
1. கலாம் மறைந்துவிட்டார்; எளியவர்களின் ஜனாதிபதி என்ற பெயர் பெற்றார் என்பதை மறுப்பதற்கில்லை.
அவர் ஒரு சிறந்த தொழினுட்ப பொறியாளராக, ஏவுகணை விஞ்ஞானியாக அறியப்பட்டார், அது உண்மையே; அவர் 1998 போக்ரான் அணுவெடிப்புச்சோதனையின் பொறுப்பாளராக அல்லது ஒருங்கிணைப்பாளராக இருந்ததால் மட்டுமே அவரை அணுவிஞ்ஞானியாகவும் ஊடகங்கள் சித்தரித்தன, அது உண்மை அல்ல;
2. ஜனாதிபதி என்ற பொறுப்பு அரசியல் பொறுப்பு வாய்ந்த பதவி; அரசியல் சட்டத்தின் பாதுகாவலர் என்ற முறையில் அவர் இந்த தேசத்தின், உலகத்தின் கடந்த கால, நிகழ்கால அரசியலை நுட்பமாகத் தெரிந்தவராக, தனது ஒவ்வொரு செயல்பாடும் தேசத்தின், உலகத்தின் எதிர்கால அரசியலை எத்திசையில் நகர்த்தும் என்பது புரிந்தவராக இருக்க வேண்டியுள்ளது; அவரது ஒவ்வொரு அசைவும் அரசியல் சட்டம் குடிமக்களுக்கு உத்தரவாதப்படுத்தியுள்ள உயரிய மரபுகளாகிய ஜனநாயகம், மதச்சார்பின்மை, இதுகாறும் இந்நாட்டில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் மதவேறுபாடுகளைக் கடந்த ஒற்றுமை, சகிப்புத்தன்மையோடு கூடிய சகோதரத்துவம், அண்டை நாடுகளோடு நல்லுறவு, உலக அமைதி, சமாதானம் ஆகிய உயரிய கோட்பாடுகளை உயர்த்திப்பிடிப்பனவாக, உத்தரவாதப்படுத்துவனவாக உள்ளனவா என்பதும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.
3. விடுதலை பெற்ற இந்தியாவின் மிகப்பெரும் மதக்கலவரங்கள் குஜராத்தில் வலதுசாரி இந்துத்துவா சக்தியான பிஜேபியின் நரேந்திரமோடி ஆட்சியில்தான் 2002ஆம் ஆண்டு நடந்தேறின.
4. மிகப்பெரும் அவப்பெயரை துடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த பிஜேபிக்கு, முஸ்லிம் சமுதாயத்திடம் சிறு நல்ல பெயரையாவது பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பிஜேபிக்கு அன்றைய தினம் குடியரசுத்தலைவர் தேர்தல் ஒரு கருவியாக அமைந்தது; பிரதமர் வாஜ்பேயி சென்னையில் இருந்த அப்துல்கலாமை தொடர்பு கொண்டு அவரது தேர்வை தெரிவித்தபோது செய்தியாளர்களை சந்தித்த அப்துல்கலாம் ‘எது நடந்த்தோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும்’ என்ற இந்துத்வா சக்திகளுக்கு உவப்பான, இந்த நாட்டின் புனிதநூலாக அறிவிக்கவேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தொடர்ந்து வலியுறுத்துகின்ற பகவத்கீதையின் வாசகங்களை உச்சரித்தார்; குஜராத் கலவரத்தின் உஷ்ணம் அப்போதும் அடங்கியிராதபோது, கலவரத்தில் தெருக்களில் ஓடிய குருதியின் ஈரம் காய்ந்திராத போதில் கலாம் உதிர்த்த சொற்கள் கீதையில் இருந்து; குஜராத்தில் நடந்தது கேடுகெட்ட மதக்கலவரம், அது நன்றாகவே நடந்ததா?
தொடரும்..
தொடரும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக