சனி, டிசம்பர் 05, 2015

பிள்ளையாரும் நானும்...


பிள்ளையாரும் நானும்...



என் சிறு வயதில் இருந்தே விநாயகர் சதுர்த்தி அன்று அக்கம்பக்க வீடுகளில் இருந்து சுண்டல், கொழுக்கட்டை, சக்கரப்பொங்கல்...என ஏகப்பட்ட நல்லவிசயங்கள் வந்துவிடும், திகட்டத்திகட்ட; ஆனால் கொண்டு வந்து தரும் எவரும் பிள்ளையார் பேரைச்சொல்லி கொடுத்துவிட்டு சென்றதாக சத்தியமாக நினைவில் இல்லை; இன்றும் அப்படியே. அவரவர் பிள்ளையார் அவரவர் வீட்டுக்குள்; சுண்டலும் கொழுக்கட்டையும் வீடுகளைத்தாண்டி. 

ஆனால் இன்று பிள்ளையார் வீதிகளில் இருக்கின்றார்; நெடுஞ்சாலைகள் மட்டும் இன்றி குறுகலான  முட்டுச்சந்துகளில் கூட என காவிக்கொடிகள் பத்தடிக்கு ஒன்றாக பறக்கின்றன; ஃப்ளெக்ஸ் போர்டுகளில் பல ...ஜிக்கள் சிரித்தபடி போஸ் கொடுக்கின்றார்கள்; இந்து தர்மபரிபாலன சபை, விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர் எஸ் எஸ், இந்து முன்னணி... என பல பெயர்களில் பல பேர் நெற்றிகளில் குங்குமத்துடன் சிரிக்கின்றார்கள்; ’இந்தியா இந்துதேசமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை, அது உன்னால்தான் முடியும்’ என யாரோ ஒரு ...ஜி ஃப்ளெக்ஸ் போர்டில் சிரிக்கின்றார். களிமண்ணால் ஆன சின்னப்பிள்ளையாரை வீட்டுக்குள் வைத்து கும்பிடுவார்கள், நானும் கூட நின்று கும்பிட்டிருக்கின்றேன் சிறுவயதில். மறுநாள் பிள்ளையார் காணாமல் போயிருப்பார், அடுத்த வருசம்தான் வருவார்.

இப்போது நெடுஞ்சாலைகளிலும் முட்டுச்சந்துகளிலும் கூட 10, 20 அடி உயர பிள்ளையாரை வைத்து மைக்செட்டுக்களில் ‘வாருங்கள் வாருங்கள்’ என அறைகூவி அழைக்கின்றார்கள். அந்த ‘உன்னால்தான்...’ என்பது யாரை? சின்ன வயசில் இருந்தே என் குடும்பத்தார் சுவைத்துக்கொண்டிருக்கும் சுண்டலும் கொழுக்கட்டையும் பக்குவமாய் செய்து என் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்தானே, என் பக்கத்துவீட்டுக்காரனையா?

கருத்துகள் இல்லை: