சனி, டிசம்பர் 05, 2015

அப்துல் கலாம் (4) - ஒரு மதிப்பீடு


அப்துல் கலாம் (4) - ஒரு மதிப்பீடு

12. அப்துல்கலாம் என்ற ஏவுகணை விஞ்ஞானி, இந்தியாவை அணுஆயுதம் ஏந்திய ஒரு முரட்டு நாடாக மாற்றுவதில் பெரும் ஆர்வம் கொண்டவராக இருந்தார், அதில் வெற்றியும் பெற்றார்.
பாகிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்த முஷாரஃப், அப்துல்கலாம் இருவருமே ‘அணு ஆயுத நாடுகளாக இருப்பது இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே போரைத் தவிர்த்திருக்கின்றது’ என்று சொல்லி இருக்கின்றார்கள்; 1998 மே மாதம் கார்கில் அணுவெடிப்பு சோதனைக்குப்பின் ”3000 வருடங்களாக இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்த அச்சுறுத்தல் பொக்ரான்-2க்குப் பிறகு அகன்றது” என கலாம் பெருமைப்பட்டுக்கொண்டார்; ஆனால் பாகிஸ்தானும் ஒரு அணுஆயுதத்தை வெடித்தபின்னர் நிலைமை மோசமானதே தவிர அமைதியில் முன்னேற்றம் ஏதும் இல்லை; ”அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுதான் வல்லரசு” என்று இங்கே தோள் தட்டினால், மறுநாள் எல்லைக்கு அப்பால் மற்றொருவன் தோள் தட்டினான். அதனைத் தொடர்ந்துதான் கார்கிலில் போர் வெடித்தது; கலாமும் பிஜேபியும் (முஷாரஃபும்) மார்தட்டிக்கொண்டது போல் அணுஆயுதத்தை வைத்து ஒன்றும் செய்யமுடியவில்லை. 
அப்துல்கலாம் ஒரு தொழினுட்பாளராக இருந்தார் என்பதை ஒப்புக்கொள்ளலாம்; அரசியல் மதினுட்பம் வாய்ந்த ஒரு விஞ்ஞானியாக அவர் இருந்தாரா என்பது சந்தேகத்துக்கு உரியது.

13. அவருக்கு முன் ஜனாதிபதியாக இருந்தவர் கே.ஆர்.நாராயணன். குஜராத் கலவரங்கள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியவர் அவர்; பிரதமராக இருந்த வாஜ்பேயிக்கு “இந்திய சமூகத்தின், இந்தியாவின் மிக மோசமான பிரச்னை குஜராத் கலவரம்” என அவர் குறிப்பிடும் நேர்மையும் துணிச்சலும் இருந்தவராக இருந்தார்; படுகொலைகளைத் தடுத்து நிறுத்த ராணுவத்தை அனுப்புமாறு எழுதினார்.

14. காந்தி படுகொலையில் தொடர்பு உடைய ஏழு பேர்களில் ஒருவரான வினாயக் தாமோதர் சவர்காருக்கு பாரத்ரத்னா விருது வழங்க அன்றைய பிரதமர் பரிந்துரைத்த கடித்தின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக அதை கிடப்பில் போட்டதன் மூலம் தனது எதிர்ப்பை உணர்த்தியவர் நாராயணன்; பிற்பாடு ஒருநாள் அவர் வாஜ்பேயின் இல்லத்துக்கு சென்றபோது, தனது பரிந்துரையை திரும்பப்பெற்றுக்கொள்வதாக அறிவித்தார் வாஜ்பேயி.
அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது அதே சவர்க்காரின் உருவப்படத்தை நாடாளுமன்ற மத்தியமண்டபத்தில் மஹாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு நேர் எதிரே திறந்துவைத்து ஆர் எஸ் எஸ்-சின் மகிழ்ச்சிக்கு காரணமானார். அவர் நினைத்திருந்தால் மறுத்திருக்க முடியும்.
தொடரும்...

கருத்துகள் இல்லை: