செவ்வாய், அக்டோபர் 24, 2017

பச்சைக்கொடி படரும் ரஷ்கின் பாண்டின் சிறிய அறை



மசூரி. டேராடூனில் இருந்து இரண்டு மணிநேர மலைப்பயணம்.

ஒருகாலத்தில் நேபாளத்தின் பகுதியாக இருந்துள்ளது இந்த ஊர். ஆரவாரமற்ற, எளிமையான அமைதியும் இமயத்தின் குளிரும் இயற்கையின் பேரழகும் மட்டுமே ஆட்சி செய்யும் அந்த மலைப்பிரதேசம் உத்தர்காண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது.  மசூரிக்கு இரண்டு முறை செல்லும் வாய்ப்பு அமைந்தது.

இரண்டு முறை சென்று திரும்பியபோதும் மனதுக்குள் ‘அவரைச் சந்திக்காமல் வந்து விட்டோமே!
என்ற குற்றவுணர்வு என்னை துரத்திக்கொண்டே இருக்கின்றது.

அவர் என்று நான் குறிப்பிடுவது எழுத்தாளர் ரஷ்கின் பாண்ட். 1934ஆம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேசத்தின் கசாலியில் பிறந்தவர். ஜாம்நகர், சிம்லா,  புதுதில்லி, டேராடூன் ஆகிய ஊர்களில் வளர்ந்தவர். சிறிது காலம் பிரிட்டனிலும் வாழ்ந்தார். இப்போது உத்தர்காண்ட் மாநிலத்தில் மசூரியின் லாண்டூர் கண்டொன்மெண்ட்டில் தான் தத்து எடுத்துக்கொண்ட குடும்பத்துடன் தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.

பள்ளி வாழ்க்கையில் அவரது ஒரு சில கதைகளை வாசித்திருப்போம். அவரது எழுத்துக்கள் நெடுகிலும் டெல்லியில் இளம்பிராயத்தில் அனுபவித்த துயரம் தோய்ந்த வாழ்க்கையின் நினைவுகளும் அதனைத் தொடர்ந்த டேரா டூன் வாழ்க்கையின் நினைவுகளும் பிரியாத நிழலைப்போல் பின் தொடர்கின்றன. பின்னர் அவர் விரும்பித்தேர்ந்தெடுத்துக் கொண்ட மசூரி வாழ்க்கையுடன் பிணைந்த மலைகள், நதிகள், புற்கள், இமயமலைத்தொடர்களுக்கே சொந்தமான பெயர் தெரிந்த தெரியாத மரங்கள், வண்ணமயமான மலர்கள், காற்றின் ஓசையை உணரமுடியாத மலைவெளிகளில் ரகசியமாய் சலசலத்து ஓடும் நீரோடைகளின் மொழி, மழை, பனி, இளங்காலை இமயத்தின் வெயில், அணில்கள், லாங்குர் குரங்குகள், எப்போதாவது யார் கண்ணிலும் பட்டும்படாமலும் மின்னல் போல் பாய்ந்து எதையாவது கவ்விக்கொண்டு ஓடிவிடும் சிறுத்தைகள், சடைவளர்த்து சோம்பித்திரியும் நாய்கள், லாண்டூரின் வளைந்து செல்லும் குறுகலான தெருக்கள், நூறாண்டுகளுக்கும் அதிகமான வயதுடைய கடைகள், அவ்வூரின் மக்கள், மால் ரோட்டின் வணிகம், வணிகர்கள், சுற்றுலாப்பயணிகள், தான் சந்தித்த, கடந்து செல்கின்ற மனிதர்களின் குணங்கள், மனங்கள்  என மலைவாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் பூ மலரும் கவனத்துடன் பதிவு செய்கின்றார்.   

சரி, அடுத்த முறை மசூரிக்குப் பயணிக்கும் வாய்ப்பு நேரும் எனில் அவரது சந்திப்பை தவற விடக்கூடாது என்று உறுதியெடுத்துக்கொண்டு என்னை நானே சமாதானம் செய்து கொள்ளும் முயற்சியாக அவரது மசூரிக்குச் செல்லும் சாலைகள்’ (Roads to Mussoorie) என்ற நூலை வாசிக்கத்தொடங்கினேன்.

அவரது
Running for Cover (ஓடி ஒளிவது) என்ற பதிவை வாசித்தேன். அவர் எழுதுகின்றார்:

தனிமனிதனின் தனிமைக்கான உரிமை என்பது மேற்கத்திய நாடுகளில் சாத்தியம், கிழக்கத்திய நாடுகளில் இன்றும் சாத்தியமற்ற ஒன்றே.  நான் தனிமையை அனுபவிக்க விரும்பினால் வெட்கம் ஏதுமின்றி பொய் சொல்கின்ற ஒருவனாக மாற வேண்டும் – நான் ஊரில் இல்லை சார்! இந்தப் பொய் வேலைக்கு உதவாது எனில் பெரியம்மையாலோ தட்டம்மையாலோ அல்லது புதிய வகை ஆசிய ஃப்ளூ நோயாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக புளுக வேண்டும்.

இப்போதெல்லாம் நான் மக்களை சந்திப்பதை விரும்பத் தொடங்கியுள்ளேன், சகல விதமான மக்களையும். இப்படியான சந்திப்புக்கள் இல்லையெனில் நான் எழுதுவதற்கான விசயங்கள் எதுவும் இல்லாமல் போகக்கூடும்.
ஆனால் சொல்லவேண்டியது என்னவெனில் ஒரே நேரத்தில் பலரை சந்திப்பதை நான் விரும்புவதில்லை என்பதே. நான் ஒரு கவிதையையோ ஒரு கதையையோ எழுதிக்கொண்டிருப்பேன், அல்லது மதியநேரத்தூக்கத்தை அனுபவித்துக் கொண்டிருப்பேன், முன்கூட்டிய தகவல் எதுவும் இன்றி அப்போது வந்து கதவைத் தட்டுவார்கள் எனில் நான் அவர்களை வரவேற்பது எவ்வாறு சாத்தியமாகும்? இது போன்ற நேரம்கெட்ட நேரங்களில் வரும் அழையா விருந்தாளிகளை சில நேரங்களில் நான் திருப்பி அனுப்பியதும் உண்டு.

வயதாகிக்கொண்டே போகின்றது, மதியநேரத்தூக்கம் எனக்கு அவசியமான ஒன்றாகின்றது, ஆடம்பரத்துக்கு அல்ல.  ஆனால் அந்த இரண்டு மணிக்கும் நான்கு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கதவைத் தட்டுபவர்களுக்கு அதுதான் ஓய்வு நேரம் என்பதைத்தவிர வேறென்ன இருக்க முடியும்?

இன்றைய மதிய நேரத்தை எப்படி கடத்துவது?

ஒன்றும் பெரிய விசயம் இல்லை! ரஷ்கின் ‘பெரிசைபோய் பார்க்கலாம். அவர் தீவிரமான ஒரு உரையாடலை நமக்கு வழங்குவார் என்பது உறுதி

மதியநேரத்தில் தீவிரமான உரையாடலா? சாக்ரடீஸ் கூட அதை விரும்பமாட்டார், சத்தியம்.

அடடா, இன்று எனக்கு உடல்நிலை சரியில்லை, உங்களைச் சந்திக்க இயலாமைக்கு வருந்துகின்றேன்

என்ன, உடல்நிலை சரியில்லையா? மிகவும் வருந்துகின்றோம். இதோ என் மனைவி, இவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர்

என்னை சந்திக்க வருபவர்களில் மிகப்பலர் ஹோமியோபதி மருத்துவர்களாக இருப்பது வியப்புக்குரியது. ஆனால் தலைவலி தொடங்கி ஹெர்னியா வரை குணப்படுத்தும் அவர்களது சர்வரோக நிவாரணிகளை தங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது அவர்கள் பயன்படுத்துவதில்லை என்பது கெடுவாய்ப்பான ஒன்று.

இப்படித்தான் ஒருநாள், ஒரு குடும்பம் என்னை சந்திக்க  வந்தது, ஆம், முன்னறிவிப்பின்றித்தான். கணவர் ஆயுர்வேத மருத்துவர், மனைவி, வேறென்ன, ஹோமியோபதி மருத்துவர், மூத்த மகன் ஆங்கில மருத்துவ மாணவன்.

‘உங்களுக்கு நோய்கண்டால் என்ன செய்வீர்கள், மூன்றுவித மருத்துவமுறைகளையும் முயல்வீர்களா?என்றேன்.
‘அது நோயின் தன்மையைப் பொறுத்தது
என்றான் மகன். ‘ஆனால் எப்போதாவதுதான் நாங்கள் நோய்வாய்ப்படுகின்றோம். என் சகோதரி யோகா நிபுணர்’.

அவனது சகோதரியைப் பார்த்தேன், ஒரு மல்யுத்த பயில்வான் போல இருந்தாள், யோகா பயிலும் நபரைப்போல் இல்லை. இருபதுகளின் இறுதியில் இருந்த அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவள் எனது பெருத்த வயிற்றை நோக்கினாள். எனது உடம்பு சரியான வடிவில் இல்லாததை நோக்கினாள்.

நான் உங்களுக்கு சில உடற்பயிற்சிகளை சொல்லித்தருகின்றேன். ஆனால் நீங்கள் அதற்காக லூதியானா வர வேண்டியிருக்கும்என்றாள்.
காரில் சென்றாலே ஆறு மணிநேரம் ஆகும் தொலைவில் லூதியானா இருப்பதை எண்ணி பெரும் ஆறுதல் அடைந்தேன்.
கட்டாயமாக, அங்கே வரும்போது உன்னை சந்திப்பேன். உண்மையில் நான் வந்து ஒரு கோர்ஸ் எடுத்துக்கொள்வேன்

நல்லபடியாக அவர்களை வழியனுப்பி வைத்தேன். ஆனால் எப்போதும் இதுபோல் நல்லபடியாக முடிந்துவிடுவதும் இல்லை.

இப்படித்தான் ஒரு பெண்மணி, மிகவும் பிடிவாதக்காரர், என்ன சொல்லியும் எழுந்துபோவதாக இல்லை, எனக்கு பறவைக்காய்ச்சல் இருப்பதாகக் கூடச் சொல்லிப்பார்த்தேன், ம்ஹூம்.

‘நான் உங்களை தேவைகருதியே பார்க்க வந்தேன். நான் ஒரு நாவல் எழுதியுள்ளேன், புக்கர் பரிசுக்கு நீங்கள்தான் பரிந்துரைக்க வேண்டும்
ஐயோ, புக்கர் வட்டாரத்தில் எனக்கு யாரையும் தெரியாதே அம்மா! பிரிட்டனில் என்னை யாருக்கும் தெரியாதே!

போகட்டும், பாதகமில்லை. நோபல் பரிசு?
ஒரு நிமிடம் யோசித்தேன். ‘ஆங்...அறிவியல்துறையில் எனில் பரவாயில்லை. ஜீன்ஸ், ஸ்டெம்செல்ஸ் இப்படி ஏதாவது..?

என்னை ஒரு புழுவாகப்பார்த்தாள். ‘உங்களால் ஒரு பிரயோசனமும் இல்லை
என்றாள்.
‘சரி, உங்கள் நாவலைக் கொடுங்கள், வாசித்துப்பார்க்கின்றேன்
‘இன்னும் எழுதிமுடிக்கவில்லை
‘பரவாயில்லை, முடித்தவுடன் வந்து பாருங்களேன்? ஒரு வருடம், இரண்டு வருடம்... இதுபோன்ற விசயங்களை எல்லாம் அவசரகதியில் செய்யக்கூடாது’. அவருக்கு வாசலைக்காண்பித்து ஒவ்வொரு படியிறங்கும்போதும் உற்சாகப்படுத்தினேன்.

நீங்கள் ஒரு மோசமான நபர். வீட்டுக்குள் வா என்று கூட நீங்கள் அழைக்கவில்லை. உங்களைப் பற்றி குஷ்வந்த்சிங்கிடம் சொல்வேன். அவர் எனது நண்பர். உங்களது நடத்தை பற்றி நிச்சயம் எழுதுவார்

‘அட, குஷ்வந்த்சிங் உங்கள் நண்பர் எனில் என்னை ஏனம்மா தொந்தரவு செய்கின்றீர்கள்? நோபல், புக்கர் வட்டாரமெல்லாம் அவருக்கு அத்துப்படி. பல முக்கியப்புள்ளிகள் எல்லாம் அவருக்கு நெருக்கமானவர்கள்

அப்பெண்மணியை மீண்டும் நான் சந்திக்கவில்லை. ஆனால் எனது தொலைபேசி எண்ணை எவ்வாறோ தெரிந்து கொண்டு வாரம் ஒருமுறை என்னை அழைக்கின்றார், தனது நாவல் நல்லபடியாக வந்துகொண்டிருப்பதாக சொல்கின்றார். என்றாவது ஒருநாள் தனது நாவலின் கையெழுத்துப்பிரதியுடன் என் வீட்டுக்கதவைத் தட்டுவது நிச்சயம்.

தாங்கள் எழுதியதாகச் சொல்லிக்கொண்டு கையில் புத்தகங்களுடனும்  கையெழுத்துப்பிரதியுடனும் வந்து நிற்கும் அழையா விருந்தாளிகளை நினைக்கும்போது நடுக்கமாக உள்ளது. தங்களது ‘படைப்புக்கள்குறித்த எனது கருத்துக்களை கேட்பார்கள், ஆனால் நான் எனது விருப்புவெறுப்பற்ற கருத்தை சொல்லிவிடுவேன் எனில் அதனை அவர்கள் ஏற்க மாட்டார்கள். ஒரு எதிர்கால எழுத்தாளனை நோக்கி அவனது நினைவோடை அல்லது நாவல் அல்லது கவிதைத்தொகுப்பை அச்சில் வெளியிடாமல் இருந்தால் மிகவும் நல்லது என்று சொல்வதைவிடவும் அறிவுகெட்ட செயல் வேறு எதுவும் இல்லை. நாட்டில் நடக்கும் படுகொலைகள் எல்லாமே தீவிரமான காரணங்களுக்காக மட்டுமே நடக்கின்றன என்று சொல்லமுடியாது. எனவே ‘ஆஹா, அற்புதம்! யாரும் அடிச்சுக்க முடியாது, தொடர்ந்து எழுதுங்கள்!என்று சொல்வதே உத்தமம், உயிருக்குப் பாதுகாப்பு என்பதை உணர்ந்தே உள்ளேன். ஆனால் இதுவும் கூட ஆபத்தில்தான் முடிகின்றது. உடனடியாக ஒரு அணிந்துரையோ முன்னுரையோ எழுதித்தரவும் கூடவே எனது பதிப்பாளருக்கு – அல்லது யாரோ ஒரு பதிப்பாளருக்கு அப்புத்தகத்தை அச்சிடப் பரிந்துரைக்கும் ஒரு கடிதத்தையும் என்னிடம் வேண்டுகின்றார்கள். என் விருப்பம் எதுவும் இன்றி என்னை ஒரு எழுத்து ஏஜெண்டாக ஆக்கிவிடுகின்றார்கள், ஆனால் இதற்கான ஊதியம் எதுவும் தரப்படுவதில்லை.

இப்படியான அணிந்துரைகள் எழுதுவதில் உள்ள அபாயத்தை உங்களுக்கு விளக்கிச் சொன்னால்தான் புரியும். தொடர்ந்து மனிதர்களை வேட்டையாடிவந்த ஒரு சிறுத்தை குறித்து எழுதப்பட்ட தனது நூலுக்கு அணிந்துரை எழுதித்தரும்படி ஒருவர் என்னை நச்சரித்துக்கொண்டே இருந்தார். நூலின் இறுதிவரையும் ஒரே ஒரு நயமான சொற்றொடரைக் கூடக் காணமுடியாத அளவுக்குத்தான்  அவர் எழுத்து இருந்தது. ஆனால் சிறுத்தையின் நரவேட்டைகளை ஒரு சங்கிலித்தொடர்போல கதையாக்குவதில் அவர் வெற்றிபெற்றிருந்தார். அவரது தொடர்ச்சியான நேரடி அல்லது தொலைபேசி வாயிலான வேட்டையின் பலனாக வேறுவழியின்றி நான் ஒரு அணிந்துரை வழங்கினேன். ஆனால் அடுத்து தனது நூலை எடிட் செய்தோ அழகுபடுத்தியோ தரும்படி அவர் வேண்டியபோது நான் உறுதியாக மறுத்துவிட்டேன். இதுமாதிரியான வேலையை நான் கையில் எடுத்தால் சாவு நிச்சயம் என்பதை நான் உணர்ந்திருந்தேன். இறுதியாக எனது புகைப்படம் ஒன்றை என்னிடம் இருந்து வாங்கிச்சென்றார்.

மாதங்கள் பல கழிந்தன, அவரே தனது முயற்சியில் புத்தகத்தை அச்சிட்டு வெளிக்கொணர்ந்தார். புத்தகத்தில் எனது புகைப்படமும் சுட்டு வீழ்த்தப்பட்ட சிறுத்தையின் படமும் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால் விசயம் என்னவெனில் செத்துக்கிடந்த சிறுத்தையின் கீழ் “பிரபல எழுத்தாளர் ரஷ்கின் பாண்ட்என்ற வாசகமும் எனது புகைப்படத்தின் கீழ் “26 பேரைப்பலிவாங்கிய நரவேட்டைச்சிறுத்தை, சுட்டுவீழ்த்தப்பட்டபின் எடுத்த படம்என்ற வாசகமும் அச்சிடப்பட்டிருந்தன.

அச்சிட்டவரின் புண்ணியத்தில் நான் ஒரு தொடர் கொலைகாரனாக மாறி இருந்தேன்.

புத்தகங்களுக்கு அணிந்துரை எழுதுவதில்லை என நான் உறுதியாக இருப்பதற்கான காரணம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

எனது அண்டைவீட்டுக்காரரான சாண்ட்ரா அம்மையார் –அவரது ஆன்மா சாந்தியடைவதாக- இறந்துவிட்ட தனது கணவரின் நினைவுக்குறிப்புக்களை நூலாக அச்சிடுவதன் பொருட்டு ஒரு பதிப்பாளருக்கு 40,000 ரூபாய் கொடுத்திருந்தார். கணவர் தனது ஆயுட்காலத்தில் அந்நூலை வெளியிடமுடியாமற்போனதால் இறக்கும் தருவாயில் எப்படியாவது அந்த நூலை வெளியிடுமாறு தனது மனைவியிடம் சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார். தனது கணவனுக்கு அளித்த பிரமாணத்தை நிறைவேற்றும்பொருட்டு மனைவி நூலைக்கொண்டு வந்தார். அச்சிடப்பட்ட 500 பிரதிகளில் சிலவற்றை தனது நண்பர்களுக்கு அந்த அம்மையார் வழங்கிவிட்டு இறந்தும் விட்டார். அவரது வாரிசு, கனமான பைண்ட் செய்யப்பட்ட 450 விற்கப்படாத நினைவுக்குறிப்புக்களை வைத்துக்கொண்டு விழிபிதுங்குகின்றார்.

பலரும் என்ன நினைக்கின்றார்கள் எனில் ரஷ்கின் பாண்ட் மிகப்பரந்த பங்களாவில் பல உதவியாளர்களும் பணியாளர்களும் சூழ வாழ்ந்துகொண்டிருப்பார் என்று. அவர்கள் நேரில் என்னைப் பார்க்கவரும்போது எனது படுக்கைக்காகவும் படிப்பதற்காகவும் நான் பயன்படுத்தும் ஒரே சிறு அறையைக் கண்டு ஏமாந்துவிடுகின்றார்கள். எனது அன்றாடப்பயன்பாட்டு அறையில் புத்தகங்களே நிரம்பி இருப்பதால் ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு விருந்தினர்களுக்கு மேல் அங்கு அமர இயல்வதில்லை.

சில நேரங்களில் 30-40 பள்ளிக்குழந்தைகள் என்னைச் சந்திக்க வந்துவிடுகின்றார்கள். குழந்தைகளை நான் சந்திக்க மறுப்பதில்லை. ஆனால் பெரும் எண்ணிக்கையில் வரும்போது அவர்களை சாலையில் நிறுத்திச்சந்திப்பது தவிர்க்க இயலாமல் போகின்றது, இது எல்லோருக்குமே தொந்தரவான விசயம்.

வசதியும் வாய்ப்பும் இருந்தால் ஒருவேளை மசூரியின் செல்வந்தர்கள் வாழும் ஒரு பகுதியில் ஒரு சினிமா நட்சத்திரத்தையோ டிவி நடிகரையோ அண்டைவீட்டு நண்பராகக்  கொண்ட பரந்த ஒரு பங்களாவில் நான் வசித்திருப்பேனோ? சந்தேகம்தான். எனது வாழ்க்கை நெடுகிலும் ஒரு அறை அல்லது இரண்டு அறைகள் கொண்ட வீட்டில்தான் நான் வாழ்ந்து வந்துள்ளேன், ஒரு பெரிய அளவிலான வீட்டை என்னால் நிர்வகிக்க முடியுமா என்பது சந்தேகமே. நான் தத்து எடுத்துக்கொண்ட குடும்பத்தார் மற்ற இரண்டு அறைகளையும் பயன்படுத்துகின்றார்கள் என்பது உண்மைதான், ஆனால் நான்  பயன்படுத்தும் இடத்தை எந்தவகையிலும் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்கின்றார்கள். நான் எழுதிக்கொண்டு இருக்கும்போது (அல்லது தூங்கும்போது) அழையா விருந்தாளிகளின் தொந்தரவில் இருந்து என்னைக்காப்பது அவர்களே.


நான் பொய் சொல்வதற்கு கற்றுக்கொண்டுள்ளேன். பள்ளி விழாக்களில் என்னை தலைமை விருந்தினராக அழைக்கின்றார்கள். மற்றவர்கள் இரண்டு மூன்று மணி நேரம் நிகழ்த்தும் அறிவுரைகளைக் கேட்க நேர்வதும், அதன் பின் எனது அறிவுரையை அவர்கள் கேட்பதும்...இந்த நரகவேதனை மாணவர்களுக்கு மட்டும் அல்ல, எனக்கும்தான். விளையாட்டுப்போட்டிகள் எனில் அவையும் அப்படியே. ஒலிபெருக்கியில் ...என்ற  மாணவன் பள்ளியின் ரிக்கார்டை முறியடித்துவிட்டான் என்றும், ...என்ற மாணவி தொடர்ந்து மூன்றாவது வருசமாக பரிசைத்தட்டிச் செல்கின்றாள் என்றும் அலறுவார்கள். ஆனால் ஒரு போட்டியைக்கூட நீங்கள் கண்ணால் பார்க்க முடியாது, நீங்கள் மரியாதைக்குரிய பிற விருந்தினர்களுடன் அப்போது சம்பிரதாயமாக அளவளாவிக்கொண்டிருப்பீர்கள். வழக்கமான சடங்குசம்பிரதாயங்களுக்கு மாறாக உயிரோட்டத்துடன் நடந்த ஒரே ஒரு விளையாட்டுப்போட்டி இப்போதும் என் நினைவில் நிற்கின்றது.  ஒருமுறை வட்டெறியும் போட்டி ஒன்றில் யாரோ வீசிய வட்டு ஒன்று திசைமாறி பள்ளித்தலைமை ஆசிரியரின் மனைவியின் தலையை சீவிவிடும் என்ற நிலையில் பறந்துசென்றது, மயிரிழையில் அவர் உயிர் தப்பிய அச்சம்பவமே நினைவில் பசுமையாக நிற்கின்றது.    

வேறு பல எழுத்தாளர்களாக என்னை கருதிக்கொண்டு தவறாக அடையாளம் கண்டுகொண்டு கதைப்பதும் உண்டு.

‘திரு.பிக்விக் நீங்கள்தானா?என்று கேட்டான் ஒரு சிறுவன். நல்லவேளை, சார்லஸ் டிக்கன்ஸையாவது அவன் படித்திருக்கின்றானே என்றமட்டில் நான் திருப்தி அடைந்தேன். நான் அவருக்கு தூரத்து உறவுஎன்று சொல்லியபடியே முடிந்த அளவுக்கு பிக்விக் மாதிரியே நடந்துகொண்டு அவனை பெருமையுடன் பார்த்தேன். சிறுவர் சிறுமியர் என்னைச் சந்திக்கும்போது மிகுந்த இயல்புடன் நடந்துகொள்ள முடிகின்றது, அவர்கள் எதுகுறித்தும் கவலையின்றி வெளிப்படையாகப் பேசுவார்கள், ஆனால் பெற்றோருடன் வந்தால் இது நடக்காது. அப்போது குழந்தைகள் பேச மாட்டார்கள், தாயும் தகப்பனும் மட்டுமே பேசித்தீர்ப்பார்கள்.

என் பையன் பள்ளியில் உங்கள் புத்தகங்களை வாசித்திருக்கின்றான்என்று தனது பத்துவயது மகனைக்காட்டி ஒரு அம்மா பெருமைப்பட்டுக்கொண்டார். ‘அவனுக்கு உங்கள் ஆட்டோக்ராஃப் வேண்டுமாம்’. ‘செல்லமே, தற்போது எந்தப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கின்றாய்?என வினவினேன். ‘டாம் சாயர்என்று பட்டெனச் சொன்னான். பிறகென்ன, அவனது புத்தகத்தில் மார்க் ட்வைன் என்று கையெழுத்திட்டேன். பையன் பெருமகிழ்ச்சியடைந்தான்.

ஒரு பள்ளிச்சிறுமி அவளது கணக்குப்பாடப்புத்தகத்தில் எனது ஆட்டோக்ராஃபை இடச்சொன்னாள். ‘ஆனால் நான் கணக்குப்பாடத்தில் ஃபெய்ல் ஆனவன் அம்மா! நான் கதை எழுதுகின்ற ஒரு சாமானியன்’. ‘அப்படியா, கணக்கில் எத்தனை மதிப்பெண் பெற்றீர்கள்?’ ‘நூற்றுக்கு நான்கு’. அவ்வளவுதான், என்னை வினோதமான பிராணியாக பார்த்தபடி புத்தகத்தை என் கைகளில் இருந்து வெடுக்கெனப் பறித்தாள்.

எனித் ப்ளைடன், ஆர்.கே.நாராயண், இயான் போதம், டேனியல் டெஃபோ, ஹாரி பாட்டர்...இப்படி பல பெயர்களில் நான் ஆட்டோக்ராஃப் இட்டுள்ளேன். எவரும் அதுபற்றிக் கண்டுகொண்டதில்லை.

எனது புத்தகங்கள் பழையன, எனது சித்திரங்கள் பழையன, எனது காலணிகள் பழையன, எனது ஒரே மேல்கோட் மிகப்பழசானது. நான் மட்டுமே இளமையாக இருக்கின்றேன். நான் என்றும் இளமையுடன் இருப்பதற்குக் காரணம் என்னைச்சுற்றி எப்போதும் குழந்தைகள் இருக்கின்றார்கள் என்பதே. எனது குடும்பத்தின் குழந்தைகள் மட்டுமல்லர், பிற குழந்தைகளும்தான். இக்குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்துவருவதைக் காண்பதில் பெருவிருப்பம் கொள்கின்றேன். விடலைப்பருவம் என்பது வாழ்க்கையில் வசீகரமான பருவம், எனது கதைகளின் வழியே நான் எனது விடலைப்பருவத்திற்குத் திரும்புகின்றேன்.

... நான் எளிமையான, சிக்கனமான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். ப்ரேமும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இரண்டு சிறிய அறைகளில் வசிக்கின்றார்கள், எனக்கு இரண்டு சிறிய அறைகள். ஒரு அறை நிறைய புத்தகங்கள், விருந்தினர் அமர்வதற்கான சில நாற்காலிகள். மற்றொரு சிறிய அறை எனது படிப்புக்காகவும் படுக்கைக்காகவும். இந்த அறை வெளிச்சமானது, சூரியஒளி இந்த அறையை நிரப்புகின்றது, ஜன்னல்களோ மலைத்தொடர்களையும் பள்ளத்தாக்கையும் எப்போதும் வரவேற்கக் கூடியவையாக   அமைந்தவை. கீழே மக்களும் வாகனங்களும் பயன்படுத்துகின்ற ஒரு சாலை.  1980இல் இருந்து நான் எழுதிய பெரும்பான்மையான கட்டுரைகளையும்  சிறார்களுக்கான நூல்களையும் இந்த அறையில்தான் எழுதினேன்.  இந்த அறையில் இருந்துதான் எப்போதாவது ஒரு கவிதையை எழுதுகின்றேன், இசையைக் கேட்கின்றேன், சிறார்களுடன் உரையாடுகின்றேன், சுவர்களில் படரும் பச்சைக்கொடியை வளர்க்கின்றேன். செடிகள் வளர்ப்பதில் நான் தேர்ச்சியுடைவனாக இருக்கின்றேன், குறிப்பாக படர்கொடிகள். வீட்டுக்குள்ளேயே வளரும் தாவரங்களை வளர்ப்பதற்கு இந்த அறை     
மிக உகந்ததாக இருக்கின்றது...

                                                          ************

மீண்டும் மசூரி செல்வேன், அவரைத் தொந்தரவு செய்யாமல் அவர் வசிக்கும் அந்த அறையின் அமைதியை சுவாசித்தவாறே அதனைக் கடந்துசெல்வேன். அந்த அறையின் அமைதியைக் குலைக்கும் உரிமை அவருக்குப் பிடித்த குழந்தைகளுக்கும் அறையில் படரும் பச்சைக்கொடியின் இலையசைவுக்கும் மட்டுமே சொந்தமானதாக  இருக்கட்டும்.

                        *******************


கருத்துகள் இல்லை: