புதன், ஆகஸ்ட் 27, 2025

மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி பரிந்துரைக்கும் ஐந்து சத மக்களுக்கான கணக்கெடுப்பு

மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் மாநிலக்குழுத்தீர்மான அறிக்கை இப்போது (நவம்பர் 2022) வெளிவந்துள்ளது, வாசித்தேன்.

"அதிகாரப்பூர்வமற்ற தகவலின்படி ஏறக்குறைய 95% தமிழக மக்கள் இடஒதுக்கீடு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சுமார் 5% மக்களுக்குமட்டுமே சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு இல்லை என்று விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு 10% ஒதுக்கீடு என்பது அதீத ஒதுக்கீடாக அமைந்துவிடும்... இந்தப் பொதுப் பிரிவினர்க்கான மக்கள்தொகையை கணக்கெடுக்க ஒரு ஆணையத்தை அமைத்து அதன் பரிந்துரைகள் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்."

இதுதான் தீர்மானம். இதே தீர்மானத்தில் இப்படியும் உள்ளது: "ஆனால் அதே நேரத்தில் இச்சலுகை பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ.8 லட்சம் ஆண்டு வருமான வரம்பு என்பதை குறைத்துத் தீர்மானிக்க வேண்டும் என அப்போதும் வலியுறுத்தினோம், இப்போதும் வலியுறுத்துகின்றோம்."

பொருளாதார அதாவது வருமான வரம்பு வைப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று. ஆண்டு வருமான வரம்பை ரூபாய் எட்டு லட்சத்தில் இருந்து குறைத்து தீர்மானிக்க வேண்டும் என்று (அமையப்போகும் (?) ஆணையத்துக்கு) கோரிக்கை வைக்கும் ஒரு இடதுசாரிக்கட்சிக்கு  எவ்வளவு வரம்பு வைக்கலாம் என்று பரிந்துரை செய்ய முடியாதா? வைக்க முடியாது என்பது கட்சிக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் பொருளாதார வரம்பு அதாவது வருமானம் என்பது constant factor அல்ல அது variable factor என்பதை சிஐடியூ போன்ற மிகப்பெரிய தொழிற்சங்க இயக்கத்தை வழிநடத்தும் கட்சி நன்றாகவே உணர்ந்துள்ளது என்று நம்புகின்றேன்.

இப்படி ஒரு பொருளாதார வரம்பை அதாவது வருமான வரம்பை அரசு நிர்ணயிப்பதாகவே வைத்துக்கொள்வோமே. அதை இந்திய சமூகம் எந்த எதிர்ப்பும் இன்றி ஒத்துக்கொண்டுபோகும் எனில் அது வெகுவிரைவிலேயே எங்கு போய் நிற்கும்? பன்னெடுங்கால சமூக ஒடுக்குமுறையின் காரணமாக இட ஒதுக்கீடு பெற்று இன்று கல்வியிலும் பொருளாதார நிலையிலும் உயர்நிலையை அடைந்துவிட்ட (ஆனால் இந்திய சமூக சாதிய அடுக்கில் அதே இடத்தில் இருக்கின்ற) பல கோடிக்கணக்கான குடும்பங்களின் எதிர்கால சந்ததிகளுக்கு வருமான அடிப்படையில் இடஒதுக்கீடு தொடர வேண்டுமா என்று ஆராய இதே நீதிமன்றங்கள் தாமாக முன் வந்து ஆணையங்களை அமைக்கக்கூடும். ஏற்கனவே சமூக ஒடுக்குமுறை அடிப்படையில் ஆன இட ஒதுக்கீடு இன்னும் எத்தனை காலத்துக்கு தொடர வேண்டும் என்று பெருமதிப்புக்குரிய நீதிமான்கள் அங்கலாய்த்து நெட்டி முறித்து நீட்டி முழக்கி கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். 

இந்த அபாயத்தை ஒரு முக்கியமான இடதுசாரிக்கட்சி முன்னுணராமல் இருப்பது வருத்தத்துக்குரியது. ஒரு எளிய கேள்வியை மார்க்சிஸ்ட் கட்சியிடம் கேட்கலாம். மார்ச் 2020க்குப் பின் ஆன ஏறத்தாழ இரண்டு வருட lockdown காலத்தில் இந்திய சமூகத்தில் எந்தப் பிரிவினருக்கு எத்தனை ஆயிரம் அல்லது லட்ச ரூபாய்களை வருமான வரம்பாக வைக்கலாம்?

இலவச திட்டங்களால் நாட்டுக்கு கேடு , அவை தொடர வேண்டுமா என்று ஏற்கனவே புலம்புகின்றனர் இதே நீதிமான்கள். நீதிபரிபாலன எல்லையைத் தாண்டி Executive powers என்ற ஆட்சியதிகார வரம்புக்குள் தலையை நுழைக்கின்றார்கள். இலவசத் திட்டங்கள் குறித்து ஆராய ஆணையம் அமைக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க இலவசத் திட்டங்களால்தான் நாடு நாசமாய் போகின்றது என்று ஒரு சர்ச்சையை கிளப்பி பேசுபொருளாக்குவதில் வெற்றிபெற்றுள்ளார்கள் நீதிமான்கள். 

மட்டுமின்றி, ஒரு நூறு வருடமாக இந்திய மக்களின் வரிப்பணத்தில் முதலீடு செய்யப்பட்டு லாபம் ஈட்டி வந்த மிகப்பல அரசுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் மூலம் அத்தகைய தனியார் நிறுவனங்களில் (ஏற்கனவே அரசுத்துறையாக இருந்தபோது அரசியல் சட்டப்படி அனுபவித்து வந்த உரிமையான) இடஒதுக்கீடு உரிமைக்கு சாவு மணி அடிக்கப்படுகிறது. இதன் நேரடி நாசகர விளைவை எதிர்கொள்வோர் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும் பட்டியல் இன, பழங்குடி மக்களும் மட்டுமே. எனில், அத்தக்கூலிக்கு வேலை செய்யப்போகும் பல கோடி பெரும்பான்மை மக்களின் அன்றாட வருமானம் என்பது நிரந்தரம் அல்லாத ஒன்றாக மாறி விடுகின்றது. நாணயத்தின் மறுபக்கம் போல தவிர்க்க இயலாதபடி கான்ட்ராக்ட் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றது. அதாவது நிரந்தர வேலை இல்லாத, நிரந்தர வாழ்க்கை ஊதியம் இல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனில் இவர்களுடைய வருமானமும் நிரந்தரம் இல்லாத, ஊசலாட்டத்திற்கு உரியதாகி விடுகிறது. மார்க்சிஸ்ட் கட்சி சொல்லும் வருமான வரம்பை எதன் அடிப்படையில் இவர்களுக்கு நிர்ணயம் செய்ய முடியும்? சாத்தியம் இல்லை.


இந்திய மக்களின் பணத்தை ஒட்டச் சுரண்டித் தின்று வங்கிகளை திவாலாக்கிவிட்டு எப்போதும் பெண்கள் புடை சூழ வெளிநாட்டில் கொட்டமடிக்கும் அயோக்யன் விஜய் மல்லையாவை இன்னும் எத்தனை நாட்களுக்குள் இந்திய நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்துவீர்கள் என்று ஆராய மட்டும் விசாரணை கமிசன் ஒன்றை அமைத்தால் வரவேற்போம்.
...

8.11.2022 முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: