புதன், ஆகஸ்ட் 27, 2025

எம்.ஜி.ஆர்-விஜயகாந்த்-விஜய்: இவர்களின் 'அரசியல்' என்ன?

திரைப்படம் வழியாக 'அரசிய'லுக்கு:

இந்திய சமூகம் குறித்த சமூக அரசியல் அறிவு, வர்க்கப் பார்வை, இவற்றின் அடிப்படையில் வரையப்பட்ட இலக்குகள், இலக்கை அடைவதற்கான செயல் திட்டம்... இதுதான் ஓர் அரசியல் கட்சி அல்லது இயக்கத்துக்கான குறைந்தபட்ச அடிப்படை தேவைகளாக இருக்க முடியும்.


தமிழகத்தில் திரைப்பட உலகிலிருந்து வந்த ஒரு நடிகர் தொடர்ந்து மக்கள் ஆதரவுடன் 1977 தொடங்கி தான் இறந்து போகும் 1987 டிசம்பர் வரைக்கும் முதலமைச்சராக இருந்தார் எனில் அவர் எம்ஜிஆர். அவரை நடிகர் என்று பழித்தவர்கள் ஒரு உண்மையை மறந்து விட்டார்கள். அவர் விஜயகாந்த் போலவோ இன்று வசனம் பேசிக் கொண்டிருக்கிற விஜய் போலவோ அல்லர். அதாவது 1972ல் தனிக்கட்சி தொடங்கும் போது தமிழக அரசியல் களத்தில் அவர் ஒன்றும் புதியவர் அல்லர்.
 
மாறாக அவர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டு இயங்கியவர். அதன் தலைமை நிர்வாகப் பொறுப்புகளில் இருந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகமாக முன்னிறுத்தப்பட்டவர்.  1972ல் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து தனியே ஒரு கட்சியை தொடங்கிய போது அவருக்கு பின்னால் வந்த பல லட்சம் தொண்டர்கள் அல்லது அபிமானிகள் வெறும் சினிமா ரசிகர்கள் அல்லர் என்பதை உறுதிபட நினைவில் கொள்ள வேண்டும். அவர் பின்னால் திரண்ட மக்கள் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்து அவரைப்போலவே அங்கிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தவர்கள் என்பதுதான் உண்மை. அதன் பிறகு அவர் அதிமுகவின் கொள்கை என்று அறிவித்ததும் அண்ணாயிசம் என்று ஒரு புரிய முடியாத தத்துவத்தை அறிவித்து விமர்சனத்துக்கும் கேளிக்கும்  உள்ளானார் என்பது வேறு கதை. 

ஆனால் 1977 இல் ஆட்சியில் அமர்ந்த பின்பு ஆட்சி நிர்வாகத்தை தொடர்வதற்கு, அவருக்கு ஏற்கனவே 67 முதல் 77 வரை ஆட்சி நிர்வாகத்தில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் திட்டங்கள், மக்களை நேரடியாக அணுகத்தக்க வாய்ப்புக்கள், எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு தொடர்ச்சியாக தனது ஆட்சியை மாற்றிக் கொள்ளத்தக்க வாய்ப்புக்கள் இருந்தன. இவற்றை புதியவை, புரட்சிகரமானது என்றோ அவருக்கான தனித் திறன் என்றோ சொல்லிவிட முடியாது. எந்த ஊரு கட்சியினாலும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து செய்ய தக்கவற்றைத்தான் அவரும் செய்தார். 

அவரது மறைவுக்குப் பின் ஜெயலலிதா தலைமையில் இருந்த கட்சி தொண்டர்களும் ஒரே நாளில் கட்சியில் இணைந்தவர்கள் அல்லர். எம்ஜிஆர் இருந்தபோது இருந்த அதே அதிமுக தொண்டர்களும் உறுப்பினர்களும் ஜெயலலிதா தலைமைக்குப் பின்னும் தொடர்ந்தார்கள் அவ்வளவுதான். 

இங்கே திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வெவ்வேறு காலகட்டங்களில் மத்தியில் ஆட்சியில் அமர்ந்த அல்லது அமர வாய்ப்புள்ள ஏதாவது ஒரு தேசிய கட்சியின் கூட்டணியில் தமிழகத்தில் மாறி மாறி இடம் பெற்றார்கள் என்பது வரலாறு. அது தனியாக பேசப்பட வேண்டியது
...

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் கட்சியின் தலைமையை ஜெயலலிதா இயல்பாக கைப்பற்ற முடிந்தது. அவருக்கு அங்கே போட்டியாளர்கள் என யாருமே இல்லை.
அதிமுகவின் நிறுவனர் எப்படி இருந்தாலும் எம்ஜிஆர் தான். எம்ஜிஆரின் சொத்தாக இருந்த அதிமுக ஜெயலலிதாவின் கையில் ஒரு சொத்தாக போனது. 

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு திரைப்பட நடிகர் ஒருவர் ஓர் அரசியல் கட்சியை தொடங்கி சில காலம் வரை, ஆம், சில காலம் வரை அதனை வெற்றிகரமாக நடத்தி சட்டமன்றங்களில் சில இடங்களையும் பிடிக்க முடிந்தது எனில் அது நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக மட்டுமே.

2005 ஆம் ஆண்டு மதுரையில் ஒரு மாநாடு நடத்தி கட்சியை தொடங்குகிறார் விஜயகாந்த். அவர் நிறுவனர் என்றாலும் அந்த கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டவர் விஜயகாந்தின் ரசிகர் மன்ற தலைவரான ராமு வசந்தன் என்பவர் தான். ஆக அடிப்படையில் ரசிகர்களை நம்பியே அவர் கட்சியை தொடங்குகிறார். சரியாகச் சொன்னால் ரசிகர்களின் வாக்கு வங்கி சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தனக்கு உதவும் என்பதுதான் கணக்கு. பெரிய ரகசியம்  இல்லை.

அடுத்த வருடமே 2006 இல் தனித்து அக்கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. ஒரே ஒரு இடத்தில் வெல்கிறது. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் அமருகிறது. 

2011 தேர்தலில் அதிமுக இடதுசாரிகள் அடங்கிய கூட்டணியில் தேமுதிகவும் இணைகிறது. 40 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெல்கிறது. 1967 க்கு பிறகு திமுகவோ அதிமுகவோ அல்லாத வேறொரு கட்சி தமிழகத்தில் முதல்முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தை தான் பெற முடிந்தது. ஆனால் தேமுதிகவுக்கும் அதாவது விஜயகாந்த்துக்கும் அதிமுகவுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஜெயலலிதா தனது பலவித செல்வாக்குகளையும் தட்டச்ச அதிகாரத்தையும் பயன்படுத்தி தேமுதிக சட்டமன்ற கட்சியை கரைத்தார். அவரது கட்சியிலிருந்து எட்டு எம்எல்ஏக்கள் பதவி விலகினார்கள். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருந்து கீழே இறங்கினார்.

2016, 2021 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் அந்தக் கட்சி தேய்ந்து ஒரு இடம் கூட வெல்ல முடியாமல் போனது. 2021 தேர்தலில் அக்கட்சி போட்டியிட்ட 60 இடங்களில் மொத்தமாக 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. நிறுவனரான விஜயகாந்த் தலைமையில் இருந்த போதே அக்கட்சி படிப்படியாக தேய்ந்து போனதை அப்பட்டமாக உணர முடிந்தது. நாடாளுமன்ற தேர்தல்களில் எப்போதுமே அக்கட்சி ஒரு இடத்தை கூட வென்றதில்லை.

கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் காலமான நிலையில் 
இப்போது அவரது மனைவி கட்சியின் தலைவராக இருக்கிறார். அசையும் சொத்து அசையா சொத்து போல கட்சியும் அவரது மனைவியின் கைகளில் உள்ளது. அவ்வளவுதான். 2024 நாடாளுமன்ற தேர்தலை அக்கட்சி பிரேமலதா விஜயகாந்தின் தலைமையில் தான் எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்கத்தில் சொன்ன ஓர் இந்திய அரசியல் இயக்கத்துக்கு அல்லது கட்சிக்கு தேவையான இந்திய சமூகம் குறித்த அடிப்படை சமூக அறிவு, சமூக அரசியல் அறிவு, வர்க்கப் பார்வை, சமூக மாற்றத்திற்கான திட்டங்கள் அடையக்கூடிய இறுதி இலக்குகள் எதுவும் வரையப்படாமல் திரைப்பட ரசிகர்களை மட்டுமே நம்பி தொடங்கிய ஒரு இயக்கம் ஒரு திரைப்படம் போலவே முடிந்து போனது. மொத்தத்தில் தேமுதிக ஒரு மொன்னையான ஒரு அரசியல் கம்பெனியாக தொடங்கி அரசியல் கம்பெனி ஆகவே முடிந்து போனது.
...

விஜயகாந்த் போலவே இப்போது ஒரு நடிகர் ஒரு சில மாநாடுகளை நடத்தி விஜயகாந்தை போலவே தன்  ரசிகர்களை நம்பி அவற்றை எதிர்வரும் தேர்தல்களில் வாக்குகளாக மாற்றினால் ஒரு எம்ஜிஆரை போலவோ அல்லது விஜயகாந்தை போலவோ வாக்குகளை பெற்று தமிழக அரசியலில் சொல்லத்தக்க இடத்தை பிடித்து விடலாம் என்று நம்பிக்கை உடன் வருகிறார்.

இவரும் நான்கைந்து ஏ 4 தாள்களை கையில் வைத்துக் கொண்டு இந்திய அரசியல் சூழலில் கடந்த 75 வருடங்களாக மக்களுக்கு அள்ளி வீசப்படும் மிக சாதாரணமான வாக்குறுதிகளை தனது கட்சியின் திட்டமாக அறிவித்து வருகிறார். கொள்கை இலக்கு அது இது ...? இங்கேயும் அதே கதைதான். ஒரு மொன்னையான அரசியல் கம்பெனி. வரையப்பட்ட ஒரு அரசியல் திட்டமோ செயற்திட்டமோ சமூக அரசியல் பார்வையோ வர்க்க பார்வையோ இல்லாமல் ஒரு பெருங்கூட்டம் தனது பின்னால் இருக்கிறது என்ற மிகத் தட்டையான ஒரு நம்பிக்கையில் இவர் வருகிறார். இது அரசியல் அடிப்படையில் ஆன கூட்டம் இல்லை என்பதை அவரே நன்கு அறிவார்.

குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவெனில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் இல்லாத ஒரு அரசியல் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிரான வாக்குகளையும் அதிமுகவின் தள்ளாட்டத்தால் சோர்ந்து போய் இருக்கின்ற சில லட்சம் தொண்டர்களையும் தனது ரசிகர்களையும் சில இலட்சம் வாக்குகளாக மாற்றும் நம்பிக்கையில் இந்த நடிகர் இறங்கி உள்ளார். சரியாக சொன்னால் தேர்தலில் போட்டியிட்டு ஒரு சில இடங்களை வெல்வதற்கான ஒற்றை நோக்கத்துடன் இவர் வருகிறார்.
...

இருக்கின்ற நிலைமையை வெறுப்பு விருப்பின்றி நோக்கினால் எதிர்வரும் தேர்தல்களில் தமிழகத்தில் இப்போது இரண்டு எதிர்முனைகளில் உள்ள வாக்குகளில் இருந்து அவர் சில லட்சம் வாக்குகளை தனியே பிரிக்க முடியும். இந்த வாக்குகள் புதிதாக ஒன்றும் தோன்றி விடப் போவதில்லை. ஏற்கனவே இருக்கின்ற அரசியல் கட்சிகளில் இருந்து ஒரு பகுதியினரின் வாக்குகளை பிரிக்க முடியும். தவிர எப்போதுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்ற எந்த கட்சியியையும் சாராத ஆனால் குறிப்பிட்ட காலத்தில் தன்னிசையாக முடிவெடுத்து வாக்களிக்கின்ற பல லட்சம் வாக்காளர்களின் வாக்குகளையும் பெற முடியும் என்ற நம்பிக்கையில் அவர் இறங்குகிறார். அவரது இன்றைய மதுரை பேச்சு இதைத்தான் காட்டுகிறது. மிக கவனமாக தனது ரசிகர்களையும் ரசிகர்களுக்கு அப்பாற்பட்ட பல லட்சம் மக்களின் நம்பிக்கையும் பெறுவதற்கு அவர் முயற்சி செய்கிறார் என்பதை இன்றைய அவரது உரை சொல்கிறது. அவரது இந்த திட்டம் எதிர்வரும் ஓர் இரண்டு தேர்தல்களில் அவருக்கு கை கொடுக்கலாம். 
...

எவ்வாறு ஒரு அரசியல் கம்பெனியை கட்சி என்ற பெயரில் தொடங்கி தொடக்க காலங்களில் தேர்தலில் சில பல இடங்களை தேமுதிகவால் வெல்ல முடிந்ததோ அதேபோன்ற ஒரு தொடக்க நிலை விஜய் தொடங்கியுள்ள அரசியல் கம்பெனிக்கு ஏற்படக்கூடும். இப்போது நான் தனியாக தேர்தலை சந்திப்பேன் என்று அவர் கூறினாலும் தொடர்ந்து அவர் எதிர்கொள்ள கூடிய சூழ்நிலைகள் அல்லது வெவ்வேறு காரணங்களால் ஏற்படக்கூடிய இக்கட்டான சூழ்நிலை மற்றும் தேவைகள் கருதி கூட்டணி அரசியலிலும் கூட அவர் இறங்கலாம். இந்த இக்கட்டான என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு.
அதன் பின்னர் கொள்கையோ கோட்பாடோ அற்ற ஒரு அரசியல் கம்பெனி ஆன தேமுதிகவுக்கு ஏற்பட்ட படிப்படியான சரிவே இவருக்கும்  ஏற்படும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாதது. 

எதிர்வரும் காலத்தில் இதை பார்க்க முடியும்.

அரசியல் கட்சி அல்லது இயக்கம் என்பது தனியார் கம்பெனி அல்லது சூப்பர் மார்கெட் அல்ல, திடீர் என ஒருநாள் காலையில் திறப்பதற்கு. அது ஓர் இயக்கம். சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில், சமூகத்தின் வர்க்கப் பிரிவினைஅடிப்படையில், அன்றாடம் நிகழும் வர்க்கப் போராட்டத்தின் இயல்பான இயங்கியல் அடிப்படையில் ஆன பவுதீக வளர்ச்சி ஆனது வெகுமக்களின் மத்தியில் இருந்து எழும் இயல்பான  போராட்ட உணர்வுகளை பருண்மையான இயக்கமாக அல்லது அரசியல் கட்சியாக உருமாற்றுகிறது. அது இயங்கியல் அடிப்படையில் ஆன அரசியல் நிகழ்வு. தனிநபர்களால் தூண்டப்படுவதோ தனிநபர்களின் அபிலாசை அல்லது சுய லாபங்களுக்காக திறக்கப்படும் கடையாக ஒருபோதும் இருக்க முடியாது. எனில் ஏற்கனவே மக்கள் மத்தியில் இயங்கிகொண்டு இருக்கின்ற வர்க்க அரசியல் அடிப்படையில் ஆன இயக்கங்கள் அல்லது இடதுசாரி கட்சிகளின் செயற்பாடுதான் இங்கே பேசப்பட வேண்டியதும் மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்பட வேண்டியதும் ஆகும்.

தொழிற்சங்கங்களும் வர்க்கஅரசியலும்

தொழிற்சங்கங்களும் வர்க்கஅரசியலும்


பாதுகாப்பு துறையில் பழமையான தொழிற்சங்க சம்மேளனம் எனில் அது அருணா ஆஷப் அலி, எஸ் எம் பானர்ஜி போன்ற பெருந்தலைவர்களால் நிறுவப்பட்ட All india defence employees federationதான். CITU, AUTUC, HMS ஆகிய இடதுசாரி தொழிற்சங்கங்களின் கூட்டுத்தலைமையால் வழிநடத்தப்படும் சம்மேளனம் இது. Services எனப்படும் மூன்று ஆயுதப்படைகளின் சீருடை அணிந்த ஊழியர்கள் தவிர மற்ற சிவிலியன் பணியாளர்கள் அனைவருமே தொழிற்சங்கங்களில் உறுப்பினர்கள் ஆகலாம். AIDEF  தவிர INTUC, BMS ஆகிய அகில இந்திய அளவிலான சம்மேளனங்களும் பாதுகாப்புத்துறையில் உள்ளன. 

அகில இந்திய அளவில் இந்த மூன்று சம்மேளனங்களுடன் இணைக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் இருந்தாலும் அந்தந்த மாநிலங்களில் இயங்கும் பிராந்திய அளவில் ஆன  (அல்லது லெட்டர்பேட் கட்சிகளால் தொடங்கப்படும் லெட்டர்ப்பேட் தொ. சங்கங்கள்) தொழிற்சங்கங்களும் உள்ளன. உதாரணமாக தமிழ்நாட்டில் அ இஅதிமுக, திமுக, பா ம க உள்ளிட்ட கட்சிகள் தமக்கான தொ.சங்கங்களை வைத்துள்ளன, ஆம், வைத்துள்ளன. நடிகர் விஜய் இப்போது ஒரு தொழிற்சங்க பேரவை தொடங்கியுள்ளதாக அறிகிறேன்.

பாதுகாப்புத்துறை தொழிலாளர்களின் பொருளாதார கோரிக்கைகள், நிர்வாகம், ஆட்குறைப்பு, வேலைப்பளு குறைப்பு, தனியார்மயமாக்கல் போன்ற கோரிக்கைகள் எழும்போது ஒன்றியத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் AIDEF சம்மேளனம் முன்னெடுக்கும் கோரிக்கைகளின் நியாயத்தை, போராட்டங்களை முற்றாக புறக்கணித்துவிட்டு அனைத்து சங்கங்களும் வேறுபாடு எதுவும் இன்றி ஒரே அணியில் நின்று எதிர்ப்பார்கள். 

ஆட்சியில் இருப்பது திமுகவா அதிமுகவா அல்லது காங்கிரசா பிஜேபியா என்ற வேறுபாடு இன்றி இந்த AIDEF ஐஎதிர்ப்பது என்ற ஒற்றைப்புள்ளியில் INTUC, BMS, உள்ளூர் சங்கங்கள் ஒன்றிணைந்து தொழிலாளர்கள் போராட்டத்தை முறியடிப்பார்கள். வேலை நிறுத்த போராட்டங்களின்போது போலீஸ் துணையுடன் கார்களில் வேலைக்கு ஆளை அனுப்பி கருங்காலித்தனத்தில் ஈடுபடுவார்கள். தொழிற்சங்க இயக்கத்தில் இருந்த நான் இத்தகைய கருங்காலித் தனங்களை நேரடியாகப் பார்த்துள்ளேன்.

இந்த பிளவுவாத அரசியலும் கருங்காலித்தனமும் இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.  நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஒட்டுமொத்த படைத்துறை தொழிற்சாலைகளும் ordnance factories  இரண்டு வருடங்களுக்கு முன் இப்போதுள்ள அரசால் corporation நிறுவனங்களாக மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த முடிவை ஏற்க விருப்பம் இல்லாத தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த தொழிற்சாலைகள் இப்படி corporatization ஆக்கப்படும், அதை எதிர்த்து அனைவரும் ஒரு குடையின் கீழ் திரண்டு போராட வேண்டும் என்று வெகு நீண்டகாலமாக AIDEF போராடியபோதெல்லாம் எதிர்முனையில் நின்று அந்த போராட்டங்களை முறியடிக்க கூட்டணி சேர்ந்தவைதான் இந்த மற்ற சங்கங்கள். இவற்றில் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவையும் அடக்கம். இப்போது AIDEF உடன் வேறுபாடு இன்றி அனைத்து சங்கங்களும் வீதியில் நின்று போராடுகிறார்கள்.
... ...

தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஏறத்தாழ எட்டு வருடங்களாக தமக்கு தரப்பட வேண்டிய பஞ்சப்படியை தர வேண்டும் என்ற கோரிக்கை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை தொடங்கி உள்ளனர். போக்குவரத்து துறை ஓய்வூதியர்களுக்கும் இந்த பஞ்சப்படி நிலுவையில் உள்ளது.

அதே கதைதான். அதிமுக ஆட்சியில் இருந்தால் அ தொ ச பேரவை போலீஸ் துணையுடன் போராட்டத்தை உடைப்பதும் ஓட்ட தெரிந்தவர்கள் வந்து வண்டி ஓட்டுங்கள் என்று அரசு அறிவிப்பதும் நடக்கும். திமுக ஆட்சியில் இருந்தால் தொ மு ச போலீஸ் துணையுடன் போராட்டத்தை உடைப்பதும் ஓட்ட தெரிந்தவர்கள் வந்து வண்டி ஓட்டுங்கள் என்று அரசு அறிவிப்பதும் நடக்கும். 

இப்போதும் அமைச்சர் அதைத்தான் செய்துள்ளார். தொ மு சங்கத்தினரை வைத்து வண்டிகளை ஓட்டுவோம் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார். 

எட்டு ஆண்டுகள் பஞ்சப்படி நிலுவைத்தொகை தனக்கும் எல்லாருக்கும் ஆன கோரிக்கைதான் என்பதை சங்க வேறுபாடு இன்றி எல்லா தொழிலாளர்களும் உணர்ந்தால் எல்லாருக்கும் பொதுவான கோரிக்கை வெற்றி பெறும். இது மட்டுமல்ல இதில் அடங்கியுள்ளது. போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்தையும் தனியாருக்கு விற்றுவிட வேண்டும் என்ற ஒன்றிய பி ஜெ பி அரசின் தொழிலாளர் விரோத போக்குக்கு சாதகமான 'வரவு, செலவு, ஊதியம், போனஸ், நஷ்டம்' என்ற வழக்கமான பாட்டை அதிமுக, திமுக அரசுகள் கட்சி வேறுபாடின்றி பின்பாட்டுபாடுவது ஒட்டுமொத்த போக்குவரத்து துறையையும் தனியாருக்கு விற்பதில் முடியும். 

மின்சாரத்துறையில் தனியார்மயம் அநேகமாக பாதி அளவுக்கு உள்ளே வந்துவிட்டது. இந்த அபாயத்தை மின்சார வாரிய ஊழியர்கள் தொடர்ந்து ஒலிக்கிறார்கள். ஸ்மார்ட் மீட்டர் திட்டம் உண்மையில் அநேகமாக பல ஆயிரம் ஊழியர்களின் வேலைக்கு ஆப்பு வைக்கும் திட்டம். மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது தனி. கட்சி அரசியல் ஊழியர்களை ஒருசேர விடாமல் பிரிக்கிறது என்பதை விட தனியார் பெருமுதலாளிகளுக்கு சாதகமான சுயநல சக்திகள் திட்டமிட்டு தொழிலாளர்களை பிரித்து வைக்கின்றன என்பதே உண்மை.

மாநில அரசு இந்த விஷயத்தில் கனத்த மவுனத்தை கடைப்பிடிக்கிறது. எந்த கட்சியை சேர்ந்த தொழிலாளியாக இருந்தாலும் வேலை இருந்தால்தான் வயிற்றை கழுவ முடியும். மிக எளிய உண்மை இது. படைத்துறை தொழிற்சாலைகள் corporate மயம் ஆக்கப்பட்ட அனுபவம் அதைத்தான் சொல்கிறது.
...
8.1.24 முகநூல் பதிவு

மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி பரிந்துரைக்கும் ஐந்து சத மக்களுக்கான கணக்கெடுப்பு

மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் மாநிலக்குழுத்தீர்மான அறிக்கை இப்போது (நவம்பர் 2022) வெளிவந்துள்ளது, வாசித்தேன்.

"அதிகாரப்பூர்வமற்ற தகவலின்படி ஏறக்குறைய 95% தமிழக மக்கள் இடஒதுக்கீடு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சுமார் 5% மக்களுக்குமட்டுமே சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு இல்லை என்று விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு 10% ஒதுக்கீடு என்பது அதீத ஒதுக்கீடாக அமைந்துவிடும்... இந்தப் பொதுப் பிரிவினர்க்கான மக்கள்தொகையை கணக்கெடுக்க ஒரு ஆணையத்தை அமைத்து அதன் பரிந்துரைகள் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்."

இதுதான் தீர்மானம். இதே தீர்மானத்தில் இப்படியும் உள்ளது: "ஆனால் அதே நேரத்தில் இச்சலுகை பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ.8 லட்சம் ஆண்டு வருமான வரம்பு என்பதை குறைத்துத் தீர்மானிக்க வேண்டும் என அப்போதும் வலியுறுத்தினோம், இப்போதும் வலியுறுத்துகின்றோம்."

பொருளாதார அதாவது வருமான வரம்பு வைப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று. ஆண்டு வருமான வரம்பை ரூபாய் எட்டு லட்சத்தில் இருந்து குறைத்து தீர்மானிக்க வேண்டும் என்று (அமையப்போகும் (?) ஆணையத்துக்கு) கோரிக்கை வைக்கும் ஒரு இடதுசாரிக்கட்சிக்கு  எவ்வளவு வரம்பு வைக்கலாம் என்று பரிந்துரை செய்ய முடியாதா? வைக்க முடியாது என்பது கட்சிக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் பொருளாதார வரம்பு அதாவது வருமானம் என்பது constant factor அல்ல அது variable factor என்பதை சிஐடியூ போன்ற மிகப்பெரிய தொழிற்சங்க இயக்கத்தை வழிநடத்தும் கட்சி நன்றாகவே உணர்ந்துள்ளது என்று நம்புகின்றேன்.

இப்படி ஒரு பொருளாதார வரம்பை அதாவது வருமான வரம்பை அரசு நிர்ணயிப்பதாகவே வைத்துக்கொள்வோமே. அதை இந்திய சமூகம் எந்த எதிர்ப்பும் இன்றி ஒத்துக்கொண்டுபோகும் எனில் அது வெகுவிரைவிலேயே எங்கு போய் நிற்கும்? பன்னெடுங்கால சமூக ஒடுக்குமுறையின் காரணமாக இட ஒதுக்கீடு பெற்று இன்று கல்வியிலும் பொருளாதார நிலையிலும் உயர்நிலையை அடைந்துவிட்ட (ஆனால் இந்திய சமூக சாதிய அடுக்கில் அதே இடத்தில் இருக்கின்ற) பல கோடிக்கணக்கான குடும்பங்களின் எதிர்கால சந்ததிகளுக்கு வருமான அடிப்படையில் இடஒதுக்கீடு தொடர வேண்டுமா என்று ஆராய இதே நீதிமன்றங்கள் தாமாக முன் வந்து ஆணையங்களை அமைக்கக்கூடும். ஏற்கனவே சமூக ஒடுக்குமுறை அடிப்படையில் ஆன இட ஒதுக்கீடு இன்னும் எத்தனை காலத்துக்கு தொடர வேண்டும் என்று பெருமதிப்புக்குரிய நீதிமான்கள் அங்கலாய்த்து நெட்டி முறித்து நீட்டி முழக்கி கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். 

இந்த அபாயத்தை ஒரு முக்கியமான இடதுசாரிக்கட்சி முன்னுணராமல் இருப்பது வருத்தத்துக்குரியது. ஒரு எளிய கேள்வியை மார்க்சிஸ்ட் கட்சியிடம் கேட்கலாம். மார்ச் 2020க்குப் பின் ஆன ஏறத்தாழ இரண்டு வருட lockdown காலத்தில் இந்திய சமூகத்தில் எந்தப் பிரிவினருக்கு எத்தனை ஆயிரம் அல்லது லட்ச ரூபாய்களை வருமான வரம்பாக வைக்கலாம்?

இலவச திட்டங்களால் நாட்டுக்கு கேடு , அவை தொடர வேண்டுமா என்று ஏற்கனவே புலம்புகின்றனர் இதே நீதிமான்கள். நீதிபரிபாலன எல்லையைத் தாண்டி Executive powers என்ற ஆட்சியதிகார வரம்புக்குள் தலையை நுழைக்கின்றார்கள். இலவசத் திட்டங்கள் குறித்து ஆராய ஆணையம் அமைக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க இலவசத் திட்டங்களால்தான் நாடு நாசமாய் போகின்றது என்று ஒரு சர்ச்சையை கிளப்பி பேசுபொருளாக்குவதில் வெற்றிபெற்றுள்ளார்கள் நீதிமான்கள். 

மட்டுமின்றி, ஒரு நூறு வருடமாக இந்திய மக்களின் வரிப்பணத்தில் முதலீடு செய்யப்பட்டு லாபம் ஈட்டி வந்த மிகப்பல அரசுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் மூலம் அத்தகைய தனியார் நிறுவனங்களில் (ஏற்கனவே அரசுத்துறையாக இருந்தபோது அரசியல் சட்டப்படி அனுபவித்து வந்த உரிமையான) இடஒதுக்கீடு உரிமைக்கு சாவு மணி அடிக்கப்படுகிறது. இதன் நேரடி நாசகர விளைவை எதிர்கொள்வோர் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும் பட்டியல் இன, பழங்குடி மக்களும் மட்டுமே. எனில், அத்தக்கூலிக்கு வேலை செய்யப்போகும் பல கோடி பெரும்பான்மை மக்களின் அன்றாட வருமானம் என்பது நிரந்தரம் அல்லாத ஒன்றாக மாறி விடுகின்றது. நாணயத்தின் மறுபக்கம் போல தவிர்க்க இயலாதபடி கான்ட்ராக்ட் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றது. அதாவது நிரந்தர வேலை இல்லாத, நிரந்தர வாழ்க்கை ஊதியம் இல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனில் இவர்களுடைய வருமானமும் நிரந்தரம் இல்லாத, ஊசலாட்டத்திற்கு உரியதாகி விடுகிறது. மார்க்சிஸ்ட் கட்சி சொல்லும் வருமான வரம்பை எதன் அடிப்படையில் இவர்களுக்கு நிர்ணயம் செய்ய முடியும்? சாத்தியம் இல்லை.


இந்திய மக்களின் பணத்தை ஒட்டச் சுரண்டித் தின்று வங்கிகளை திவாலாக்கிவிட்டு எப்போதும் பெண்கள் புடை சூழ வெளிநாட்டில் கொட்டமடிக்கும் அயோக்யன் விஜய் மல்லையாவை இன்னும் எத்தனை நாட்களுக்குள் இந்திய நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்துவீர்கள் என்று ஆராய மட்டும் விசாரணை கமிசன் ஒன்றை அமைத்தால் வரவேற்போம்.
...

8.11.2022 முகநூல் பதிவு

ஞாயிறு, ஆகஸ்ட் 17, 2025

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன்: நூல் மதிப்புரை: கமலாலயன்

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன்: நூல் மதிப்புரை: கமலாலயன்,

மணல்வீடு இதழ் 55, ஏப்ரல்-மே-ஜூன்

எம்.பி.எஸ். எனும் சேர்ந்திசை வெள்ளம்

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் வாழ்க்கை வரலாற்று நூலை முன்வைத்து…

 

மு.இக்பால் அகமது, அடிப்படையில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு  வாழ்க்கை  நடத்தி வந்த ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். செங்கோட்டைக்கு அருகில், தென்காசியில் பிறந்த அவர்மதுரையிலே அரசுப்பள்ளியில் பயின்றவர். வேலை தேடி சென்னைக்கு வந்து, ஆவடியிலுள்ள பாதுகாப்புத் துறை நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர். பணி ஓய்வும் பெற்றுவிட்டார். மொழிபெயர்ப்பில் ஆர்வம் உண்டு.

ஸ்டாலின்மாவோ ஆகிய பொதுவுடைமைத் தலைவர்கள் எழுதிய நூல்களில் இரண்டிலுமாக மூன்று தொகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். வரலாறு, அரசியல், இசை, திரைப்படம், பயணங்கள் - இவையெல்லாம் இக்பாலின் விருப்பத்திற்குரிய தேர்வுகள். இவரின் எழுத்தும் வாசிப்பும் பூராவும் மேற்கண்ட பொருண்மைகளை மையங்கொண்டே விரிவும் ஆழமும் பெற்று வளர்ந்து கொண்டிருக்கின்றன.

 

இவரின் மொழியாக்க நூல்களில் பரவலான  கவனத்தை ஈர்த்த நூல் எனில், அது ‘மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்' என்ற, கான்ராட் வுட் எழுதிய நூல். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் போது, கேரளாவின் மலபார் பகுதியில் மாப்ளா முஸ்லிம் விவசாயிகளின்  எழுச்சி பற்றிய அரிய ஆவண நூல் இது.

மாவோ நூல் தொகுதிகள் ஒன்பதின் தமிழாக்கம் ஆனந்தவிகடன் சிறந்த மொழிபெயர்ப்பு நூல் தொகுதிக்கான விருது பெற்றது. அவற்றில் ஐந்து, ஒன்பது ஆகிய இரு தொகுதிகள் இக்பாலின் மொழி பெயர்ப்புகள் என்பது இன்னும் ஒரு சிறப்பு. ஸ்டாலின் படைப்புகளில் தேர்வு நூல்கள் தொகுதி ஏழு இவர் மொழிபெயர்த்ததுமேற்கண்ட எல்லா நூல்களையும் அலைகள் பதிப்பகத்தின் சார்பில் வெளியிட்டிருப்பவர் 'அலைகள்' சிவம் அவர்கள்.

சிறுகதைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். 'வேலிகளுக்கு அப்பால்...' என்பது இவரின் வலைப் பூ. தமுஎக சங்கம், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆகிய அமைப்புகளில் முன்னணி ஊழியர்.

இவருடைய நான்காண்டு கால உழைப்பின் விளைச்சல்தான் இப்போது நம் கைகளுக்கு வந்திருக்கும் 'மக்களிசை மேதை எம்.பி.எஸ்' எனும் நூல். 'பரிசல்' புத்தக நிலையம் சார்பில் தோழர் செந்தில்நாதன் இதை மிக அழகிய பதிப்பாக வெளியிட் டிருக்கிறார். மேலட்டையையும், உள் பக்கங்களை யும் மிகுந்த சிரத்தையுடன் வடிவமைத்திருப்பவர் தோழர் பா.ஜீவமணி அவர்கள்.

'தென்னங்கீற்று ஊஞ்சலிலே', 'சின்னச்சின்ன மூக்குத்தியாம்' ஆகிய இரு திரைப்படப்பாடல்கள், அறுபதுகளில் பள்ளிப்பிராயத்தில் இருந்த இக்பாலின் மனதில் பதிந்த இசைப்பாடல்கள். எனக்கும், என் போன்று ஐம்பது - எழுபதுகளில் பள்ளிச் சென்ற பலருக்கும் இந்தப் பாடல்கள் மிகவும் பரிச்சயம் ஆனவை மட்டுமன்றி, மிகப் பிடித்தமானவையும் கூட.    இவற்றுக்கு இசையமைத்தவர் எம்.பிசீனிவாசன் என்ற மாபெரும்  இசைக் கலைஞர். தமிழில் எட்டுத் திரைப்படங்களுக்கும், மலையாளத்தில் சுமார் அறுபதுக்கு மேற்பட்ட படங்களுக்கும் இசையமைத்தவர். தவிர, முப்பத்து மூன்று மலையாள மொழிப் படங்களுக்குப் படங்களுக்குப் பாடல்கள்இல்லாமல் பின்னணி இசை மட்டும் அமைத்துள்ளார். தனியாக ஏழு இசைத் தொகுப்புகள் வெளியிட்டவர். இரண்டிலுமாகச் சேர்த்து, சுமார் நானூறுக்கும் மேற்பட்ட பாடல்களின் இசையமைப்பாளர் இவர். 'சேர்ந்திசை’ எனும்  ஓர்  அரிய  இசையமைப்பு  வடிவை  இந்திய  அளவில் அறிமுகம் செய்து மிகவும் பிரபலமான ஒன்றாக, இன்றளவும் நிலைத்து நிற்கும் ஒன்றாக ஆக்கிய பெருமை, எம்.பி.எஸ் ஒருவரையே சாரும். இதை எழுதும் இந்த நிமிடங்களில், 'பாடசாலை போக வேண்டும், பாப்பா எழுந்திரு! செல்லப்பாப்பா எழுந்திரு!' என்ற பாடல் என் நினைவில் எழுந்து காதுகளில் ஒலித்து இதயத்தில் நிரம்புகிறது. காரணம், நான் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த அந்த நாள்களில், அன்றைய அகில இந்திய வானொலியின் கல்வி ஒலிபரப்பில் அனேகமாகத் தினமும் பகல் பன்னிரண்டரை மணி வாக்கில் கேட்டுக் கேட்டு மனதில் பதிந்த பாடல் இது.

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட 

சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை 

சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ

சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய் 

விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி 

வேளைதோறும் கற்று வருவதால் படியும்!

மலைவாழை அல்லவோ கல்வி? - நீ 

வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!

எனும் பாவேந்தர் பாரதிதாசனின் பாடலும் அவ்வப் போது வானொலியில் ஒலிக்கும். மேலே கண்ட இரு பாடல்களுமே பிஞ்சு மனங்களில் கல்வியின் அவசியத்தைப்பதிய வைக்கும் அற்புதங்கள்.

தேவாலயங்களின் பூசைக்காலங்களிலும், கிறிஸ்துமஸ் விழா நாள்களிலும் 'choir' எனப்படும் சேர்ந்திசை வடிவம் ஐரோப்பிய நாடுகளில் மிக நன்கு அறியப்பட்ட வடிவம். இங்கே மார்கழி பஜனைக் குழுக்களின் பாடல்களை அத்துடன் ஓரளவு ஒப்பிடலாம் எனினும், எம்.பி.எஸ் அறிமுகம் செய்து வளர்த் தெடுத்த சேர்ந்திசை வடிவம் முற்றிலும் வேறு ரகமானது. அடிப்படைகளில் சில அம்சங்களில் ஒற்றுமை இருக்கலாம். ஆனால், அவர் தேர்வு செய்த பாடல்கள், இசையமைப்பு, குறிக்கோள் எல்லாமே வேறுபட்டவை. அப்படியென்ன வேறுபாடு எனும் கேள்வி வாசகர்களுக்கு எழும். அவ்வாறு கேள்வி எழும்பட்சத்தில், நீங்கள் செய்ய வேண்டிய முதற் காரியம், இக்பால் எழுதியிருக்கும் இந்த நூலை முழுமையாகப் படிப்பதுதான்!

ஒரு மேதையின் வரலாற்று நூலில் காலவரிசைப்படி அவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் கட்டாயம் இடம்பெறும்; பெற வேண்டும். இந்த நூலிலும் அது இருக்கிறது. ஆனால், அவற்றை இக்பால் விவரிக்கும்  விதத்தைப் படிக்கையில், அவை ஒவ்வொன்றின் சம காலத்தில் நாட்டில் நடைபெற்ற முக்கியமான வரலாற்று நிகழ்வுகள், அந்த நிகழ்வுகளில் தொடர்புடைய மாமனிதர்கள், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவை ஏற்படுத்திய இன்ப - துன்பங்கள்அன்றைக்கு ஆட்சி செய்து கொண்டிருந்த  அரசாங்கங்களின்  அணுகுமுறைகள்  போன்று  பல்வேறு  செய்திகள்  மிக நுணுக்கமாகத் தொடர்புபடுத்திச் சொல்லப்பட்டு வந்திருப்பதை நாம் உணர்கிறோம். இக்பாலின் கதைசொல்லும் முறை மிக வித்தியாச மான, தனி ரகமான ஒன்று.

எம்.பி.சீனிவாசன் ஓர் இசையமைப்பாளர். நிமாய் கோஷ் என்ற வட நாட்டுக்காரர், வங்காளி, ஓர் ஒளிப்பதிவாளர். இந்த இருவரும் சேர்ந்து பல படங்களில் பணி செய்திருக்கிறார்கள். அதுவல்ல இந்தப் புத்தகம் கொண்டாடும் விஷயம். இருவரும் சேர்ந்து, அன்றைய தமிழ்த்திரைப்படத் தொழிற்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் ஒன்று திரட்டித் தொழிற்சங்கம் அமைத்து, எட்டு மணி நேர ஷிப்ட் முறை, வேலை நிறைவடைந்ததும், வியர்வை உலரு முன் தங்களுக்குச் சேர வேண்டிய ஊதியத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போகும் ஏற்பாடு எனப் பல்வேறு உரிமை களுக்கு வழி வகுத்துத் தந்தப் போராளிகள் என்பதே இக்பால்  கொண்டாடும் அம்சம்.

இன்றைய புகழ்பெற்ற திரையிசையமைப்பாளர் .ஆர்.ரஹ்மானின் தந்தையான ஆர்.கே.சேகர்  என்கிற ராஜகோபாலகுலசேகர்  எம்.பி.எஸ்சின்  இசைப் பயணத்தில் ஒரு முழுநேர உதவியாளர் என்பது இன்னொரு முக்கியத் தகவல். இவர் 52 திரைப் படங்களுக்கு மேல் இசையமைத்தவர்; தவிர, அன்றைய புகழ்பெற்ற திரையிசை அமைப்பாளர் களின் நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களின் இசைக் கோவையாளர், இசை நெறியாளர்.

டெல்லியில் நாடாளுமன்ற மக்களவையில், எதிர்க் கட்சித்தலைவராக, கம்யூனிஸ்ட் கட்சியின் பதினாறு உறுப்பினர்களின் நெறியாளராகத் தேர்வு செய்யப்பட்டிருந்த .கே.கோபாலனின் உதவியாளராக எம்.பி.எஸ் பணி செய்யப்போக வேண்டும் எனக் கட்சி முடிவு செய்தது. அதைச் சிரமேற்கொண்டு, இவரும் டெல்லிக்குப் போனார். அவரது அரசியல் ஆர்வம் அங்குக் கூர் தீட்டப்பட்டுப் பிரகாசித்தது. அது ஒருபுறம் இருக்க, அங்கே கட்சியின் தலைமையில் நாடெங்கிலும் இயங்கி வந்த 'இப்டா' (இந்திய மக்கள் நாடக மன்றம் - இந்தியன் பீப்பிள்ஸ் தியேட்டர் அசோசியேஷன்) என்ற கலை, பண்பாட்டு அமைப்பின் தொடர்பு எம்.பி.எஸிற்குள் இருந்த ஓர் இசைக்கலைஞன் முழு வீச்சில் வெளிப்பட்டுப் பரிணமிக்க அடித்தளம் அமைத்தது. இக்பால் இந்த அம்சத்தை மிக விரிவான ஒரு சித்திரமாகத் தீட்டிக் காட்டுகிறார்.

அங்கு அவர் நேரடியாகக் கண்டுணர்ந்த அம்சங்களை, இக்பால் பின்வருமாறு தொகுத்திருக்கிறார்: "இந்திய இசை என்ற ஒற்றை அடையாளம் ஏதுமில்லை என்பதையும், இந்தியாவின் பல மாநிலங் களில் இசை வடிவங்களும், மரபுகளும் அவ்வவற்றுக்கான தனித்தன்மையுடன் வேறுபட்டுச் செழுமையாகநிலவுவதையும் உணர்ந்தார். இதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் இசையை முறையாகவும், முழுக் கவனத்துடனும் கற்பதில் செலவிட்டார். தொன்று தொட்ட கர்நாடக இசை, இந்துஸ்தானி, மேற்கத்திய இசை ஆகிய வடிவங்களின் அடிப் படைகளை முழு மூச்சுடன் கற்றுத்தேர்ந்தார். இந்த இசையறிவைத் தனது மண்ணான தமிழ்நாட்டின் மரபான நாட்டுப்புற இசையோடு இணைத்து,புதிய பரிமாணங்களை உருவாக்குவது என்பதை முயன்று சிந்தித்துத் தனது பரிசோதனை முயற்சியில் வெற்றியும் கண்டார்..." (ப.56)

1955-ஆம் ஆண்டில், கட்சிப் பணியை நிறைவு செய்துவிட்டுச் சென்னைக்குத் திரும்பினார் எம்.பி. எஸ். அதன் பிறகு, முற்றிலும் வேறுபட்ட ஓர் இசைப்பயணத்தைத் தொடங்கி, தன் இறுதி மூச்சு வரை -  இந்த வார்த்தைகள் நிஜமாகவே எதார்த்தமாகின. ஆம், இலட்சத்தீவுகளில் ஓர் இசையமைப்புப் பணிக்காகப் போயிருந்தபோது, எதிர்பாராமல் மாரடைப்பு ஏற்பட்டுத்தான் அவர் மறைந்தார்! திரையிசை, மக்களிசை, சேர்ந்திசை - இந்த மூன்றின் அபூர்வமான ஒரு கலவையாகத் தனது கொடையைத் தந்து சென்றிருக்கிறார்!

இசை என்றால் கர்நாடக சங்கீதம், சாஸ்த்ரீய சங்கீதம் என்று மட்டுமே சாதித்து வருவோரின் குரல், இன்று கொஞ்சம்பலவீனமாக ஒலிப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால், அது வெறும் புறத்தோற்றம் மட்டுமே. அன்றும், இன்றும் 'சங்கீதம்' என்றுதான் அவர்கள் இசையைப் பற்றிப் பேசும்போதும், எழுதும்போதும் குறிப்பிடுகிறார்கள். சங்கீத மும்மூர்த்திகள் என்றால், தியாகையர், முத்துசாமி தீட்சிதர், ஷியாமா சாஸ்திரிகள் மட்டுமே. தமிழிசை? அட, வெறும் துக்கடா! தமிழிசை மூவர்? அப்படி யார் இருக்கிறார்கள் ?

தமிழில் நல்ல இசைப்பாடல்கள் கிடையாது; இருந்தால்தானே நாங்கள் பாட முடியும் என்று இங்கே தமிழிசை இயக்கம் கொஞ்சம் சூடு பிடித்தபோது பல 'வித்வான்'கள் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பாரதி ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து அன்றைக்கே இந்தப் பிரச்சினை பற்றி எழுதியதில் சில வரிகளை இங்கே நினைவுகூரத் தோன்று கிறது: நானும் பிறந்தது முதல் இன்று வரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது. வித்வான் வாதாபி கணபதிம்' என்று ஆரம்பஞ் செய்கிறார். "ராம, நீ சமானமெவரு, மரியாத காதுரா, ...ஐயையோ, ஐயையோ, ஒரே கதை.

எந்த ஜில்லாவுக்குப் போ, எந்தக் கிராமத்திற்குப் போ. எந்த 'வித்வான்' வந்தாலும், இதே கதை தான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்பு காதாக இருப்பதால், திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாட்டுகளை வருடக்கணக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தோற்காது உள்ள தேசங்களிலே  இந்தத் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். இந்தக் கீர்த்தனங்களெல்லாம் சமஸ்கிருதம்  அல்லது  தெலுங்கு  பாஷையில் இருக்கின்றன. ஆகவே, முக்காலே மும்மாகாணி வித்வான்களுக்கு இந்தக் கீர்த்தனங் களின் அர்த்தம் தெரியாது. எழுத்துகளையும், பதங்களையும் கொலை செய்தும், விழுங்கியும் பாடுகிறார்கள்...” என மகாகவி பாரதி மிக விரிவாக எழுதிக் கொண்டு போகிறார். வித்வான்கள் பாடும் பாடல்களைப் பற்றி மட்டுமன்றி, இல்லங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்கள் பாடும் பாடல் களைப் பற்றியும் பேசுகிறார். வித்வான்கள், பிரபுக்களை மட்டும் நம்பிக்கொண்டிருக்கக் கூடாது; பொதுமக்களையும் அணுக வேண்டும். அவர்களுக்குப் புரியும் மொழியில், அவர்களின் ரசனையை உயர்த்தும் வகையில் பாட வேண்டும். அப்படிப் பாடினால், தலைக்குக் கால் ரூபாய் பணம் வசூலித்து 1000 ரூபாய் நிதி கொடுப்பார்கள் என்கிறார். இன்றைக்குக் 'க்ரவ்ட் ஃப்ன்டிங்' பற்றி நாம் பேசிக்கொண்டிருக் கிறோம். அதைப் போகிற போக்கில் பாரதி எழுதிச் செல்கிறார்.

இசையையும், எழுத்தையும், இலக்கியங்களையும், பிற நுண்கலைகளையும் சாதாரண மனிதர்கள் அணுக முடியாத, அவர்கள் அணுகவே கூடாத, ஓர் உன்னத விஷயம் என உயரத்தில் தூக்கி வைத்துக்கொண்டு மிரட்டும் 'மேட்டுக்குடி' போக்கை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதெல்லாம் 'தவம்!', வேள்வி என்கிறார்கள். அவர்களுக்கு அது 'தவம்' கூட இல்லை, அது 'தபஸ்' தான்! நான் இங்கே அறிமுகம் செய்திருக்கும் நூலுக்கும், இந்த முன்னுரையில் நான் குறிப்பிடும் மேற்கண்ட சில விஷயங்களுக்கும் ஓர் இணைப்பு இருக்கிறது. அதனால்தான் இந்த விஷயங்கள் பற்றிய சில மனப்பதிவுகளைக் கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். 'மக்களிசை மேதை' என்றோர் அடைமொழியை இக்பால் எம்.பி.சீனிவாசனுக்குத் தந்திருக்கிறார். ஏன்? மற்ற இசை மேதைகளும் மக்களுக்காகப் பாடிய, இசையமைத்தவர்கள்தாமே? ஆமாம்! ஆனால், மற்றவர்களுக்கும், எம்.பி. எஸ்ஸுக்கும் ஓர் அடிப்படையான வேறுபாடு இருக்கிறது. அந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ள நாம் இந்த நூலைக் கருத்தூன்றிப் படித்தாக வேண் டும். "ஒரு பாடலையோ, இசைத் துணுக்கையோ, அல்லது ஓர் இசையமைப்பாளரின் திறனையோ மதிப்பிட வேண்டுமெனில், ரசிக மனநிலையைக் கடந்து செல்ல வேண்டியது அவசியம். விருப்பு வெறுப்பற்ற மனநிலைக்குச் செல்லவேண்டிய அவசியம் உள்ளதுஎன்கிறார் இக்பால். அத்தகைய ஒரு மனநிலையிலிருந்துதான் இந்த நூலை தான் எழுதியிருப்பதாகவும் சொல்கிறார். அது உண்மைதான் என்று இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கையில் நாமும் உணர்கிறோம்.

எம்.பி.எஸ். எழுதிய மூன்று கட்டுரைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அவரின் மேதைமையை உணர அவை துணை செய்கின்றன. கர்நாடக இசையை, கலைஞர்களை மையப்பொருளாகக் கொண்ட சிலபடங்கள் பெரும் வெற்றி பெற்றிருப்பனவாக நமக்கு அறிமுகம் ஆகியுள்ளனஅவற்றுள் ஒன்று, மலையாளப்படமான 'ஸ்வாதித் திருநாள்'. 'ஸ்வாதித் திருநாள் ராமவர்மா' என்ற திருவாங்கூர் மன்னரின் கதை அது. இயக்குநர் லெனின் ராஜேந்திரன்.

ஸ்வாதித் திருநாள் ஓர் இசைக்கலைஞர். அவரே இயற்றிய பத்தொன்பது பாடல்கள் இதில் எம்.பி.எஸ் இசையமைப்பில் இடம் பெற்றிருந்தனவாம். அந்தப் படத்தில் பின்னணி பாடிய பாலமுரளி கிருஷ்ணாவுக்குக் கேரள அரசின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதும், எம்.பி.எஸ்ஸுக்குச் சிறப்புப் பரிசும் கிடைத்தன.

ஜான் ஆப்ரகாம் என்ற ஓர் அபூர்வமான திரைப் பட இயக்குநர் இயக்கிய 'அக்ரஹாரத்தில் கழுதை' படத்தில், கல்லூரிப் பேராசிரியர் நாராயணசாமியாக நடித்தவர் எம்.பி.எஸ்! வெங்கட் சாமிநாதனின் கதை இது.

 

இந்த மாதிரியான தகவல்கள் நூலில் ஏராளமாக உள்ளன. அவற்றை வெறும் செய்திகளாகத் தராமல், இடையிடையே தனது கருத்துகள், பிற எழுத்தாளர்களின் நூல்களிலிருந்து மேற்கோள்கள், பத்திரிகைகளில் இடம்பெற்ற விமர்சனங்கள் எனப் பல்வேறு தரவுகளின் துணையுடன் தந்திருக்கிறார் இக்பால்.

தமிழில் எம்.பி.எஸ் இசையமைத்த முதல் படமான 'பாதை தெரியுது பார்' படத்தின் பாடல்களில் ஒன்று ஜெயகாந்தன் எழுதியது. 'தென்னங் கீற்று ஊஞ்சலிலே...'  எனும் அந்தப்பாடலின் வரிகள், மிக மென்மையான இயற்கைச் சூழலைச் சொல்வன; அவரது மெட்டும் அவ்வாறே தாலாட்டும் வகையில் அமைந்தது.

அதற்கு நேரெதிர் முனையில், 'உண்மை நாள் வெளியாகும்...' எனும் பாடலோ, தொழிலாளி வர்க்கம், அதிகார வர்க்கத்துக்கு எதிராகக் கிளர்ந்து போர்க்குரல் எழுப்பியவாறு பெரும் படைதிரட்டி ஊர்வலமாகச் செல்லும் காட்சியைச் சித்திரிப்பது. ஐரோப்பிய பாணியில் அமைந்த ராணுவ அணி வகுப்புக்கான மிடுக்கான நாதம் எழுப்பும் இசைக் கருவிகளை இப்பாடலில் பயன்படுத்தியிருப்பார். 'மாசில் வீணையும்' எனும் தேவாரப் பாடல், தூய கர்நாடக இசையில் அமைந்தது.

தன்னவளை வர்ணிக்கும் ஓர் ஆணின் கவியழகு மிக்க வரிகளுக்கு எந்தக் குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற ஆழ்ந்த கவனத்துடன் அமைக்கப்பட்ட  மெட்டு என்பதை, 'சின்னச் சின்ன மூக்குத்தியாம் பாடலைக் கேட்கும் போது உணர முடியும்என ஆற்று நீரின் சலசலப்பு போல, மெல்லப் பெருகியோடும் உரைநடைப் பாடலாக இக்பாலின் சொல்லிசை, நிறை வடிவம் பெற்றுப் பெருகுகிறது.

சேர்ந்திசைக்குப் பொதுவாகத் திருவையாறில் தியாகையரின் ஆராதனை விழா நாளில் பல வித்வான்கள் சேர்ந்து இசைக்கும் பஞ்சரத்னக் கீர்த்தனைகள் பாடுவதையே உதாரணமாகக் கூறுவார்கள். ஆனால், அங்கே எம்.பி.எஸ்ஸின் சேர்ந்திசையில் இருக்கும் ஒருங்கிணைப்போ, ஒழுங்கோ, ஒரு நெறியாளரின் வழி காட்டலுக்கிணங்கப் பாடும் தன்மையோ இருப்பதில்லை. இந்த வேறுபாட்டைக் கருத்திற் கொண்டுதான் இசை விமரிசகர் சுப்புடு, "திருவையாற்றுக்கு ஓர் எம்.பி.சீனிவாசன் வேண்டும்" என எழுதியிருக்கிறார் போலும்!

"இவ்வளவு திறமைகள் படைத்திருந்தும், இவரைத் தமிழ்சினிமா நிராகரித்திருப்பதற்குக் காரணம், இவரது மார்க்சியவாதமும் யூனியனிசமும் ஆக இருக்கலாம். ஆனால், அவர் அது பற்றிக் கவலைப்படவில்லைஎன மிகத் துல்லியமாக எழுத்தாளர், சினிமாக் கதை வசனகர்த்தாவான சுஜாதா எழுதியிருக்கிறார்!

தமுஎக சங்கம் நடத்திய மக்கள் இசைப் பயிற்சி முகாமில் பயிற்றுநராகப் பங்கேற்ற பங்கேற்ற எம். பி. எஸ் சவெளிப்படுத்திய ஆதங்கம், பாரதியின் 'பாம்புப் பிடாரன்' வசன கவிதைக்குத் தான் இசையமைத்த அனுபவம் பற்றி அவரே விவரிக்கும் இடம் என இந்த நூல் முழுக்க ஒரு தேர்ந்த வாசகன் படித்துப் பரவசம் அடைவதற்கு எண்ணற்ற அழகிய சித்திரிப்புகள் உள்ளன. எழுதிய இக்பாலையும், வெளியிட்ட செந்தில்நாதனையும் பாராட்ட எனக்கு இடம் போதாது!