சமயத்தில் நவாபுக்கு துரோகம் செய்தான்; பொருளாதாரக்கோணத்தில் பார்க்கும்போது வங்காளம் இந்தியாவின் மிக முக்கியமான பகுதியாகும். அன்றைய இந்தியாவின் மிக வளமான மாகாணம் வங்காளமே. க்ளைவின் கைக்கு ஆட்சி வந்தபின் க்ளைவும் அவனது படைகளும் வங்காளத்தின் வளங்களை தங்களால் முடிந்த அளவுக்கு கொள்ளையடித்தார்கள். வணிகர்கள் ஆட்சியாளர்களாக மாறியதற்கு வங்கத்தின் செல்வமே காரணம்.
      “தமது சாம்ராஜயத்தை இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்கள் நிறுவினார்கள்; துரோகம், மோசடி ஆகியவற்றை இங்கே வளர்த்தே தமது ஆட்சியை இங்கே நிறுவினார்கள்-ஜவஹர்லால் நேரு.
................................................................................

              
எல்.பி.ஜி.குடியரசின் மத்திய பஞ்சாயத்துக்கு மூணேமுக்கால் வருசத்துக்கு ஒரு முறை நடத்தப்படும் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது ஆளும்கட்சியான தேசியக்கட்சி வரும் தேர்தலில் பலத்த அடி வாங்கும் என்றும் இத்தோடு அக்கட்சிக்கு பாடை கட்டப்படும் என்றும் மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான பத்திரிக்கைகளான செய்திகளை முந்தித்தரும் தினபுருடா, செய்திகளை பிதுக்கித்தரும் நடுநிசி புருடா, ஏ.பி.சி.டி., புதியகலவரம், ஏக்தோதீன்,அமாவாசை, 007 போன்ற டிவி சானல்களும் கணித்திருந்தது தேசியக்கட்சிக்கு வயிற்றில் புளி, வத்தக்குழம்பு என அனைத்தையும் கரைத்திருந்தது. எல்.பி.ஜி.குடியரசின் ஒவ்வொரு மத்திய பஞ்சாயத்து தேர்தலிலும் யாருமே எதிர்பாராத ஒரு விசயம் பலத்த மையப்பொருளாகி தேர்தலின் தலையெழுத்தையே தீர்மானித்து விடுவது வழக்கம். இப்படித்தான் கடந்த காலத்தில் நாட்டில் கடுகுக்கு கடும்பஞ்சம் வந்துவிடவே "தாளிக்க கடுகு இல்லை, மேயவோ கிடுகு இல்லை" "கடாய் இங்கே கடுகு எங்கே" போன்ற கோசங்கள் அப்போது ஆளும்கட்சியாக இருந்த எல்.பி.ஜி.தேசியக்கட்சிக்கு பெரும் சவாலாய் மாறியதும், "கடுகு கேட்ட அத்தான் பொடுகு வந்து செத்தான்" என்ற மையமான கோசம் நாட்டின் 365 மொழிகளிலும் புயலாக அடித்ததும், ராஷ்ட்ரீயக்கட்சி தனது வழக்கமான சின்னமான சப்பாத்திக்கள்ளியை கடாசி எறிந்துவிட்டு கடாய் சின்னத்தில் போட்டியிட்டதும், தேசியக்கட்சியின் ஆட்சி நாக்குத்தள்ள கவிழ்ந்ததும் வரலாறு. சில நேரங்களில் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்போ அல்லது பாதி இடங்களில் தேர்தல் முடிந்த நிலையிலோ ஆளும்கட்சியின் சூப்பர் ஸ்டார் தலைவர் செத்துப்போவதும் கூட எல்.பி.ஜி.குடியரசு ஜனநாயகத்தின் சிறப்பம்சம் என்று தேசியக்கட்சி, ராஷ்ட்ரீயக்கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே கோவில்கட்டிக் கும்பிடும் பேரிக்கா நாடும் பேரிக்கா நாட்டின் பொழுதுபோக்கு க்ளப்பான நைனா சபையும் சர்டிஃபிகேட் கொடுத்துள்ளன.

தேர்தல் நாள் நெருங்க நெருங்க முக்கியமான இரண்டு கட்சிகளின் தலைவர்கள் எப்போ சாவு வருமோ, எந்த ரூபத்தில் வருமோ என்று பயந்து விடியவிடிய லைட்டை போட்டுக்கொண்டு தூங்காமல் கண்முழிப்பதும்  நெருங்கிய நண்பர்களையும் கூட சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதும் கூட எல்.பி.ஜி.குடியரசு ஜனநாயகத்தின் சிறப்பம்சம் என உலகவட்டிக்கடை நிதியம் நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
மத்திய தேர்தல் கங்காணியம் தேர்தல் தேதி அறிவித்த நாள் தொடங்கி இந்த தேர்தலின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகும் பொருள் எதுவாக இருக்கும் என மக்கள் தெருமுனைகளிலும் டீக்கடைகளிலும் கூடிக்கூடிப் பேச ஆரம்பித்தார்கள்; தலைப்புச் செய்திகளை திரில் கதை ரேஞ்சுக்கு கவனிக்க ஆரம்பித்தார்கள்; மக்கள் இவ்வாறு உழைக்காமல் பேசிக்கொண்டே திரிவதால் இக்காலகட்டத்தில் மொத்த தேசிய உற்பத்தி (GDP) 0.987 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததாக பொருளாதாரப்புலி குளுவாலியாசிங் பேரிக்கா நாட்டில் இருந்து பேட்டியளித்தார்.

இந்தத் தேர்தலிலும் யாருமே எதிர்பாராத விதமாக ஒரு பொருள் எல்பிஜி மத்திய பஞ்சாயத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்க காத்திருந்தது.

.....தொடரும்

ஞாயிறு, மார்ச் 02, 2014

மாட்டுக்கறியினுள் ஒளிந்திருக்கும் சாதீய அரசியல்



1) முகனூல் பதிவில் நண்பர் தேவநாதன் மாட்டுக்கறி குறித்து சில விசயங்களை நினைவு படுத்தியிருந்தார்.  ஆட்டுக்கறியின் விலையோடு ஒப்பிட மாட்டுக்கறியின் விலை குறைவு. ஆனால் போதிய புரோட்டின் கிடைக்கின்றது. விசயம் என்னவெனில் முஸ்லிம் மக்களும் இந்துக்களில் தாழ்த்தப்பட்டவர்களும் மாட்டுக்கறி உண்பார்கள் என்பதாக மாட்டுக்கறியின் மீது சாதீய அசூயை அரசியல் பூசப்பட்டு பன்னெடுங்காலம் ஆகின்றது. அதாவது சுத்தசாதியினர் மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்கள் என்பதே இதன் உள் பிரச்சாரம்! இந்தப் பிரச்சாரத்திற்கு முஸ்லிம் மக்களும் காலப்போக்கில் பலியானார்கள் என்பதே வேதனை! ஐயோ, நாங்க மாட்டுக்கறி சாப்ட மாட்டோம் சார்!என்று சொல்லும் முஸ்லிம்களை நான் பார்த்திருக்கின்றேன்! அதாவது இவர்  சுத்தசாதிக்காரராம்! இஸ்லாமில் எங்கே ஐயா சாதி???

2) கேரள மாநிலம் ஒரு காலத்தில் சாதீயப்பிடிமானத்தின் கோட்டையாக இருந்தது என்பது வரலாறு! விவேகானந்தரும் அப்படித்தான் கருத்து சொன்னார். தொடர்ந்த சமூக விழிப்பு பிரச்சாரம், இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சி, செல்வாக்கு ஆகியவற்றின் காரணமாக அங்கே சாதீயக்கொடுமைகள் (தமிழகத்தோடு ஒப்பிடும்போது) இல்லையென்றே சொல்லலாம். தந்தை பெரியார் வெறும் கடவுள் மறுப்பு பிரச்சாரம் மட்டும் செய்யவில்லை, அவரது பணியில் கடவுள் மறுப்பு என்பது இரண்டாம் அல்லது மூன்றாம் இடத்தில்தான் இருந்தது; முதலிடம் சாதீய மறுப்பு, மூடப்பழக்கவழக்க மறுப்பு, சுயமரியாதை ஆகிவற்றுக்கான பிரச்சாரம், இரண்டாம் இடம் பெண்ணுரிமை, பெண்களுக்கு சொத்துரிமை, பால்ய விவாக மறுப்பு, விதவை மறுமணம், அதன் பின்னரே கடவுள் என்ற கருத்தாக்கத்தின் மீதான விமர்சனம், தாக்குதல் என்பது. இத்தனை பிரச்சாரத்தின் ஊடாக அவர் மாட்டுக்கறி அரசியல் பற்றி பேசியுள்ளார்.


3) சாதீயப்பிடிமானத்தின் பைத்தியக்கார சிறைச்சாலை என விவேகானந்தரால் வர்ணிக்கப்பட்ட கேரளாவில் இன்று ஹோட்டல்களில் மாட்டுக்கறி சர்வ சாதாரணம், ஆட்டுக்கறி இரண்டாம் பட்சமே. ‘உயர்
சாதி இந்து என்பவர்கள் தவிர்த்து அனைத்து இந்து சாதியினரும் மாட்டுக்கறி சாப்பிடுகின்றார்கள். நான் கேரளாவில் பணியில் இருந்த அரசு அலுவலக கேண்ட்டீனில் மாட்டுக்கறி கிடைத்தது என்று நான் சொன்னால் பல நண்பர்கள் வியப்புறக்கூடும்; இன்னும் பல நண்பர்கள் ‘சாமிக்கு அடுக்குமா? பாரத்மாதாவுக்கு அடுக்குமா?எனவும் அதிர்ச்சியடையக்கூடும். மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டு தமது பணிகளை அரசு ஊழியர்கள் செவ்வனே திறம்பட செய்து முடித்தார்கள் என்பதுதான் எனது பதிலாக இருக்கும்.


4) திராவிட இயக்கமும் தந்தை பெரியாரின் பல பத்தாண்டுகள் நெடிய பிரச்சாரமும் வேரூன்றிய தமிழகத்தில் மாட்டுக்கறிக்கு ஏன் இந்த அசூயை அரசியல் சாயம், எப்படி மாட்டுக்கறி சாதியுடன் முடிச்சுப்போடப்பட்டது என்பது குறித்த கேள்விக்கு, திராவிடக்கட்சிகளும் தந்தை பெரியார் மரணம் வரை அவருடன் நான் கூடவே இருந்தேன், அவர் கக்கூசுக்கு போனால் தண்ணீர் எடுத்து கொடுத்தது நான்தான், அவர் நடக்க தடியெடுத்துக் கொடுத்தது நான்தான் என்பதாக அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடியவர்களும் கொண்டாடுபவர்களும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்; குறைந்த பட்சம் ‘நான் திராவிட இயக்கத்துக்காரன், கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் திமுக தொடங்கிய அன்றுமுதல் நான் திமுககாரன், கறுப்புச்சட்டைக்காரன்என்று சொல்லிக்கொள்பவர்கள் எத்தனை பேர் மாட்டுக்கறி சாப்பிடுகின்றார்கள், சாதி மறுப்புக்காரர்கள் என்பதே கேள்விக்குறிதான்; என்னய்யா, நெத்தியிலே ரத்தமா?என தன் கட்சியின் அமைச்சர் ஒருத்தரை திமுக தலைவர் கிண்டல் அடிக்கும் அளவுக்குத்தான் அவர்களின் பகுத்தறிவு, பெரியார் பள்ளியின் அறிவு என்பதெல்லாம். 


5) அஇஅதிமுக-வை விடுங்கள், அவர்கள் தாய் மூகாம்பிகையை வழிபட்ட தலைவரின் வழிவந்தவர்கள்; திமுக தலைவர்களை பாருங்கள்; ஐயப்பனுக்கு மாலை போடுவது, தவறாமல் அந்த அம்மன் விரதம் இந்த அம்மன் விரதம் இருப்பது, செவ்வாய் வெள்ளிகளில் மாமிசம் சாப்பிடாமல் கட்டுப்பாடுகாப்பது, தமது கார்களில் மந்திரித்த துணிகளை, முடிகளை, எலுமிச்சம் பழங்களை கட்டுவது என ‘பெரிய பகுத்தறிவுப் பாரம்பரியத்துக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றார்கள்; மற்றொரு புறம் சத்தமின்றி விளம்பரம் ஏதும் இன்றி இடதுசாரிக்கட்சியினர் சாதி மறுப்பு திருமணம், விதவைகளை மறுமணம் செய்வது, கடவுள் மறுப்பு, சாதி மறுத்த காதல்திருமணத்தை தமது குடும்பங்களில் நடத்துவது, மாட்டுக்கறி சாப்பிடுவது என மவுனமாக ஒரு இயக்கத்தை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றார்கள்; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது மாநாடுகளில் மாட்டுக்கறி உணவை பரிமாறுகின்றது, கருவாடு கூழ் பரிமாறுகின்றது.

  
6) மாட்டுக்கறியை அருவருப்பாக பேசுபவர்கள் மத்தியில் எனது பிரச்சாரம் இப்படித்தான் இருக்கும்: நீங்கள் உபயோகிக்கும் மின்சாரம், பல்பு, ஃபேன், பயணிக்கும் கார், பேருந்து, ரயில், ஆகாயவிமானம், எழுதும் பேனா, தொலைபேசி, நவீன உலகின் கண்டுபிடிப்பான கம்ப்யூட்டர், இண்டெர்னெட், மருந்து, மாத்திரை, டிவி, ஏன், உங்களை டீசண்ட்டாக காட்ட உடுத்தும் பேண்ட், சட்டை, கோட், ஏடிஎம் எந்திரம்... என எல்லாமே மாட்டுக்கறியும் பன்றிக்கறியும் சாப்பிடுபவன் கண்டுபிடித்தவைதான்! ஐயோ, இவற்றை நான் தொட மாட்டேன் என்று சொல்லுங்களேன்?’