திரைப்படம் வழியாக 'அரசிய'லுக்கு:
இந்திய சமூகம் குறித்த சமூக அரசியல் அறிவு, வர்க்கப் பார்வை, இவற்றின் அடிப்படையில் வரையப்பட்ட இலக்குகள், இலக்கை அடைவதற்கான செயல் திட்டம்... இதுதான் ஓர் அரசியல் கட்சி அல்லது இயக்கத்துக்கான குறைந்தபட்ச அடிப்படை தேவைகளாக இருக்க முடியும்.
தமிழகத்தில் திரைப்பட உலகிலிருந்து வந்த ஒரு நடிகர் தொடர்ந்து மக்கள் ஆதரவுடன் 1977 தொடங்கி தான் இறந்து போகும் 1987 டிசம்பர் வரைக்கும் முதலமைச்சராக இருந்தார் எனில் அவர் எம்ஜிஆர். அவரை நடிகர் என்று பழித்தவர்கள் ஒரு உண்மையை மறந்து விட்டார்கள். அவர் விஜயகாந்த் போலவோ இன்று வசனம் பேசிக் கொண்டிருக்கிற விஜய் போலவோ அல்லர். அதாவது 1972ல் தனிக்கட்சி தொடங்கும் போது தமிழக அரசியல் களத்தில் அவர் ஒன்றும் புதியவர் அல்லர்.
மாறாக அவர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டு இயங்கியவர். அதன் தலைமை நிர்வாகப் பொறுப்புகளில் இருந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகமாக முன்னிறுத்தப்பட்டவர். 1972ல் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து தனியே ஒரு கட்சியை தொடங்கிய போது அவருக்கு பின்னால் வந்த பல லட்சம் தொண்டர்கள் அல்லது அபிமானிகள் வெறும் சினிமா ரசிகர்கள் அல்லர் என்பதை உறுதிபட நினைவில் கொள்ள வேண்டும். அவர் பின்னால் திரண்ட மக்கள் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்து அவரைப்போலவே அங்கிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தவர்கள் என்பதுதான் உண்மை. அதன் பிறகு அவர் அதிமுகவின் கொள்கை என்று அறிவித்ததும் அண்ணாயிசம் என்று ஒரு புரிய முடியாத தத்துவத்தை அறிவித்து விமர்சனத்துக்கும் கேளிக்கும் உள்ளானார் என்பது வேறு கதை.
ஆனால் 1977 இல் ஆட்சியில் அமர்ந்த பின்பு ஆட்சி நிர்வாகத்தை தொடர்வதற்கு, அவருக்கு ஏற்கனவே 67 முதல் 77 வரை ஆட்சி நிர்வாகத்தில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் திட்டங்கள், மக்களை நேரடியாக அணுகத்தக்க வாய்ப்புக்கள், எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு தொடர்ச்சியாக தனது ஆட்சியை மாற்றிக் கொள்ளத்தக்க வாய்ப்புக்கள் இருந்தன. இவற்றை புதியவை, புரட்சிகரமானது என்றோ அவருக்கான தனித் திறன் என்றோ சொல்லிவிட முடியாது. எந்த ஊரு கட்சியினாலும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து செய்ய தக்கவற்றைத்தான் அவரும் செய்தார்.
அவரது மறைவுக்குப் பின் ஜெயலலிதா தலைமையில் இருந்த கட்சி தொண்டர்களும் ஒரே நாளில் கட்சியில் இணைந்தவர்கள் அல்லர். எம்ஜிஆர் இருந்தபோது இருந்த அதே அதிமுக தொண்டர்களும் உறுப்பினர்களும் ஜெயலலிதா தலைமைக்குப் பின்னும் தொடர்ந்தார்கள் அவ்வளவுதான்.
இங்கே திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வெவ்வேறு காலகட்டங்களில் மத்தியில் ஆட்சியில் அமர்ந்த அல்லது அமர வாய்ப்புள்ள ஏதாவது ஒரு தேசிய கட்சியின் கூட்டணியில் தமிழகத்தில் மாறி மாறி இடம் பெற்றார்கள் என்பது வரலாறு. அது தனியாக பேசப்பட வேண்டியது
...
எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் கட்சியின் தலைமையை ஜெயலலிதா இயல்பாக கைப்பற்ற முடிந்தது. அவருக்கு அங்கே போட்டியாளர்கள் என யாருமே இல்லை.
அதிமுகவின் நிறுவனர் எப்படி இருந்தாலும் எம்ஜிஆர் தான். எம்ஜிஆரின் சொத்தாக இருந்த அதிமுக ஜெயலலிதாவின் கையில் ஒரு சொத்தாக போனது.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு திரைப்பட நடிகர் ஒருவர் ஓர் அரசியல் கட்சியை தொடங்கி சில காலம் வரை, ஆம், சில காலம் வரை அதனை வெற்றிகரமாக நடத்தி சட்டமன்றங்களில் சில இடங்களையும் பிடிக்க முடிந்தது எனில் அது நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக மட்டுமே.
2005 ஆம் ஆண்டு மதுரையில் ஒரு மாநாடு நடத்தி கட்சியை தொடங்குகிறார் விஜயகாந்த். அவர் நிறுவனர் என்றாலும் அந்த கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டவர் விஜயகாந்தின் ரசிகர் மன்ற தலைவரான ராமு வசந்தன் என்பவர் தான். ஆக அடிப்படையில் ரசிகர்களை நம்பியே அவர் கட்சியை தொடங்குகிறார். சரியாகச் சொன்னால் ரசிகர்களின் வாக்கு வங்கி சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தனக்கு உதவும் என்பதுதான் கணக்கு. பெரிய ரகசியம் இல்லை.
அடுத்த வருடமே 2006 இல் தனித்து அக்கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. ஒரே ஒரு இடத்தில் வெல்கிறது. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் அமருகிறது.
2011 தேர்தலில் அதிமுக இடதுசாரிகள் அடங்கிய கூட்டணியில் தேமுதிகவும் இணைகிறது. 40 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெல்கிறது. 1967 க்கு பிறகு திமுகவோ அதிமுகவோ அல்லாத வேறொரு கட்சி தமிழகத்தில் முதல்முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தை தான் பெற முடிந்தது. ஆனால் தேமுதிகவுக்கும் அதாவது விஜயகாந்த்துக்கும் அதிமுகவுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஜெயலலிதா தனது பலவித செல்வாக்குகளையும் தட்டச்ச அதிகாரத்தையும் பயன்படுத்தி தேமுதிக சட்டமன்ற கட்சியை கரைத்தார். அவரது கட்சியிலிருந்து எட்டு எம்எல்ஏக்கள் பதவி விலகினார்கள். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருந்து கீழே இறங்கினார்.
2016, 2021 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் அந்தக் கட்சி தேய்ந்து ஒரு இடம் கூட வெல்ல முடியாமல் போனது. 2021 தேர்தலில் அக்கட்சி போட்டியிட்ட 60 இடங்களில் மொத்தமாக 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. நிறுவனரான விஜயகாந்த் தலைமையில் இருந்த போதே அக்கட்சி படிப்படியாக தேய்ந்து போனதை அப்பட்டமாக உணர முடிந்தது. நாடாளுமன்ற தேர்தல்களில் எப்போதுமே அக்கட்சி ஒரு இடத்தை கூட வென்றதில்லை.
கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் காலமான நிலையில்
இப்போது அவரது மனைவி கட்சியின் தலைவராக இருக்கிறார். அசையும் சொத்து அசையா சொத்து போல கட்சியும் அவரது மனைவியின் கைகளில் உள்ளது. அவ்வளவுதான். 2024 நாடாளுமன்ற தேர்தலை அக்கட்சி பிரேமலதா விஜயகாந்தின் தலைமையில் தான் எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கத்தில் சொன்ன ஓர் இந்திய அரசியல் இயக்கத்துக்கு அல்லது கட்சிக்கு தேவையான இந்திய சமூகம் குறித்த அடிப்படை சமூக அறிவு, சமூக அரசியல் அறிவு, வர்க்கப் பார்வை, சமூக மாற்றத்திற்கான திட்டங்கள் அடையக்கூடிய இறுதி இலக்குகள் எதுவும் வரையப்படாமல் திரைப்பட ரசிகர்களை மட்டுமே நம்பி தொடங்கிய ஒரு இயக்கம் ஒரு திரைப்படம் போலவே முடிந்து போனது. மொத்தத்தில் தேமுதிக ஒரு மொன்னையான ஒரு அரசியல் கம்பெனியாக தொடங்கி அரசியல் கம்பெனி ஆகவே முடிந்து போனது.
...
விஜயகாந்த் போலவே இப்போது ஒரு நடிகர் ஒரு சில மாநாடுகளை நடத்தி விஜயகாந்தை போலவே தன் ரசிகர்களை நம்பி அவற்றை எதிர்வரும் தேர்தல்களில் வாக்குகளாக மாற்றினால் ஒரு எம்ஜிஆரை போலவோ அல்லது விஜயகாந்தை போலவோ வாக்குகளை பெற்று தமிழக அரசியலில் சொல்லத்தக்க இடத்தை பிடித்து விடலாம் என்று நம்பிக்கை உடன் வருகிறார்.
இவரும் நான்கைந்து ஏ 4 தாள்களை கையில் வைத்துக் கொண்டு இந்திய அரசியல் சூழலில் கடந்த 75 வருடங்களாக மக்களுக்கு அள்ளி வீசப்படும் மிக சாதாரணமான வாக்குறுதிகளை தனது கட்சியின் திட்டமாக அறிவித்து வருகிறார். கொள்கை இலக்கு அது இது ...? இங்கேயும் அதே கதைதான். ஒரு மொன்னையான அரசியல் கம்பெனி. வரையப்பட்ட ஒரு அரசியல் திட்டமோ செயற்திட்டமோ சமூக அரசியல் பார்வையோ வர்க்க பார்வையோ இல்லாமல் ஒரு பெருங்கூட்டம் தனது பின்னால் இருக்கிறது என்ற மிகத் தட்டையான ஒரு நம்பிக்கையில் இவர் வருகிறார். இது அரசியல் அடிப்படையில் ஆன கூட்டம் இல்லை என்பதை அவரே நன்கு அறிவார்.
குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவெனில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் இல்லாத ஒரு அரசியல் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிரான வாக்குகளையும் அதிமுகவின் தள்ளாட்டத்தால் சோர்ந்து போய் இருக்கின்ற சில லட்சம் தொண்டர்களையும் தனது ரசிகர்களையும் சில இலட்சம் வாக்குகளாக மாற்றும் நம்பிக்கையில் இந்த நடிகர் இறங்கி உள்ளார். சரியாக சொன்னால் தேர்தலில் போட்டியிட்டு ஒரு சில இடங்களை வெல்வதற்கான ஒற்றை நோக்கத்துடன் இவர் வருகிறார்.
...
இருக்கின்ற நிலைமையை வெறுப்பு விருப்பின்றி நோக்கினால் எதிர்வரும் தேர்தல்களில் தமிழகத்தில் இப்போது இரண்டு எதிர்முனைகளில் உள்ள வாக்குகளில் இருந்து அவர் சில லட்சம் வாக்குகளை தனியே பிரிக்க முடியும். இந்த வாக்குகள் புதிதாக ஒன்றும் தோன்றி விடப் போவதில்லை. ஏற்கனவே இருக்கின்ற அரசியல் கட்சிகளில் இருந்து ஒரு பகுதியினரின் வாக்குகளை பிரிக்க முடியும். தவிர எப்போதுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்ற எந்த கட்சியியையும் சாராத ஆனால் குறிப்பிட்ட காலத்தில் தன்னிசையாக முடிவெடுத்து வாக்களிக்கின்ற பல லட்சம் வாக்காளர்களின் வாக்குகளையும் பெற முடியும் என்ற நம்பிக்கையில் அவர் இறங்குகிறார். அவரது இன்றைய மதுரை பேச்சு இதைத்தான் காட்டுகிறது. மிக கவனமாக தனது ரசிகர்களையும் ரசிகர்களுக்கு அப்பாற்பட்ட பல லட்சம் மக்களின் நம்பிக்கையும் பெறுவதற்கு அவர் முயற்சி செய்கிறார் என்பதை இன்றைய அவரது உரை சொல்கிறது. அவரது இந்த திட்டம் எதிர்வரும் ஓர் இரண்டு தேர்தல்களில் அவருக்கு கை கொடுக்கலாம்.
...
எவ்வாறு ஒரு அரசியல் கம்பெனியை கட்சி என்ற பெயரில் தொடங்கி தொடக்க காலங்களில் தேர்தலில் சில பல இடங்களை தேமுதிகவால் வெல்ல முடிந்ததோ அதேபோன்ற ஒரு தொடக்க நிலை விஜய் தொடங்கியுள்ள அரசியல் கம்பெனிக்கு ஏற்படக்கூடும். இப்போது நான் தனியாக தேர்தலை சந்திப்பேன் என்று அவர் கூறினாலும் தொடர்ந்து அவர் எதிர்கொள்ள கூடிய சூழ்நிலைகள் அல்லது வெவ்வேறு காரணங்களால் ஏற்படக்கூடிய இக்கட்டான சூழ்நிலை மற்றும் தேவைகள் கருதி கூட்டணி அரசியலிலும் கூட அவர் இறங்கலாம். இந்த இக்கட்டான என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு.
அதன் பின்னர் கொள்கையோ கோட்பாடோ அற்ற ஒரு அரசியல் கம்பெனி ஆன தேமுதிகவுக்கு ஏற்பட்ட படிப்படியான சரிவே இவருக்கும் ஏற்படும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாதது.
எதிர்வரும் காலத்தில் இதை பார்க்க முடியும்.
அரசியல் கட்சி அல்லது இயக்கம் என்பது தனியார் கம்பெனி அல்லது சூப்பர் மார்கெட் அல்ல, திடீர் என ஒருநாள் காலையில் திறப்பதற்கு. அது ஓர் இயக்கம். சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில், சமூகத்தின் வர்க்கப் பிரிவினைஅடிப்படையில், அன்றாடம் நிகழும் வர்க்கப் போராட்டத்தின் இயல்பான இயங்கியல் அடிப்படையில் ஆன பவுதீக வளர்ச்சி ஆனது வெகுமக்களின் மத்தியில் இருந்து எழும் இயல்பான போராட்ட உணர்வுகளை பருண்மையான இயக்கமாக அல்லது அரசியல் கட்சியாக உருமாற்றுகிறது. அது இயங்கியல் அடிப்படையில் ஆன அரசியல் நிகழ்வு. தனிநபர்களால் தூண்டப்படுவதோ தனிநபர்களின் அபிலாசை அல்லது சுய லாபங்களுக்காக திறக்கப்படும் கடையாக ஒருபோதும் இருக்க முடியாது. எனில் ஏற்கனவே மக்கள் மத்தியில் இயங்கிகொண்டு இருக்கின்ற வர்க்க அரசியல் அடிப்படையில் ஆன இயக்கங்கள் அல்லது இடதுசாரி கட்சிகளின் செயற்பாடுதான் இங்கே பேசப்பட வேண்டியதும் மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்பட வேண்டியதும் ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக