எம். பி.எஸ் 100: திரையிசையில் தெரிந்த புதிய பாதை
மதிப்புரை: ப. முருகன்
தீக்கதிர் வண்ணக்கதிர் 18.5.2025 ஞாயிறு
...
இசையால் வசமாகா இதயம் எது? இசைக்கு இசையாதவர் யார்? இசை மனிதரை தாளம்போட வைக்கும். துள்ளி ஆட வைக்கும். இசை என்பது எது? கருவிகளின் ஒலியா? மனிதரின் குரலா? இரண்டும் சேர்ந்ததா? குரலிசை இயல்பு. அதனுடன் கருவியிசை இணைவது சிறப்பு. எனினும் சேர்ந்து இசைக்கும் குரலிசை அதிசிறப்பு. அந்த மாயத்தை நிகழ்த்திக் காட்டிய அபூர்வ மனிதர் சேர்ந்திசைச் செம்மல் எம்.பி.சீனிவாசன்.
இலக்கியத்தில் எதார்த்த இலக்கியம் என்ற போக்கு உருவானது போல இசைத்துறையில் எதார்த்த - இயல்பான இசைப் போக்கை உருவாக்கியவர் எம்.பி.எஸ். குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்றார் திருவள்ளுவர். மனிதக்குரல் ஈடு இணையற்றது என்றெண்ணினார் இசையமைப்பாளர் எம்.பி.எஸ். “எந்த இசையையும் உணர்வுகளையும் பாடலின் கருத்தையும் பாவத்தின் மூலம் மனிதக்குரலால் மட்டுமே கொண்டுவர முடியும் .இசைக்கருவியில் அந்த மெலடி வரலாம். நாம் கேட்கலாம். ஓரளவுக்கு உணர்வுகளைக் கொண்டு வரலாம். ஆனால் இசைக்கருவியால் உச்சரிக்க முடியாது. அதை மனிதக் குரலால் மட்டுமே தான் வெளிக்கொண்டு வர முடியும் “என்று எனது குரு எம். பி. எஸ். கூறுவார் என்று அவரது சீடர் சென்னை இளைஞர் மன்றம் (myc) டி.ராமச்சந்திரன் கூறுகிறார். எனவே தான் அவரை மக்களிசை மேதை என்கிறார் எழுத்தாளர் மு. இக்பால் அகமது.
எதார்த்த இசையும் எதார்த்த திரைப்படங்களும் மக்களால் கொண்டாடப்படாமல் போனதற்கு பற்பல காரணங்கள் உண்டு. எழுத்தாளர் சுஜாதா கூறுவது ஆழ்ந்த கவனத்துக்குரி யது. “ஸ்ரீனிவாசன் ஓர் இனிய மார்க்ஸியவாதி" என்று கூறும் சுஜாதா, "கார்ப்பரேஷன் பள்ளிகளின் நூற்றுக்க ணக்கான குழந்தைகளை ஆல் இண்டியா ரேடியோவின் காம்பவுண்டிற்குள் ஒரே குரலில் ஒரே சுருதியில் பள்ளுப் பாட வைத்த சாதனையைப் பற்றி அவர் நிச்சயம் பெருமைப்படலாம்” என்கிறார். “இத்தனை திறமையுள்ள அவரை தமிழ்ச் சினிமா நிராகரித்து இருப்பதற்குக் கார ணம் இவரது மார்க்ஸியவாதமும் யூனியனிசமும் ஆக இருக்கலாம் என்று கூறுவது முற்றிலும் உண்மையே.” அதற்குச் சான்றுகள் தருகிறார் இக்பால் அகமது தனது ‘மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன்' எனும் நூலில்.
தமிழ்ச் சினிமாவில் 1960 முதல் 1982 வரை அவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை வெறும் எட்டே எட்டுத்தான். அவை பாதை தெரியுது பார் (1960), தாகம்(1972), எடுப்பார் கை பிள்ளை (1975), புது வெள்ளம் (1975), மதன மாளிகை (1976), அக்ரஹாரத்தில் கழுதை (1977), புதுச் செருப்பு கடிக்கும் (1978), நிஜங்கள் (1982). இந்த படங்கள் ஒருவித முற்றிலும் புதிய இசையமைப்பைக் காணலாம். ஆனால் அவரது இசைத் திறமையை மலையாளத் திரையுலகம்தான் நன்கு பயன்படுத்திக் கொண்டது. இவர் அங்கு இசையமைத்த படங்கள் 59. இவரது எண்ணமும் மலையாளத் திரையுலகப் போக்கும் மாறுதலான கதையம்சமும் மாற்றுச் சினிமாவுக்கான தேடலும் ஒத்துப் போனதால் இது காரிய சாத்தியமானது.
இவரது இசையமைப்பில் கருவிகளின் ஆதிக்கம் இருப்பதில்லை. பாடல்களும் கவிஞர்கள் எழுதிய பாடல்களுக்கே இசையமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. யதார்த்த பாணியிலான இசையமைப்பில் பின்னணி இசை எனும் பிஜிஎம் கூட அர்த்தச் செறிவுள்ளதாக இருக்கும் என்று கவிஞர் ஏழாச்சேரி ராமச்சந்திரன் குறிப்பிடுகிறார்.
அவர் இசையமைத்த படங்கள் பலவும் மிகப் பிரபலமானவை. விருதுகள் பெற்றவை. மலையாள இலக்கிய உலகின் சிறந்த கவிஞர்களுடன் பணியாற்றியவை. மீன மாசத்திலே சூரியன் எனும் படத்தில் இவரை நடிப்பதற்காக கேட்டிருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் லெனின் ராஜேந்திரன். ஆனால் இவரோ தனது குடும்பத்தினருடன் தங்கியிருக்க முடிவு செய்திருந்த காலம் அது என்பதால் தன்னால் இயலாது என்று மறுத்திருக்கி றார். அவர் நடிக்க மறுத்த படம் கய்யூர் தியாகிகள் பற்றியது. ‘நினைவுகள் அழிவதில்லை’ நாவல் நினை விருக்கிறதா? அந்த தியாகிகளில் ஒருவரான குஞ்ஞாம்பு ஆக நடிக்கத்தான் அழைத்தார் அதன் இயக்குநர்.
ஆனால் இயக்குநர் ஜான் ஆபிரகாம், கேட்டுக் கொண்டபோது அவரது படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் குடியரசுத் தலைவர் விருது பெற்ற ‘’அக்ரஹாரத்தில் கழுதை” படமாகும்.
இப்போதைய தமிழ் இசையமைப்பாளர்கள் பலரும் நடிகர்கள் ஆகியிருப்பது நினைவுக்கு வருகிறதா?. ஆனால் அவர் பணத்தை பெரிதாக நினைத்ததில்லை. அவர் இசை என்பதை தனி மனித பொழுது போக்குக்கு உரியது என்று நினைக்கவில்லை. அது சமூ கத்துக்கு உரியது என்றே நினைத்தார். அது பற்றி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கூறுவது பொருத்தமானது. “இசை என்பது தனி மனிதனின் இன்பத்துக்குரியது. தனிமனிதனின் உணர்வுக்கு உரியது. தனி மனிதனின் ஓய்வுக்கு உரியது என்ற பார்வையை உடைத்து சமூ கத்தின் எழுச்சிக்கு உரியது. சமூக முன்னேற்றத்துக்கு உரியது என்று சொன்னவர் எம்.பி.சீனிவாசன்”.
எம்.பி.எஸ், தெலுங்குப்படம் ஒன்றுக்கும் இசையமைத்துள்ளார். அவருக்கு இனம், மொழி, மத பேதம் ஏதுமில்லை. நீலகிரி படுகர் மக்களின் பாடலுக்கும் இசையமைத்துள்ளார். படுகர் மொழி திரைப்படத்துக்கும் இசை யமைத்துள்ளார். பல மொழிப்பாடல்களையும் சேர்ந்திசையாக பாடச் செய்துள்ளார். பாடியுள்ளார். நாட்டு மக்களை நேசித்தார். அவர்களின் இசையை சுவாசித்தார். இது எல்லாம் அவருக்கு எப்படி வாய்த்தது? அவரது குடும்பம் மிகப்பெரியது. பிரபலமானது. அறிவியலும் கலையும் இணைத்திருந்தது. அது மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் இயக்கத் தொடர்போடும் இருந்தது. அதனால் அவர் படிக்கிற காலத்திலேயே மாணவர் இயக்கத் தலைவராகவும் இருந்தார்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாநிலச்செயலாளராக இருந்த எம்.ஆர்.வெங்கட்ராமன் இவரது சித்தப்பா. இவரது அப்பா எம். ஆர்.பாலகிருஷ்ணன். இவர்களின் குடும்பம் மிகப்பெரியது மட்டுமல்ல, குணத்திலும் மிக விசாலமானது. இவரது துணைவியார் ஜஹிதா விடுதலைப் போராட்டத் தலைவர் ‘ஜாலியன் வாலாபாக்’ புகழ், சைபுதீன் கிச்லுவின் புதல்வியர் ஆவார்.
கம்யூனிஸ்ட்டான எம்.பி.எஸ்., இந்திய மக்கள் நாடக மன்றத்தில் (இப்டாவில்) தீவிரமாகச் செயல்பட்டார். அது தான் மகாகவி பாரதியின் தீவிர ரசிகரான இவரை இசை மீது தீவிர நாட்டம் கொள்ளச் செய்தது.
இதற்கிடையில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிகப் பெரும் தலைவரான ஏ.கே.கோபாலன் அவர்களுக்காக தில்லியில் 1952 -55 வரை அலுவலகப் பணி செய்தார். பின்னர் தான் தனது களம் இசைத்துறை என்று தீர்மானித்தார். தமிழகம் வந்தார். சென்னை வானொலியில் சேர்ந்திசைப்பணியில் ஈடுபட்டார். முதலில் தொழிலாளிகளைப் பாடச் செய்தார். பிறகு மாணவர்களைப் பாட வைத்தார். பின்னர் எல்லோராலும் பாட முடியும் என்று அனைவருக்கும் பாடும் பயிற்சி தந்தார். அப்படித்தான் சென்னை இளைஞர் மன்றம் (MYC) உருவானது. அடுத்தடுத்து பம்பாய் இளைஞர் மன்றம் (BYC), கல்கத்தா இளைஞர் மன்றம் (CYC) என அவரது இசை ராஜாங்கம் விரிவானது.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தியாகிகளைப் பற்றிய பாடலான “விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே” பாடலை தியாகி மணவாளன், சங்கரராஜு ஆகியோருடன் இணைந்து பாடி இசையமைத்தார்.
சோவியத் ரஷ்யா சென்று திரும்பிய பின் தமிழ்த் திரைத்துறைக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், இயக்குநர் கே.சுப்ரமணியம் ஆகியோரால் கல்கத்தாவிலிருந்து அழைத்து வரப்பட்ட ஒளிப்பதிவாளர் நிமாய்கோஷ் உடன் இணைந்து எம்.பி.எஸ் அவர்களின் தமிழக திரையுலகப் பிரவேசம் நடந்தது. “சின்னச் சின்ன மூக்குத்தியாம் செவப்புக் கல்லு மூக்குத்தியாம்” போன்ற பாடல்களுடன் “பாதை தெரியுது பார்” புதிய இசைப் பாதை அமைத்தது. ஆனால் அந்தப் படத்தை, தமிழக திரைத்துறை முதலாளி உலகம் காணாமல் அடித்து புதிய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது மிகுந்த கவலைக்குரியது. ஆனால் இந்தப் படத்தின் பிரதியை சோவெக்ஸ்போர்ட் பிலிம் (Sovexport film) எனும் சோவியத் ரஷ்யாவின் அமைப்பு வாங்கியது என்று இந்திய ரஷ்ய கலாச்சார நட்புறவுக்கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த பி.தங்கப்பன் கூறியிருப்பது தி இந்து நாளிதழில் வெளியாகி உள்ளது என்று மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் நூலாசிரியர் மு. இக்பால் அகமது குறிப்பிட்டிருக்கிறார். அங்கு தேடினால் ஒரு வேளை கிடைக்கலாம். ஆனால் சிதறிப் போன சோவியத்தில் எங்கு போய் தேடுவது? இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை எழுதியது தான், “உண்மை ஒரு நாள் வெளியாகும் , அதில் உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும், பொறுமை ஒரு நாள் புலியாகும், அதற்கு பொய்யும் புரட்டும் பலியாகும்” பாடல்.
“திரைப்படம் ஒரு தொழில். ஒரு முதலாளித்துவத் தொழில். பண்ட உற்பத்தி முறையின் உற்பத்திப் பொருளே திரைப்படம். முதலாளித்துவ இயந்திரத்தொழில் சதாப்தத்தின் கலை உருவம் திரைப்படம். லாபம், மேலும் லாபம் அடைவதே திரைப்படத் தொழிலின் ஒரே குறிக்கோள்” என்று கூறிய எம்.பி.சீனிவாசன், “திரைப்படத் தொழிலின் சமுதாயப் பொருளாதார அமைப்பே மாறிய பிறகு தான் சமுதாய மாற்றத்துக்கு உதவக்கூடிய திரைப்படங்கள் உருவாக முடியும்” என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். அதனால் தான் நிமாய் கோஷும் அவரும் தமிழ்த் திரையுலகில் தொழிற்சங்கம் துவங்கும் பணியில் ஈடுபட்டனர். 1957ஆம் ஆண்டு சினி டெக்னீசியன் கிளப்பை நிறுவி அதன் தலைவராக 1971 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அதன் செயலாளராக நிமாய் கோஷும் துணைத் தலைவராக முக்தா சீனிவாசனும் செயல்பட்டனர். அத்துடன் பல்வேறு பிரிவுகளிலும் சங்கங்களை உருவாக்கினர்.
நிமாயும் எம்.பி.எஸ்.சும் தங்களுக்கு வாய்ப்பு தேடுவதில் கவனம் செலுத்தாமல் பல்வேறு பிரிவு தொழிலாளர்களுக்கும் நியாயம் கிடைக்கப் பாடுபட்டனர். அதன் பிறகுதான் அவா்களுக்கு 8 மணி நேர வேலை, ஸ்பாட் பேமண்ட், இதர உரிமைகள் பலவும் கிடைத்தன.
பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்கள் கூறுவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
"அவர் (எம்.பி. எஸ்) இசையமைப்பாளர் பணியைச் செய்தாலும், சேர்ந்திசைப் பணி, திரைப்பட இசையமைப்பாளர் சங்கப் பணி உள்ளிட்ட எந்த வேலையைச் செய்தாலும் அவற்றை தனது நேர்மை, திறமை, அர்ப்பணிப்புணர்வு ஆகியவற்றால் வெற்றிகரமாக்கினர். திரைப்பட இசையமைப்பாளர் சங்கமாகட்டும், சம்மேளனத்துடன் இணைக்கப்பட்ட பிற அமைப்புகள் ஆகட்டும், இப்போது அவற்றின் உறுப்பினர்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகள், நலன்களுக்கும் காரணமாக இருந்தவர் எம்.பி. சீனிவாசன்தான்”.
அவரது பணி பல்வேறு அமைப்புகளிலும் தொடர்ந்தது. இப்டா, அஇ சமாதானக் குழு, இந்திய சோவியத் கலாச்சார அமைப்பு (ISCS), சங்கீத நாடக அகாதமி, திரைப்பட தொழிலாளர் சங்க அகில இந்திய சம்மேள னம், சமுதாய சேர்ந்திசை ஊக்க மத்தியக் குழு (CCPCS), மலையாள சென்சார்போர்டு, ஒன்றிய சென்சார் போர்டு என விரிவடைந்தது.
கேரள மக்கள் கலாச்சார அமைப்பு (KAPC) நடத்திய அஸ்வமேதம் நாடகத்துக்கு இசையமைத்தார். கேரள பல்கலைக்கழக சேர்ந்திசைக் குழுத் தலைவராக 1986 முதல் காலமாகும் வரை பதவி வகித்தார். மேற்குவங்க இசையமைப்பாளர் சலீல் சவுத்ரி குழு வுடன் இசைப் பரிமாற்றங்கள் செய்துவந்தார் என்று மாத்யூ இட்டி கூறியுள்ளார்.
எம்.பி.எஸ்-க்கு உதவி இசையமைப்பாளராக இருந்த வி.எஸ்.நரசிம்மன், " எம். பி.எஸ் ஐ பி ஆர் எஸ் (Indian performing rights Society) தலைவராக பணியாற்றி அதன் செயல்பாடுகளை சீர்படுத்தினார்" என்று கூறியுள்ளார் என்பது அவரது செயல்பாட்டுக்கு கிடைத்த பாராட்டாகும்.
அவரது திறமைக்கும் செயல்பாட்டுக்கும் செயல்பாட்டுக்கும் பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. அதனால் அந்த விருதுகளுக்கும் பெருமையே. 1986 இல் சங்கீத நாடக அகாடமி விருது, 4 முறை மலையாள இசையமைப்பாளருக்கான கேரள அரசு விருது, மற்றும் இசைத்துறையில் சிறப்பான சேவைக்காக கேரள அரசு விருது (1987), பாதை தெரியுது பார் படத்துக்கு குடியரசுத்தலைவரின் சிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்றார்.
1988 இல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் (கலைஞர்கள்) சங்கம் கோவையில் 5 நாள் இசைப் பயிற்சி முகாம் நடத்தியது. அதில் கலந்துகொண்ட இசைக் கலைஞர்கள், பாடகர்களுக்கு எம்.பி.எஸ் சிறந்த பயிற்சியளித்தார். அதில் நான்கு பாடல்களை பாடச் சொல்லிக் கொடுத்து பாடவைத்தார். அதில் ஒரு பாடல் , “இந்து மகாசமுத்திரம் எமது கடல் - அது எமது கடல்”. எமது கடல் என மெதுவாகத் துவங்கி அப்படியே மெல்ல மெல்ல பெரும் ஓங்காரத்துடன் எமது கடல் என்று முடிக்கும் போது, கடல் அலை சிறிதாகத் தோன்றி கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக உருக்கொண்டு ஆக்ரோசமாக சுருண்டு வரும் பேரலையின் உணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்த சேர்ந்திசைப் பாடல் அமைந்தது என்று கூறியிருக்கின்றனர் முகாமில் பங்கேற்றவர்கள்.
சர்வதேச கீதத்தை பிரெஞ்சு மூலப் பாடலின் மெட்டிலேயே இசையமைத்துப் பாடவைத்தார் என்பது அவரது இசை மேதைமையை வெளிப்படுத்தியது என்று செம்மலர் ஏட்டில் வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டுகிறார் இக்பால் அகமது. இப்படி அவர் 100 முகாம்கள் நடத்தியிருக்கிறார்.
அவரது இசைத் திறமை பற்றியும் இசைக் கொள்கை பற்றியும் நுட்பங்கள், நுணுக்கங்கள், கர்நாடக, இந்துஸ்தானி, மேற்கத்திய இசையறிவு பற்றியும் அதை அவர் திரையிசையில் பயன்படுத்தியது பற்றியும் அவருடன் பணிபுரிந்தவர்களும் கவிஞர்களும், இசையமைப்பாளர்களும் மாணவர்களுமாக பலரது படைப்புகள் இக்பாலின் நூலில் இடம் பெற்றுள்ளன. அவை எம்.பி.எஸ் அவர்களின் இசை மேதமையையும் கம்யூனிசப் பற்றையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
தமுஎசவின் பயிற்சி முகாம் 1988 ஜனவரியில் நடந்தது. அவர் மார்ச் மாதம் 9 ஆம் நாள் லட்சத்தீவில் (இசைக்) காற்றோடு (மூச்சுக்) காற்றாகக் கலந்துவிட்டார் என்பது சோக நிகழ்வாகிப் போனது.
மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் குறித்த இந்த நூலில் இசை பற்றிய இயக்கவியல் பொருள் முதல்வாத அடிப்படையிலான புரிதல் இருந்ததை எடுத்துரைக்கும் வகையில் அவர் எழுதிய "திரைப்படப்பாடல்களும் சமுதாய மாற்றமும்" என்ற கட்டுரையின் முக்கியப்பகுதிகளையும் கொடுத்துள்ளது மிகப் பொருத்தமானது.
அத்துடன் ஒரு நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடந்தால் அங்கு கலை எத்தகைய பங்கு வகிக்கும்; அதற்கு எத்தகைய முக்கியத்துவம் கிடைக்கும் என்பதை சிறப்புற எடுத்துக் காட்டும் “சோவியத் யூனியனில் கலை” கட்டுரை அந்த நூலுக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த நூலை எழுதுவதற்கு கொரோனா தொற்றுக் காலம் பயன்பட்டது என்றும் 4 ஆண்டு காலம் மிகப்பெரும் தேடல், ஆய்வு, நேரடி நேர்காணல், தொலை பேசி நேர்காணல் மற்றும் இணையதளத் தகவல்கள், தரவுகள் என இக்பாலின் உழைப்பு பாராட்டுக்குரியது. அத்துடன் எம்.பி.எஸ். அவர்களின் மூதாதையர், குடும்ப உறுப்பினர்கள் பற்றி இதுவரை பலரும் அறியாத ஏராளமான அரிய தகவல்கள் இந்த நூலில் காணக் கிடைக்கின்றன.
இசை என்பது ஏதோ இறைவனால் அருளப்படுவது, வரம் என்று பலரும் கூறி மக்களை பயமுறுத்திக்கொண்டிருக்கும் காலத்தில் எந்த ஒரு சாதாரண மனிதரும் முயன்று கற்றால், ஈடுபாட்டுடன் உழைத்தால் எந்த இசையும் சாத்தியமே என்பதை அதுவும் உழைப்பினால் உருவாகும் விளைச்சலே என்பதை உணர்த்திய எம்.பி.எஸ். அவர்களுக்கு இந்த நூல் மிகச் சிறந்த சமர்ப்பணமாகும். இந்த நூலை அவரது தோழர் நிமாய்கோஷ் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.
இந்த நூலை வெளி யிட்டுள்ள பரிசல் பதிப்பகம் பாராட்டுக்குரியது.
சேர்ந்திசைச் செம்மல் எம்.பி. சீனிவாசன் அவர்களது நூற்றாண்டு இதுதான் என்பது இன்னும் பொருத்தமாகும். அவரது பிறந்த நாள் வரும் செப்டம்பர் 19. திரையிசையில் புதிய தடம் பதித்த எம்.பி.எஸ் அவர்களைப் போற்றுவோம்.
...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக