2016 பிப்ரவரி 10 அன்று மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஒரு ஆணை வெளியிட்டது. ஒரு தொழிலாளி தனது பிராவிடெண்ட் நிதி சேமிப்பில் இருந்து தன் பங்காக தான் செலுத்திய சேமிப்பை மட்டுமே தன் பணிக்காலத்தில் அவசர தேவைக்காக எடுத்துக்கொள்ள முடியும், நிர்வாகம் அதாவது முதலாளி அளித்த பங்கை 58 வயது முடிந்த பின்னரே மீட்டுக்கொள்ள முடியும். சரியாக சொன்னால் தொழிலாளி செலுத்தும் 12 %இல் 3.67% மட்டுமே வைப்புநிதிக்கு போகும், மீதி 8.33% ஓய்வூதிய நிதியில்தான் சேரும். எனவே தன் அவசர தேவைக்கு 3.67 மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு முன் மிக மோசடியான ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது, அதாவது தொழிலாளி தன் தேவைக்காக தன் சேமிப்பில் இருந்து எடுக்கும் பணத்துக்கு வருமான வரி விதிப்பது! மிக பலத்த கண்டனங்களுக்குப் பிறகு அந்த திட்டத்தை மத்திய தொழிலாளர் 'நல' அரசு கைவிட்டது.
அணி திரட்டப்படாத அல்லது தொழிற்சங்கங்களில் இணைய முடியாத அல்லது தொழிற்சங்கங்களால் திரட்டப்பட்ட முடியாத பல லட்சம் அல்லது சில கோடி தொழிலாளர்கள் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலில்தான் இருக்கின்றனர். அதிலும் 85%க்கு மேல் இதில் பெண் தொழிலாளர்கள். முக்கியமாக பட்டியல் சாதி மக்கள், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள், இஸ்லாமிய மக்கள் ஆகியோர் இதில் பெரும்பாலான தொழிலாளர்கள். இத்தொழிலில் நடக்கும் மிகப் பெரும் சுரண்டல், பெண்கள் மீதான வன்முறை ஆகியவற்றை தனியே எழுத வேண்டும். மிக எளிதில் ஒரு தொழிலாளியை வேலையில் இருந்து நீக்கி விடவும் ஆவணங்களில் அத்தொழிலாளியின் பெயர் இல்லாமல் செய்துவிட முடியும் என்பதாலும் இத்தொழிலில் தொழிற்சங்கம் தொடங்க முனைவதும் ஒரு தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இணைவதும் பெரும் சவால்தான். மத்திய அரசின் 58 வயது அறிவிப்பு இத்தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஆவேசத்தையும் கொந்தளிப்பையும் பற்ற வைத்தது. விளைவு, எந்த ஒரு கட்சியும் சங்கமும் அறைகூவல் விடுக்காமலேயே 2016 ஏப்ரல் 18 அன்று பெங்களூரில் ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்கள் ஒரு லட்சத்துக்கும் மேல் தன்னெழுச்சியாக வீதிகளில், நெடுஞ்சாலைகளில் திரண்டனர். ஆண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் அதே போன்ற தன்னெழுச்சியான போராட்டம் நடந்தது. இப்போராட்டங்களை ஒடுக்க போலீஸ், சமூக விரோதிகளை ஏவி விட்டதில் பி ஜெ பி, காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகியவை ஒற்றுமையாக இருந்தன. இணையத்தில் இப்போராட்டம் குறித்த செய்திகள் விரிவாக உள்ளன. போராட்டத்தின் இரண்டாவது நாள், தன் அரசாணையை சத்தமின்றி மத்திய அரசு திரும்ப பெற்றுக்கொண்டது.
அதே போன்று உழைக்கும் பெண்கள் மிகப்பெரிய அளவில் தன்னெழுச்சியாக திரண்ட மற்றொரு போராட்டம், 2015 செப்டம்பர் மாதம் கேரளாவில் மூணாறில் நடந்தது. தேவிகுளம் தாலுகாவில் டாடாவுக்கு சொந்தமான 136600 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்ணன் தேவன் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், முக்கியமாக பெண்கள், முன்னின்று நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம். இத்தொழிலாளர்கள் அநேகமாக அனைவரும் தமிழர்களே. இப்போராட்டம் நடந்த பின்னர் நான் மூணாறில் ஐந்து நாட்கள் தங்க நேரிட்டது. மூணாறு முழுவதுமே டாடாவுக்கு சொந்தம் என்பது பொய் அல்ல என்பதை நேரில் கண்டேன். மே 2011இல் செய்து கொண்ட ஊதிய ஒப்பந்தம் டிசம்பர் 31, 2014 உடன் முடிவுற்றது. அதன் பின்னர் புதிய ஊதிய ஒப்பந்தம் காண்பது தொடர்பாக எழுந்ததுதான் 2015 போராட்டம். படிப்படியாக பிரச்சனை தீவிரமாக, 2015 செப்டம்பர் 5 அன்று கண்ணன் தேவன் அலுவலகம் முன்பு சுமார் 50 பெண்கள்தான் திரண்டு நின்று வேலை நிறுத்தத்தை அறிவித்தார்கள். சற்று நேரத்தில் செய்தி பரவி மூணாறு மலையகம் எங்கிலும் உள்ள பெண் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள். கேரளாவின் கம்யூனிஸ்ட் எதிர்ப்பில் ஊறிய சில பத்திரிகைகளும், டிவி சானல்களும் மூன்று நாட்களுக்கு பிறகுதான் இது பற்றியே செய்திகளை வெளியிட்டன. எப்படி? தொழிற்சங்க இயக்கத்தை தொழிலாளர்கள் கைவிட்டு விட்டார்கள் என்று ஒரு புறம், போராட்டங்கள் கேரளாவின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை என்று மறு புறமும். உண்மையில், மூணாறு தோட்டத்தொழிலாளர் பிரச்சனையில் தொடக்கம் முதலே சி ஐ டி யூ தலையிட்டு வந்தது, எர்ணாகுளத்திலும் திருவனந்தபுரத்திலும் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கும் போராட்ட களத்திற்கும் சி ஐ டியூ தலைவர்கள் நேரில் சென்றார்கள். மார்க்சிஸ்ட் தலைவர் வி எஸ் அச்சுதானந்தன் போராட்டம் முடியும்வரை தொழிலாளர்களுடன் இருந்தார். கண்ணன் தேவன் விற்பனைக்கூடத்துக்கு சென்று அங்கிருந்த தொழிலாளிகளிடம் நான் பேசினேன், இப்போராட்டம் மதிப்புக்குரிய ஊதிய உயர்வை அடையக் காரணமாக இருந்தது என்ற பெருமிதம் அவர்கள் மனதில் உள்ளதை நான் புரிந்துகொண்டேன்.
உண்மை என்ன? பவுதீக விதி என்ன? நீண்டகால காரணங்கள் உள்நெருப்பாக இல்லாமல் எந்த ஒரு போராட்டமும் குறிப்பாக வேலைநிறுத்தம் போன்ற பெரும் போராட்டங்கள் திடீரென வெடிப்பது இல்லை. முதலாளிகள் +அரசாங்கம் என்ற கூட்டணி, திட்டமிட்டு தொழிலாளிகளை சுரண்டுவது, நியாயமான பணி சூழலை மறுப்பது, தொழிலாளர் நலசட்டங்களை அலட்சியம் செய்வது அல்லது தொழிலாளர் நலன்களில் தில்லுமுல்லு செய்வது என்பது , உண்மையில் தொழிலாளர்களை சோர்வடைய செய்யும் தந்திரம் என்பதுடன், அவர்களை தொழிற்சங்கத்தின் பக்கம் திரும்பாவிடாமல் செய்யும் கொடூர உத்தியும் ஆகும். சமீப வருடங்களில் இது போன்ற அணிதிரட்டப்படாத லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீதிகளில் திரண்டு போராடிய வரலாறு இல்லை. பெருமுதலாளிகளின் ஊடகங்கள் இந்த இரண்டு போராட்டங்களையும் இருட்டடிப்பு செய்தன.
... .... .....
மோடி அரசு, இந்த செப்டம்பர் மாதம், 44 தொழிலாளர் நல சட்டங்களை நாசமாக்கி அவற்றை 4 வழிகாட்டு நெறிகள் என்று சுருக்கி அவற்றின் உயிரை கொன்றது. 150 வருடங்களுக்கு முன் நம் முன்னோர்கள் காலம் தொட்டு இன்றுவரை தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் போராடியும் உயிரத்தியாகம் செய்தும் வென்றெடுத்த பல சட்டங்களை, கொரோனா காலத்தை சாக்காக வைத்து மத்திய அரசு நீக்குகிறது, அழிக்கின்றது. International Labour Organizationஇல் ஒப்புக்கொண்டு கையெழுத்து இட்டுள்ள பல சட்டங்களை குப்பையில் போடுகின்றது, உதாரணமாக 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரம் ஆக்குகின்றது. ஆனால் மார்ச் மாதம் முதல், ஆகப்பெரிய அணிதிரட்டப்பட்ட சங்கங்களை கொண்ட மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கங்களும் சம்மேளனங்களும் கூட போராட்ட அறிவிப்புகள் அறிவிப்பதுடன் அல்லது வாயிற்கூட்டங்கள் போன்ற வடிவங்களுடன் நின்றுவிடுவதை நாம் பார்க்க முடிகின்றது. மத்திய அரசின் தொழிலாளர் வர்க்க விரோத நடவடிக்கைகளை அசைத்து வேருடன் பிடுங்கி எறிவதற்கான தீர்மானகாரமான போராட்டங்களை காணமுடியவில்லை. விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்கும் மூன்று சட்டங்களுக்கு எதிராக தன்னெழுச்சியாக திரண்டு, டெல்லி முழுவதையும் நிரப்பி மத்திய அரசை அசைத்துப்பார்க்கும் விவசாயிகள் அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்கள் அல்லர். பெங்களூர் மூணாறு தொழிலாளர்களும் அப்படியே. வீதிகளில் இறங்காமல், மக்கள் ஆதரவுடன் தொழிலாளிகளை திரட்டிப் போராடாமல் வெறும் ஆன்லைன் பேச்சுவார்த்தைகள் மூலம் கோரிக்கைகளை வென்றுவிடலாம் என்பது சாத்தியமா? நம் ஆயுதங்களை எதிரியே தீர்மானிக்கின்றான்.
....... ... ....
மூணாறு, பெங்களூர் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து புதுவிசையில் (2016 டிசம்பர்) நான் எழுதிய 'இந்தியத் தொழிற்சங்க - இடதுசாரி இயக்கங்களின் முன்னுள்ள சவால்' என்னும் கட்டுரை தனியே உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக