சனி, டிசம்பர் 05, 2015

அப்துல் கலாம் (5) - ஒரு மதிப்பீடு


அப்துல் கலாம் (5) - ஒரு மதிப்பீடு





15. அப்துல்கலாம் அடிப்படையில் அவர் ஒரு விஞ்ஞானி மட்டுமே அல்லர், தனது ஆயுட்காலத்தின் பெரும்பகுதியை மிகப்பலம் வாய்ந்த அரசு அதிகாரியாக கழித்தவர்; மன்மோகன் சிங் என்ற பொருளாதார நிபுணர் அடிப்படையில் ஒரு அரசு அதிகாரியாக இருந்தவர்; பிற்பாடு அவர் நிதி அமைச்சராக, பின்னர் பிரதமராக இருந்தபோதுதான் இத்தேசம் ஆகப்பெரும் பொருளாதாரச் சீரழிவை சந்தித்தது; விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில் இருந்த இந்தியக்கோடீசுவரர்களின் எண்ணிக்கை அவர் நிர்வாகத்தில்தான் பல நூறுகளைத் தாண்டியது; விவசாய நாடான இந்தியா பல லட்சம் விவசாயிகளின் தற்கொலையை கண்ணுற்றது.
கடந்த 25 வருடங்களில்தான் இந்தியாவில் கோடீசுவரர்களின் எண்ணிக்கை பல நூறுகளைத்தாண்டியுள்ளது; அதே நேரம் ஏழைகளின் எண்ணிக்கை, குறிப்பாக இரண்டு வேளை உணவு உறுதியாக உண்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது; பொருளாதார ஏற்றத்தாழ்வு பெருமளவு உயர்ந்த சமுதாயமாக இந்திய சமூகம் சீரழிந்துள்ளது; விவசாய நாடு என அறியப்படும் இந்தியாவில் விவசாயம் தொடர்ந்து அழிந்து வருகின்றது; சில லடசம் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டியதாக அரசின் கொள்கைகள் சில கார்பொரேட்டுக்களால் வடிவமைக்கப்ப்டுவது வெளிச்சம்.

இத்தகு நிலையில் எந்த ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிக்கும் தெளிந்த சமுகப்பார்வை, சமூக அக்கறை இல்லையெனில் அவரது அறிவாற்றலால் எத்தகைய பயனும் இந்த தேசத்துக்கு இருக்கப்போவதில்லை என்பது உறுதி. சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் கருத்துக்கள் இல்லாமல் வெறுமனே கனவுகள் மட்டும் காணும் இத்தகைய விஞ்ஞானிகளுக்கும் தெருவோரம் சைக்கிள் டயரை பஞ்சர் ஒட்டி வாழ்க்கை நடத்தும் சிறு தொழிலாளிக்கும் எந்த வேறுபாடும் கோட்பாடு ரீதியாக இல்லை.

குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்தியாவில் பல லட்சம் பேர் உள்ளார்கள்; மிகப்பெரிய அரசியல் பதவிகளான குடியரசுத்தலைவர், பிரதமர் போன்ற பொறுப்புக்களுக்கு ஒருவர் ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணராக இருப்பது மட்டும் போதாது; அரசியல் கோட்பாடுகளில் தெளிவான பார்வை, முதிர்ச்சி, தொலைநோக்குப் பார்வை, உள்ளதை உள்ளதென்று சொல்லும் நேர்மை, துணிச்சல், உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளின்பால் இத்தேசம் பல பத்தாண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த அணிசேராக்கொள்கை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, அணுஆயுத ஒழிப்பு ஆகியவற்றைப் பற்றி நிற்றல், அரசியல் சட்ட்த்தின் உயரிய கோட்பாடுகளுக்கு மதிப்பளித்தல், அக்கோட்பாடுகளின் பாதுகாவலானாக தன் நிலையை உறுதிப்படுத்தும் நெஞ்சுரம் ஆகியன குடியரசுத்தலைவர், பிரதமர் போன்ற பொறுப்புக்களை வகிப்பவர்களின் தலையாய தகுதிகள் என்பதை இந்தியாவின் அரசியல்போக்குகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன.

(முற்றும்)

கருத்துகள் இல்லை: