வியாழன், ஆகஸ்ட் 14, 2025

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர் போராட்டமும் கார்பொரெட் முதலாளியமும்

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகள் மொத்தம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில், 2020ம் ஆண்டில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 5 மண்டலங்களில் ராயப்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு இரவு, பகலாக போராடி வருகின்றனர். இரு மண்டலங்களை சேர்ந்த சுமார் 2,000 தூய்மை பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ரூ.6,000 என இருந்த தங்களின் சம்பளம், கடந்த 10-15 ஆண்டுகளில் படிப்படியாக ரூ. 23,000 என உயர்ந்துள்ளதாகவும் தனியார்வசம் சென்றால் தங்கள் சம்பளம் ரூ. 16 ஆயிரமாக குறைக்கப்படலாம் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
"ஆகஸ்ட் 1-ஆம் தேதி வழக்கம்போல பணிக்கு சென்றபோது, 'ஒப்பந்த வேலையில் இருப்பதாக இருந்தால் மட்டுமே வேலை, இல்லையென்றால் வேலை இல்லை' என தங்களிடம் கூறப்பட்டதாக" தூய்மை பணியாளர்கள் கூறுகின்றனர்.
- 2025 ஆகஸ்ட் 12க்கு பிபிசியில் நியுஸ் இணைய இதழ் செய்தி.
...
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று (ஆக. 13) இரவில் அவர்களை காவல்துறையினர் கைது செய்து தென் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் கீழ்கட்டளை, நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடுவாங்கரை, பரங்கிமலை என, பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் அடைக்கப்பட்டனர்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், போராட்டக்காரர்களை கைது செய்து பேருந்துகளில் அழைத்துச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.
- 2025 ஆகஸ்ட் 13 பிபிசி நியுஸ் இணைய இதழ் செய்தி.
...
இந்தப் போராட்டத்தை AICCTU, LUTC ஆகிய இரண்டு தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைத்து நடத்தின. ஆகஸ்ட் 13/14 நள்ளிரவு 12 மணிக்கு மேல் போலீஸ் படை போராடும் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக வழக்கறிஞர்கள் நிலவுமொழி செந்தாமரை, சம்ஸ் வளர்மதி ஆகியோர் மீது இரவு முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்டு கை, கால்கள் முறிக்கப்பட்டு போலீஸ் வண்டியில் ஏற்றப்பட்டு மறுநாள் 14ஆம் தேதி பகலிலும் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் ஜி செல்வா நேரில் சென்று காவல்துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளிகள் முகநூலில் வந்தன.  மாலையில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் செல்வா உரையாற்றும்போது, "காயம் அடைந்த இரண்டு வழக்கறிஞர்களையும் நம்பர் ப்ளேட் இல்லாத வாகனத்தில் ஏற்றி ஸ்டான்லி மருத்துவமனை, சேத்துப்பட்டு காவல் நிலையம், கிண்டி, வேளச்சேரி, அங்கிருந்து சிம்சன், ஸ்பென்சர் ப்ளாசா வழியாக அண்ணாசாலை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தார்கள்.  குடிப்பதற்கு குடிநீர் கூட காவல்துறை அவர்களுக்கு வழங்கவில்லை" என்று குற்றம் சாட்டினார். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் காவல்துறை சீருடை எதுவும் அணிந்திருக்கவில்லை. காவல்துறையினரில் பலரது சீருடையில் அவர்களது பெயர் பொறித்த பேட்ஜ் காணப்படவில்லை. 
பிற்பகலில் வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப்பின் இரவில் இரண்டு வழக்கறிஞர்களும் விடுதலை செய்யப்படுள்ளனர்.
 
...
Minimum wages act, 1948, அதாவது குறைந்த பட்ச கூலி சட்டம் 1948 என்ற சட்டம் மிக முக்கியமான ஒன்று. 1948 மார்ச் மாதம் 15ஆம் தேதி இயற்றப்பட்ட சட்டம். அதாவது நாடு விடுதலை அடைந்த ஏழு மாதங்களில் இயற்றப்பட்ட சட்டம் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.
இச்சட்டத்தின் தலையாய நோக்கமே, இந்தியாவில் எந்த ஒரு தொழிலாளியும் எவராலும் கூலி அல்லது ஊதியம் தரப்படாமல் ஏமாற்றப்படக்  கூடாது, அதே நேரத்தில் அந்தந்த தொழிலுக்கான நியாயமான கூலி அல்லது ஊதியம் தரப் பட வேண்டும் என்பதுதான். ஒரு நியாயமான குறைந்த பட்ச ஊதியம் இருக்க வேண்டும் என்பதே. இங்கே அதிக பட்ச கூலி பற்றிப் பேச படவில்லை என்பதன் பொருளே குறைந்த பட்ச கூலியையாவது தொழிலாளி பெற வேண்டும் என்பதுதான்.
இச்சட்டத்தின்படி ஒவ்வொரு தொழிலுக்கும் அதற்கான குறைநதபட்ச கூலி ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை திருத்தப்படுகிறது, அதாவது உயர்த்தப் படுகிறது. கூடவே ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை அடிப்படை ஊதியத்துடன் variable dearness allowance எனப்படும் பஞ்சப்படியும் திருத்தப்பட்டு உயர்த்தப்படுகிறது.
இதன் பொருள் தெளிவானது. அரசுத்துறையில் service contract எனப்படும் சேவை துறை ஒப்பந்தம் எடுக்கிற தனியார் கான்றாக்டர்கள் தம் கீழ் பணி செய்யும் contract தொழிலாளர்களுக்கு இந்த குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ்தான் ஊதியம் வழங்க முடியும், அதற்கு குறைவாக ஊதியம் வழங்க முடியாது. முக்கியமான சட்டப்பிரிவு என்னவெனில் principal employer என்ற அரசு, இந்த குறைந்த பட்ச ஊதியத்தை குறிப்பிட்ட தனியார் காண்ட்ராக்டர் அதாவது முதலாளி அந்த  ஒப்பந்தத்தின் கீழ் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு சரியாக கொடுக்கிறாரா என்று உறுதி செய்ய வேண்டும். அதற்கான பொறுப்பு responsibility அரசுக்கு அதாவது குறிப்பிட்ட அரசுத்துறை நிறுவனத்தின் தலைவருக்கு உண்டு. இந்த வகையில் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதிய சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் ஊதியம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு responsibility சென்னை மாநகராட்சி மேயர்க்கு உள்ளது.
இச்சட்டம் இயற்றப்பட்டு 77 வருடங்கள் ஆகின்றது. 90களுக்கு முன்பு இருந்த தொழில் சார்ந்த முதலாளி - தொழிலாளி உறவுக்கும் 90களுக்கு பின்பான தனியார் மயம், உலக மயம், தாராளமய கொள்கையின் பின்னணியில் ஆன உறவுக்கும் மலையளவு வேறுபாடு உள்ளது. 
உலகளாவிய கார்பொரேட் முதலாளியம், ஏற்கனவே தொழிலாளி வர்க்கம் உயிரை இழந்து பெற்ற உரிமைகளையும் சட்டங்களையும் முற்றாக ஒழித்து விட வேண்டும் என்பதில் மிக தீவிரமாக உள்ளது. இந்தியாவில் இது ஏற்கனவே உள்ள தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துவிட்டு நான்கு வழிகாட்டு நெறிகளாக codes மாற்ற வேண்டும் என்ற புதிய வடிவில் ஒன்றிய அரசால் முன்னெடுத்து செல்லப் படுகிறது. அதாவது கார்பொரேட் முதலாளியத்துக்கு ஆதரவாக.
இந்தப் பின்னணியில்தான் அரசுத்துறை ஒழிக்கப்பட்டு தனியார் மயம் ஊக்குவிக்க படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களை ஒழிப்பது அல்லது தனியாருக்கு விற்று விடுவது என்று
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தீவிரப் படுத்தப் பட்டது. அதன் பின் வந்த ஆட்சிகளும் அதை தொடர்கின்றன.
விளைவாக அரசுத்துறை ஒழிவதால் இட ஒதுக்கீடு, சமூக நீதி ஆகிய அடிப்படை உரிமைகள் தொடர்ந்து ஒழிக்கப் படுகின்றன. சமூகத்தின் அடித்தட்டு மக்கள், பட்டியல் இன மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசுதுறைகளில் நுழைவது அநேகமாக ஒழிக்கப்பட்டது.  தனியார் முதலீடு, சர்வதேச கார்பொரேட் முதலீடு ஆகியவை கட்டற்ற வெள்ளம் என இந்தியப் பொருளாதாரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டன.
...
சென்னை மாநகராட்சி ஊழியர் விவகாரம் இந்த நீண்ட பிரச்னையின் ஒரு வடிவம் அல்லது பகுதியே. இது போன்ற அரசு - தனியார் கூட்டணி கொள்ளை நடக்கும் என்று அன்றைய முன்னோர்கள் முன்னுணர்ந்துதான் குறைந்த பட்ச கூலி சட்டத்தை நிறுவினார்கள். இன்று அதற்கும் பாதகம் வந்து விட்டது. சென்னை மாநகராட்சி நிர்வாகமும் தமிழக அரசும் இந்த சட்டத்தை மீறுகின்றன என்பதுதான் இதன் பொருள். தனியார் முதலாளியின் பக்கம் வெளிப்படையாக நிற்கின்றன.
... 
வேலை நேரத்தை எட்டு மணியில் இருந்து பத்து, பன்னிரெண்டு மணி நேரமாக உயர்த்துவதில் இடதுசாரிகளை தவிர பிற கட்சிகள் அனைத்தும் வேறுபாடு இன்றி பேரார்வம் காட்டி வருகின்றனர். பல மாநிலங்கள் இதை செய்ய முயற்சித்து தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் பலத்த எதிர்ப்புக்கு பிறகு பின்வாங்கி கைவிட்டு உள்ளார்கள்.
அசாம் பிஜேபி, கோவா பிஜேபி, குஜராத் பிஜேபி, ஹரியானா பிஜேபி, ஹிமாச்சல் பிரதேஷ் காங்கிரஸ், மத்திய பிரதேஷ் பிஜேபி, ஒடியா பிஜேபி, பஞ்சாப் ஆம் ஆத்மி, ராஜஸ்தான் பிஜேபி, உத்திர பிரதேஷ் பிஜேபி, உத்திரகாண்ட் பிஜேபி ஆகிய மாநில அரசுகள் 12 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளன.
சத்தீஸ்கர் அரசு (பிஜேபி), கர்நாடகா அரசு ( காங்கிரஸ்) ஆகியன 10 மணி நேரமாகவும் உத்தரகாண்ட் பிஜேபி அரசு 11 முதல் 12 மணி நேரம் ஆக உயர்த்த முயற்சி செய்தன. 
ஜூன் மாதத்தில் NDA அணியில் உள்ள கம்யூட்டர் சி எம் சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேச அமைச்சரவை 10 மணி நேரமாக உயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
திமுக ஆளும் தமிழக அரசு 12 மணி நேரமாக உயர்த்தும் திருத்தத்தை அங்கீகரித்து தொழிற்சாலைகள் சட்டம் 1948-யில் அதற்கான திருத்தங்களையும் கோரியது. சக கூட்டணி கட்சிகளின் பலத்த எதிர்ப்பு இந்த முயற்சியில் இருந்து அரசை பின்வாங்க செய்தது.
இடதுசாரி கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளா  இது போன்ற எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. 
14 மணி நேரம் 16 மணி நேரம் 18 மணி நேர உழைப்பு என்று தொழிலாளர்கள் சக்கையாக கசக்கி பிழியப்பட்டு குப்பையில் எறியப்பட்ட வரலாறு இருந்தது.
எட்டு மணி நேர வேலைக்கான போராட்டம் 1800 களின் தொடக்கத்தில் இருந்தே தொழிலாளர் வர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்டது என்பது வரலாறு. 1800 களின் பிற்பகுதியில் இதற்கான போராட்டம் உலகெங்கும் தீவிரமடைந்தது. 
1886 சிகாகோ போராட்டம்,  தொழிலாளர்கள் உயிரிழப்பு, மே தின வரலாறு ஆகியவற்றை இங்கே விரிவாக குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
பதிவின் நோக்கம் என்னவெனில், இடதுசாரி கம்யூனிஸ்ட்களை தவிர மற்ற அனைவருமே தொழிலாளர்களுடைய நலனிலும் தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் எந்த அளவுக்கு உறுதியுடன் இருக்கிறார்கள் அல்லது எந்த அளவுக்கு முதலாளிய கார்ப்பரேட் கம்பெனிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் பெருத்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதுதான்.
தமிழக அரசின் தொழிலாளர் நல அணுகுமுறை, தொழிற்சங்க அணுகுமுறை எவ்வாறு உள்ளது? 
தென்கொரிய பன்னாட்டு முதலாளிய நிறுவனம் ஆன சாம்சங்  இங்கே சுங்குவார்சத்திரத்தில் தொழில் தொடங்கினர்.
2024 ஜூலை மாதம் தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தை உருவாக்கினார்கள். சாம்சங் நிர்வாகமும் தொழிலாளர் கமிட்டி என்ற ஒரு பொம்மை சங்கத்தை உருவாக்கி அதில் தொழிலாளர்களை சேரச்சொல்லி நிர்பந்தம் செய்தது. இந்த தந்திரத்தை தொழிலாளர் வர்க்கம் நூறு வருடங்களுக்கு மேலாக பார்த்து வருகிறது. சி ஐ டி சங்கத்தின் பெயரில் இருந்த சாம்சங் என்ற சொல் நிர்வாகத்துக்கு வேப்பங்காயாக கசந்தது. 2024ஆம் வருடத்துக்கான போனசை தர மறுத்தது. 
இதனைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் முன்வைத்த முக்கியமான கோரிக்கை 8 மணி நேர வேலை என்பதாகும். இக்கோரிக்கை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. 
இதே திமுக அரசுதான் 2023 ஆம் ஆண்டு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரம் எனத் திருத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. மட்டுமின்றி 1948 தொழிற்சாலைகள் சட்டம் அதாவது factories act 1948 இல் எட்டு மணி நேரத்துக்கு பதிலாக 12 மணி நேரம் வேலை என்று ஒரு திருத்தத்தையும் இந்த தீர்மானம் கோரியது. இந்த அப்பட்டமான தொழிலாளர் விரோத திட்டத்தை தமிழக மக்களும் அரசியல் கட்சிகளும் சேர்ந்து முறியடித்த பின் திமுக அரசு பின்வாங்கியது, தீர்மானத்தை திரும்ப பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் தொழிலாளர்கள் தமது போராட்டத்தை தொடங்கினார்கள். இது சாம்சங் நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்குமான பிரச்சனை என்பதால் சட்டப்படியாகவும் நியாயமாகவும் இதில் தொழிலாளர் நலத்துறை மட்டுமே தலையிட முடியும். ஆனால் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த் துறையும் காவல்துறையும் தொழிலாளர்களை மிக கேவலமாக நடத்தியது வரலாறு. தொழிலாளர்களை வீடு புகுந்து கைது செய்தார்கள். தொழிலாளர்கள் அந்த சுற்று வட்டாரத்தில் கூட்டம் போடக்கூடாது என்று தடை விதித்தார்கள். தவிர சுங்குவார்சத்திரத்தின் பொதுமக்கள் இந்த போராடுகின்ற தொழிலாளர்களுக்கு எந்த விதத்திலும் எந்த வடிவத்திலும் உதவி செய்யக்கூடாது என்று மிக மோசமான சர்வாதிகார அடக்குமுறையில் இறங்கினார்கள். இந்த மூன்று துறைகளும் திமுக அரசின் துறைகள்தான். குறிப்பாக காவல்துறை முதலமைச்சர் சொந்த பொறுப்பில்தான் உள்ளது.
மட்டுமின்றி அக்டோபர் 24ஆம் தேதி தொழிலாளர்களுடைய போராட்ட பந்தலை பிரித்து எரிந்தது மாவட்ட வருவாய்த்துறை என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். 
ஆக முற்றாக பன்னாட்டு முதலாளி ஒருவருக்கு சாதகமாக தமிழக அரசும் அதிகாரிகளும் இருந்தனர் என்பது வெளிப்படை. ஒரு கட்டத்தில் சிஐடியு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கானது தொழிற்சங்க பதிவுக்கு ஆனது,  அங்கீகாரத்துக்கு அல்ல. சென்னை உயர்நீதிமன்றம், டிசம்பர் மாதம், இந்த விவகாரத்தில் தொழிலாளர் நலத்துறை ஆறு வாரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லி உத்தரவிட்டது. தொழிலாளர்கள் அக்டோபர் 16ஆம் தேதி தமது 37 நாள் போராட்டத்தை முடித்துக் கொண்டார்கள்.
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை எவ்வாறு நடந்து கொண்டது? நீதிமன்றம் குறிப்பிட்ட அந்த ஆறு வார கெடு முடிகின்ற அந்த இறுதி நாள் மாலை நேரத்தில்தான், அதாவது அலுவலகத்தை பூட்டிவிட்டு வெளியே செல்லும் முன் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை தொழிற்சங்க சட்டம் 1926 இன் கீழ் பதிவு செய்து ஆணை பிறப்பித்தது. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் அன்று மாலைக்குள் சாம்சங் நிர்வாகத்துக்கு சாதகமாக ஏதாவது ஒரு மாயாஜாலம் நடந்து விடாதா என்று திமுக அரசின் தொழிலாளர் நலத்துறை எதிர்பார்த்து ஏங்கி இருந்தது என்று சொல்வதில் தவறில்லை. 
விவகாரம் இத்தோடு முடியவில்லை. தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் பன்னாட்டு முதலாளியான சாம்சங் நிர்வாகம் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போராட்டத்திற்கு ஆதரவாளர்கள் என ஏறத்தாழ 30 பேரை பணியிடை நீக்கம் செய்தது. பணியில் இருந்தவர்கள் மீது தொழிற்சாலைக்குள் கடுமையான அடக்குமுறை, கடுமையான வேலைகளை கொடுப்பது, பல்வேறு வகையிலும் தொந்தரவுகளைக் கொடுப்பது என்று அனைத்து வகை கொடுமைகளையும் செய்தது. 
...
திமுக அரசு ஆட்சியில் தொடர்வதற்கான அரசியல் சூழ்நிலைகளும் நியாயங்களும் இருக்கவே செய்கின்றன.
ஆனால் இந்த அரசின் தொழிலாளர் விரோத போக்கையும் வருவாய்த்துறை, காவல்துறை, தொழிலாளர் நலத்துறை ஆகிய துறை அதிகாரிகளின் அடக்குமுறை தர்பாரையும் ஆணவ திமிரையும் சுட்டிக்காட்டாமலும் கண்டிக்காமலும் இருக்க முடியாது. இன்று சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பிரச்சனையில் நடப்பதும் இதுதான்.


 


கருத்துகள் இல்லை: