ஞாயிறு, ஆகஸ்ட் 17, 2025

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன்: நூல் மதிப்புரை: பாவெல் சூரியன்


புதிய புத்தகம் பேசுது ஆகஸ்ட் 2025 இதழில் வெளிவந்துள்ள மதிப்புரை

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன்

பாவெல் சூரியன்

முஇக்பால் அகமது எழுதி பரிசல் வெளியிட்டிருக்கும் மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன்எனும் இசையமைப்பாளர் எம்.பி.எஸ். பற்றிய நூல், பல தரப்பு வாசகரையும் வெகுவாக ஈர்த்திருக்கிறது.

இடதுசாரிகள், அவர் தங்கள் இயக்கத்துக்காரர், பொதுவுடைமை சித்தாந்தத்தை ஏற்று அதற்காக உழைத்தவர் என்பதாலும், இசைத்துறையினர், சேர்ந்திசையின் வழியாக இசைக்கு அவர் உருவாக்கிய புதிய பரிமாணத்திற்காகவும், திரையுலகினர், அவரது திரையிசைப் பயணத்திற்காகவும், திரைத்துறையின் தொழிலாளர்கள், அவரது அயராத தொழிற்சங்கப் பணிகள், அதன் வழியாக தாங்கள் பெற்ற உரிமைகளுக்காகவும், கலை இலக்கியவாதிகள், அவரது  மக்கள் நாடக மன்றத்தின் செயல்பாட்டிற்காகவும் என இப்படிப் பலதுறையினரும் தங்கள் தரப்புக்கு உரிமை கொண்டாடும் அளவிற்கு  எம்.பி.எஸ். அவர்களின்  பங்குபணி அளப்பரியது. அதனால்தான் சமூகத்தின் பல தளங்களும் அவரை தங்கள் வட்டத்திற்குள் வைத்துப் பார்க்கிறார்கள். இடதுசாரி தளத்தில்  அவரை கட்சிக்குள் கட்சி கட்டியவர்களும்”  உண்டு. எல்லோருக்குமானவர் என்பதால்  தங்களுக்கிடையேயான போட்டியில் அனைத்துத் தரப்பினரும் அவரைக் கைவிட்டுவிட்டார்களோ ன்று எண்ணத் தோன்றுகிறது.


அறந்தை நாராயணன் எழுதிய  நூலில்  காணப்படும் குறிப்புக்களைத் தவிர அவர் பற்றிய  வேறு ஆவணங்கள் இல்லை என்ற ஆசிரியரின் ஆதங்கத்திலிருந்துதான் இந்த நூல் புறப்பட்டிருக்கிறது. இந்தப் படைப்பின் வழியாக எம்.பி.எஸ். அவர்களுக்கும், அதன் வழி இடதுசாரி, தொழிற்சங்க இயக்கத்திற்கும், கலை இலக்கியப் பண்பாட்டுத் தளத்திற்கும்  ஒரு வரலாற்று நியதியை வழங்கி  சிறப்பானதொரு  பதிவைக் கொடுத்திருக்கிறார் மு. இக்பால் அகமது.

எம்.பி.எஸ். அவர்களின் முன்னோர் .பி.யின் கனோஜ் நகரிலிருந்து தொடங்கி நர்மதை நதிக்கரை, காஞ்சிபுரம் வழியாக கடைசியாகத் தென் தமிழ்நாட்டின் சிவகங்கைச் சீமையில் குடியமர்ந்தது வரை  அவர்கள் புலம்பெயர்ந்த வரலாற்றையும் பதிவாக்கியிருக்கிறார் நூலாசிரியர். இதில் அவரது குடும்பத்தினர் கூறிய தகவல்களோடு ஊகித்தறிந்தவையும் உள்ளடங்கியிருக்கிறது. இந்த இடந்தவிர நூலின் பதிவுகள் அனைத்தும் தரவுகளோடு உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. தரவுகளின் விபரங்கள்  இறுதி ஏழு பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. வெறும் புலப்பெயர்வல்ல; எம்.பி.எஸ்ஸின்  முன்னோர் ஆன அனந்த நாராயண அய்யரை தன் குடியாக அங்கீகரித்து அவரை சித்தண்ண பாண்டியனாக பெயர் மாற்றியிருக்கிறது சிவகங்கை ஜமீன். அவர் மகன் ராமசாமி சிவன்; இவரது மூத்த மகன்தான்  எம்.பி.எஸ்.இன் தந்தை மானாமதுரை ராமசாமி சிவன் பாலகிருஷ்ணன்; இரண்டாவது மகன் எம்.ஆர்.வெங்கட்ராமன். தமிழகத்தின் மூத்த கம்யுனிஸ்ட் ஆன இவர், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி, பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் மாநிலச்செயலாளராக இருந்தவர்.   இவர்கள் படித்தவர்கள் மட்டுமல்ல, நல்ல முற்போக்காளர்கள். இசையில் பெற்றோர்களுக்கிருந்த பாண்டித்தியம்  எம்.பி.எஸ். இன் இசை மீதான ஆர்வத்திற்கு அடிப்படையாக அமைந்திருந்தது. கோவை வேளாண் கல்லூரியின் முதல் இந்திய முதல்வர் ராமசாமி சிவன் என்பதும், அவரது சகலர்தான் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் என்பதும், எம்.ஆர்.வியும் அவரது தங்கை கோவிந்தாபாயின் கணவர்  ஆன .டி.மணியும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தமையும் உள்ளிட்ட  பல்வேறு குடும்பத் தகவல்களும் முதல் முறையாக  நூலில் இடம்பெற்றுள்ளன.

இந்திய விடுதலைப் போராட்டச்  சூழலில் கம்யூனிஸ்ட் கட்சியால் நிறுவப்பட்டிருந்த சென்னை மாணவர் அமைப்பு (Madras Students Organisation), அதில் தலைமையேற்றிருந்த எம்.பி.எஸ், தேச விடுதலைக்கான போராட்டக் களத்தில் அதன் வீரியமான போராட்டங்கள் என எல்லாமும் பதியப்பட்டுள்ளன. 1951 பொதுத் தேர்தலில் வென்று இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவரான .கே.கோபாலனுக்கு அலுவலகச் செயலராக எம்.பி.எஸ் தில்லியில் ஐந்து ஆண்டுகள் பொறுப்பாற்றியது, அப்போது ஏற்பட்ட தொடர்பில் இப்டா எனும் இந்திய மக்கள் நாடக மன்றத்தில் (IPTA-Indian People’s Theatre Association) இணைந்து இடதுசாரி கலை, இலக்கியத் தளத்தில் காலூன்றியது, அவரது முதன்மைச் சாதனை என்று சொல்லத்தக்க சேர்ந்திசைக்கு  அடித்தளமிட்டது என நீள்கிறது எம்.பி.எஸ். இன் வாழ்க்கைப் பதிவு.

விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே, தோழா தோழாஎனும் எம்.பி.எஸ். இன் பாடல் பிறந்த விதம், அதை மேடையில் முழங்கிய மதுரை தியாகிகள் மாரி, மணவாளன், .வி. சுப்பையா பற்றிய செய்திகள் என நூலின் சில பக்கங்கள்  மிகவும் சிவப்பேறியிருக்கின்றனஅகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் தலைவர்களுள் ஒருவராயிருந்த எம்.பி.எஸ். காசி பனாரஸ் கல்லூரியில் மார்க்சீய வகுப்பெடுத்ததை தோழர் .சீ. கண்ணன்(காரல் மார்க்ஸ் கண்ணன்) வழியாகச் சொல்லும் குறிப்பு (பக்கம் 43), கலை இலக்கியப் பெருமன்றம்  தோற்றம் பெற்ற காலகட்டத்தில்  அவரது பணிகள், இடது தளத்தில் புதுமைகளைப்  படைக்க விரும்பிய அவரது புதுமைக் கலா மண்டம்அமைப்பு, அவர் படைத்த நிழலாட்டங்கள் (Shadow plays) எனத் தகவல்கள் அணிவகுக்கின்றன.

தில்லியிலிருந்து தமிழகம் திரும்பிய பிறகு அவரது இயக்கப்பணி இசைப்பணியாக மாறுகிறது. பாலே நடனப் பள்ளியின் இசை நெறியாளர், பாரதி இசைக்குழு இவற்றில் நிலைகொண்டு திரையிசைக்கு வந்து நிமாய் கோஷுடன் இணையாகிறார். இருவரும்  உழைக்கும் வர்க்க வாழ்வியலைச் சித்தரிக்கும் சில படங்களைக் கொடுத்தனர்; வர்க்க விடுதலையை அவை பேசின. அதைவிடவும் இவர்களின் கூட்டணி செய்த முதன்மையான பணி என்பது, திரையுலகில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டியதுதான்  என்பது விரிவான செய்திகளோடு பதிவாகியுள்ளது. பாதை தெரியுது பார் படத்தின் விநியோக உரிமையை வாங்கி அதைப் பரவலாக திரைக்கு வராமல் பார்த்துக்கொண்ட  .வி. மெய்யப்ப செட்டியார்,  தனது ஸ்டுடியோவில் ஆறு மாத காலம் நடந்த தொழிலாளர் போராட்டத்தின் காரணமாக  ஸ்டுடியோ வளாகத்திலிருந்த தன் வீட்டைக் காலிசெய்துவிட்டு  மயிலைக்கு மாறியது என்பதான விபரங்களையும்  நூல் பதிவாக்கியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து சினிமா ஸ்டுடியோக்களின் வரலாறு, தமிழ்த் திரைப்பட வரலாறு, திரை வணிகம், திரைப்படத் தயாரிப்பில் தொழிலாளர்களின் பங்கு, அவர்களது வாழ்க்கை நிலை, தென் இந்திய சினிமா தொழிலில் முதல் தொழிற்சங்கத்தை தொழிற்சங்க சட்டத்தின் கீழ் பதிவு செய்து நிறுவிய பெருமைக்குரிய தமிழ்நாட்டின் தொழிற்சங்க வரலாறு ஆகியவற்றை விவரித்துவிட்டு திரைத்துறை இரட்டையர்கள் ஆன ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷும் எம்.பி.எஸ்.சும் அதனைத் தொடர்ந்து மிகப்பல  திரைப்படத் தொழிலாளர் சங்கங்களை நிறுவிக் கட்டமைத்ததை விளக்கமாக நூல்  விவரிப்பது சிறப்பாக அமைந்திருக்கிறது.

திரைத்துறையின் தொழிலாளர்கள், சிறு காட்சிகளில் தோன்றும் எக்ஸ்ட்ராஸ் எனக் கேவலமாக  விளிக்கப்பட்ட துணை  நடிக நடிகையர், அபாயகரமான சண்டைக் காட்சிகளில் தங்கள் உயிரைப் பணயம் வைத்த, இழந்த சண்டைக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் எனத் திரைக்குப் பின்னால் செயல்பட்ட அன்றைய எளிய உழைக்கும் வர்க்கத்தின்  வாழ்க்கை பட முதலாளிகளின்,  ஒப்பந்தக்காரர்களின் கொடும் பிடியிலிருந்தது. அவர்கள் எதிர்கொண்டதெல்லாம் நேரங்காலம் எனும் நிர்ணயமில்லாத உழைப்பு, நிச்சயமற்ற ஊதியம், பாதுகாப்பற்ற பணிச்சூழல் இவைதான். படப்பிடிப்பின்போது உயிர் இழந்த, உடல் உறுப்புக்களை இழந்த நூற்றுக் கணக்கான சண்டைக் கலைஞர்களைப் பற்றிய குறிப்புக்கள் மனதை நெகிழச் செய்கின்றன. இப்படி அடிபடுவதும், உயிர் விடுவதும் படமுதலாளிகளைப் பொறுத்தவரை ஒரு விபத்து; அவ்வளவுதான்.

தொழிற்சங்கச் சட்டம் 1926இன் கீழ் பதிவு செய்யப்பட்ட திரைப்பட இசையமைப்பாளர் சங்கம் பரிணமித்த பிறகுதான் தொழிலாளர் உரிமைகளுக்கான அங்கீகாரம், ஒப்பந்த முறை ஒழிப்பு, குறைந்தபட்சக் கூலி சட்ட நடைமுறை, எட்டுமணி நேர கால்ஷீட், நேரம் கூடினால் கூடுதல் ஊதியம் (ஓவர்டைம்), உழைப்பு முடிவுற்ற உடனேயே ஊதியம் (Spot Payment), பணிப் பாதுகாப்பு, திரையரங்க ஊழியர்களும் இந்தச் சட்ட வரம்புக்குள் இணைப்பு எனப் பல உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. இதன் பிறகு மிகப்பல துறைவாரி சங்கங்களை நிறுவத் தொழிலாளர்களே முன் வந்தனர் என்பது பெரிய திருப்பமாக அமைந்தது எனில் அதற்கு அடித்தளமிட்டது அந்தஇடதுசாரி இரட்டையர்கள்தான். இதன் பிரதிபலனாக இருவருக்கும் தமிழ் திரைப்படத் துறையில் வாய்ப்புக் கொடுக்காமல்வருமானம் கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்கள் தமிழ் சினிமா முதலாளிகள். ஏற்கனவே நிமாய் ஒரு கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தப்பட்டு அவரை ஒதுக்கி வைத்தது வங்காளப் பட உலகம் (க்கம் 102).     இந்த நிலையில்தான் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்து என் வாழ்க்கைப்பாட்டைப் பார்த்துக்கொள்வேனே தவிர வாய்ப்புக்காக படமுதலாளிகளிடம் போய் நிற்க மாட்டேன்என்று சூளுரைத்தபடி வாழ்ந்து காட்டினார் எம்.பி.எஸ்.  அதன் பிறகுதான் அவரை மலையாளத் திரையுலகம் சிறப்பாக ஏற்றுக்கொண்டது; இல்லையில்லை, ஏற்றுக் கொண்டாடியது என்பதே உண்மை.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின்பான மக்கள் எழுச்சியைத் தடை செய்ய பஞ்சாப் மக்களின் முக்கியமான தலைவரான சைபுதீன் கிச்சலுவை பஞ்சாபுக்குள் நுழையத் தடை விதித்து, பின்னர் கைது செய்து ஆறு மாதம் சிறையிலும் அடைத்தது பிரிட்டிஷ் அரசு. அந்த அளவுக்குத் தீவிரமான களப்போராளி அவர். அவர் மனைவி சாதத் பானுவும் தேச விடுதலைக்குப் பாடுபட்டவர்; அகில இந்திய மகளிர் இயக்கத்தில் பங்கு பெற்றவர். பெற்றோர் வழியில் அவர்களின்  புதல்வி ஜகிதா இடதுசாரி மாணவர்  இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்தபோது, அப்போது தில்லியில் கட்சிப் பணியுடன் இப்டா இயக்கத்திலும் இயங்கி வந்த எம்.பி.எஸ். உடன் ஏற்பட்ட நட்பு காதலாகத் தொடங்கி திருமணமாகப் பரிணமித்தது. எம்.பி.எஸ்., ஜகிதா இணையரின் வாழ்க்கை இயக்க வாழ்க்கையாக, பின்னர் இசை வாழ்க்கையாக இருவரையும் இணைத்து உருமாற்றிக்கொண்டது.

சென்னை இளைஞர் இசைக்குழுவும் (Madras Youth Choir-MYC), அதன் சேர்ந்திசையும் எம்.பி.எஸ். அவர்களின் உருவாக்கமே.  உழைப்பைப் போலவே உழைப்பாளரின் உருவாக்கத்திலிருந்து பிறந்த இசையையும்  தனிச்சொத்தாக்கிவிட்ட  நிலவுடைமை, முதலாளித்துவம் ஆகியவற்றின் பிடியில் இருந்து அதை திரும்பவும் மீட்டு சேர்ந்திசையாக்கி இது உழைக்கும் மக்களின் பொதுச்சொத்து, மக்களிசை என மக்களிடம் கையளித்த பெருமையை நூல் தத்துவார்த்த தளத்தில் இருந்தும்,   நடைமுறை சார்ந்தும் விவரித்திருக்கிறது. எம்.பி.எஸ். அவர்களின் கனவான சேர்ந்திசைக் குழுவை அவர் மறைவுக்குப் பின்னும் தொடர்ந்து இயக்கியவர் அவர் மனைவி ஜகிதா. அதன் சாட்சியமாக இருப்பது எம்.பி.எஸ். மறைவுக்குப் பின் எழுந்த  திருவனந்தபுரம் எம்.பி.எஸ். இளைஞர் சேர்ந்திசைக்குழு. அதன் தோற்றத்துக்கு வித்திட்டவர் மூத்த கம்யூனிஸ்ட் இயக்கப் போராளியான சுப்ரமணிய சர்மா; எம்.பி.எஸ்.சின் உற்ற நண்பர் அவர். தமிழகத்தில் கட்சிப்பணி செய்த அவர் கேரள முதலமைச்சர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாட் அவர்களின் தனிச்செயலராகப் பணி ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.எஸ். அறிமுகப்படுத்திய புகழ்மிக்க பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ், எம்.பி.எஸ்.சின் உதவியாளராகத் தொடங்கி மலையாளத் திரையிசையில் பிரபலமானஆர்.கே. சேகர் (.ஆர்.ரஹ்மானின் தந்தை) என  எம்.பி.எஸ் வழியாகத் தடம்பதித்த சாதனையாளர்களையும் தொட்டுச்செல்கிறதுபதிவின் பயணம். தமிழில் எட்டுப் படங்களுக்கும், மலையாளத் திரையிசையில் அறுபது படங்களுக்கும் (320 பாடல்கள்) இசையமைப்பு, ண்பது பாடல்கள் அடங்கிய ஏழு தனி இசைத் தொகுப்பு (Albums), 33 படங்களுக்குப் பின்னணி இசை மட்டும் என அவரது திரையிசைப் பயணத்தை ஆவணப்படுத்தியிருக்கிறது நூல். மொழியாதிக்கத்திற்கெதிரான கொந்தளிப்பான இந்தச் சூழலில்  ஒரு சிறுபான்மை மொழி எனத் தவிர்த்துப் புறக்கணிக்காமல் நீலகிரி பழங்குடி மக்களின் படுகர்  மொழியில் முதல் முழுநீளத் திரைப்படத்துக்கு  அவர் இசையமைத்துக் கொடுத்தார் என்பது அறியப்படாத தகவல்.  அவரது சமகாலத்தினர், மாணவர்கள், உடன் பணியாற்றிய கவிஞர்கள், எழுத்தாளர்கள், திரையிசைப் பிரபலங்கள், நண்பர்கள் எனப் பலரும் எழுதிய   நினைவுக் குறிப்புக்களும், அவருக்குச் செலுத்தும் அஞ்சலிப் பதிவுகளும் மிக விரிவான வகையில் அமைந்து எம்.பி.எஸ் எனும் பேராளுமையை நம் கண் முன்னே நிறுத்துவதில் வெற்றிகண்டிருக்கிறது நூல்.

நூலின் ஒரெயொரு குறை அவரது அரசியல் பற்றிய மெளனம் மட்டுமே. கட்சி வரலாற்றிலும், அதன் கலையிலக்கிய அமைப்பிலும்  அவரது தீவிரச் செயல்பாடு பற்றிப் பேசத் துணிந்தஒரு சில தோழர்களின் பதிவுகள் இடம்பெற்றிருக்கலாம். அது அவரது வாழ்க்கையின்  ஒரு முக்கியமான பகுதியல்லவா? அதே போல மிகச் சிரமப்பட்டுச் சேகரித்த எம்.பி.எஸ். பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒருசேர வாசகனுக்கு வழங்கும் பேரார்வத்தில் படைப்பை நிரல்படுத்துவதில் நூல் ஒரு தொய்வை உணரவைக்கிறது. எம்.பி.எஸ்ஸின் முன்னோர், அவரது இயக்கப் பணிகள், கலையிலக்கியப் பணிகள், குடும்ப வாழ்க்கை, தமிழ்த் திரைத்துறையில் அவரது பங்களிப்பு, திரைத்துறையில் தொழிற்சங்கச் செயல்பாடுகள், மலையாளத் திரையுலகில் அவர் பதித்தத் தடங்கள், அவரின் சேர்ந்திசை உள்ளிட்ட  இசை பற்றிய அவரது மார்க்சீயப் பார்வை மற்றும் கோட்பாட்டு விளக்கங்கள், எம்.பி.எஸ். பற்றிய சமூகப் பார்வை (அஞ்சலி உள்ளிட்டு), பின் இணைப்பாக எம்.பி.எஸ் உருவாக்கிய திரையிசைப் பட்டியல், இறுதியாகத் தரவுகள் எனும் பெரும் இயல்களில் (பிரிவுகளில்) படைப்பைச் செழுமையாக்கி இருக்கலாம். இது ஒரு குறையாக சுட்டுவதற்கல்ல; எனது தனிப்பட்ட உணர்தலின் பதிவு மட்டுமே. எம்.பி.எஸ்.  ஆற்றிய பணிகள்  மட்டுமல்ல, அவரின் (அட்டைப்படம்)  நேரிய, கம்பீரமான தோற்றம் கூட நெஞ்சைவிட்டு நீங்காமல் நிழலாட்டம் ஆடியபடி நிறைந்து நிற்கிறது. 

சுருக்கமாகஅறியப்படாமலிருந்த ஒரு மிகப்பெரும் ஆளுமையை கடும் உழைப்பைச் செலுத்திபல முனைகளின் வழியே தரவுகளைத் திரட்டி அறியக்கொடுத்த படைப்பாளரை நெஞ்சார வாழ்த்தவேண்டும். இந்தப் பதிவு, இடது தளத்திற்கு, அதன் கலையிலக்கியப் பண்பாட்டுத் தளத்திற்கு தோழர் இக்பால் அகமது செய்திருக்கும்  மிகவும்  போற்றுதலுக்குரிய பெரும் பணி. சமகாலத்தில் புறக்கணிக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட ளுமைகளை நிகழ் சமூகத்துக்கு அறியக் கொடுத்தும், அதன் வழியாக எதிர்காலத் தலைமுறையினருக்கும், இளையோருக்கும் தங்களை, சமூக அக்கறை கொண்ட அந்தத் தளத்தில் பயணிக்க ஒரு உத்வேகத்தை கிளர்த்தியும், ஒரு கருவியாக இந்தப் படைப்பும் பணியும் அடித்தளமிட்டிருக்கிறது என்பதை வலுவாகச் சொல்லலாம்.

நூல் : மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன்

ஆசிரியர் : மு. இக்பால் அகமது

வெளியீடு : பரிசல் புத்தக நிலையம்,

  47, B1 பிளாட், தாமோதர் பிளாட் ஐஸ்வர்யா அபார்ட்மெண்ட்,

 முதல் தளம், ம் பராசக்தி தெரு, . . சி. நகர்,

 பம்மல், சென்னை- 600075,

தொலைபேசி எண் 9382853646.

 

 

 

 

கருத்துகள் இல்லை: