திங்கள், ஏப்ரல் 09, 2018

"நல்ல"பாம்புடன் ஒரு இரவு


பாம்புகள் மீதான பயம் இயற்கையாகவே மனித மனதுக்குள் உறைந்துள்ளது. அனைத்துப்பாம்புகளும் விசம் உள்ளவை அல்ல என்று அறிவியல் சொல்கின்றது; காட்டுயிர் ஆர்வலர்களும் மீண்டும் மீண்டும் இதனை வலியுறுத்திச் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். கண்ணில் கண்ட பாம்புகளை எல்லாம் அடித்துக்கொன்றுவிடாதீர்கள் என்ற வேண்டுகோளின் பின்னால் இந்த உண்மைதான் பலமாக இருக்கின்றது. டிஸ்கவரி, நேஷனல் ஜ்யோக்ரஃபி, அனிமல் ப்ளானெட் சானல்கள் நமக்குப் பழக்கமாகும் முன் கிண்டி பூங்காவில் காப்பாளர்கள் பாம்புகளை தலையில் அழுத்திப்பிடித்து கண்ணாடி டம்ளரில் விசத்தை எடுக்கும் காட்சிதான் நமக்கெல்லாம் பாம்புகள் குறித்த பிம்பத்தை மனதுக்குள் சித்திரமாக இருந்தது.  சானல்கள் வந்தபின்னர் ரொமுலஸ் விட்டேகர், ஸ்டீவ் இர்வின் போன்றோரும் ஆப்பிரிக்காவின் கொடிய விசப்பாம்பான மாம்பா வீட்டுக்குள் புகுந்து ஒளிந்துகொண்ட பின்னர் அதனைப் பிடிப்பதற்காகவே இன்பச்சுற்றுலா செல்வதுபோல காரில் ஜாலியாக பயணிக்கும் வனவுயிர் ஆர்வலர்களும் 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை கட்டுக்குள் அடக்கி ஒரு அடி தூரத்தில் காமிரா கொண்டு படம் எடுத்தது மட்டுமின்றி படமெடுத்து நிற்கும் அதன் தலையில் ஒரு முத்தமும் இடும் பெயர் தெரியாத அந்த மாவீரனும் இன்ன பிறரும் பாம்புகள் உள்ளிட்ட விசப்பிராணிகள் குறித்த புரிதலை நமக்கு ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது மிகையில்லை. 

நகரங்கள் விரிவாக்கம் என்ற பெயரில் கிராமங்களும் காடுகளும் தொடர்ந்து அதிவேகமாக மனிதனால் அழிக்கப்படும்போது அங்கே ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருக்கின்ற அப்பிரதேசத்துக்குச் சொந்தமான பாம்புகள் போன்ற பிராணிகள் தமது வாழிடம் அழிக்கப்படும்போது குழப்பம் அடைகின்றன; இருப்பிடமும் உணவும் தேடி தடுமாறித்திரிகின்றன; உண்மை இவ்வாறிருக்க யானைகளின் பாதையில் புகுந்து அட்டகாசம் செய்து அவற்றின் வலசைப்பாதையை ஆக்கிரமித்து மனிதன் கட்டியுள்ள கட்டுமானங்களை யானைகள் அப்புறப்படுத்துவதை ‘யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம்’ என்று மனிதர்கள் செய்தி வாசிக்கின்றார்கள்; இருப்பிடம் தேடியும் உணவு தேடியும் அலையும் பாம்புகளை ‘குடியிருப்புப் பகுதிக்குள் பாம்புகள்’ புகுந்துவிட்டதாக மனிதர்கள் புகார் செய்கின்றார்கள்.

12 வீடுகளே உள்ள எனது தெருவில் குழந்தைகள் எண்ணிக்கை அதிகம்; விடுமுறை நாட்களில் அவர்களின் ராஜ்ஜியம் தெருவில் களைகட்டும். ஒவ்வொரு தெருவிலும் கட்டப்படாத காலிமனைகள் இப்போதும் இருக்கின்றன. புதர் மண்டிக்கிடக்கும் இம்மனைகளில் பாம்புகள் குடியிருப்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். இரவு நேரங்களில் அவை நடமாடியதை விடிகாலையில் எங்களால் கண்டுகொள்ள முடியும்; குறிப்பாக கோடைகாலத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத உச்சிவெயில் நேரத்தில் அவை மரம் செடிகொடிகளின் குளிர்ச்சியை நாடி ’எனது’ வீட்டுக்குள்ளேயே ’அரவ’மின்றி  நடமாடும்போது எனது குடும்பத்தினர் பலமுறை பார்த்துள்ளோம். அவற்றில் நாகம், சாரை ஆகியனவும் பெயர் அறியாத பாம்புகளும் அடக்கம். அவற்றைப்பார்த்து பதட்டமின்றி நிதானப்பட மேற்படி சானல்கள் கற்றுக்கொடுத்துள்ளன என்பது உண்மைதான் எனினும் பாம்புகளை நெருங்கி ‘நீ  நல்லபாம்பா, இல்லை ரொம்ப நல்லபாம்பா?’ என்று கேட்டுவிடும் துணிச்சல் இதுவரை வரவில்லை என்பதும் உண்மைதான்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் இரவு பதினொரு மணிக்கு தெரு முனையில் மலைப்பாம்புதான் இது என்று ஒரு சத்தம் கேட்க, நான் பார்க்கும்போது இரண்டு குடும்பங்கள் தெருவின் ஒரு ஓரமாய் பார்த்தபடி இருந்தார்கள். சினிமாதொழினுட்பம் பயின்ற சரவணன் என்ற நண்பர் கையில் ஆறடி நீளமுள்ள கம்பு ஒன்றைப் பிடித்தபடி நின்றிருந்தார். உடனடியாக நான் அங்கே சென்றேன். என் மனைவியும் என்னுடன் வந்தார். வீட்டுச்சுவர் ஓரமாக நான் பார்த்தேன், முழங்கையின் அளவு பருமனும் சுமார் நாலடி நீளமும் கருப்பு ப்ரௌன் வண்ணத்தில்  உடலும் அதே வண்ணத்தில் டைமன் வடிவங்களும் கொண்ட பாம்பு அது. ஸ் ஸ் என்று சீறிக்கொண்டிருந்தது. ஆங்கில எஸ் எழுத்து தொடர்ச்சியாக சுருண்டு கிடந்தால் எப்படி இருக்குமோ அந்த வடிவில் உடலை   சுருட்டிக்கொண்டு கிடந்தது.  சிலர் அதனை கொன்றுவிடலாம் என்றனர். சரவணனும் நானும் ‘மலைப்பாம்புக்கு விசம் இல்லை, கொல்ல வேண்டாம், பிடித்துவிடலாம்’ என்று வக்கீலாக வாதாடினோம். அந்த இடத்தை விட்டு தப்பியோடவே முயற்சி செய்தது. சரவணனின் யோசனைப்படியே ஒரு ஈயச்சட்டியைக்கொண்டுவந்து பாம்பு நகரும் திசையில் தரையோடு வைத்து பாம்பை அதனுள் நுழையச்செய்தோம். பாம்பு நுழைந்து சமர்த்தாக உட்கார்ந்தபின்னர் சட்டியை நிமிர்த்தினோம்; காற்றுப்புகக்கூடிய பெரிய பை ஒன்றைக்கொண்டு  சட்டியின் வாய் பையின் அடியைத்தொடும்வரை இழுத்து அதன் பின் பக்குவமாக சட்டியைக்கவிழ்த்தோம். இப்போது சட்டி கவிழ்ந்துவிட்டது, உள்ளே பாம்பு இருக்கின்றது, பையின் வாய் மேலே வந்துவிட்டது, தயாராக இருந்த கயிற்றால் ஓரளவு இடைவெளியில் பையை இறுகக்கட்டினோம். இப்போது மலைப்பாம்பைப் பிடித்தாகிவிட்டது. அடுத்த பிரச்னை ஆரம்பம்: நாய்களும் கீரிகளும் நடமாடும் இடத்தில் பாம்புடன் ஆன பையை விடியவிடிய தெருவில் போட்டுவைப்பதா? கூடாதெனில் பையை எங்கே வைப்பது? யார் வீட்டில் பத்திரப்படுத்துவது? எல்லோரும் மவுனம் ஆனார்கள். சரி நானே எடுத்துச்செல்கின்றேன் என்று முன்வந்தேன், மலைப்பாம்பு, விசம் இல்லை என்பதால் என் மனைவியும் ஒப்புக்கொண்டார். கையில் பாம்புள்ள பையை தூக்கிக்கொண்டு எனது வீட்டின் மாடி ஏறும் படியின் பக்கவாட்டு கிரில் கம்பியில் உயரே அதனைக் கட்டித்தொங்கவிட்டேன். தீயணைப்புதுறையை தொலைபேசியில் அழைத்தேன்.  பேசியவர் ப்ளூகிராஸ் எண்ணைக் கொடுத்துவிட்டு கொட்டாவி விட்டார். ப்ளூக்ராசில் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. தூங்கச்சென்றோம்.

அது ஞாயிறு காலை. ஆயினும் ஆறு மணிக்கு எழுந்தோம். உள்ளே இருந்த மலைப்பாம்பு சட்டியில் இருந்து வெளியே நகர்ந்து பைக்குள்ளேயே சுற்றத்தொடங்கியது. நண்பர் சத்யநாராயணனை தொடர்பு கொண்டேன். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை நான் தொந்தரவு செய்துவிட்டேன் என்பது புரிந்தது. மன்னிப்புக்கோரினேன். வனத்துறையின் பாதுகாப்பில் உள்ள மிகப்பரந்த எனது அலுவலகத்தில் வார்தா புயலின் தாக்கத்தால் மிகப்பல மிகப்பெரிய மரங்கள் அடியோடு சாய்ந்தன; அவர் தனிப்பட்ட முயற்சி எடுத்துக்கொண்டு தமிழக அரசின் தலைமைச்செயலகம் வரை தொடர்பு கொண்டதன் பயனால் தமிழக வனத்துறையினர் பல நூறு மரக்கன்றுகளை அலுவலகத்தில் நட்டுள்ளனர். எனவே வனத்துறையினரின் உதவி வேண்டி நண்பரைத்தொடர்பு கொண்டேன். ஒரு எண்ணைக்கொடுத்தார். முயன்றபோது தொலைபேசியை ஒருவரும் எடுக்கவில்லை.  அவரே மீண்டும் வண்டலூர் மிருகக்காட்சிசாலையின் தொலைபேசி எண்ணைக்கொடுத்தார். (வீட்டில் இணைய வசதியை நான் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளேன்; நான் பயன்படுத்துவதும் சாதாரணமான அடிப்படை செல்பேசிதான், காமிரா கூட இல்லாத செல்பேசி, எனவே அவரைத்தொந்தரவு செய்ய வேண்டி இருந்தது). இப்போது மிருகக்காட்சிசாலையில் ஒருவர் தொலைபேசியை எடுத்தார். ‘சார், மலைப்பாம்பு ஒன்றைப் பிடித்து வைத்துள்ளேன், வந்து எடுத்துச்செல்ல முடியுமா?’ என்று கேட்டேன். பாம்பின் அடையாளங்களையும் அதன் நடத்தையையும் ஒவ்வொன்றாக கேட்டார், சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அவர் சொன்னார், ‘சார், என்ன சொல்றீங்க! நீங்க புடிச்சு வச்சிருக்கறது மலைப்பாம்பு இல்லை, கொடிய விசம்கொண்ட கண்ணாடிவிரியன், ரசல்ஸ் வைப்பர்!’. ஒரு விநாடி உடம்பு ஜில்லிட்டு சிலிர்த்தது. ‘கடிச்சா இருபது நிமிசத்துல இறந்து விடுவோம், ரத்தம் உறைந்து விடும். தள்ளி நில்லுங்க’ என்றார். ‘நீங்க வந்து எடுத்துச்செல்ல மாட்டீர்களா?’ என்றேன். வீட்டுக்குள் புகுந்துவிட்ட பாம்புகளை மட்டுமே வந்து எடுப்பது வழக்கம், தெருவில் திரிகின்ற பாம்புகளை நாங்கள் பிடிப்பதில்லை, நீங்கள் அதை பத்திரமாக எடுத்துச்சென்று ஏதாவது காட்டுக்குள் விட்டு விடுங்கள், விடுவிக்கும்போது மிகக்கவனமாக இருங்கள். அல்லது வேளச்சேரியில் வனத்துறை அலுவலகத்தில் கொண்டு சேர்த்துவிடுங்கள்’ என்றார். வேளச்சேரிக்கு பாம்பை பேருந்தில் எடுத்துச்செல்வதா, பையில் என்ன? என்று நடத்துனர் கேட்டால் என்ன சொல்வது, பாம்பு என்று சொன்னால் நடத்துநர் நம்புவாரா, நம்பினாலும் அனுமதிப்பாரா, நம்பவில்லை என்றால் ‘நீங்களே பைக்குள் கையை விட்டு செக் பண்ணுங்க சார்’ என்று நடத்துனரிடம் சொல்லிவிடலாமா என்றெல்லாம் சிந்தனை தறிகெட்டு ஓடியது.

சரி ஆனது ஆகட்டும், கொல்லக்கூடாது என்ற முடிவுடன் பிடிக்கப்பட்ட பாம்பை உயிருடன் விட்டுவிடுவதே சரி, அது கொடிய கண்ணாடிவிரியனாக இருந்தாலும் சரி என்ற முடிவுடன் பக்கத்து வீட்டு நண்பரை அழைத்தேன். மேலும் ஒரு பெரிய பையை போர்த்தி ஒரு கட்டுக்கட்டி ஸ்கூட்டரின் பின்னால் அவரை பையுடன் உட்காரவைத்து காட்டை நோக்கிப்பயணமானோம். சரியான முட்காடு ஒன்றை அடைந்தோம். கவனமுடன் பைகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்தோம். ஈயச்சட்டியில் இருந்து வெளியே வந்த விரியன் மீண்டும் பைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டான். அவன் படமெடுக்கும் ரகம் இல்லை என்பதால் கையோடு கொண்டுசென்ற காமிராவில் நான் இரண்டு படங்கள் எடுத்துக்கொண்டேன். காட்டில் கிடந்த கம்புகளை எடுத்து என்னதான் தள்ளினாலும் அவன் வெளியே வருவதாய் இல்லை. புதிதாக இருந்த பையை பாம்புடன் அப்படியே போட்டுவிட்டு வந்தால் சிறுவர்கள் பையை எடுத்துவிடக்கூடும், எனவே பையோடு விட்டுவிடுவது பெரும் தவறாகி விடும். வேறு வழியின்றி மூடப்பட்ட பையின் பக்கமாக சென்று பையைப்பிடித்து இழுத்து ஓரளவு தொலைவில் வீசினேன். வெளியே வந்த விரியன் சல்லென்று முட்புதருக்குள் சென்றான்.

பாம்புகளைப்பற்றி ஓரளவு படித்திருந்தும் தொடர்ந்து சானல்களில் பார்த்திருந்தும் ஒரு விசயத்தை மறந்து போனேன்: பொதுவாக தலை சிறியதாக முக்கோண வடிவில் உள்ளவை விசப்பாம்புகள். இதனை மறந்திருந்ததால் கொடியவிசமுடைய அந்த விரியனுடன் சுமார் ஐந்து ஆறடி தூரத்தில் அந்த இரவில் நாங்கள் ‘விளையாடிக்’ கொண்டிருந்தோம் என்ற உண்மை சிலீர் என்று உரைத்தது. தவிர உயிருடன் பிடிக்க வேண்டும் என்பதால் அதனை பெரிய அளவுக்கு தொந்தரவும் செய்யவில்லை, தொந்தரவு செய்திருந்தால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் அந்த விரியன் அந்த இரவில் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கக் கூடும்!  தவிரவும் மனிதர்கள் உருவில் நம்முடன் பழகித்திரியும் மிகக்கொடிய விசஜந்துக்களிடம் சதாசர்வகாலமும் கடிவாங்கிக்கொண்டே திரிவதாலும் கூட கொடியவிசமுள்ள கண்ணாடிவிரியன் அன்றைய இரவில் எங்களிடம் இரக்கப்பட்டு கடிக்காமல் விட்டிருக்கலாம் என்றும் தோன்றுகின்றது.

இறுதியாக: ஸ்கூட்டரின்  பின்னிருக்கையில் பாம்புடன் உட்கார்ந்துவந்த பக்கத்துவீட்டு நண்பரிடம் அது மலைப்பாம்பு இல்லை, கண்ணாடிவிரியன் என்று சொன்னேனா இல்லையா என்பது இப்போதும் நினைவில் இல்லை.  


திங்கள், மார்ச் 19, 2018

விவசாயிகளின் நெடும்பயணமும் பெருமுதலாளிகளின் ஊடக அதர்மமும்



ஏறத்தாழ 180 கிலோமீட்டர் தூரம் அவர்கள் நடந்தார்கள்; அவர்களில் 80 வயதைத்தொடுகின்ற முதியவர்கள், வயது முதிர்ந்த பெண்கள், வாலிபர்கள், குழந்தைகள் எனப் பலரும் இருந்தார்கள். அனைவரும் விவசாயிகள், விவசாயக்குடும்பங்களை சேர்ந்தவர்கள். பாரதீய ஜனதாக் கட்சி + சிவசேனா ஆளும் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் நாசிக் நகரில் மார்ச் 7 அன்று சுமார் 10,000 விவசாயிகளுடன் தொடங்கியது இந்த நடைப்பயணம். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் அரங்கமான அகில இந்திய விவசாயிகள் சபையால் (AIKS) நடத்தப்பட்டதே இந்த நெடும்பயணம். தலைநகர் மும்பையில் உள்ள சட்டசபையை முற்றுகையிடும் நோக்கில் நாசிக் நகரில் இப்போராட்டப்பயணம் தொடங்கப்பட்டபோது 10,000 விவசாயிகள் செம்பதாகைகளுடன் அணிதிரண்டார்கள் எனவும், பயணத்தின் வழியில் மேலும் 30,000 விவசாயிகள் இணைந்து கொண்டார்கள் எனவும் இணையத்திலும் வெகுசில ஆங்கில நாளிதழ்களிலும் தகவல்கள் சொல்கின்றன.

இவர்களில் பெரும்பாலோர் தமது கால்களில் செருப்புக்கூட அணியாமல் நடந்தார்கள்; வெயில் சில நாட்களில் 38 டிகிரி செல்சியஸை தொட்டது. வழியில் தமக்கான எளிய உணவை தாமே சமைத்துக்கொண்டார்கள். இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொருவரும் வாழும் பொருட்டு தம்மைத்தாமே வருத்திக்கொண்டு தமது நியாயமான கோரிக்கைகளை முழக்கமாக எழுப்பிக்கொண்டு தங்களைத்தாங்களே உற்சாகப்படுத்திக்கொண்டு நடந்தார்கள்.  இரவு நேரத்தில் பயணம் எங்கே முடிகின்றதோ அங்கேயே படுத்து உறங்கினார்கள். உழைப்பவன் தனது களைப்பை மறப்பதற்காக காலங்காலமாக பயின்று வரும் தமக்கான பாடல்களைப் பாடியும் நடனம் ஆடியும் தமது அன்றையை களைப்பைப் போக்கிக்கொண்டார்கள்.  பொழுது புலரும்போது உறக்கம் கலைந்து மீண்டும் நடந்தார்கள். 

இதுபோன்ற போராட்டங்களை பொதுவாக வெறுப்புடன் நோக்குகின்ற நகரவாசிகள் இம்முறை தமது அணுகுமுறையை மாற்றிக்கொண்டார்கள்.  தானே மாவட்டத்தின் ஷாகாபூரில் பேரணி நுழைந்தபோது அந்த ஊர் மக்கள் விவசாயிகளை வரவேற்று சிற்றுண்டியும் குடிநீரும் வழங்கினார்கள். மார்ச் 10 அன்று மும்பையின் எல்லையைத்தொட்டபோது ஊர் மக்கள் வழிநெடுகிலும்   திரண்டு நின்று வரவேற்று சிற்றுண்டியும் குடிநீரும் வழங்கியதோடு வேறு பல உதவிகளையும் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 11 அன்று விக்ரோலியை அடைந்தபோது ஊர் மக்கள் விவசாயிகளின் பாதையில் மலர்தூவி வரவேற்று நீர் வழங்கி தமது ஆதரவைத்தெரிவித்தார்கள். அருகில் உள்ள சீக்கிய குருத்வாராவில் உள்ள சகோதரர்கள் தம்மால் இயன்ற உணவுவகைகளை சமைத்து வழங்கினார்கள். ஊர்வலம் மார்ச் 12 அன்று மேக்சிமம் சிட்டியை வந்தடைந்தபின்னும் மக்களின் ஆதரவு தொடர்ந்தது. குறிப்பாக மும்பையின் புகழ்பெற்ற டப்பாவாலாக்கள் அணிதிரண்டு திட்டமிட்டு மும்பை மக்களிடம் இருந்து ரொட்டிகளைப் பெற்று விவசாயிகளுக்கு வழங்கி அவர்களின் பசியாற்றினார்கள். 

எதன் பொருட்டு இந்த 180 கி.மீ. பயணம்? விவசாயிகளின் தேசம் என்று சொல்லப்படும் இத்தேசத்தில்தான் விவசாயிகள் விசம் அருந்தி காலங்காலமாகப் பாடுபட்ட தமது நிலத்திலேயே மாய்ந்து உயிரை விடுகின்றார்கள். விவசாயம் செய்யும் பொருட்டு அரசிடம் கடன் பெறுவது என்பது அத்தனை எளிதான ஒன்றல்ல. அவ்வாறே கடன் பெற்றாலும் மழைபொய்த்துப்போன பின்னால், கிணறுகள் வறண்டபின்னால் அக்கடனைக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாத நிலையில், வங்கி அதிகாரிகளின் ஏஜெண்டுகள் வீட்டுவாசலில் வந்து கேவலமாகப் பேசி கடனை திரும்பக்கேட்டு மிரட்டும்போது அக்கடனையும் திருப்பிச்செலுத்தமுடியாத நிலையில் தற்கொலை செய்துகொள்வது தேசமெங்கும் மிகச்சாதாரணமான அன்றாட நிகழ்வாகி உள்ளது.  இந்த மாநிலத்தில் உள்ள விதர்ப்பா மாவட்டமே விவசாயிகளின் தற்கொலைக்கு தலைநகரமாக ‘ஒளிர்கின்றது’.  இதன்றி கார்ப்பொரேட்டுக்களின் நலன்பொருட்டு விவசாய நிலங்கள் அதிரடியாக கைப்பற்றப்பட்டு தங்கநாற்கரச்சாலை, ஆறுவழிச்சாலை, எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை என்ற பெயர்களில் விவசாயமும் விவசாயியும் அழிக்கப்படுகின்றனர். சென்ற ஆண்டில் மட்டும் பிஜேபி சிவசேனா கூட்டணி ஆளும் இம்மாநிலத்தில் 2,000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்.  கடும் வறட்சி அல்லது கடும்மழை, விளைபொருட்களுக்கான விலையை ஏஜெண்டுகளும் பெருமுதலாளிகளும் நிர்ணயம் செய்யும் வித்தையால் இட்ட முதலையும் எடுக்க இயலாத கெடுநிலை, அரசால் கைவிடப்பட்ட கையறுநிலை, வங்கிகளில் கடன்பெறுவதற்கு ஆயிரம் நிபந்தனைகள், கடன் பெற்றாலும் மேலே சொல்லப்பட்ட பல காரணங்களால் கடனைத் திருப்பிச்செலுத்த முடியாத அவலம் என விவசாயிகள் இந்திய தேசமெங்கும் சந்திக்கின்ற பிரச்னைகள் தீரும் நாள் அண்மையில் இல்லை. 

சாமானிய மக்களை ஒருசில லட்சங்கள் பெறுமானமான கல்விக்கடனுக்கும் விவசாயக்கடனுக்கும் மிகக்கேவலமாக நடத்தும் அதிகார வர்க்கம், கேவலம் ஒரு ஆதார் கார்டு இல்லையேல் மலத்தில் உழலும் புழுவுக்கும் கீழாக சாமானிய மக்களை கேவலமாக விரட்டியடிக்கும் அதிகாரவர்க்கம், பல்லாயிரம்கோடிகளை அதாவது மக்கள்பணத்தை விஜய்மல்லையா, நீரவ்மோடி போன்ற பெருமுதலாளிகளுக்கு கடன் என்ற பெயரில் வாரிக்கொடுக்கின்றது; பின்னர் ஒருநாள் இவர்கள் அரசாங்கத்தின் துணையுடன் வெளிநாடுகளுக்கு பத்திரமாக அனுப்பிவைக்கப் படுகின்றார்கள் (ஊடகங்களில் இதை ’தப்பிச்செல்கின்றார்கள்’ என செய்திவாசித்து நம்மை நம்பச்சொல்கின்றார்கள்). 

தாங்கள் வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளைகளில் முக்கியமானதாக கருதப்படும் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price) (அதாவது உற்பத்திக்கான செலவு + அதில் 50%) நிர்ணயிக்க வேண்டும், மழையாலும் பூச்சிகளாலும் விவசாயம் பாதிக்கப்படும்போது ஒரு ஏக்கருக்கு ரூ.40,000 நட்டஈடு தர வேண்டும், விவசாய நிலங்களையும், மக்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்திவரும் காடுகளையும் பறித்து விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டுக்காக கார்பொரேட்டுக்களுக்கு வழங்குவதை தடுக்க வேண்டும், காடுகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அனுமதிக்க வேண்டும் ஆகிய பரிந்துரைகளை அரசு உடனடியாக  நடைமுறைப்படுத்த வேண்டும் என்பவை விவசாயிகள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளில் தலையாயன.  இவற்றில் எதுவும் புதிதான கோரிக்கை அல்ல என்பதை சொல்லவேண்டியதில்லை.

சியோனில் இருந்து ஊர்வலமாகச்சென்று மாநிலசட்டமன்றத்தை மார்ச் 12 அன்று முற்றுகையிடுவதுதான் திட்டம். ஆனால் பள்ளித்தேர்வுகள் நடப்பதை கணக்கில்கொண்டு பகலில் தங்கள் போராட்டத்தை தள்ளிவைத்தார்கள், ஆனால் இரவில் ஊர்வலமாக சென்று ஆசாத் மைதானத்தில் அமர்ந்தார்கள். விவசாயிகளின் இந்த அணுகுமுறையை மும்பை நகரமக்கள் பாராட்டினார்கள்.

விவசாயிகளின் வாழ்க்கையையும் அவர்களது பிரச்னைகளையும் தொடர்ந்து கவனித்து எழுதிவரும் பீ.சாய்நாத் கூறுவது: ‘தங்களது தொழிலை ஒருநாள் தியாகம் செய்தாலும் அதனால் விளையும் நட்டம் மிகப்பெரியது என்பதை விவசாயிகளும் விவசாயத்தொழிலாளர்களும் நன்கு அறிவார்கள். அவ்வாறிருக்க ஏழு நாட்கள் இவர்கள் தமது தொழிலை தியாகம் செய்துள்ளார்கள்; இவர்களையே நம்பியிருக்கின்ற நிலத்தை மட்டுமின்றி  கால்நடைகளையும் ஒரு வாரம் கவனிக்காமல் விட்டு நெடும்பயணத்தில் பங்குபெற்றுள்ளார்கள். இவர்கள் தத்தமது ஊர்களுக்கு திரும்பிச்சென்றபின்னாலும் எதிர்வருகின்ற பல நாட்களுக்கு பட்டினிகிடக்க வேண்டியிருக்கும் என்று தெரிந்திருந்தும் அவர்கள் இந்த நடைப்பயணத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்கள்.  தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக மும்பை நகருக்குள் தங்களது பயணத்தை பகலில் நடத்தாமல் இரவுவேளையில் நடத்தியுள்ளார்கள். தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 41 நாட்கள் நடத்திய போராட்டத்தை அரசு எப்படி அணுகியது, ஊடகங்கள் எவ்வாறு நடந்து கொண்டன என்பது வருத்தத்திற்குரியது.”
இறுதியாக தாங்கள் ஏமாந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த விவசாயிகள், அரசு பல கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தபோது எழுத்துவடிவில் அதனை ஒப்பந்தமாக்கியுள்ளார்கள்.
இதேபோன்றதொரு நெடும்பயணத்தை மீண்டும் இந்த மாதம் 19 அன்று தொடங்க உள்ளதாக அகில இந்திய விவசாயிகள் சபை சொல்கின்றது. அதன் ஒரு கட்டமாக ஏப்ரல் 30 அன்று ’சிறையை நிரப்பும்’ போராட்டத்தையும் நடத்த உள்ளார்கள். 

மூணாறில் பெண்கள் திரண்டு தலைமையேற்று நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க  தேயிலைத்தோட்டத்தொழிலாளர் போராட்டம், தொழிலாளர் வருங்காலவைப்பு நிதியை தொழிலாளர்கள் தாங்கள் ஓய்வு பெறும் காலத்தில்தான் மீட்டு எடுத்துக் கொள்ளமுடியும் என்ற மோடி அரசின் உத்தரவுக்கு எதிராக பெங்களூருவில் அன்றாடக் கூலித்தொழிலாளர்கள்  தெருக்களில் திரண்டு நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு நாட்கள் போராட்டம் ஆகிய செய்திகள் தாங்கள் நடத்தும் டிவி சானல்களிலும்  செய்தித்தாட்களிலும் இடம்பெற்று விடாமல் பெருமுதலாளிகள் எப்படி திட்டமிட்டு மறைத்தார்களோ அதேபோல் விவசாயிகள் நடத்திய வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த நெடும்பயணத்தையும் திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள். அநீதிக்கும் கொடுமைக்கும் எதிரான சாமானிய மக்களின் எதிர்ப்புக்குரலும் போராட்டங்களும் பல நூற்றாண்டுகள் வயதானவை, தொடர்ந்து உரமேறி கூர்மையடைந்து கொண்டே வருபவை என்பதை வரலாறு உரத்த குரலில் எப்போதும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றது.  சாமானிய மக்களின் போராட்டங்கள் டிவி சானல்களையும் பத்திரிக்கைகளையும் நம்பி நடப்பதும் இல்லை, சாமானிய மக்களின் போராட்டங்கள் ஏழு மணி சீரியல் நாடகங்களும் இல்லை.



சனி, ஜனவரி 20, 2018

வாசிக்கத் தொடங்கிய கதை (1)

1) எழுத்துடனும் புத்தகங்களுடன் ஆன உறவுக்காக எந்த ஒரு குழந்தையும் காத்திருப்பதில்லை. பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படும் அந்த நாளுக்காகவோ ஆசிரியரால் அ...அம்மா... என்று வாய்விட்டுச்சொல்லிப் பழக்கப்படுத்தப்படும், வானத்தில் மின்னல் வெட்டி இடிஇடிக்கும் தெய்வாம்சம் பொருந்திய சுபகணத்திற்காகவோ காத்திருப்பதில்லை. கையில் அகப்படும் எந்த ஒரு தாளையும் புத்தகத்தையும் தாறுமாறாகக் கிழிக்கும்போது எழும் சத்தத்தில் சந்தோசம் காணும் நொடியிலேயே எழுத்துடனும் புத்தகங்களுடனும் ஆன உறவு ஒவ்வொரு குழந்தைக்கும் தொடங்கி விடுகின்றது எனலாம். வளர்ந்தவர்கள் படிச்சுக்கிழிக்கிறார்கள் எனில் குழந்தைகள் பல்வேறுதரப்பட்ட புத்தகங்களையும் படிக்காமலேயே கிழித்துவிடுகின்றார்கள்; ஆக இருவருமே இறுதியில் கிழிக்கத்தான் போகின்றார்கள் எனும்போது வளர்ந்தவர்கள் படிக்கிறேன் பேர்வழி என்று தேவையில்லாமல் நேரத்தை செலவு செய்து படித்ததெல்லாம் வீணோ என்று தோன்றுகின்றது. வாசிக்கிறவர்கள் புத்தகத்தை கிழிக்கிறார்கள் எனில் எழுதியவர்கள் விமர்சகர்களிடம் கிழிபட்டு நார்நாராக தொங்குகின்றார்கள் என்பது தனிக்கதை. நிற்க.

2) நமது சமூக அமைப்பில் பொதுவாக ‘படிப்பது
என்பது ஃபர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்து பொருளாதார ரீதியாக பாதுகாப்புத்தரும் ஒரு உத்தியோகத்தை அடையும் அல்லது அமெரிக்க விசா பெற்று ஸ்டேட்ஸில் செட்டில் ஆகும் ஒற்றை இலக்குக்கான ஒருவழிப்பாதையாக, வணிகம் சார்ந்த ஒரு சொல்லாடலாய் இருக்கின்றது. அவ்வாறெனில் அப்படியான ஒரு பாதுகாப்பான உத்தியோகத்தில் அமர்ந்த பின்னர், அதாவது இலக்கை எட்டிய பின்னர் ‘படிப்பதுஎன்பது அவசியமற்ற ஒன்றாகிவிடுகின்றது. கடந்த 70 வருடங்களில் இதுகாறும் நம்மை ஆண்ட, ஆண்டுகொண்டிருக்கின்ற அரசுகள் நேரடியாக இல்லாவிடினும் ‘ஒரு பத்துப்பேராவது புரிஞ்சிக்கிடுவான்என்ற நப்பாசையில் பூடகமாவது பள்ளி+கல்லூரிப்பாடத்திட்டங்களில் சம்பாதிப்பதற்கான வழியைக்காட்டுவதற்கும் அப்பால் என்னத்தையாவது செருகி வைத்துள்ளனவா என்று தேடிப்பார்ப்பது மூடநம்பிக்கையில் சேரும். செருகி வைக்காவிட்டாலும் பரவாயில்லை, இருக்கின்ற வரலாற்றையாவது, அதாவது மிக எளிய முறையில் சொன்னால் குற்றம் நடந்தது என்ன?பாணியில் நடந்த கதையையாவது அப்படியே அச்சடிச்சு  போடுகிறார்களா என்றால் அப்படியும் இல்லை. 

3) தென்னாப்பிரிக்காவுக்கு 1893இல் வக்கீல் தொழில் செய்ய சென்ற காந்தியை ரயில்பெட்டியில் வெள்ளை அதிகாரி கன்னத்தில் அடித்து பெட்டியை தூக்கி பிளாட்பாரத்தில் எறிந்ததையும் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற நூல் அவருக்கு புதிய சிந்தனைகளைத் தூண்டியதையும்  மீண்டும் அவர் 1914இல் இந்தியாவுக்கு வந்து காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து நாட்டுவிடுதலையில் தலையாயப் பங்காற்றியதையும் தேதி மாறாமல் அச்சிட்டு விநியோகிக்கும் நமது சர்க்கார், 1948 ஜனவரி 30 அன்று கொடியவன் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று படம் முடியும் முன்பே ரீல் அறுந்து வணக்கம்போட்ட திரைப்படம் மாதிரி திடீரென நம்மை சப்ஜெக்ட்டில் இருந்து வெளியேற்றுகின்றது. இப்போதெல்லாம் 1948 ஜனவரி 30 அன்று இறந்துபோனதாக சொல்கின்றார்கள்; செரிமானக்கோளாறு காரணமாகவோ காலில் தூதுவளைமுள் குத்தியதாலோ காந்தி  இறந்திருப்பார் என்று இப்போதே நம் பிள்ளைகள் பேசிக்கொள்ளும் அளவிற்கு நமது ஆட்சியாளர்கள் பாடத்திட்டங்களை திட்டமிட்டு துல்லியமாக தயாரிக்கின்றார்கள். உண்மையில் விடுதலைபெற்ற இந்தியாவின் எதிர்கால சமூக அமைதியின் சீரழிவிற்கான அஸ்திவாரத்தையே நாதுராம் கோட்சேவின் துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட தோட்டாக்களின் மூலம் அன்றைய தினம் வலதுசாரி இந்துதுவா தீவிரவாத ஆர் எஸ் எஸ் இயக்கம் பலமாக போட்டதில் அவர்களுக்கேயான எதிர்கால இந்தியாவுக்கான அஜெண்டா இருந்தது; இதனையும்,  நவீனகால இந்தியாவின் சமூக-பொருளாதார வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தின் முதற்பக்கம் அன்றையதினம்தான் எழுதப்பட்டது என்பதையும் அம்பலப்படுத்தி அன்றைய-இன்றைய-எதிர்கால இந்திய சமூகத்தின் மனத்தில் அழுத்தமாகப் பதிய வைத்திருக்க வேண்டிய, காந்தியை தன் கட்சிக்காரராக மட்டுமே இந்தியமக்கள் சுருக்கிப்பார்க்க வேண்டும் என்பதற்காகவே காலம் பூராவும் பெரும் பிரயாசையுடன் பாடுபட்ட,  1947க்குப்பின் பெரும்பான்மையான காலத்தில் மையத்தில் ஆட்சியதிகாரம் செலுத்திய காங்கிரஸ் கட்சியும் அதனைச் செய்யாமல் திட்டமிட்டு நழுவியதற்கும் தவறியதற்கும் காரணம் அவர்களுக்கான அஜெண்டா என்று ஒன்று இருந்தது.   

4) எதிரெதிர்முனைகளில் இருப்பதாகச் தோன்றும் இந்த  இரண்டு தரப்புக்களுக்கும் பொதுவான ஒரு அஜெண்டா இருந்தது: விடுதலை பெற்ற இந்தியாவின் இயற்கை வளங்களையும், சாமானிய உழைக்கும் மக்களின் கடந்த பல நூற்றாண்டுகால - எதிர்கால உழைப்பின் பயனாய் உயர்ந்து நிற்கப்போகும் இத்தேசத்தின் பொருளாதார வளர்ச்சியின் பலன்களை அதே சாமானிய உழைக்கும் மக்கள் அனுபவித்துவிடக்கூடாது, அந்த பலன்கள் யாவும் சில பத்திருபது பெருமுதலாளிகளின் கல்லாக்களில் மட்டுமே நிரம்பி வழிய வேண்டும், இதன் பொருட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கான எல்லாவிதமான தகிடுதத்த மோசடிவேலைகளையும் தயக்கமின்றி செய்துகொண்டே இருக்க வேண்டும். இதன்பொருட்டு 1947 ஆகஸ்ட்டுக்கு முன்பான இத்தேசத்தின் பல நூறு வருடகால  சாமானிய உழைக்கும் மக்களின் குருதிதோய்ந்த போராட்ட வரலாற்றையும், அவர்தம் போராட்டங்களுக்கு தலைமையேற்றும் அம்மக்களோடு பிணைந்து நின்றும் வழிநடத்திய தியாகச்செம்மல்களின் போராட்ட வரலாற்றையும் மறைப்பது, திரிப்பது, பின்னர் பொய்களையே வரலாறென எழுதி எதிர்காலச்சந்ததிகளை ஏமாற்றுவது. இந்த இலக்குகளை எட்டுவதற்கான பாதையில் குறுக்கே வரும் எந்த ஒரு தடையையும் அதாவது உழைக்கும் மக்களின் எதிர்ப்பையும் போராட்டங்களையும் எல்லாவிதமான அடக்குமுறைகளையும் ஏவி தயவுதாட்சண்யம் இன்றி ஒடுக்கி நசுக்கிவிடுவது மிக முக்கியம், ஏனெனில் வரலாறு மிக மிக முக்கியம். சம்பாதிப்பதற்கான வழியைக்காட்டுவதற்கும் அப்பால் கடந்த 70 வருடங்களில் நமது பள்ளி+கல்லூரிப் பாடத்திட்டங்களில் ஒரு மண்ணும் இல்லாமல் இருப்பது என்பது தற்செயலான ஒன்று அல்ல என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஆகப்பெரும் பிரயத்தனம் எதுவும் தேவையில்லை. 
5) அவ்வாறெனில் இத்தேசத்தின் வரலாற்றை மட்டுமின்றி பெருமுதலாளிகளின் நலன் பொருட்டு மட்டுமே ஆட்சியதிகாரம் செலுத்தப்படும் எந்த ஒரு தேசத்தின் வரலாற்றையும் (தேசவரலாறு என்பது உண்மையில் எந்த ஒரு தேசத்தினதும் உழைக்கும் மக்களின் போராட்ட வரலாறு அன்றி வேறில்லை; சற்றே விரித்தால் ஆளும்வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான, தமது நியாயமான உரிமைகளுக்கான போராட்ட வரலாறு என்பதே) பள்ளி+கல்லூரிப் பாடத்திட்டங்களில் கண்டறிய முடியாது என்பதும் இவற்றுக்கு அப்பால் அதாவது பள்ளி+கல்லூரிகளின் காம்பவுண்டு சுவர்களுக்கு வெளியே மட்டுமேதான் கண்டறிய முடியும் என்பதும் தெளிவு. அப்படியெனில் ‘படிப்பது’ ‘வாசிப்பதுஎன்பதுதான் என்ன? எதைப் படிப்பது? எவ்வாறு படிப்பது? காலத்தை செலவு செய்து எதற்காகப் படிப்பது? படிப்பதற்கான சாத்தியங்கள் அனைவருக்கும் வாய்த்து விடுகின்றதா? வாய்க்கின்றதெனில் ஒரே சம கன பரிமாணத்திலான வாய்ப்பே அனைவருக்கும் கிட்டுகின்றதா?

6) தொடக்கத்தில் சொன்னபடி எழுத்துடனும் புத்தகங்களுடன் ஆன உறவுக்காக எந்த ஒரு குழந்தையும் காத்திருப்பதில்லை. அதே போல் எழுத்தும் புத்தகங்களும் எல்லாக் குழந்தைகளுக்காகவும் காத்திருப்பதில்லை.  தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே கதைகேட்பதில் இருந்து குழந்தைகளின் கற்பனாசக்தி தொடங்குவதாகவும்  விரிவடைவதாகவும் பொதுவாக சொல்லப்படுகின்றது. எல்லாத் தாய்மார்களுக்கும் தமது குழந்தைகளுக்கு சொல்வதற்கான கதைகளை வேறெங்கோ கேட்டு பொத்திப் பாதுகாக்கவும் அல்லது தனது சொந்தக் கற்பனையில் அத்தகு கதைகளை ‘எழுதிப்பார்த்திடவும், அப்படியான கதைகளை தத்தம் குழந்தைகளுக்கு சொல்வதற்கும் ஆன சாத்தியமும் நேரமும் வாய்க்கின்றதா? ஊர் எழும்பும் முன் தான் எழுந்து தோள்களில் தன் உயரத்தையும் விட அதிக உயரமான சாக்குப்பைகளை சுமந்தவாறே நேற்றைய இரவில் மதுஅருந்தியவர்கள் வீசிச்சென்ற காலி புட்டிகளையும் ப்ளாஸ்டிக் தண்ணீர் கேன்களையும் சேகரிக்கும் பொருட்டு வழக்கமான காலி மைதானங்களை தேடிச் செல்கின்ற குழந்தைகளுக்கும் தத்தமது தாயின் மடியில் புதைந்து ஒற்றைக்கண் மந்திரவாதி தொடங்கி ஏழுகடல் ஏழுமலை தாண்டி ஒரு குகையில் தவமிருக்கின்ற,  தனது உயிரை ரகசியமாய் தொடையில் மறைத்து வைத்திருக்கின்ற அரக்கன் வரையிலான கதைகளைக் கேட்பதற்கான சாத்தியமும் நேரமும் வாய்த்திருக்கின்றதா? மேரியின் லிட்டில் லாம்ப் இவர்களைப் பொருத்தவரை சேகரித்த சில்லரைகளை வீசியெறிந்தால் சாயங்காலவேளை சால்னா கடைகளில் ஒருவேளை சாத்தியப்படலாம். பிணவறையில் உடல்களைக்கூறு போடுகின்ற ஒரு தொழிலாளியின் குழந்தை, தனது விளையாட்டுக் கருவிகளாக களிமண்ணால் ஆன  பிணங்களின் பொம்மைகளையும் கூறு போடுவதற்கான ஆயுதங்களையும் செய்து விளையாடுவதாக ஆதவன் தீட்சண்யா எழுதியிருப்பார். நகரங்களின் பிளாட்பாரங்களில் வாழ்க்கையை தள்ளுகின்ற, அன்றாட வயிற்றுப்பாட்டுக்கான பொழைப்பே பெரும்பாடாக இருக்கின்ற சாமானியர்களின் குழந்தைகளின் கனவில் என்ன அல்லது யார் வரு(ம்)வார்? கொடூரமான மீசையுடன் பெருத்த தொந்தியுடன் கையில் இருக்கின்ற லத்தியைக்கொண்டு ப்ளாட்பாரங்களில் தூங்குகின்ற பெண்களை நடுஜாமத்தில் வந்து தட்டும் போலீஸ்காரன் இவர்களின் கனவில் வரலாம்; ஒரு கதை சொல்லு என்றால் ‘ஒரு ஊர்ல ஒரு போலீஸ்காரன் இருந்தான்...என்று இக்குழந்தைகள் ஆரம்பிக்கலாம். அல்லது ‘ஒருத்தன் ரோட்டை க்ராஸ் பண்ணானா, வேகமா ஒரு பஸ் வந்துச்சா...என்று ஆரம்பிக்கலாம்.  உங்களுக்கெல்லாம் அந்தவேலைக்குன்னே பீச்சாங்கை இருக்கு; சோத்தாங்கையில அந்த வேலையை செய்ய மாட்டீங்க; எங்களுக்கெல்லாம் ரெண்டு கையுமே பீ அள்ற கைதான், சோத்த நாங்க எந்தக் கையில் சாப்பிடறது? என்ற துப்புரவுத்தொழிலாளியின் கேள்விக்கு இந்த சமூகத்தில் இதுவரையிலும் பதில் இல்லாதது போலவே இது போன்ற குழந்தைகளுக்கான கதைகளுக்கும் பதில் இல்லை. புத்தகக்கண்காட்சிகளில் பலவண்ணங்களுடன் வளவளப்பான தாள்களில் அச்சிடப்பட்ட 100 ரூபாய்க்கும் அதிகமான குழந்தைகளுக்கான கதைப்புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு என்றும் அதிக அளவில் விற்பனையாகும் நூல்களில் இவையும் அடங்கும் என்றும் சொல்கின்றார்கள். ப்ளாட்பாரவாசிகளின் குழந்தைகளுக்கும் கழிவுப்பொருட்களை சேகரிக்கும் குழந்தைகளுக்கும் கல்வி என்பது எத்தனை தூரமோ அதே தூரம்தான் இக்குழந்தைகளுக்கும் குழந்தைகளுக்கான நூல்களுக்கும் இடையே.
(தொடரும்)

செவ்வாய், அக்டோபர் 24, 2017

பச்சைக்கொடி படரும் ரஷ்கின் பாண்டின் சிறிய அறை



மசூரி. டேராடூனில் இருந்து இரண்டு மணிநேர மலைப்பயணம்.

ஒருகாலத்தில் நேபாளத்தின் பகுதியாக இருந்துள்ளது இந்த ஊர். ஆரவாரமற்ற, எளிமையான அமைதியும் இமயத்தின் குளிரும் இயற்கையின் பேரழகும் மட்டுமே ஆட்சி செய்யும் அந்த மலைப்பிரதேசம் உத்தர்காண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது.  மசூரிக்கு இரண்டு முறை செல்லும் வாய்ப்பு அமைந்தது.

இரண்டு முறை சென்று திரும்பியபோதும் மனதுக்குள் ‘அவரைச் சந்திக்காமல் வந்து விட்டோமே!
என்ற குற்றவுணர்வு என்னை துரத்திக்கொண்டே இருக்கின்றது.

அவர் என்று நான் குறிப்பிடுவது எழுத்தாளர் ரஷ்கின் பாண்ட். 1934ஆம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேசத்தின் கசாலியில் பிறந்தவர். ஜாம்நகர், சிம்லா,  புதுதில்லி, டேராடூன் ஆகிய ஊர்களில் வளர்ந்தவர். சிறிது காலம் பிரிட்டனிலும் வாழ்ந்தார். இப்போது உத்தர்காண்ட் மாநிலத்தில் மசூரியின் லாண்டூர் கண்டொன்மெண்ட்டில் தான் தத்து எடுத்துக்கொண்ட குடும்பத்துடன் தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.

பள்ளி வாழ்க்கையில் அவரது ஒரு சில கதைகளை வாசித்திருப்போம். அவரது எழுத்துக்கள் நெடுகிலும் டெல்லியில் இளம்பிராயத்தில் அனுபவித்த துயரம் தோய்ந்த வாழ்க்கையின் நினைவுகளும் அதனைத் தொடர்ந்த டேரா டூன் வாழ்க்கையின் நினைவுகளும் பிரியாத நிழலைப்போல் பின் தொடர்கின்றன. பின்னர் அவர் விரும்பித்தேர்ந்தெடுத்துக் கொண்ட மசூரி வாழ்க்கையுடன் பிணைந்த மலைகள், நதிகள், புற்கள், இமயமலைத்தொடர்களுக்கே சொந்தமான பெயர் தெரிந்த தெரியாத மரங்கள், வண்ணமயமான மலர்கள், காற்றின் ஓசையை உணரமுடியாத மலைவெளிகளில் ரகசியமாய் சலசலத்து ஓடும் நீரோடைகளின் மொழி, மழை, பனி, இளங்காலை இமயத்தின் வெயில், அணில்கள், லாங்குர் குரங்குகள், எப்போதாவது யார் கண்ணிலும் பட்டும்படாமலும் மின்னல் போல் பாய்ந்து எதையாவது கவ்விக்கொண்டு ஓடிவிடும் சிறுத்தைகள், சடைவளர்த்து சோம்பித்திரியும் நாய்கள், லாண்டூரின் வளைந்து செல்லும் குறுகலான தெருக்கள், நூறாண்டுகளுக்கும் அதிகமான வயதுடைய கடைகள், அவ்வூரின் மக்கள், மால் ரோட்டின் வணிகம், வணிகர்கள், சுற்றுலாப்பயணிகள், தான் சந்தித்த, கடந்து செல்கின்ற மனிதர்களின் குணங்கள், மனங்கள்  என மலைவாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் பூ மலரும் கவனத்துடன் பதிவு செய்கின்றார்.   

சரி, அடுத்த முறை மசூரிக்குப் பயணிக்கும் வாய்ப்பு நேரும் எனில் அவரது சந்திப்பை தவற விடக்கூடாது என்று உறுதியெடுத்துக்கொண்டு என்னை நானே சமாதானம் செய்து கொள்ளும் முயற்சியாக அவரது மசூரிக்குச் செல்லும் சாலைகள்’ (Roads to Mussoorie) என்ற நூலை வாசிக்கத்தொடங்கினேன்.

அவரது
Running for Cover (ஓடி ஒளிவது) என்ற பதிவை வாசித்தேன். அவர் எழுதுகின்றார்:

தனிமனிதனின் தனிமைக்கான உரிமை என்பது மேற்கத்திய நாடுகளில் சாத்தியம், கிழக்கத்திய நாடுகளில் இன்றும் சாத்தியமற்ற ஒன்றே.  நான் தனிமையை அனுபவிக்க விரும்பினால் வெட்கம் ஏதுமின்றி பொய் சொல்கின்ற ஒருவனாக மாற வேண்டும் – நான் ஊரில் இல்லை சார்! இந்தப் பொய் வேலைக்கு உதவாது எனில் பெரியம்மையாலோ தட்டம்மையாலோ அல்லது புதிய வகை ஆசிய ஃப்ளூ நோயாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக புளுக வேண்டும்.

இப்போதெல்லாம் நான் மக்களை சந்திப்பதை விரும்பத் தொடங்கியுள்ளேன், சகல விதமான மக்களையும். இப்படியான சந்திப்புக்கள் இல்லையெனில் நான் எழுதுவதற்கான விசயங்கள் எதுவும் இல்லாமல் போகக்கூடும்.
ஆனால் சொல்லவேண்டியது என்னவெனில் ஒரே நேரத்தில் பலரை சந்திப்பதை நான் விரும்புவதில்லை என்பதே. நான் ஒரு கவிதையையோ ஒரு கதையையோ எழுதிக்கொண்டிருப்பேன், அல்லது மதியநேரத்தூக்கத்தை அனுபவித்துக் கொண்டிருப்பேன், முன்கூட்டிய தகவல் எதுவும் இன்றி அப்போது வந்து கதவைத் தட்டுவார்கள் எனில் நான் அவர்களை வரவேற்பது எவ்வாறு சாத்தியமாகும்? இது போன்ற நேரம்கெட்ட நேரங்களில் வரும் அழையா விருந்தாளிகளை சில நேரங்களில் நான் திருப்பி அனுப்பியதும் உண்டு.

வயதாகிக்கொண்டே போகின்றது, மதியநேரத்தூக்கம் எனக்கு அவசியமான ஒன்றாகின்றது, ஆடம்பரத்துக்கு அல்ல.  ஆனால் அந்த இரண்டு மணிக்கும் நான்கு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கதவைத் தட்டுபவர்களுக்கு அதுதான் ஓய்வு நேரம் என்பதைத்தவிர வேறென்ன இருக்க முடியும்?

இன்றைய மதிய நேரத்தை எப்படி கடத்துவது?

ஒன்றும் பெரிய விசயம் இல்லை! ரஷ்கின் ‘பெரிசைபோய் பார்க்கலாம். அவர் தீவிரமான ஒரு உரையாடலை நமக்கு வழங்குவார் என்பது உறுதி

மதியநேரத்தில் தீவிரமான உரையாடலா? சாக்ரடீஸ் கூட அதை விரும்பமாட்டார், சத்தியம்.

அடடா, இன்று எனக்கு உடல்நிலை சரியில்லை, உங்களைச் சந்திக்க இயலாமைக்கு வருந்துகின்றேன்

என்ன, உடல்நிலை சரியில்லையா? மிகவும் வருந்துகின்றோம். இதோ என் மனைவி, இவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர்

என்னை சந்திக்க வருபவர்களில் மிகப்பலர் ஹோமியோபதி மருத்துவர்களாக இருப்பது வியப்புக்குரியது. ஆனால் தலைவலி தொடங்கி ஹெர்னியா வரை குணப்படுத்தும் அவர்களது சர்வரோக நிவாரணிகளை தங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது அவர்கள் பயன்படுத்துவதில்லை என்பது கெடுவாய்ப்பான ஒன்று.

இப்படித்தான் ஒருநாள், ஒரு குடும்பம் என்னை சந்திக்க  வந்தது, ஆம், முன்னறிவிப்பின்றித்தான். கணவர் ஆயுர்வேத மருத்துவர், மனைவி, வேறென்ன, ஹோமியோபதி மருத்துவர், மூத்த மகன் ஆங்கில மருத்துவ மாணவன்.

‘உங்களுக்கு நோய்கண்டால் என்ன செய்வீர்கள், மூன்றுவித மருத்துவமுறைகளையும் முயல்வீர்களா?என்றேன்.
‘அது நோயின் தன்மையைப் பொறுத்தது
என்றான் மகன். ‘ஆனால் எப்போதாவதுதான் நாங்கள் நோய்வாய்ப்படுகின்றோம். என் சகோதரி யோகா நிபுணர்’.

அவனது சகோதரியைப் பார்த்தேன், ஒரு மல்யுத்த பயில்வான் போல இருந்தாள், யோகா பயிலும் நபரைப்போல் இல்லை. இருபதுகளின் இறுதியில் இருந்த அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவள் எனது பெருத்த வயிற்றை நோக்கினாள். எனது உடம்பு சரியான வடிவில் இல்லாததை நோக்கினாள்.

நான் உங்களுக்கு சில உடற்பயிற்சிகளை சொல்லித்தருகின்றேன். ஆனால் நீங்கள் அதற்காக லூதியானா வர வேண்டியிருக்கும்என்றாள்.
காரில் சென்றாலே ஆறு மணிநேரம் ஆகும் தொலைவில் லூதியானா இருப்பதை எண்ணி பெரும் ஆறுதல் அடைந்தேன்.
கட்டாயமாக, அங்கே வரும்போது உன்னை சந்திப்பேன். உண்மையில் நான் வந்து ஒரு கோர்ஸ் எடுத்துக்கொள்வேன்

நல்லபடியாக அவர்களை வழியனுப்பி வைத்தேன். ஆனால் எப்போதும் இதுபோல் நல்லபடியாக முடிந்துவிடுவதும் இல்லை.

இப்படித்தான் ஒரு பெண்மணி, மிகவும் பிடிவாதக்காரர், என்ன சொல்லியும் எழுந்துபோவதாக இல்லை, எனக்கு பறவைக்காய்ச்சல் இருப்பதாகக் கூடச் சொல்லிப்பார்த்தேன், ம்ஹூம்.

‘நான் உங்களை தேவைகருதியே பார்க்க வந்தேன். நான் ஒரு நாவல் எழுதியுள்ளேன், புக்கர் பரிசுக்கு நீங்கள்தான் பரிந்துரைக்க வேண்டும்
ஐயோ, புக்கர் வட்டாரத்தில் எனக்கு யாரையும் தெரியாதே அம்மா! பிரிட்டனில் என்னை யாருக்கும் தெரியாதே!

போகட்டும், பாதகமில்லை. நோபல் பரிசு?
ஒரு நிமிடம் யோசித்தேன். ‘ஆங்...அறிவியல்துறையில் எனில் பரவாயில்லை. ஜீன்ஸ், ஸ்டெம்செல்ஸ் இப்படி ஏதாவது..?

என்னை ஒரு புழுவாகப்பார்த்தாள். ‘உங்களால் ஒரு பிரயோசனமும் இல்லை
என்றாள்.
‘சரி, உங்கள் நாவலைக் கொடுங்கள், வாசித்துப்பார்க்கின்றேன்
‘இன்னும் எழுதிமுடிக்கவில்லை
‘பரவாயில்லை, முடித்தவுடன் வந்து பாருங்களேன்? ஒரு வருடம், இரண்டு வருடம்... இதுபோன்ற விசயங்களை எல்லாம் அவசரகதியில் செய்யக்கூடாது’. அவருக்கு வாசலைக்காண்பித்து ஒவ்வொரு படியிறங்கும்போதும் உற்சாகப்படுத்தினேன்.

நீங்கள் ஒரு மோசமான நபர். வீட்டுக்குள் வா என்று கூட நீங்கள் அழைக்கவில்லை. உங்களைப் பற்றி குஷ்வந்த்சிங்கிடம் சொல்வேன். அவர் எனது நண்பர். உங்களது நடத்தை பற்றி நிச்சயம் எழுதுவார்

‘அட, குஷ்வந்த்சிங் உங்கள் நண்பர் எனில் என்னை ஏனம்மா தொந்தரவு செய்கின்றீர்கள்? நோபல், புக்கர் வட்டாரமெல்லாம் அவருக்கு அத்துப்படி. பல முக்கியப்புள்ளிகள் எல்லாம் அவருக்கு நெருக்கமானவர்கள்

அப்பெண்மணியை மீண்டும் நான் சந்திக்கவில்லை. ஆனால் எனது தொலைபேசி எண்ணை எவ்வாறோ தெரிந்து கொண்டு வாரம் ஒருமுறை என்னை அழைக்கின்றார், தனது நாவல் நல்லபடியாக வந்துகொண்டிருப்பதாக சொல்கின்றார். என்றாவது ஒருநாள் தனது நாவலின் கையெழுத்துப்பிரதியுடன் என் வீட்டுக்கதவைத் தட்டுவது நிச்சயம்.

தாங்கள் எழுதியதாகச் சொல்லிக்கொண்டு கையில் புத்தகங்களுடனும்  கையெழுத்துப்பிரதியுடனும் வந்து நிற்கும் அழையா விருந்தாளிகளை நினைக்கும்போது நடுக்கமாக உள்ளது. தங்களது ‘படைப்புக்கள்குறித்த எனது கருத்துக்களை கேட்பார்கள், ஆனால் நான் எனது விருப்புவெறுப்பற்ற கருத்தை சொல்லிவிடுவேன் எனில் அதனை அவர்கள் ஏற்க மாட்டார்கள். ஒரு எதிர்கால எழுத்தாளனை நோக்கி அவனது நினைவோடை அல்லது நாவல் அல்லது கவிதைத்தொகுப்பை அச்சில் வெளியிடாமல் இருந்தால் மிகவும் நல்லது என்று சொல்வதைவிடவும் அறிவுகெட்ட செயல் வேறு எதுவும் இல்லை. நாட்டில் நடக்கும் படுகொலைகள் எல்லாமே தீவிரமான காரணங்களுக்காக மட்டுமே நடக்கின்றன என்று சொல்லமுடியாது. எனவே ‘ஆஹா, அற்புதம்! யாரும் அடிச்சுக்க முடியாது, தொடர்ந்து எழுதுங்கள்!என்று சொல்வதே உத்தமம், உயிருக்குப் பாதுகாப்பு என்பதை உணர்ந்தே உள்ளேன். ஆனால் இதுவும் கூட ஆபத்தில்தான் முடிகின்றது. உடனடியாக ஒரு அணிந்துரையோ முன்னுரையோ எழுதித்தரவும் கூடவே எனது பதிப்பாளருக்கு – அல்லது யாரோ ஒரு பதிப்பாளருக்கு அப்புத்தகத்தை அச்சிடப் பரிந்துரைக்கும் ஒரு கடிதத்தையும் என்னிடம் வேண்டுகின்றார்கள். என் விருப்பம் எதுவும் இன்றி என்னை ஒரு எழுத்து ஏஜெண்டாக ஆக்கிவிடுகின்றார்கள், ஆனால் இதற்கான ஊதியம் எதுவும் தரப்படுவதில்லை.

இப்படியான அணிந்துரைகள் எழுதுவதில் உள்ள அபாயத்தை உங்களுக்கு விளக்கிச் சொன்னால்தான் புரியும். தொடர்ந்து மனிதர்களை வேட்டையாடிவந்த ஒரு சிறுத்தை குறித்து எழுதப்பட்ட தனது நூலுக்கு அணிந்துரை எழுதித்தரும்படி ஒருவர் என்னை நச்சரித்துக்கொண்டே இருந்தார். நூலின் இறுதிவரையும் ஒரே ஒரு நயமான சொற்றொடரைக் கூடக் காணமுடியாத அளவுக்குத்தான்  அவர் எழுத்து இருந்தது. ஆனால் சிறுத்தையின் நரவேட்டைகளை ஒரு சங்கிலித்தொடர்போல கதையாக்குவதில் அவர் வெற்றிபெற்றிருந்தார். அவரது தொடர்ச்சியான நேரடி அல்லது தொலைபேசி வாயிலான வேட்டையின் பலனாக வேறுவழியின்றி நான் ஒரு அணிந்துரை வழங்கினேன். ஆனால் அடுத்து தனது நூலை எடிட் செய்தோ அழகுபடுத்தியோ தரும்படி அவர் வேண்டியபோது நான் உறுதியாக மறுத்துவிட்டேன். இதுமாதிரியான வேலையை நான் கையில் எடுத்தால் சாவு நிச்சயம் என்பதை நான் உணர்ந்திருந்தேன். இறுதியாக எனது புகைப்படம் ஒன்றை என்னிடம் இருந்து வாங்கிச்சென்றார்.

மாதங்கள் பல கழிந்தன, அவரே தனது முயற்சியில் புத்தகத்தை அச்சிட்டு வெளிக்கொணர்ந்தார். புத்தகத்தில் எனது புகைப்படமும் சுட்டு வீழ்த்தப்பட்ட சிறுத்தையின் படமும் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால் விசயம் என்னவெனில் செத்துக்கிடந்த சிறுத்தையின் கீழ் “பிரபல எழுத்தாளர் ரஷ்கின் பாண்ட்என்ற வாசகமும் எனது புகைப்படத்தின் கீழ் “26 பேரைப்பலிவாங்கிய நரவேட்டைச்சிறுத்தை, சுட்டுவீழ்த்தப்பட்டபின் எடுத்த படம்என்ற வாசகமும் அச்சிடப்பட்டிருந்தன.

அச்சிட்டவரின் புண்ணியத்தில் நான் ஒரு தொடர் கொலைகாரனாக மாறி இருந்தேன்.

புத்தகங்களுக்கு அணிந்துரை எழுதுவதில்லை என நான் உறுதியாக இருப்பதற்கான காரணம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

எனது அண்டைவீட்டுக்காரரான சாண்ட்ரா அம்மையார் –அவரது ஆன்மா சாந்தியடைவதாக- இறந்துவிட்ட தனது கணவரின் நினைவுக்குறிப்புக்களை நூலாக அச்சிடுவதன் பொருட்டு ஒரு பதிப்பாளருக்கு 40,000 ரூபாய் கொடுத்திருந்தார். கணவர் தனது ஆயுட்காலத்தில் அந்நூலை வெளியிடமுடியாமற்போனதால் இறக்கும் தருவாயில் எப்படியாவது அந்த நூலை வெளியிடுமாறு தனது மனைவியிடம் சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார். தனது கணவனுக்கு அளித்த பிரமாணத்தை நிறைவேற்றும்பொருட்டு மனைவி நூலைக்கொண்டு வந்தார். அச்சிடப்பட்ட 500 பிரதிகளில் சிலவற்றை தனது நண்பர்களுக்கு அந்த அம்மையார் வழங்கிவிட்டு இறந்தும் விட்டார். அவரது வாரிசு, கனமான பைண்ட் செய்யப்பட்ட 450 விற்கப்படாத நினைவுக்குறிப்புக்களை வைத்துக்கொண்டு விழிபிதுங்குகின்றார்.

பலரும் என்ன நினைக்கின்றார்கள் எனில் ரஷ்கின் பாண்ட் மிகப்பரந்த பங்களாவில் பல உதவியாளர்களும் பணியாளர்களும் சூழ வாழ்ந்துகொண்டிருப்பார் என்று. அவர்கள் நேரில் என்னைப் பார்க்கவரும்போது எனது படுக்கைக்காகவும் படிப்பதற்காகவும் நான் பயன்படுத்தும் ஒரே சிறு அறையைக் கண்டு ஏமாந்துவிடுகின்றார்கள். எனது அன்றாடப்பயன்பாட்டு அறையில் புத்தகங்களே நிரம்பி இருப்பதால் ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு விருந்தினர்களுக்கு மேல் அங்கு அமர இயல்வதில்லை.

சில நேரங்களில் 30-40 பள்ளிக்குழந்தைகள் என்னைச் சந்திக்க வந்துவிடுகின்றார்கள். குழந்தைகளை நான் சந்திக்க மறுப்பதில்லை. ஆனால் பெரும் எண்ணிக்கையில் வரும்போது அவர்களை சாலையில் நிறுத்திச்சந்திப்பது தவிர்க்க இயலாமல் போகின்றது, இது எல்லோருக்குமே தொந்தரவான விசயம்.

வசதியும் வாய்ப்பும் இருந்தால் ஒருவேளை மசூரியின் செல்வந்தர்கள் வாழும் ஒரு பகுதியில் ஒரு சினிமா நட்சத்திரத்தையோ டிவி நடிகரையோ அண்டைவீட்டு நண்பராகக்  கொண்ட பரந்த ஒரு பங்களாவில் நான் வசித்திருப்பேனோ? சந்தேகம்தான். எனது வாழ்க்கை நெடுகிலும் ஒரு அறை அல்லது இரண்டு அறைகள் கொண்ட வீட்டில்தான் நான் வாழ்ந்து வந்துள்ளேன், ஒரு பெரிய அளவிலான வீட்டை என்னால் நிர்வகிக்க முடியுமா என்பது சந்தேகமே. நான் தத்து எடுத்துக்கொண்ட குடும்பத்தார் மற்ற இரண்டு அறைகளையும் பயன்படுத்துகின்றார்கள் என்பது உண்மைதான், ஆனால் நான்  பயன்படுத்தும் இடத்தை எந்தவகையிலும் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்கின்றார்கள். நான் எழுதிக்கொண்டு இருக்கும்போது (அல்லது தூங்கும்போது) அழையா விருந்தாளிகளின் தொந்தரவில் இருந்து என்னைக்காப்பது அவர்களே.


நான் பொய் சொல்வதற்கு கற்றுக்கொண்டுள்ளேன். பள்ளி விழாக்களில் என்னை தலைமை விருந்தினராக அழைக்கின்றார்கள். மற்றவர்கள் இரண்டு மூன்று மணி நேரம் நிகழ்த்தும் அறிவுரைகளைக் கேட்க நேர்வதும், அதன் பின் எனது அறிவுரையை அவர்கள் கேட்பதும்...இந்த நரகவேதனை மாணவர்களுக்கு மட்டும் அல்ல, எனக்கும்தான். விளையாட்டுப்போட்டிகள் எனில் அவையும் அப்படியே. ஒலிபெருக்கியில் ...என்ற  மாணவன் பள்ளியின் ரிக்கார்டை முறியடித்துவிட்டான் என்றும், ...என்ற மாணவி தொடர்ந்து மூன்றாவது வருசமாக பரிசைத்தட்டிச் செல்கின்றாள் என்றும் அலறுவார்கள். ஆனால் ஒரு போட்டியைக்கூட நீங்கள் கண்ணால் பார்க்க முடியாது, நீங்கள் மரியாதைக்குரிய பிற விருந்தினர்களுடன் அப்போது சம்பிரதாயமாக அளவளாவிக்கொண்டிருப்பீர்கள். வழக்கமான சடங்குசம்பிரதாயங்களுக்கு மாறாக உயிரோட்டத்துடன் நடந்த ஒரே ஒரு விளையாட்டுப்போட்டி இப்போதும் என் நினைவில் நிற்கின்றது.  ஒருமுறை வட்டெறியும் போட்டி ஒன்றில் யாரோ வீசிய வட்டு ஒன்று திசைமாறி பள்ளித்தலைமை ஆசிரியரின் மனைவியின் தலையை சீவிவிடும் என்ற நிலையில் பறந்துசென்றது, மயிரிழையில் அவர் உயிர் தப்பிய அச்சம்பவமே நினைவில் பசுமையாக நிற்கின்றது.    

வேறு பல எழுத்தாளர்களாக என்னை கருதிக்கொண்டு தவறாக அடையாளம் கண்டுகொண்டு கதைப்பதும் உண்டு.

‘திரு.பிக்விக் நீங்கள்தானா?என்று கேட்டான் ஒரு சிறுவன். நல்லவேளை, சார்லஸ் டிக்கன்ஸையாவது அவன் படித்திருக்கின்றானே என்றமட்டில் நான் திருப்தி அடைந்தேன். நான் அவருக்கு தூரத்து உறவுஎன்று சொல்லியபடியே முடிந்த அளவுக்கு பிக்விக் மாதிரியே நடந்துகொண்டு அவனை பெருமையுடன் பார்த்தேன். சிறுவர் சிறுமியர் என்னைச் சந்திக்கும்போது மிகுந்த இயல்புடன் நடந்துகொள்ள முடிகின்றது, அவர்கள் எதுகுறித்தும் கவலையின்றி வெளிப்படையாகப் பேசுவார்கள், ஆனால் பெற்றோருடன் வந்தால் இது நடக்காது. அப்போது குழந்தைகள் பேச மாட்டார்கள், தாயும் தகப்பனும் மட்டுமே பேசித்தீர்ப்பார்கள்.

என் பையன் பள்ளியில் உங்கள் புத்தகங்களை வாசித்திருக்கின்றான்என்று தனது பத்துவயது மகனைக்காட்டி ஒரு அம்மா பெருமைப்பட்டுக்கொண்டார். ‘அவனுக்கு உங்கள் ஆட்டோக்ராஃப் வேண்டுமாம்’. ‘செல்லமே, தற்போது எந்தப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கின்றாய்?என வினவினேன். ‘டாம் சாயர்என்று பட்டெனச் சொன்னான். பிறகென்ன, அவனது புத்தகத்தில் மார்க் ட்வைன் என்று கையெழுத்திட்டேன். பையன் பெருமகிழ்ச்சியடைந்தான்.

ஒரு பள்ளிச்சிறுமி அவளது கணக்குப்பாடப்புத்தகத்தில் எனது ஆட்டோக்ராஃபை இடச்சொன்னாள். ‘ஆனால் நான் கணக்குப்பாடத்தில் ஃபெய்ல் ஆனவன் அம்மா! நான் கதை எழுதுகின்ற ஒரு சாமானியன்’. ‘அப்படியா, கணக்கில் எத்தனை மதிப்பெண் பெற்றீர்கள்?’ ‘நூற்றுக்கு நான்கு’. அவ்வளவுதான், என்னை வினோதமான பிராணியாக பார்த்தபடி புத்தகத்தை என் கைகளில் இருந்து வெடுக்கெனப் பறித்தாள்.

எனித் ப்ளைடன், ஆர்.கே.நாராயண், இயான் போதம், டேனியல் டெஃபோ, ஹாரி பாட்டர்...இப்படி பல பெயர்களில் நான் ஆட்டோக்ராஃப் இட்டுள்ளேன். எவரும் அதுபற்றிக் கண்டுகொண்டதில்லை.

எனது புத்தகங்கள் பழையன, எனது சித்திரங்கள் பழையன, எனது காலணிகள் பழையன, எனது ஒரே மேல்கோட் மிகப்பழசானது. நான் மட்டுமே இளமையாக இருக்கின்றேன். நான் என்றும் இளமையுடன் இருப்பதற்குக் காரணம் என்னைச்சுற்றி எப்போதும் குழந்தைகள் இருக்கின்றார்கள் என்பதே. எனது குடும்பத்தின் குழந்தைகள் மட்டுமல்லர், பிற குழந்தைகளும்தான். இக்குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்துவருவதைக் காண்பதில் பெருவிருப்பம் கொள்கின்றேன். விடலைப்பருவம் என்பது வாழ்க்கையில் வசீகரமான பருவம், எனது கதைகளின் வழியே நான் எனது விடலைப்பருவத்திற்குத் திரும்புகின்றேன்.

... நான் எளிமையான, சிக்கனமான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். ப்ரேமும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இரண்டு சிறிய அறைகளில் வசிக்கின்றார்கள், எனக்கு இரண்டு சிறிய அறைகள். ஒரு அறை நிறைய புத்தகங்கள், விருந்தினர் அமர்வதற்கான சில நாற்காலிகள். மற்றொரு சிறிய அறை எனது படிப்புக்காகவும் படுக்கைக்காகவும். இந்த அறை வெளிச்சமானது, சூரியஒளி இந்த அறையை நிரப்புகின்றது, ஜன்னல்களோ மலைத்தொடர்களையும் பள்ளத்தாக்கையும் எப்போதும் வரவேற்கக் கூடியவையாக   அமைந்தவை. கீழே மக்களும் வாகனங்களும் பயன்படுத்துகின்ற ஒரு சாலை.  1980இல் இருந்து நான் எழுதிய பெரும்பான்மையான கட்டுரைகளையும்  சிறார்களுக்கான நூல்களையும் இந்த அறையில்தான் எழுதினேன்.  இந்த அறையில் இருந்துதான் எப்போதாவது ஒரு கவிதையை எழுதுகின்றேன், இசையைக் கேட்கின்றேன், சிறார்களுடன் உரையாடுகின்றேன், சுவர்களில் படரும் பச்சைக்கொடியை வளர்க்கின்றேன். செடிகள் வளர்ப்பதில் நான் தேர்ச்சியுடைவனாக இருக்கின்றேன், குறிப்பாக படர்கொடிகள். வீட்டுக்குள்ளேயே வளரும் தாவரங்களை வளர்ப்பதற்கு இந்த அறை     
மிக உகந்ததாக இருக்கின்றது...

                                                          ************

மீண்டும் மசூரி செல்வேன், அவரைத் தொந்தரவு செய்யாமல் அவர் வசிக்கும் அந்த அறையின் அமைதியை சுவாசித்தவாறே அதனைக் கடந்துசெல்வேன். அந்த அறையின் அமைதியைக் குலைக்கும் உரிமை அவருக்குப் பிடித்த குழந்தைகளுக்கும் அறையில் படரும் பச்சைக்கொடியின் இலையசைவுக்கும் மட்டுமே சொந்தமானதாக  இருக்கட்டும்.

                        *******************