திங்கள், மே 11, 2020

சயாம்-பர்மா மரண ரயில் பாதை

1987 அல்லது 1988ஆக இருக்கலாம். தூர்தர்ஷனில் சனி இரவு 10 மணிக்கு மேல் உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். அப்படி ஒரு நாள் The bridge on the river Kwai என்று ஒரு கருப்பு வெள்ளை படத்தை பார்த்தேன். இயக்குனர் David Lean என்று தெரிந்து கொண்டேன். அவர் யாரென்று அப்போது தெரியாது. அது இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்தியாவுக்கு கிழக்கே நடந்த சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என்று மட்டும் தெரிந்து கொண்டேன். அப்போது இன்டர்நெட் எதுவும் கிடையாது. பின்னர் சில நூல்கள் படித்து ஓரளவு தெரிந்து கொண்டேன். பின்னர் இணைய வசதிகள் வந்தபின் டேவிட் லீன் பற்றியும் மரண ரயில் பாதை பற்றியும் தெரியவரும்போது படத்தில் சொல்லப்பட்ட விசயங்களை விட சொல்லாமல் விட்டது ஏராளம் என்பது புரிந்தது. அது திட்டமிடப்பட்ட ஒன்றா இல்லையா என்பது தெரியவில்லை. 


இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்தியா நேச நாடுகளின் ஒரு அங்கமான பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்தது. எதிரணியில் அச்சு நாடுகளில் ஒன்றான ஜப்பான் கிழக்கே சயாம் (தாய்லாந்து) தொடங்கி பர்மா வரை 420 கி.மீ. தொலைவுக்கு தரை, காடுகள், மலைகள், ஆறுகள், பள்ளத்தாக்குகள் மேல் வெறும் தேக்குமரக் கட்டைகளால் ஆன ரயில் பாதையை அமைக்க திட்டமிட்டது. 5 ஆண்டுகள் ஆகும் என திட்டமிடப்பட்ட இந்த மிகப்பெரும் வேலை 18 மாதங்களில் முடிக்கப்பட்டது! உண்மையில் மனித ஆற்றல் எவ்வளவு பெரியது என்பதை வரலாறு இந்த ரயில்பாதை மூலம் மெய்ப்பித்தது. நோக்கம், பர்மா எல்லை வழியே இந்தியாவின் மணிப்பூர் பகுதிக்குள் நுழைந்து இந்தியாவைக் கைப்பற்றுவது. கைது செய்யப்பட்ட நேச நாடுகளின் படை வீரர்கள் சுமார் 63000 பேரை ரயில் பாதை அமைக்கும் பணியில் ஜப்பான் ஈடுபடுத்தியது. இவர்கள் அமெரிக்கா,பிரிட்டன், கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, போலந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள். தனது படத்தில் டேவிட் லீன் இதை சொல்லியிருக்கிறார். அவர் சொல்லாமல் விட்டது என்ன? 

மலேசியாவில் இருந்து தமிழர், மலாய், சீனர் என 270000 பேர் ரயில் பாதை பணியில் கட்டாயமாக உழைக்க வைக்கப்பட்டனர். இவர்களில் அதிகமானோர் தமிழர்கள். அதாவது 60 விழுக்காட்டினர். சீ.அருண் அவர்கள் எழுதி தமிழோசை பதிப்பகம் 2009இல் வெளியிட்ட சயாம்-பர்மா மரண இரயில்பாதை - மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு என்ற நூலில் இது குறித்த ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவரே சொல்வது போல் மரண ரயில்பாதை குறித்து அன்றைய நாள் வரை ஒரே ஒரு நூல் மட்டுமே வெளிவந்துள்ளது. சண்முகம் என்பவர் எழுதிய சயாம் மரண ரயில்- சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் என்ற அந்த நூலையும் தமிழோசை பதிப்பகமே வெளியிட்டுள்ளது (2007). சீ.அருண் தனது நூலுக்காக சில ஆண்டுகள் கடுமையான ஆய்வு செய்துள்ளார். அதன் பலன் நூலில் நன்கு தெரிகின்றது. அன்று உயிருடன் இருந்த சிலரின் நேர்காணலை பதிவு செய்துள்ளது மிகச்சிறப்பு. 

ரயில்பாதை கட்டுமானத்தில் ஈடுபட்டவர்களில் 70 விழுக்காட்டினர் ஆசியத் தொழிலாளர்கள்தான் என்று பல சான்றுகள் கொண்டு நிறுவுகின்றார். இவர்களில் சுமார் 1,50,000 பேர் இறந்தார்கள். மிகத் துல்லியமான புள்ளிவிவரங்கள் இதுநாள்வரை கிடைக்கவில்லை என்பதும் உண்மை.இவர்கள் மலேயா,சயாம்,பர்மா, லாவோஸ்,இந்தியா, இலங்கை, சீனா, தைவான், வியட்நாம்,கொரியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ப்ருனே, ஜாவா ஆகிய ஆசிய நாடுகளின் தொழிலாளர்கள். 63000 போர்க்கைதிகள் மிகமிகப்பெரிய இந்த வேலைக்கு போதாதென்று கருதிய ஜப்பான் அன்று தன் அதிகாரத்தின் கீழ் இருந்த ஆசிய நாடுகளில் இருந்து வீட்டுக்கு ஒரு நபர் கட்டாயம் இந்த வேலைக்கு வர உத்தரவு இட்டது. மட்டுமின்றி வீடுகள் புகுந்து கண்ணில் பட்ட ஆண்கள் அனைவரையும் இழுத்துச் சென்றது. குடும்பத்தில் ஒருவரை இழக்க விரும்பாமல் இருவர் மூவர், ஏன், ஒட்டுமொத்த குடும்பமும் புறப்பட்டு சென்ற கொடுமைகள் நூலில் பதிவாகி உள்ளன. நூலை தொடர்ந்து வாசிக்க முடியவில்லை,காரணம் போர்களின் பெயரால் மனிதனை மனிதன் சுரண்டி உயிரோடு கொன்று குவிப்பதை நூல் நெடுகிலும் ரத்தமும் சதையுமாகக் காண முடிகின்றது.   

பிடிபட்ட தொழிலாளர்களை இராணுவ வண்டிகளில் ஏற்றி அருகிலுள்ள ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏற்றி சயாமிற்கு கொண்டு சென்றுள்ளார்கள். பெரும்பாலும் திறந்த பெட்டிகளில் ரயில் பாதை அமைக்க தேவையான பொருட்களோடு அளவுக்கு அதிகமான மனிதர்களை நிற்க வைத்தே 3 நாட்கள், 8 நாட்கள் என கொடூரமான முறையில் பயணிக்க செய்துள்ளனர். இயற்கை உபாதைகளை தணிக்கவும் கூட ரயில்களை நிறுத்தாமல் இயக்கியுள்ளார்கள். முதற்கட்ட மரணங்கள் இதுபோன்ற தொடக்க பயணங்களிலேயே நிகழ்ந்துள்ளன. பல நூறு பெண்களும் இதில் அடக்கம் என்பதை பதிவு செய்துள்ளார். சுண்ணாம்பு அரிசிக் கஞ்சி, பொறித்த கருவாடு, கீரைச்சாறு, இனிப்பு இல்லா காப்பி, பூசணி வேகவைத்த தண்ணீர், சோள ரொட்டி ஆகியவைதான் உணவு. உணவில் புழுக்களும் அழுக்குகளும் சாதாரணம். தொடக்கத்தில் பலர் வாந்தி எடுத்து உண்ண மறுத்தனர். உயிர்வாழும் பொருட்டு கேடுகெட்ட இந்த உணவை உண்டனர்.    


இறக்கி விடப்பட்ட இடங்களில் இருந்து ரயில்பாதை போடப்படும் இடங்களுக்கு காடுகளில் புகுந்து இரவும் பகலும் நடந்தனர். கட்டுமானப்பொருட்கள், கருவிகள் அனைத்தையும் சுமந்து சென்றனர். உணவும் நீரும் இன்றி பல நாட்கள் தொடர்ந்த இப்பயணத்தில் யானை, புலி தாக்கியும் பாம்பு, தேள், காட்டுப்பூச்சிகள் கடித்தும், நச்சு நீரை அருந்தியும், வாந்தி பேதியாலும், உடல் சோர்ந்தும் செத்து மடிந்தவர்கள் ஏராளம் எனில் மனம் பேதலித்து செத்து மடிந்தவர்கள் இன்னும் ஏராளம். இறந்தவர்களின் பல உடல்கள் புதைக்கப்படாமல் விடப்பட்டன. தொடக்கத்தில் எட்டு மணி நேர வேலை, பின் 12 மணி நேர வேலை, பின் 16 மணி நேர வேலை, பின் 24 மணி நேரமும் உழைப்பு என்று மனிதர்கள் ஓய்வின்றிக் கொல்லப்பட்டனர்.   

எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும் பெண்களுக்கு என்ன நடந்ததோ அதுதான் இங்கேயும் நடந்தது. ஜப்பானியர்கள் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினார்கள். மது விருந்துகளில் தமிழ்ப்பெண்களை நிர்வாணமாக ஆட வைத்து கூட்டாக பாலியல் வல்லுறவு செய்தார்கள். இப்படி கொடுமைகளுக்கு ஆளான பெண்கள் பலர் இறந்துள்ளனர், பலர் தற்கொலை செய்துள்ளனர். இக்கொடுமைகளைக் கண்ணுற்ற உறவினர்கள் பலர் மனம் பேதலித்தும் தற்கொலை செய்தும் உயிரை மாய்த்துக் கொண்டனர். ரயில்பாதை பணியின்போது பாறை வெடித்து சிதறியதால், சுமந்த மண்ணின் கனத்தால், கால் இடறி பள்ளத்தில் விழுந்ததால், மழைக்குளிரால், தீராத புண்ணால், உடல் உறுப்புகள் இழந்ததால், தப்பியோடும்போது சுடப்பட்டதால், குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில், மனம் பேதலித்து...இப்படி உயிரை விட்டவர்கள் பல்லாயிரம். இதன்றி ஜப்பானியர்கள் கொடுத்த தண்டனைகள் கற்பனை செய்ய முடியாதவை. 

உயிரோடு கொல்லப்பட்டவர்கள் பல்லாயிரம். தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு அடுத்து நோய்வாய்ப்பட்டவர்களின் குடில்கள் இருந்தன. அவர்களுக்கு உணவு மருந்து என்று எதுவும் கிடையாது. உயிரோடு சாகுமாறு விடப்பட்டார்கள். செத்த பின்னர் கொத்துக்கொத்தாக குழிகளில் தள்ளப்பட்டுள்ளனர். கூடவே கொஞ்ச உயிருடன் இருப்பவர்கள் பலரும் புதைக்கப்பட்டனர். இதன்றி பல நேரங்களில் நோயாளிகளின் குடில்களுக்கு இரவு நேரங்களில் எண்ணெய் ஊற்றி தீ வைக்கும் நிகழ்வுகள் நடந்துள்ளன. இவ்வாறு உயிர் விட்டவர்கள் இடும் ஓலம் அருகில் உள்ள குடில்களில் இருந்தவர்களை தூங்க விடாமல் செய்து பலரை மன நோயாளிகளாக ஆக்கியுள்ளதாக தெரிகின்றது.   

நூலில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இதே ரயில் பாதையில் பயணம் மேற்கொண்ட நிகழ்வை இவ்வாறு பதிவு செய்துள்ளார்: "1943ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் சிங்கப்பூரில் இருந்து கிழக்காசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார் நேதாஜி.... ஒரு சில தொழிலாளர்கள் மட்டுமே நேதாஜியை சந்தித்து பேசியுள்ளனர். இதனை பற்றியுள்ள முழுமையான விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை....தமிழ்த்தொழிலாளிகளுக்கு ஜப்பானியர்கள் இழைத்த கொடுமைகளை நேதாஜி நன்கு அறிந்திருந்தும் குறிப்பிட்ட சில அரசியல் நோக்கங்களுக்காக இதில் தலையிடவில்லை எனவும் கூறப்படுகின்றது".   

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சினை தொடர்ந்து ஜப்பான் சரண் அடைந்தது. பிரிட்டிஷ் படையினர் இப்பகுதிகளை கைப்பற்றிய பின்னர் ரயில் பாதை பணியில் ஈடுபட்ட எஞ்சியிருக்கும் தொழிலாளர்கள் அவரவர் ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். ஜப்பானியர் சரண் அடைந்தனர். போருக்கு பின்னர் நடைபெற்ற விசாரணையின் முடிவில் 32 ஜப்பானிய ராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மேற்கத்திய நாடுகளின் போர்க்கைதிகள் குறித்த விவரங்கள் பெருமளவு கிடைத்தது. ஆனால் ஆசிய தொழிலாளர்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களை யம் ஜப்பானியர்கள் அழித்து விட்டதால் உயிரை இழந்த ஏறத்தாழ ஒன்றரை லட்சம் ஆசிய தொழிலாளர்கள் பற்றி எந்த குறிப்பையும் காண இயலவில்லை என சீ.அருண் கூறுகின்றார்.   

காமன்வெல்த் நாடுகளும் அமெரிக்க, கனடா, ஐரோப்பிய நாடுகளும் தமது நாட்டு போர் வீரர்கள் பொருட்டு பின்னர் மேற்கொண்ட கனமான நடவடிக்கைகள் பற்றி சொல்லும் அருண், மலேசிய நாடு செய்தது என்ன என்று வருத்தத்துடன் பதிவு செய்துள்ளது கவனிக்க வேண்டியதாகும். உலகப்போர் குறித்த வரலாறாக மட்டுமின்றி புலம் பெயர்ந்து பிழைக்க சென்ற தமிழர்களின் வரலாறாகவும் இந்நூல் விளங்குகின்றது என்பது சிறப்பு.   

போர்களில் சாவதும் நோவதும் சாமானிய மக்களும் உழைப்பாளிகளும் மட்டுமே என்ற உலகப்பொது நியதியை சயாம்-பர்மா மரண ரயில்பாதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கின்றது.   

நூல் வெளியிட்டோர் தமிழோசை பதிப்பகம், 21/8,கிருஷ்ணா நகர், மணியகாரம்பாளையம் சாலை, கணபதி, கோவை 641012.

வியாழன், ஏப்ரல் 23, 2020

நான்கு புத்தகங்கள்

மார்கரிட்டா ஃபோபானோவா
(தமிழில்: மு.இக்பால் அகமது)


லெனின் தனது கடைசி தலைமறைவு வாழ்வை 1917 செப்டம்பர் - அக்டொபர் காலகட்டத்தில் பெட்ரோகிராட்டில் விபோர்க்ஸ்கயா ஸ்டொரோனாவில் உள்ள எனது வீட்டில் கழித்தார். அது நான்கு தளங்கள் கொண்ட ஒரு குடியிருப்பு. இப்போது அது லெனின் அருங்காட்சியகமாக உள்ளது.

அவரது ஒரு நாளுக்கான வேலை திட்டத்தை பேசும் போது முதல் வேலையாக அவர் எனக்கு சொன்னது இதுதான்: அன்றைய நாளின் அனைத்து நாளிதழ்களும் 9 அல்லது 10 மணிக்குள்ளாக எனக்கு வந்து விட வேண்டும். அதற்கு முன்பாகவே கிடைக்கும் எனில் என் அறையின் கதவின் கீழாக தள்ளி விடுங்கள்.

அத்தனை நாளிதழ்களையும் அவர் எப்படி வாசித்து முடிக்கின்றார் என்பது ஆச்சரியம் மிகுந்த ஒன்று. ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்கான தலைமை தாங்கும் பொறுப்பில் இருந்ததால் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்தார்.

எனது உணவு அறையின் வலது மூலையில் ஜன்னலில் புத்தக அலமாரியின் அருகே எனது எழுத்து மேசை இருக்கிறது. பெரிதும் விவசாயம் தொடர்பான நூல்கள் அடங்கிய ஒரு சிறு நூலகம் என்னுடையது. வெகு விரைவிலேயே எனது நூல்களின் தொகுப்பை புரிந்து கொண்ட லெனின் அவை குறித்து என்னுடன் உரையாடத் தொடங்கினார். பள்ளி செல்லும் சிறுமியான என் மகளின் மேசையைத்தான் அவர் பயன்படுத்தி வந்தார். விரைவிலேயே எனது பல நூல்கள் அவர் மேசைக்கு இடம் பெயர்ந்தன.

நிகோலாயேவிச் போக்தானோவ் என்ற ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் மீது லெனினின் கவனம் குவிந்தது. இவர் ஒரு விலங்கியல் அறிஞர். 1800களில் வாழ்ந்தவர். விலங்கியல் மட்டுமின்றி ரஷ்ய கிராமங்கள், விலங்குகள் குறித்த கதைகளையும் சித்திரங்களையும் அவர் தீட்டி இருந்தார். அவரது மறைவுக்குப் பின் அவர் நண்பர் பேராசிரியர் N.Vagner என்பவர் அவர் கட்டுரைகளை தொகுத்து From Russian Wildlife என்று நூலாக வெளியிட்டார்.


"போக்தானோவ் என் ஊர்க்காரர். நான் பிறந்தது சிம்பிர்ஸ்க் என்ற ஊரில். அவரும் நானும் ஒரே உடற்பயிற்சி பள்ளிக்குத்தான் சென்றிருக்கின்றோம். ஆனால் அவர் பட்டம் பெற்றது காசான் பல்கலைக்கழகத்தில். நான் வேறு பல்கலைக்கழகத்தில்...".

From Russian Wildlife என்ற அந்த நூலை பல முறை அவர் விரும்பி வாசித்தார். மிகுந்த புலமையுடன் எழுதப்பட்ட நூலின் பக்கங்களை எனக்கு சத்தமாய் வாசித்தும் காண்பித்தார். "மிக அகன்று பரந்த மத்திய ரஷ்யாவின் வெளிகளிலும் உக்ரைனின் ஸ்டெப்பி புல்வெளிகளிலும் வோல்கா நதியின் மேலுமாக" பறந்து திரிந்த சிறிய வெள்ளை ஆந்தையை பேசும் DEEP IN THE FOREST என்ற பகுதியை ரசித்து வாசித்தார்.  "அடர் காட்டின் சொந்தக்கார சீமாட்டியான" சிவிங்கிப்பூனையை ரசித்து வாசித்தார். "குட்டிப் பறவைகள் ஏன் கவலையில் ஆழ்ந்துள்ளன" என்ற கதை நான்கு அல்லது ஐந்து பக்கங்கள் மட்டுமே ஆனது, ஆனால் இக்கதையை தொடக்கம் முதல் முடிவு வரை பல முறை சத்தமாக வாசித்தார்.

The Little Starling என்ற புத்தகம் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. காரணம் இப்புத்தகம் அவரது ஊரான சிம்பிர்ஸ்க் பற்றியும் அவரது குழந்தைப் பருவத் த்தையும்   இளமைப் பருவத்தையும் ஞாபகப்படுத்தியதாம்.

போக்தோனோவின் மற்றோரு புத்தகமான Nature's Spongers ஒட்டுண்ணிகள் பற்றி சொல்கிறது. இத்தகைய விலங்குகளும் பூச்சிகளும் எப்படி பிற உயிர்களை சார்ந்து 'உழைக்காமல்' வாழ்கின்ற ன, குறிப்பாக விவசாயத்தை எப்படி பாழாக்குகின்றன என்று விரிவாக சொல்கிறார். நூலின் தலைப்பை லெனின் வெகுவாக ரசித்தார். மிகப் பொருத்தமான தலைப்பு என்று வியந்தார். "இயற்கையின் ஒட்டுண்ணி"களை சரியான முறையில் கையாளும் கலை சோசலிச அரசுக்கு மட்டுமே கை கூடும் என்றார். "நாம் ஆட்சிக்கு வருவோம், உடன் இயற்கை யின் எதிரிகளுக்கு எதிராக தாக்குதல் தொடுப்போம்" என்று சொல்கிறார்.

அக்டொபர் புரட்சிக்கு முன்பு இந்நூல் 18 முறை மறுபதிப்பு கண்டது. 1923இல் 19ஆவது மறுபதிப்பு. இந்நூல் மறுபதிப்பு செய்யப்பட வேண்டும் என அரசுப் பதிப்புத்துறைக்கு ஆலோசனை சொன்னது யார் என்று எனக்கு தெரியாது, ஆனால் இதில் லெனினின் பங்கு இருக்கும் என்பது உறுதி.

V.N.சுகசேவ் எழுதிய Swamps(சதுப்பு நிலம்) என்ற நூல். மேய்ச்சல் நில வேளாண்மை குறித்த படிப்புக்கு இந்நூல் பாடமாக இருந்தது. இது நான் வாசித்துக் கொண்டிருந்த நூல், உணவறை மேசையில் வைத்திருந்தேன். ஒரு நாள் லெனின் என்னிடம் சொன்னார், "தெரியுமா, அந்த நூல் சுவாரஸ்யமான ஒன்று, படித்து முடித்து விட்டேன்!  மிகப்பல சிந்தனைகளை உள்ளடக்கிய நூல். எழுதிய முறையோ மிக அற்புதம்! வாசிப்பவரை வசீகரிக்கும் வண்ணம் எழுதியுள்ளார். சதுப்பு நிலங்கள் உண்மையில் பெரிய அளவு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை. நம் தாய் நாடான ரஷ்யாவில் என்ன நடக்கிறது, பாருங்களேன், மிகப் பரந்த அளவுக்கு நம் நாட்டில் சதுப்பு நிலங்கள் உள்ளன, உண்மையில் இவை யாவும் இயற்கையான கரிச்சுரங்கங்கள், மிக மலிவான எரிபொருள் கிடங்குகள், இவற்றைக் கொண்டு செலவு பிடிக்காத மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்..."  பிற்காலத்தில் தோழர் கிரிசிஜானோவ்ஸ்கி சொன்னதை இங்கே நினைவு கூர்வோம்: "1919 டிசம்பர், லெனின் சொன்னார், கரியைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்வதற்கான சாத்தியம் மிக அதிகம். அத்தகைய வெப்பத்தை உற்பத்தி செய்யக்கூடிய கரி நம் நிலங்களில் அபரிமிதமாக உள்ளது, வெட்டி எடுப்பதும் அவ்வளவு செலவு பிடிக்க கூடியது அல்ல".

இந்நூல் பற்றி அவருடன் உரையாடும்போது வேட்டையாடுவதில் அவருக்கு அலாதி பிரியம் என்பதை கண்டுகொண்டேன். "ஒரு சதுப்பு நிலம், உங்களிடம் ஒரு துப்பாக்கி, உங்களின் இலக்குக்காக நீங்கள் காத்திருக்கின்றீர்கள்....ஆகா! என்ன ஒரு அனுபவம்!".

இந்த நூலை அவர் தன் மேசையில் வைத்திருந்தார். ரஷ்யாவின் சதுப்பு நிலங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்ற சிந்தனை அவரை விட்டு நீங்கவே இல்லை என்பதை நான் நன்றாக உணர்ந்தேன். எங்கள் உரையாடல்களில் இது பற்றி பல முறை பேசலானார்.

நான்காவது நூல் The New Earth (புதிய பூமி).  William S Hardwood   என்பவர் அமெரிக்காவின் நவீன விவசாயம் குறித்து எழுதிய நூல் இது.

ஒரு நாள் இரவு உணவுக்கு பின்னான உரையாடலின் போது நூல் அலமாரியின் அருகே நின்று கொண்டு என்னுடன் பேசினார்: உங்கள் நூலகத்தில் ஒரு அற்புதமான நூலை கண்டெடு த்தேன். அடடா! சும்மா சொல்லக்கூடாது! நூலின் அளவும் கச்சிதம், உங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொள்ள லாம். நாம் ஆட்சிக்கு வரும்போது இந்நூலை நிச்சயமாக மறுபதிப்பு செய்வோம். விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் இந்நூலைப் பற்றி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இந்நூலில் ஆசிரியர் சொல்லும் ஆலோசனைகள், அவர் வைக்கும் வாதங்கள் ஆகியவற்றை விவசாயத்தொழிலில் ஈடுபடும் அனைவரும் மட்டுமின்றி வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை விஞ்ஞானிகள் ஆகியோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

1918. சோவியத் அரசு நிர்வாகம் மாஸ்கோவுக்கு இடம் பெயர்ந்தது. லெனின் என்னை தொலைபேசியில் அழைத்தார், புதிய பூமி என்ற அந்த நூல் என்னிடம் இருந்தால் க்ரெம்ளினுக்கு அனுப்ப முடியுமா என்று கேட்டார். பேராசிரியர் திமிர்யாசேவ் என்பவருக்கு நூலை அனுப்பி வாசிக்குமாறு வேண்டியதுடன் நூலுக்கு முன்னுரை ஒன்று எழுதுமாறும் பணித்தார். நூலை மிக விரைவில் வெளியிட வேண்டும் என்றும் கூறினார். பேராசிரியர் நூலுக்கு முன்னுரை எழுதியதுடன் நூலின் தலைப்பை Regenerated Land என்றும் மாற்றினார். 1919இன் முற்பகுதியில் நூல் வெளியானது.

நூலின் இரண்டு பிரதிகளை லெனின் எனக்கு அனுப்பியிருந்தார். இந்நூலின் பல பிரதிகளை அவர் எப்போதும் தன் மேசை மீது அடுக்கி வைத்திருப்பார். தன்னைக் காண வருபவர்களிடம், குறிப்பாக விவசாயத் தொழிலின் முன்னோடிகளிடம் நூலின் முக்கியத்துவம் குறித்துப்பேசி நூலை மிகப் பரவலாக கொண்டு செல்ல வலியுறுத்துவார்.

லெனினுடன் வேறு பல நூல்கள் குறித்தும் உரையாடி இருக்கின்றோம். நீங்கள் லெனினுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தால், அது மிகக் குறைந்த நேரமே என்றாலும் நீங்கள் புதிய சில விசயங்களை தெரிந்து கொள்வீர்கள். அவர் பிறரைப் போல் இல்லை, அவருடன் உரையாடுபவரை கவனமாக கேட்பார், உரையாடுபவரின் கேள்விகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார், உரையாடலில் தொடர்பான பல புது விஷயங்களை சேர்த்து உரையாடலை செழுமைப் படுத்துவார்.

(Lenin And Books, 1971ஆம் ஆண்டுப் பதிப்பில் ( Progress Publishers) இருந்து எடுக்கப்பட்ட கட்டுரை)

(ஏப்ரல் 22 லெனின் பிறந்த நாள், ஏப்ரல் 23 உலக புத்தக நாள்)

புதன், ஏப்ரல் 15, 2020

மஞ்சள் பிசாசின் மனிதவேட்டை

எல்லாம் என்னுடையது என்றது தங்கம்.
எல்லாம் என்னுடையது என்றது வாள்.
எல்லாவற்றையும் என்னால் வாங்க முடியும் என்றது தங்கம்.
எல்லாவற்றையும் என்னால் வாங்க முடியும் என்றது வாள்.

எல்லாவற்றையும் வாங்குவதற்காக வாள் பலத்தைக்கொண்டு தங்கத்தை பறித்துக்கொள் என்பதே இந்த உரையாடல் சொல்லும் செய்தி. இந்த கவிதையை எழுதியவர் ரஷ்யக்கவிஞர் புஷ்கின்.

1846. அமெரிக்காவின் பிற்பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம்கூட்டமாக வெளியேறுகின்றார்கள். எதற்கு? தங்கவேட்டைக்காக! ஜேக்கப் டோனர் என்பவருடன் வந்தவர்கள் டோனர் பார்ட்டி என்று அழைக்கப்பட்டார்கள். 91பேரும் 1846-47இல் சியேறா நெவேடா என்னும் பனிப்பிரதேசத்தில் உணவும் பிற ஆட்களும் இன்றி. மேலும் பயணத்தை தொடர முடியாமல் மாட்டிக்கொண்டனர். வாழ்வதா சாவதா என்ற போராட்டம். நாகரிகம் அடைந்த மனிதகுல வரலாற்றில் மரணமுற்ற மனிதனின் பிணத்தை அல்லது ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு பிணத்தை சாப்பிட்ட கொடுமை இங்குதான் நடந்தது.

கலிபோர்னியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் அலாஸ்காவிலும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும் அங்கெல்லாம் குடியேறிய மக்கள் அங்கு பூர்வகுடிகளாய் இருந்த மக்களை கொடூரமாக அழித்தார்கள்.   500 ஆண்டுகளுக்கு முன் கொலம்பஸ் நிகழ்த்திய படுகொலைகளை மீண்டும் நடத்தினார்கள். சில நூறாயிரம் மக்கள்தொகை கொண்ட கலிபோர்னியாவில்1849-54 காலகட்டத்தில் மட்டும் தங்கத்தின் பொருட்டு 4200 கொலைகள் நடந்ததாக பதிவுகள் உள்ளன.
......
இதே போன்றதொரு தங்கவேட்டை 1898இல் வடக்கு கனடாவிலும் அலாஸ்காவின் குளோண்டிக் பகுதியிலும் நடந்தது. குளோண்டிக் நதிப்பிரதேசத்துக்கு தங்க வேட்டை க்கு வந்த ஒரு லட்சம் பேரில் 30000 முதல் 40000 பேர் மட்டுமே உயிருடன் அங்கே போய் சேர்ந்தார்கள். பனி படர்ந்த அலாஸ்காவின் கடும் குளிரின் முன்னே மனிதனின் பேராசை தோற்றுப்போன து. செத்து மடிந்தது. மிக நீண்டதும் கடினமானதும் ஆபத்து மிகுந்ததும் ஆன சில்கூட் கணவாய் பாதையில் தங்கத்தை தேடி நூற்றுக்கணக்கானவர்கள் மலை ஏறிக்கொண்டிருக்கும் முதல் காட்சியுடன் தனது கோல்டு ரஷ் (1925) படத்தை தொடங்குகின்றார் சார்லி சாப்ளின். அவரும் தங்கம் தேடித்தான் போகின்றார். வழக்கம் போலவே இப்படத்திலும் பாத்திரத்துக்கு பெயரில்லை. அவரைத் தொடர்ந்து ஒரு கரடியும் வந்து கொண்டு இருப்பதை அவர் அறிய மாட்டார்!

படத்தை இரண்டு பகுதிகளாக பிரித்தால் முதல் பகுதியில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத கொடும் பனிச்சூறாவளி வீசும் அலாஸ்காவில் தங்கம் என்ற அற்ப உலோகத்துக்காக மனிதன் போராடுவதையும் இரண்டாம் பகுதியில் தன் உயிருக்காக அலாஸ்காவின் கிராமம் ஒன்றில் போராடுவதையும் பார்க்கலாம்.

தங்க வேட்டையில் ஓரளவிற்கு தங்கத்தை சம்பாதித்த ஜிம் மெக்கெ என்பவனது கூடாரம் பனிப்புயலில் அடித்து  செல்லப்படுகிறது. கொலை வழக்கில் தேடப் லபடும் பிளாக் லார்சன் என்பவனது கூடாரத்துக்கு அவன் இல்லாத போது வந்து சேர்கின்றான் நம் நாயகன். திரும்பி வந்த லார்சன் நாயகனை வெளியே துர்த்தவிடுகின் றான். இப்போது ஜிம் அங்கே வருகின்றான். லார்சனுடன் நடந்த மோத லில் லாரசன் அடக்கப்படுகின் றான். மூவரும் ஒரு உடன்படிக்கை க்கு வருகின்றனர். சீட்டுக்கட்டை கலைத்துப்போடுவது, அதன் மூலம் உணவு தேடி வெளியே போவது யார் என முடிவு செய்வ்து. இதில் லார்சனே வெளியே போவதாக ஆகின்றது. வெளியே சென்ற லார்சன் தன்னை தேடி வந்த இரண்டு போலீஸ்காரர்களை கொலை செய்கின்றான்.

நாயகனும் ஜிம்முவும் நன்றி தெரிவிக்கும் விருந்து நடத்த முடிவு செய்கின்றனர். ஆனால் விருந்துக்கான உணவுதான் இல்லை! இருக்கின்ற ஒரே பொருள் நாயகனின் காலணி மட்டுமே, அதை வேக வைத்து சாப்பிட லாம் என முடிவு செயகின் றார்கள்! காலணியின் மேல் பகுதியை நாயகனும் கீழ் பகுதியை ஜிம்மும் சாப்பிடுகின்றனர்.  ஒன்றும் இல்லாத சூழலில் காலனியை ரசித்தும் ருசித்தும் சாப்பிடும் இந்த காட்சியை மிக அற்புதமாக சித்தரித்து இருப்பார் சாப்ளின். காட்சியின் தெரியாத பக்கமோ பசியால் நொந்து போனவனின் நிலையை சொல்கின்றது.

ஜிம்மின் கற்பனை யோ வேறு மாதிரி போகிறது. தன் எதிரே உட்கார்ந்து இருக்கும் நாயகனை ஐந்தடி உயரமுள்ள கொழுத்த கோட் சூட் அணிந்த கோழி யாக பார்க்கும் அவன் அவனை சுட்டு ரோஸ்ட் செய்து சாப்பிட முடிவு செயகின் றான். ஒரு கையில் துப்பாக்கியும் மறுகை யில் கோடரியும் ஏந்தி நாயகனை அவன் துரத்த ஒன்றும் புரி யாத நாயகன் தப்பித்து ஓ ட உணவுக்கும் உயிருக்கு மான போராட்டம் அங்கே நடக்கின்றது. உணவு தேடி வந்த ஒரு கரடி இந்த சண்டை யில் எதிர்பாராத விதமாக உள்ளே வர திடீர் என துப்பாக்கி வெடிக்க கரடி சாக... இருவருக்கும் ஆன உணவுப்பிரச்னை இப்படி தீர்க்கப் படுகின்றது.

இக்காட்சியில் கோழியின் உடல் அசை வுகளை சாப்ளின் நுட்பமாக வெளிப்படுத்தும் அழகு, மிக அழகு!

ஜிம்முக்கும் லார்சனுக்கும் இடையே தங்கத்துக்காக நடக்கும் சண்டையில் ஜிம் தலையில் அடிபட்டு சுய நினைவை இழக்கின்றான், ஆனால் தங்கம் குறித்த நினைவு அப்படியே இருக்கிறது! தங்கம் படுத்தும் பாடு!


மீண்டும் சந்தித்த இருவரும் பழைய கூடாரத்தை கண்டுபிடித்துவிடுகின்றனர். ஆனால் நள்ளிரவு அடித்த சூறாவளி யில் கூடாரம் மலைமுகட்டி ல் தொங்குகின்றது. இது சாப்ளினின் அற்புதமான கற்பனை மட்டுமே அல்ல, தூரக் காட்சியில் மிகுந்த திகில் ஊட்டும் ஒன்றாகவும் உள்ளது. கூடாரத்தின் ஒரு பாதி மலைமுகட்டில் பாதாள த்தை நோக்கி சரிய மறு பாதி மலையில் இருக்க, இவர்களது ஒவ்வொரு அசைவுக்கும் கூடாரம் மேலும் கீழுமாக தள்ளாடுவதைப் பார்க்கும் போது எந்த வினாடியிலும் அது அதல பாதாளத்தில் விழுந்துவிடும் என பார்க்கின்ற நாம் பதைக்கின்றோம்.

மிகுந்த போராட்டத்திற்கு பிறகு இருவரும் வெளியேறும் இறுதி நொடியில் கூடாரம் பாதாளத்தில் விழுந்து நொறுங்குகின்றது. தேடி வந்த தங்கமும் கிடைத்திட அலாஸ்க்காவில் இருந்து வெளியேறுகின்றனர். அலாஸ்காவில் இருந்தபோது எதிர்பாராத நேரத்தில் சந்தித்த. ஜார்ஜியா என்ற பெண்ணை கப்பலில் பார்க்கின்றான்    நாயகன். மனம் விரும்ப இருவரும் இணைகிறார்கள்.
......
1925இல் வெளி வந்த படம். ஹாலிவுட்டிலும் நெவேடாவிலும் ஆக 15 மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது.

தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து அது வரலாற்றில் சமூக பொருளாதாரத்தில் ஒரு முக்கிய இடத்தைத் தக்க வைத்துக்கொண்டுதான் இருக்கின்றது. குறிப்பாக இன்றைய முதலாளித்துவ அரசு-ஏகபோகக்கூட்டத்தின் வளர்ச்சியோடும் குறிப்பாக  பணவியல் அமைப்பு மற்றும் சர்வதேச பொருளாதார உறவுகளின் பரிமாணத்தோடும். இணைந்திருக்கின்றது. இதையே தலைகீழாக சொன்னால் தங்கத்தின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற கூறுகளில் முதலாளித்துவ சமூக அரசியல் நெருக்கடிகளும் பணவீக்கமும் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன என்றும் கூறலாம்.

மஞ்சள் பிசாசு என்ற நூலில் அ.வி.அனிக்கின் கூறுகின்றார்: "மஞ்சள் பிசாசு தன்னுடை ய முகத்தை மாற்றிக்கொள்ள முடியும். அது முன்னேற்றம், கடன் வசதி, தொழில்நுட்ப ம் மற்றும் கலை என்ற கவுரவமான முகமூடிக்கு பின்னால் மறைந்து கொள்கின்றது. முதலாளித்துவம் நீடிக்கின்ற வரை மஞ்சள் பிசாசு உயிரோடு இருக்கும்."

சார்லி சாப்ளினின் திரைப்படங்கள் சமூக அவலங்களின் பின்னால் இருக்கின்ற முதலாளித்துவ அரசியலை எள்ளி நகையாடிய மிக சீரியசான படங்கள். அவன் எளிய மக்களைப் பற்றி பேசியவன். ஆகவேதான் அவன் மக்கள் கலைஞன்.

(சார்லி சாப்ளின் பிறந்த நாள் 16 ஏப்ரல் 1889)

புதன், ஏப்ரல் 17, 2019

மனிதநேயத்தை நியூசிலாந்திடம் இருந்து கற்றுக்கொள்வோம்


மனிதநேயத்தை நியூசிலாந்திடம் இருந்து கற்றுக்கொள்வோம்
ஹர்ஷ் மாந்தர்
தமிழில்: மு.இக்பால் அகமது

கடந்த மார்ச் 16 ஆம் நாளன்று நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சர்ச் நகரில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலுக்கு சரியாக ஒரு வாரத்திற்குப் பின் நடத்தப்பட்ட தொழுகையின்போது உரையாற்றிய இமாம் கமால் ஃபவ்தா, “எங்கள் இதயங்கள் நொறுங்கிப்  போயிருக்கின்றன, உண்மைதான், ஆனால் நாங்கள் நொறுங்கவில்லை. நாங்கள் உயிருடன் இருக்கின்றோம், நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம், எங்களுக்குள் யாரும் பிரிவினையை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம்  என்று பிரகடனம் செய்தார்.

மிக மோசமான துயர் சூழ்ந்த நேரத்திலும் ஒற்றுமையாலும் அன்பாலும் என்ன சாதித்துவிடமுடியும் என்பதை மிகப்பெரும் இழப்பை சந்தித்துள்ள இக்கட்டான சூழலிலும்  மதத்துவேஷமும் சகமனிதர் மீதான வெறுப்பும் மண்டிக்கிடக்கும் ஒட்டுமொத்த உலகசமுதாயத்துக்கும் நியூசிலாந்து மக்கள் தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள். குருதியால் நனைந்த கொடும் தேசப்பிரிவினை நாட்களை விடவும் மிகமோசமாக பிளவுற்றுக் கிடக்கின்ற இந்திய மக்கள் நியூசிலாந்து மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். கற்றுக்கொள்வோமா என்பது கேள்விக்குறியே.

தாக்குதலில் இறந்தவர்களுக்கான அஞ்சலிக்கூட்டத்துக்கு முன்பாக, இஸ்லாமிய சமூக மக்களை தொழுகைக்கு அழைக்கின்ற அசான் என்ற அழைப்பு நியூசிலாந்து நாடெங்கிலும் வானொலியில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. கொலைகாரன் தாக்குதல் நடத்திய  மசூதியின் வெளியிலும் நியூசிலாந்து நாடெங்கிலும் உள்ள பிற மசூதிகளின் வெளியிலும் நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் திரண்டு நின்று தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினரின் துயரில் தாமும் பங்குகொள்வதை வெளிப்படுத்தினார்கள். மசூதியின் உள்ளே தமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள் தொழுது கொண்டிருக்க இவர்கள் வெளியே ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து தலையோடு தலை சேர்த்து சூழ்ந்து நின்று பாதுகாப்பு அரணைக் கட்டினார்கள். பல பெண்கள் இஸ்லாமியப்பெண்கள் அணிகின்ற ஹிஜாப்பை அணிந்திருந்தார்கள்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது தலையில் கருப்புநிற துப்பட்டா அணிந்து அஞ்சலிக்கூட்டத்தில் கலந்துகொண்டார். தொழுகை முடிந்த பின் “கடவுளை நம்புகின்றவர்கள் ஒருவருக்கொருவர் அன்பையும் இரக்கத்தையும் கருணையையும் பரிமாறிக்கொள்வதால் ஒரு உடம்பால் ஆனவர்களே. அந்த உடம்பில் ஏதாவது ஒரு உறுப்புக்கு பாதிப்பெனில் மொத்த உடம்பும் அதன் வலியை உணரும் என்று இறைத்தூதர் முகமது கூறுகின்றார். நியூசிலாந்து நாடு உங்கள் துயரில் பங்கு கொள்கின்றது; நாம் அனைவரும் ஒருவரேஎன்று கூறினார்.

இதற்கு முன்பாகக் கூட கொலையுண்டவர்களின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறச்சென்றபோதும் தனது தலையில் கருப்புநிற துப்பட்டாவை பிரதமர் ஆர்டெர்ன் தனது தலையில் அணிந்திருந்தார். அவர்களை அவர் தழுவிக்கொண்டபோது அவரது முகத்தில் துயரத்தைக்காண முடிந்தது, துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்தவர்களின் உறவினர்களின் துயரத்தை அவரும்  பகிர்ந்துகொள்வதை அவரது முகக்குறிப்பில் உணர முடிந்த்து.
கடந்த ஐந்து வருடங்களில் இந்திய  இஸ்லாமிய சமூகத்தின் மீது பிற பகுதி இந்திய சமூகம் கடைப்பிடித்து வரும்  அணுகுமுறை எப்படி உள்ளது என்பதை இச்சம்பவம் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. இந்திய இஸ்லாமியர்கள் மீது மிகப்பல கொடும்தாக்குதல்கள் கும்பல்களால் நடத்தப்பட்டுள்ளன, இவை படம்பிடிக்கப்பட்டு மிகப்பரவலாக சமூகவலைதளங்களில் தரவேற்றப்பட்டுள்ளன.  இஸ்லாமியர்கள் மீது தனிநபர்களாலும் கும்பல்களாலும் நடத்தப்பட்ட இத்தாக்குதல்கள் நாடெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் அச்சத்தையும் வேதனையையும் உருவாக்கியுள்ளன. இத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஒரு குடும்பத்தையாவது பிரதமர் நரேந்திரமோடி சந்தித்தது இல்லை, அல்லது ஏதாவது ஒரு பொதுக்கூட்டத்திலோ சமூகவலைத்தளத்திலோ கூட தனது வருத்தத்தை  தெரிவித்ததும் இல்லை. காஷ்மீரில் புல்வாமா தற்கொலைத்தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் காவலர்கள் கொல்லப்பட்ட பின் நாட்டின் பல பகுதிகளில் காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்கப்பட்டபோது, இந்தியமக்களின் இதயத்தில் எரிந்துகொண்டிருக்கும் பழிவாங்கும் உணர்வு தனது இதயத்திலும் எரிந்து கொண்டிருப்பதாக வெளிப்படையாகப் பேசினார். இஸ்லாமியர் மீதான பழிவாங்குதலை தூண்டிவிடும் அப்பட்டமான பேச்சாக பிரதமரின் பேச்சு இருந்தது.

இந்தியாவின் மக்கள்தொகையில் இஸ்லாமியரின் எண்ணிக்கை 14 விழுக்காடு, இதுவே நியூசிலாந்தில் ஒரு விழுக்காடு மட்டுமே. இவர்களில் பலர் குடியேறியவர்கள் அல்லது அகதிகள் என்பது பிரதமர் ஆர்டெர்னுக்கு நன்கு தெரியும், ஆனால் “அவர்கள் எம்மவர்கள், தாக்குதல் நடத்தியவன் எம்மைச்சேர்ந்தவன் அல்லன்என்பதை அவர் பிரகடனப்படுத்துகின்றார். ஆனால் கல்லைவிடவும் கெட்டியான தனது மவுனத்தால் பிரதமர் மோடி சொல்லவருவதோ அதற்கு நேர்மாறானது. அவர் ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கின் தத்துவத்தை வரித்துக்கொண்டவர், பல நூற்றாண்டுகளாக இத்தேசத்தின் அங்கமாக விளங்கும் இஸ்லாமியர்கள் “நம்மில்ஒருவர் அல்லர், வன்முறையைத் தூண்டிவிடுபவனே நம்மில் ஒருவன் என்பதுதான் ஆர் எஸ் எஸ்சின் கொள்கை.

கடந்த பல மாதங்களாக நாங்கள் மேற்கொண்டுவரும் கார்வான்–இ-மொகபத் பயணத்தில் 15 இந்திய மாநிலங்களுக்கு சென்றுவந்துள்ளோம், 27 கொடிய பயணங்களாக அவை அமைந்துவிட்டன. சகமனிதர் மீதான வெறுப்புக்கும் வன்முறைக்கும் தமது அன்புக்குரிய சொந்தங்களை பலிகொடுத்த குடும்பங்களை நாங்கள் இப்பயணங்களில் சந்தித்து வருகின்றோம். இழப்பின் உச்சத்தில் வெதும்பும் இக்குடும்பங்களை நாங்கள் சந்தித்துப்பேசினோம், அவ்வளவுதான், ஆனால் எமது எளிய சந்திப்பு என்பதே அவர்களுக்கு எத்தனை பெரிய விசயமாக இருந்தது என்பதை ஒவ்வொரு சந்திப்பிலும் நாங்கள் உணர்ந்தோம். தமது அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களை தமது அண்டை வீட்டாரே வெறுப்புடன் தாக்கியதையும் அல்லது வெளியாட்கள் தாக்கியதையும் அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை,  தோற்றுப்போன உணர்வுடன், தனிமைப்படுத்தப்பட்ட ஒதுக்கப்பட்ட உணர்வுடன் ஒடுங்கிப்போய்க்கிடக்கின்றார்கள். நாங்கள் அவர்களைக் கட்டித்தழுவிக்கொண்டு அவர்களது கரங்களுடன்  எமது கரங்களைக் கோர்த்துக்கொண்டபோது அவர்கள் அழுதார்கள், எமது கண்களிலோ கண்ணீர். நாட்டின் பல மூலைகளில் இதுபோன்ற குடும்பங்களை சந்தித்தபோது அவர்களை முதலில் சந்திக்க வந்த மனிதர்கள் நாங்கள்தான் என்று தெரிவித்தார்கள்.

க்ரைஸ்ட்சர்ச்சில் நடந்த பிரார்த்தனையின்போது பலியானவர்களின் குடும்பத்தினருடன் பிரதமர் ஆர்டெர்ன் இத்தகைய பரிவைத்தான் வெளிப்படுத்தினார். நமது பிரதமரும் மதச்சார்பற்ற அரசியலுக்காகவே தாங்கள் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் எதிர்க்கட்சியினரும் இவ்வாறுதான் நடந்துகொள்ளவேண்டும் என்றே நான் ஆசைப்படுகின்றேன். ஆனால் நடப்பதென்ன? இதுபோன்ற வன்முறைத்தாக்குதல்களில் சிதிலமடைந்த மக்கள் தங்கள் மீதான வன்முறைகளை தாங்கள் மட்டுமே தனித்து நின்று சந்திக்க அனாதரவாக விடப்படும்போது இவர்களில் யாரும் அவர்களை உடனடியாகச் சந்தித்ததும் இல்லை, அதற்கான அரசியல் துணிவும் இவர்களுக்கு இல்லை.

முக்காடு அணிகின்ற ஒரு விசயத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.  பிரதமர் ஆர்டெர்ன் தனது தலையில் துப்பட்டா அணிந்து கொண்டார் என்பது துயருற்ற மக்களுக்கு அவர் தனது மரியாதையை செலுத்தியதற்கான அடையாளமே அன்றி இஸ்லாமியர்களின் முக்காடிடும் பழக்கத்தை அவர் ஒத்துக்கொள்கின்றார் என்று பொருள் இல்லை. ஒரு பிரதமரின் இந்த மரியாதைக்கான அடையாளமானது நியூசிலாந்து நாட்டின் பெண்கள் அனைவரையும் – தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர்கள், பெண் காவலர்கள், சாதாரணக் குடிமக்கள் – தங்கள் தலையை ஹிஜாப் என்னும் துணிகொண்டு மூடச்செய்தது. “எமது குடும்பத்தினரோடு நெருக்கமாக இருந்தமைக்கும் எளிய ஹிஜாப்பின் மூலம் எங்களை அங்கீகரித்தமைக்கும் நாங்கள் நன்றி செலுத்துகின்றோம்என்று இமாம் ஃபவ்தா பிரதமர் ஆர்டெர்னிடம் கூறினார். பல்வேறுபட்ட கலாச்சாரங்களின் கலவையான இந்த நாடெங்கிலும் இந்தியப்பிரதமர் மோடி தான் மேற்கொள்ளும் சுற்றுப்பயணங்களின்போது விதவிதமான தொப்பிகளையும் குல்லாய்களையும் அணிந்துகொள்கின்றார், ஒன்றே ஒன்றைத்தவிர, அது இஸ்லாமியர்கள் அணியும் குல்லாய்.

கொலையாளியின் மதவெறிப்பிரச்சாரத்தையோ கொலையின்போது சமூகவலைத்தளங்களில் அவன் செய்த படுகொலையின் நேரலை ஒளிபரப்பின் ஒளிப்பதிவையோ ஒலி-ஒளிபரப்புவதை தடை செய்வதாக  நியூசிலாந்து பிரதமர் உறுதியாக அறிவித்துள்ளார், அது மட்டுமின்றி கொலையாளியின் பெயரை பொதுஇடங்களில் உச்சரிப்பதில்லை என்றும் உறுதிபூண்டுள்ளார்.  ஆனால் இந்தியாவில் நடப்பதென்ன? பிற சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மீதான மதவெறுப்பின் அடிப்படையிலான கொலவெறித்தாக்குதல்கள் படம்பிடிக்கப்பட்டு மிகச்சாதாரணமாக சமூகவலைத்தளங்களில் ஏற்றப்பட்டு சுற்றுக்கு விடப்படுகின்றன. இதே போன்ற வெறுப்பைத்தூண்டும் பேச்சுக்கள், சரியாகச் சொல்வதெனில் ஆளும் கட்சியின் முன்னணித்தலைவர்களின் வன்முறையைத்தூண்டும் பேச்சுக்கள் சமூகவலைத்தளங்களில் ஏற்றப்பட்டு சுற்றுக்கு விடப்படுகின்றன. பிற மதத்தைச்சார்ந்த மக்கள் மீது தாக்குதல் நடத்திக் கொலைக்குற்றத்திற்கு ஆளானவர்களை மத்திய அரசின் அமைச்சர்கள் மாலையிட்டும் தேசியக்கொடியால் போர்த்தியும் வெளிப்படையாகவே  கொண்டாடுகின்றார்கள்.

நியூசிலாந்து, ஆஸ்த்ரேலியா மற்றும் மேற்குலகத்தைச் சார்ந்த கிறித்துவ, யூத மதங்களின் தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கான தமது பன்முகத்தன்மை வாய்ந்த உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியதுடன் இறந்தவர்களுக்காக மசூதிகளில் நடத்தப்பட்ட கூட்டு வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்கள்.  கோல்ட்கோஸ்ட்டில் (ஆஸ்த்ரேலியா) உள்ள நியூலைஃப் தேவாலய சபையின் தலைவரான ஸ்டூ காமெருன் கூறுகின்றார்: நல்ல அண்டைவீட்டுக்காரருக்கான அடையாளம் என்னவெனில் தனது அண்டைவீட்டார் அழும்போது இவரும் அழுவார், அவர் மீது ஒரு அச்சுறுத்தல் ஏவப்படும்போது இவர் அவருக்கு ஆதரவாக நிற்பார்.நியூசிலாந்தின் சீக்கிய குருத்துவாராக்கள் மசூதித்தாக்குதலில் உயிர்தப்பியவர்களின் குடும்பங்களுக்காக திறந்துவிடப்பட்டன. ஆனால் இதுபோன்ற மத அடிப்படையிலான கொலைவெறித்தாக்குதல்கள் இந்தியாவில் நடக்கும்போது பிற மதங்களைச் சார்ந்த தலைவர்களிடம் இருந்து இதுபோன்ற ஆறுதலளிக்கும் பேச்சுக்களையோ செயல்களையோ பார்க்கமுடியவில்லை.

இந்தியாவின் அரசியல்கட்சித்தலைவர்களும் பிற மதங்களைச் சார்ந்த தலைவர்களும் இதுபோன்ற வன்முறைகளைப் பேச்சுக்களையும் சம்பவங்களையும் கண்டிக்காமல் இருக்கின்றார்கள் என்பது ஒருபுறம்; ஆனால் இதைவிடவும் கவலையளிப்பது என்னவெனில் இதுபோன்ற மத அடிப்படையிலான வன்முறைத்தாக்குதல்கள் நடந்த பகுதிகளில் இருக்கும் பிற மதங்களைச் சார்ந்த உள்ளூர் மக்கள் தாக்குதலுக்கு ஆளான தமது சக அண்டைவீட்டுக்காரர்களுக்கு தமது அன்பையோ ஆதரவையோ வெளிப்படுத்தியதில்லை என்பதுதான். இந்த நாட்டில் பிறந்து இந்த நாட்டிலேயே தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்கள் இந்த நாடு நமக்கில்லை என்று அச்சுமுற்று விலகி நிற்கும் உணர்வுக்கு ஆளாகும்போது சக உள்ளூர் மக்களின் ஆதரவு அவர்களுக்கு கிடைப்பதில்லை. நாங்கள் மேற்கொண்ட கார்வான்–இ-மொகபத் பயணம் முழுக்கவும் ஒரு ஊரில் கூட மதஅடிப்படையிலான வன்முறைத்தாக்குதல்களுக்குப் பிறகு பிற மதங்களை சாதிகளைச் சேர்ந்த அண்டைவீட்டார்கள் தாக்குதல்களுக்கு ஆளானவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியதாகவோ உதவிகள் செய்ததாகவோ செய்திகள் இல்லை. குருகிராமில் நடந்ததென்ன? உள்ளூர் அரசு நிர்வாகத்தின் உதவியுடன் வன்முறைக்கும்பல்கள் திரண்டு சென்று தொழுகைக்குச் செல்லும் இஸ்லாமியர்களிடம் வம்பு செய்ததுடன் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தும் தலங்களின் எண்ணிக்கையை வலுக்கட்டாயமாக பத்தில் ஒரு பங்காகக் குறைத்தார்கள்.  

பிற மதத்தின் மீதான இந்த துவேஷம் ஆனது சகமனிதர் மீது நாம் செலுத்த வேண்டிய அன்பையும் பரிவையும் கூட மரத்துப்போகுமாறு செய்துவிட்டது எனில் நாகரிகம் சீரழிந்துள்ள காலத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதே பொருள்.
நியூசிலாந்தின் இமாம் ஃபவ்தா கூறுகின்றார்: “எங்கள் இதயங்கள் நொறுங்கிப்  போயிருக்கின்றன, உண்மைதான், ஆனால் நாங்கள் நொறுங்கவில்லை.  நமது நாகரிகச்சீரழிவு என்னவெனில் நமது சகோதரர்களும் சகோதரிகளும் நாடெங்கிலும் மதவெறித்தாக்குதலுக்கு பலியாகும்போது நமது இதயங்கள் உடையவில்லை. நாம் கண்டுகொள்ளவில்லை. உண்மையைச் சொல்வதெனில் நம்மில் சிலர் இந்த வன்முறைகளை ஆதரிக்கின்றோம், கொண்டாடவும் செய்கின்றோம். ஒரு சமூகம் என்ற அளவில் நாம் எந்த அளவுக்கு சிதைவுற்றுள்ளோம் என்பதையே இது காட்டுகின்றது.

மூலம்: Learning love from New Zealand, Harsh Mander, The Hindu, மார்ச் 26, 2019

(ஹர்ஷ் மாந்தர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி; தனது அரசுப்பணியில் இருந்து விலகி வன்முறையாலும் சாதி மதக் கலவரங்களினாலும் பாதிக்கப்பட்டவர்கள், வாழிடமற்றவர்கள், தெருக்களில் ஆதரவின்றித்திரியும் சிறார்கள், பழங்குடியினர், கொத்தடிமைகள், காவல்நிலையங்களில் கொல்லப்பட்டவர்கள் என ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நேரடியாகவும் களத்திலும் நின்று பணியாற்றுபவர், எழுதுபவர். அவரது தலைமையிலான கார்வான்–இ-மொகபத் (மனிதநேயத்திற்கான பயணம்) செப்டம்பர் 4, 2017, அன்று அசாமில் தொடங்கி அக்டோபர் 2 அன்று காந்தியடிகள் பிறந்த போர்பந்தரில் முடிவுற்றது. பயணம் நெடுகிலும் மதக்கலவரங்களில் கொல்லப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இக்குழு சந்தித்தது).
************
(சமரசம் 16-30 ஏப்ரல் 2019 இதழில் வெளியானது)

வெள்ளி, நவம்பர் 09, 2018

வாசிக்கத்தொடங்கிய கதை (2)




7) நான் ஆறாவது வகுப்புப் படிக்கும்போது வரலாறு + புவியியல் பாடம் நடத்திய திரு.வடிவேல் வாத்தியார்தான் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் பொது அறிவு வினாக்களை எழுப்பி மாணவர்களை நாளிதழ்களை வாசிக்கத் தூண்டியவர். அந்த வகையில் பள்ளிப்பாடங்களுக்கு வெளியே உள்ள உலகத்தை எனை கவனிக்க தூண்டியதில் அவரே முதற்காரணமாக இருந்தார்.

கார்ட்டுன் கதைகளான இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட் (அந்த ஸ்டெல்லா இப்போதும் குதிரைவால் கொண்டையுடன், குட்டைப்பாவாடையுடன்தான் வலம்வருகின்றாளா?), மந்திரவாதி மாண்ட்ரேக், வேதாளன் (Phantom)... வேதாளன் தனது மனைவியுடனும் பிள்ளையுடனும் அடர்ந்த காட்டில் வாழ்கின்றான்; வேதாளன் தனது முகத்தை வாசிப்போருக்கு காட்டுவதில்லை, முகமூடி கொண்டு மூடியபடியேதான் இருக்கின்றான்; எப்போதாவது நதியில் குளிக்கும்போதும் கூட வாசிப்போருக்கு தனது முதுகைத்தான் காட்டுகின்றான், முகத்தை திருப்பிக்கொள்கின்றான். அதிவீரதீரசாகசக்காரனான வேதாளனின் முகத்தை ஒருமுறையாவது பார்த்துவிடமாட்டோமா என்ற குழந்தைப்பருவத்து ஏக்கம் இப்போதும் தீராமல் என்னிடம் மிச்சமாகவே நிற்கின்றது. வாசிப்பவரை கதாபாத்திரத்துடன்  நெருங்கிவரச் செய்யும் வேதாளன் பாத்திரத்தைப் படைத்த ஆசிரியனின் இந்தத் தந்திரம் இத்தனை வயசுக்குப் பிறகு இப்போது பிடிபடுகின்றது.  குரங்குகளும் யானைகளும் சிங்கம் புலி இன்னபிற விலங்குகளும் வேதாளனுடன் மட்டுமின்றி சோறுதண்ணி மறந்து கதியே எனக்கிடந்து வாசித்த அன்றைய என்போன்ற குழந்தைகளுடனும் நெருங்கிய உறவுகொண்டுவிடுகின்றன. வாண்டுமாமா, அணில், முயல், தவறாமல் இந்த வரிசையில் நிலைத்து நிற்பது அம்புலிமாமா. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கைமரத்தின் மீதேறி அங்கு தொங்கும் வேதாளத்தின் உடலை வெட்டி வீழ்த்தினான், அப்போது அதன் உள்ளிருந்த வேதாளம் இப்போதும் எள்ளி நகையாடிக்கொண்டே இருக்கின்றது. பி.சி.சர்க்காரின் தந்திரக்கதைகள் ஆர்வத்தை தூண்டுவன. பாதாள உலகின் பறக்கும் பாப்பா... 

8) நான் பள்ளிவாழ்க்கையை வாழ்ந்த மதுரை செல்லூரில் கைத்தறி முதலாளிமார்கள் நடத்திய கலைவாணர் என்.எஸ்.கே. படிப்பகம் அன்றைய என் வயசுக்கு போதிய தீனிபோட்டது என்றே சொல்வேன். கலைவாணரின் கண்களும் சிரிக்கின்ற புகைப்படம் மட்டுமின்றி தனது தோளில் கிடக்கும் கனத்த துண்டின் இரண்டுமுனைகளையும் பிடித்தபடியே புன்னகை புரியும் சிவாஜிகணேசன், மேல்நோக்கி சிரித்தவாறே இருக்கும் ஜெய்சங்கர், கறுப்புவெள்ளையில் ஆன இவர்களின் புகைப்படங்கள் மாட்டப்படிருந்த கலைவாணர் என்.எஸ்.கே. படிப்பகத்தின் சுவர்கள் இப்போதும் நினைவில் நிற்கின்றன. தினத்தந்தி, தினமணி, தினமணிகதிர், தினமலர், முரசொலி, உண்மை, விடுதலை, சோவியத்நாடு, குமுதம், ஆனந்தவிகடன், கல்கண்டு, ராணி, சாவி, இதயம் பேசுகிறது, குங்குமம் என 70களில் வெளிவந்த அனைத்து நாளிதழ்கள், வார மாத ஏடுகள் அனைத்தையும் வாசிக்கின்ற களமாக அது இருந்தது. தினமணிகதிரில்தான் குஷ்வந்த்சிங்கின் ட்ரெய்ன் டு பாகிஸ்தான் மொழிபெயர்ப்பை வாசித்தேன், அப்போது வயது பதின்மூன்று. இங்கேதான் மு.கருணாநிதியின் நெஞ்சுக்குநீதி, குறளோவியம், பொன்னர் சங்கர் ஆகிய கதைகளை வாசித்தேன்.  மராமத்து என்ற சொல்லை மரமத்து என்று அரசுஊழியர் டைப் செய்துவிட,  மிகப்பெரிய மரத்தால் ஆன மத்தை எவ்வாறு செய்வது என்று அரசு நிர்வாகம் மண்டையைப் பிய்த்துக்கொள்கின்றது; அரசு நிர்வாக எந்திரம் உண்மையில் அச்சடிக்கப்பட்ட  சொற்களுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கின்ற உணர்ச்சிகள் ஏதுமற்ற எந்திரமே என்பதை மரமத்து என்ற கதையில் நகைச்சுவையுடன் சொல்வார் சாவி.  

9) செல்லூரின் அரசு நூலகம் அடுத்தது. திரு.சுந்தரராஜன் என்ற தமிழ்ப்புலவர் எங்கள் வீட்டின் அருகில் இருந்தார்; அவர் கிளைநூலக உறுப்பினர்.  தனது உறுப்பினர் அட்டையை ஆறாவது ஏழாவது படித்த என்னிடம் கொடுத்து புத்தகங்களை எடுத்து வாசிக்கச்சொன்னாலும் சொன்னார், புத்தகங்களே கதியென்று கிடந்தேன். ஒரே நாளில் மூன்று புத்தகங்களை மாற்றி மாற்றிப் படித்து முடித்து நூலகரின் செல்லமான கோபத்துக்கு ஆளானதும் உண்டு. அவரது வீட்டில்தான் ராணிமுத்து அறிமுகமானது. அதில் வரும் கேள்வி-பதிலை (யாரிடம் பொய் சொல்லக்கூடாது? வக்கீல்/டாக்டர்...) நிரப்பி வெட்டியெடுத்து ஒவ்வொருமாதமும் அவர் அனுப்புவார்; எப்போதாவது பரிசு கிடைத்ததா என்பது எனக்கு நினைவில் இல்லை. கண்ணதாசன், குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன், கோவி.மணிசேகரன், சாண்டில்யன், சுஜாதா, புஷ்பா தங்கதுரை, தமிழ்வாணன், ஙே என்று விழிக்கும் ராஜேந்திரகுமார், ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன்  (பாக்கியம் ராமசாமி), மகரிஷி, பாலகுமாரன், சிவசங்கரி, இந்துமதி, லட்சுமி என்ற டாக்டர் திரிபுரசுந்தரி... ஓவியர்கள் கோபுலு, ஜெயராஜ், மணியம் செல்வன் போன்ற பெயர்கள் எல்லா, தினத்தந்தி, ராணிமுத்து, மாலைமதி ஆகியவற்றின் மூலமே எனக்கு அறிமுகம். தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது ஒருநாள் இரவு காரில் பயணம் செய்தபோது காரின் முகப்பு விளக்கு ஒளியில் வெள்ளை நிறத்தில் ‘பேய்ஒன்று வானத்தில் பறப்பதைக்கண்ட காரோட்டி பயந்து நடுங்கி அலறியதை லட்சுமி எழுதியிருந்தார், இப்போதும் நினைவில் உள்ளது.  குப்பைகளை பாலித்தீன் பையில் போட்டு குப்பைத்தொட்டியில் வீசி எறிந்து விடுவது அங்குள்ள மக்களின் வழக்கம், அப்படியான ஒரு குப்பை நிரம்பிய பை ஒன்றுதான் உள்ளிருந்த காற்றின் காரணமாக உயரே எழும்ப் பறந்துகொண்டிருந்தது என்பதை அவனுக்கு விளக்கிச்சொல்ல வேண்டியிருந்ததை லட்சுமி எழுதியிருப்பார். ஆப்பிரிக்காவில் அப்படியாக பாலித்தீன் பை கலாச்சாரம் இருந்தது என்பதை வாசிக்கும்போது வியப்பாக இருந்தது, இப்போது இந்தியாவே  பாலீத்தீன் பைக்குள்தான் இருக்கின்றது.  பாலித்தீன் மலைகளைப் பார்க்கும்போதெல்லாம் ‘இப்படியும் ஒரு காலம் இந்தியாவுக்கு வரும் என்று லட்சுமி அன்றைக்கு நினைத்தும் பார்த்திருப்பாரோ?என்று அவரது ஞாபகம் துரத்தியவண்ணம் உள்ளது.  

10) சுஜாதாவின் நூல்கள் அனைத்தையும் வாசித்தேன். சுஜாதாவின் கணேஷ்-வசந்த் துப்பறியும் கதைகள் விருவிருப்பாகப்போயின என்பதைத்தாண்டி மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட அவரது புதிய தமிழ்நடையும் எழுத்துநடையும் என்னை மயக்கின. என் வீட்டில் பழைய ஒரு அட்டைப்பெட்டியில் (நெசவாளியின் குடும்பம் எங்களுடையது; அலமாரி, பீரோ, மின்விசிறி போன்ற ‘ஆடம்பரப்பொருட்களெல்லாம் கிடையாது) குமுதத்தில் தொடர்ந்து வெளியான சுஜாதாவின் ‘அனிதா இளம்மனைவிநாவலின் கட்டிங்கின் பைண்டிங் செய்யப்பட்ட புத்தகம் ஒன்றை என் மூத்த அண்ணன் வைத்திருந்தார். என்னவென்றே தெரியாமல் அதை எடுத்து நான் வாசிக்கத்தொடங்கினேன், விறுவிறுப்பாக இருந்தது, சுஜாதா இப்படித்தான் அறிமுகம் ஆனார்.  அவரது எழுத்தில் இருந்த க்ரைம் நாவல்களுக்கேயான உத்தியும் நியாயமும் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரது எழுத்துக்களில் இல்லை என்பதை உணர்ந்தேன் (வெறும் கொலையும் கொள்ளையும் மட்டுமே க்ரைம் நாவலாக ஆகிவிடாது).   

11) பெண்களின் அங்கங்களை அங்குலம் அங்குலமாக வர்ணிக்கும் புஷ்பாதங்கதுரையின் எழுத்துக்கள் வேறுவிதத்தில் அந்த வயதில் ஆளை மயக்கின. அவரே ஸ்ரீவேணுகோபாலனாக திருவரங்கன்உலா எழுதியதை வாசிக்கும்போது அவரது எழுத்துலகின் இன்னொரு முகத்தைக் காட்டியது என்பது உண்மை. அதேபோல் கடலுக்குள் ஜூலி.  பாலகுமாரனின் இரும்புக்குதிரை, மெர்க்குரிப்பூக்கள் ஆகியன வேறு தளத்தில் இயங்கின.  அன்றைய வயதில் கவர்ச்சிகரமாக இருந்த அவரது எழுத்துக்களை இப்போது நினைவுபடுத்திப்பார்க்கும்போது ஆண் பெண் உறவு குறித்த, தொழிற்சங்க அரசியல் குறித்த அவரது பார்வை இப்போது புரிகின்றது. இதன் பிறகு நூலகத்தில் இவர்கள் எழுதிய நூல்களைத்தேடி வாசிக்கத் தொடங்கினேன். கண்ணதாசன், ஜெயகாந்தன், பாக்கியம் ராமசாமி + ஓவியர் ஜெ...யின் அப்புசாமி சீதாப்பாட்டி... சாண்டில்யனின் மிகக்கனத்த புத்தகங்களின் பாகங்களை காற்றிலும் கடிய அவரது குதிரைகளின் வேகத்தைவிடவும் அதிக வேகத்தில் வாசித்து முடிக்கப்பழகினேன். ராஜாஜியின் வியாசர்விருந்தை இரண்டு முறை வாசித்தேன்.

12) இப்படியே போய்க்கொண்டிருந்த வாசிப்புப்பயணத்தில் ஒரு திருப்புமுனையைக் கொண்டுவந்தவர் எனது மூத்த அண்ணன். கம்யூனிஸ்ட்டான அவர் ஒருநாள் ‘நாளைக்கு ஒரு க்ளாஸ் இருக்குது, வாஎன்றார்.  சிஐடியூ சங்கமான செல்லூர் ஐக்கிய கைத்தறி நெசவாளர் சங்கக்கட்டிடத்தில் அந்த க்ளாஸ் நடந்தது. இரண்டு அடி அகலம் மூன்றடி உயரத்தில் இருந்த ஆயில் வண்ணப்படங்களில் இருந்தவர்கள் லெனின், ஸ்டாலின் என்று தெரிந்துகொண்டேன். இவர்கள் இருவரும் நன்றாக சவரம் செய்யப்பட்டு பளிச்சென்று இருக்க வேறு இரண்டு படங்களில் இருந்தவர்கள் கோட் அணிந்து வாய் தெரியாத அளவுக்கு மீசையுடனும் நீண்ட தாடியுடனும் காணப்பட்டனர், வெளிநாட்டுக்காரர்கள் என்று தெரிந்தது. மேலும் பல வண்ண, கறுப்புவெள்ளைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. வகுப்பில் என்னைப்போல் 13, 14, 15 வயசுப்பையன்கள் சிலரும் இருந்தார்கள். சூரியன், பூமி, குரங்கில் இருந்து மனிதன் தோன்றியது, பரிணாம வளர்ச்சி... என்று வகுப்பெடுத்தார் ஒருவர். வித்தியாசமாக இருந்தது. சிலந்தியும் ஈயும், குரங்கில் இருந்து மனிதனாக மாறிய... என்பது போன்ற சிகப்பு அட்டை போட்ட புத்தகங்களை காசு வாங்காமல் படிக்கக் கொடுத்தார்கள். சிலந்தியும் ஈயும் அதுவரையிலும் நான் வாசிக்காத வேறு ஒரு உலகத்தை திறந்துவிட்டது.  வால்காவில் இருந்து கங்கை வரை என்று ஒரு புத்தகத்தை வாசிக்கச் சொன்னார்கள், ராகுல சாங்கிருத்தியாயன் என்பவர் எழுதிய அந்த நூலை செல்லூர் நூலகத்தில் இருந்து எடுத்து வாசித்தேன். தொடர்ந்து நெசவாளர் சங்கத்திற்கு செல்லத்தொடங்கினேன். கே பி ஜானகி அம்மாள், .மாயாண்டிபாரதி, பாப்பா உமாநாத் போன்ற பெரும் தியாகிகளை அவர்களின் வரலாறு எதுவும் தெரியாத போதே அந்த சங்கத்தில் பலமுறை பார்த்துள்ளேன். அதன் பின் சிந்து முதல் கங்கை வரை.  அவரே பல்வேறு சமயங்களின் தத்துவங்களை தனித்தனிப்புத்தகமாக எழுதியிருக்கின்றார் என்பதை வயது கூடும்போது தெரிந்து கொண்டேன். தீக்கதிர் என்றொரு வாரப்பத்திரிக்கை வெளிவருவது தெரிந்தது. செம்மலர், சிகரம், கார்க்கி, மனிதன், நயனதாரா என்ற பெயரிலும் சில பருவ ஏடுகள் வெளிவருகின்றன என்பதையும் தெரிந்துகொண்டேன். தவிர சோவியத்நாடு தமிழ்ப்பதிப்பை எனது அண்ணன் வீட்டுக்கே வரவழைத்திருந்தார். அதன் வழவழப்பான தாளும் குறிப்பாக சோவியத்தின் விண்வெளி அறிவியல்துறையில் அவர்கள் செய்த சாகசங்களும் சோவியத் தொடர்பான நூல்களை வாசிக்கத்தூண்டின. சோவியத் ரஷ்யாவில் இருந்து வெளிவரும் தரம்வாய்ந்த தாளில் அச்சடிக்கபட்ட நூல்கள் 15 பைசா, இருபது பைசா, ஒரு ரூபாய் என நம்பமுடியாத விலையில் இருந்ததை எண்ணி ஆச்சரியப்பட்டேன். மதுரை மேலக்கோபுரத்தெருவில் இருந்த நியு செஞ்சுரி புக் ஹவுஸில் சோவியத் நூல்கள் கிடைப்பதை எனது அண்ணனின் நண்பர்கள் சொல்ல, அவர்களுடன் சென்று சில நூல்களை வாங்கினேன். ஜான் ரீட் எழுதிய உலகைக்குலுக்கிய பத்து நாட்கள் அதில் ஒன்று. இப்போதும் என்னிடம் உள்ளது, அதன் அன்றைய விலை ரூ.3.50.

13) ஈ.எம்.எஸ்.நம்பூரிப்பாட், ஜோதிபாசு, பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்ரமண்யம், வி.பி.சிந்தன், ஈ.கே. நாயனார், கே.ஆர்.கௌரி, உமாநாத், கே.பி.ஜானகி அம்மாள், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், சந்திரசேகர் ஆசாத், லியோனித் ப்ரஷ்னேவ், வியட்நாம், ஹோ சி மின், சீனா, மா சே துங், க்யூபா, ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, கிழக்கு ஜெர்மனி, ருமேனியா, பல்கேரியா, போலந்து, செக்கோஸ்லோவாகியா, யுகோஸ்லோவாக்கியா, அமெரிக்க சி.ஐ.ஏ போன்ற சொற்கள் அறிமுகமாயின. அமெரிக்காவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் சோவியத் யூனியன் பங்கு பெறாமல் புறக்கணித்த்தும் சோவியத்தில் நடந்த ஒலிம்பிக்கை அமெரிக்கா புறக்கணித்ததும் நினைவில் உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப்பட்டியலின் முதல் இடங்களை சோவியத் யூனியனும் ஐரோப்பியக்கண்டம் முழுவதும் பரவிக்கிடந்த பிற சோசலிஸ்ட் நாடுகளும் 1990 வரையிலும் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததை இப்போது நினைத்துப்பார்க்கின்றேன்.  பின்னாட்களில் ரீகல் தியேட்டரில் தி க்ரேட் ரஷ்யன் சர்க்கஸ் என்ற படத்தை பார்த்து அதிசயித்தேன்.

14) இதன் பின்னர் வேலை நிமித்தம் சென்னைக்கு வந்தபின் நண்பன் சுந்தரவேல் ‘சென்னையில் புத்தகக்கண்காட்சி ஒன்று ஒவ்வொரு ஜனவரி மாதமும் நடக்குது, வா போகலாம்என ஒரு ஜனவரி மாதம் (1983 என்று நினைவு)  என்னை அழைத்துச்சென்றான். காய்தேமில்லத் பெண்கள் கல்லூரியில் நடந்துகொண்டிருந்த கண்காட்சிக்கு சென்றோம். பபாசி என்ற சொல் அறிமுகம் ஆனது. அநேகமாக 50 பதிப்பாளர்கள் ஸ்டால் போட்டிருந்தார்கள் என்று நினைக்கின்றேன். ஒவ்வொரு வருடமும் செல்லத்தொடங்கினேன். அன்றைய நாணய மதிப்பில் 300, 400 ரூபாய்க்கு நிறையவே புத்தகங்களை வாங்கலாம். என்னிடம் உள்ள மிகப்பல நூல்கள் சென்னைப் புத்தகக்கண்காட்சியில் வாங்கியவையே.  இப்போது ஒரு புத்தகத்தின் விலையே 300, 400 ரூபாய்க்கும் மேல்.  குறிப்பாக அன்னம், அகரம், நர்மதா, தமிழ்ப்புத்தகாலயம், காவ்யா, கலைஞன், என் சி பி ஹெச் ஆகிய பதிப்பகங்களை நாடிச்சென்றேன்.  
(தொடரும்)

திங்கள், ஏப்ரல் 09, 2018

"நல்ல"பாம்புடன் ஒரு இரவு


பாம்புகள் மீதான பயம் இயற்கையாகவே மனித மனதுக்குள் உறைந்துள்ளது. அனைத்துப்பாம்புகளும் விசம் உள்ளவை அல்ல என்று அறிவியல் சொல்கின்றது; காட்டுயிர் ஆர்வலர்களும் மீண்டும் மீண்டும் இதனை வலியுறுத்திச் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். கண்ணில் கண்ட பாம்புகளை எல்லாம் அடித்துக்கொன்றுவிடாதீர்கள் என்ற வேண்டுகோளின் பின்னால் இந்த உண்மைதான் பலமாக இருக்கின்றது. டிஸ்கவரி, நேஷனல் ஜ்யோக்ரஃபி, அனிமல் ப்ளானெட் சானல்கள் நமக்குப் பழக்கமாகும் முன் கிண்டி பூங்காவில் காப்பாளர்கள் பாம்புகளை தலையில் அழுத்திப்பிடித்து கண்ணாடி டம்ளரில் விசத்தை எடுக்கும் காட்சிதான் நமக்கெல்லாம் பாம்புகள் குறித்த பிம்பத்தை மனதுக்குள் சித்திரமாக இருந்தது.  சானல்கள் வந்தபின்னர் ரொமுலஸ் விட்டேகர், ஸ்டீவ் இர்வின் போன்றோரும் ஆப்பிரிக்காவின் கொடிய விசப்பாம்பான மாம்பா வீட்டுக்குள் புகுந்து ஒளிந்துகொண்ட பின்னர் அதனைப் பிடிப்பதற்காகவே இன்பச்சுற்றுலா செல்வதுபோல காரில் ஜாலியாக பயணிக்கும் வனவுயிர் ஆர்வலர்களும் 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை கட்டுக்குள் அடக்கி ஒரு அடி தூரத்தில் காமிரா கொண்டு படம் எடுத்தது மட்டுமின்றி படமெடுத்து நிற்கும் அதன் தலையில் ஒரு முத்தமும் இடும் பெயர் தெரியாத அந்த மாவீரனும் இன்ன பிறரும் பாம்புகள் உள்ளிட்ட விசப்பிராணிகள் குறித்த புரிதலை நமக்கு ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது மிகையில்லை. 

நகரங்கள் விரிவாக்கம் என்ற பெயரில் கிராமங்களும் காடுகளும் தொடர்ந்து அதிவேகமாக மனிதனால் அழிக்கப்படும்போது அங்கே ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருக்கின்ற அப்பிரதேசத்துக்குச் சொந்தமான பாம்புகள் போன்ற பிராணிகள் தமது வாழிடம் அழிக்கப்படும்போது குழப்பம் அடைகின்றன; இருப்பிடமும் உணவும் தேடி தடுமாறித்திரிகின்றன; உண்மை இவ்வாறிருக்க யானைகளின் பாதையில் புகுந்து அட்டகாசம் செய்து அவற்றின் வலசைப்பாதையை ஆக்கிரமித்து மனிதன் கட்டியுள்ள கட்டுமானங்களை யானைகள் அப்புறப்படுத்துவதை ‘யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம்’ என்று மனிதர்கள் செய்தி வாசிக்கின்றார்கள்; இருப்பிடம் தேடியும் உணவு தேடியும் அலையும் பாம்புகளை ‘குடியிருப்புப் பகுதிக்குள் பாம்புகள்’ புகுந்துவிட்டதாக மனிதர்கள் புகார் செய்கின்றார்கள்.

12 வீடுகளே உள்ள எனது தெருவில் குழந்தைகள் எண்ணிக்கை அதிகம்; விடுமுறை நாட்களில் அவர்களின் ராஜ்ஜியம் தெருவில் களைகட்டும். ஒவ்வொரு தெருவிலும் கட்டப்படாத காலிமனைகள் இப்போதும் இருக்கின்றன. புதர் மண்டிக்கிடக்கும் இம்மனைகளில் பாம்புகள் குடியிருப்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். இரவு நேரங்களில் அவை நடமாடியதை விடிகாலையில் எங்களால் கண்டுகொள்ள முடியும்; குறிப்பாக கோடைகாலத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத உச்சிவெயில் நேரத்தில் அவை மரம் செடிகொடிகளின் குளிர்ச்சியை நாடி ’எனது’ வீட்டுக்குள்ளேயே ’அரவ’மின்றி  நடமாடும்போது எனது குடும்பத்தினர் பலமுறை பார்த்துள்ளோம். அவற்றில் நாகம், சாரை ஆகியனவும் பெயர் அறியாத பாம்புகளும் அடக்கம். அவற்றைப்பார்த்து பதட்டமின்றி நிதானப்பட மேற்படி சானல்கள் கற்றுக்கொடுத்துள்ளன என்பது உண்மைதான் எனினும் பாம்புகளை நெருங்கி ‘நீ  நல்லபாம்பா, இல்லை ரொம்ப நல்லபாம்பா?’ என்று கேட்டுவிடும் துணிச்சல் இதுவரை வரவில்லை என்பதும் உண்மைதான்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் இரவு பதினொரு மணிக்கு தெரு முனையில் மலைப்பாம்புதான் இது என்று ஒரு சத்தம் கேட்க, நான் பார்க்கும்போது இரண்டு குடும்பங்கள் தெருவின் ஒரு ஓரமாய் பார்த்தபடி இருந்தார்கள். சினிமாதொழினுட்பம் பயின்ற சரவணன் என்ற நண்பர் கையில் ஆறடி நீளமுள்ள கம்பு ஒன்றைப் பிடித்தபடி நின்றிருந்தார். உடனடியாக நான் அங்கே சென்றேன். என் மனைவியும் என்னுடன் வந்தார். வீட்டுச்சுவர் ஓரமாக நான் பார்த்தேன், முழங்கையின் அளவு பருமனும் சுமார் நாலடி நீளமும் கருப்பு ப்ரௌன் வண்ணத்தில்  உடலும் அதே வண்ணத்தில் டைமன் வடிவங்களும் கொண்ட பாம்பு அது. ஸ் ஸ் என்று சீறிக்கொண்டிருந்தது. ஆங்கில எஸ் எழுத்து தொடர்ச்சியாக சுருண்டு கிடந்தால் எப்படி இருக்குமோ அந்த வடிவில் உடலை   சுருட்டிக்கொண்டு கிடந்தது.  சிலர் அதனை கொன்றுவிடலாம் என்றனர். சரவணனும் நானும் ‘மலைப்பாம்புக்கு விசம் இல்லை, கொல்ல வேண்டாம், பிடித்துவிடலாம்’ என்று வக்கீலாக வாதாடினோம். அந்த இடத்தை விட்டு தப்பியோடவே முயற்சி செய்தது. சரவணனின் யோசனைப்படியே ஒரு ஈயச்சட்டியைக்கொண்டுவந்து பாம்பு நகரும் திசையில் தரையோடு வைத்து பாம்பை அதனுள் நுழையச்செய்தோம். பாம்பு நுழைந்து சமர்த்தாக உட்கார்ந்தபின்னர் சட்டியை நிமிர்த்தினோம்; காற்றுப்புகக்கூடிய பெரிய பை ஒன்றைக்கொண்டு  சட்டியின் வாய் பையின் அடியைத்தொடும்வரை இழுத்து அதன் பின் பக்குவமாக சட்டியைக்கவிழ்த்தோம். இப்போது சட்டி கவிழ்ந்துவிட்டது, உள்ளே பாம்பு இருக்கின்றது, பையின் வாய் மேலே வந்துவிட்டது, தயாராக இருந்த கயிற்றால் ஓரளவு இடைவெளியில் பையை இறுகக்கட்டினோம். இப்போது மலைப்பாம்பைப் பிடித்தாகிவிட்டது. அடுத்த பிரச்னை ஆரம்பம்: நாய்களும் கீரிகளும் நடமாடும் இடத்தில் பாம்புடன் ஆன பையை விடியவிடிய தெருவில் போட்டுவைப்பதா? கூடாதெனில் பையை எங்கே வைப்பது? யார் வீட்டில் பத்திரப்படுத்துவது? எல்லோரும் மவுனம் ஆனார்கள். சரி நானே எடுத்துச்செல்கின்றேன் என்று முன்வந்தேன், மலைப்பாம்பு, விசம் இல்லை என்பதால் என் மனைவியும் ஒப்புக்கொண்டார். கையில் பாம்புள்ள பையை தூக்கிக்கொண்டு எனது வீட்டின் மாடி ஏறும் படியின் பக்கவாட்டு கிரில் கம்பியில் உயரே அதனைக் கட்டித்தொங்கவிட்டேன். தீயணைப்புதுறையை தொலைபேசியில் அழைத்தேன்.  பேசியவர் ப்ளூகிராஸ் எண்ணைக் கொடுத்துவிட்டு கொட்டாவி விட்டார். ப்ளூக்ராசில் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. தூங்கச்சென்றோம்.

அது ஞாயிறு காலை. ஆயினும் ஆறு மணிக்கு எழுந்தோம். உள்ளே இருந்த மலைப்பாம்பு சட்டியில் இருந்து வெளியே நகர்ந்து பைக்குள்ளேயே சுற்றத்தொடங்கியது. நண்பர் சத்யநாராயணனை தொடர்பு கொண்டேன். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை நான் தொந்தரவு செய்துவிட்டேன் என்பது புரிந்தது. மன்னிப்புக்கோரினேன். வனத்துறையின் பாதுகாப்பில் உள்ள மிகப்பரந்த எனது அலுவலகத்தில் வார்தா புயலின் தாக்கத்தால் மிகப்பல மிகப்பெரிய மரங்கள் அடியோடு சாய்ந்தன; அவர் தனிப்பட்ட முயற்சி எடுத்துக்கொண்டு தமிழக அரசின் தலைமைச்செயலகம் வரை தொடர்பு கொண்டதன் பயனால் தமிழக வனத்துறையினர் பல நூறு மரக்கன்றுகளை அலுவலகத்தில் நட்டுள்ளனர். எனவே வனத்துறையினரின் உதவி வேண்டி நண்பரைத்தொடர்பு கொண்டேன். ஒரு எண்ணைக்கொடுத்தார். முயன்றபோது தொலைபேசியை ஒருவரும் எடுக்கவில்லை.  அவரே மீண்டும் வண்டலூர் மிருகக்காட்சிசாலையின் தொலைபேசி எண்ணைக்கொடுத்தார். (வீட்டில் இணைய வசதியை நான் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளேன்; நான் பயன்படுத்துவதும் சாதாரணமான அடிப்படை செல்பேசிதான், காமிரா கூட இல்லாத செல்பேசி, எனவே அவரைத்தொந்தரவு செய்ய வேண்டி இருந்தது). இப்போது மிருகக்காட்சிசாலையில் ஒருவர் தொலைபேசியை எடுத்தார். ‘சார், மலைப்பாம்பு ஒன்றைப் பிடித்து வைத்துள்ளேன், வந்து எடுத்துச்செல்ல முடியுமா?’ என்று கேட்டேன். பாம்பின் அடையாளங்களையும் அதன் நடத்தையையும் ஒவ்வொன்றாக கேட்டார், சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அவர் சொன்னார், ‘சார், என்ன சொல்றீங்க! நீங்க புடிச்சு வச்சிருக்கறது மலைப்பாம்பு இல்லை, கொடிய விசம்கொண்ட கண்ணாடிவிரியன், ரசல்ஸ் வைப்பர்!’. ஒரு விநாடி உடம்பு ஜில்லிட்டு சிலிர்த்தது. ‘கடிச்சா இருபது நிமிசத்துல இறந்து விடுவோம், ரத்தம் உறைந்து விடும். தள்ளி நில்லுங்க’ என்றார். ‘நீங்க வந்து எடுத்துச்செல்ல மாட்டீர்களா?’ என்றேன். வீட்டுக்குள் புகுந்துவிட்ட பாம்புகளை மட்டுமே வந்து எடுப்பது வழக்கம், தெருவில் திரிகின்ற பாம்புகளை நாங்கள் பிடிப்பதில்லை, நீங்கள் அதை பத்திரமாக எடுத்துச்சென்று ஏதாவது காட்டுக்குள் விட்டு விடுங்கள், விடுவிக்கும்போது மிகக்கவனமாக இருங்கள். அல்லது வேளச்சேரியில் வனத்துறை அலுவலகத்தில் கொண்டு சேர்த்துவிடுங்கள்’ என்றார். வேளச்சேரிக்கு பாம்பை பேருந்தில் எடுத்துச்செல்வதா, பையில் என்ன? என்று நடத்துனர் கேட்டால் என்ன சொல்வது, பாம்பு என்று சொன்னால் நடத்துநர் நம்புவாரா, நம்பினாலும் அனுமதிப்பாரா, நம்பவில்லை என்றால் ‘நீங்களே பைக்குள் கையை விட்டு செக் பண்ணுங்க சார்’ என்று நடத்துனரிடம் சொல்லிவிடலாமா என்றெல்லாம் சிந்தனை தறிகெட்டு ஓடியது.

சரி ஆனது ஆகட்டும், கொல்லக்கூடாது என்ற முடிவுடன் பிடிக்கப்பட்ட பாம்பை உயிருடன் விட்டுவிடுவதே சரி, அது கொடிய கண்ணாடிவிரியனாக இருந்தாலும் சரி என்ற முடிவுடன் பக்கத்து வீட்டு நண்பரை அழைத்தேன். மேலும் ஒரு பெரிய பையை போர்த்தி ஒரு கட்டுக்கட்டி ஸ்கூட்டரின் பின்னால் அவரை பையுடன் உட்காரவைத்து காட்டை நோக்கிப்பயணமானோம். சரியான முட்காடு ஒன்றை அடைந்தோம். கவனமுடன் பைகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்தோம். ஈயச்சட்டியில் இருந்து வெளியே வந்த விரியன் மீண்டும் பைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டான். அவன் படமெடுக்கும் ரகம் இல்லை என்பதால் கையோடு கொண்டுசென்ற காமிராவில் நான் இரண்டு படங்கள் எடுத்துக்கொண்டேன். காட்டில் கிடந்த கம்புகளை எடுத்து என்னதான் தள்ளினாலும் அவன் வெளியே வருவதாய் இல்லை. புதிதாக இருந்த பையை பாம்புடன் அப்படியே போட்டுவிட்டு வந்தால் சிறுவர்கள் பையை எடுத்துவிடக்கூடும், எனவே பையோடு விட்டுவிடுவது பெரும் தவறாகி விடும். வேறு வழியின்றி மூடப்பட்ட பையின் பக்கமாக சென்று பையைப்பிடித்து இழுத்து ஓரளவு தொலைவில் வீசினேன். வெளியே வந்த விரியன் சல்லென்று முட்புதருக்குள் சென்றான்.

பாம்புகளைப்பற்றி ஓரளவு படித்திருந்தும் தொடர்ந்து சானல்களில் பார்த்திருந்தும் ஒரு விசயத்தை மறந்து போனேன்: பொதுவாக தலை சிறியதாக முக்கோண வடிவில் உள்ளவை விசப்பாம்புகள். இதனை மறந்திருந்ததால் கொடியவிசமுடைய அந்த விரியனுடன் சுமார் ஐந்து ஆறடி தூரத்தில் அந்த இரவில் நாங்கள் ‘விளையாடிக்’ கொண்டிருந்தோம் என்ற உண்மை சிலீர் என்று உரைத்தது. தவிர உயிருடன் பிடிக்க வேண்டும் என்பதால் அதனை பெரிய அளவுக்கு தொந்தரவும் செய்யவில்லை, தொந்தரவு செய்திருந்தால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் அந்த விரியன் அந்த இரவில் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கக் கூடும்!  தவிரவும் மனிதர்கள் உருவில் நம்முடன் பழகித்திரியும் மிகக்கொடிய விசஜந்துக்களிடம் சதாசர்வகாலமும் கடிவாங்கிக்கொண்டே திரிவதாலும் கூட கொடியவிசமுள்ள கண்ணாடிவிரியன் அன்றைய இரவில் எங்களிடம் இரக்கப்பட்டு கடிக்காமல் விட்டிருக்கலாம் என்றும் தோன்றுகின்றது.

இறுதியாக: ஸ்கூட்டரின்  பின்னிருக்கையில் பாம்புடன் உட்கார்ந்துவந்த பக்கத்துவீட்டு நண்பரிடம் அது மலைப்பாம்பு இல்லை, கண்ணாடிவிரியன் என்று சொன்னேனா இல்லையா என்பது இப்போதும் நினைவில் இல்லை.  


திங்கள், மார்ச் 19, 2018

விவசாயிகளின் நெடும்பயணமும் பெருமுதலாளிகளின் ஊடக அதர்மமும்



ஏறத்தாழ 180 கிலோமீட்டர் தூரம் அவர்கள் நடந்தார்கள்; அவர்களில் 80 வயதைத்தொடுகின்ற முதியவர்கள், வயது முதிர்ந்த பெண்கள், வாலிபர்கள், குழந்தைகள் எனப் பலரும் இருந்தார்கள். அனைவரும் விவசாயிகள், விவசாயக்குடும்பங்களை சேர்ந்தவர்கள். பாரதீய ஜனதாக் கட்சி + சிவசேனா ஆளும் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் நாசிக் நகரில் மார்ச் 7 அன்று சுமார் 10,000 விவசாயிகளுடன் தொடங்கியது இந்த நடைப்பயணம். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் அரங்கமான அகில இந்திய விவசாயிகள் சபையால் (AIKS) நடத்தப்பட்டதே இந்த நெடும்பயணம். தலைநகர் மும்பையில் உள்ள சட்டசபையை முற்றுகையிடும் நோக்கில் நாசிக் நகரில் இப்போராட்டப்பயணம் தொடங்கப்பட்டபோது 10,000 விவசாயிகள் செம்பதாகைகளுடன் அணிதிரண்டார்கள் எனவும், பயணத்தின் வழியில் மேலும் 30,000 விவசாயிகள் இணைந்து கொண்டார்கள் எனவும் இணையத்திலும் வெகுசில ஆங்கில நாளிதழ்களிலும் தகவல்கள் சொல்கின்றன.

இவர்களில் பெரும்பாலோர் தமது கால்களில் செருப்புக்கூட அணியாமல் நடந்தார்கள்; வெயில் சில நாட்களில் 38 டிகிரி செல்சியஸை தொட்டது. வழியில் தமக்கான எளிய உணவை தாமே சமைத்துக்கொண்டார்கள். இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொருவரும் வாழும் பொருட்டு தம்மைத்தாமே வருத்திக்கொண்டு தமது நியாயமான கோரிக்கைகளை முழக்கமாக எழுப்பிக்கொண்டு தங்களைத்தாங்களே உற்சாகப்படுத்திக்கொண்டு நடந்தார்கள்.  இரவு நேரத்தில் பயணம் எங்கே முடிகின்றதோ அங்கேயே படுத்து உறங்கினார்கள். உழைப்பவன் தனது களைப்பை மறப்பதற்காக காலங்காலமாக பயின்று வரும் தமக்கான பாடல்களைப் பாடியும் நடனம் ஆடியும் தமது அன்றையை களைப்பைப் போக்கிக்கொண்டார்கள்.  பொழுது புலரும்போது உறக்கம் கலைந்து மீண்டும் நடந்தார்கள். 

இதுபோன்ற போராட்டங்களை பொதுவாக வெறுப்புடன் நோக்குகின்ற நகரவாசிகள் இம்முறை தமது அணுகுமுறையை மாற்றிக்கொண்டார்கள்.  தானே மாவட்டத்தின் ஷாகாபூரில் பேரணி நுழைந்தபோது அந்த ஊர் மக்கள் விவசாயிகளை வரவேற்று சிற்றுண்டியும் குடிநீரும் வழங்கினார்கள். மார்ச் 10 அன்று மும்பையின் எல்லையைத்தொட்டபோது ஊர் மக்கள் வழிநெடுகிலும்   திரண்டு நின்று வரவேற்று சிற்றுண்டியும் குடிநீரும் வழங்கியதோடு வேறு பல உதவிகளையும் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 11 அன்று விக்ரோலியை அடைந்தபோது ஊர் மக்கள் விவசாயிகளின் பாதையில் மலர்தூவி வரவேற்று நீர் வழங்கி தமது ஆதரவைத்தெரிவித்தார்கள். அருகில் உள்ள சீக்கிய குருத்வாராவில் உள்ள சகோதரர்கள் தம்மால் இயன்ற உணவுவகைகளை சமைத்து வழங்கினார்கள். ஊர்வலம் மார்ச் 12 அன்று மேக்சிமம் சிட்டியை வந்தடைந்தபின்னும் மக்களின் ஆதரவு தொடர்ந்தது. குறிப்பாக மும்பையின் புகழ்பெற்ற டப்பாவாலாக்கள் அணிதிரண்டு திட்டமிட்டு மும்பை மக்களிடம் இருந்து ரொட்டிகளைப் பெற்று விவசாயிகளுக்கு வழங்கி அவர்களின் பசியாற்றினார்கள். 

எதன் பொருட்டு இந்த 180 கி.மீ. பயணம்? விவசாயிகளின் தேசம் என்று சொல்லப்படும் இத்தேசத்தில்தான் விவசாயிகள் விசம் அருந்தி காலங்காலமாகப் பாடுபட்ட தமது நிலத்திலேயே மாய்ந்து உயிரை விடுகின்றார்கள். விவசாயம் செய்யும் பொருட்டு அரசிடம் கடன் பெறுவது என்பது அத்தனை எளிதான ஒன்றல்ல. அவ்வாறே கடன் பெற்றாலும் மழைபொய்த்துப்போன பின்னால், கிணறுகள் வறண்டபின்னால் அக்கடனைக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாத நிலையில், வங்கி அதிகாரிகளின் ஏஜெண்டுகள் வீட்டுவாசலில் வந்து கேவலமாகப் பேசி கடனை திரும்பக்கேட்டு மிரட்டும்போது அக்கடனையும் திருப்பிச்செலுத்தமுடியாத நிலையில் தற்கொலை செய்துகொள்வது தேசமெங்கும் மிகச்சாதாரணமான அன்றாட நிகழ்வாகி உள்ளது.  இந்த மாநிலத்தில் உள்ள விதர்ப்பா மாவட்டமே விவசாயிகளின் தற்கொலைக்கு தலைநகரமாக ‘ஒளிர்கின்றது’.  இதன்றி கார்ப்பொரேட்டுக்களின் நலன்பொருட்டு விவசாய நிலங்கள் அதிரடியாக கைப்பற்றப்பட்டு தங்கநாற்கரச்சாலை, ஆறுவழிச்சாலை, எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை என்ற பெயர்களில் விவசாயமும் விவசாயியும் அழிக்கப்படுகின்றனர். சென்ற ஆண்டில் மட்டும் பிஜேபி சிவசேனா கூட்டணி ஆளும் இம்மாநிலத்தில் 2,000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்.  கடும் வறட்சி அல்லது கடும்மழை, விளைபொருட்களுக்கான விலையை ஏஜெண்டுகளும் பெருமுதலாளிகளும் நிர்ணயம் செய்யும் வித்தையால் இட்ட முதலையும் எடுக்க இயலாத கெடுநிலை, அரசால் கைவிடப்பட்ட கையறுநிலை, வங்கிகளில் கடன்பெறுவதற்கு ஆயிரம் நிபந்தனைகள், கடன் பெற்றாலும் மேலே சொல்லப்பட்ட பல காரணங்களால் கடனைத் திருப்பிச்செலுத்த முடியாத அவலம் என விவசாயிகள் இந்திய தேசமெங்கும் சந்திக்கின்ற பிரச்னைகள் தீரும் நாள் அண்மையில் இல்லை. 

சாமானிய மக்களை ஒருசில லட்சங்கள் பெறுமானமான கல்விக்கடனுக்கும் விவசாயக்கடனுக்கும் மிகக்கேவலமாக நடத்தும் அதிகார வர்க்கம், கேவலம் ஒரு ஆதார் கார்டு இல்லையேல் மலத்தில் உழலும் புழுவுக்கும் கீழாக சாமானிய மக்களை கேவலமாக விரட்டியடிக்கும் அதிகாரவர்க்கம், பல்லாயிரம்கோடிகளை அதாவது மக்கள்பணத்தை விஜய்மல்லையா, நீரவ்மோடி போன்ற பெருமுதலாளிகளுக்கு கடன் என்ற பெயரில் வாரிக்கொடுக்கின்றது; பின்னர் ஒருநாள் இவர்கள் அரசாங்கத்தின் துணையுடன் வெளிநாடுகளுக்கு பத்திரமாக அனுப்பிவைக்கப் படுகின்றார்கள் (ஊடகங்களில் இதை ’தப்பிச்செல்கின்றார்கள்’ என செய்திவாசித்து நம்மை நம்பச்சொல்கின்றார்கள்). 

தாங்கள் வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளைகளில் முக்கியமானதாக கருதப்படும் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price) (அதாவது உற்பத்திக்கான செலவு + அதில் 50%) நிர்ணயிக்க வேண்டும், மழையாலும் பூச்சிகளாலும் விவசாயம் பாதிக்கப்படும்போது ஒரு ஏக்கருக்கு ரூ.40,000 நட்டஈடு தர வேண்டும், விவசாய நிலங்களையும், மக்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்திவரும் காடுகளையும் பறித்து விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டுக்காக கார்பொரேட்டுக்களுக்கு வழங்குவதை தடுக்க வேண்டும், காடுகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அனுமதிக்க வேண்டும் ஆகிய பரிந்துரைகளை அரசு உடனடியாக  நடைமுறைப்படுத்த வேண்டும் என்பவை விவசாயிகள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளில் தலையாயன.  இவற்றில் எதுவும் புதிதான கோரிக்கை அல்ல என்பதை சொல்லவேண்டியதில்லை.

சியோனில் இருந்து ஊர்வலமாகச்சென்று மாநிலசட்டமன்றத்தை மார்ச் 12 அன்று முற்றுகையிடுவதுதான் திட்டம். ஆனால் பள்ளித்தேர்வுகள் நடப்பதை கணக்கில்கொண்டு பகலில் தங்கள் போராட்டத்தை தள்ளிவைத்தார்கள், ஆனால் இரவில் ஊர்வலமாக சென்று ஆசாத் மைதானத்தில் அமர்ந்தார்கள். விவசாயிகளின் இந்த அணுகுமுறையை மும்பை நகரமக்கள் பாராட்டினார்கள்.

விவசாயிகளின் வாழ்க்கையையும் அவர்களது பிரச்னைகளையும் தொடர்ந்து கவனித்து எழுதிவரும் பீ.சாய்நாத் கூறுவது: ‘தங்களது தொழிலை ஒருநாள் தியாகம் செய்தாலும் அதனால் விளையும் நட்டம் மிகப்பெரியது என்பதை விவசாயிகளும் விவசாயத்தொழிலாளர்களும் நன்கு அறிவார்கள். அவ்வாறிருக்க ஏழு நாட்கள் இவர்கள் தமது தொழிலை தியாகம் செய்துள்ளார்கள்; இவர்களையே நம்பியிருக்கின்ற நிலத்தை மட்டுமின்றி  கால்நடைகளையும் ஒரு வாரம் கவனிக்காமல் விட்டு நெடும்பயணத்தில் பங்குபெற்றுள்ளார்கள். இவர்கள் தத்தமது ஊர்களுக்கு திரும்பிச்சென்றபின்னாலும் எதிர்வருகின்ற பல நாட்களுக்கு பட்டினிகிடக்க வேண்டியிருக்கும் என்று தெரிந்திருந்தும் அவர்கள் இந்த நடைப்பயணத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்கள்.  தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக மும்பை நகருக்குள் தங்களது பயணத்தை பகலில் நடத்தாமல் இரவுவேளையில் நடத்தியுள்ளார்கள். தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 41 நாட்கள் நடத்திய போராட்டத்தை அரசு எப்படி அணுகியது, ஊடகங்கள் எவ்வாறு நடந்து கொண்டன என்பது வருத்தத்திற்குரியது.”
இறுதியாக தாங்கள் ஏமாந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த விவசாயிகள், அரசு பல கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தபோது எழுத்துவடிவில் அதனை ஒப்பந்தமாக்கியுள்ளார்கள்.
இதேபோன்றதொரு நெடும்பயணத்தை மீண்டும் இந்த மாதம் 19 அன்று தொடங்க உள்ளதாக அகில இந்திய விவசாயிகள் சபை சொல்கின்றது. அதன் ஒரு கட்டமாக ஏப்ரல் 30 அன்று ’சிறையை நிரப்பும்’ போராட்டத்தையும் நடத்த உள்ளார்கள். 

மூணாறில் பெண்கள் திரண்டு தலைமையேற்று நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க  தேயிலைத்தோட்டத்தொழிலாளர் போராட்டம், தொழிலாளர் வருங்காலவைப்பு நிதியை தொழிலாளர்கள் தாங்கள் ஓய்வு பெறும் காலத்தில்தான் மீட்டு எடுத்துக் கொள்ளமுடியும் என்ற மோடி அரசின் உத்தரவுக்கு எதிராக பெங்களூருவில் அன்றாடக் கூலித்தொழிலாளர்கள்  தெருக்களில் திரண்டு நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு நாட்கள் போராட்டம் ஆகிய செய்திகள் தாங்கள் நடத்தும் டிவி சானல்களிலும்  செய்தித்தாட்களிலும் இடம்பெற்று விடாமல் பெருமுதலாளிகள் எப்படி திட்டமிட்டு மறைத்தார்களோ அதேபோல் விவசாயிகள் நடத்திய வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த நெடும்பயணத்தையும் திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள். அநீதிக்கும் கொடுமைக்கும் எதிரான சாமானிய மக்களின் எதிர்ப்புக்குரலும் போராட்டங்களும் பல நூற்றாண்டுகள் வயதானவை, தொடர்ந்து உரமேறி கூர்மையடைந்து கொண்டே வருபவை என்பதை வரலாறு உரத்த குரலில் எப்போதும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றது.  சாமானிய மக்களின் போராட்டங்கள் டிவி சானல்களையும் பத்திரிக்கைகளையும் நம்பி நடப்பதும் இல்லை, சாமானிய மக்களின் போராட்டங்கள் ஏழு மணி சீரியல் நாடகங்களும் இல்லை.