தொழிற்சங்கங்களும் வர்க்கஅரசியலும்
பாதுகாப்பு துறையில் பழமையான தொழிற்சங்க சம்மேளனம் எனில் அது அருணா ஆஷப் அலி, எஸ் எம் பானர்ஜி போன்ற பெருந்தலைவர்களால் நிறுவப்பட்ட All india defence employees federationதான். CITU, AUTUC, HMS ஆகிய இடதுசாரி தொழிற்சங்கங்களின் கூட்டுத்தலைமையால் வழிநடத்தப்படும் சம்மேளனம் இது. Services எனப்படும் மூன்று ஆயுதப்படைகளின் சீருடை அணிந்த ஊழியர்கள் தவிர மற்ற சிவிலியன் பணியாளர்கள் அனைவருமே தொழிற்சங்கங்களில் உறுப்பினர்கள் ஆகலாம். AIDEF தவிர INTUC, BMS ஆகிய அகில இந்திய அளவிலான சம்மேளனங்களும் பாதுகாப்புத்துறையில் உள்ளன.
அகில இந்திய அளவில் இந்த மூன்று சம்மேளனங்களுடன் இணைக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் இருந்தாலும் அந்தந்த மாநிலங்களில் இயங்கும் பிராந்திய அளவில் ஆன (அல்லது லெட்டர்பேட் கட்சிகளால் தொடங்கப்படும் லெட்டர்ப்பேட் தொ. சங்கங்கள்) தொழிற்சங்கங்களும் உள்ளன. உதாரணமாக தமிழ்நாட்டில் அ இஅதிமுக, திமுக, பா ம க உள்ளிட்ட கட்சிகள் தமக்கான தொ.சங்கங்களை வைத்துள்ளன, ஆம், வைத்துள்ளன. நடிகர் விஜய் இப்போது ஒரு தொழிற்சங்க பேரவை தொடங்கியுள்ளதாக அறிகிறேன்.
பாதுகாப்புத்துறை தொழிலாளர்களின் பொருளாதார கோரிக்கைகள், நிர்வாகம், ஆட்குறைப்பு, வேலைப்பளு குறைப்பு, தனியார்மயமாக்கல் போன்ற கோரிக்கைகள் எழும்போது ஒன்றியத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் AIDEF சம்மேளனம் முன்னெடுக்கும் கோரிக்கைகளின் நியாயத்தை, போராட்டங்களை முற்றாக புறக்கணித்துவிட்டு அனைத்து சங்கங்களும் வேறுபாடு எதுவும் இன்றி ஒரே அணியில் நின்று எதிர்ப்பார்கள்.
ஆட்சியில் இருப்பது திமுகவா அதிமுகவா அல்லது காங்கிரசா பிஜேபியா என்ற வேறுபாடு இன்றி இந்த AIDEF ஐஎதிர்ப்பது என்ற ஒற்றைப்புள்ளியில் INTUC, BMS, உள்ளூர் சங்கங்கள் ஒன்றிணைந்து தொழிலாளர்கள் போராட்டத்தை முறியடிப்பார்கள். வேலை நிறுத்த போராட்டங்களின்போது போலீஸ் துணையுடன் கார்களில் வேலைக்கு ஆளை அனுப்பி கருங்காலித்தனத்தில் ஈடுபடுவார்கள். தொழிற்சங்க இயக்கத்தில் இருந்த நான் இத்தகைய கருங்காலித் தனங்களை நேரடியாகப் பார்த்துள்ளேன்.
இந்த பிளவுவாத அரசியலும் கருங்காலித்தனமும் இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஒட்டுமொத்த படைத்துறை தொழிற்சாலைகளும் ordnance factories இரண்டு வருடங்களுக்கு முன் இப்போதுள்ள அரசால் corporation நிறுவனங்களாக மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த முடிவை ஏற்க விருப்பம் இல்லாத தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த தொழிற்சாலைகள் இப்படி corporatization ஆக்கப்படும், அதை எதிர்த்து அனைவரும் ஒரு குடையின் கீழ் திரண்டு போராட வேண்டும் என்று வெகு நீண்டகாலமாக AIDEF போராடியபோதெல்லாம் எதிர்முனையில் நின்று அந்த போராட்டங்களை முறியடிக்க கூட்டணி சேர்ந்தவைதான் இந்த மற்ற சங்கங்கள். இவற்றில் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவையும் அடக்கம். இப்போது AIDEF உடன் வேறுபாடு இன்றி அனைத்து சங்கங்களும் வீதியில் நின்று போராடுகிறார்கள்.
... ...
தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஏறத்தாழ எட்டு வருடங்களாக தமக்கு தரப்பட வேண்டிய பஞ்சப்படியை தர வேண்டும் என்ற கோரிக்கை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை தொடங்கி உள்ளனர். போக்குவரத்து துறை ஓய்வூதியர்களுக்கும் இந்த பஞ்சப்படி நிலுவையில் உள்ளது.
அதே கதைதான். அதிமுக ஆட்சியில் இருந்தால் அ தொ ச பேரவை போலீஸ் துணையுடன் போராட்டத்தை உடைப்பதும் ஓட்ட தெரிந்தவர்கள் வந்து வண்டி ஓட்டுங்கள் என்று அரசு அறிவிப்பதும் நடக்கும். திமுக ஆட்சியில் இருந்தால் தொ மு ச போலீஸ் துணையுடன் போராட்டத்தை உடைப்பதும் ஓட்ட தெரிந்தவர்கள் வந்து வண்டி ஓட்டுங்கள் என்று அரசு அறிவிப்பதும் நடக்கும்.
இப்போதும் அமைச்சர் அதைத்தான் செய்துள்ளார். தொ மு சங்கத்தினரை வைத்து வண்டிகளை ஓட்டுவோம் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்.
எட்டு ஆண்டுகள் பஞ்சப்படி நிலுவைத்தொகை தனக்கும் எல்லாருக்கும் ஆன கோரிக்கைதான் என்பதை சங்க வேறுபாடு இன்றி எல்லா தொழிலாளர்களும் உணர்ந்தால் எல்லாருக்கும் பொதுவான கோரிக்கை வெற்றி பெறும். இது மட்டுமல்ல இதில் அடங்கியுள்ளது. போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்தையும் தனியாருக்கு விற்றுவிட வேண்டும் என்ற ஒன்றிய பி ஜெ பி அரசின் தொழிலாளர் விரோத போக்குக்கு சாதகமான 'வரவு, செலவு, ஊதியம், போனஸ், நஷ்டம்' என்ற வழக்கமான பாட்டை அதிமுக, திமுக அரசுகள் கட்சி வேறுபாடின்றி பின்பாட்டுபாடுவது ஒட்டுமொத்த போக்குவரத்து துறையையும் தனியாருக்கு விற்பதில் முடியும்.
மின்சாரத்துறையில் தனியார்மயம் அநேகமாக பாதி அளவுக்கு உள்ளே வந்துவிட்டது. இந்த அபாயத்தை மின்சார வாரிய ஊழியர்கள் தொடர்ந்து ஒலிக்கிறார்கள். ஸ்மார்ட் மீட்டர் திட்டம் உண்மையில் அநேகமாக பல ஆயிரம் ஊழியர்களின் வேலைக்கு ஆப்பு வைக்கும் திட்டம். மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது தனி. கட்சி அரசியல் ஊழியர்களை ஒருசேர விடாமல் பிரிக்கிறது என்பதை விட தனியார் பெருமுதலாளிகளுக்கு சாதகமான சுயநல சக்திகள் திட்டமிட்டு தொழிலாளர்களை பிரித்து வைக்கின்றன என்பதே உண்மை.
மாநில அரசு இந்த விஷயத்தில் கனத்த மவுனத்தை கடைப்பிடிக்கிறது. எந்த கட்சியை சேர்ந்த தொழிலாளியாக இருந்தாலும் வேலை இருந்தால்தான் வயிற்றை கழுவ முடியும். மிக எளிய உண்மை இது. படைத்துறை தொழிற்சாலைகள் corporate மயம் ஆக்கப்பட்ட அனுபவம் அதைத்தான் சொல்கிறது.
...
8.1.24 முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக