சாதிய பிடிமானம் 'பெருமைமிகு' இந்தியன் ஒவ்வொருவன் மனதிலும் அடியாழத்தில் பதிந்துள்ளது என்பது வரலாறு, மறுப்பதற்கில்லை.
ஆண்டான் அடிமை, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புகளில் இருந்து முதலாளித்துவ அமைப்புக்கு, நவீன தொழில்வளர்ச்சி அடைந்த காலத்துக்கு
மாறினால் சாதி, சாதிய மனப்பான்மை ஒரே இரவில் ஒழிந்து விடும் என்பது நடக்காத ஒன்று. இந்தியாவில் பிரிட்டிஷ்காரன் ரயில் பாதை போட்டுவிட்டான், இனிமேல் தொழில் வளர்ச்சி அது இது என்று மார்க்ஸை மேற்கோள் காட்டுவது சாதீய அடித்தளத்தில் கட்டப்பட்ட இந்திய சமூகத்துக்கு அப்படியே செராக்ஸ் காப்பியாக பொருந்தாது, பொருந்தவில்லை என்பதை வரலாறு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஐரோப்பாவில் தொழிற்புரட்சி , எனவே அடுத்த கட்டம் முதலாளித்துவ சமூகம் எனில் அங்கே சாதி என்ற கட்டுமானம் இல்லை.
இந்திய சமூகம் உடலளவில் முதலாளித்துவ வடிவத்திலும் சிந்தனை அளவில் நிலப்பிரபுத்துவ வடிவத்திலும்தான் இப்போதும் இருக்கிறது. இந்திய சாதீய ரத்தத்தின் வயது பல நூறு ஆண்டுகள். ரயில் பாதை போட்டவுடன் இது ஆட்டோமேட்டிக்காக ஃபில்டர் ஆகாது. ரயில்பாதை RO மெஷின் ஆகாது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய சமூகத்துடன் ஒப்பிடும்போது கல்வித்துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டிருப்பது உண்மைதான். யாருக்கு இந்த வாய்ப்புகள் சென்றன, இந்த வளர்ச்சியின் பலன்கள் யாரை அடைந்தன அல்லது பலன்களை யார் அனுபவித்தார்கள் என்ற கேள்விக்கான பதிலுக்குள் சாதீயம் இல்லையா?
பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் பிரமிக்க வைக்கும் வளர்ச்சி பெற்றது உண்மைதான், ஆனால் விண்வெளி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்ட இருவர் சர்மாவாகவும் மல்கோத்ராவாகவும் இருந்தது தற்செயலான ஒன்றா? மங்கள்யான், சந்த்ராயன் மாடல்களை பாண்டி கோவிலிலோ முனியாண்டி கோவிலிலோ அல்லது ஏதாவது மசூதியிலோ கிறித்துவ ஆலயத்திலோ சீக்கிய குருத்துவாராவிலோ வைத்து வணங்காமல் நேரே உயர்சாதி சாமியான திருப்பதி கோவிலுக்கு எடுத்து சென்று வணங்குவதில் மத துவேஷம் மட்டுமல்ல, சாதீய வன்மமும் இருப்பது உண்மை இல்லையா? முதலாளித்துவ விஞ்ஞான உடலுக்குள் நிலப்பிரபுத்துவ மூளை.
அமெரிக்காவிலும் கனடாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஆங்கிலத்தையும் ஸ்பானிஷையும் இன்னபிற பிரதேச மொழிகளை பேசி பெர்முடாஸ் த்ரீ ஃபோர்த் போட்டுகொண்டு பெப்சி பிட்சா என்று பீத்திக்கொண்டு திரிந்தாலும் தன் சாதி மாட்ரிமோனியலில் பதிவு செய்து வைக்கவில்லையா? நவீன தொழிநுட்பம், இணையம் யாவும் சாதிவாரி மாட்ரிமோனியலில் வந்து நிற்கவில்லையா? சாதிமறுத்த அல்லது கலப்பு மணத்துக்கான மாட்ரிமோனியல் ஏன் இதுவரை எங்கேயும் இல்லை?
இந்து மதம் சாதிய செங்கல்களால் கட்டப்பட்டது, ஆனால் இந்த செங்கல்களை எந்த சிமெண்டாலும் ஒட்டிவைக்க முடியாது, இதனால்தான் இந்து மதம் மிகப்பலவீனமானது. சாதீய செங்கல்கள் என்றைக்கு உருவப்படுமோ அல்லது சரியுமோ அன்றைக்கு இந்து மதம் என்ற கட்டுமானம் சரிந்து வீழும். கீழ்மட்ட செங்கல்கள் விழிப்புணர்வு பெறாத வரைதான் மேல்மட்ட செங்கலான பிராமணீயம் கோலோச்ச முடியும். தன் இருப்பை உறுதி செய்யும்பொருட்டே புராணம், இதிகாசம் போன்ற புளுகுமூட்டை போலி சிமெண்டால் கட்டுமானத்தை உறுதிசெய்ய பிராமணீயம் காலந்தோறும் கடுமையாக உழைக்கிறது.
கல்வி, வேலை, பொருளாதார வளர்ச்சி, அதன் நேர்மறை விளைவாக சமூக அந்தஸ்து, பொதுவெளியில் சம இடம் என கீழ்சாதியாக கருதப்படும் மக்கள் முன்னேறும்போது தர்மபுரி நத்தம் அண்ணாநகர், நாங்குநேரி சம்பவங்களை ஆதிக்க சாதியினர் அரங்கேற்றுவார்கள். கோகுல்ராஜுகளும் இளவரசன்களும் தலை துண்டிக்கப்படுவார்கள்.
இந்த சாதீய கட்டுமானத்தில் இருந்து வெளியேறும்போது, மீனாட்சிபுரத்தில் செங்கல்கள் உருவப்படும்போது இராம கோபாலன், சோ ராமசாமி தொடங்கி வாஜ்பேய் வரை பதட்டம் அடைகிறார்கள். அது உண்மையில் நாக்பூரின் பதட்டம்.
தன் சாதி, தன் குலசாமி, தன் சாதியில் பெண் ஆண் எடுப்பது என்பது வரை பிற சாதியினரை துன்புறுத்தாத இயல்பான நடவடிக்கையாக இந்து சாதீய சமூகம் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது, பல நூற்றாண்டுகளாக. என்றைக்கு கோபாலகிருஷ்ணன்களும் கீழவேளூர்களும் கையில் அரிவாளும் துப்பாக்கியும் தீவட்டியும் ஏந்துவார்களோ அன்றைக்கு அதே மொழியில் பதில் சொல்வதுதான் சரி, அதில் தவறில்லை. ஒரு கன்னத்தில் கோபாலகிருஷ்ணன் அறைந்தால் அவனது இரண்டு கன்னத்தையும் பிய்த்து எரிவதே சரி.
... ...
மதுரையில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது தல்லாகுளம் பெருமாள் கோயில் சுவர்களில் சில சுவரொட்டிகளை பார்த்தது இப்போதும் நினைவில் உள்ளது.
செல்லூர் கலைவாணர் என் எஸ் கே படிப்பகத்துக்கு என் பொதுஅறிவை வளர்த்ததில் மிகப்பெரிய பங்கு உண்டு. நாளிதழ்கள், வார இதழ்கள், விடுதலை, உண்மை, மக்கள் குரல், முரசொலி, தினமணி, சோவியத் நாடு உட்பட எல்லாமும் கிடைக்கும். தீக்கதிர், செம்மலருக்கு நான் சி ஐ டி யு கைத்தறி சங்கத்துக்கு செல்வேன். உண்மை, விடுதலையில் ஆர் எஸ் எஸ் பற்றி எழுதுவார்கள். புரிந்ததோ இல்லையோ,
பார்ப்பனர்கள், பார்ப்பனீயம், பெரியார் என வாசித்துள்ளேன்.
அந்த சுவரொட்டிகள் ஆர் எஸ் எஸ் சுவரொட்டிகள். '....ஆம் தேதி ....சோ ராமசாமி பேசுகிறார்' என்று பலமுறை பார்த்துள்ளேன். என் எஸ் கே படிப்பகத்தில் துக்ளக்கும் வாசிப்பேன், சினிமாவில் சோ ராமசாமியையும் பார்ப்பேன். எனவே சோ ராமசாமி காமெடியான ஆள் இல்லை என்பது புரிந்தது.
...
ஆவடியில் குடிவந்த பின் புது ராணுவசாலை எனப்படும் நியூ மிலிட்டரி ரோட்டில் அரசு மருத்துவமனை எதிரில் ஒருநாள் பி ஜெ பி பொதுக்கூட்டம் நடந்தது. 10க்கு 10 மேடை போட்டு நடத்தினார்கள். சிறப்பு பேச்சாளர் யார் தெரியுமா? எல் கே அத்வானி. 500 போலீஸ், இசட் பிரிவு, கருப்பு பூனை, செவப்பு நாய் என ஒரு கெடுபிடியும் இல்லை. நானும் வழக்கம்போல இரவு சாப்பாட்டுக்கு வள்ளியப்பன் மெஸ்ஸுக்கு போகும்போது அத்வானி பேசிக்கொண்டு இருந்தார். மேடைக்கு முன் 30, 40 பேர் கூட இல்லை. மக்கள் அவரவர் வேலையை பார்க்க போய்க்கொண்டே இருந்தார்கள்.
...
மதுரை பெருமாள் கோயில் சுவரொட்டியையும் அத்வானி கூட்டத்தையும் ஒரு 40 வருடங்களுக்கு முன் தமிழ் மக்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
இந்த 40 வருட கால அரசியலை திரும்பி பாருங்கள். 500 போலீஸ், இசட் பிரிவு, கருப்பு பூனை இல்லாத அத்வானியை இப்போது இன்றைய அரசியலில் கற்பனை செய்யுங்கள். முடியாது.
பெரியார் பிறந்த மண், அண்ணா பிறந்த மண்.... போதாது. கட்சி அரசியல், அன்றாட அரசியல் தற்காலிகமானவை, இந்துத்துவா சக்திகளுக்கும் அதன் சல்லி வேர்களான சாதீய அமைப்புகளுக்கும் எதிரான
தத்துவ போராட்டங்களில் திராவிட கட்சிகள் வெகுதூரம் பின் தங்கி உள்ளன என்பதை மறுக்க முடியாது. உத்தபுரம் சாதீய சுவர் சிக்கலில் திமுக தள்ளாடியதை மறுக்க முடியாது. பாப்பா பட்டி, கீரிப்பட்டி தலித் மக்கள் உரிமைக்காக இதே பெரியார், அண்ணா மண்ணில்தான் அயர்ச்சி தரும் மிக நீண்ட போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது என்பதை மறுக்க முடியாது. வேங்கைவயல், நாங்குநேரி ஆகியவை இவற்றின் நீட்சியே.
இந்துத்வா ஆர் எஸ் எஸ், சாதீய சக்திகளுக்கு எதிராக இடதுசாரிகளின் போராட்டம் அவர்களது சக்தியின் எல்லை வரைதான் நீண்டுள்ளது, நீள முடியும். இந்த தளத்தில் இடதுசாரிகளை விடவும் வலிமை வாய்ந்த திராவிட கட்சிகள்தான் சாதீய சக்திகளுக்கு எதிராக வெளிப்படையான சமரசம் அற்ற போரை இடதுசாரி, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நடத்த முடியும். அதற்கு அடிப்படையாக தமது கட்சிகளுக்குள்ளும் இயக்கங்களுக்குள்ளும் உள்ளாய்ந்த ஆய்வை இப்போதாவது தொடங்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக