வியாழன், டிசம்பர் 21, 2023

கடவுள் மதம் மனிதன்

சத்தியம், வாக்குறுதிகள், காதல், விசுவாசம்...

யாவும் வெற்று வார்த்தைகள், அவ்வளவே


ஒருவரும் இங்கே மற்றவரின் அன்புக்கு ஆட்பட்டவர் இல்லை

உறவுகள் அனைத்தும் போலித்தனமானவை


உன் கடவுள் உன்னெதிரே இருந்தாலும்

உன்னால் எதுவும் செய்ய முடியாது

வேறு யாருமில்லை, உன் உடலுக்கு தீ மூட்டப்போவது

உன் ரத்த பந்தங்கள்தான் 

ஆகாயத்தில் நீ எழும்பி பறக்க

உன் சாம்பலோ மண்ணோடு மண்ணாக கலந்துபோகும்


கொண்டாட்டமான நேரங்களில் உன்னை சுற்றிலும் மக்கள் கூட்டம்

நீ துயருற்ற நேரங்களிலோ உன்னருகில் எவருமிலர்

உலகமக்கள் உன்னுடையவர்கள் ஆவார்கள், எப்போது?

உன் இதயத்தை பிளக்கும்போது

அது சரி, கடவுளையே ஏமாற்றிவிடும் இவர்கள்

மனிதர்களை சும்மா விட்டுவிடுவார்களா என்ன?


இது ஒரு இந்து செய்த காரியம் எனில்

கோவிலை கொள்ளையடித்தது யார்?

இது ஒரு முஸ்லிம் செய்த காரியம் எனில்

கடவுள் வாழும் இல்லத்தை இடித்தது யார்?

இவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கட்டும்,

அந்த மதம் போலித்தனமானது.

....

ஏனோ இந்தப்பாடல் நேற்றும் இன்றும் நினைவில் சுழன்றடிக்கிறது. கஸ்மெ வாதே... என்ற இந்தி மொழிப்பாடல்.

கவிஞர் இண்டீவர் எழுதிய இந்தி பாடல் இது. உப்கார் என்ற இந்திப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையமைத்தார்கள். பாடலுக்கு திரையில் நடித்தவர் பிரான். பாடலில் ஏன் இத்தனை வெறுமையும் விரக்தியும்? ஒரே தத்துவமழை? பாடலை திரையில் பாருங்கள். பாடல் வரிகளுக்கும் திரையில் விரியும் காட்சிகளுக்கும் வித்தியாசமான குரல் வளம் கொண்ட மன்னா டே நியாயம் செய்துள்ளார். இசையிலும் அந்த வெறுமையின் உயிரோட்டம், ஆம் வெறுமையின் உயிரோட்டம்!

பாலு மகேந்திராவின் நீங்கள் கேட்டவை படத்தில் இப்பாடல் மெட்டு அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டது மட்டுமின்றி பாடலும் இதே சாயலில் எழுதப்பட்டது.

பாடலை ஆங்கிலம் வழியாக தமிழில் மொழியாக்கம் செய்தவன் நானே.

... ...

இருண்ட காலத்தில் பாடியவர்கள்


இருண்ட காலத்தில் எதை பாடுவது?

இருளைப்பற்றித்தான்...

- பெர்டோல்ட் பிரெக்ட்


இசையின் அல்லது படைப்பின் அரசியலை இப்படி இரண்டு வரிகளில் வேறு யாரும் வரையறுத்தது இல்லை. இருளைப்பற்றி அல்ல, வெளிச்சத்துக்கான போராட்டம் பற்றி பாட சொல்கிறான் கவிஞன்.

ஜான் லென்னான், பாப் மார்லி, மைக்கேல் ஜாக்சன், எல்விஸ் பிரெஸ்லி என நீளும் இசைஞர்கள் தம் மண்ணின் அரசியலை தம் பாடல்களில் இசையில் பாடினார்கள், எழுதினார்கள். அது நிறவெறியை கண்டனம் செய்யும், இனவெறியை கண்டனம் செய்யும் அரசியலாய் இருந்தது. காசியஸ் க்ளே எதிராளியின் முகத்தில் விசையோடு வீசிய ஒவ்வொரு பஞ்ச்சிலும் நிறவெறிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கெடுபிடி அரசியலுக்கும் எதிரான ஆக்ரோஷமான இசை இருந்தது. முகமது அலியின் ஒவ்வொரு குத்திலும் செரினாவின் ஒவ்வொரு வாலியிலும் நிறவெறிக்கு எதிரான அரசியல் இருந்தது. கறுப்பின மக்களுக்கு எதிரான அரசியலின் குரல்வளையை நெறித்து குப்பையில் தள்ளும் அரசியல் இருந்தது.

இந்திய இசையில் பிராமணீயம் இருந்தது. அல்லது இந்திய இசை பிராமணீய அடையாளத்துடன் இருந்தது. பாடிய மொழியும் பாடியவர்களும் கேட்டவர்களும் அவ்வாறே. பிராமணர்கள் அல்லாத பிற சாதியினர், குறிப்பாக தலித் மக்களும் கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் இந்திய அல்லது அவரவர் மண் சார்ந்த இசையை கையில் எடுத்தபோது அந்த இசையில் பிராமணீய எதிர்ப்பும் சாதீய எதிர்ப்புணர்வும் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலும் இருந்தது. தேவ பாஷையை புறம் தள்ளி அவரவர் மொழியில் பாட விரும்பிய அரசியல் இருந்தது. இது அவ்வளவு எளிதில் நடைபெற்றுவிடவில்லை. மேல்சாதி ஆதிக்கத்தில் சிக்குண்டு கிடந்த இந்திய இசையில் ஓர் உடைப்பை ஏற்படுத்துவது அத்தனை எளிதாக நடந்துவிடவில்லை.

... ...

தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் பார்ப்பனர்கள் நடுவர் என்ற பெயரில் உட்கார்ந்து கொண்டு செய்யும் அட்டகாசங்கள் அருவருப்பானவை, அப்பட்டமான பிற சாதி + தலித் மக்களுக்கு எதிரான அரசியல் கொண்டவை. பல நேரங்களில் இது பற்றி பதிவுகள் எழுதி இருக்கிறேன். அந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்த்து வந்தேன்.

Zee டிவியில் இப்போது நடந்துகொண்டு இருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இதில் பெரிய உடைப்பை ஏற்படுத்தி உள்ளதை பார்க்கிறேன். சாமானிய உழைக்கும் மக்கள் குடும்பங்களில் இருந்து ரயிலுக்கும் பேருந்துக்கும் கூட டிக்கெட் எடுத்துவிட இயலாத பொருளாதார பின்னணி உள்ள குடும்பங்களில் இருந்து பிள்ளைகள் பாடுகிறார்கள். பார்ப்பனர் அல்லாத பிள்ளைகளின் இசை அறிவை நடுவர்கள் கொண்டாடுகிறார்கள். கண்ணீர் வடிக்கிறார்கள். இது உண்மையில் தொடருமே ஆனால் கொண்டாட வேண்டிய ஒன்றுதான்.

லுங்கி என்பது இஸ்லாமிய அடையாளம் என வரையறுக்கப்பட்ட இங்கேதான் இசுலாமியர் அல்லாத ஒரு இளைஞன் லுங்கி கட்டி வந்து பாடினான் என்பது இந்த மேடைகளின் திட்டவட்டமான அடையாளத்தில் மிகப்பெரிய உடைப்பை ஏற்படுத்தி உள்ளது என்று உறுதியாக நம்புகிறேன். இன்னும் கூட லுங்கிகள் ஆடை என்பதை காட்டிலும் அதில் இஸ்லாமிய அடையாளம் இருப்பதாக கருதி அருவருப்புடன் பார்க்கும் சாதியினரை நான் அறிவேன். ஆடையில் சாதி அடையாளம் தேடும் அரசியல்.

லுங்கி கட்டிய அந்த இளைஞன் 10 வயதில் தன் தந்தையை இழந்தவனாம். மீனவர் ஆன அவர் ஒருநாள் தொழிலுக்கு சென்றவர் திரும்பி வரவே இல்லையாம்.

வாழ்க zee! தொடர்க!

....

மேலே உள்ள பதிவை எழுதிய பின்னர்தான் இறுதிப்போட்டி நடந்தது. இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கில்மிஷா முதல் பரிசை வென்றாள். 2009, 10 காலத்தில் தன் தாய்மாமன் காணாமல்போனான் என்றாள். அவன் தாய், தகப்பன் இருவரும் அவன் வருவான் என்று கண்ணீர் விட்டு காத்திருக்கும் காணொலியை பார்த்தீர்களா?

நூலை வாசித்த பின்: கோவை கலவரத்தில் எனது சாட்சியம்


கோவை கலவரத்தில் எனது சாட்சியம்

ஏ. வி.அப்துல் நாசர், 

புவனகிரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

எழுத்தாக்கம் பழனி ஷஹான்

பாரதி புத்தகாலயம் வெளியீடு.

1

"சங் பரிவாரின் சோதனைச்சாலை குஜராத்"  என்ற கூற்று உண்மையா?


1997, 98 கோவை கலவரங்களுக்கான விதைகள் அப்போதோ அல்லது அதற்கு 10 வருடங்கள் முன்போ விதைக்கப்பட்டவை அல்ல. 1980களிலேயே கோவையில் வணிகர்கள் ஆக இருந்த இசுலாமிய சமூகமக்கள் தம் வணிகத்திலும் பொருளாதார நிலையிலும் மேம்பட்டவர்களாக இருந்தார்கள் என்பது அன்றே இந்துத்துவா சக்திகளுக்கு எரிச்சலை தந்த ஒன்றாக இருந்தது. 

1980களின் முற்பாதியில் தென்கோடி கன்னியாகுமரியில் மண்டைக்காடு என்ற ஊரில் இந்து முன்னணி என்ற அமைப்பை ராம.கோபாலன், இல.கணேசன் ஆகியோர் முனைந்து தொடங்கினர். உண்மையில் ஆர் எஸ் எஸ்ஸின் பல கொடுக்குகளில் இது ஒரு கொடுக்கு.

ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இந்துமத, கிறித்துவ மத மீனவ சமுதாய மக்களிடையே பகைமை உணர்வை வளர்த்து பெரும் கலவரத்தை உருவாக்கி பலர் செத்துமடிய இந்து முன்னணி காரணமாக இருந்தது. தென்காசி மீனாட்சிபுரத்தில் சில நூறு குடும்பங்கள் இசுலாமிய மதத்தை தழுவிய போது வாஜ்பாய் முதல் மிகப்பல இந்துத்துவாவாதிகளும் பதட்டம் அடைந்து நேரடியாக மீனாட்சிபுரத்துக்கு வந்தார்கள் என்பதை இங்கே விரிவாக எழுத வேண்டாம்.

2

1988இல் கோவையில் தனிநபர்களுக்கு இடையே ஆன ஒரு பிரச்னையை மத சாயம் பூசி இந்து இஸ்லாமிய மக்கள் இடையே பகைமையை உருவாக்கியது அதே இந்து முன்னணிதான். இதில் கேரளா மாநிலத்தை சேர்ந்த 15 வயது அபூபக்கர், அப்துல் லத்தீப் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர். உறவினர்கள் வீட்டுக்கு வந்த இடத்தில் இப்படி உயிரை இழந்தார்கள். 1989இல் அப்துல் ஹக்கீம் என்பவர் கொலை செய்யப்பட்டார். மூவர் கொலையிலும் தொடர்பு உடைய இந்து முன்னணியை சேர்ந்தவர்களை காவல்துறை கைது செய்தாலும் அதி வேகமாக விடுதலையும் ஆனார்கள். இவற்றை தொடர்ந்து இக்கொலைகளில் தொடர்பு உடைய கணேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்து முன்னணியை சேர்ந்த அவரை வீர கணேஷ் என்று மாற்றி இந்து முன்னணி பெரிய அளவில் பிரச்சாரம் செய்தது. 

முதல் இரண்டு இஸ்லாமிய மக்களின் கொலையை கண்டுகொள்ளாமல் இருந்த பத்திரிகைகள் கணேஷின் கொலை பற்றி மிக பரபரப்பாக தொடர்ந்து எழுதி தள்ளின. கூடவே அரசு அதிகாரிகளின் அலட்சியம், கொலையானவர்கள் முஸ்லிம்கள் என்ற மத பாகுபாடு இரண்டும் ஒருசேர, அரசு நிர்வாகம் முதல் இரண்டு கொலைகளை கண்டுகொள்ளாமலும் சரியான நடவடிக்கை எடுக்காமலும் இருக்க அதன் எதிர்வினை ஆக கணேஷ் என்ற நபர் கொல்லப்பட்டார். கணேஷின் இறுதிச்சடங்கு நிகழ்வில் "ஒவ்வொரு வருடமும் ஒரு முஸ்லிமை வெட்டி உனக்கு குருதி அஞ்சலி செலுத்துவோம்" என்று இந்து முன்னணியினர் வெளிப்படையாக சபதம் செய்ததை கோவை காவல்துறை பார்த்துக்கொண்டுதான் இருந்தது. 

அவர்கள் சபதம் செய்தது போலவே பாஷா, அகமது கபீர், உள்ளிட்ட நான்கு இஸ்லாமிய மக்கள் மீது இந்துமுன்னணியினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். கபீர் மீதான

தாக்குதலுக்கு பின் விகடன் குழுமத்தின் 13.9.1991 ஜூனியர் போஸ்டில் இப்படி செய்தி வந்தது: கபீர் கொலைக்கான பின்னணி வீர கணேஷிற்காக பழிவாங்கும் படலமே. கூடவே கணேஷின் சமாதி முன் இந்து முன்னணியினர் சபதம் செய்ததையும் குறிப்பிட்டது. தொடர்ந்து 5.9.91 அன்று சிவக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

ஆக கொலை, பழிவாங்குதல் என்ற சங்கிலியின் கண்ணியாகவே 1997 நவம்பர், 1998 பிப்ரவரி கலவரங்கள். 1997 நவம்பர் கலவரம் அந்தோணி செல்வராஜ்  என்ற போலீஸ்காரர் கொலை செய்யப்பட்ட பின் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டது. நடத்தியது இந்து முன்னணியும் காவல்துறையும் இணைந்த கூட்டணி

1997 நவம்பர் கலவரத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் (?) 18 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை சொன்னாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். 24 பேர் என்று அரசு அல்லாத அமைப்புகள் சொல்கின்றன. அரசு அறிக்கையே கூட 10 பேர் காணாமல் போனதாக சொல்கிறது. 

உண்மை என்ன? 250 பேரை கைது செய்தது காவல்துறை என்றாலும் கலவரத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள் காவல்துறைதான். அவர்கள்தான் உண்மையில் பலரை வெட்டி கொன்றார்கள். கலவரங்களில் காயம்பட்ட இசுலாமியர் பலர் Aமருத்துவமனைக்கு வந்தபோது காத்திருந்த காவலர்கள் அவர்களை கொன்றனர். இசுலாமிய மக்களின் வீடுகளில் நுழைந்து பெண்கள் மீது காவல்துறை நடத்திய பாலியல் வன்முறைகள் கொடூரமானவை. பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டன.

PUCL, Peoples Watch, CHRO (Kerala) ஆகிய மனித உரிமைகள் அமைப்புகள் களத்தில் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில் அப்போதைய கோவை நகர் கமிஷனர் ஆன டி சி மாசான முத்து, இன்ஸ்பெக்டர் முரளி, அசிஸ்டண்ட் கமிஷனர் நடராஜன், சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் நவம்பர் கலவரத்தின் பின்னால் இருந்தவர்கள் என நேரடியாக குற்றம்சாட்டி இருந்தனர். 

திட்டமிட்ட வகையில் இசுலாமிய வணிகர்களின் கடைகள் ஏறத்தாழ 1000 இருக்கலாம், அழிக்கப்பட்டன. இசுலாமிய மக்களின் அழிக்கப்பட்ட சொத்துக்கள் மட்டும் சுமார் 800 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. 

ஷோபா ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து இந்துத்துவா தீவிரவாதிகளை கொள்ளை அடிக்க அனுமதி தந்தவர்கள் காவல்துறையினர்தான்.  கடை உரிமையாளர் ஜாபர் தன் நிறுவனத்தை காக்க பெருமுயற்சி செய்துள்ளார். போலீஸ் கமிஷனர், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், மத்திய அமைச்சர் என தொலைப்பேசியில் அழைத்து நிலைமையை சொல்லி உடனடி நடவடிக்கை வேண்டும் என கேட்டும் ஒரு சல்லி பலனும் இல்லாமல் போகவே தன் உயிரை காத்துக்கொள்ள வெளியேறி சொத்தை இழந்தார். குஜராத்தில் குல்பர்க் சொசைட்டியை தீவிரவாதிகள் சூழ்ந்துகொண்டபோது அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆக இருந்த இஷான் ஜாப்ரிக்கு ஏற்பட்ட நிலையும் அவர் கொல்லப்பட்டதும் நினைவுக்கு வருகிறது.கலவரத்தின்போது போலீசார் சீருடைகளை மாற்றி கைலிகளை கட்டிக்கொண்டு துப்பாக்கி ஏந்தி கண்ணில் கண்ட இசுலாமியர்களை சுட்டுத்தள்ளினார்கள்.

4

1997 படுகொலைகளை பொதுசமூகத்தின் சிந்தனையில் இருந்து அகற்றவும் திசை திருப்பவும் காவல்துறைக்கு ஒரு வாய்ப்பு தேவைப்பட்டது. அதன் விளைவுதான்1998 பிப்ரவரி வெடிகுண்டு வெடிப்புகள். ஒரு தவறும் செய்யாத 58 உயிர்கள் பலியாகின. பிப்ரவரி14 முதல் 17 வரை நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். 

5

1997 கோவை கலவரத்தின்போது  அன்றைய புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்த இந்த நூலின் ஆசிரியர் அப்துல் நாசர் நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட விழைகிறார். அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களை சந்தித்து கோவை செல்ல அனுமதி கேட்கிறார். 'உங்க ஆளுங்கதான்யா இப்படி பண்றாங்க" என்று முதல்வர் சொல்ல இவர் மறுத்து பேசியிருக்கிறார். இறுதியில் முதல்வர் அனுமதி அளிக்கிறார். 1997 டிசம்பர் 1, 2 இரண்டு நாட்களும் கோவைக்கு சென்று தங்கி கள ஆய்வில் ஈடுபட்டுள்ளார். தான் கண்டவற்றை அப்படியே அறிக்கையாக அரசிடம் அளித்துள்ளார். ஒரு பயனும் இல்லை. தன்னையும் தீவிரவாதி என்று முத்திரை குத்தி விடும் அபாயம் உள்ளது என்று சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் மு.க. முன்பாகவே மனம் வெறுத்து பேசியுள்ளார்.

இந்த  நிலையில்தான் இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியேயும் நன்கு அறியப்படும் மிக முக்கியமான ஒருவர் அவரை சந்திக்க விரும்புவதாக அப்துல் நாசரின் நண்பர் சொல்கிறார்.

6

மண்டைகாடு, மீனாட்சிபுரம் ஆகிய ஊர்களில் மத மோதல்களை முனைந்து உருவாக்கிய இந்து முன்னணி கோவையிலும் இசுலாமிய மக்கள் மீது குறிப்பாக அவர்களின் பொருளாதார வளர்ச்சி கண்டு எரிச்சல் அடைந்து மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்கியது. இங்கும் ராம கோபாலன், திருக்கோவிலூர் சுந்தரம் ஆகியோர் இதற்கு அடித்தளம் இட்டனர். சிறு தனிநபர் பிரச்னைகளை பூதாகரமாக ஆக்கி மதமோதலாக மாற்ற முயற்சி செய்தனர். ஒரு கட்டத்தில் 1982 இந்து எழுச்சி மாநாடு என்று நடத்தி முகமது நபிகளை அநாகரிகமாக பேசி இசுலாமிய இளைஞர்களை கோபப்படுத்தினார்கள்.

தொடர்ந்து 1983, 1986, 1987, 1988, 1989, 1990, 1991, 1992, 1993, 1994 என திட்டமிட்டு இந்து முன்னணி மதக்கலவரங்களை நடத்திக்கொண்டே இருந்தது. சில கொலைகளும் நடந்தன. அதன் தொடர்ச்சியாகவே 1997, 1998 கலவரங்களை பார்க்க வேண்டும், 1992 பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர்தான் கோவையில் மதகலவரம் நடந்தது என்பது இசுலாமிய சமூகம் வெறுப்புற்று கலவரங்களை நடத்தியது, வெடிகுண்டு வெடித்தது என்று முனைந்து சித்தரிக்கும் முயற்சியாகத்தான் இருக்கும். 1997, 98 கலவரங்கள் இந்துமுன்னணியால் திட்டமிட்டு நடத்தப்பட்டவை எனில் அரசின் நிர்வாகமும் உளவுத்துறையும் காவல்துறையும் 1980களின் தொடக்கத்தில் இருந்து பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் சரியான நேரத்தில் நியாயமான தடுப்பு, கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தால் 97, 98 கலவரங்களையும் அதன் தொடர்ச்சியாக அல் உம்மா இயக்கத்தின் தவறான நடவடிக்கை ஆன வெடிகுண்டு தாக்குதல்களையும் தடுத்து நிறுத்தி இருக்க முடியும் என்பது உறுதி. 

உச்சகட்டமாக காவலர் செல்வராஜ் என்பவர் இந்து அல்ல, அவர் பெயர் அந்தோணி செல்வராஜ், அவர் ஒரு கிறித்துவர் என்ற உண்மையை காவல்துறையும் அன்றைய திமுக அரசும் வெளிப்படையாக அறிவித்து இருந்தால் அதை இந்து முஸ்லிம் கலவரமாக மாற்றிய இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ்சின் சதி அம்பலம் ஆகி இருக்கும், அதன் பின் ஏற்பட்ட படுகொலை, வெடிகுண்டு வெடிப்புகள் தடுக்கப்பட்டு இருக்கும். காவல்துறையில் இருந்த இந்துத்துவா சிந்தனை கொண்ட அதிகாரிகள் 97, 98 கலவரங்களை இந்து முன்னணி அமைப்புடன் சேர்ந்தே நடத்தினார்கள் என்பதுதான் அதன் பின் வெளிவந்த உண்மை. இதற்கு அன்றைய திமுக அரசும் முதல்வர் மு கருணாநிதி அவர்களும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்பதில் ஐயமில்லை.

7

1997 நவம்பர் 29 அன்று காவலர் அந்தோணி செல்வராஜை இசுலாமிய இளைஞர்கள் சிலர் கொலை செய்து விடுகிறார்கள். சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாக எழுந்த வழக்கு ஒன்றை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் பகைமை உணர்வை வளர்க்க அது கொலையில் முடிந்தது. இதில் இந்து முஸ்லிம் தகராறு எங்கே இருக்கிறது? உண்மை என்ன? கொலை செய்தவர்களை அல் உம்மா இயக்கம் காவல்துறையில் ஒப்படைத்தது. காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் இந்து முன்னணியுடன் சேர்ந்து கோவையை திட்டமிட்டு கலவர பூமியாக மாற்றியது.

30ஆம் தேதி கமிஷனர் மாசானமுத்து தலைமை தாங்க 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோவையில் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின் பின் பகுதியில் இந்து மக்கள் கட்சியினரும் அர்ஜுன் சம்பத்தும் அதிரடி ஆனந்தன் போன்ற இந்துத்துவா தீவிரவாதிகளும் சேர்ந்து சென்றனர் எனில் என்ன சொல்வது? காவல்துறை நடத்திய ஊர்வலத்தில் தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் எதிராக திட்டவட்டமான கோஷங்கள் இடப்பட்டன என்பதை தற்செயலான ஒன்று என்று தள்ளிவிட முடியாது.

8

30ஆம் தேதி கமிஷனர் மாசானமுத்து ஆயுதப்படை ரிசர்வ் வளாகத்தில் 

நடத்திய கூட்டத்தில் இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் இருந்துள்ளார். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த காவலர்களை வெளியேற்றிவிட்டு நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில்தான் இசுலாமிய மக்களையும் அவர்களின் வணிக தலங்களையும் வாழ்வாதாரங்களையும் குறிவைத்து அழிக்க திட்டம் இடப்பட்டது.

இதன் பின் நடந்த கலவரங்களையும் படுகொலைகள், வெடிகுண்டு வெடிப்புகளையும் மீண்டும் நான் இங்கே சொல்லப்போவது இல்லை.

9

1997 நவம்பர் கலவரத்தை ஒட்டி முதலமைச்சர் அனுமதியுடன் டிசம்பர் 1ஆம் நாள் நேரடியாக கோவை சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்  புவனகிரி எம் எல் ஏ ஏ வி அப்துல் நாசர். கலவரம் அப்போதும் தகித்துக்கொண்டு இருந்த பாதுகாப்பு அற்ற மிக மோசமான சூழலில்தான் சக நண்பர்கள் மூன்று பேருடன் கோவை செல்கிறார். பல இடங்களில் அப்போதும் தீ எரிந்துகொண்டே இருந்ததாகவும் காவல்துறையினரின் வெறுப்புக்கு ஆளான நிலையில் தமக்கே பாதுகாப்பு இல்லாத அச்சமிகு சூழல் நிலவியதாகவும் அப்துல் நாசர் பதிவு செய்கிறார். சந்தித்த மக்களும் சந்திக்க விரும்பிய நபர்களும் காவல்துறையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி வாய் திறக்கவில்லை என்ற நிலையில் தன்னை சந்தித்து பேசிய நபர்களின் சுருக்கமான வாக்குமூலங்களே கொடூரமானவையாக இருந்தன எனில் உண்மையான நிலவரம் எத்தனை கொடுமையாக இருந்திருக்கும் என்று யூகித்து தெரிந்துகொள்ளலாம்.

தாங்கள் கண்டவற்றை அறிக்கையாக அரசுக்கு கொடுத்தது மட்டுமின்றி 1999 ஜனவரி மாதத்தில் சட்டமன்றத்திலும் நடந்த அனைத்தையும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். பலன்? ஒன்றுமில்லை.

10

1999ஆம் ஆண்டு ஏதோ ஒரு மாதத்தில் காந்தியடிகளின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியை நேரடியாக சந்திக்கும் ஒரு வாய்ப்பு உருவாகிறது. கலவர பூமியில் தான் சென்றபோது கண்டவற்றை அப்படியே துஷாரிடம் சொல்ல அவர் நாசர் எதிர்பாராத புதிய பணி ஒன்றை செய்ய தூண்டுகிறார். "குற்றவாளி என்று அரசு ஒருவரை கைது செய்வதாலேயே அவரை குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது. அவரை குற்றவாளி என்று சொல்ல அரசுக்கு எப்படி உரிமை உள்ளதோ அதேபோல் தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கவும் அவருக்கு எல்லா உரிமைகளும் உண்டு. எனவே  கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை நீங்கள் ஆராய வேண்டும்..." என்கிறார் துஷார்.

கைது ஆனோரின் நிலை சிறைகளில் எப்படி உள்ளது என்று பேசிய துஷார் குண்டு வெடிப்பில் பாதிப்புக்கு உள்ளானோர் குறித்த வருத்தங்களையும் பதிவு செய்தார். அவர்களுக்கான இழப்பீடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். "இவர்களுக்கு அரசின் ஆதரவு இருக்கிறது, ஆனால் கைதான முஸ்லிம்களின் மீதோ அரசின் வெறுப்பும் மக்களின் வெறுப்பும்தான் சூழ்ந்திருக்கிறது. இப்படியான தருணத்தில் சிறுபான்மை சமூகத்தில் இருந்து எவரேனும்தான் அவர்களுக்கு உதவ முடியும். சிறைவாசிகளின் மோசமான நிலையை சீரமைக்க வேண்டும். அவர்களுக்கு ஜாமீன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்கிறார் துஷார்.

இந்த சந்திப்புக்கு பிறகுதான் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவர்களை சந்தித்து நிலையை ஆராயவும் ஜாமீன் கிடைக்கவும் வழக்கு நடத்த வேண்டிய சட்ட உதவிகளை செய்யவும் சிறைகளில் விசாரணை என்ற பெயரில் அவர்கள் மீது ஏவப்படும் துன்புறுத்தல், அடக்குமுறைகளை தடுக்கவும் சிறை கைதிகளுக்கான சட்டப்பூர்வ உரிமைகளை உறுதி செய்யவும் அப்துல் நாசரை தலைவராக கொண்ட Panel for Legal and Educational Aid (PLEA) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

11

நூலில் அப்துல் நாசர் அவர்கள் பதிவு செய்துள்ள அதிர்ச்சி தரும் ஓர் உண்மையை இங்கே பதிவு செய்து விட்டு PLEA என்ன செய்தது என்று சொல்கிறேன்.

நவம்பர் கொலைகளுக்கு பழி வாங்க இசுலாமிய இளைஞர்கள் சிலர் வெடிகுண்டு வெடிக்க திட்டமிட்டது தெரிந்து அன்றைய த மு மு க மாநில நிர்வாகிகள் எழுத்து வடிவிலேயே கோவை கமிஷனர், சென்னை டி ஜி பி ஆகியோரிடம் தெரிவித்து நடக்க இருக்கும் குண்டுவெடிப்பை தடுத்து தொடர்புடைய நபர்களை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்கள். அவ்வாறு குண்டு செய்து கொண்டு இருந்த அல் உம்மா இயக்க நபர்களை நேரடியாகவே அறிந்த உளவுத்துறை, காவல்துறையினர் அவர்களை கண்டுகொள்ளாமல் இருந்ததுடன் "நீங்கள்லாம் கண்டிப்பா இதை செய்யணும்" என்று தூண்டி விடவும் செய்துள்ளனர். நவம்பர் கொலைகள் இசுலாமிய மக்கள் மீதான பொதுமக்கள் அனுதாபத்தை விளைவித்து இருந்தது என்பதை இந்து முன்னணி கும்பலோ காவல்துறையோ விரும்பவில்லை. எனவே 98 பிப்ரவரி குண்டுவெடிப்பை காவல்துறை வேண்டுமென்றே அனுமதித்தது. 

அதாவது நவம்பர் கலவரத்தில் காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளியை அதை விடவும் பெரிய ஒரு கலவரத்தின் மூலம் கழுவிவிட காவல்துறை திட்டமிட்டது மட்டும் இன்றி நவம்பரை விடவும் கொடூரமான ஒரு தாக்குதலை இஸ்லாமியர்கள் நடத்தினால் நல்லது என்றும் எதிர்பார்த்தனர்.

அதன் பின் இசுலாமிய மக்கள் மீது கற்பனைக்கு எட்டாத கொடூரங்களை இந்து முன்னணி+காவல்துறை கூட்டணி கட்டவிழ்த்துவிட்டது.

12

சிறைக்கைதிகளின் குடும்பத்தினருக்கு காவல்துறை கொடுக்கும் கெடுபிடி, அவமரியாதை பற்றி த நா சட்டமன்றத்தில் அப்துல் நாசர் பேசும்போது முதல்வர் "அப்படி ஒன்றும் இல்லை, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசி அவர்களை ஊக்குவிக்காதீர்கள்" என்று சொல்கிறார்.

சட்டமன்றத்திற்கு வெளியே பத்திரிக்கையாளரிடம் பேசிய நாசர், சட்டமன்றத்தில் நடந்ததை கூறி, சிறையில் உள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை, குண்டுவெடிப்பை தூண்டியவர்கள் வெளியே உள்ளார்கள், சில முஸ்லிம் அமைப்புகள் இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறார்கள் என்று கூற முஸ்லீம் அமைப்புகளின் கண்டனத்துக்கு ஆளானார். அன்றைய த மு மு க இயக்கம் பி ஜெய்னுலாபுதீன் தலைமையில் இருந்தது, அந்த அமைப்பு மட்டும் நாசர் மீது 18 மாவட்டங்களில் வழக்கு போட 18 மாவடங்களுக்கும் நேரில் அலைந்துள்ளார்.

13

PLEA சார்பில் முதலமைச்சரை சந்தித்து கைதிகள் மேல் சிறையில் ஏவப்படும் வன்முறைகள் பற்றி சொல்ல, முதல்வர் அப்படியெல்லாம் இல்லை என்று மறுக்க, மீண்டும் மீண்டும் எடுத்துச்சொன்ன பிறகே "சரி நீங்களே சிறைகளுக்கு நேரில் சென்று பார்த்து அறிக்கை அளியுங்கள்" என்று அனுமதி வழங்குகிறார்.

வழக்கறிஞர்கள் துணையுடன் அப்துல் நாசரின் அமைப்பு கோவை, சென்னை சிறைகளுக்கு நேரில் சென்று பார்த்து பதிவு செய்துள்ள உண்மைகள் மிக அதிர்ச்சி அளிப்பவை. காவல்துறை இஸ்லாமியர் மீது எத்தனை வன்மம் கொண்டதாக உள்ளது என்பதை நாசர் ஆவணப்படுத்தி உள்ளார். அதை இங்கே விவரிக்க இடமில்லை. கோவை சிறை இந்து முன்னணியின் ராம கோபாலன் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதை மட்டும் பதிவு செய்கிறேன். என்ன நடந்திருக்கும் என்பதை வாசிப்போர் ஊகித்துக்கொள்க.

14

PLEA அமைப்பின் நோக்கம் சிறைவாசிகள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்றோ அனைவரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதோ அல்ல என்பதை நாசர் தெளிவாக சொல்லி விடுகிறார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், நிரபராதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் அடிப்படையான நோக்கம். இந்த திசை நோக்கிய பயணத்தில்

சிறைவாசிகள் தரப்பில் வாதாட வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்வது, சிறையில் அவர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகளை நிறுத்துவது, சிறைக்கு வெளியே உள்ள அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவது ஆகிய திட்டவட்டமான செயல்களில் இறங்குகிறார்கள்.

சொல்வதற்கு மிக எளிதாக உள்ளது. அன்றைய நாளில் குண்டுவெடிப்புக்கு பின் பொதுவாக இசுலாமிய சமூகத்தின் மீது விழுந்த தீவிரவாதிகள் என்ற முத்திரையை சுமந்து கொண்டு ப்ளீ அமைப்புக்கு ஆதரவும் பொருளாதார உதவியும் வேண்டி போனபோது இசுலாமிய மக்களும் வணிகர்களும் கூட நாசரை கண்டுகொள்ளாமல் போனார்கள் என்பதுடன் அவருடன் பலர் தொடர்பை முறித்துக்கொண்டார்கள் என்பதையும் அவர் மிகுந்த வலியுடன் பதிவு செய்துள்ளார். அனுபவித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடிகிற வலி அது. நூலை வாசியுங்கள்.

15

சிறைவாசிகள் உள்ளே இருக்க அவர்களின் குடும்பங்கள் சமூகத்தால் முற்றாக ஒதுக்கப்பட்டன. வேலைகளில் இருந்து நீக்கப்பட்டார்கள். கடைகளில் பொருட்கள் மறுக்கப்பட்டது. குழந்தைகள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட்டனர். பொது சமூகம் இந்த குடும்பங்களுடன் பேசுவதை தவிர்த்தது. உச்சக்கட்டம் எதுவெனில் இந்த குடும்பங்கள், குடும்ப நடவடிக்கைகள் என அனைத்தும் 24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பில் இருந்துள்ளன. எனில் அப்துல் நாசர் இந்த குடும்பங்களை சந்திப்பதிலும் அவர்களை பேச வைப்பதிலும் எத்தனை சிரமங்களை சந்தித்து இருப்பார்? 5 பெண்கள், 1 ஆண் கொண்ட ஒரு சிறைவாசியின் குடும்பத்தில் ஒற்றை ரூபாய் வருமானதிற்கும் வழி இல்லாமல் போக 5 பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபட நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்பது ஓர் உதாரணம்.

16

அல் உம்மா தலைவர் பாஷா பாய்தான் வெடிகுண்டு திட்டத்துக்கு மூளையாக இருந்தவர். ஏதோ ஒரு கட்டத்தில் அப்துல் நாசரை உன்னையெல்லாம் கொலை செய்ய வேண்டும் என்று  ஆத்திரத்தில் திட்டி உள்ளார். கோவை சிறையில் அவரை நாசர் சந்திக்கிறார். ஒரு தவறும் செய்யாத 58 பேர் உயிர் போனதற்கு காரணமான அவரை முகத்துக்கு நேரே நாசர் கண்டனம் செய்கிறார். அந்த உரையாடல் முக்கியமான ஒன்று. "நீங்கள் செய்தது இசுலாமிய மார்க்க நெறிகளுக்கு முற்றிலும் புறம்பானது. பாதிக்கப்பட்ட மக்கள் உங்களை மன்னிக்காதவரை இறைவன் உங்களை மன்னிக்க மாட்டான்.... நீங்கள் செய்த செயலால் இப்போது ஒட்டுமொத்த இசுலாமிய மக்களையும் இசுலாமிய மார்க்கத்தையும் கூட இந்துத்துவா தீவிரவாதிகள் இழிவுபடுத்துகிறார்கள். உங்கள் நாசவேலையால் இந்துத்துவா தீவிரவாதிகளின் இந்த பிரச்சாரம் சாமானிய மக்களிடம் எடுபடுகிறது. இறந்துபோன 58 பேர் குடும்பங்களின் கண்ணீரை எதைக்கொண்டு உங்களால் ஈடுசெய்ய முடியும்?" என்று கண்டித்துள்ளார்.

வன்முறைக்கு வன்முறையோ கொலைக்கு கொலையோ எப்போதும் தீர்வு அல்ல, எல்லா மத மக்களுக்கும் இது பொருந்தும் பொது விதி என்பதை நூலில் தெளிவாக சொல்கிறார்.

17

குண்டுவெடிப்புக்கு பின் கோவையில் மீட்பு, கள உதவிகள் என மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட சென்ற அப்துல் நாசர் துஷார் காந்தியை சந்தித்த பின் முற்றிலும் வேறு ஒரு தளத்திற்கு நகர்கிறார். அது காலையில் தொடங்கி இரவில் முடிவதோ இன்று தொடங்கி நாளை முடிவதோ அல்ல. மிகுந்த உடல் உழைப்பை கோரிய ஒன்று. காவல்துறை உள்ளிட்ட பல திசைகளிலும் இருந்து தொடர்ந்து மிரட்டல்களும் முட்டுக்கட்டைகளும் இன்னல்களும் வந்துகொண்டே இருந்தாலும் நீதி எது அநீதி எது, தான் எதன் பக்கம் நிற்க வேண்டும் என்ற உயரிய ஒற்றை இலட்சிய இலக்கை நோக்கி மனம் தளராமல் பயணித்த அப்துல் நாசரும் அவரது PLEA அமைப்பும் எடுத்துக்கொண்ட பணி முன்னுதாரணம் இல்லாத ஒன்று. சிறைவாசிகளும் அவர்களின் குடும்பங்களும் 

அந்த அமைப்பால் பெற்ற பயன்கள் அளவிட முடியாதவை. அன்று கட்டமைக்கப்பட்டு இருந்த பொது சமூகத்தின் சிந்தனையை, அரசின் அதிகாரவர்க்கத்தின் சிந்தனையை செயல்பாட்டை புரிந்துகொண்டால் மட்டுமே இதை மதிப்பிட முடியும்.  

ஆர் எஸ் எஸ் என்ற அமைப்பு இந்திய சமூகத்தில் என்னென்ன வடிவங்களில் எப்படி எல்லாம் ஊடுருவி உள்ளது என்பதை இப்போதும் கூட யாராலும் திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. உலகில் எங்கே ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் ஒரு கலவரம் நிகழ்ந்தாலும் அமெரிக்காவை சந்தேகப்பட வேண்டும் என்பது சமூக பொருளாதார அரசியல் கற்றவர்கள் அறிந்த பாடம். இந்தியாவில் ஆர் எஸ் எஸ் அமைப்பை சந்தேகப்பட வேண்டும் என்பதும் அரசியல் பாடமே.

"சங் பரிவாரின் சோதனைச்சாலை குஜராத்"  என்ற கூற்று உண்மையில்லை.  கோவைதான் சோதனைச்சாலை, அந்த அனுபவத்தை செயல்படுத்திய தளம்தான் குஜராத், அதன் பின் பல மாநிலங்கள். இந்த நூல் அந்த முடிவுக்கு என்னை வர செய்தது.

2017, 2021 என இரண்டு பதிப்புகள் கண்ட நூல் இது. அ மார்க்ஸ், பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் வழங்கியுள்ள உரைகள் மிகுந்த கனமானவை, பல வரலாற்று குறிப்புகளை அடக்கியவை. பாதுகாக்கப்பட வேண்டியவை.

எழுத்து வடிவில் ஆவணமாக்கியவர் பழனி ஷஹான். யாரும் எளிதில் புரிந்துகொள்ளத்தக்க எழுத்தாக்கம் பாராட்டத்தக்கது.

வரலாற்றில் உண்மை நிலைத்து நிற்க வேண்டும் என்பது நம் விருப்பமாக இருக்கலாம், ஆனால் உண்மையை உரத்து சொல்லவும் எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கவும் ஆன கடமையை நாம் தொய்வின்றி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்பதை எதிரி எப்போதும் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறான். அந்த பாதையில் நம் கையில் இந்த நூல் வலிமைமிக்க கூரான ஆயுதம்.


இரண்டாம் பதிப்பு வெளியீடு பாரதி புத்தகாலயம்

9443066449

- மு இக்பால் அகமது

21.12.2023

சனி, அக்டோபர் 21, 2023

ஆகாத தீதார்: சிறுகதைகள் நூல் மதிப்புரை

இறுதி மூச்சு அடங்கும் முன் கணவன் தனக்கு இன்னொருத்தியும் இருக்கிறாள் என்ற உண்மையை சொல்கிறான். மௌத்திற்கு பிறகு நியாயப்படி தனது சம்பாத்தியத்தின் பகுதியை அவளுக்கு கொடுத்து விடும்படி கூறிவிட்டு ஜனாஸா ஆகி விடுகிறார். அவர் இதுநாள் வரை மனதில் சுமந்த பாரத்தை சொகாராவின் இதயத்துக்கு மாற்றுகிறார். 

இரண்டாம் தாரம் ஆனவள் ஜமாஅத்தில் முறையிட்டு தனக்கான பொருளாதார உதவியை அல்லது உரிமையை கேட்க, தான் மட்டுமே அறிந்ததை சாதகமாக எடுத்துக்கொண்டு சொகாரா கொடும் சொற்களால் சொத்தை அபகரிக்க வேஷம் போடுவதாக அவளை கூட்டத்தின் நடுவே அவமானப்படுத்த அவள் கூசி ஒடுங்கி அங்கிருந்து சென்று விடுகிறாள். 

தன்னை வருடக்கணக்கில் ஏமாற்றிக்கொண்டு இருந்த கணவன் மீதான கோபமும் தன் கணவனை எவளோ ஒருத்தி பங்கு போட்டுக்கொண்ட கோபமும் ஒருசேர இந்த ஆத்திரத்துக்கு பலியானதோ அவளைப்போலவே ஒரு பெண்தான். இப்போது சொத்து முழுவதும் அவளுக்கே. 

இதே காட்சி மீண்டும் அரங்கேறுகிறது. பாத்திரங்கள் வேறு. அதே சொகாரா தன் இறுதி மூச்சு அடங்கும்முன் மகன் சமீரை அழைத்து ஏதோ சொன்னது சமீரோடு போகிறது. ம்மா சொன்னது அவனோடு புதைகிறது. 

இரண்டு பேர் அறிந்த செய்திதான் ரகசியம். உண்மை என்னவென்றால் ஏழு வயது சமீர் அன்றைக்கு இருட்டுக்கு பயந்து கதவு அருகே நின்றுகொண்டு இருக்க, அவன் இருப்பதை அறியாத அவனது அத்தா தனது இரண்டாம் தார உண்மையை உடைத்தபோது சமீரும் கேட்டுவிடுகிறான். மூன்றாம் நபர் அறிந்த பின் அது ரகசியம் இல்லையே! இப்போதும் சொகாரா சமீருக்கு சொன்னது என்னவென்று நமக்கு தெரியாது, மூன்றாம் நபர் யாரும் அங்கே இருந்தால் அன்றி நாம் அறிந்துகொள்ள வாய்ப்பு இல்லை. 

மனித மனங்களின் அழுக்குகளும் தர்ம நியாயங்களும் கேள்விக்கு உள்ளாகின்றன. மறுமையின் கூரான கத்தி போன்ற கேள்விகளும் விளைவாக விதிக்கப்பட உள்ள நரக வாழ்வும் இம்மையின் சுகபோகங்களுக்காக அறிந்தே ஒத்திவைக்கப்படுகின்றன.

(கைப்பற்றப்பட்ட வசியத்)

... ...

இறந்த கணவனின் முகத்தை அவனது ஜனாஸா அங்கிருந்து தூக்கிச்செல்லப்படும் வரையிலாவது பார்த்துக்கொண்டு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பையும் மனைவிக்கு மறுத்து தனி ஒரு அறையில் அடைக்கப்படும் கொடும் வழக்கத்தை யார் புகுத்தி இருப்பார்கள்? இஸ்லாமியபெண்ணின்  இந்த உள்ளக்குமுறலை ஆமினா பேசுகிறார். மரண வீட்டில் மனைவியின் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை என்கிறார். ஆண் எத்தனை அயோக்கியன் ஆனாலும் அவன் வாயை அடைக்க முடியாது. ஆனால் பெண்களின் ஒரே ஒரு தவறும் போதும், காலமெல்லாம் அவள் வாயை அடைக்க.

(ஆகாத தீதார்)

... ...

வெளிநாட்டில் இருந்து திரும்பி வருவோரிடம் இரண்டு பட்டியல் உள்ளது, கோடாலித்தைலம், கைலி, தாவணி அன்பளிப்பு க்கு ஒன்று; இடைப்பட்ட காலத்தில் மரணித்தவர்களின் வீடுகளுக்கு சென்று துக்கம் விசாரிப்பது இன்னொரு பட்டியல். (இருட்சிறை)

"காலைல எம்புள்ளைக அசந்து தூங்கிட்டு இருக்குங்க! எங்கத்தா வந்து பேன அமத்திட்டு போவாங்க... என் ஈரக்குலை..." என்று தன்னை பார்க்க வந்த பள்ளித்தோழி பௌசியாவிடம்  கரைந்து புலம்புகிறாள் பஷீரா. "அவன் இருந்தவரை அந்த வாழ்க்கை நரகம்னு நெனச்சிட்டு இருந்தேன். கூடாட்டம் இருந்தாலும் அந்த வீடு எனக்குன்னு இருந்துச்சு.இங்கின ஒருவா கஞ்சி தொண்டைல இறக்க கூட நெஞ்செல்லாம் எனக்கு அழுத்துது". 

நல்ல கணவன் கிடைப்பதுதான் வாழ்வின் ஒற்றை இலக்கு என்று பெண்களுக்கு விதிக்கப்பட்ட விதியை மாற்றி வாசிக்க சொல்கிறார் ஆமினா. கணவனை இழந்த பெண்ணுக்கு நல்ல தகப்பனும் தாயும் கூட வேண்டும்! இவை கிடைக்கப்பெறாத பெண்கள் வாழ தகுதியற்றவர்கள். உலகம் அவர்களுக்கு இல்லை.

தாய் தகப்பன் அண்ணன்மார், பின் கணவன் மாமனார் மாமியார், பின் மகன்கள் என்று யார் கையையாவது எதிர்பார்த்துக்கொண்டே நாளை, வாழ்க்கையை அல்ல, தள்ள பெண் ஜென்மத்துக்கு விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கூடத்தின் புதிய பரிமாணம் என்ற ஒன்றை இந்த கதையில் சொல்கிறார். ஆசுவாசப்படுத்தும் ஆறுதல் மையங்கள் என்றும் இயந்திரத்துக்கு பதிலாக பெண்களை பயன்படுத்தி கொண்ட காலகட்டங்களில் ஓய்வெடுக்கும் சொற்ப பருவத்தை பள்ளிக்கூடம் அன்பளித்துக்கொண்டு இருப்பதாகவும் சொல்வது முற்றிலும் உண்மை. படிப்பு, படிப்பு சார்ந்த எதிர்காலம் எல்லாம் கனவுகளுக்கு அப்பாற்பட்டவை, நிகழ்காலம் மட்டுமே நிதர்சனம்.

கற்ற கல்வியும் வெளிநாட்டு வாழ்க்கையும் பௌசியாவின் கண்களை அகலப்படுத்தி இருந்தன என்றும் அவர் சொல்வது எத்தனை இசுலாமிய பெண்களுக்கு அதை அவர்கள் குடும்பத்தினர் சாத்தியப்படுத்தி உள்ளனர் என்ற கேள்வியை முன்வைப்பதன்றி வேறில்லை.

(இருட்சிறை)

... ...

15, 16 வயது பள்ளிக்கூட பெண்ணுக்கு, ஹாஜிரா, அவசரத்திருமணம் செய்து வைக்கிறார்கள். மலேயாவில் அஹமது தன் குடும்பத்து ரொட்டிக்கடையில் கடுமையாக உழைக்கிறான். திருமணம் ஆன கையோடு மலேயா செல்ல மாமியார், மாமனார், நாத்தனார் கொடுமையில் இங்கே கிடந்து சிறுமி அல்லாடுகிறாள். பஞ்சாயத்து வைத்து அவளை தாய் தகப்பன் தம்முடன் அழைத்து செல்கிறார்கள். மாதாமாதம் அவன் செலவுக்கு பணம் அனுப்ப வேண்டும். கணவனுக்கும் அவளுக்கும் இடையே ஆன உரையாடல்கள் இதனை மையமாக வைத்தே  வளர கசந்து போகிறது உறவு.

விடுமுறையில் வந்த இடத்தில் அஹமது விபத்தில் செத்து போகிறான். அதற்கு முன் அவனுக்கும் அவளுக்கும் நடந்த உரையாடல் " உன்னை அத்து விட போறேன்" என்று அவன் சொல்வதுடன் முடிகிறது. 

அடக்கம் செய்யப்படும்வரை அவளுக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும் அங்கே ஒரு காப்பித்தண்ணி வச்சு தரக்கூட யாருமில்லை. அஹமதுவின் மரணம் மரத்துப்போய் வயிற்றுப்பசி அவளை ஆக்கிரமித்து கொள்கிறது. இறப்பு வீட்டின் கூட்டம் எப்போது கலையும், நிம்மதியாக மூச்சு விடலாம், ஒரு வாய் காப்பி குடிக்கலாம் என்று எதிர்பார்த்து கிடக்கிறாள். எப்போது கலையும்? அஹமதுவின் ஜனாஸா தூக்கப்பட்டால்தான் கலையும்! 

ஹாஜிராவுக்காக ஊர்ப்பஞ்சாயத்தை கூட்டிய அம்மாவும் அத்தாவும் இப்போது அவளை புருஷன் வீட்டிலேயே விட்டுவிட்டு அவசரமாக வெளியேறுகிறார்கள். பயனில்லாத பெண்ணாக திரிந்துபோனாள் ஹாஜிரா. கைகழுவுகிறார்கள்.

(பொம்மக்குட்டி)

... ...

அக்காலத்திய ஆண்கள் போல் கையில் எசவாக கிடைத்த, அடிப்பதற்கும் மிதிப்பத ற்கும் ஆன பிண்டம் என மனைவியை நினைக்கும் சராசரி ஆண்தான் அப்துல். மனைவிக்கு போக்கிடம் இல்லை என தெரிந்தால் இந்த ஆண்கள் தம் மொத்த அகோரத்தையும் இறக்கி வைத்து விடுகிறார்கள்.

... இணை வைத்து பேசாத ஆண்கள் அந்த ஊரில் இல்லை. பாரிஸாவுக்கு வாய்த்த கணவனும் அப்படியே. பிற ஆண்களுடன் மட்டுமின்றி பெற்ற தகப்பன், சகோதரனுடனும் சேர்த்து பேசி அசிங்கப்படுத்துகிறான். 

கணவன் இறந்து விடுகிறான். பாரிஸா அழவில்லை. அவள் கணவன் கபருக்கு போனபின்னும். கண்ணீர் வெறும் நீரில்லை, அது மன்னிப்புக்கான மொழி. பாரிஸா அழவில்லை.

(இன்ஸ்டன்ட் புனிதம்)

... ...

வெறும் புகைப்படத்தில் தொடங்கும் கதை இறுதியில் வாசிப்பவனுக்கு ஒரு கேள்வியை வைத்து விசாரணை செய்வதில் முடிகிறது. "தீங்கிழைத்த நிலையில் யாருடைய புகைப்பட ஆல்பத்திலாவது நீங்கள் இடம் பெற்று இருக்கிறீர்களா?". ஆண் சமூகத்தை நோக்கி வீசப்பட்ட மிக கூர்மையான கட்டாரி. வாசிப்பவனின் கழுத்து அறுபடுகிறது.

(புகைப்படம்)

... ...

தனது மரணமே இறுதி மரணமாக இருக்க வேண்டும் என்பது அதாவது மற்றவர்கள் அனைவரும் கபருக்கு போன பின், அச்சத்தினின்றும் எழுவது. எதன்பொருட்டு அச்சம்? மரணம் நேர்ந்தபின் என்ன நடக்கும் என்பது தெரிந்தால் என்ன தெரியாமலேயே போனால் என்ன? அப்படியல்ல, இன்னும் வாழ வேண்டும் என்ற பேராசையில் இருந்து எழுவது இது. கொரோனாவில் மரணமுற்ற மனிதனை அடக்கம் செய்யும் நிகழ்வை ஒட்டி மனிதர்கள் இடையே நிகழும் உரையாடல் சில அப்பட்டமான உண்மைகளை முகத்தில் அறைகிறது.

(ஊர்வாய்)

... ...

எக்குத்தப்பான சாபம். ஆபிதாவின் சாபத்துக்கு ஆளான நிஜாம்தான் ஆபிதா கிழவியை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினான். கணவன் சம்சுதீன் மிகுந்த மனஉறுதி கொண்டவர். உம்ரா செல்ல ஆயத்தமானபோதே ஒருவேளை  தான் உம்ராவில் இருக்கும்போது ஆபிதா மௌத் ஆனால் என்னென்ன செய்ய வேண்டும், எப்படி சமையல் செய்ய வேண்டும் என்ற அளவுக்கு திட்டம்போட்டு கொடுக்கும் அளவுக்கு மனஉறுதி கொண்டவர். ஊருக்குள் அவருக்கு அப்படி ஒரு மரியாதை. 

ஆபிதா அநேகமாக இறந்து விட்டாள் என்ற நிலையிலும் கூட டாக்டர் வந்து உறுதிசெய்யும் வரை காத்திருக்கிறார். இறப்பு உறுதியான பின் நிலைகுலைந்து பெருங்குரல் எடுத்து அழுகிறார். ஊரே அதிர்ச்சி அடைகிறது. அது சம்சுதீனின் அழுகை அல்ல. தனிமை வாழ்க்கைக்கு அடி எடுத்து வைக்கும் ஓர் ஆணின் அழுகை. காலம் நெடுகிலும் பெண்ணை அதிகாரம் செய்து ஆனால் அவள் உழைப்பில் அண்டி வாழ்ந்து வந்த ஆண் ஆதிக்க வர்க்கத்தின் இயலாமையின் குரல் அது. தானே போட்டுகொண்ட ஆண் என்னும் கண்ணாடி கவசம் பரிதாபமாக உடைப்படும் நேரம் இது. கணவனை, மகனை, தகப்பனை, மருமகனை இழந்துவிடும் பெண்கள் அழுது ஓய்ந்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விடுகிறார்கள். சம்சுதீன்களுக்கு அந்த புள்ளியில் இருந்து அடுத்து தெரிவதோ வெற்றிடம்தான்.

(ரேகை போல் வாழ்க்கை).

.... ...

13 சிறுகதைகள் கொண்ட நூல் இது. இழவு வீடுகளில் இறந்தவர்களை மையமாக வைத்து நடக்கும் நிகழ்வுகள், உரையாடல்களை கொண்டு கதைகள் நகர்கின்றன. இஸ்லாமிய பெண்களின் இடத்தில் இருந்து சொல்லப்பட்ட கதைகள். எனவே இஸ்லாமிய குடும்ப கலாச்சாரம், உறவுகள், உரையாடல்கள் என வரையப்பட்டு இருந்தாலும் தமிழக மண்ணின் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறையையும் காலங்காலமாக அருகில் இருந்தும் கலந்தும் வாழ்ந்தும் பார்த்தும் வாழும் பிற சமூக மக்கள் புரிந்துகொள்வதில் பெரிய சிக்கல் எதுவும் இல்லை.

இசுலாமிய சமூக பெண்கள் சந்திக்கும் குடும்ப அல்லது சமூக சிக்கல்கள், பிரச்னைகளை இக்கதைகள் பேசுவதாக குறுக்கியும் பார்க்க முடியாது. பல நூறு ஆண்டுகளாக ஆணாதிக்க சமூகத்தின் கீழ், ஆண்களின் பெருவிரல் நசிவின் கீழ் உழன்று கிடக்கும் பெண் சமூகத்தின் குரலை முன் வைக்கும் இக்கதைகள் ஆண்களை நோக்கி கேள்விகளை வீசுகின்றன. மட்டுமின்றி நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்ட பெண்கள் தமக்குள் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செய்ய முற்படுவதன் நுட்பமான உளவியலையும் புரிந்துகொள்ள முயன்றால் அதன் தொடக்கப்புள்ளியும் ஆண்களிடத்தில் இருந்துதான் என்பதையும் இவை வெறும் தனிநபர் சார்ந்த பிரச்னைகள் அல்ல என்பதையும் உணர முடியும். இந்த புரிதலுக்கு நீண்ட பயிற்சியும் குடும்பம் சொத்து உறவுகள் குறித்த புரிதலும் வேண்டும்.

இஸ்லாமிய சமூகத்தில் ரொம்ப படிச்சவ, காலேஜ் படிச்சவள ஆம்பிளைகள் கட்டிக்க வருவதில்லை என்ற பெண்களின் உரையாடல் தொடர்ந்து வருகிறது. இது இன்றளவும் உண்மை. படித்த பெண் கேள்வி கேட்பாள், கேள்வி கேட்கும் பெண் தமக்கு தேவையில்லை என்ற ஆம்பிளை ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு இது. ஆனால் கதைகளில் வரும் பெண் மாந்தர்களின் பாடுகளை வாசிக்கும் எவரும் பெண் கல்வியின் அவசியத்தை மறுத்து விட முடியாதபடிக்கே அவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

மரண வீட்டின் துக்கம் மூன்று நாளைக்கே, அதன் பின் அன்றாட வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பது இசுலாமிய நெறி. மாண்டார் மீள்வதில்லை, இருப்போர் வாழ்வை தொடர்க, அதுவே இயற்கை என்ற யதார்த்த நியதியில் இருந்து சொல்லப்பட்ட நெறி இது. 

இந்த கதைகள் மாண்டோருக்கும் இருப்போருக்கும் ஆன இடைப்பட்ட முற்றுப்பெற்ற உறவுகளை சொல்லவில்லை, வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் வைக்கும் கேள்விகள் நீண்ட நாட்களுக்கு நம்மை தொந்தரவு செய்பவை. ஆமினா முஹம்மத் இங்கே வெற்றி பெறுகிறார். இன்னும் நிறைய எழுதுவார்.

21.10.2023

...

ஆகாத தீதார், ஆமினா முஹம்மத்

Galaxy Booksellers and Publishers, மேலூர், மதுரை


மத்திய கிழக்கு பாலஸ்தீன அமெரிக்க அரசியலும் இந்திய இஸ்லாமிய சமூகம் எடுக்க வேண்டிய நிலைப்பாடும்

இன்று நேற்றல்ல, கடந்த பல பத்து வருடங்களாகவே மத்திய கிழக்கு அரபு பிராந்திய அரசியல் ஆனது அமெரிக்க சார்பு அல்லது எதிர்ப்பு அரசியல் என்ற மையமான புள்ளியில் அங்குள்ள அரபு நாடுகளை இரண்டு முகாம்களாக பிரித்து வைத்துள்ளது. இஸ்லாம் என்ற ஒற்றை மார்க்கம் இந்த நாடுகளை இயற்கையாகவே இணைத்து ஒரு சரடாக  மாற்றி இருக்க வேண்டும். மாறாக அமெரிக்காவின் சுயநல கார்பொரெட் அரசியல், குறிப்பாக பெட்ரோலிய அரசியல் மிக தந்திரமாக இந்நாடுகளை பிரித்து வைத்துள்ளது. இதன்றி இசுலாமிய மதத்துக்கு உள்ளேயே இருக்கின்ற இன அல்லது குழு அரசியலும் இந்த நாடுகள் தங்களுக்குள் மோதிக்கொள்ளவும் வகை செய்தன.

அரபு பிராந்தியத்தில் பெட்ரோலிய வளம் மிக்க நாடுகளோ தத்தம் நாடுகளுக்கு பங்கம் வராமல் இருந்தால் போதும், ஈரான், ஈராக், லிபியா, பாலஸ்தீனம் அழிந்தால் நமக்கென்ன என்று சுயநல அரசியல் நடத்திக்கொண்டு இருக்கின்றன. மிக முக்கியமான காரணம், அங்கெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுகள் இல்லை, பாரம்பரிய மன்னர் ஆட்சி அதாவது சர்வாதிகார ஆட்சிகள் நடக்கின்றன. தலைதூக்கிய ஓரிரண்டு ஜனநாயக, இடதுசாரி இயக்கங்கள் நசுக்கப்பட்டன. அவ்வாறான குரல்கள் உடனடியாக நசுக்கப்படும்.

வெட்கம்கெட்ட அரபு நாடுகள் இப்போதாவது தம் மவுனத்தை கலைக்க வேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக அணி திரள வேண்டும். அமெரிக்க அரசியலும் இஸ்ரேலும் சேர்ந்து ஒட்டுமொத்த அரபு பிராந்தியத்தையும் அபகரிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. மூன்றாவது உலகப்போர் உருவாகும் எனில் முழுமுதற்காரணம் இஸ்ரேலின் ரவுடித்தனமும் அமெரிக்காவின் ஆதரவும் மட்டுமே. பிரிந்து கிடந்ததன் பலன்தானே இராக்கும் லிபியாவும் அழிந்தது?

இங்கே இந்திய இஸ்லாமிய சமூகத்தின் மனநிலை அல்லது செயற்பாட்டை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. இஸ் ரேலையும் அமெரிக்காவையும் கடுமையாக விமர்சனம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூகம் வெட்கங்கெட்ட சக அரபு நாடுகளை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? 

அடக்குமுறையின் எந்த ஒரு வடிவத்துக்கும், எந்த ஒரு சமூகம் நசுக்கப்பட்டாலும் வெறும் பிரார்த்தனைகள் பலன் தராது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அது அரசு பயங்கரவாதமாக இருந்தாலும் திட்டமிட்ட இயக்கங்களின் தாக்குதலாக இருந்தாலும் அப்படித்தான். தம் மீதான தாக்குதலை எதிர்ப்பதாக கருதி வீட்டுக்குள்ளும் வழிபாட்டு தலங்களுக்குள்ளும் புலம்பி, ஆவேசப்படுவதும் மணிக்கணக்கில் உரை ஆற்றுவதும் ஒரு பலனையும் தராது. எதிரி மிக மோசமான ஆயுதங்களுடன் வீதியில் இறங்கி அழித்துக்கொண்டு இருக்கும்போது பிரார்த்தனைகளால் என்ன பயன்?

...

அமெரிக்காவின் சுயநல சர்வதேச கார்ப்பரேட் அரசியலும் மத்திய கிழக்கின் பெட்ரோலிய அரசியலும் பாலஸ்தீன காஸா அரசியலின் மையமாக இருப்பதை இந்திய இஸ்லாமிய சமூகம் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். 1908இல் ஈரானில் பெட்ரோல் வளம் கண்டறியப்படும் முன் மத்திய கிழக்கின் அரசியல் மதம், இனம் ஆகியவற்றை மையமாக கொண்டு இருந்தது உண்மைதான். 1908க்கு பின் மத்திய கிழக்கின் அரசியல் வெறும் மத இன அரசியல் மட்டுமே அல்ல. பெட்ரோலிய வளம் கண்டறியப்பட்ட பின் , 1908க்கு முன்பான தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி பெறாத கூட்டு சமூக வாழ்க்கை என்ற அரபு சமூகத்தின் முகம் 1908க்கு பின் முற்றாக மாறியது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தன் மண்ணில் எடுக்கப்பட்ட பெட்ரோலுக்கு விலை நிர்ணயம் செய்த ஈரான் மன்னரை அமெரிக்கா படுகொலை செய்த நாளில் இருந்துதான் நவீன கால அரபு பிராந்திய அரசியலை பார்க்க வேண்டும். அதன் பிற்கால தொடர்ச்சிதான் மும்மர் கடாபியும் சதாம் உசேனும்.

ஆண்டான் அடிமை, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் கண்டுபிடிப்பான மதம், பின்னர் அந்த அமைப்பை தக்க வைப்பதற்கு ஆன ஒரு கருவியாக இருந்தது மட்டுமின்றி அத்தகைய சமூக அமைப்போடு சேர்ந்து இணையாக வளர்ந்து தன்னை தக்க வைத்துக்கொண்டும் இருந்தது. இது அரபு நாடுகளுக்கும் பொருந்தும். 1908க்கு பின் ஆன அரபு சமூகத்தை பண்டைய நிலப்பிரபுத்துவம் சார்ந்த ஒட்டகம் மேய்க்கும் விவசாய சமூகம் என்று எளிதாக யாரும் கடந்து போக முடியாது என்பதற்கான ஒரே காரணம் பெட்ரோலிய வளம் கண்டறியப்பட்ட பின் எழுந்த பொருளாதார பேரெழுச்சியும் அதனை தொடர்ந்த சர்வதேச அரசியலும் சர்வதேச அரசியலில் பெட்ரோலியம் வகுத்த அதாவது அரபு நாடுகள் வகுத்த பங்கு பாத்திரமும் ஆகும். OPECக்கின் தோற்றம் சர்வதேச அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியதை யாரும் மறுக்க முடியாது.

இந்த அரசியலை புரிந்துகொள்ள மறுக்கும் அல்லது தவறும் அல்லது புரிந்தும் எடுத்து சொல்ல முன்வராத எந்த ஒரு இயக்கமும் தன் பின்னால் திரளும் மக்களை ஏமாற்றுவது அன்றி வேறில்லை. இந்த மையமான அரசியலை இந்திய இஸ்லாமிய சமூகத்துக்கு எடுத்துச்சொல்லாத எந்த ஒரு மத அடையாளம் சார்ந்த அமைப்பும் வெறும் அடையாள அரசியல் நடத்தும் அமைப்பாகவே இருக்க முடியும். அவர்கள் தம் பின்னால் திரளும் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். 

இந்திய பிரதமரும் இந்திய அரசும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய நாடுகளும் பகிரங்கமாக இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்தபின் இந்திய இஸ்லாமிய சமூகம் வெளிப்படையாக வீதிக்கு வந்தே ஆக வேண்டும். பாலஸ்தீன, காஸா மக்களுக்கு ஆதரவாக வீதிகளில் இயக்கம் நடத்தும் இடதுசாரி ஜனநாயக இயக்கங்களுடன் இந்திய இஸ்லாமிய சமூகம் கைகோர்க்க வேண்டும். காலத்தின் கட்டாயம் இது.

19.10.2023

மேல்மருவத்தூர் மடம் செய்த ஆன்மிக 'புரட்சி'

பார்ப்பனீய மடங்கள் ஆனாலும் இடைசாதி மடங்கள் ஆனாலும் உழைக்கும் மக்களை யதார்த்தமான வாழ்க்கை பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவும் போராடும் ஜனநாயக சக்திகளை நோக்கி அவர்கள் செல்லாமல் தடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும் நிறுவனங்களே. மக்களை ஏமாற்றி பணம் சுருட்டுவது பிரதான தொழில் என்றாலும்.

சங்கர மடங்கள் மேல்சாதி சிறுபான்மை பிராமணர்களுக்கு எனில் இடைசாதி மடங்கள் ஆகப்பெரும்பான்மை பிராமணர்கள் அல்லாத மக்கள் பிரிவினரை தம் பக்கம் இழுத்தன என்பதுதான் நுட்பமான அபாயம். 1980களுக்கு பிறகு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த ஆசிரியர் சிறிய அளவில் சாமியார் தொழிலை தொடங்குகிறார். பெரியார், அண்ணா பிறந்த மண்ணில்தான் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் பேராதரவுடன் அவர் தம் தொழிலை விரிவாக்குகிறார். அமைச்சர் பெருமக்கள், டெல்லி அதிகார மட்டம், ஒரு கட்டத்தில் மோ டி என மேல்மருவத்தூரில் வந்து குவிய உள்ளூர் ஆட்சி நிர்வாகமும் போலீஸ் நிர்வாகமும் அடங்கி போவதுடன் மடத்துக்கு சேவகம் செய்யும் துறைகள் ஆகின. இயற்கையாகவே அவர் ஒரு அரசியல்வாதிகளின் கருப்புபண பினாமி ஆகிறார்.

பல சதுர கி மீ பரப்பளவு நிலங்கள் உள்ளூர் மக்களிடம் இருந்து அடித்து பிடுங்கப்பட்டன. அவர் அனுமதி இன்றி நிலம் விற்க வாங்க முடியாது என்ற நிலை புகுத்தப்பட்டது. எல்லாகார்ப்பரேட் மடங்களும் போலவே இங்கும் கல்வி மருத்துவம் என்ற சேவை முகமூடி தேவைப்பட ஏற்கனவே அரசு நிர்வாகத்தில் பலமாக செல்வாக்கை நிலைநிறுத்திய பங்காரு அதையும் செய்தார். தன் மனைவியை உள்ளூராட்சி தலைவர் ஆக கொண்டுவந்தார். அதாவது கணவர் சாமியார் மனைவி உள்ளூர் நிர்வாக தலைவர். ஆஹா! அவரது ஒரு மகனுக்கு த நா அரசின் மிக உயர்ந்த போலீஸ் அதிகாரியின் வீட்டில் பெண் எடுத்தார்கள்.

அவர் மீது கொலை குற்றச்சாட்டுகள் உள்ளன. மருத்துவ கல்லூரி விடுதியில் தண்ணீர் வராததால் குரல் கொடுத்த மாணவன் அடித்து நொறுக்கப்பட்ட நிகழ்வும் தொடர்ந்து நடந்த கலவரத்தில் மேல்மருவத்தூர் ரயில் நிலையம் சூறையாடப்பட்டதும் வரலாறு. நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக மாணவர்கள் அல்லது மாணவர்கள் அமைப்பு எதுவும் குரல் எழுப்பிட முடியாது, எழுப்பினால் நிர்வாகத்தின் ரவுடிகள் சிறப்பாக கவனிப்பார்கள்.

பல்மருத்துவகல்லூரி தொடங்கி அனுமதி பெற பல லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்தது அம்பலமாகி நிர்வாகத்தின் மூன்று பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேல்மருவத்தூர் மக்கள் சமூகத்திலும் உள்ளூர் அரசியலிலும் தேர்தல்களிலும் ஜனநாயக இடதுசாரி இயக்கங்களின் செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது, உள்ளூர் மக்கள் பிரச்னைகளுக்கு திராவிட கட்சிகளும் சரி இடதுசாரி இயக்கங்களும் சரி எந்த அளவுக்கு குரல் எழுப்ப முடிகிறது, கடந்த 30, 35 வருடங்களில் உள்ளூர் மக்களுக்காக நடத்தப்பட்ட போராட்ட இயக்கங்கள் என்னென்ன, என்னென்ன வடிவங்களில் நடத்தப்பட்டன என்ற வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் மட்டுமே மேல்மருவத்தூர் என்ற தமிழ்நாட்டின் பகுதியில் உள்ளூர் அரசியல் இயக்கங்களின் பங்கு வளர்ந்துள்ளதா தேய்ந்து உள்ளதா என்பதை புரிந்துகொள்ள முடியும். தேய்ந்து இருந்தால் அதற்கான காரணம் வெட்ட வெளிச்சம்தான். இந்த லட்சணத்தில் பெண் உரிமை கோவில் நுழைவு என்று ஒரே கூச்சலாக உள்ளது. என்ன கோவில்? என்ன நுழைவு? ஜனநாயக இடதுசாரி இயக்கங்களின்பால் திரள வேண்டிய ஆண்களையும்

பெண் சமூகத்தையும் ஒரு சேர பங்காரு அடிகளார் ஹைஜாக் செய்யவில்லையா? இதில் பெண் உரிமை எங்கே வந்தது?

... ...

பார்ப்பனீய மடங்களுக்குள் பெண்களுக்கு அனுமதி மறுப்பதும் இடைசாதி பினாமி மடங்களிலும் பீடங்களிலும் பெண்களுக்கு அனுமதி அளிப்பதும் இரண்டுமே ஜனநாயக விரோத சக்திகளுக்கு உவப்பானவைதான். ஒன்றில் மறுப்பதை இன்னொன்றில் balance செய்வது, இதில் நமக்கென்ன உள்ளது உவப்பு அடைய? இரண்டையும் தாண்டிய பங்காருவின் ஜுனியர் ஜக்கியின் வழிபாட்டில் ஜீன்ஸ், டிரம்ஸ், ட்ரம்பெட், கும்பல் கும்பலாக வெளிநாட்டு ஸ்டைல் டான்ஸ், வண்ண விளக்குகள் என்று வேறு ஒரு வடிவத்தில் உள்ளதே, மேல்மருவத்தூரை விடவும் அங்கே பெண்ணுரிமை ஜாஸ்தி என்று மார்க் போடலாமா? 

உண்மையில் ஜக்கி, நித்யானந்தா, பிரேமானந்தா எல்லோருக்கும் பங்காருதான் வழிகாட்டி. எல்லோரும் அவரை தொடர்ந்து வந்தவர்கள். கர்நாடகாவில் இருந்து ஜக்கி இங்கே யாரை முன்னுதாரணமாக கொண்டு வந்தான்? பல நூறு ஏக்கர் அரசு வனங்களை அவன் வளைத்துப்போட்டு டெல்லியின் அரசியலை நடத்துகிறான் எனில் பங்காருதான் முன்னோடி. பெண்கள், சொத்து என்று கொட்டம் அடித்து இப்போது நாட்டை விட்டு ஓட அனுமதிக்கப்பட்ட நித்யானந்தாவுக்கும் ஜக்கிக்கும் பங்காருவுக்கும் அரசு நிர்வாகத்தின் பரிபூரண ஆசீர்வாதம் உண்டு. 

வளர்ச்சியாக வார வழிபாட்டு மன்றம் என்ற ஒரு அமைப்பு. நூற்றுக்கணக்கான மக்கள் திரளை பார்க்க முடிகிறது. இது பார்ப்பனர் அல்லாத உழைக்கும் மக்கள் கூட்டம். இந்த கூட்டம் இயல்பாக யாரை நோக்கி வந்திருக்க வேண்டும்? பார்ப்பனீய இந்துத்துவா அமைப்பான ஆர் எஸ் எஸ் காலப்போக்கில் பார்ப்பனர் அல்லாத மக்களை திட்டமிட்டு தன் வட்டத்துக்குள் கொண்டு வந்தது எனில் பங்காரு, ஜக்கி போன்றோரின் வழிபாட்டு அல்லது அபிமானிகள் அமைப்புகளும் அதே வேலையைத்தான் செய்கின்றன. சுருக்கமாக இந்த அமைப்புக்கள் ஒன்றுக்கொன்று complementary ஆனவை. அதாவது எப்படி ஆனாலும் உழைக்கும் மக்கள் ஆண் பெண் வேறுபாடு இன்றி இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின் பின்னால் திரண்டு விட கூடாது என்பதில் கவனமாக உள்ளன. உழைக்கும் மக்களின் எதிரிகளான அரசு அமைப்புக்கும் அரசு எந்திரத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் இப்படியான ஆன்மீக முகமுடி பேர்வழிகளும் அமைப்புகளும் தேவைப்படுகிறார்கள், இந்த அமைப்புகள் சிதைந்து விடாமல் கவனமாக இருப்பார்கள். வனநிலத்தை ஜக்கி ஆக்கிரமிக்கவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்ததை மறந்து தள்ளிவிட்டு போக முடியாது.

வள்ளலார், வைகுண்டசாமி வரிசையில் திருடர்களை சேர்க்க முயற்சி செய்ய வேண்டுமா? அந்த வேலையை பார்ப்பனீய கும்பல் முயற்சி செய்து பார்க்கும், நம் வேலை அது அல்ல.

20.10.2023

திங்கள், அக்டோபர் 16, 2023

மத வடிவத்தில் ஒரு வர்க்கப்போராட்டம்

 
மத வடிவத்தில் ஒரு வர்க்கப்போராட்டம்

- எஸ் வி ராஜதுரை

வரலற்றில் வர்க்க போராட்டங்கள் மதவடிவங்களிலும் வெளிப்படுவதை மார்க்சியம் எடுத்துக்காட்டியிருக்குறது. இதற்குப் பலரும் அறிந்துள்ள எடுத்துக்காட்டு, 'ஜெர்மனியில் உழவர் போர் என்னும் நூல். இதில் எங்கெல்ஸ், தாமஸ் முன்ஸர் என்பவரின் தலைமையில் நடந்த ஏழை உழவர்களின் போராட்டத்தில் விவிலியமும் கிறிஸ்தவக் கருத்துக்களும் எவ்வாறு ஒடுக்குவோருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன என்பதை விளக்குகிறார். தென்னிந்தியாவில் சமணபெளத்த மதங்களுக்கு எதிராக பக்திமார்க்கம் என அழைக்கப்படும் சைவமும் வைணவமும் நடத்திய போரட்டங்களும்கூட வணிக வர்க்கத்திற்கு எதிராக சாதிய நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் நடத்திய போராட்டங்களே எனச் சில மார்க்சிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

'மாப்பிள்ளைமார்' அல்லது 'மாப்ளாக்கள்' என அழைக்கப்படும் மலையாள முஸ்லிம்கள் 1921-22ஆம் ஆண்டுகளில் நடத்திய கிளர்ச்சியும் கூட வர்க்கப்போராட்டத்தின் வடிவமே என்பதை பிரிட்டிஷ் வரலாற்றறிஞர் கான்ராட் உட் Conrod Wood நிறுவுகிறார். அவரது நூலின் தமிழாக்கம் ஆன 'மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்' (அலைகள் வெளியீடு, சென்னை), அன்றைய சென்னை பெருமாநிலத்தின் (Madras Presidency) பகுதியாக இருந்ததும் இன்றைய கேரள மாநிலத்தை சேர்ந்ததுமான மலபார் பகுதியில் 1921 ஆகஸ்ட் முதல் 1922 முற்பகுதி வரை நூற்றுக்கணக்கான சதுர மைல் பரப்பளவில் ஏறத்தாழ நான்கு இலட்சம் மாப்பிள்ளைமார் வாழ்ந்த பகுதியில் நடந்த இக்கிளர்ச்சி, பார்ப்பனர்கள், நாயர்கள் உள்ளிட்ட மேல் சாதி இந்துக்களுக்கும் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கும் எதிராக நடந்த வர்க்கப்போராட்டம் ஆகும். மலபார் பகுதியில் இருந்த நிலவுடைமை அமைப்பு அன்றைய சென்னை பெருமாநிலத்தின் வேறெந்த பகுதியிலும் காணப்படாத ஒன்று. 

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தின் அனுபவ பாத்தியதையை பெற்றிருந்த (ஆனால் சட்டப்படி நிலத்தின் உடைமையாளர்களாக இல்லாது இருந்த) சாதிய இந்துக்களுக்கும் (ஜென்மிகள்), அவர்களிடம் குத்தகைதாரர்களாகவும் கூலி உழவர்களாகவும் இருந்த மாப்பிள்ளைமார்களுக்கும் இடையே, ஜென்மிகளின் சுரண்டலுக்கு எதிராக நடந்த இக்கிளர்ச்சி யில் ஜென்மிகளுக்கு சார்பாகவே பிரிட்டிஷ் இந்திய நிர்வாக யந்திரம் நடந்துகொண்டது.

ஜென்மிகளுக்கு ம் சாதி இந்துக்களுக்கும் எதிராக 1836-1919ஆம் ஆண்டுகளிலேயே பல்வேறு கிளர்ச்சி கள்  நடந்து இருப்பினும் 1921_22 ஆம் ஆண்டு கிளர்ச்சி தான்  மேலும் பரவலானதாகவும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் நடத்தப்பட்டது. எனினும் இதில் மலபார் பகுதியில் இருந்த எரநாடு போன்ற குறிப்பிட்ட சில இடங்களில் இருந்த மாப்பிளைமார் மட்டுமே கலந்துகொண்டனர். ஏராளமான மேல் சாதி இந்துக்களும் காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். பலர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. பாலியல் வன்முறைகளும் நடந்தன. ஜென்மிகளுக்கு எதிராக மாப்பிள்ளைமார் நடத்திய போராட்டத்திற்கு அடிப்படைக்காரணம் பொருளாதார சுரண்டல் என்றாலும் குத்தகைதாரர்களும் ஏழை உழவர்களும் ஒன்று கூடுவதற்கு தடையாக அவர்கள் தொடர்பு வட்டம் குறுகியதாக இருந்தது. சிதறிக்கிடந்த அவர்களை நெருக்கமான தொடர்புக்குள் கொண்டுவந்தவை அவர்கள் வழிபாட்டு தலங்களே ஆகும்.

இஸ்லாமிய மதத்தலைவர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக அந்த கிளர்ச்சியை ஆதரிக்கவில்லை என்றாலும் 'தங்கள்கள்' என சொல்லப்படும் மதத்தலைவர்கள் சிலர் அந்த வர்க்கப்போராட்டத்திற்கு பிற மதத்தவர் இடையே இருந்த சுரண்டப்படும் மக்களினதும் ஜனநாயக சக்திகளினதும் ஆதரவை திரட்டுவதற்கு பதிலாக மூர்க்கத்தனமான மதவெறி போராட்டமாக அதை திசை திருப்பினர். அதேபோல் மாப்பிள்ளைமார் இடையே இருந்த வணிக வர்க்கமும் ஆதரவு தரவில்லை. விதிவிலக்காக சில வணிகர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டபோதிலும் கிளர்ச்சிக்கு மத அடிப்படை வழங்கியவர்கள் கற்பிதம் செய்த 'மாப்ளா ராஜ்ஜியம்' நமது காலத்தின் தாலிபான் ஆட்சியின் உருவரைவு என்று கூட சொல்லலாம். ஒடுக்கப்படும், சுரண்டப்படும் பரந்துபட்ட இஸ்லாமிய மக்களின் விடுதலைபோராட்டங்கள்,  மத அடிப்படைவாதிகளின் தலைமையின் கீழ் வந்தால், புதிய வகையான பாசிசம்தான் உருவாகும் என்பது அன்றைய தங்கள்களில் இருந்து இன்றைய ஒசாமா பின் லேடன் வரை தொடர்ந்து மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த கிளர்ச்சியை பொருத்தவரை தேசியவாதிகள் மேற்கொண்ட நிலைப்பாட்டை கான்ராட் உட் விளக்குகிறார்: "(மாப்ளா) கிளர்ச்சி மண்டலத்தில் கிலாபத் ஒத்துழையாமை இயக்கத்தை அறிமுகம் செய்து வைத்ததில் பொறுப்பான தலைவர்கள், கிளர்ச்சியில் எந்த பொறுப்பிலும் பங்கேற்காமல் இருந்தது மட்டுமல்ல; தமது கிலாபத் இயக்கம் ஓர் ஆயுதம் தாங்கிய போராட்டமாக உருமாறி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இயக்கமாக மாறியது கண்டு ஒட்டுமொத்தமாக அதனை கண்டனம் செய்தார்கள்... சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, இந்த கிளர்ச்சி ஒரு பைத்தியக்காரத்தனமான பாய்ச்சல் என்றும் பயங்கரமான பின்விளைவுகளை உருவாக்க கூடியது என்றும் வர்ணித்தார்."

மாப்ளா கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக பிரிட்டிஷ் இந்திய அரசு தன் காவல்துறையை மட்டுமின்றி இராணுவத்தையும் பயன்படுத்தி யது. அது மட்டுமின்றி இன்று சர்வாதிகார ஆட்சிகள் நிலவும் இலத்தீன் அமெரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலானவற்றில் இருப்பவை போன்ற 'உஷார் படைகளை' (vigilantes) - அரசாங்கத்திற்கு விசுவாசமாக உள்ள குடிமக்களின் படைகளை - உருவாக்கியது. இன்றைய ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்த சால்வா ஜுடம் போன்ற 'குடிமக்கள் படை' ஒன்றை உருவாக்கிய பிரிட்டிஷ் இந்திய அரசு, இந்தியாவில் இப்போதும் உள்ளதும் மூர்க்கத்தனமாக அடக்குமுறைகளுக்குப் பிரசித்தி பெற்றதும் ஆன 'மலபார் சிறப்பு காவல்படை'யையும் 1921இல் உருவாக்கியது. அதே சமயம், இஸ்லாமிய குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள் ஆகியோரின் பிரச்னையை மதச்சார்பற்ற வகையில் அணுகி அவற்றை தீர்ப்பதற்கான இடதுசாரி விவசாயி சங்கங்கள் உருவாவதற்கும் இந்த கிளர்ச்சி காரணமாயிற்று. நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு வர்க்கப்போராட்டத்தின் நியாயங்கள், பலகீனங்கள் ஆகியவற்றை விளக்கும் இந்த நூலை தமிழாக்கம் செய்துள்ள மு. இக்பால் அகமதுக்கு இது முதல் முயற்சி என்பதால், ஆங்காங்கே தென்படும் சில நெருடல்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.

...

'பார்வையிழத்தலும் பார்த்தலும்'

எஸ் வி ராஜதுரை, என் சி பி எச், மே 2016

... ... ... ...

எனது முதல் மொழிபெயர்ப்பு நூல் 'மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்' அலைகள் வெளியீட்டகத்தால் 2007 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. எஸ் வி ஆர் அவர்கள் இந்த நூலுக்கு இப்படி ஒரு மதிப்புரையை எழுதி இருப்பதை நான் இப்போதுதான் அறிவேன்! நன்றி தோழர் எஸ் வி ஆர்!

16/10/2023

திங்கள், செப்டம்பர் 25, 2023

ஆப்பிளும் கொய்யாப்பழங்களும்

சென்னைக்கு வந்த புதிதில் சென்னையின் மிக பிஸியான கோடவுன் தெருவில் (குடோன் ஸ்ட்ரீட் என்றே வழக்கில் வந்துவிட்டது) அண்ணனுடன் அறையில் தங்கினேன். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் சரக்கு ஏற்றுவது இறக்குவது, சற்றே தொலைவில் இருந்த கொத்தவால் சாவடி காய்கறி போக்குவரத்து என உழைக்கும் மக்கள் வேலையில் இறங்கிவிடுவார்கள். பகல் பொழுதில் நடக்கமுடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசலில் திணறும் என் எஸ் சி போஸ் சாலையை இரவு பத்து மணிக்கு மேல் நடந்து சென்று பார்ப்பது வேறு ஒரு உலகமாக இருக்கும். 

சென்னையின் மிகப்பழமையான தெருக்கள் நிறைந்த பகுதி ஜார்ஜ் டவுன். ஒவ்வொரு தெருவும் ஒவ்வொரு வணிகத்துக்கு என எழுதப்பாடாத விதியோடு இயங்கியது வியப்பு. அண்ணா பிள்ளை சந்து மளிகை பொருட்கள் விற்கும் மையம் என்பதால் அத்தெருவில் நுழைந்தால் மளிகை சாமான்கள் வாசம் வரும். ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டு இருந்த எனக்கு அண்ணாபிள்ளை சந்து மட்டும் ஏன் ரொம்பவும் பிடித்த இடமாக இருந்தது என்று இப்போது புரிகிறது. அடுப்படி, வீட்டு சமையல் என்று மனம் என்னை அறியாமல் நாடி இருக்கிறது. மினர்வா தியேட்டர், அதன் காப்பி மணம் பற்றி பல முறை எழுதிவிட்டேன்.

ஆவடிக்கு அப்போது மின்சார ரயில் மாத சீசன் டிக்கெட்18 ரூபாய் மட்டுமே. ரயிலில் ஏறினால் அநேகமாக எல்லோர் கைகளிலும் ஏதாவது ஒரு பத்திரிகை, வார இதழ் என்று இருக்கும். வாசிப்பதோடு மட்டுமின்றி அரசியல் உரையாடல்கள் நிகழும். அருகில் இருப்பவர்கள் முன் பின் அறிமுகம் இல்லாத மனிதர்கள் ஆக இருந்தாலும் தீவிரமான உரையாடல் நிகழும். அவரவர் நிறுத்தம் வந்த உடன் சார் 'இறங்குறேன்' என்று இறங்கி செல்வார்கள். அதுவரை வாசிக்கப்பட்ட செய்தித்தாளை அவர் அங்கேயே விட்டுச்செல்வார். அப்படியே அது அரக்கோணம் வரையும் பல கைகள் மாறும். ஒரே செய்தித்தாள், பல மனிதர்கள், பல கோணங்கள், பல விவாதங்கள் என மனிதர்களுக்குள் ஒரு உரையாடல் இருந்தது. நக்கீரன், ஜூனியர் விகடன், தராசு என வாங்கி வாசிப்போர் அவற்றையும் அருகில் இருப்பவரிடம் விட்டுவிட்டு செல்வார்கள். 

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விசயம், பலர் ஒரு குறிப்பிட்ட பெட்டியில்தான் ஏறுவார்கள். இவர்களின் வருகையை எதிர்பார்த்து ஏற்கனவே இருப்பவர்கள்  இருக்கையை ரிசர்வ் செய்வார்கள். ஆனால் இவர்கள் யாரும் சக பயணி என்பதை தவிர வேறு எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவர்கள். 

எல்லாவற்றுக்கும் மையமாக நான் கவனிப்பது மனிதர்களுக்குள் நடந்த உரையாடல். இப்போது அடிக்கடி நடக்கும் ரயிலில் கத்திக்குத்து, கொலை என்பதெல்லாம் அப்போது இல்லை. 

... ... ...

இப்போது? மனிதர்கள் கைபேசியில் ஆழ்ந்து உள்ளே சென்றுவிட்டார்கள். ரயிலில் ஏறுவதில் தொடங்கி இறங்கும்வரை அது எத்தனை மணி நேர பிரயாணம் ஆனாலும், உள்ளூர் மின்சார ரயில், 10, 20, 30 மணி நேர பிரயாணம் ஆனாலும் கைபேசிகளில் ஆழ்ந்து விட்டார்கள். சக பயணிகள் முகத்தையும் பார்ப்பதில்லை, எந்த ஒரு உரையாடலும் இல்லை. புத்தகம் வாசிப்பவர்கள் அநேகமாக யாரும் இல்லை. 30 மணி நேர பிரயாணத்துக்கு பின் இறங்கும்போதும் சக பயணியை நோக்கிய சிறு புன்னகையோ கை அசைப்போ எதுவும் இல்லை, காதுகளில் மூளை நரம்புடன் ஏற்கனவே பிணைக்கப்பட்ட கருவியுடன் வருகிறார்கள், போகிறார்கள்.

பொது இடங்களில் மட்டுமின்றி குடும்பங்களிலும் இதே நிலைதான். ஒரு மனிதனுக்கு இரண்டு அதி நவீன கைபேசி, ஒரு மடிக்கணினி எனில் குடும்ப உறுப்பினர்களுடன் ஆன உரையாடலுக்கும் உறவுக்கும் நேரம் ஏது? 

மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள், ஆனால் தனித்தனி தீவுகளாக இருக்கிறார்கள். 

உலகம் ரொம்ப வேகமாக செல்வதாகவும் எதுக்கும் நேரம் இல்லை சார் என்ற உரையாடலையும் சகஜமாக கேட்க முடிகிறது. நவீன தொழில்நுட்பமும் கருவிகளும் நம் வேலைகளை எளிதாக்கி நேரத்தை பெருமளவு சேமிக்க உதவியுள்ளன எனில் அந்த மீதமான நேரத்தை எதன்பொருட்டு செலவு செய்தோம்? மின்சார கட்டணத்தை மின்சார அலுவலகத்தில் சென்று வரிசையில் செலுத்தி விட்டு வீடு திரும்ப சுமார் ஒரு மணி நேரம் ஆனது, இப்போது இணையத்தில் ஐந்து நிமிடத்தில் செலுத்திவிட முடிகின்றது எனில் மீதமான 55 நிமிடங்களை நாம் எந்த வகையிலாவது உருப்படியாக பயன்படுத்தினோமா என்ற கேள்வியை கேட்டால் இது அவசர உலகம் சார் என்ற பொய்யான கட்டமைப்பு உடைப்படுகிறது அல்லவா? சரியாக சொன்னால் கடந்தகாலத்துடன் ஒப்பிட்டால் இப்போது ஒரு நாளைக்கு சுமார் 30 மணி நேரம் நமக்கு கிடைக்கிறது என்றால் அந்த ஏற்கனவே இருந்த 24 மணி நேரத்தையும் கூடுதலாக கிடைத்த

ஆறு மணி நேரத்தையும் திருடிக்கொண்ட நவீன தொழிநுட்பம் அதாவது முதலாளித்துவ தொழிநுட்ப வளர்ச்சி மனிதர்களை எதை நோக்கி தள்ளி உள்ளது?

இது மாய உலகம். வேகமாக ஓடும் நவீன தொழில்நுட்பம் என்ற பெயரில் முதலாளித்துவம் மனிதர்களை ஒன்று சேர விடாமல் பிரித்து வைத்துள்ளது. 90களில் உலகெங்கும் புகுத்தப்பட்ட உலகமயம், தனியார்மயம், தாராளமயத்தின் லேட்டஸ்ட் வடிவமே  இது. கடந்த பத்தாண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட முகநூலில் இப்போது நாம் புரட்சி செய்யவில்லையா? அரசியல் கள செயற்பாடுகளின் பொருட்டு இப்போது மனிதர்களை திரட்டுவது கடினமான செயலாகி வருகிறது. அரசியல் போராட்ட களசெயல்பாடுகளுக்கு திரளும் கூட்டங்களில் உழைப்பாளி மக்களை பெருவாரியாக பார்க்க முடிகிறது. நடுத்தர வர்க்கத்தின் கோபதாபங்களை வீதிக்கு கொண்டுவருவதை மடைமாற்றியுள்ள நவீன தொழிநுட்பம் ஓரிரண்டு ஸ்டேட்டஸ், பதிவு போதும், திருப்தி அடைவோம் என அவர்களுக்கு திட்டமிட்ட வகையில் வழி செய்து இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான பொழுதுபோக்கு பதிவுகள், சினிமாக்களின்பால் இழுத்துக்கொண்டு போகிறது.

டுனீசியாவில் நடந்த அரபு வசந்தம் போல இங்கேயும் நடந்து விடாதா? முகநூலும் வாட்சப்பும் போராட்ட களங்களுக்கு மக்களை திரட்ட பயன்படாதா என்று கேட்கலாம். 140 கோடி மக்கள் கொண்ட தேசத்தை, நூற்றுக்கணக்கான இனங்களும் மொழிகளும் அதே அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்களும் ஆக, நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகள், டி வி சானல்கள் என பல்வேறு வடிவங்களில் டுனீசியாவுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு இந்த தேசம் வேறு ஒரு தளத்தில் இருக்கிறது. தவிர கடந்த பல பத்தாண்டுகளில் இந்திய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி யாவும் இந்துத்துவா தீவிரவாத சக்திகளின் கைகளில்தான் சென்று சேர்ந்துள்ளன. அநேகமாக அனைத்து ஊடகங்களும், அச்சு, மின்னணு என அனைத்தையும் இந்துத்துவா அரசியல் சக்திகள், அவற்றின் ஆதரவு சக்திகள் கைப்பற்றி விட்டன. சமீபத்திய உதாரணம் என் டி டி வி. ஆக அங்கிங்கு எனாதபடி கைபேசி, டி வி, செய்தித்தாள் என நீக்கமற இந்துத்துவா சக்திகளின் பிரசாரமே நமது மூளைகளுக்குள் வலிந்து திணிக்கப்படவில்லை,  நாமே முன்வந்து நமக்குள் திணித்துக்கொள்ளும் வகையில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டு விட்டன.

... ... ...

சென்னையில் இருந்து சேலத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் பகல் நேர ரயிலில் சென்றேன். என்னுடன் வந்த நண்பர்கள் அனைவரும், சக பயணிகளும் அவரவர் கைபேசிகளில் ஆழ்ந்து இருக்க, நான் அப்போது வந்த வார இதழ் ஒன்றை வாசித்துக்கொண்டு வந்தேன். சேலம் நெருங்கும்போது சக பயணி ஒருவர் கேட்டார், சார் சென்னையில் இருந்து பார்க்கிறேன், நீங்கள் மட்டும்தான் புத்தகம் வாசித்துக்கொண்டு வருகிறீர்கள், இப்போதும் ஒருவர் கைபேசி பார்க்காமல் புத்தகம் வாசித்துக்கொண்டு வருவதை பார்க்க வியப்பாக இருக்கிறது சார் என்றார். அவர் என்னுடன் எப்போதாவது உரையாடுவார். தன் மகனுக்கும் மகளுக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக சொல்வார். அவர் சென்னை ஐ ஐ டியில் ஆய்வு மாணவராக அப்போது இருந்தார், ஏற்காட்டில் சில ஏக்கர் விவசாயம் செய்யும் குடும்பம் அவருடையது.

... ... ...

பள்ளி செல்லும் மாணவன், மாணவிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களில் பலர் மிக புகழ்பெற்ற மனிதர்களின் பிள்ளைகளாக இருக்கிறார்கள். எங்கே விழுந்தது இடைவெளி? உரையாடலில் விழுவதாக நினைக்கிறேன்.

ஆப்பிளின் புதிய கைபேசி ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனைக்கு வந்துள்ளதாம். மும்பையில் உள்ள முதல் ஆப்பிள் ஸ்டோரில் அதை வாங்கும்பொருட்டு குஜராத், சென்னை, பெங்களூர் போன்ற வெளி இடங்களில் இருந்து விமானத்தில் பயணம் செய்து முதல் நாள் பகல், இரவு கடைக்கு முன் படுத்து உறங்கி புது கைபேசியை பல நூறு பேர் வாங்கி பெருமை பொங்க இணையத்தில் பதிவு செய்கிறார்கள். ஒன்று மட்டும் உறுதி. கூட்டம் கூட்டமாக கூடிய இவர்கள் கடை முன் காத்திருந்த அந்த 20 மணி நேரத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருந்திருக்க மாட்டார்கள், கழுத்தும் வலது கை பெருவிரலும் நோக நோக ஏற்கனவே தங்களிடம் இருந்த கைபேசியை நோண்டிக்கொண்டு இருந்திருப்பார்கள். சக மனிதர்களுடன் ஆன உரையாடல்?

தோழர் போப்பு அவர்களிடம் நேற்று பேசிக்கொண்டு இருந்தேன். அந்தக்கால பேருந்துகளில் இருக்கைகள் ஒன்றுக்கொன்று எதிராக மனிதர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் வகையில் இருந்தன, உங்களுக்கு ஞாபகம் உள்ளதா என்று கேட்டார். நுட்பமான அவதானிப்பு. நீக்கப்பட்டது இருக்கையின் வடிவம் அல்ல, மனிதர்களுக்கு இடையே ஆன உரையாடல்.

மின்சார ரயில் பயணத்தில் சக மனிதர்கள் பரிமாறிக்கொள்ளும் கொய்யாப்பழங்கள் அர்த்தமிக்கவை. ஆப்பிள்களால் அவற்றை எப்போதும் நெருங்க முடியாது.

... ...

(படத்தில்: மும்பையில் புதிய ஆப்பிள் 15 வாங்க திரண்ட கூட்டம்)

சாதீயம், பெரியார், குலத்தொழில், இடஒதுக்கீடு, நான், நீங்கள்...

கைத்தறி நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவன் நான். சொந்த ஊர் தென்காசி. அநேகமாக ஆறு வயது ஆகும்போது மதுரைக்கு இடம் பெயர்ந்தோம், அதாவது பிழைப்பு தேடி. இரண்டு அண்ணன்மார், நான், எனது தம்பி, வாப்பா, உம்மா என ஆறு பேர் கொண்ட குடும்பம்.

வாப்பா நெசவாளி என்றாலும் குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களை தறி நெய்யும்போது ராகமாக பாடுவார், கேட்டிருக்கிறேன். அதேபோல் தியாகராஜ பாகவதர் பாடல்களையம் பாடுவார். இசை குறித்து எனக்கு இது ஓர் அறிமுகம் எனில் இயல்பாகவே இஸ்லாமிய மக்கள் வாழும் ஊர் என்பதால் கல்யாண வீடுகளில் நாகூர் அனீபா பாடல்கள்தான் ஒலிக்கும், எனவே எனக்கு நினைவு தெரிந்து அறிமுகம் ஆன ஒரு பாடகர் அனீபாதான். 

சென்னை திருவல்லிக்கேணியில் வெண்கல பாத்திரங்களை தலையில் சுமந்து விற்றதாகவும் பொருளாதார நிலையில் நல்லவிதமாக இருந்ததாகவும் என் வாப்பா எப்போதாவது சொல்வது நினைவில் உள்ளது. ஏன் அதை கைவிட்டுவிட்டு தென்காசியில் தறித்தொழிலுக்கு வந்தார் என்று கேட்டு பதில் பெறும் அளவுக்கு வயதும் அனுமதிக்கவில்லை, கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் என்ற முதிர்ச்சியும் இல்லை. இப்போது நினைத்தால் வருத்தமாக உள்ளது. அதேபோல் அம்மாவின் ஊர் தென்காசி என்றாலும் இலங்கையில் தன் சகோதரிகளுடன் ஓட்டலில் சமையல் தொழிலில் ஈடுபட்டதை அடிக்கடி சொல்வார். ஒருசில உணவுப்பண்டங்களின் சிங்களப்பெயரையும் அவற்றை செய்யும் விதத்தையும் கூட சொல்வார். ஒரு பெண்ணான அவரது அனுபவங்களையும் சற்றே காதுகொடுத்து ஈடுபாட்டுடன் கேட்டிருந்தால் பெரிய கதை ஒன்றுக்கான அடித்தளமாக இருந்திருக்கும். இரண்டையும் தவற விட்ட பாவியானேன் நான்.

தென்காசியில் சாரம் எனப்படும் கைலி, சேலை நெசவு பிரதானம். குழித்தறிகள், அதாவது தரையில் குழி தோண்டி அதற்குள் தறியை கட்டமைத்து இருப்பார்கள். மழைக்காலத்தில்  தரையின் பக்கவாட்டில் ஈரக்கசிவு ஏற்பட்டால் தறி நெசவு சிரமமாக இருக்கும். பொதுவாக மழைக்காலத்தில் தறித்தொழில் சிரமம்தான். 

மதுரையில் பலகைத்தறி. தமிழகத்தின் மிகப்பெரிய நெசவுத்தொழில் ஊராக செல்லூர் இருந்தது. ஆற்றின் தென்கரை, அனுப்பானடி, கிருஷ்ணாபுரம் காலனி பகுதிகளில் சவுராஷ்டிர சமூக மக்கள் அதிகம். செல்லூரின் தறித்தொழிலுக்கு அடிப்படை ஆன பாவோடுதல், பாவுக்கான டப்பா தார் சுற்றுதல் ஆகிய தொழில்களில் அச்சமூகத்தின் பெண்கள் ஈடுபடுவார்கள். அச்சமூகத்தின் ஆண்கள் செல்லூர் நெசவுத்தொழிலில் நேரடியாக ஈடுபட்டு நான் பார்த்தது இல்லை. 

ஒட்டுமொத்த நெசவுத்தொழிலாளர்களின் வாக்குகள்தான் மதுரையில் சட்டமன்ற தொகுதியின் வெற்றி தோல்வியை பாதித்தன. கைத்தறி தொழில் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவேன் என்று சொல்லி மதுரை மேற்குத்தொகுதியில் எம் ஜி ஆர் நின்று ஜெயித்தார். தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த அவரை மேடையின் முன்னே வெகு அருகில் பார்த்த நினைவு உள்ளது.  கைத்தறி தொழிலுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவேன், இனிமேல் கைத்தறி நெசவாளிகள் நிம்மதியாக வாழலாம் என்று சொல்லி வாக்குகளை பெற்றார். அவ்வளவுதான்.

வாப்பாவின் வழியில் எஸ் எஸ் எல் சி முடித்திருந்த மூத்த அண்ணனும் நெசவில் ஈடுபட்டார். பதினோரு வயது மூத்தவர். அன்றைய எஸ் எஸ் எல் சியில் எலெக்டிவ் சப்ஜெக்ட் என்ற ஒன்று இருந்தது. அண்ணன் விவசாயத்தை தேர்வு செய்து இருந்தார். அவரது ரிகார்டு நோட்டை பார்த்துள்ளேன், மிக அழகாக படம் வரைவார்.

தென்காசியில் இருந்து ஒருநாள் இரவில் குடும்பம் ஊரை விட்டு புறப்படுவதற்கு முன்பே வாப்பாவும் அண்ணனும் மதுரைக்கு சென்று தொழில், வாடகை வீடு என உறுதி செய்து வந்திருந்தார்கள் என்பதை பின்னாட்களில் தெரிந்துகொண்டேன். வாப்பா, அம்மா, அண்ணன் என மூவரும் கைத்தறி நெசவுத்தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றினார்கள்.

மதுரையில் செல்லூர் ஜெயபாரத் பள்ளியில் எட்டாவது வரையும் 12வரை மாநகராட்சி இளங்கோ மேனிலைப்பள்ளியிலும் படித்தேன். அதன் பின் கல்லூரியில் சேரவில்லை, குடும்பச்சூழல் காரணமாக. நானும் கைத்தறிதொழிலில் இறங்கினேன், நெசவும் அறிவேன். ஆனால் ஜகார்டு எனப்படும் பூவாலை துண்டுகளை நெய்யும் தறியை கட்டுவது, அதன் டிசைன் அட்டை தயாரிப்பது என டெக்னிகல் பக்கத்தில் வேலை செய்தேன். பிறகு ஆம்பூரில் காலணி உற்பத்தி தொழிற்சாலையில் ஆறு மாதங்கள் வேலை செய்தேன். மீண்டும் மதுரைக்கே வந்துவிட்டேன்.

தினத்தந்தியில் வந்திருந்த விளம்பரத்தை பார்த்து ஆவடி பாதுகாப்பு தளவாட தொழிற்சாலை அப்ரெண்ட்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பித்தேன். விளம்பரத்தை பார்த்தவர் வாப்பா என்றாலும் பயிற்சி தேர்வுக்கு அழைப்பு வந்தபோது வாப்பா சென்னைக்கு என்னை அனுப்ப தயங்கினார். அண்ணனே தலையிட்டு என்னை ஆவடிக்கு அனுப்பினார்.

130 ரூபாய் மாத உதவித்தொகை stipend. மறுமாதமே அது 230ஆக உயர்த்தப்பட்டது என்பது பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. இப்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து அண்ணனுக்கு அழைப்பு வர மாநில அரசின் பட்டுவளர்ப்பு துறையில் ஓசூரில் பயிற்சி பெற்று வேலையும் பெற்று இப்போது பணியில் இருந்து ஓய்வும் பெற்றுவிட்டார்.

இரண்டாவது அண்ணனுடன்தான் நான் சென்னை கோடவுன் தெருவில்தான் Godown street அறையில் தங்கி இருந்தேன். சென்னையின் மிக மிக பிஸியான தெரு அது. அவருக்கு ஒன்றிய அரசின் கனரகதொழில்துறையில் stenographer வேலை கிடைத்து டெல்லி செல்ல நான் ஆவடிக்கு வந்து அறை எடுத்து தங்கினேன். 

ஒன்றரை வருட பயிற்சிக்கு பிறகு  மூன்றரை வருடங்கள் நிரந்த தொழிலாளியாக பணி செய்த பின் திருவள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகம் ஆவடியில் DRDO பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி நிறுவனத்தில் Lower Division Clerk வேலைக்கு நேர்முகத்தேர்வுக்காக அழைத்தது. Competition Success Review, Competition Master போன்ற மாத இதழ்கள், The HINDU, Front line, Outlook என வாசித்து என் ஆங்கில அறிவையும் பொது அறிவையும் வளர்த்து வந்தேன். எல்லாம் சுயமாக செய்ததுதான். 

LDC தேர்வில் என்னுடன் சேர்த்து நான்கு பேர் தேர்ச்சி பெற்றார்கள். ஒருவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர், ஒருவர் மாற்றுத்திறனாளி, ஒருவர் விமானப்படையில் ஓய்வுபெற்றவர். நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினன். உடனடியாக ஒரு விசயம் தெளிவாக தெரிகிறதா? இந்த நான்கு பேருமே இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிக்கு தேர்வானவர்கள் என்ற உண்மை தெளிவாக தெரிகிறதா? 1988 மே மாதம் பணியில் சேர்ந்து பின்னர் துறை தேர்வு எழுதி Class 1 Gazetted Officer ஆனேன்.

ஒரே வருடத்தில் 1989இல் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய வி பி சிங் அவர்களின் ஆட்சிக்கு எதிராக சங் பரிவாரம் மிகப்பெரிய கலவரங்களை கட்டவிழ்த்து விட்டது. ராஜீவ் கோஸ்வாமி என்ற ஒருவன் தீக்குளித்து செத்தான் அல்லது சாகடித்தார்கள். திட்டமிட்டபடி அத்வானியை வைத்து ரதயாத்ரை கலவரம் நடத்த பீகாரில் லல்லுபிரசாத் அவரை கைது செய்ய வி பி சிங் அரசுக்கு அளித்த ஆதரவை பிஜேபி வாபஸ் பெற்று அவர் ஆட்சியை கவிழ்த்தார்கள்.

... ... ...

எனது குடும்பத்தில் யாரும் உயர்ந்த பள்ளிகளிலோ தனியார் பள்ளிகளிலோ படிக்கவில்லை. செல்லூரில் நான் எட்டாவது வரை படித்த ஜெயபாரத் பள்ளியில் பல நூறு நெசவாளிகளின் பிள்ளைகள்தான் கட்டணம் இன்றி படித்தார்கள்.

காமராஜரின் இலவச கல்வி, டாக்டர் அம்பேத்காரும் தந்தை பெரியாரும் பிற இடதுசாரி இயக்கங்களும் திராவிட  இயக்கங்களும் உயர்சாதி பிராமணீயத்துக்கு எதிராக நடத்திய போராட்டங்கள், விளைவாக அரசியல் அமைப்பு சட்டங்கள் வழங்கிய உரிமைகள், கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றால்தான் ஒரு கைத்தறி நெசவாளியின் பிள்ளைகள் அரசுத்துறைகளில் வேலை பெற்றார்கள், சமூகத்தில் ஒரு மரியாதையை பெற்றார்கள், பொருளாதார நிலையில் உயர்ந்தார்கள். தமது வாரிசுகளை தாம் கற்ற கல்வியை விடவும் அதிக அளவில் படிக்கவைத்தார்கள்.

... ...

பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சொல்வது மிக முக்கியமானது. குலத்தொழிலை அதாவது கோவிலில் பூஜை செய்வது, உஞ்ச விருத்தி, திதி, விவாஹங்களில் மந்திரம் சொல்வது ஆகிய குலத்தொழில்களை செய்து வயிற்றை கழுவிய பிராமணர்கள் அவற்றை கைவிட்டு பட்டப்படிப்பு, chartered accountant, என்ஜினீயரிங், டாக்டர், ஐ டி படிப்பதுடன் பிராமணீயம் தடை செய்துள்ள கடல்கடந்த பிரயாணத்தை மிக சகஜமாக ஏற்றுக்கொண்டு ஸ்டேட்ஸ், கனடா, ஈரோப் என அரை முக்கால் ட்ரவசர்களை போட்டுகொண்டு அதாவது பஞ்சகச்சம் குடுமி ஆகியவற்றை துறந்து வாழும் எனில் இன்றைக்கு பிரதமர் தொடங்கி வைத்துள்ள விஸ்வகர்மா திட்டம் யாரை அல்லது எந்தெந்த சமூகங்களை உள்ளடக்கும் என்ற கேள்வியை கேட்க வேண்டியுள்ளது.

(மதராஸ் கடற்கரையில் ஜெர்மனியின் எம்டன் கப்பல் குண்டுபோட்டவுடன் இந்தியாவில் இனிமேல் ஹிட்லர் ஆட்சிதான் என்று முடிவுசெய்து ஜெர்மன் மொழி படிக்க ஓடிய திருவல்லிக்கேணி மைலாப்பூர்வாசிகளின் கதையை நான் இங்கு எழுதவில்லை).

... 

திங்கள், ஆகஸ்ட் 21, 2023

முத்தம்

முத்தம் உதடுகளில் தொடங்குவது

உதடுகளில் முடிவதில்லை


முத்தம் வெறுங்காற்றில் மிதப்பதில்லை

அது 

பரிமாறப்பட்ட ஈரத்துடன் வெளியெங்கும் வாழ்வது

வெறுங்காற்று முத்தங்களை உணர்வதில்லை


முத்தம்

ஆன்ம பரிவர்த்தனையா?

இதயத்தின் இடம்மாறலா?

அன்பின் அஞ்சல் முத்திரையா?

இல்லை,

எந்த இரு உதடுகளுடனும் முத்தங்கள் முற்றுப்பெறுவதில்லை

முதல் முத்தம்

இரண்டாவது முத்தம்

மூன்றாவது...

எதுவாக இருந்தாலும் முத்தம் முத்தமே


முத்தம் உதடுகளில் தொடங்குவது

உதடுகளில் முடிவதில்லை

கொடுத்தவரும் இல்லை

பெற்றவரும் இல்லை 

முற்றும் துறந்த நிலையே முத்தம்


முத்தங்களை நீங்கள் விரும்புகிறீர்களோ வெறுக்கிறீர்களோ,

தெரியாது,

காற்று வெளியெங்கும் போக்குவரத்து நெரிசலாய்

முத்தம்

முத்தம்

முத்தமே

ஆக்சிஜனாய்


உங்கள் சுவாசக்காற்றின் நூறு விழுக்காடும்

முத்தங்களின் மூலக்கூறே


உதடுகளை விற்பவர்கள்

கரியமிலவாயு வணிகர்கள்

அவர்களுக்கு

முத்தங்களின் அர்த்தம் புரிவதில்லை.

...

(2023 ஆகஸ்ட் மாதத்தில் நரேந்திரமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது உரையாற்றிய ராகுல்காந்தி தன்னை நோக்கி பறக்கும் முத்தம் இட்டதாக அமைச்சர் ஸ்மிர்தி இரானி குற்றம்சாட்டினார்)

சாதி அரிவாள் ஏந்திய நாங்குநேரி பள்ளிச்சிறுவர்கள்

சாதிய பிடிமானம் 'பெருமைமிகு' இந்தியன் ஒவ்வொருவன் மனதிலும் அடியாழத்தில் பதிந்துள்ளது என்பது வரலாறு, மறுப்பதற்கில்லை. 

ஆண்டான் அடிமை, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புகளில் இருந்து முதலாளித்துவ அமைப்புக்கு, நவீன தொழில்வளர்ச்சி அடைந்த காலத்துக்கு

மாறினால் சாதி, சாதிய மனப்பான்மை ஒரே இரவில் ஒழிந்து விடும் என்பது நடக்காத ஒன்று. இந்தியாவில் பிரிட்டிஷ்காரன் ரயில் பாதை போட்டுவிட்டான், இனிமேல் தொழில் வளர்ச்சி அது இது என்று மார்க்ஸை மேற்கோள் காட்டுவது சாதீய அடித்தளத்தில் கட்டப்பட்ட இந்திய சமூகத்துக்கு அப்படியே செராக்ஸ் காப்பியாக பொருந்தாது, பொருந்தவில்லை என்பதை வரலாறு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஐரோப்பாவில் தொழிற்புரட்சி , எனவே அடுத்த கட்டம் முதலாளித்துவ சமூகம் எனில் அங்கே சாதி என்ற கட்டுமானம் இல்லை. 


இந்திய சமூகம் உடலளவில் முதலாளித்துவ வடிவத்திலும் சிந்தனை அளவில் நிலப்பிரபுத்துவ வடிவத்திலும்தான் இப்போதும் இருக்கிறது. இந்திய சாதீய ரத்தத்தின் வயது பல நூறு ஆண்டுகள். ரயில் பாதை போட்டவுடன் இது ஆட்டோமேட்டிக்காக ஃபில்டர் ஆகாது. ரயில்பாதை RO மெஷின் ஆகாது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய சமூகத்துடன் ஒப்பிடும்போது கல்வித்துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டிருப்பது உண்மைதான். யாருக்கு இந்த வாய்ப்புகள் சென்றன, இந்த வளர்ச்சியின் பலன்கள் யாரை அடைந்தன அல்லது பலன்களை  யார் அனுபவித்தார்கள் என்ற கேள்விக்கான பதிலுக்குள் சாதீயம் இல்லையா? 

பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் பிரமிக்க வைக்கும் வளர்ச்சி பெற்றது உண்மைதான், ஆனால் விண்வெளி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்ட இருவர் சர்மாவாகவும் மல்கோத்ராவாகவும் இருந்தது தற்செயலான ஒன்றா? மங்கள்யான், சந்த்ராயன் மாடல்களை பாண்டி கோவிலிலோ முனியாண்டி கோவிலிலோ அல்லது ஏதாவது மசூதியிலோ கிறித்துவ ஆலயத்திலோ சீக்கிய குருத்துவாராவிலோ வைத்து வணங்காமல் நேரே உயர்சாதி சாமியான திருப்பதி கோவிலுக்கு எடுத்து சென்று வணங்குவதில் மத துவேஷம் மட்டுமல்ல, சாதீய வன்மமும் இருப்பது உண்மை இல்லையா? முதலாளித்துவ விஞ்ஞான உடலுக்குள் நிலப்பிரபுத்துவ மூளை.

அமெரிக்காவிலும் கனடாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஆங்கிலத்தையும் ஸ்பானிஷையும் இன்னபிற பிரதேச மொழிகளை பேசி பெர்முடாஸ் த்ரீ ஃபோர்த் போட்டுகொண்டு பெப்சி பிட்சா என்று பீத்திக்கொண்டு திரிந்தாலும் தன் சாதி மாட்ரிமோனியலில் பதிவு செய்து வைக்கவில்லையா? நவீன தொழிநுட்பம், இணையம் யாவும் சாதிவாரி மாட்ரிமோனியலில் வந்து நிற்கவில்லையா? சாதிமறுத்த அல்லது கலப்பு மணத்துக்கான மாட்ரிமோனியல் ஏன் இதுவரை எங்கேயும் இல்லை?

இந்து மதம் சாதிய செங்கல்களால் கட்டப்பட்டது, ஆனால் இந்த செங்கல்களை எந்த சிமெண்டாலும் ஒட்டிவைக்க முடியாது, இதனால்தான் இந்து மதம் மிகப்பலவீனமானது. சாதீய செங்கல்கள் என்றைக்கு உருவப்படுமோ அல்லது சரியுமோ அன்றைக்கு இந்து மதம் என்ற கட்டுமானம் சரிந்து வீழும். கீழ்மட்ட செங்கல்கள் விழிப்புணர்வு பெறாத வரைதான் மேல்மட்ட செங்கலான பிராமணீயம் கோலோச்ச முடியும். தன் இருப்பை உறுதி செய்யும்பொருட்டே புராணம், இதிகாசம் போன்ற புளுகுமூட்டை போலி சிமெண்டால் கட்டுமானத்தை உறுதிசெய்ய பிராமணீயம் காலந்தோறும் கடுமையாக உழைக்கிறது.


கல்வி, வேலை, பொருளாதார வளர்ச்சி, அதன் நேர்மறை விளைவாக சமூக அந்தஸ்து, பொதுவெளியில் சம இடம் என கீழ்சாதியாக கருதப்படும் மக்கள் முன்னேறும்போது தர்மபுரி நத்தம் அண்ணாநகர், நாங்குநேரி சம்பவங்களை ஆதிக்க சாதியினர் அரங்கேற்றுவார்கள். கோகுல்ராஜுகளும் இளவரசன்களும் தலை துண்டிக்கப்படுவார்கள். 

இந்த சாதீய கட்டுமானத்தில் இருந்து வெளியேறும்போது, மீனாட்சிபுரத்தில் செங்கல்கள் உருவப்படும்போது இராம கோபாலன், சோ ராமசாமி  தொடங்கி வாஜ்பேய் வரை பதட்டம் அடைகிறார்கள். அது உண்மையில் நாக்பூரின் பதட்டம். 

தன் சாதி, தன் குலசாமி, தன் சாதியில் பெண் ஆண் எடுப்பது என்பது வரை பிற சாதியினரை துன்புறுத்தாத இயல்பான நடவடிக்கையாக இந்து சாதீய சமூகம் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது, பல நூற்றாண்டுகளாக. என்றைக்கு கோபாலகிருஷ்ணன்களும் கீழவேளூர்களும் கையில் அரிவாளும் துப்பாக்கியும் தீவட்டியும் ஏந்துவார்களோ அன்றைக்கு அதே மொழியில் பதில் சொல்வதுதான் சரி, அதில் தவறில்லை. ஒரு கன்னத்தில் கோபாலகிருஷ்ணன் அறைந்தால் அவனது இரண்டு கன்னத்தையும் பிய்த்து எரிவதே சரி.

... ...

மதுரையில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது தல்லாகுளம் பெருமாள் கோயில் சுவர்களில் சில சுவரொட்டிகளை பார்த்தது இப்போதும் நினைவில் உள்ளது.

செல்லூர் கலைவாணர் என் எஸ் கே படிப்பகத்துக்கு என் பொதுஅறிவை வளர்த்ததில் மிகப்பெரிய பங்கு உண்டு. நாளிதழ்கள், வார இதழ்கள், விடுதலை, உண்மை, மக்கள்  குரல், முரசொலி, தினமணி, சோவியத் நாடு உட்பட எல்லாமும் கிடைக்கும். தீக்கதிர், செம்மலருக்கு நான் சி ஐ டி யு கைத்தறி சங்கத்துக்கு செல்வேன். உண்மை, விடுதலையில் ஆர் எஸ் எஸ் பற்றி எழுதுவார்கள். புரிந்ததோ இல்லையோ, 

பார்ப்பனர்கள், பார்ப்பனீயம், பெரியார் என வாசித்துள்ளேன். 

அந்த சுவரொட்டிகள் ஆர் எஸ் எஸ் சுவரொட்டிகள். '....ஆம் தேதி ....சோ ராமசாமி பேசுகிறார்' என்று பலமுறை பார்த்துள்ளேன். என் எஸ் கே படிப்பகத்தில் துக்ளக்கும் வாசிப்பேன், சினிமாவில் சோ ராமசாமியையும் பார்ப்பேன். எனவே சோ ராமசாமி காமெடியான ஆள் இல்லை என்பது புரிந்தது. 

...

ஆவடியில் குடிவந்த பின் புது ராணுவசாலை எனப்படும் நியூ மிலிட்டரி ரோட்டில் அரசு மருத்துவமனை எதிரில் ஒருநாள் பி ஜெ பி பொதுக்கூட்டம் நடந்தது. 10க்கு 10 மேடை போட்டு நடத்தினார்கள். சிறப்பு பேச்சாளர் யார் தெரியுமா? எல் கே அத்வானி. 500 போலீஸ், இசட் பிரிவு, கருப்பு பூனை, செவப்பு நாய்  என ஒரு கெடுபிடியும் இல்லை. நானும் வழக்கம்போல இரவு சாப்பாட்டுக்கு வள்ளியப்பன் மெஸ்ஸுக்கு போகும்போது அத்வானி பேசிக்கொண்டு இருந்தார். மேடைக்கு முன் 30, 40 பேர் கூட இல்லை. மக்கள் அவரவர் வேலையை பார்க்க போய்க்கொண்டே இருந்தார்கள்.

...

மதுரை பெருமாள் கோயில் சுவரொட்டியையும் அத்வானி கூட்டத்தையும் ஒரு 40 வருடங்களுக்கு முன் தமிழ் மக்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. 

இந்த 40 வருட கால அரசியலை திரும்பி பாருங்கள். 500 போலீஸ், இசட் பிரிவு, கருப்பு பூனை இல்லாத அத்வானியை இப்போது இன்றைய அரசியலில் கற்பனை செய்யுங்கள். முடியாது.


பெரியார் பிறந்த மண், அண்ணா பிறந்த மண்.... போதாது. கட்சி அரசியல், அன்றாட அரசியல் தற்காலிகமானவை, இந்துத்துவா சக்திகளுக்கும் அதன் சல்லி வேர்களான சாதீய அமைப்புகளுக்கும் எதிரான

தத்துவ போராட்டங்களில் திராவிட கட்சிகள் வெகுதூரம் பின் தங்கி உள்ளன என்பதை மறுக்க முடியாது. உத்தபுரம் சாதீய சுவர் சிக்கலில் திமுக தள்ளாடியதை மறுக்க முடியாது. பாப்பா பட்டி, கீரிப்பட்டி தலித் மக்கள் உரிமைக்காக இதே பெரியார், அண்ணா மண்ணில்தான் அயர்ச்சி தரும் மிக நீண்ட போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது என்பதை மறுக்க முடியாது. வேங்கைவயல், நாங்குநேரி ஆகியவை இவற்றின் நீட்சியே.

இந்துத்வா ஆர் எஸ் எஸ், சாதீய சக்திகளுக்கு எதிராக இடதுசாரிகளின் போராட்டம் அவர்களது சக்தியின் எல்லை வரைதான் நீண்டுள்ளது, நீள முடியும். இந்த தளத்தில் இடதுசாரிகளை விடவும் வலிமை வாய்ந்த திராவிட கட்சிகள்தான் சாதீய சக்திகளுக்கு எதிராக வெளிப்படையான சமரசம் அற்ற போரை இடதுசாரி, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நடத்த முடியும். அதற்கு அடிப்படையாக தமது கட்சிகளுக்குள்ளும் இயக்கங்களுக்குள்ளும் உள்ளாய்ந்த ஆய்வை இப்போதாவது தொடங்க வேண்டும்.

மொழிபெயர்ப்பும் மாவோ நூல் தொகுதிகளுக்கான ஆனந்தவிகடன் விருதும்

ஆனந்தவிகடன் விருதுகள் இப்போது மிகப்பெரிய அளவில் ஒருநாள் விழாவாக நடத்தப்படுகிறது. விருது பெற்றோரின் புகைப்படங்கள் விகடனில் முழுப்பக்கம் அச்சிடப்பட்டு பெருமைப்படுத்தப் படுகிறார்கள்! பல வருடங்களுக்கு முன் அப்படி இல்லை!

2012க்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூல் ஆக தேர்வு செய்யப்பட்டது அலைகள்-விடியல் இணைந்து வெளியிட்ட மாவோ தேர்வு செய்யப்பட்ட படைப்புகளின் தமிழ் மொழியாக்கம். 9 தொகுதிகள் மொத்தம்.

ஏறத்தாழ 12 தோழர்களுக்கு மேல் இதில் உழைப்பை செலுத்தினார்கள். தொகுதிகள் 5, 9 இரண்டும் என் மொழியாக்கம். மொழியாக்கம் என்பது உயிரை உறிஞ்சும் ஒரு பணி. எடுத்துக்கொண்ட மூல நூலின் சப்ஜெக்ட் மீது முதலில் உள்ளார்ந்த பற்றுதலும் புரிதலும் இருந்தால் அன்றி மொழியாக்க வேலையில் இறங்க முடியாது. காசுக்கும் பிழைப்புக்கும் மொழியாக்கம் செய்தால் அதில் ஜீவன் இருக்காது. மாவோ ஆகட்டும், ஸ்டாலின் ஆகட்டும், மொழியாக்கம் என்பதை அரசியல் பணியாக கருதி எல்லா தோழர்களும் உழைத்து செய்தார்கள். இவை இரண்டுமே மரியாதைக்குரிய தோழர் பெ நா சிவம் அவர்களின் நீண்ட கால திட்டம். இந்த நேரத்தில் விடியல் சிவா அவர்களை அன்புடன் நினைவு கூர்கிறேன்.

ஆதவன் தீட்சண்யா தன் 'மீசை என்பது வெறும் மயிர்' நாவலில் ஓரிடத்தில் என்னைப்பற்றி சொல்லியிருப்பார். காசுக்கு மொழிபெயர்ப்பு வேலை செய்வோரை இருமொழி எந்திரங்கள் என்று சொல்லியிருப்பார். சில பல மொழிபெயர்ப்பு நூல்களை வாசிக்கும்போது இரண்டு பக்கத்துக்கு மேல் ஓடாது. குறைந்தபட்சம் மூல மொழியின் இலக்கண அமைப்பும் புரியாமல் தமிழின் இலக்கண அமைப்பும் புரியாமல் ஆக்ஸ்போர்டு, வெப்ஸ்டர் அகராதியை வைத்துக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை எடுத்துப்போட்டால் அது முழிபெயர்ப்பாக மட்டுமே இருக்கும், மொழிபெயர்ப்பு அங்கே இருக்காது. இப்போது கூகிளில் மாவை போடுகிறார்கள், பிரின்டரில் கேவலமான சப்பாத்தியாக வெளியே வருகிறது. பால்வினை நோய் என்றால் கூகிள் milk disease என்று துப்புகிறது.

ஒரு சில ஆங்கில சொற்களின் தமிழ் இணை சொல்லுக்காக பல நாட்கள், சில மாதங்கள் யோசித்துக் கொண்டே இருந்துள்ளேன். ஏதாவது ஒரு நாளில் எங்கேயோ ஒரு பொறி தட்டுப்படும், அப்போது கிடைக்கும் மகிழ்ச்சி மொழிபெயர்ப்பாளன் மட்டுமே உணர்ந்து கொண்டாடும் மகிழ்ச்சி ஆகும். அனுபவிக்க வேண்டும்.

பெயர்சொற்களின் நேரடி தமிழ்ப்பொருளை கொண்டுவருவதில் சிக்கல், சிரமம் ஏற்படும் எனில் குறிப்பிட்ட சொல்லுக்கான வினைச்சொல் மூலத்தை தேடி அங்கிருந்து பொருள்கொணர முயற்சி செய்தால் வெற்றி கிட்டும் என்பது என் அனுபவம். எல்லாமும் மனிதனின் வினையில் இருந்து, உழைப்பில் இருந்து உருவானவை. 

நிற்க.

2013 புத்தக கண்காட்சி சென்னையில் நடந்துகொண்டு இருந்தபோது தோழர் அலைகள் சிவம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது விகடனில் இருந்து ஒரு நண்பர் வந்தார். 'நீங்கதான் அலைகள் பதிப்பக...?' 'ஆமாம் சொல்லுங்க' 'மாவோ நூல் மொழியாக்கத்துக்கான விகடன் விருதினை கொண்டு வந்துள்ளேன், வாங்கிக்கோங்க' என்றவாறு பையில் இருந்து எடுத்துக்கொடுத்தார். சரி கொடுங்க என்று சிவம் அவர்கள் அதை வாங்கிக்கொண்டார். விருது வழங்கும் விழா இவ்வாறு இரண்டு நிமிடங்களில் முடிவு பெற்றது. நான் தற்செயலாக அங்கே இருந்ததால் இது எனக்கு தெரியும். மொழிபெயர்ப்பு செய்த பிற தோழர்களுக்கு இதுவும் தெரியாது! புகைப்படத்தில் சிவம் அவர்களும் நானும்.

அலைபேசியில் புகைப்படம் எடுத்தவர் தோழர் இளங்கோ Elango Sivam.

திங்கள், ஜூலை 24, 2023

வடகிழக்கு கலவரங்களின் மையமான ஒன்றிய பி ஜெ பி அரசு+கார்ப்போரேட் கூட்டணி


1

கடந்த மார்ச் மாதம் மணிப்பூரின் மலைப்பிரதேச மக்களை அவர்களின் பாரம்பரிய காடுகளில் இருந்து மாநில பிஜேபி அரசு வெளியேற்றியது.  அரசு கூறிய ஒரே காரணம்: இக்காடுகள் பாதுகாக்கப்பட்ட காப்புக்காடுகள். 

அதே மார்ச் மாதம் பிஜேபி அரசு நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட முன்வரைவை செய்தது. அதன் பெயர் Forest Conservation (Amendment) Bill, 2023.

பல்லுயிர்பெருக்கம் மிக அதிகமான அளவில் கொட்டிக்கிடக்கும் வடகிழக்கு மாநிலங்களில், அதே வனங்களில் பாரம்பரியமாக பல நூற்றாண்டுகளாக வனங்களோடும் இயற்கையோடும் தம் வாழ்வை பிணைத்துக்கொண்டு வாழும் பழங்குடியினர் பகுதிகளில் இப்படி ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்ய வேண்டியதன் பின்னணி என்ன?

ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற Forest Conservation Act, 1980இல் திருத்தத்தை கொண்டுவருவதே இந்த முன்வரைவு. அது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. விந்தை என்னவெனில் அந்த குழுவில் இருந்த அனைத்து எம்.பி.களும் பிஜேபி கட்சியினர். நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பாமல் இகுழுவுக்கு அனுப்பியதில் உள்நோக்கம் இருந்தது. இக்குழு பொதுமக்கள் கருத்தை அறிவதற்கு 15 நாட்கள் அவகாசம் அளித்து விளம்பரம் செய்தது. அதாவது 2023 மே 18 இறுதி நாள் என்று அறிவித்தது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இக்குழு தன் அறிக்கையை சமர்ப்பிக்கும். இப்போது நடந்து கொண்டு இருப்பது அந்த மழைக்கால கூட்டத்தொடர்தான்.

FCA 1980 சட்டம் சுற்றுச்சூழலுக்கும் சமூக வளர்ச்சிக்கும் பெரும் சவாலாக இருப்பதால் இச்சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவருவது அவசியம் என்று  ஒன்றிய பிஜேபி அரசு கூறிக்கொண்டாலும் உண்மை என்ன? வடகிழக்கு மாநில மக்களின் நிலங்கள் முழுவதையும் அந்த மக்களிடம் இருந்து பறிமுதல் செய்து கார்பொரேட் முதலைகளிடம் ஒப்படைப்பது என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே இதில் ஒளிந்துள்ளது. அதனை மறைக்க பிஜேபி அரசு வளர்ச்சி, மக்கள் நலன் என்று பகட்டான வார்த்தைகளை அள்ளி வீசுகிறது.

வடகிழக்கு மாநிலங்களின் நிலம், இயற்கை வளம், கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்ற்றின் மீதான அம்மக்களின் உரிமைகளுக்கு நம் அரசியமைப்புசட்டம் சிறப்பான பாதுகாப்பை வழங்கியுள்ளது.

ஒன்றிய அரசு முன்வைத்துள்ள இந்த முன்வரைவோ வடகிழக்கு மக்களின் உரிமைகளை முற்றாக நிராகரிக்கிறது, மாறாக பல லட்சம் ஹெக்டேர் காடுகளை அவர்களிடம் இருந்து பறித்து கார்பொரேட் வசம் கொடுக்கவும், காடுகள் சாராத பிற வணிகம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவும் எளிதில் வழி செய்கின்றது.

உதாரணமாக, இப்போது நடைமுறையில் உள்ள வனப்பாதுகாப்பு சட்டத்தின் மிக கடுமையான ஷரத்துகளில் இருந்து இந்த திருத்தம் முழுமையாக விலக்கு அளிக்கிறது. உதாரணமாக, சர்வதேச எல்லைகளில் இருந்து, கட்டுப்பாட்டு கோட்டில் LOC அல்லது LAC யில் இருந்து 100 கிமீ தூரத்துக்குள் இருக்கின்ற எந்த ஒரு நிலத்தையும் அரசு கைப்பற்றி கொள்ளலாம். 

வடகிழக்கு மாநிலங்கள் சீனா, திபெத், மியான்மர், பூடான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் எல்லையை கொண்டவை. நாகாலாந்து மாநிலத்தின்  90% நிலங்களையும் இந்த சட்டத்திருத்தம் பாதிக்கும். கூடவே அருணாசல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களின் காடுகளையும், மேகாலயா, மிஜோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் 100% நிலங்களையும் பாதிக்கும். 

Godavarman வழக்கில் உச்சநீதிமன்றம்1996இல் வழங்கிய தீர்ப்பின்படி வனங்களை பாதுகாப்பதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆன விதிகள் அனைத்து காடுகளுக்கும் சமமாக பொருந்தும். அந்த நிலத்தின் உரிமையாளர் யாராக இருந்தாலும், அது என்ன வகையான காடாக இருந்தாலும்.

இமயமலை தொடரில் உள்ள 15,000 கி.மீ சர்வதேச எல்லை, வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான்நிக்கோபார் தீவுகள், மேற்குத்தொடர்ச்சி மலைகள் ஆகிய நிலப்பரப்பில் உள்ள காடுகள் அனைத்தையும் பாதுக்காக்க தக்க வகையில் இதுகாறும் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் இப்போது கொண்டுவரப்பட்ட சட்ட முவரைவு கைவிட சொல்கிறது.


2

1980 சட்டமானது, நாகாலாந்து, மிஜோரம் சட்டமன்றங்களுக்கு நிலம், இயற்கை வளம், அரசியல்-கலாச்சார உரிமைகள் மீதான தமது சொந்த சட்டங்களை இயற்றிக்கொள்ள அனுமதி அளித்து இருந்தது. 2023 திருத்தமோ அரசியலமைப்பு சட்டம் பிரிவு371ஐ நீர்த்துபோக செய்யுமா அல்லது முற்றாகவே துடைத்து போட்டு விடுமா என்பதுதான் நாகா மக்களின் இன்றைய கேள்வி.

பல்லாயிரம் வருடங்கள் ஆக வனங்களில் குடியிருந்த, கூடியிருக்கும் பழங்குடியினர்தான் வனங்களை உண்மையில் பாதுகாக்கின்றார்களே தவிர அரசோ அரசின் சட்டங்களோ அதிகாரிகளோ அல்லர். அரசு என்ற ஒன்று இல்லாத காலத்தில் இருந்தே பழங்குடியினர்தான் வனங்களை பாதுகாத்து வந்துள்ளனர் என்பதே எளிய உண்மை. 

ஒன்றிய பிஜேபி அரசு 2021இல் National Mission on Edible Oils-Oil Palm NMEOOP என்ற திட்டத்தின் கீழ் 11040 கோடி ரூபாய் ஒதுக்கியது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களும் அந்தமான் நிக்கோபார் தீவுகளும் குறிவைக்கப்பட்டன. இந்த பகுதிகள்தான் இந்தியாவின் முக்கியமான பல்லுயிர்பெருக்க பகுதிகள், உலகின் தலையாய மூன்று பல்லுயிர்பெருக்க பகுதிகளில் இரண்டாவது இடத்தில் இருப்பவை. மிக அரிய விலங்கினங்கள், பறவைகள், அரிய மருத்துவ குணங்களை கொண்ட தாவரங்கள், காடுகளில் மட்டுமே விளையக்கூடிய உணவுப்பயிர்களை உள்ளடக்கிய பாதுக்காக்க பட்ட வனங்களை கொண்ட பிரதேசங்கள்.

2021 திட்டப்படி இக்காடுகளில் பாமாயில் மரங்களை பயிரிட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.    இக்காடுகளில் பாமாயில் மரங்களை பயிரிட்டால் இக்காடுகளின், இந்த மாநிலங்களின் சுற்றுச்சூழலும் காடு சார்ந்த வாழ்வை ஒட்டிய அம்மக்களின் கலாச்சார பாரம்பரியமும் அழியும் என்று நன்கு தெரிந்தே அசாமிலும் அருணாச்சல பிரதேசிலும் 2021க்கு முன்பே அதாவது 2004 தொடங்கியே பாமாயில் மரங்கள் பயிரிடப்பட்டன. கோத்ரெஜ், சங்கி சாமியார் ராம்தேவின் பதஞ்சலி, 3F Oil palm Agrotech ஆகிய கம்பெனிகள் மாநில அரசின் உதவியுடன்

விவசாயிகளை அணுகி கொள்ளை லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி பாமாயில் பயிரிட தூண்டின. ஏற்கனவே இருந்த இயற்கையான காடுகள் அழிக்கப் பட்டன, அந்த இடங்களில் பாமாயில் பயிரிடப்பட்டது. இதுவரை கண்டிடாத அளவுக்கு தாராள மானியம், இலவச மரக்கன்றுகள்,  விளைபொருட்களை சந்தையில் விற்க உதவி, உள்நாட்டில் இதனால் வளர்ச்சி என்று பல்வேறு ஜிகினா விளம்பரங்கள் செய்யப்பட்டன.

இதன் பின்விளைவுகள் மிக பயங்கரமானவை என்று மக்கள் பின்னர் உணர்ந்தார்கள். ஆனால் அந்த அழிவை அவ்வளவு எளிதில் கடந்து வர முடியவில்லை.


3

ஒரே நிலத்தில் அந்தந்த பருவநிலைக்கு ஏற்ற பயிர்களை சுழற்சி முறையில் பயிரிடுவதுதான் மண்ணின் வளத்தை பெருக்கும். பணப்பயிர் ஆன பாமாயில் மரத்தை மட்டுமே பயிரிடுவதால் அதாவது  ஒற்றைப்பயிர் விவசாயம் செய்வதால் monoculture எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கேடுகள், உணவு உத்தரவாதத்துக்கு நேர்ந்துள்ள அபாயம் ஆகியவற்றை அரசும் கார்பொரேட் நிறுவனங்களும் பழங்குடியின மக்களிடம் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. 

மிஜோரம் மாநிலத்தில் 2004 தொடங்கி ஒற்றைப்பயிர் ஆன பாமாயில் மட்டுமே பயிரிட்டதால் ஏற்பட்ட சேதாரம் ஆனது வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துக்கும் பொருந்தும். அவற்றை பட்டியல் இடலாம்:

* Food and Agricultural Organization வெளியிட்ட வரைபடங்களின்படி வடகிழக்கு மாநிலங்களின் நிலம் பாமாயில் விவசாயத்துக்கு ஏற்றவை அல்ல.

* மிஜோரம் மட்டுமல்ல, வடகிழக்கு மாநிலங்களின் நிலம் பாமாயில் விவசாயத்துக்கு ஏற்றவை அல்ல. ஒரு பாமாயில் மரம் ஒரு நாளைக்கு 300 லிட்டர் தண்ணீர் குடிக்கும். அதாவது ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ஒரு நாளைக்கு 40000-50000 லிட்டர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதாவது இரண்டு ஹெக்டேர் பாமாயில் மரங்களுக்கு தேவையான தண்ணீர் ஆனது ஒரு மிஜோர குடிமகன் ஒரு வருடம் முழுவதும் உட்கொள்ளும் குடிநீருக்கு சமம்.

 வடகிழக்கு மாநிலங்களில் வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே மழை பெய்யும்.  ஆக இருக்கும் நிலத்தடி நீரையும் பெய்யும் மழை நீரையும் ஒட்டுமொத்தமாக பாமாயில் மரங்கள் உறிஞ்சி எடுத்துவிட, கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.

* பாமாயில் மரங்களுக்கு உரமும் பூச்சி மருந்தும் அதிகம் தேவை என்பதால் வடகிழக்கு மாநிலங்களின் காடுகள் தம் இயற்கையான மண்ணின் வளத்தை இழந்தன.

* அறுவடை செய்யப்பட்ட பாமாயில் பழங்களை 24 மணி நேரத்துக்குள் பக்குவப்படுத்தி எண்ணெய் எடுக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் பிழிவு ஆலைகளுக்கு பழங்களை கொண்டு செல்லத்தக்க சாலை வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கொள்முதல் மையங்கள் எதுவும் இல்லாததால் பழங்கள் அழிந்து நட்டத்தில் முடிந்தது.

* அவ்வாறு அழிந்து போன பழங்களால் நிலம் மேலும் நாசமானது.

* பாமாயில் மரத்தின் அடிப்பாகம் மிக மிக பெரிதாக வளரும் என்றும் வருடத்திற்கு நான்கு முறை இந்த மரங்களை சீராக்க வேண்டும் என்றும் அதற்கென கூலியாட்களை நியமித்து கூலி கொடுக்க வேண்டியுள்ளது என்றும் நஷ்டம் அடைந்த விவசாயிகள் கூறுகின்றனர்.

* பாரம்பரிய காடுகளில் பன்னெடுங்காலமாக விளைந்த அல்லது விளைவிக்கப்பட்ட உணவுதான்ய, தாவர வகைகளை உண்பதை தமது உணவுப்பண்பாடாக கொண்டிருந்த பழங்குடியினர், ஒற்றைப்பயிர் ஆன பாமாயில் விவசாயத்தால் தமக்கான உணவு உத்தரவாதத்தை இழந்தனர். அதாவது தம் உணவுப்பண்பாட்டை கைவிடும் அவலம் நேர்ந்தது.

* இக்காடுகளில் இயற்கையாக விளைந்த உணவுப்பயிர்கள், மருத்துவ தாவரங்கள், தேக்கு உள்ளிட்ட மரங்கள் ஆகியவை அளிக்கப்பட்டு, தேயிலை, காபி, ஏலக்காய் ஆகியன பயிரிடப்பட்டதால் மக்களுக்கான உணவு உத்தரவாதம் இல்லாத அவலநிலை ஏற்பட்டது. இது நீண்டகால பாதிப்பு ஆகும்.

* ஒரு ரூபாய் வருமானமோ லாபமோ கிடைக்காத ஒரு விவசாயி நாளடைவில் தன் நிலத்தை பாமாயில் பயிர் செய்ய தூண்டிய கார்பொரேட் நிறுவனத்திடம் விற்றுவிட்டு வெளியேறுவார். அவ்வாறு வெளியேறியுள்ளார்கள். அதன் பின் தம் பாரம்பரிய நிலங்களில் கார்பொரேட் கம்பெனிகளின் கூலிகளாக உழைத்தார்கள். ஆக கார்ப்பரேட் முதலைகளுக்கு வடகிழக்கு மாநிலங்களின் காடுகளை கிட்டத்தட்ட இலவசமாக கொடுத்துவிடும் பிஜேபி அரசின் திட்டம் இப்படி நிறைவேறுகிறது.

* ஒன்றிய, மாநில அரசுகளின் அடாவடி சட்டங்கள், சட்ட திருத்தங்களால் தமது அதிகாரத்துக்கு உட்பட்ட நிலங்களின் மீது கிராம பஞ்சாயத்துக்களோ பிற கிராம சமூக கவுன்சில்களோ எந்த உரிமையும் கொண்டாட முடியாத கையறு நிலை ஏற்பட்டது.


* காடுகளின் அல்லது வடகிழக்கு மாநிலங்களின் பல்லுயிர்பெருக்கம் நாசமானது. 


* உண்மையில் காடுசாரா வணிக நடவடிக்கைகளின் பொருட்டே வடகிழக்கு மாநிலங்களின் காடுகளை கார்பொரேட் நிறுவனங்கள் கைப்பற்றின. காட்டு சுற்றுலா, வனவிலங்கு காட்சிசாலைகள், சபாரி ஆகிய தொழில்களை இக்காடுகளில் தொடங்கி நடத்த கார்பொரேட் முதலைகளுக்கு குத்தகை விடலாம் என்றுதான் பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள 2023 சட்ட முன்வடிவு கூறுகிறது. 

* ஒருமுறை பாமாயில் பயிர் செய்தால் அந்த மண்ணில் வேறு விவசாயம் செய்ய முடியாது.

* உலகின் இரண்டாவது பெரிய பல்லுயிர்பெருக்க பிரதேசம் ஆன வடகிழக்கு மாநிலங்கள் இந்த கார்பொரேட், அரசுகள் கூட்டணியால் தம் இயற்கை சூழலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக அழிந்து போனதாக கருதப்பட்ட Bugun Liocichla என்ற பறவை வடகிழக்கில் மட்டுமே கண்டறியப்பட்டது.


4

மிஜோரம் மாநில அரசு New Land Use Policy NLUP என்ற திட்டத்தை நடைமுறை படுத்தியே தன் மாநிலத்தில் பாமாயில் விவசாயத்தை ஊக்குவித்தது. பாமாயில் விவசாயம் அதாவது ஒற்றைப்பயிர் விவசாயம் மிஜோரத்தில் மிக மோசமாக தோல்வி அடைந்ததை கண்ட மணிப்பூர் விவசாயிகள் அதாவது மலைவாழ் குக்கி மக்கள் தம் மாநில அரசு மிஜோரம் அரசின் NLUP ஐ நகல் எடுப்பதை 2014இலேயே எதிர்த்தார்கள். பாரம்பரிய, இயற்கை சார்ந்த  ஜூம் jhum சுழற்சி விவசாய முறையே சிறந்தது என்ற தம் நிலையில் உறுதியாக இருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் பாமாயில் விவசாயத்தின் அனுபவம் என்ன?

வளர்ந்து வரும் நாடுகள் ஆன தென் கிழக்கு ஆசிய நாடுகள், குறிப்பாக இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் விவசாயம் என்பது மிகப்பெரிய எதிர்மறையான அனுபவத்தை அவர்களுக்கு கொடுத்தது என்பது வரலாறு. 

இந்த நாடுகள் தமது கசப்பான பாமாயில் விவசாய அனுபவங்களை பிறகு Round Table On Sustainable Palmoil என்ற அமைப்பை ஏற்படுத்தி பாமாயில் விவசாயத்தை மிக கவனமாக முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மக்கள் நலம் பேணும் அரசுகளால் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும். தவறு செய்வதையே கொள்கையாக கொண்ட அரசால் நாடு நாசமாவது மட்டுமே நடக்கும்.


5

ஒன்றிய பிஜேபி அரசின் பிரதமரும் அமைச்சர்களும் கடந்த பத்து வருடங்களில் மிகப்பல முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தது ஏன் என்ற கேள்வியையும் இப்போது நடக்கும் மணிப்பூர் கலவரங்களின் பின்னணியையும் மேலே சொல்லப்பட்ட ஒன்றிய அரசு, கார்பொரேட் கூட்டணி மேற்கொண்டுள்ள மக்கள் விரோத கொள்கைகளோடு இணைத்துப்பார்க்காமல் இருக்க முடியாது. 

ஒருபுறம் இஸ்லாமிய, கிறித்துவ மக்களுக்கும் இந்து மத மக்களுக்கும் இடையே கலவரங்களை தூண்டி விடுவது; மறுபுறம் அதானி, அம்பானி, நிரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற பெரும் கார்பொரேட் முதலைகள் தம் சொத்தை பல நூறு மடங்கு பெருக்கி கொள்ள ஏதுவாக வங்கி கடன்களை தள்ளுபடி செய்வதும் பல லட்சம் கோடி மதிப்புக்கு கார்பொரேட் வரியை தள்ளுபடி செய்வதும் வங்கிகள் திவால் ஆவதை அனுமதிப்பதும் மிகத்தீவிரமாக தெளிவாக பிஜேபி அரசால் நடத்தப்படுகிறது. 

தேர்தல் பத்திரங்கள் வாயிலாக மட்டுமே 4500 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ள கட்சிதான் பிஜேபி. கொரோனாவின் பேரால் மக்களிடம் திரட்டப்பட்ட நன்கொடை எவ்வளவு என்பதை வெளிப்படையாக சொல்ல மறுக்கும் அதே கட்சியின் பிரதமர்.

தன் தேசத்தின் ஒரு மாநிலத்தில் இரண்டு பெண்கள் ஓராயிரம் ஆண்களால் நிர்வாணமாக வீதிகளில் நடத்தப்பட்டது தெரிந்தும் கூட அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பது போல, அது பற்றி கடுகளவும் கவலை இன்றி அமெரிக்க அதிபர், பிரெஞ்சு அதிபர் மனைவிகளுக்கு வைரமோதிரம், சேலை ஆகிய பரிசுபொருட்களை தேர்வு செய்யும் வேலையில் கவனமாக இருந்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பெருத்த வாய்வீச்சு வீரராக திறந்து வைத்த இந்த தேசத்தின் பிரதமர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வந்து மணிப்பூர் பற்றி பேச அச்சப்படுகிறார்.

இந்த பின்னணியில் பார்க்கும்போது மணிப்பூர் கலகங்களை இரண்டு மக்கள் பிரிவினருக்கு இடையே ஆன கலவரம் ஆக பிஜேபியும் ஆர் எஸ் எஸ் சார்பு ஊடகங்களும் சித்தரிக்க முயல்கின்றன, ஒன்றிய பிஜேபி அரசு+கார்பொரேட் கூட்டணி கொள்ளையை  திட்டமிட்டு மறைக்கின்றன என்பது தெளிவு.

இதை புரிந்துகொண்டு மெய்தெய் இன மக்களும் குக்கி இன மக்களும் கைகோர்த்து, வடகிழக்கின் இந்து, முஸ்லிம், கிறித்துவ, புத்த சமய மக்களும் கைகோர்த்து பிஜேபி ஒன்றிய அரசு + கார்பொரேட் கூட்டணியை எதிர்க்க வேண்டும். வடகிழக்கில் அமைதியும் சமாதானமும் திரும்ப வேண்டும் எனில் இடதுசாரி ஜனநாயக சக்திகளும் மதசார்பற்ற சக்திகளும் அமைதியை விரும்பும் இயக்கங்களும் வடகிழக்கு மக்களிடையே இந்த பின்னணியை வலுவாக பிரச்சாரம் செய்ய வேண்டும். 

இந்திய நாடு ஒருசில கார்பொரேட் கம்பெனிகளின் சொத்து அல்ல என்பதிலும் மக்களிடையே பிளவை உருவாக்கி தந்திரமாக நாட்டை ஒருசில கார்பொரேட்டுகளுக்கு விற்பனை செய்யும் பிஜேபி ஆர் எஸ் எஸ் கும்பலை அம்பலப்படுத்துவதே நம் முன் உள்ள உடனடியான பெரும் கடமை என்பதிலும் உறுதியாக இருப்போம்.

... ...