மனிதநேயத்தை நியூசிலாந்திடம் இருந்து
கற்றுக்கொள்வோம்
ஹர்ஷ் மாந்தர்
தமிழில்: மு.இக்பால் அகமது
கடந்த
மார்ச் 16 ஆம் நாளன்று நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சர்ச் நகரில் வெள்ளிக்கிழமை
தொழுகையின்போது நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலுக்கு சரியாக ஒரு வாரத்திற்குப்
பின் நடத்தப்பட்ட தொழுகையின்போது உரையாற்றிய இமாம் கமால் ஃபவ்தா, “எங்கள் இதயங்கள்
நொறுங்கிப் போயிருக்கின்றன, உண்மைதான்,
ஆனால் நாங்கள் நொறுங்கவில்லை. நாங்கள் உயிருடன் இருக்கின்றோம், நாங்கள் ஒற்றுமையாக
இருக்கின்றோம், எங்களுக்குள் யாரும் பிரிவினையை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில்
உறுதியாக இருக்கின்றோம்” என்று பிரகடனம்
செய்தார்.
மிக
மோசமான துயர் சூழ்ந்த நேரத்திலும் ஒற்றுமையாலும் அன்பாலும் என்ன
சாதித்துவிடமுடியும் என்பதை மிகப்பெரும் இழப்பை சந்தித்துள்ள இக்கட்டான
சூழலிலும் மதத்துவேஷமும் சகமனிதர் மீதான
வெறுப்பும் மண்டிக்கிடக்கும் ஒட்டுமொத்த உலகசமுதாயத்துக்கும் நியூசிலாந்து மக்கள்
தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள். குருதியால் நனைந்த கொடும் தேசப்பிரிவினை நாட்களை
விடவும் மிகமோசமாக பிளவுற்றுக் கிடக்கின்ற இந்திய மக்கள் நியூசிலாந்து மக்களிடம்
இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். கற்றுக்கொள்வோமா என்பது
கேள்விக்குறியே.
தாக்குதலில்
இறந்தவர்களுக்கான அஞ்சலிக்கூட்டத்துக்கு முன்பாக, இஸ்லாமிய சமூக மக்களை தொழுகைக்கு
அழைக்கின்ற அசான் என்ற அழைப்பு நியூசிலாந்து நாடெங்கிலும் வானொலியில் நேரடியாக
ஒலிபரப்பப்பட்டது. கொலைகாரன் தாக்குதல் நடத்திய மசூதியின் வெளியிலும் நியூசிலாந்து நாடெங்கிலும்
உள்ள பிற மசூதிகளின் வெளியிலும் நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் திரண்டு
நின்று தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினரின் துயரில் தாமும் பங்குகொள்வதை
வெளிப்படுத்தினார்கள். மசூதியின் உள்ளே தமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள் தொழுது
கொண்டிருக்க இவர்கள் வெளியே ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து தலையோடு தலை சேர்த்து
சூழ்ந்து நின்று பாதுகாப்பு அரணைக் கட்டினார்கள். பல பெண்கள் இஸ்லாமியப்பெண்கள்
அணிகின்ற ஹிஜாப்பை அணிந்திருந்தார்கள்.
நியூசிலாந்து
பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது தலையில் கருப்புநிற துப்பட்டா அணிந்து
அஞ்சலிக்கூட்டத்தில் கலந்துகொண்டார். தொழுகை முடிந்த பின் “கடவுளை
நம்புகின்றவர்கள் ஒருவருக்கொருவர் அன்பையும் இரக்கத்தையும் கருணையையும்
பரிமாறிக்கொள்வதால் ஒரு உடம்பால் ஆனவர்களே. அந்த உடம்பில் ஏதாவது ஒரு உறுப்புக்கு
பாதிப்பெனில் மொத்த உடம்பும் அதன் வலியை உணரும் என்று இறைத்தூதர் முகமது
கூறுகின்றார். நியூசிலாந்து நாடு உங்கள் துயரில் பங்கு கொள்கின்றது; நாம் அனைவரும்
ஒருவரே” என்று கூறினார்.
இதற்கு
முன்பாகக் கூட கொலையுண்டவர்களின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல்
கூறச்சென்றபோதும் தனது தலையில் கருப்புநிற துப்பட்டாவை பிரதமர் ஆர்டெர்ன் தனது
தலையில் அணிந்திருந்தார். அவர்களை அவர் தழுவிக்கொண்டபோது அவரது முகத்தில்
துயரத்தைக்காண முடிந்தது, துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்தவர்களின் உறவினர்களின்
துயரத்தை அவரும் பகிர்ந்துகொள்வதை அவரது
முகக்குறிப்பில் உணர முடிந்த்து.
கடந்த
ஐந்து வருடங்களில் இந்திய இஸ்லாமிய சமூகத்தின்
மீது பிற பகுதி இந்திய சமூகம் கடைப்பிடித்து வரும் அணுகுமுறை எப்படி உள்ளது என்பதை இச்சம்பவம்
வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. இந்திய இஸ்லாமியர்கள் மீது மிகப்பல
கொடும்தாக்குதல்கள் கும்பல்களால் நடத்தப்பட்டுள்ளன, இவை படம்பிடிக்கப்பட்டு
மிகப்பரவலாக சமூகவலைதளங்களில் தரவேற்றப்பட்டுள்ளன. இஸ்லாமியர்கள் மீது தனிநபர்களாலும்
கும்பல்களாலும் நடத்தப்பட்ட இத்தாக்குதல்கள் நாடெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள்
மத்தியில் அச்சத்தையும் வேதனையையும் உருவாக்கியுள்ளன. இத்தாக்குதல்களில்
உயிரிழந்தவர்களின் ஒரு குடும்பத்தையாவது பிரதமர் நரேந்திரமோடி சந்தித்தது இல்லை,
அல்லது ஏதாவது ஒரு பொதுக்கூட்டத்திலோ சமூகவலைத்தளத்திலோ கூட தனது வருத்தத்தை தெரிவித்ததும் இல்லை. காஷ்மீரில் புல்வாமா
தற்கொலைத்தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் காவலர்கள் கொல்லப்பட்ட பின் நாட்டின் பல
பகுதிகளில் காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்கப்பட்டபோது, இந்தியமக்களின் இதயத்தில்
எரிந்துகொண்டிருக்கும் பழிவாங்கும் உணர்வு தனது இதயத்திலும் எரிந்து
கொண்டிருப்பதாக வெளிப்படையாகப் பேசினார். இஸ்லாமியர் மீதான பழிவாங்குதலை
தூண்டிவிடும் அப்பட்டமான பேச்சாக பிரதமரின் பேச்சு இருந்தது.
இந்தியாவின்
மக்கள்தொகையில் இஸ்லாமியரின் எண்ணிக்கை 14 விழுக்காடு, இதுவே நியூசிலாந்தில் ஒரு
விழுக்காடு மட்டுமே. இவர்களில் பலர் குடியேறியவர்கள் அல்லது அகதிகள் என்பது
பிரதமர் ஆர்டெர்னுக்கு நன்கு தெரியும், ஆனால் “அவர்கள் எம்மவர்கள், தாக்குதல் நடத்தியவன்
எம்மைச்சேர்ந்தவன் அல்லன்” என்பதை அவர் பிரகடனப்படுத்துகின்றார். ஆனால்
கல்லைவிடவும் கெட்டியான தனது மவுனத்தால் பிரதமர் மோடி சொல்லவருவதோ அதற்கு
நேர்மாறானது. அவர் ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கின் தத்துவத்தை வரித்துக்கொண்டவர், பல
நூற்றாண்டுகளாக இத்தேசத்தின் அங்கமாக விளங்கும் இஸ்லாமியர்கள் “நம்மில்” ஒருவர்
அல்லர், வன்முறையைத் தூண்டிவிடுபவனே நம்மில் ஒருவன் என்பதுதான் ஆர் எஸ் எஸ்சின்
கொள்கை.
கடந்த
பல மாதங்களாக நாங்கள் மேற்கொண்டுவரும் கார்வான்–இ-மொகபத் பயணத்தில் 15 இந்திய
மாநிலங்களுக்கு சென்றுவந்துள்ளோம், 27 கொடிய பயணங்களாக அவை அமைந்துவிட்டன. சகமனிதர்
மீதான வெறுப்புக்கும் வன்முறைக்கும் தமது அன்புக்குரிய சொந்தங்களை பலிகொடுத்த
குடும்பங்களை நாங்கள் இப்பயணங்களில் சந்தித்து வருகின்றோம். இழப்பின் உச்சத்தில்
வெதும்பும் இக்குடும்பங்களை நாங்கள் சந்தித்துப்பேசினோம், அவ்வளவுதான், ஆனால் எமது
எளிய சந்திப்பு என்பதே அவர்களுக்கு எத்தனை பெரிய விசயமாக இருந்தது என்பதை ஒவ்வொரு
சந்திப்பிலும் நாங்கள் உணர்ந்தோம். தமது அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களை தமது
அண்டை வீட்டாரே வெறுப்புடன் தாக்கியதையும் அல்லது வெளியாட்கள் தாக்கியதையும்
அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை, தோற்றுப்போன உணர்வுடன், தனிமைப்படுத்தப்பட்ட
ஒதுக்கப்பட்ட உணர்வுடன் ஒடுங்கிப்போய்க்கிடக்கின்றார்கள். நாங்கள் அவர்களைக்
கட்டித்தழுவிக்கொண்டு அவர்களது கரங்களுடன்
எமது கரங்களைக் கோர்த்துக்கொண்டபோது அவர்கள் அழுதார்கள், எமது கண்களிலோ
கண்ணீர். நாட்டின் பல மூலைகளில் இதுபோன்ற குடும்பங்களை சந்தித்தபோது அவர்களை
முதலில் சந்திக்க வந்த மனிதர்கள் நாங்கள்தான் என்று தெரிவித்தார்கள்.
க்ரைஸ்ட்சர்ச்சில்
நடந்த பிரார்த்தனையின்போது பலியானவர்களின் குடும்பத்தினருடன் பிரதமர் ஆர்டெர்ன்
இத்தகைய பரிவைத்தான் வெளிப்படுத்தினார். நமது பிரதமரும் மதச்சார்பற்ற
அரசியலுக்காகவே தாங்கள் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் எதிர்க்கட்சியினரும்
இவ்வாறுதான் நடந்துகொள்ளவேண்டும் என்றே நான் ஆசைப்படுகின்றேன். ஆனால் நடப்பதென்ன? இதுபோன்ற
வன்முறைத்தாக்குதல்களில் சிதிலமடைந்த மக்கள் தங்கள் மீதான வன்முறைகளை தாங்கள்
மட்டுமே தனித்து நின்று சந்திக்க அனாதரவாக விடப்படும்போது இவர்களில் யாரும் அவர்களை
உடனடியாகச் சந்தித்ததும் இல்லை, அதற்கான அரசியல் துணிவும் இவர்களுக்கு இல்லை.
முக்காடு
அணிகின்ற ஒரு விசயத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
பிரதமர் ஆர்டெர்ன் தனது தலையில் துப்பட்டா அணிந்து கொண்டார் என்பது துயருற்ற
மக்களுக்கு அவர் தனது மரியாதையை செலுத்தியதற்கான அடையாளமே அன்றி இஸ்லாமியர்களின்
முக்காடிடும் பழக்கத்தை அவர் ஒத்துக்கொள்கின்றார் என்று பொருள் இல்லை. ஒரு
பிரதமரின் இந்த மரியாதைக்கான அடையாளமானது நியூசிலாந்து நாட்டின் பெண்கள்
அனைவரையும் – தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர்கள், பெண் காவலர்கள், சாதாரணக்
குடிமக்கள் – தங்கள் தலையை ஹிஜாப் என்னும் துணிகொண்டு மூடச்செய்தது. “எமது
குடும்பத்தினரோடு நெருக்கமாக இருந்தமைக்கும் எளிய ஹிஜாப்பின் மூலம் எங்களை
அங்கீகரித்தமைக்கும் நாங்கள் நன்றி செலுத்துகின்றோம்” என்று இமாம் ஃபவ்தா
பிரதமர் ஆர்டெர்னிடம் கூறினார். பல்வேறுபட்ட கலாச்சாரங்களின் கலவையான இந்த நாடெங்கிலும்
இந்தியப்பிரதமர் மோடி தான்
மேற்கொள்ளும் சுற்றுப்பயணங்களின்போது விதவிதமான
தொப்பிகளையும் குல்லாய்களையும் அணிந்துகொள்கின்றார், ஒன்றே ஒன்றைத்தவிர, அது
இஸ்லாமியர்கள் அணியும் குல்லாய்.
கொலையாளியின்
மதவெறிப்பிரச்சாரத்தையோ கொலையின்போது சமூகவலைத்தளங்களில் அவன் செய்த படுகொலையின்
நேரலை ஒளிபரப்பின் ஒளிப்பதிவையோ ஒலி-ஒளிபரப்புவதை தடை செய்வதாக நியூசிலாந்து பிரதமர் உறுதியாக அறிவித்துள்ளார்,
அது மட்டுமின்றி கொலையாளியின் பெயரை பொதுஇடங்களில் உச்சரிப்பதில்லை என்றும்
உறுதிபூண்டுள்ளார். ஆனால் இந்தியாவில்
நடப்பதென்ன? பிற சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மீதான மதவெறுப்பின் அடிப்படையிலான
கொலவெறித்தாக்குதல்கள் படம்பிடிக்கப்பட்டு மிகச்சாதாரணமாக சமூகவலைத்தளங்களில்
ஏற்றப்பட்டு சுற்றுக்கு விடப்படுகின்றன. இதே போன்ற வெறுப்பைத்தூண்டும்
பேச்சுக்கள், சரியாகச் சொல்வதெனில் ஆளும் கட்சியின் முன்னணித்தலைவர்களின்
வன்முறையைத்தூண்டும் பேச்சுக்கள் சமூகவலைத்தளங்களில் ஏற்றப்பட்டு சுற்றுக்கு
விடப்படுகின்றன. பிற மதத்தைச்சார்ந்த மக்கள் மீது தாக்குதல் நடத்திக்
கொலைக்குற்றத்திற்கு ஆளானவர்களை மத்திய அரசின் அமைச்சர்கள் மாலையிட்டும்
தேசியக்கொடியால் போர்த்தியும் வெளிப்படையாகவே கொண்டாடுகின்றார்கள்.
நியூசிலாந்து,
ஆஸ்த்ரேலியா மற்றும் மேற்குலகத்தைச் சார்ந்த கிறித்துவ, யூத மதங்களின் தலைவர்கள்
இஸ்லாமிய மக்களுக்கான தமது பன்முகத்தன்மை வாய்ந்த உறுதியான ஆதரவை
வெளிப்படுத்தியதுடன் இறந்தவர்களுக்காக மசூதிகளில் நடத்தப்பட்ட கூட்டு
வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்கள்.
கோல்ட்கோஸ்ட்டில் (ஆஸ்த்ரேலியா) உள்ள நியூலைஃப் தேவாலய சபையின் தலைவரான
ஸ்டூ காமெருன் கூறுகின்றார்: ”நல்ல அண்டைவீட்டுக்காரருக்கான அடையாளம் என்னவெனில்
தனது அண்டைவீட்டார் அழும்போது இவரும் அழுவார், அவர் மீது ஒரு அச்சுறுத்தல் ஏவப்படும்போது
இவர் அவருக்கு ஆதரவாக நிற்பார்.” நியூசிலாந்தின் சீக்கிய குருத்துவாராக்கள்
மசூதித்தாக்குதலில் உயிர்தப்பியவர்களின் குடும்பங்களுக்காக திறந்துவிடப்பட்டன. ஆனால்
இதுபோன்ற மத அடிப்படையிலான கொலைவெறித்தாக்குதல்கள் இந்தியாவில் நடக்கும்போது பிற
மதங்களைச் சார்ந்த தலைவர்களிடம் இருந்து இதுபோன்ற ஆறுதலளிக்கும் பேச்சுக்களையோ
செயல்களையோ பார்க்கமுடியவில்லை.
இந்தியாவின்
அரசியல்கட்சித்தலைவர்களும் பிற மதங்களைச் சார்ந்த தலைவர்களும் இதுபோன்ற
வன்முறைகளைப் பேச்சுக்களையும் சம்பவங்களையும் கண்டிக்காமல் இருக்கின்றார்கள்
என்பது ஒருபுறம்; ஆனால் இதைவிடவும் கவலையளிப்பது என்னவெனில் இதுபோன்ற மத
அடிப்படையிலான வன்முறைத்தாக்குதல்கள் நடந்த பகுதிகளில் இருக்கும் பிற மதங்களைச்
சார்ந்த உள்ளூர் மக்கள் தாக்குதலுக்கு ஆளான தமது சக அண்டைவீட்டுக்காரர்களுக்கு
தமது அன்பையோ ஆதரவையோ வெளிப்படுத்தியதில்லை என்பதுதான். இந்த நாட்டில் பிறந்து
இந்த நாட்டிலேயே தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்கள் இந்த நாடு நமக்கில்லை என்று
அச்சுமுற்று விலகி நிற்கும் உணர்வுக்கு ஆளாகும்போது சக உள்ளூர் மக்களின் ஆதரவு
அவர்களுக்கு கிடைப்பதில்லை. நாங்கள் மேற்கொண்ட கார்வான்–இ-மொகபத் பயணம்
முழுக்கவும் ஒரு ஊரில் கூட மதஅடிப்படையிலான வன்முறைத்தாக்குதல்களுக்குப் பிறகு பிற
மதங்களை சாதிகளைச் சேர்ந்த அண்டைவீட்டார்கள் தாக்குதல்களுக்கு ஆளானவர்களுக்கு
ஆதரவுக்கரம் நீட்டியதாகவோ உதவிகள் செய்ததாகவோ செய்திகள் இல்லை. குருகிராமில் நடந்ததென்ன?
உள்ளூர் அரசு நிர்வாகத்தின் உதவியுடன் வன்முறைக்கும்பல்கள் திரண்டு சென்று
தொழுகைக்குச் செல்லும் இஸ்லாமியர்களிடம் வம்பு செய்ததுடன் இஸ்லாமியர்கள்
வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தும் தலங்களின் எண்ணிக்கையை வலுக்கட்டாயமாக பத்தில் ஒரு
பங்காகக் குறைத்தார்கள்.
பிற
மதத்தின் மீதான இந்த துவேஷம் ஆனது சகமனிதர் மீது நாம் செலுத்த வேண்டிய அன்பையும் பரிவையும்
கூட மரத்துப்போகுமாறு செய்துவிட்டது எனில் நாகரிகம் சீரழிந்துள்ள காலத்தில் நாம் பயணித்துக்
கொண்டிருக்கின்றோம் என்பதே பொருள்.
நியூசிலாந்தின்
இமாம் ஃபவ்தா கூறுகின்றார்: “எங்கள் இதயங்கள் நொறுங்கிப் போயிருக்கின்றன, உண்மைதான், ஆனால் நாங்கள் நொறுங்கவில்லை.”
நமது நாகரிகச்சீரழிவு என்னவெனில் நமது
சகோதரர்களும் சகோதரிகளும் நாடெங்கிலும் மதவெறித்தாக்குதலுக்கு பலியாகும்போது நமது
இதயங்கள் உடையவில்லை. நாம் கண்டுகொள்ளவில்லை. உண்மையைச் சொல்வதெனில் நம்மில் சிலர்
இந்த வன்முறைகளை ஆதரிக்கின்றோம், கொண்டாடவும் செய்கின்றோம். ஒரு சமூகம் என்ற
அளவில் நாம் எந்த அளவுக்கு சிதைவுற்றுள்ளோம் என்பதையே இது காட்டுகின்றது.
மூலம்:
Learning love from New Zealand, Harsh Mander, The Hindu, மார்ச் 26, 2019
(ஹர்ஷ்
மாந்தர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி; தனது அரசுப்பணியில் இருந்து விலகி வன்முறையாலும்
சாதி மதக் கலவரங்களினாலும் பாதிக்கப்பட்டவர்கள், வாழிடமற்றவர்கள், தெருக்களில்
ஆதரவின்றித்திரியும் சிறார்கள், பழங்குடியினர், கொத்தடிமைகள், காவல்நிலையங்களில்
கொல்லப்பட்டவர்கள் என ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நேரடியாகவும் களத்திலும் நின்று
பணியாற்றுபவர், எழுதுபவர். அவரது தலைமையிலான கார்வான்–இ-மொகபத் (மனிதநேயத்திற்கான
பயணம்) செப்டம்பர் 4, 2017, அன்று அசாமில் தொடங்கி அக்டோபர் 2 அன்று காந்தியடிகள்
பிறந்த போர்பந்தரில் முடிவுற்றது. பயணம் நெடுகிலும் மதக்கலவரங்களில்
கொல்லப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இக்குழு சந்தித்தது).
************
(சமரசம் 16-30
ஏப்ரல் 2019 இதழில் வெளியானது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக