தேசிய குற்றப்பதிவு அமைப்பு (National Crime Records Bureau) புள்ளிவிவரப்படி 2011ஆம் ஆண்டில் மட்டும் 14027 விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்துள்ளார்கள். 1995ஆம் ஆண்டு தொடங்கி 2011 வரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 270940. இதில் உச்சத்தில் நிறபது மஹாராஷ்ட்ரா மாநிலம். இக்காலகட்ட்த்தில் இங்கு மட்டும் உயிரை மாய்த்துக்கொண்டோர் 53818. 2011இல் மஹாராஷ்ட்ராவில் தற்கொலை செய்துகொண்டவர்கள் 3337. அதிகபட்சமாக இம்மாநிலத்தில் 2006இல் 4453 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். உண்மையான எண்ணிக்கை இதைவிடவும் அதிகமாகவே இருக்கும், ஏனெனில் அரசும் தனியார் பெருமுதலாளிகளின் விதைக்கம்பெனிகளும் ஒன்றுசேர்ந்து பெரும் செலவு செய்து தற்கொலை எண்ணிக்கையை ஊடகங்களில் குறைத்துக்காட்ட பெரும் பிரயத்தனம் செய்வது தொடர்கின்றது.
ஒரு புறம் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வர, தற்கொலை எண்ணிக்கையோ மறுபுறம் அதிகரித்துக்கொண்டே வருவது விசித்திரமாக உள்ளது. குறிப்பாக மஹாராஷ்ட்ராவில் கிராமங்கள் அழிக்கப்பட்டு நகரமயமாதல் அசுரத்தனமான வேகத்தில் நடக்கும்போதும் தற்கொலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு, விவசாய சமூகத்தின் மீது அரசும் இந்த சமூகமும் தொடர்ந்து கொடுத்துவரும் அழுத்தமும் மன உளைச்சலுமே காரணமாகும்.
விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையில் (1995ஆம் ஆண்டு தொடங்கி 2011 வரை) உச்சத்தில் இருக்கும் ஐந்து மாநிலங்கள் (என்ன ஒரு பெருமை!):
மஹாராஷ்ட்ரா – 53818
ஆந்திரா – 33326
கர்நாடகா – 37153
மத்தியப்பிரதேசம்+சத்தீஷ்கர் – 42388, மொத்தம் 166685.
1995-2011 காலகட்டத்தில் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் 270940 எனில் ஆனால் மேற்கண்ட 5 மாநிலங்களில் மட்டும் இதில் 61.52% தற்கொலைகள் நடந்துள்ளன. உண்மையில் இந்தப்புள்ளிவிவரங்கள் எல்லாம் குறைத்துக்காட்டப்பட்டவை; மேலும் பல விவசாயிகளின் தற்கொலைகள் வேறு காரணங்களைகாட்டி காவல்துறையாலும் அரசாலும் இந்தப்பட்டியலில் மறைக்கப்பட்டிருக்கும் (numbers massage) என்பது தெளிவு. விவசாயிகள் தற்கொலைகளில் முதலிடம் பெறும் மஹாராஷ்ட்ராவின் விதர்ப்பாவிற்கு பிரதமர் மன்மோஹன் சிங் கருணை கூர்ந்து விஜயம் செய்த பின்னர் அரசு அதிகாரிகள் ராஜாவை விஞ்சிய மந்திரிகளாய் தற்கொலைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து குறைத்தே காட்டி வருகின்றார்கள். மத்தியில் விவசாயத்துறை மந்திரியாய் இருக்கின்ற, அதே மஹாராஷ்ட்ராவை சேர்ந்தவரான சரத்பவாரோ அரசின் புள்ளி விவரங்களை (தில்லுமுல்லானவை என்றாலும்) நாடாளுமன்றத்தில் சொல்வதை தவிர்த்தே வருகின்றார். அவருக்கு இதை விட முக்கியமான வேலைகள் இருக்கின்றன – கிரிக்கெட் வாரியத்துக்கு யார் தலைவராக இருப்பது, கிரிக்கெட் வாரியத்துக்கு தான் போட்டி போடலாமா அல்லது எதிர்த்துப் போட்டியிடுபவரை எப்படி கவிழ்த்து இந்தியத்தாயை வாழ வைப்பது போன்ற தலைபோகிற விசயங்கள்.

(ஹிந்து நாளிதழில் வெளிவந்த பி.சாய்நாத் அவர்களின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)
தொடரும்....2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக