மரியாதைக்குரிய தமிழன்பன் அவர்கள் சென்னை தொலைக்காட்சியில் செய்தி வாசித்தார் என்பது மூத்தவர்கள் அறிந்த ஒன்று. அவர் ஏன் அல்லது
எப்போது அந்த பணியில் இருந்து விலகினார் என்பது நெடுநாட்களாக ஒரு கேள்வியாக மனதில் இருந்து கொண்டே இருந்தது.
இணையத்தில் வேறு பல தேடுதல்களை செய்து கொண்டு இருந்தபோது இந்த நூல் கண்ணில் பட்டது. மிக அரிய நூல் என்பதில் ஐயமில்லை. ரோஜா முத்தையா ஆராய்ச்சி மையத்தின் தளத்தில் உள்ளது. நண்பர்கள் வாசிக்கலாம். நானும் என் கவிதையும் என்ற நூல் அது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1999இல் வெளியிட்டுள்ளது. பதிப்பாசிரியர் மு வளர்மதி. மூத்த கவிஞர்கள் 12 பேர் எழுதி இருக்கிறார்கள்.
அந்த கேள்விக்கு இந்த நூலில் பதில் கிடைத்தது. நூலில் தமிழன்பன் சொல்கிறார்:
"1992இல் தமிழ்த்தேசிய தன்னுரிமை மாநாடு நடந்தது. ... கவியரங்கத்தில் கவிஞர் அறிவுமதி பாடியதை நான் பாடியதாக என்மேல் போட்டுவிட்டனர். அறிவுமதி தேசியக்கொடியை தனது கவிதையில் கடுமையாக ஏளனம் செய்து பாடினார். அது கவிஞனுக்குள்ள உரிமை. தேசியக்கொடியை அவமானப்படுத்தி விட்டதாக சொல்லி அறிவுமதியைக் குறிவைப்பதற்குப் பதிலாக கூடுதலாக அறியப்படுபவர், செய்தி வாசிப்பாளர் என்ற முறையிலும் கலைஞருடன் நட்பு கொண்டவர் என்ற முறையிலேயும் என்னை நெருக்கினர். நான் எழுதிய கவிதையில் ' அஜர்பைஜான் நெருப்பு அசோகச்சக்கரத்தை விசாரிக்கும் ' என்று எழுதி இருந்தேன். அப்போது சோவியத் பகுதியில் எல்லாம் குழப்பமான சூழ்நிலை நிலவியது. ரஷ்ய மொழியைக் கொண்டு போய் திணித்தால் மற்ற மாநிலங்கள் எதிர்க்கும் நிலை. அஜர்பைஜாநில் கிளர்ச்சி நடந்தது. அதைக் குறிப்பிட்டு நான் பல மொழி பேசுகிற ஒரு நாட்டில் ஒரு மொழியை மட்டும் எல்லா மாநிலங்களிலும் கொண்டு போய் திணித்தால் நாடு ஒற்றுமையாக இருக்காது, தகர்ந்து போய் விடும் என்று எழுதி இருந்தேன்.
' அஜர்பைஜான் நெருப்பு அசோகச்சக்கரத்தை விசாரிக்கும் ' என்பதை ' அஜர்பைஜான் நெருப்பு அசோகச்சக்கரத்தை எரிக்கும் ' என்று மாற்றிக் கொண்டார்கள். இதற்காக பாரதீய ஜனதா மாநாட்டில் எனக்காகவே ஒரு தீர்மானம் போட்டார்கள். தமிழன்பனை கண்டிக்க வேண்டும் என்றும் தொலைக்காட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் பாரதீய ஜனதாவின் தேசிய அவைக்கூட்டதில் தீர்மானம் போட்டார்கள். அதோடு பாராளுமன்றத்தில் இந்தக் கவிதையை பற்றிப்பேசினார்கள். அதனுடைய விளைவாகத்தான் தொலைக்காட்சி நிலையத்துக்கு நான் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மிரட்டல் கடிதம் எல்லாம் வந்தன. இங்கிருந்து வந்தன என்றெல்லாம் தெரியும்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொடக்க விழாவின்போது நான் படித்த கவிதையும் இதற்கு ஒரு காரணம். இண்டியன் எக்ஸ்பிரஸில் ஒரு செய்தி வந்தது. அதில் என் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி பழி சுமத்தி இருந்தனர்."
...
சங்கீகளின் வரலாறு முதல் பக்கம் தொடங்கி இறுதி வரை மோசடி பிளாக் மெ யில் ஆகியவற்றால் நிரம்பியது.
...
16.8.2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக