25.7.2025 தீக்கதிர் இதழ் தஞ்சை தியாகி மறைந்த தோழர் என் வெங்கடாசலம் அவர்களது நூற்றாண்டு சிறப்பு மலராக வெளிவந்துள்ளது.
1977 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி அவர் இயக்கப் பணிக்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை, மீண்டும் காணக் கிடைக்கவில்லை. காவல்துறை அவர் அன்றைய தினம் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
1977 அக்டோபர் ஒன்பதாம் தேதி தீக்கதிர் வார ஏட்டின் முகப்பு பக்கத்தில் வந்துள்ள செய்தியின் படி, அக்டோபர் நான்காம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் முழுவதும் விவசாய தொழிலாளர்கள் கண்டன வேலை நிறுத்தம் செய்துள்ளனர். எட்டாவது பக்கத்தில் வெங்கடாசலம் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெளிவந்துள்ளது. அதனை அப்படியே இங்கு தருகிறேன். தீக்கதிருக்கு நன்றி.
...
தோழர் என் வெங்கடாசலம் அவர்கள் தஞ்சை மாவட்டம் இராயமுண்டான்பட்டியில் 1925 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி அன்று பிறந்தார். தந்தையின் பெயர் திரு நடராஜ கொடும்புறார், தாயாரின் பெயர் குஞ்சம்மாள். இவர்களுக்கு நான்காவது பிள்ளையாக பிறந்தவர் வெங்கடாசலம். வெங்கடாசலத்திற்கு இரண்டு அண்ணன்களும் ஒரு அக்காவும் உண்டு. இக் குடும்பம் அந்தக் காலத்தில் செழிப்பான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பமாகும். இந்த குடும்பத்தில் இவர் கடைசிப்பிள்ளை ஆதலால் இவரை ஊர் மக்கள் சின்னவர் என்றே மரியாதையாகவும் அன்பாகவும் அழைத்தனர். இவரது அண்ணன் ராஜகோபால் கொடும்புறார் கிராம முனிசிபாக இருந்தார்.
இவரது பாலப்பருவத்திலேயே தாயார் காலமாகிவிட்டார். இவரது தமக்கையின் கணவரும் காலமாகிவிட்டதால் தமக்கை விதவை கோலம் ஆனார். இந்த இழப்புக்கள் அவருக்கு மிக்க சோர்வை உண்டு பண்ணின.
அவர் கற்ற கல்வி
வெங்கடாசலம் ஆரம்பத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் பிறகு அரசுத் தொடக்கப் பள்ளியிலும் கல்வி பயின்றார். நாளடைவில் குடும்பம் வறுமைப்பட்டு நிலங்களை விற்க வேண்டியது ஆயிற்று. இதனால் வெங்கடாசலம் தொடர்ந்து படிக்க முடியவில்லை. சொந்த முயற்சியில் படிப்பும் பயிற்சியும், அரசியல் இயக்கத்தில் பங்கு கொண்டதால் கிடைத்த அனுபவ ஞானமும்தான் அவருக்குக் கல்வியாக அமைந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் 1955 இல் உறுப்பினர் ஆனார். கட்சி மாநாடுகள், விவசாயிகள் அரங்க மாநாடுகள் ஆகியவற்றில் எல்லாம் பிரதிநிதியாகக் கலந்து கொள்ளுவார். தஞ்சையில் நடந்த எஸ் எம் டி பஸ் போராட்ட மறியலிலும் கலந்து கொண்டார்.
திருமணம் ஆன ஒரு வாரத்தில்
1959 இல் நடந்த பஞ்சாயத்து போர்டு தலைவர் தேர்தலில் தோழர் வெங்கடாசலம் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சொரக்குடி பட்டி பெருமாள் என்ற மிராசுதார் போட்டியிட்டார். தேர்தலில் வெங்கடாசலம் வெற்றி பெறவே பெருமாள் தனது வெறுப்பை காட்டும் முறையில் தனது பஞ்சாயத்து உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். விலைவாசி உயர்வை எதிர்த்தும் நிலச் சீர்திருத்தம் கோரியும் நடைபெற்ற கட்சிப் பிரச்சார பாதயாத்திரைகளிலும் புயல் நிவாரண வேலைகளிலும் அவர் தீவிரமாகப்பங்கு கொண்டார்.
1961 ஆம் ஆண்டில் இவருக்கும் தோழியர் லீலாவதிக்கும் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் மணலி சி கந்தசாமி தலைமையில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் ஆகி ஒரு வாரத்துக்குள் விவசாயிகள் போராட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது. நில உச்சவரம்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து உழுபவர்களுக்கு நிலம் கிடைக்கத்தக்க வகையில் உச்சவரம்பு சட்டத்தை ஒழுங்காக திருத்த வேண்டும் என்று கோரி தமிழக தலைவர்கள் பி சீனிவாசராவ், மணலி கந்தசாமி தலைமையில் மறியல் போராட்டம் நடத்தி 16 ஆயிரம் பேர் சிறை சென்றபோது தோழர் வெங்கடாசலமும் சிறை ஏகினார்.
ஒன்றரை ஆண்டு சிறைவாசம்
1962-63 ஆம் ஆண்டில் இந்திய சீன எல்லைப் போரைத் தொடர்ந்து தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டபோது கட்சிப் பணிகளையும் விவசாய சங்க வேலைகளையும் வெங்கடாசலமே பொறுப்பேற்று நடத்தினார். 1964 டிசம்பரில் கட்சி பிரிந்ததை அடுத்து மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களை எல்லாம் கடலூர் சிறையில் அடைத்த போது தோழர் வெங்கடாசலமும் அடைக்கப்பட்டார். ஒன்றரை வருட சிறை வாசத்திற்கு பிறகு 1966 ஜூலை மாதம் விடுதலையானார். 1970 இல் நடந்த பஞ்சாயத்து தேர்தலிலும் தோழர் வெங்கடாசலம் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதே சொரக்குடி பட்டி மிராசுதார் பெருமாளே போட்டியிட்டு தோல்வியுற்றார். 1971 பொதுத் தேர்தலில் திருவையாறு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். 1973 செப்டம்பரில் விலைவாசிக் குறைப்புக்காக நடந்த தர்ணாவிலும் கலந்து கொண்டு 19 நாள் சிறைவாசமும் புரிந்தார்
நியாயங்களுக்காகப் போராடினார்
1972 முதல் 75 வரை விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்கள் சீறி எழுந்த போது 1976 பிப்ரவரியில்பிரதமர் இந்திரா காந்தி அரசு அவசர நிலை பிரகடனம் செய்தது. தலைவர்கள் பலர் சிறைப்பட்டனர். தோழர் வெங்கடாசலம் தலைமறைவாகி இயக்க வேலைகளைத் தொடர்ந்து செய்தார். தலைமறைவாக இருந்தபோது வெங்கடாசலத்தின் குடும்பத்திற்கு போலீசார் இழைத்த கொடுமைகள் ஏராளம். பண்ட பாத்திரங்களையும் வீட்டில் இருந்த பலகைகளையும் அவரது போட்டோ படங்களையும் அள்ளி சென்றனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாதபடி மிரட்டப்பட்டனர். மனைவியும் வெளியில் செல்ல முடியாதபடி தொந்தரவு செய்தனர். பிறகு மிசாவில் கைது செய்யப்பட்டார்.
1970 இல் தஞ்சாவூர் கூட்டுறவு மத்திய வங்கியில் ரூபாய் 2 லட்சம் களவாடிய வங்கித் தலைவரை அம்பலப்படுத்தி அனைத்து கட்சிகளையும் சேர்த்து இயக்கம் நடத்தி வங்கித் தலைவருக்கு தண்டனை கிடைக்கச் செய்தார்.
அதேபோல் 1970 இல் தஞ்சை காவல் நிலையத்தில் ஜமீலா என்ற முஸ்லிம் பெண்ணை போலீசார் கற்பழித்து கொன்றுவிட்டு தற்கொலை என்று அறிவித்தபோது, அது ஒரு படுகொலை என்று சர்வ கட்சிகளையும் திரட்டி பெரும் கிளர்ச்சி செய்து நிரூபித்தார். 1975 இல் சோழகம்பட்டி ரயில்வே நிலையத்தில் ஆந்திராவில் இருந்து வந்த ஒரு யாத்திரிகர் கோஷ்டியை சேர்ந்த ஒருவரை அரிசி கடத்தினார் என்று போலீசார் அடித்தே கொன்று விட்டார்கள். அவர் மயக்கம் வந்து விழுந்து செத்துவிட்டார் என்று போலீசார் மூடி மறைத்தார்கள். ஊரே கொந்தளித்தது, பத்திரிகைகளில் எல்லாம் இச்செய்தி வெளியானது. தோழர் வெங்கடாசலம் தலையிட்டு போலீசார் அடித்ததன் விளைவாகத்தான் அவர் இறக்க நேரிட்டது என்று அறிக்கை தயார் செய்து மேலதிகாரிகளுக்கு புகார் செய்தார். விசாரணைகளும் நடைபெற்றன.
தோழர் வெங்கடாசலம் எந்த ஜாதியினரையும் சமத்துவமாகவும் மரியாதையாகவும் நடத்துவார். அவரது வீடு ஊராட்சி அலுவலகமாக இருந்ததால் அர்ஜுனங்களை நாற்காலிகளில் அமர செய்து பேசுவார். லெவி நெல் கேட்டு ஒன்று இரண்டு ஏக்கர் நிலம் வைத்து இருக்கிறவர்களிடம் எல்லாம் அதிகாரிகள் புகுந்து அள்ளியபோது வீட்டு சாப்பாட்டிற்கே பற்றாதவர்களிடம் லெவி நெல் அளக்காதே என்று அதிகாரிகளை வந்த வழியே திருப்பி அனுப்பி விடுவார். இவரது ஊரை அடுத்து திருச்சி மாவட்ட எல்லை வருவதால் இங்கிருந்து நெல் கடத்தியவர்களை எல்லாம் தடுத்து நிறுத்தினார். சாராயம் காய்ச்சல், விற்றல், குடித்தல் ஆகியவற்றை கடுமையாக கண்டிப்பார். ஊரில் உள்ள கணவன் மனைவி தகராறு முதல் ஆட்டுப்பஞ்சாயத்து, மாட்டுப் பஞ்சாயத்து, வயற்காடு தகராறு, கூலித் தகராறு போன்ற எத்தனையோ பஞ்சாயத்துக்கள் இவர் முன்னால் வரும்.
இவரது தகப்பனார் காலத்தில் ஊர் தகராறுகளில் சிக்கி நிலவளங்களை விற்று வழக்குகளை நடத்தி வறுமைப்பட்ட அனுபவம் தோழர் வெங்கடாசலத்திற்கு உண்டு அந்த கதி மற்றவர்களுக்கும் ஏற்பட்டுவிட கூடாது என்பதில் தனி அக்கறை உடையவராக இருந்தார். தகராறு செய்து கொண்டவர்கள்,அடிதடி நடத்தி போலீசில் சிக்கி கை கால் முறிந்து சீரழியாமல் நன்கு விசாரணை செய்து இரு தரப்பும் ஒப்பும்படி முடிவு சொல்லி சுமூகமாக தீர்த்து வைத்து சமரசமாக அனுப்புவார். இவருக்கு வயது 52 ஆனபோதிலும் வாலிபர்கள் வாலிபர்களிடத்திலும் மாணவர்கள் இடத்திலும் அன்பாகவும் ஆர்வமாகவும் பேசி வாலிபர் முன்னணி மாணவர் சங்கங்கள் முதல் இனி அமைப்பதில் முன்னே நின்றார். இவர் தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கத்திற்கு தலைவராக இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்தார். தஞ்சை வட்ட கட்சியின் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். சமுதாயத்தின் அடித்தட்டு மக்களான அரிசன மக்களுக்கும் பிற்பட்ட மக்களுக்கும் இரவு பகல் பாராமல் ஓயாது உழைத்து வந்த தோழர் வெங்கடாசலம் மக்களுக்காக எந்த துன்பத்தையும் இடையூறுகளையும் எதிர்த்து நிற்பதில் அஞ்சாத சிங்கமாய் விளங்கினார். கட்சி வேலையாக வெளியூர் சென்று விட்டு 21 9 1977 இரவு சுமார் 8 மணிக்கு சோழகம் பட்டி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தனது ஊரான இராயமுண்டான் பட்டிக்கு ஒத்தையடிப் பாதையில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார், ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட கடந்து இருக்காத நிலையில் அவரைக் காணவில்லை
தோழர் வெங்கடாசலம் அவர்கள் வெளியூர் சென்றால் எப்படியும் இரவு வீட்டுக்கு வந்து விடுவது வழக்கம். மழைக்காலம் ஆனதால் ரயில்வே ஸ்டேஷனுக்கு குடையோடு ஆள் அனுப்பு என்று 21 ஆம் தேதி காலை 7:30 மணிக்கு மனைவி லீலாவதி இடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டார். அன்று இரவு 8:15 மணி ரயிலில் வந்து இறங்கி வீட்டுக்கு வர வேண்டியவர் வரவில்லை. மழை இல்லாததால் மனைவி குடை கொடுத்து யாரையும் அனுப்பவும் இல்லை. ரயில் அட்டவணை நேரத்துக்கு சற்று முன்னதாகவே சோழகம் பட்டி ரயில்வே நிலையத்தை அடைந்து விட்டது. இறங்கி இருட்டில் ஒத்தையடி பாதையில் தன்னந்தனியாக வரும்போது தான் ரயிலடியிலிருந்து இராயமுண்டான் பட்டி செல்லும் மண் பாதையில், ரயிலடியிலிருந்து ஒரு மைலுக்கு உள்ளாக தோழர் வெங்கடாசலம் அடியார்களால் மடக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற எல்லோரும் நம்புகிறார்கள்.
எப்போதும் சிரித்த முகத்தோடு சகல கட்சியினருடனும் அன்பாகவும் பாச உணர்வோடும் இருப்பவர். அவர் இருக்கிற இடம் ஒரு ஊரை இருப்பது போல கலகலப்பாக இருக்கும். அவர் போய்விட்டார். கணவனை இழந்து லீலாவதி கண்ணீரும் கம்பலையுமாக தேம்பித் தேம்பி அழுகிறார். மகன்கள் 14 வயதான ஜீவகுமாரும் 13 வயதான சுகுமாரும் 10 வயது உள்ள கண்ணனும் அடக்க முடியாத துயரத்திலும் ஏமாற்றத்திலும் ஆழ்ந்து கிடக்கிறார்கள்.
வீட்டுச் சுவரிலே வெங்கடாசலம் லீலாவதி திருமண வாழ்த்து மடல் மாற்றப்பட்டு இருக்கிறது. அதன் கீழே லீலாவதியும்மகன்களும் கண்ணீர் விட்டு கொண்டு இருக்கிறார்கள்.
24 செப்டம்பர் 1977 முதல் தினசரி நூற்றுக்கணக்கான விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் கட்சித் தொண்டர்களும் மாணவர்களும் இராயமுண்டான் பட்டி சென்று அவரது மனைவி மக்களுக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள். ஆறுதல் சொல்லப் போகிறவர்கள் எல்லாம் வெங்கடாசலத்துடன் நெருங்கிப் பழகி பாசபந்தத்தோடு இருந்தவர்கள் ஆதலால் அவர்களும் கண்ணீர் விடுகிறார்கள். முப்பது ஆண்டுகளாக நாட்டு மக்களுக்குப் பாடுபட்டும் சொத்து சேர்க்காத உத்தமர் என்று ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். பொதுவாகவே தஞ்சை மாவட்டம் முழுவதும் பரபரப்பும் ஆத்திரமும் அடைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக