2012க்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூல் ஆக தேர்வு செய்யப்பட்டது அலைகள்-விடியல் இணைந்து வெளியிட்ட மாவோ தேர்வு செய்யப்பட்ட படைப்புகளின் தமிழ் மொழியாக்கம். 9 தொகுதிகள் மொத்தம்.
ஏறத்தாழ 12 தோழர்களுக்கு மேல் இதில் உழைப்பை செலுத்தினார்கள். தொகுதிகள் 5, 9 இரண்டும் என் மொழியாக்கம். மொழியாக்கம் என்பது உயிரை உறிஞ்சும் ஒரு பணி. எடுத்துக்கொண்ட மூல நூலின் சப்ஜெக்ட் மீது முதலில் உள்ளார்ந்த பற்றுதலும் புரிதலும் இருந்தால் அன்றி மொழியாக்க வேலையில் இறங்க முடியாது. காசுக்கும் பிழைப்புக்கும் மொழியாக்கம் செய்தால் அதில் ஜீவன் இருக்காது. மாவோ ஆகட்டும், ஸ்டாலின் ஆகட்டும், மொழியாக்கம் என்பதை அரசியல் பணியாக கருதி எல்லா தோழர்களும் உழைத்து செய்தார்கள். இவை இரண்டுமே மரியாதைக்குரிய தோழர் பெ நா சிவம் அவர்களின் நீண்ட கால திட்டம். இந்த நேரத்தில் விடியல் சிவா அவர்களை அன்புடன் நினைவு கூர்கிறேன்.
ஆதவன் தீட்சண்யா தன் 'மீசை என்பது வெறும் மயிர்' நாவலில் ஓரிடத்தில் என்னைப்பற்றி சொல்லியிருப்பார். காசுக்கு மொழிபெயர்ப்பு வேலை செய்வோரை இருமொழி எந்திரங்கள் என்று சொல்லியிருப்பார். சில பல மொழிபெயர்ப்பு நூல்களை வாசிக்கும்போது இரண்டு பக்கத்துக்கு மேல் ஓடாது. குறைந்தபட்சம் மூல மொழியின் இலக்கண அமைப்பும் புரியாமல் தமிழின் இலக்கண அமைப்பும் புரியாமல் ஆக்ஸ்போர்டு, வெப்ஸ்டர் அகராதியை வைத்துக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை எடுத்துப்போட்டால் அது முழிபெயர்ப்பாக மட்டுமே இருக்கும், மொழிபெயர்ப்பு அங்கே இருக்காது. இப்போது கூகிளில் மாவை போடுகிறார்கள், பிரின்டரில் கேவலமான சப்பாத்தியாக வெளியே வருகிறது. பால்வினை நோய் என்றால் கூகிள் milk disease என்று துப்புகிறது.
ஒரு சில ஆங்கில சொற்களின் தமிழ் இணை சொல்லுக்காக பல நாட்கள், சில மாதங்கள் யோசித்துக் கொண்டே இருந்துள்ளேன். ஏதாவது ஒரு நாளில் எங்கேயோ ஒரு பொறி தட்டுப்படும், அப்போது கிடைக்கும் மகிழ்ச்சி மொழிபெயர்ப்பாளன் மட்டுமே உணர்ந்து கொண்டாடும் மகிழ்ச்சி ஆகும். அனுபவிக்க வேண்டும்.
பெயர்சொற்களின் நேரடி தமிழ்ப்பொருளை கொண்டுவருவதில் சிக்கல், சிரமம் ஏற்படும் எனில் குறிப்பிட்ட சொல்லுக்கான வினைச்சொல் மூலத்தை தேடி அங்கிருந்து பொருள்கொணர முயற்சி செய்தால் வெற்றி கிட்டும் என்பது என் அனுபவம். எல்லாமும் மனிதனின் வினையில் இருந்து, உழைப்பில் இருந்து உருவானவை.
நிற்க.
2013 புத்தக கண்காட்சி சென்னையில் நடந்துகொண்டு இருந்தபோது தோழர் அலைகள் சிவம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது விகடனில் இருந்து ஒரு நண்பர் வந்தார். 'நீங்கதான் அலைகள் பதிப்பக...?' 'ஆமாம் சொல்லுங்க' 'மாவோ நூல் மொழியாக்கத்துக்கான விகடன் விருதினை கொண்டு வந்துள்ளேன், வாங்கிக்கோங்க' என்றவாறு பையில் இருந்து எடுத்துக்கொடுத்தார். சரி கொடுங்க என்று சிவம் அவர்கள் அதை வாங்கிக்கொண்டார். விருது வழங்கும் விழா இவ்வாறு இரண்டு நிமிடங்களில் முடிவு பெற்றது. நான் தற்செயலாக அங்கே இருந்ததால் இது எனக்கு தெரியும். மொழிபெயர்ப்பு செய்த பிற தோழர்களுக்கு இதுவும் தெரியாது! புகைப்படத்தில் சிவம் அவர்களும் நானும்.
அலைபேசியில் புகைப்படம் எடுத்தவர் தோழர் இளங்கோ Elango Sivam.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக