திங்கள், ஏப்ரல் 09, 2018

"நல்ல"பாம்புடன் ஒரு இரவு


பாம்புகள் மீதான பயம் இயற்கையாகவே மனித மனதுக்குள் உறைந்துள்ளது. அனைத்துப்பாம்புகளும் விசம் உள்ளவை அல்ல என்று அறிவியல் சொல்கின்றது; காட்டுயிர் ஆர்வலர்களும் மீண்டும் மீண்டும் இதனை வலியுறுத்திச் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். கண்ணில் கண்ட பாம்புகளை எல்லாம் அடித்துக்கொன்றுவிடாதீர்கள் என்ற வேண்டுகோளின் பின்னால் இந்த உண்மைதான் பலமாக இருக்கின்றது. டிஸ்கவரி, நேஷனல் ஜ்யோக்ரஃபி, அனிமல் ப்ளானெட் சானல்கள் நமக்குப் பழக்கமாகும் முன் கிண்டி பூங்காவில் காப்பாளர்கள் பாம்புகளை தலையில் அழுத்திப்பிடித்து கண்ணாடி டம்ளரில் விசத்தை எடுக்கும் காட்சிதான் நமக்கெல்லாம் பாம்புகள் குறித்த பிம்பத்தை மனதுக்குள் சித்திரமாக இருந்தது.  சானல்கள் வந்தபின்னர் ரொமுலஸ் விட்டேகர், ஸ்டீவ் இர்வின் போன்றோரும் ஆப்பிரிக்காவின் கொடிய விசப்பாம்பான மாம்பா வீட்டுக்குள் புகுந்து ஒளிந்துகொண்ட பின்னர் அதனைப் பிடிப்பதற்காகவே இன்பச்சுற்றுலா செல்வதுபோல காரில் ஜாலியாக பயணிக்கும் வனவுயிர் ஆர்வலர்களும் 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை கட்டுக்குள் அடக்கி ஒரு அடி தூரத்தில் காமிரா கொண்டு படம் எடுத்தது மட்டுமின்றி படமெடுத்து நிற்கும் அதன் தலையில் ஒரு முத்தமும் இடும் பெயர் தெரியாத அந்த மாவீரனும் இன்ன பிறரும் பாம்புகள் உள்ளிட்ட விசப்பிராணிகள் குறித்த புரிதலை நமக்கு ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது மிகையில்லை. 

நகரங்கள் விரிவாக்கம் என்ற பெயரில் கிராமங்களும் காடுகளும் தொடர்ந்து அதிவேகமாக மனிதனால் அழிக்கப்படும்போது அங்கே ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருக்கின்ற அப்பிரதேசத்துக்குச் சொந்தமான பாம்புகள் போன்ற பிராணிகள் தமது வாழிடம் அழிக்கப்படும்போது குழப்பம் அடைகின்றன; இருப்பிடமும் உணவும் தேடி தடுமாறித்திரிகின்றன; உண்மை இவ்வாறிருக்க யானைகளின் பாதையில் புகுந்து அட்டகாசம் செய்து அவற்றின் வலசைப்பாதையை ஆக்கிரமித்து மனிதன் கட்டியுள்ள கட்டுமானங்களை யானைகள் அப்புறப்படுத்துவதை ‘யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம்’ என்று மனிதர்கள் செய்தி வாசிக்கின்றார்கள்; இருப்பிடம் தேடியும் உணவு தேடியும் அலையும் பாம்புகளை ‘குடியிருப்புப் பகுதிக்குள் பாம்புகள்’ புகுந்துவிட்டதாக மனிதர்கள் புகார் செய்கின்றார்கள்.

12 வீடுகளே உள்ள எனது தெருவில் குழந்தைகள் எண்ணிக்கை அதிகம்; விடுமுறை நாட்களில் அவர்களின் ராஜ்ஜியம் தெருவில் களைகட்டும். ஒவ்வொரு தெருவிலும் கட்டப்படாத காலிமனைகள் இப்போதும் இருக்கின்றன. புதர் மண்டிக்கிடக்கும் இம்மனைகளில் பாம்புகள் குடியிருப்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். இரவு நேரங்களில் அவை நடமாடியதை விடிகாலையில் எங்களால் கண்டுகொள்ள முடியும்; குறிப்பாக கோடைகாலத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத உச்சிவெயில் நேரத்தில் அவை மரம் செடிகொடிகளின் குளிர்ச்சியை நாடி ’எனது’ வீட்டுக்குள்ளேயே ’அரவ’மின்றி  நடமாடும்போது எனது குடும்பத்தினர் பலமுறை பார்த்துள்ளோம். அவற்றில் நாகம், சாரை ஆகியனவும் பெயர் அறியாத பாம்புகளும் அடக்கம். அவற்றைப்பார்த்து பதட்டமின்றி நிதானப்பட மேற்படி சானல்கள் கற்றுக்கொடுத்துள்ளன என்பது உண்மைதான் எனினும் பாம்புகளை நெருங்கி ‘நீ  நல்லபாம்பா, இல்லை ரொம்ப நல்லபாம்பா?’ என்று கேட்டுவிடும் துணிச்சல் இதுவரை வரவில்லை என்பதும் உண்மைதான்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் இரவு பதினொரு மணிக்கு தெரு முனையில் மலைப்பாம்புதான் இது என்று ஒரு சத்தம் கேட்க, நான் பார்க்கும்போது இரண்டு குடும்பங்கள் தெருவின் ஒரு ஓரமாய் பார்த்தபடி இருந்தார்கள். சினிமாதொழினுட்பம் பயின்ற சரவணன் என்ற நண்பர் கையில் ஆறடி நீளமுள்ள கம்பு ஒன்றைப் பிடித்தபடி நின்றிருந்தார். உடனடியாக நான் அங்கே சென்றேன். என் மனைவியும் என்னுடன் வந்தார். வீட்டுச்சுவர் ஓரமாக நான் பார்த்தேன், முழங்கையின் அளவு பருமனும் சுமார் நாலடி நீளமும் கருப்பு ப்ரௌன் வண்ணத்தில்  உடலும் அதே வண்ணத்தில் டைமன் வடிவங்களும் கொண்ட பாம்பு அது. ஸ் ஸ் என்று சீறிக்கொண்டிருந்தது. ஆங்கில எஸ் எழுத்து தொடர்ச்சியாக சுருண்டு கிடந்தால் எப்படி இருக்குமோ அந்த வடிவில் உடலை   சுருட்டிக்கொண்டு கிடந்தது.  சிலர் அதனை கொன்றுவிடலாம் என்றனர். சரவணனும் நானும் ‘மலைப்பாம்புக்கு விசம் இல்லை, கொல்ல வேண்டாம், பிடித்துவிடலாம்’ என்று வக்கீலாக வாதாடினோம். அந்த இடத்தை விட்டு தப்பியோடவே முயற்சி செய்தது. சரவணனின் யோசனைப்படியே ஒரு ஈயச்சட்டியைக்கொண்டுவந்து பாம்பு நகரும் திசையில் தரையோடு வைத்து பாம்பை அதனுள் நுழையச்செய்தோம். பாம்பு நுழைந்து சமர்த்தாக உட்கார்ந்தபின்னர் சட்டியை நிமிர்த்தினோம்; காற்றுப்புகக்கூடிய பெரிய பை ஒன்றைக்கொண்டு  சட்டியின் வாய் பையின் அடியைத்தொடும்வரை இழுத்து அதன் பின் பக்குவமாக சட்டியைக்கவிழ்த்தோம். இப்போது சட்டி கவிழ்ந்துவிட்டது, உள்ளே பாம்பு இருக்கின்றது, பையின் வாய் மேலே வந்துவிட்டது, தயாராக இருந்த கயிற்றால் ஓரளவு இடைவெளியில் பையை இறுகக்கட்டினோம். இப்போது மலைப்பாம்பைப் பிடித்தாகிவிட்டது. அடுத்த பிரச்னை ஆரம்பம்: நாய்களும் கீரிகளும் நடமாடும் இடத்தில் பாம்புடன் ஆன பையை விடியவிடிய தெருவில் போட்டுவைப்பதா? கூடாதெனில் பையை எங்கே வைப்பது? யார் வீட்டில் பத்திரப்படுத்துவது? எல்லோரும் மவுனம் ஆனார்கள். சரி நானே எடுத்துச்செல்கின்றேன் என்று முன்வந்தேன், மலைப்பாம்பு, விசம் இல்லை என்பதால் என் மனைவியும் ஒப்புக்கொண்டார். கையில் பாம்புள்ள பையை தூக்கிக்கொண்டு எனது வீட்டின் மாடி ஏறும் படியின் பக்கவாட்டு கிரில் கம்பியில் உயரே அதனைக் கட்டித்தொங்கவிட்டேன். தீயணைப்புதுறையை தொலைபேசியில் அழைத்தேன்.  பேசியவர் ப்ளூகிராஸ் எண்ணைக் கொடுத்துவிட்டு கொட்டாவி விட்டார். ப்ளூக்ராசில் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. தூங்கச்சென்றோம்.

அது ஞாயிறு காலை. ஆயினும் ஆறு மணிக்கு எழுந்தோம். உள்ளே இருந்த மலைப்பாம்பு சட்டியில் இருந்து வெளியே நகர்ந்து பைக்குள்ளேயே சுற்றத்தொடங்கியது. நண்பர் சத்யநாராயணனை தொடர்பு கொண்டேன். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை நான் தொந்தரவு செய்துவிட்டேன் என்பது புரிந்தது. மன்னிப்புக்கோரினேன். வனத்துறையின் பாதுகாப்பில் உள்ள மிகப்பரந்த எனது அலுவலகத்தில் வார்தா புயலின் தாக்கத்தால் மிகப்பல மிகப்பெரிய மரங்கள் அடியோடு சாய்ந்தன; அவர் தனிப்பட்ட முயற்சி எடுத்துக்கொண்டு தமிழக அரசின் தலைமைச்செயலகம் வரை தொடர்பு கொண்டதன் பயனால் தமிழக வனத்துறையினர் பல நூறு மரக்கன்றுகளை அலுவலகத்தில் நட்டுள்ளனர். எனவே வனத்துறையினரின் உதவி வேண்டி நண்பரைத்தொடர்பு கொண்டேன். ஒரு எண்ணைக்கொடுத்தார். முயன்றபோது தொலைபேசியை ஒருவரும் எடுக்கவில்லை.  அவரே மீண்டும் வண்டலூர் மிருகக்காட்சிசாலையின் தொலைபேசி எண்ணைக்கொடுத்தார். (வீட்டில் இணைய வசதியை நான் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளேன்; நான் பயன்படுத்துவதும் சாதாரணமான அடிப்படை செல்பேசிதான், காமிரா கூட இல்லாத செல்பேசி, எனவே அவரைத்தொந்தரவு செய்ய வேண்டி இருந்தது). இப்போது மிருகக்காட்சிசாலையில் ஒருவர் தொலைபேசியை எடுத்தார். ‘சார், மலைப்பாம்பு ஒன்றைப் பிடித்து வைத்துள்ளேன், வந்து எடுத்துச்செல்ல முடியுமா?’ என்று கேட்டேன். பாம்பின் அடையாளங்களையும் அதன் நடத்தையையும் ஒவ்வொன்றாக கேட்டார், சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அவர் சொன்னார், ‘சார், என்ன சொல்றீங்க! நீங்க புடிச்சு வச்சிருக்கறது மலைப்பாம்பு இல்லை, கொடிய விசம்கொண்ட கண்ணாடிவிரியன், ரசல்ஸ் வைப்பர்!’. ஒரு விநாடி உடம்பு ஜில்லிட்டு சிலிர்த்தது. ‘கடிச்சா இருபது நிமிசத்துல இறந்து விடுவோம், ரத்தம் உறைந்து விடும். தள்ளி நில்லுங்க’ என்றார். ‘நீங்க வந்து எடுத்துச்செல்ல மாட்டீர்களா?’ என்றேன். வீட்டுக்குள் புகுந்துவிட்ட பாம்புகளை மட்டுமே வந்து எடுப்பது வழக்கம், தெருவில் திரிகின்ற பாம்புகளை நாங்கள் பிடிப்பதில்லை, நீங்கள் அதை பத்திரமாக எடுத்துச்சென்று ஏதாவது காட்டுக்குள் விட்டு விடுங்கள், விடுவிக்கும்போது மிகக்கவனமாக இருங்கள். அல்லது வேளச்சேரியில் வனத்துறை அலுவலகத்தில் கொண்டு சேர்த்துவிடுங்கள்’ என்றார். வேளச்சேரிக்கு பாம்பை பேருந்தில் எடுத்துச்செல்வதா, பையில் என்ன? என்று நடத்துனர் கேட்டால் என்ன சொல்வது, பாம்பு என்று சொன்னால் நடத்துநர் நம்புவாரா, நம்பினாலும் அனுமதிப்பாரா, நம்பவில்லை என்றால் ‘நீங்களே பைக்குள் கையை விட்டு செக் பண்ணுங்க சார்’ என்று நடத்துனரிடம் சொல்லிவிடலாமா என்றெல்லாம் சிந்தனை தறிகெட்டு ஓடியது.

சரி ஆனது ஆகட்டும், கொல்லக்கூடாது என்ற முடிவுடன் பிடிக்கப்பட்ட பாம்பை உயிருடன் விட்டுவிடுவதே சரி, அது கொடிய கண்ணாடிவிரியனாக இருந்தாலும் சரி என்ற முடிவுடன் பக்கத்து வீட்டு நண்பரை அழைத்தேன். மேலும் ஒரு பெரிய பையை போர்த்தி ஒரு கட்டுக்கட்டி ஸ்கூட்டரின் பின்னால் அவரை பையுடன் உட்காரவைத்து காட்டை நோக்கிப்பயணமானோம். சரியான முட்காடு ஒன்றை அடைந்தோம். கவனமுடன் பைகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்தோம். ஈயச்சட்டியில் இருந்து வெளியே வந்த விரியன் மீண்டும் பைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டான். அவன் படமெடுக்கும் ரகம் இல்லை என்பதால் கையோடு கொண்டுசென்ற காமிராவில் நான் இரண்டு படங்கள் எடுத்துக்கொண்டேன். காட்டில் கிடந்த கம்புகளை எடுத்து என்னதான் தள்ளினாலும் அவன் வெளியே வருவதாய் இல்லை. புதிதாக இருந்த பையை பாம்புடன் அப்படியே போட்டுவிட்டு வந்தால் சிறுவர்கள் பையை எடுத்துவிடக்கூடும், எனவே பையோடு விட்டுவிடுவது பெரும் தவறாகி விடும். வேறு வழியின்றி மூடப்பட்ட பையின் பக்கமாக சென்று பையைப்பிடித்து இழுத்து ஓரளவு தொலைவில் வீசினேன். வெளியே வந்த விரியன் சல்லென்று முட்புதருக்குள் சென்றான்.

பாம்புகளைப்பற்றி ஓரளவு படித்திருந்தும் தொடர்ந்து சானல்களில் பார்த்திருந்தும் ஒரு விசயத்தை மறந்து போனேன்: பொதுவாக தலை சிறியதாக முக்கோண வடிவில் உள்ளவை விசப்பாம்புகள். இதனை மறந்திருந்ததால் கொடியவிசமுடைய அந்த விரியனுடன் சுமார் ஐந்து ஆறடி தூரத்தில் அந்த இரவில் நாங்கள் ‘விளையாடிக்’ கொண்டிருந்தோம் என்ற உண்மை சிலீர் என்று உரைத்தது. தவிர உயிருடன் பிடிக்க வேண்டும் என்பதால் அதனை பெரிய அளவுக்கு தொந்தரவும் செய்யவில்லை, தொந்தரவு செய்திருந்தால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் அந்த விரியன் அந்த இரவில் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கக் கூடும்!  தவிரவும் மனிதர்கள் உருவில் நம்முடன் பழகித்திரியும் மிகக்கொடிய விசஜந்துக்களிடம் சதாசர்வகாலமும் கடிவாங்கிக்கொண்டே திரிவதாலும் கூட கொடியவிசமுள்ள கண்ணாடிவிரியன் அன்றைய இரவில் எங்களிடம் இரக்கப்பட்டு கடிக்காமல் விட்டிருக்கலாம் என்றும் தோன்றுகின்றது.

இறுதியாக: ஸ்கூட்டரின்  பின்னிருக்கையில் பாம்புடன் உட்கார்ந்துவந்த பக்கத்துவீட்டு நண்பரிடம் அது மலைப்பாம்பு இல்லை, கண்ணாடிவிரியன் என்று சொன்னேனா இல்லையா என்பது இப்போதும் நினைவில் இல்லை.  


கருத்துகள் இல்லை: