நெப்போலியன் லூயி வந்தபார்ட்டே பாகம் மூன்று அத்தியாயம் நானூற்று நாற்பது பத்தி எழுநூற்று எட்டு வரி ஐம்பத்தைந்து:
"... அரசு என்பது தனி; அரசாங்கம் என்பது தனி. அரசிலும் பல ரகங்கள் உண்டு.
அரசு என்பது சரத்குமார் நடித்தது.
அரசாங்கம் என்பது விஜயகாந்த் நடித்தது.
பேரரசு என்பது விஜயகாந்த் நடித்தது. வல்லரசு என்பதும் அவர் நடித்ததுதான்.
இளவரசு என்பவர் நடிகர், இயக்குனர்.
சிற்றரசு என்பவர் மூத்த திராவிட இயக்க தலைவர், எழுத்தாளர்.
அரசிளங்குமரி, மருதநாட்டு இளவரசி ஆகியவை இதில் எதிர்பாலின சமத்துவத்தை குறிக்கும் சொற்கள்.
அரசு அல்லது அரசாங்கம் என்பதை சர்க்கார் என்றும் சொல்லலாம் என்றாலும் அது தற்போதைய அரசியல் சூழல் தடை செய்யப்பட்ட சொல்லாக இருக்கிறது.
ஜார் அரசு என்பவர் பீங்கான் ஜாடி jar தயாரிக்கும் சர்வதேச தொழிலில் கொடி கட்டி பறக்கின்ற கொடும் முதலாளி. சிறிய சிறிய ஊறுகாய் ஜார்களை பத்து ரூபாய் காசுக்கு விற்று வால் ஸ்ட்ரீட்டில் மோசடிக்கு மேல் மோசடி, லாபம் மேலும் லாபம், லாபம் மட்டுமே இலக்கு மற்றதெல்லாம் விலக்கு என்று இரத்த வெறி கொண்டு அலைபவர். 1920களின் கிரேட் டிப்ரசன் என்ற மிகப்பெரிய பொருளாதார பெருமந்த, வயிறு உப்புச நிலைக்கும் சரிவுக்கும் காரணம் இந்த ஊறுகாய் ஜார்தான் என்பது இன்றுவரையிலும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள ஒன்று.
வட்டாட்சியர், பிளாக் டெவலப்மென்ட் ஆபிசர், தேர்வு நிலை கிளார்க் கிரேட் 1, இரவு நேர காவலர், செக்சன் ஆபிசர், துப்புரவு பணியாளர் ஆகியோர் மிக கொடூரமான அரசியல்வாதிகள். இவர்கள் நினைத்தால் எந்த ஒரு அரசு ஆணையையும் எளிதில் தட்டச்சு செய்து நொடியில் வெளியிட்டு விடுவார்கள். அரசு உயர் நிர்வாகம் இவர்களை கண்டால் குலை நடுங்கும்.
இவர்களுக்கு உற்ற துணையாக மறைமுகமாக இந்த ஆணைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல உதவி செய்யும் கொடியவர்கள் யார் என்று நுணுக்கமாக ஆய்வு செய்தால் அலுவலகத்துக்கு வெளியே இருக்கின்ற டீ கடை உரிமையாளரும் பத்து மணி, மூன்று மணி, ஐந்து மணி ஆகிய குறித்த நேரத்தில் உள்ளே வந்து அலுவலகத்திற்குள் டீ வடை சப்ளை செய்யும் டீ பாய்களும் மட்டுமே என்பதும் வடை தின்றபின் கையைத் துடைக்கும் தாள் என்ற போர்வையில் அவ்வாறு குப்பையில் எரியும் பொருட்டு டீ பாய்கள் வெளியே எடுத்து சென்ற அனைத்தும் உண்மையில் கடத்திச்செல்லப்பட்ட அரசு ஆணைகள்தான் என்பதும் அதி கூர்த்த நன்மதியும் பனி கோர்த்த வெண்மதியும் நுண்மான் நுழைபுலமும் கொண்ட அரசியல் நோக்கர்களுக்கும் சோதனை சாலை பீக்கர்களுக்கும் எளிதில் புலப்படும்.
அவ்வாறு புரிதல் ஏற்படாதவர்கள் வெகு மக்களின் எதிரிகளாக மட்டுமே இருக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள பாகம் முப்பது அத்தியாயம் இருநூற்று ஒன்றை வாசிக்க வேண்டும்.
இதற்கு சில நூறாண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த அறிஞர்களான பிளாட்டோ, அரிஸ்டாட்டில், கன்பூசியஸ், டோராபூச்சி, கெக்கலி ஆகியோரின் ஆய்வுகளின் அடிப்படையிலும் மார்க்சிய மூலவர்களின் டார்ச் லைட் வெளிச்சத்திலும் வெந்தயக்கீரை ஆய்வது போல ஆய்ந்து நுணுகி அணுகிப் பார்த்தால் ஒட்டு மொத்தத்தில் அரசு என்பதை சரத்குமார், விஜயகாந்த் இருவரும் தானடித்த மூப்பாக ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள் என்பதும் இது உழைக்கின்ற வெகு மக்களுக்கு எதிரான ஆகப்பெரிய வரலாற்று, பூகோள, மானுடவியல், தொல்லியல், அகழாய்வு மோசடி என்பதும் இது ஏற்புடையது அல்ல என்பதும் தெள்ளத் தெளிவாக உள்ளங்கை ஓட்டை என புரிபடும் என்பதும் தெள்ளிய நீரோடை போல புலப்படும் என்பதும் கடுகைத் துளைத்து எழு கடலைப் புகட்டி...
(தமிழ்நாட்டில் 2026 ஆகஸ்ட் மாதம் அடுத்தடுத்து வெளியான இரு சுற்றறிக்கைகள் தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் இடதுசாரிகளை அதிருப்தியடையச் செய்துள்ளன.
முதலாவதாக கடந்த 17-ஆம் தேதி கல்லூரி கல்வி இயக்ககத்தின் சார்பில் வெளியான சுற்றறிக்கையில், "இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை இடைத்தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை உடன் அலுவலகத்திற்கு அனுப்புமாறும் அந்தக் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது.
இரண்டாவதாக கடந்த 18-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் பெயரில் சுற்றறிக்கை ஒன்று வெளியானது. அதில், "திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றைச் சேகரித்து வருவாய் ஆய்வாளர்கள் வட்டாட்சியரிடம் இன்று (18.08.2026) மாலைக்குள் நேரடியாக சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் சுற்றறிக்கை விவாதப் பொருளான நிலையில் அது திரும்பப் பெறப்படுவதாகவும் அதனை வெளியிட்ட வட்டாட்சியர் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த பிரச்னையில் அரசு அதிகாரிகள் மீதான விமர்சனங்களையும் கண்டனங்களையும் தெரிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் இடதுசாரிக் கட்சிகள், அரசு குறித்த வரையறையில் தடுமாறி தமது கண்டனங்களை அரசு ஊழியர்கள் மட்டத்தில் நிறுத்திக்கொள்கிறார்களே தவிர அரசுக்கு பொறுப்பான முதலமைச்சர் குறித்து நாளது தேதி வரை ஒரே ஒரு கேள்வியைக் கூட முன்வைக்கவில்லை)
20.8.2026