வியாழன், ஆகஸ்ட் 07, 2025

என் வெங்கடாசலம் கடத்திக் கொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

என் வெங்கடாசலம் கடத்திக் கொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

தீக்கதிர் வார ஏடு 9.10.1977. 

*என் வெங்கடாசலம் நிலப்பிரபுகளுக்கு எதிராக விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டி இயக்கம் நடத்தினார் 

*ஊழல்களை அம்பலப்படுத்தினார்

*ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஹரிஜன மக்களுக்கும் பக்கபலமாக நின்றார் 

*மார்க்சிஸ்ட் கட்சியையும் விவசாய இயக்கத்தையும் வெகுஜன ஸ்தாபனங்களையும் கட்டுவதில் முன்னணியில் நின்றார்

கொத்தடிமைத்தனமும் கொடுங்கோன்மையும் கொடிகட்டிப் பறக்கும் தஞ்சை மாவட்டத்தில் அரிசன விவசாயத் தொழிலாளர்களின் விடுதலைக்காகவும் பிற்பட்ட மக்களின் நல உரிமைகளுக்காகவும் வாழ்நாள் பூராவும் பாடுபட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவரை, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவரை, 'தலைவர்' என்று பொது மக்களாலும் என்வி என்று கட்சி ஊழியர்களாலும் அன்பாக அழைக்கப்பட்டு வந்த தோழர் என் வெங்கடாசலத்தை நிலப்பிரபுக்களும் அவர்களது அடியாட்களும் படுகொலை செய்து பழி தீர்த்து விட்டார்கள். 

தங்கள் அன்புத்தலைவனின் இக்கொலைச் செய்தி கேட்டு தஞ்சை மாவட்டம் முழுவதிலும் உள்ள விவசாயத்தொழிலாளர்கள் ஆத்திர ஆவேசத்துடன் கொதிக்கிறார்கள். 

காவல்துறைக்கு ஒரு சவால்: 

இதுவரை அவர் உடல் கிடைக்கவில்லை. " கிடைக்க முடியாத அளவுக்கு செய்து விட்டு எங்களுடைய சம்பிரதாயத்தை முடித்து விட்டோம்" என்று வெங்கடாசலத்தின் வீட்டிற்கே தபாலும் எழுதி இருக்கிறார்கள். 

இந்தக் கொடுமையை கண்டித்தும் அரசாங்கம் உண்மையான கொலைகாரர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் 4.10.1977 அன்று தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து கண்டன ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தினார்கள். தமிழகத்தின் ஏனைய இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்கும்படி மகசர்களும் சமர்ப்பித்து உள்ளனர். தாலுகா தலைநகரங்களில் அதிகாரிகளிடம் தங்களது ஆத்திரத்தையும் கோரிக்கையையும் வலியுறுத்தி மக்கள் மகசர் கொடுத்தனர்.

தோழர் வெங்கடாசலம் படுகொலையை விவசாய இயக்க முன்னோடியான வீரன் களப்பால் குப்புவை விஷமிட்டு கொன்ற நிகழ்ச்சி போன்றது எனவும் வெண்மணியில் 44 ஹரிசன மக்களை ஒரு குடிசையில் வைத்து நெருப்பிட்டு படுகொலை செய்த கோர நிகழ்ச்சி போன்றது எனவும் எல்லோரும் கருதுகிறார்கள். தஞ்சை மாவட்டம் முழுவதும் லட்சோப லட்சம் மக்களின் அன்பாதரவைப் பெற்ற ஒரு தலைவரை கொலை செய்து விட்டு தப்பி விடலாம் என்று கருதுபவர்கள் மாநில அரசின் காவல்துறைக்கு சவால் விட்டு இருக்கிறார்கள். விவசாயிகள் இயக்கத்திற்கு சவால் விட்டு இருக்கிறார்கள். 

தீக்கதிர் சிறப்பு நிருபர்:

தோழர் ஜி வீரையனுடன் கொலை பற்றி விவரங்களை அறிய தீக்கதிர் உதவி ஆசிரியர் ஐ மாயாண்டி பாரதி அனுப்பப்பட்டார். அவர் திருவாரூரில் உள்ள தஞ்சை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு சென்று கட்சியின் செயலாளர் தோழர் ஜி வீரையனை பேட்டி கண்டார். அவர் தோழர் என் வெங்கடாசலத்தின் போராட்ட வரலாறுகளையும் கொலையின் பின்னணியையும் விளக்கிக் கூறினார் அவர் தெரிவித்த விவரமாவது: 

தஞ்சைத் தாலுகா வெண்டயம் பட்டி பஞ்சாயத்தில் இராயமுண்டான்பட்டி, சொரக்குடிபட்டி, வெண்டயம்பட்டி, புதுக்குடி என்ற கிராமங்கள் உள்ளன. இராயமுண்டான்பட்டியில் தோழர் வெங்கடாசலம் வீடு இருக்கிறது ஜானகிராமன் என்ற பெருமாள் வீடு இருக்கிறது. இராயமுண்டான்பட்டிக்கு சோளகம்பட்டி ரயில் நிலையத்திலிருந்து தெற்கு நோக்கி ஓர் ஒற்றையடி மண் பாதை மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளது. ரயிலை விட்டு இறங்கி செல்பவர்களுக்கு சிறிது தூரம் சென்றவுடன் வலப்புறமாக இரண்டு பர்லாங்கு தூரத்தில் ஒரு தோப்பின் நடுவே ஒரு ஓட்டு அடுக்கு வீடு இருப்பதை காண முடியும். அது சொரக்குடி .பட்டி மிராசுதார் பெருமாளின் ஓய்வு விடுதி. அதைச் சுற்றிலும் அவருக்கு வேண்டியவர்கள் வசிக்கிறார்கள். அந்த வட்டாரத்து நிலமெல்லாம் பெருமாள் மிராசுதாருக்கு சொந்தம். அவருக்கு திருவரம்பூரில் சொந்தமாக வீடு உள்ளது. அவரது பண்ணை நிலங்கள் ஸ்ரீரங்கத்து ஐயங்கார் ஒருவருக்கு சொந்தம். அதை இவர் வசமே வைத்துள்ளார். அத்துடன் அதை ஒட்டி உள்ள புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்து வசப்படுத்தி உள்ளார். 

ஆக்கிரமிப்பைத் தடுத்தார்: 

அதுவும் போதாது என்று மீதமுள்ள புறம்போக்கு நிலங்களையும் வளைத்துக் கொள்ள பெருமாள் முயற்சிப்பதை அறிந்த தோழர் வெங்கடாசலம் தலையிட்டு தடுத்து மாஜி ராணுவத்தினருக்கும் அங்குள்ள நிலமற்ற அரிசனங்கள், கோனார்கள், செட்டியார்கள், உடையார்கள், கள்ளர்கள் போன்ற ஏழைக்குடியானவர்களுக்கும் சொந்தமாக்க நடவடிக்கை எடுத்தார். சுமார் 300 ஏக்கர் வரை இவ்வாறு எடுத்து பட்டா வாங்கிக் கொடுத்து இருக்கிறார். அதில் வீடுகளும் வயல்களும் போட்டிருக்கிறார்கள்.

ரயிலிலிருந்து இராயமுண்டான்பட்டி செல்கிறவர்கள் இரண்டு கிலோமீட்டர் சென்றால் வலப்புறமாக மாஜி ராணுவத்தினர் வீடு போட்டு வசிப்பதைக் காண முடியும்.

தண்ணீர்த் தகராறு:

அந்த நிலங்களை, தான் விஸ்தரித்துக் கொள்ள முடியவில்லை என்று பெருமாளுக்கு ஆத்திரம்!

அத்துடன் இந்த பெருமாள் வைத்துள்ள நிலங்கள் மூலமாகத்தான் மாஜி பட்டாளத்தாரின் வயல்களுக்கும் இதர ஏழை மக்களின் வயலுக்கும் பாசனத்திற்கு தண்ணீர் வர வேண்டும். ஆனால் ஒவ்வொரு வருடமும் அந்த பெருமாள் தண்ணீர் விடாமல் தகராறு செய்வது உண்டு. 

பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பெருமாள் ரூபாய் 200, 300 என்று வாங்கிக்கொண்டு தண்ணீர் விடுவாராம். இதுவரை இந்தப் பெருமாளுக்கு இது வழக்கமாக இருந்து வருகிறது.

இப்பிரச்சனையில் விவசாயிகள் சங்கத் தலைவரான வெங்கடாசலத்திற்கும் மிராசுதாரரான பெருமாளுக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்படும். வெங்கடாசலம் பயம் அறியாதவர். ஏழைகள் பக்கம் உறுதியாக இருப்பவர். "இவருக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்? தண்ணீர் பாய்ச்சுங்கள்!" என்று விவசாயிகளிடம் சொல்லுவார். அப்படி செய்ததும் உண்டு. இதனால் பெருமாளுடைய வருமானத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. இது ஒரு தகராறு. 

தேர்தல் தகராறு:

அடுத்து தேர்தல் தகராறும் உண்டு. 1965 ஆம் ஆண்டு தோழர் என் வெங்கடாசலம் கடலூர் சிறையில் பாதுகாப்பு கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். அப்போது பஞ்சாயத்து தேர்தல் வந்தது. சிறைக்குள் இருந்தே போட்டியிட்டார். தலைவர் தேர்தலில் வெங்கடாசலத்தை எதிர்த்து இதே பெருமாள் ஒரு செட்டியாரை நிறுத்தி வைத்து தீவிரமாக வேலை செய்தார். வெங்கடாசலத்திற்கு ஓட்டளிக்க கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்களான பஞ்சாயத்து உறுப்பினர்களை பெருமாள் கடத்திக் கொண்டு போய்விட்டார். ஆனால் தேர்தல் நாள் அன்று அவர்கள் வந்து வாக்களிக்கும் போது வெங்கடாசலத்துக்கே வாக்களித்து விட்டார்கள். வெங்கடாசலம் வெற்றி பெற்றார்.

இதன் தொடர்பாக பெருமாளுக்கும் வெங்கடாசலத்தின் குடும்பத்தினருக்கும் இடையே அடிதடி நடந்து வழக்குகளும் நடந்தன. பிறகு 1966 ஜூலையில் வெங்கடாசலம் விடுதலையானார். 

1970 இல் பஞ்சாயத்து தேர்தல் வந்தது. வாக்காளர்களே நேரடியாகத் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை அமலுக்கு வந்தது. தலைவர் தேர்தலுக்கு தோழர் வெங்கடாசலம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மிராசுதார் பெருமாளே நேரடியாகப் போட்டியிட்டார். வாக்காளர்களின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பெருமாள் தான் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்து அடியாட்களை ஏவி கலகத்துக்குத் திட்டமிட்டார். என்றாலும் வெங்கடாசலமே வெற்றி பெற்றார். தான் ஒரு பெரிய பணக்காரனாக இருந்தும் ஒரு சாதாரண ஆளிடம், பள்ளுப்பறைகளுடனும் கூலிக்காரர்களுடனும் சுற்றிக்கொண்டு திரிகின்ற ஒரு ஆளிடம் தோற்றுப் போவதா என்ற ஆத்திரமும் பகைமையும் பெருமாளுக்கு வளர்ந்து வந்தது. 

ஏற்கனவே வெட்ட வந்தார்:

1970 இல் பெருமாள் தோற்ற பிறகு 1971ல் இதே மாதிரி தோழர் வெங்கடாசலம் ரயிலை விட்டு இறங்கி இராயமுண்டான்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் பஞ்சாயத்து உதவித் தலைவர் குழந்தைவேலுவும் கூட்டுறவு சங்கத் தலைவரும் இதே நேரத்தில் சென்று கொண்டிருந்தனர். மூவரும் சென்று கொண்டிருக்கும்போது இதே பெருமாளும் சிலரும் ஓடி வந்து வெங்கடாசலத்தை தாக்க பாய்ந்தோடி வந்தனர். பெருமாளே அரிவாளைத் தூக்கிக்கொண்டு வெங்கடாசலத்தை வெட்ட ஓடி வந்தார். வெங்கடாசலம் தப்பிவிட்டார். இதற்குப் பிறகு போலீஸ் விசாரணை செய்து தஞ்சாவூர் டிஎஸ்பியே இந்தப் பெருமாளிடம் இது போன்ற சம்பவங்களில் இனி ஈடுபடுவது இல்லை என்று முச்சலிக்கை எழுதி வாங்கியுள்ளார். 

1. புறம்போக்கு நிலத்தை வளைத்து தனது நிலத்துடன் விசாரிக்க முடியாது போயிற்றே ...

2. பஞ்சாயத்து தலைவராக ஆகிவிட்டால் நிலத்தை விஸ்தரிக்கலாம், தலைவர் தேர்தலிலும் ஜெயிக்க முடியாது போயிற்றே ... என்று ஆத்திரம் பெருமாளுக்கு எப்பொழுதும் பொங்கிக் கொண்டே இருந்தது. 

இதர மிராசுகளுக்கும் ஆத்திரம் 

அரிசன விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்வுப் போராட்டங்கள் தஞ்சை தாலுகா முழுவதும் வெடித்தபோது வெங்கடாசலம் தலைமை தாங்கினார். தாலுகாவில் உள்ள மிராசுதார்கள் ஒரு கோயிலிலே கூட்டம் நடத்தி வெங்கடாசலத்தை எப்படியாவது தலையிடாதபடி செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தனர். அவர்களுக்கு அப்படி ஆத்திரம்!

1975இல் அல்லூர் என்ற ஊரிலே குத்தகை சாகுபடியாளர்களாக இருந்த அரிசனங்களை, குத்தகைப் பதிவு சட்டம் வந்தபோது குத்தகைதாரர் என்று பதிந்து விடாமலும், பதிவதற்கு அதிகாரிகள் வந்தபோது அவர்களை ஊருக்குள் வரவிடாமலும் அல்லூர் மிராசுதார்கள் தடுத்து விட்டார்கள். 

பிறகு சில ஆண்டுகள் கழித்து சாகுபடியாளர்களிடம் ரிகார்ட் ஏதும் இல்லாததால் அவர்களை சாகுபடியாளர்களே அல்ல என்று கூறி நிலத்தில் இறங்கக்கூடாது என்று மிராசுகள் தடுத்தார்கள். 

அப்போது அந்த அரிசன விவசாயிகள், தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் ஆகிய வெங்கடாசலத்திடம் வந்து முறையிட்டார்கள். விவசாய சங்கத்திலும் சேர்ந்து கொடியேற்றினார்கள் 

அதற்குப் பிறகு, வெங்கடாசலம் அந்த விவசாயிகளிடம் "நீங்கள் வயலில் இறங்கி வேலை செய்யுங்கள், தடுத்தால் பார்த்துக் கொள்ளுவோம்" என்று சொல்லி அனுப்பியதோடு தாசில்தாருக்கு கடிதம் எழுதி, மறுபடியும் விசாரணை செய்து அவர்களை குத்தகை பதிவு சட்டப்படி பதிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விசாரணைகளும் நடைபெற்றன 

அப்போதே அந்த மிராசுதாரர்கள் விவசாயிகளை ஜாதியைச் சொல்லித் திட்டினார்கள். உடனே வெங்கடாசலம் முயற்சியின் பெயரில், தீண்டாமை ஒழிப்பு சட்டப்படி அவர்கள் மீது விவசாயிகள் வழக்கு தொடர்ந்தார்கள். இதனால் அந்த மிராசுதாரர்களுக்கு வெங்கடாசலம் இது ரொம்ப ஆத்திரம்! 

அரிசனங்களுக்கு சுடுகாட்டுக்காக: 

திருவையாருக்கு அருகில் உள்ள காருகுடியில் அரிசனங்களின் பிணங்களை எடுத்துச் செல்ல வேண்டுமானால் மேல் சாதிக்காரர்களின் வயல்களைக்கடந்து தான் செல்ல வேண்டும். சாகுபடி காலத்தில் தடுத்து விடுவார்கள். சுடுகாட்டுக்கு வேறு பாதையும் இல்லை.

இதனால் அரிசனக் குடியிருப்பில் இருந்து நேரே ஊர் வழியாக காவிரி ஆற்றங்கரைக்குச் செல்லும் ரோட்டில் சென்று ஆற்றங்கரையில் புதைக்க அங்கு மயானம் வேண்டும் என்று கோரினார்கள் அரிசனங்கள். காமராஜர் காலத்தில் இருந்து கருணாநிதி காலம் வரையிலும் கேட்டார்கள் கிடைக்கவில்லை. அதற்கு பிறகு வெங்கடாசலத்தை கூட்டிச் சென்று செங்கொடி விவசாய சங்கத்தில் சேர்ந்தார்கள். ஆற்றங்கரையில் சுடுகாடு பெற வெங்கடாசலம் அதிகாரிகளுக்கு எல்லாம் மனு போட்டார். வாக்குறுதி தான் கிடைத்தது தவிர சுடுகாடு கிடைக்கவில்லை. 

அதற்குப் பிறகு ஒரு நாள் மேல் சாதிக்காரர்களின் பட்டா நிலத்தில் பிணத்தை எடுத்துச் செல்லாமல், நேரே ரோடு வழியாகவே வந்து ஆற்றங்கரையில் வைத்து எரித்துவிட்டார்கள். வெங்கடாசலம் ஊட்டிய தைரியத்தின் பேரில் இது நடந்தது. 

இதனால் ஆத்திரமித்த மிராசுதார்கள் ஆட்களை திரட்டி அரிசனத் தெருவுக்குள் புகுந்து அடித்து நாசப்படுத்தினார்கள். அரிசனங்களை அரிவாளால் வெட்டினார்கள், கம்பால் அடித்தார்கள், வீட்டுக்கூரைகளைப்பிரித்துப் போட்டார்கள், பண்ட பாத்திரங்களை சூறையாடினார்கள். 

பி ராமமூர்த்தி தலையீடு:

இதில் மிராசுதாரர்களுக்கு எதிராக, அரிசனங்களுக்கு ஆதரவாக வெங்கடாசலம் வழக்கு நடத்தினார் ஆற்றங்கரையில் சுடுகாட்டுக்கு இடம் கிடைக்கும் வரையிலும் தொடர்ந்து கிளர்ச்சி நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி இதில் தலையிட்டு கவர்னருக்கும் கவர்னரின் ஆலோசகருக்கும் எழுதினார். 

பிறகு 1976 ஆம் ஆண்டுதான் அரிசனங்களைத் தடுக்க முடியாது என்ற நிலைமை உருவானதன் பேரில் காவிரிக் கரையில் சுடுகாடு ஏற்படுத்திக் கொள்ள அரசினர் அனுமதி வழங்கினர். இதனால் காரைக்குடி மேல் சாதி மிராசுகளுக்கு வெங்கடாசலத்தின் மீது ஆத்திரம். 

ஒரத்தூர் அரிசனங்களுக்காக: 

ஒரத்தூர் நத்தமங்கலத்தில் 114 அரிசன விவசாயிகள் 25 ஏக்கர் அரசு புறம்போக்குநிலத்தை பல வருடமாக பயிரிட்டு ஜீவனம் செய்து வருகிறார்கள். தண்டத்தீர்வையும் கட்டுகிறார்கள். அரிசனங்கள் தங்களுக்கு பட்டா வழங்குமாறு அதிகாரிகளுக்கு மனுப் போட்டும் ஒரு பதிலும் இல்லை. அவசரநிலைக் காலத்தில் அந்த நிலங்களை  காங்கிரஸ்காரர்களுக்கு பட்டா போட்டு கொடுக்க அதிகாரிகள் முன் வந்தனர். இதை ஆட்சேபித்து தோழர் பி ராமமூர்த்தி கவர்னரின் ஆலோசகருக்கு எழுதினார். மிசா சட்டத்தின் கீழ் சிறைப்பட்டிருந்த வெங்கடாசலம் விடுதலையாகி வந்ததும், சட்டவிதிகளை காட்டியும், அரிசன  முன்னேற்றத்தைக் கருதியும் ரெவென்யு அதிகாரிகளிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் எவ்வளவோ வாதாடினார், ஒன்றும் பலிக்கவில்லை. பண்படுத்தி பயிர் செய்த நிலத்தை விட்டு வெளியேற முடியாது என்றும் தங்களுக்கே பட்டா போட்டு கொடுக்க வேண்டும் என்றும் கூறி போராடுமாறு வெங்கடாசலம் ஹரிசன விவசாயிகளுக்கு உணர்ச்சி ஊட்டினார். இதனாலும் பலருக்கு அவர் மீது ஆத்திரம். 

மிராசுகளின் பகைமை முற்றுகை:

இவ்வாறு சொரக்குடிபட்டி பெருமாள், அல்லூர் மிராசுகள், காருகுடி மிராசுகள், ஒரத்தூர் மிராசுகள், கூலிப் போராட்டத்தினால் கோபமடைந்த மிராசுகள் தங்கள் கள்ளர் வகுப்பில் பிறந்தும் அரிசனங்களை சரிசமமாக நடத்துகின்றாரே என்று சொந்த சாதியை சேர்ந்த சில சாதி வெறியர்கள் ஆகிய பல்வேறு எதிர்ப்புகளும் பகைமையும் வெங்கடாசலத்தை முற்றுகையிட்டன.

இவை தவிர நெல் கடத்தல்காரர்களுக்கு உடைந்தையாக இருந்த போலீஸ் அதிகாரிகள் மீது மேலதிகாரிகளுக்குப்புகார் செய்தார். விசாரணைகள் நடக்கும், நடவடிக்கைகளும் வரும். 

அதேபோல சிவில் சப்ளை தாசில்தார் மீதும் நடவடிக்கை வந்தது. 

அவசரநிலை காலத்தில் இப்போது கள்ளப்பிரம்பூரில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் கோவிந்தசாமி, அப்பொழுது இந்த சரகத்துக்கு சப் இனஸ்பெக்டராக இருந்தார். வெங்கடாசலம் தலைமறைவாக இருந்தபோது அவரது வீட்டை இந்த சப் இன்ஸ்பெக்டர் சூறையாடினார். குடும்பத்தினருக்கு தொல்லை பல விளைவித்தார். பிறகு வெங்கடாசலம் கைது செய்யப்பட்டார் 

வீடு சூறையாடப்பட்டதை கண்டித்து தோழர் பி ராமமூர்த்தி கவர்னர் ஆலோசகர் தவேயிடம் புகார் செய்தார். அதன் பெயரில் போலீஸ் அதிகாரிகள் மீது விசாரணை நடந்தது. வெங்கடாசலம் விடுதலையான பிறகு இந்த விபரங்களை ஷா  கமிஷனுக்கு அனுப்பினார். அதில் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சோளகம்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் ஆந்திர யாத்திரிகர் ஒருவரை போலீசே அடித்துக் கொன்றதை அம்பலப்படுத்தினார்.

தஞ்சைக் காவல் நிலையத்தில் ஜமீலா என்ற முஸ்லிம் பெண்ணை கற்பழித்து கொன்று விட்டதையும் அமல்படுத்தி சர்வ கட்சியினரையும் திரட்டினார்.

பாதிக்கப்பட்ட பல்வேறு அதிகாரிகளுக்கும் மிராசுகளுக்கும் நெல் கடத்தல் சாராயம் விற்பவர் யாவருக்கும் வெங்கடாசலத்தின் மீது கோபம் இருந்தது. 

தீனி போட்டு வளர்க்கப்பட்ட அடியாள் திடீர் மறைவு: 

சொரக்குடி பெருமாளின் தோப்பு வீட்டில் கடந்த மூன்று வருடமாக மலையாளி என்று அழைக்கப்படும் ஒருவன் யாதொரு வேலையும் இல்லாமல் தீனி போட்டு வளர்க்கப்பட்டு வருகிறான். அவன் மலையாளி அல்லவாம். புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டையை சேர்ந்தவனாம். அவன் பெயர் கந்தசாமி மழவராயராம். அவன் இந்த சம்பவத்துக்கு பிறகு பெருமாளின் வீட்டில் இல்லை. 

வெங்கடாசலம் 21.9.1977 அன்று திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள அம்மையகரம் என்ற ஊருக்கு கட்சி வேலையாக வந்துவிட்டு சின்னக் கொட்டாரப்பட்டி ரங்கசாமி மகன் பன்னீர் செல்வத்தின் சைக்கிள் பின்னால் அமர்ந்து கொண்டு பூதலூர் ரயில்வே நிலையத்துக்கு வந்தார். அங்கு அவரை செங்கோட்டை பாசஞ்சர் ரயிலில் இரவு 7:35க்கு ஏற்றிவிட்டு பன்னீர்செல்வம் போய்விட்டார். ரயிலில் அடுத்த அய்யனாபுரம் ஸ்டேஷன் வரைக்கும் சஞ்சயபுரம் வி. கணேச உடையார் என்பவர் உடன் வெங்கடாசலம் பேசிக் கொண்டு வந்திருக்கிறார். 

இரயிலை விட்டு இறங்கி தனியே சென்ற வெங்கடாசலம் எங்கே? 

இரயில் சோளகம்பட்டி ரயில்வே ஸ்டேசனை அடைந்ததும் ரயிலை விட்டு இறங்கி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இராயமுண்டான்பட்டியை நோக்கி தனியே சென்ற வெங்கடாசலத்தை தான் பார்த்ததாக பெருமாள் இடம் வேலை பார்க்கும்  ராஜப்பா என்பவன் கூறியுள்ளான்.

இந்த ராஜப்பாவே டிஎஸ்பி இடம் "ரயிலை விட்டு இறங்கி வெங்கடாசலம் தெற்கே போனார். ரயில் புறப்பட்டு விட்டது. நான் ரயில் ஏறி போய்விட்டேன்" என்று கூறியுள்ளான். அவனை விசாரித்து விட்டு வீட்டுக்கு போக சொல்லி விட்டார்கள். அவனை இப்போது காணோம்.

21ஆம் தேதி வீட்டை விட்டு கிளம்பிய வெங்கடாசலத்தை 24ஆம் தேதி வரையும் வீட்டார் தேடவில்லை. கட்சி வேலையாக போயிருப்பார் என்று கருதினார்கள். கட்சிக்காரர்களோ வீட்டில் இருப்பார் என்று நினைத்திருக்கிறார்கள். மூன்று நாட்களாக விவரம் தெரியாது. 

புதிய ஆட்கள் வருகை, பழைய ஆட்கள் தலை மறைவு: 

21 ஆம் தேதி 8:00 மணிக்கு மேல் சோளகம்பட்டி ரயில் நிலையத்தை விட்டு வெங்கடாசலம் வீட்டுக்குப் போகும்போது அதற்கு சிறிதும் நேரத்திற்கு முன்னதாகவே ரயில்வே ஸ்டேஷனுக்கு தெற்கு புறத்தில் பெருமாளுக்கு சொந்தமான வயல் கரையில் வழக்கமாக சாராயம் விற்று கொண்டிருந்த ஒரு பெண், புதியதாக பலர் அன்று வந்து சாராயம் குடித்ததாக சொல்லி இருக்கிறாள்.

அந்த இடத்தில் முன்னாலேயே காத்திருந்த பெருமாளுடைய ஆட்கள் வெங்கடாசலத்தை வழிமறித்துக் கடத்தி கொன்றிருக்க வேண்டும் என்று மக்கள் கருதுகிறார்கள். 

அவரைக் கடத்திக்கொண்டு போய் உயிரோடு வைத்திருக்க முடியாது, ஏனென்றால் ராஜப்பா தலைமறைவாகிவிட்டதும் மலையாளி என்ற கந்தசாமி ஓடிப்போய்விட்டதும் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்கிறது.

இது சம்பந்தமாக கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் மணியரசன் பூதலூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். வெங்கடாசலத்தின் மனைவி லீலாவதியும் புகார் கொடுத்திருக்கிறார். மாவட்டக் குழு சார்பில் பெரிய அதிகாரிகளுக்கு எல்லாம் மனு அனுப்பப்பட்டுள்ளது. 

தோழர்கள் உமாநாத், நம்பியார், ஜீ வீரய்யன், பாரதி மோகன் ஆகியோர் எஸ்பிஐ பார்த்து பேசினார்கள். நம்பியார் கலெக்டரிடமும் பேசி உள்ளார். 

உமாநாத் முதலமைச்சர் எம்ஜிஆர் உடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, " சென்னையில் இருந்து ஒரு பிரிவு துப்பறியும் போலீசாரை அனுப்பி அவர்கள் மூலமாக விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறியதை எம்ஜிஆர் ஏற்றுக்கொண்டு, அவ்வாறே விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

பல்வேறு சந்தர்ப்பச் சாட்சிகளையும் சந்தேகத்துக்கு இடம் உள்ளவர்களையும் விசாரிப்பதுடன், கூடவே வெங்கடாசலத்தின் வீட்டை அடுத்து வசிப்பவனும் அவரது நடமாட்டங்களையும் போக்குகளையும் நன்கு அறிந்தவனும் பெருமாளுக்கு வேண்டியவனுமான பஞ்சாயத்து போர்டு கிளார்க் லக்கையன் என்பவனையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

காவல்துறைக்கு சவாலாக விடப்பட்ட இந்த படுகொலையை காவல்துறை எவ்வாறு ஏற்று வெற்றி பெறுகிறது என்பதை காண தமிழக மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள். 

...

துப்பு நாய் மோப்பம் 

வெங்கடாசலம் கொலை சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க துப்பறியும் அதிகாரிகள் 1.10.1977 அன்று பகல் 10 மணிக்கு இராயமுண்டான்பட்டிக்கு வந்தார்கள். அவர்கள் காவல்துறையை சேர்ந்த ஒரு மோப்பநாயையும் கொண்டு வந்தார்கள்.

வெங்கடாசலத்தின் வேட்டி சட்டைகளை எடுத்து நாயின் மூக்கின் முன்னால் மோப்பம் கொடுத்தார்கள். பிறகு நாயை அவிழ்த்து விட்டார்கள். ஊரில் எத்தனையோ வீடுகள் இருந்தும் நாய் அங்கு செல்லவில்லை. பஸ் மெயின் ரோட்டை பிடிக்கக்கூடிய மூன்று மைல் ரோடு இருந்தும் அந்த பாதையிலும் செல்லவில்லை. நேரே சோளகம்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் மண்பாதை நெடுக ஓடிற்று. ஒரு மைலுக்கு மேலாக ரோட்டிலே சென்ற பிறகு இடப்புறமாக அறுவடை முடிந்து வெட்ட வெளியாக கிடக்கும் பெருமாள் என்பவரின் வயல்களுக்குள்ளே  இறங்கி வரப்புகளைத் தாண்டி பெருமாளின் ஓய்வு விடுதியான ஓட்டடுக்கு வீட்டுக்குச் சென்று அதை சுற்றி வந்தது. 

அந்த வீட்டின் முன் ஒரு பந்தல் போடப்பட்டிருக்கிறது. அதில் கட்டில், நாற்காலி, பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. அந்த வீட்டைச்சுற்றி வந்த நாய், பந்தலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் போய் படுத்துக் கொண்டது. 

இவ்வாறு அங்கு பத்து நிமிடம் தங்கிவிட்டு சோளகம்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு புறப்பட்டு வந்தது. ரோட்டில் சாராயம் விற்கப்படுகின்ற புளிய மரத்தின் அருகில் வந்து கால் மணி நேரம் படுத்துக்கொண்டது. 

போலீஸ் அதிகாரிகள் மீண்டும் வெங்கடாசலத்தின் சட்டை வேட்டிகளை நாய்க்கு மோப்பம் கொடுத்தனர். மோப்பம் பெற்ற உடனேயே நாய் நேரே பெருமாள் வீட்டுக்கே மீண்டும் புறப்பட்டுப் போய், அதே பந்தலிலேயே போய் படுத்து கொண்டது. அப்படி அரை மணி நேரம் படுத்து இருந்தது. பிறகு அதிகாரிகள் நாயை கூட்டிக் கொண்டு போய் வட்டார்கள்

வெங்கடாசலத்தின் அண்ணன் ராஜகோபால் அவர்களின் மருமகன் சிங்காரவேலும் நாயின் பின்னாலே தொடர்ந்து சென்று பார்த்ததாக கூறி மேற்படி தகவல்களை 2. 10 .1977 அன்று தீக்கதிர் சிறப்பு நிருபர் ஐ மாயாண்டி பாரதியிடம் தெரிவித்தார். 

...

சாராயம் விற்றவளும் அவளது மகளும்

சோளகம்பட்டி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இராயமுண்டான்பட்டிக்குச் செல்லும் மண் ரோட்டில் சிறிது தூரம் சென்றவுடன், ரோட்டின் வலப்புறத்தில் ஒரு புளியமரம் இருக்கிறது. அந்தப் புளிய மரத்தின் அடியில் சுமார் 45 வயது உள்ள ஒரு பெண் மல்லி காபி விற்பது வழக்கம். பத்து காசு கொடுத்தால் மல்லி காபி ஒரு கிளாஸ் கிடைக்கும். ரெண்டு ரூபாய் கொடுத்தால் ஒரு கிளாஸ் சாராயம் கிடைக்கும். 

அதே ரோட்டில் தான் 21/9/1977 இரவு சுமார் எட்டு மணிக்கு மேல் வெங்கடாசலம் வழி மறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று பலரும் கருதுகிறார்கள். சாராய விற்கும் இந்த பெண்ணை விசாரித்தால் ஏதாவது துப்பு கிடைக்கும் என்று போலீசார் செப்டம்பர் 24, 25, 30 தேதிகளில் விசாரணை நடத்தினர்.

24 ஆம் தேதி திருக்காட்டுப்பள்ளி சப் இன்ஸ்பெக்டர் விசாரித்த போது, தனக்கு ஒன்றும் தெரியாது என்று அந்தப் பெண் சொல்லிவிட்டாள். மறுநாள் 25ஆம் தேதி காலையில் மீண்டும் விசாரித்த போது, 'பஞ்சாயத்து தலைவர் யார் என்றே எனக்கு தெரியாது' என்று சொல்லிவிட்டாள். மத்தியானம் வரை ஒன்றும் தெரியாது என்று சொல்லி வந்தவள், மத்தியானத்துக்கு பிறகு 'ஆமா ரயிலை விட்டு வெங்கடாசலம் இறங்கியதை ராஜப்பா சொன்னார், நானும் பார்த்தேன்' என்று சொன்னாள்.

மற்றும் 'அன்னிக்கு ராத்திரி 7 மணி இருக்கும், சாராயம் விற்றுக் கொண்டிருந்தேன். ஒருவர் இரண்டு ரூபாய் கொடுத்து ஒரு கிளாஸ் குடித்தார். இன்னொருத்தர் இரண்டு ரூபாய் கொடுத்து ஒரு கிளாஸ் குடித்தார். இன்னொருத்தர் 3 ரூபாய் கொடுத்து ஒன்றரை கிளாஸ் சாராயம் குடித்தார். இன்னொருவர் 2 கிளாஸ் சாராயம் கொடுத்து நாலு ரூபாய் கொடுத்தார். இந்த நான்கு பேரும் தனித்தனியாக காசு கொடுத்து சாப்பிட்டனர். இவர்கள் எந்த ஊர் என்று தெரியாது' என்று ரயில்வே ஸ்டேஷனுக்கு மேற்கே பிளாட்பாரத்தில் வைத்து விசாரித்த போது மேற்கண்டவாறு சப்-இன்ஸ்பெக்டர் இடம் அவள் கூறினாள். 

27 ஆம் தேதி என்று சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விசாரித்த போது, ' 21ஆம் தேதி ராத்திரி 7 மணி சுமாருக்கு ஸ்டேஷனிலிருந்து வயற்காட்டில் இறங்கி ரோட்டுக்கு குறுக்கே மூன்று பேர் போனதை பார்த்தேன். அவர்கள் யார் என்றே தெரியாது, அவர்கள் புது ஆட்கள்' என்றாள்.

சாராயம் விற்பவளின் 10 வயது மகளிடம் 30.9.77 காலை 10 மணியளவில் திருக்காட்டுப்பள்ளி சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் விசாரித்தார். அப்போது மார்க்சிஸ்ட் கட்சித் தோழர் மன்னர் மன்னனும் உடன் இருந்தார். அப்போது அந்த சிறுமி, 'அன்னைக்கு ராத்திரி ஐயோ அப்பா என்று சத்தம் போட்டது தெரியும். நானும் அழுதுவிட்டேன். தாயார் சத்தம் போடாதே என்று கூட்டிக்கொண்டு வீட்டுக்குப் போய் விட்டாள். சாராயம் விற்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது பாதி வழியில் இந்த சத்தம் கேட்டது' என்று சிறுமி கூறினாளாம். இந்த சாராயம் விற்கும் பெண், வயற்காட்டு நடுவே உள்ள பெருமாள் என்பவரின் ஓய்வுவிடுதி தோப்பில், பெருமாளின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடி இருக்கிறாராம். 

...

தோழர் என் வெங்கடாசலத்தை கடத்திச் சென்ற கயவர் கூட்டத்தை கைது செய்! கொலைகார கூட்டத்தை கூண்டில் ஏற்று!  என்ற முழக்கத்தை வைத்து அக்டோபர் 4 ஆம் தேதி அன்று தமிழகமெங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறைகூவலுக்கு இணங்க பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. 

தஞ்சை நகரில் நடந்த கண்டன ஊர்வலத்தில் சிஐடியு தமிழ்நாடு பொதுச் செயலாளர் தோழர் உமாநாத், தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் தோழர் வீரய்யன், தோழர் மணியரசன் ஆகியோர் தலைமை வகித்தனர். கண்டனக் கூட்டத்தில் உமாநாத், வீரையன், ரயில்வே தொழிலாளர் தலைவர் அனந்த நம்பியார், மணியரசன் ஆகியோர் பேசி உள்ளனர். 

திருச்சி நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஜனநாயக மாதர் சங்க செயலாளர் தோழர் பாப்பா உமாநாத், என் வரதராஜன், சண்முகசுந்தரம் ஆகியோர் கண்டன உரையாற்றியுள்ளனர். 

தலைநகர் சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தமிழகத் துணைத் தலைவர் தோழர் வி பி சிந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னை செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் பி ஆர் பரமேஸ்வரன், அரிபட், தமிழக ஜனநாயக மாதர் சங்க துணை தலைவர் மைதிலி சிவராமன், சௌந்தரராஜன் ஆகியோர் பேசினார். 

மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, விவசாயிகள் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், சோசியலிஸ்ட் வாலிபர் முன்னணி, இந்திய மாணவர் சங்கம்,  பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம், மோட்டார் தொழிலாளர் சங்கம், மதுரை நகர் மற்றும் செல்லூர் கைத்தறி தொழிலாளர் சங்கங்கள், மாநகராட்சி தொழிலாளர் சங்கம், ஜெனரல் மோட்டார் ஒர்க்கர்ஸ் யூனியன், கூட்டுறவு ஊழியர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர்கள் கே பி ஜானகி அம்மா, எம் முனியாண்டி, வி வாழ வந்தான், கே பூச்சி, கே சுப்பையா, எஸ் மன்னார்சாமி, எஸ் ஏ பெருமாள், பாலகிருஷ்ணன், கே எம் கணபதி, டி எஸ் சுந்தரராஜன், டி.கே முரளிதரன், என் நன்மாறன், மாணவர் சுப்பையா ஆகியோர் ஊர்வலத்துக்கு தலைமை வகித்து சென்றார்கள்.

...



கருத்துகள் இல்லை: