வெள்ளி, டிசம்பர் 25, 2020

மக்களை நேசித்த மகா சர்வாதிகாரி

ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் அணிவகுத்து அமைதியாக காத்திருக்கின்றார்கள். டோமேனியா நாட்டின் சர்வாதிகாரியும் அகில உலகையும் அண்ட சராசரங்களையும் நடுநடுங்கச் செய்யும் கொடுங்கோலனும் ஆன அடினாய்ட் ஹின்கெல் இப்போது நாட்டு மக்களுக்கு வானொலியில் நேரடியாக உரையாற்றப் போகின்றான். ஆரிய இனமே ஆளப்பிறந்த இனம், மற்ற அனைவரும் ஆரியர்களுக்கு அடிமைகளாக வாழப்பிறந்தவர்கள்.  

இந்த உலகத்தின் துன்ப துயரங்கள் அனைத்துக்கும் காரணம் யூத இனமே என்ற கொள்கை கொண்டவன் சர்வாதிகாரி ஹின்கெல். இதோ, டோமேனியா நாட்டு மக்களுக்கான தன் உரையை அவன் தொடங்கி விட்டான்:

"மன்னிக்க வேண்டும்! நான் ஒரு சக்கரவர்த்தியாக இருக்க விரும்பவில்லை. அது என் வேலையும் இல்லை. .. நாட்டை ஆள வேண்டும் என்பதோ யாரையாவது ஜெயிக்க வேண்டும் என்பதோ எனக்கு அவசியமும் இல்லை. நான் அனைவருக்கும் உதவி செய்யவே விரும்புகின்றேன், இயன்றவரை. ஆம், யூதர்கள், எந்த மதத்தையும் சாராதவர்கள், கறுப்பர், வெள்ளையர் என எல்லோருக்குமே...." என்ன இது? சர்வாதிகாரி ஹின்கெல்தானா இது? நாட்டு மக்களும் ராணுவ வீரர்களும் நம்ப முடியாது அதிர்ச்சியில் உறைந்து போகின்றார்கள்!

1940ஆம் ஆண்டு வெளிவந்த The Great Dictator படத்தின் இறுதிக்காட்சிதான் இது. படத்தை எழுதி இயக்கியவர் சார்லி சாப்ளின். பேசும் படங்கள் 1927க்குப் பிறகு வெளிவந்தன என்றாலும் அவர் பேசாப்படங்களையே விரும்பினார், இயக்கினார். அந்த வகையில் இப்படமே அவரது முதல் முழு நீள பேசும் படம் ஆகும்.

ஜெர்மனியின் நாஜி ஹிட்லரையும் இத்தாலியின் பாசிச முசோலினியையும் நையாண்டித்தடி கொண்டு மிகக்கடுமையாக தாக்கிய பபாம் இது. 1937இல் பபாம் தொடங்கப்பட்டது, 1940இல் வெளியானது. 1937 என்பது ஹிட்லரின் கோர முகம் முழுமையாக வெளிப்படவில்லை. 1939இல் இரண்டாம் உலகப்போரை ஹிட்லர் தொடங்கி வைத்தான். எனவே இப்படம் உண்மையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் திரைப்படம்தான்.

படத்தில் சாப்ளின் வைத்துள்ள பெயர்கள் சிரிப்பை வர வைப்பவைதான், ஆனால் ஒவ்வொரு பெயருக்கும் பின்னால் கனமான அர்த்தம் இருந்தது. பாருங்கள்:

டோமேனியா-நாஜி ஜெர்மனி (டோமேய்ன் விஷம் என்றால் விஷமாக திரிந்துவிட்ட உணவு என்று பொருள்)

பாக்டீரியா-பாசிஸ்ட் இத்தாலி

ஹின்கெல்- ஹிட்லர்

பென்சினோ நெப்பாலோனி- முசோலினி

கார்பேஜ்- கோயபெல்ஸ் (garbage என்றால் குப்பை)

ஹிட்லரின் ஸ்வஸ்திக் சின்னத்துக்குப் பதில் இரண்டு பெருக்கல் அடையாளங்கள்.

டோமேனியாவின் சர்வாதிகாரி ஹின்கெல், அதாவது ஹிட்லர். அவனைப்போலவே உருவம் கொண்ட, யூத இனத்தை சேர்ந்த ஒரு முடி திருத்தும் தொழிலாளி டோமேனியா ராணுவத்தில் வேலை செயகின்றான். வழக்கம் போலவே இந்தப் பாத்திரத்துக்கும் சாப்ளின் பெயர் வைக்கவில்லை. ஆனால் முதல் முதலாக தன் பாத்திரம் ஒன்றுக்கு அவர் பெயர் வைத்ததும் இந்தப்படத்தில்தான். ஹின்கெல். இரண்டு பாத்திரங்களிலும் அவரே நடித்தார்.

ஹின்கெல் விமான விபத்தில் சிக்கி கீழே விழுந்துவிட, மீட்க வந்தவர்கள் ஹின்கெல் என்று கருதி முடி திருத்தும் தொழிலாளியை அரண்மனைக்கு தூக்கிக்கொண்டு வந்து விடுகின்றனர். அதன் பின் நடப்பதே கதை. சர்வ உலகையும் தன் காலின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்ற அகங்காரத்தில் பூகோள உருண்டை (காற்று அடைத்த பந்து) ஒன்றை மேலும் கீழும் அந்தரத்தில் மிதக்க வைத்து அவர் தட்டித்தட்டி விளையாடும் காட்சி மிகப் புகழ்பெற்ற காட்சி. ஒரு ஒழுங்கான நடனம் போல் அமைந்த காட்சி அது. கர்வமும் ஆணவமும் தொனிக்க ' உலகத்தை' பந்தாக்கி ஆடுகின்றான் ஹின்கெல். ஆட்டம் தொடர்ந்து கொண்டு இருக்க, ஒரு வினாடியில் டம் என்று பெரும் சத்தத்துடன் 'உலகம்' வெடிக்கின்றது. ஆணவமும் சர்வாதிகாரமும் நிலைத்ததாக வரலாறு இல்லை, இந்த உலகம் சர்வாதிகாரிகளுக்கு கட்டுப்பட்டதில்லை, சர்வாதிகாரிகளின் வரலாறு என்றாவது ஒருநாள் வெடித்துச் சிதறும் என்று பார்வையாளர்களுக்கு சொல்கின்றார் சாப்ளின். எளிய பந்தாட்ட காட்சிதான், எத்தனை பெரிய அரசியல் அதில்!

தான் ஆக்கிரமிப்பு செய்திருந்த நாடுகளில் இப்படத்தை திரையிட ஹிட்லர் தடை செய்து இருந்தான். ஆனால் போர்ச்சுகல் நாட்டின் வழியாக இந்தப் படத்தின் பிரதியை வரவழைத்து ஹிட்லர் இரண்டு முறை பார்த்ததாக சொல்லப்படுகிறது. பார்த்தபின் அவன் என்ன சொன்னான் என்பதும் தெரியவில்லை. "ஹிட்லரின் கருத்து என்னவென்று தெரிந்துகொள்ள எதை வேண்டுமானாலும் கொடுக்க சம்மதம்" என சாப்ளின் கூறியதாக சொல்கின்றனர். ஹிட்லர் ஆக்கிரமிப்பில் இருந்த பால்கன் பகுதியில், ஜெர்மன் ராணுவத்தினர்க்கான திரையரங்கில், ஹிட்லர் எதிர்ப்பாளர்கள் ஒரு இசை நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, கிரீஸ் நாட்டில் இருந்து கிடைத்த இப்படத்தை திரையிட்டதாகவும், பல ஜெர்மனி வீரர்கள் ரசித்துப் பார்த்ததாகவும், படத்தைப் புரிந்துகொண்ட சிலர் இடத்தை காலி செய்ததாகவும், சிலர் கோபம் கொண்டு துப்பாக்கியால் திரையில் சுட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஸ்பெயின் நாட்டு சர்வாதிகாரி பிரான்ஸிஸ்க்கோ பிராங்கோ 1975இல் இறக்கும் வரை, தன் நாட்டில் இப்படத்திற்கு தடை விதித்து இருந்தான். 

ஹிட்லர், முசோலினி ஆகியோரின் ஆக்கிரமிப்பு, சர்வாதிகார கொள்கை, யூத இனத்தின் மீது ஹிட்லர் கொண்டிருந்த அளவற்ற வெறுப்பு ஆகியவை சாப்ளினை வெகுவாக பாதித்தன. படப்பிடிப்பு நடந்த நாட்களில், ஹின்கெலின் பாத்திரம் படமாக்கப்பட்ட நாட்களில் மனநிலை கடினமானவராகவே காணபட்டாராம் சாப்ளின். ஐரோப்பாவில் ஹிட்லரின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போகும் செய்திகளால் அவர் மனம் வருந்தியுள்ளார். இறுதியாக, பிரான்ஸை ஆக்கிரமித்த செய்தி வந்தபோதுதான், அந்தப் புகழ்பெற்ற உரையை படத்தின் இறுதியில் வைப்பது என அவர் முடிவு செய்தார். இரண்டாம் உலகப்போர் 1939இல் தொடங்க, அடுத்த வருடமே வெளியான இப்படம் இந்த சர்வாதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்ததால் உலகின் கவனத்தை ஈர்த்ததில் வியப்பில்லை.

Look up, Hannah என்ற அடைமொழியால் அந்த இறுதிக்காட்சி உரை அழைக்கப்படுகிறது. "நாம் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளவே விரும்புகின்றோம். மனிதர்கள் அப்படிப்பட்டவர்கள்தான். சக மனிதனின் மகிழ்ச்சியில்தான் நாம் வாழ விரும்புகின்றோம், துயரில் அல்ல. ஒருவரை ஒருவர் வெறுக்கவோ தாழ்த்தவோ அல்ல. இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் வாழ இடம் உண்டு.... வஞ்சகம், மனித உள்ளங்களில் விஷத்தை கலந்துவிட்டது. வஞ்சகம், உலகத்தை வெறுப்பால் கட்டியுள்ளனது. நம்மை துயரிலும் ரத்தச்சேற்றிலும் தள்ளியுள்ளது. எந்திரங்கள் நிறையவே உற்பத்தி செயகின்றன, ஆனால் நாம்தான் எதுவும் அற்றவர்கள் ஆக உள்ளோம். எந்திரங்களை விடவும் மனிதாபிமானமே நமது தேவையாக உள்ளது. புத்திசாலித்தனத்தை விடவும் அன்பும் பண்பும் தேவையாக உள்ளது.

"என் உரையை கேட்டுக்கொண்டு இருக்கும் மக்களுக்கு சொல்வேன், நம்பிக்கை இழக்காதீர்கள். நம் மீது படர்ந்துள்ள இதை துயரமானது, மனிதகுல முன்னேற்றம் கண்டு பீதி அடைந்துள்ள ஒரு சிலரின் வஞ்சகம், வெறுப்புணர்வின் வெளிப்பாடே அன்றி வேறில்லை! அவர்களின் இந்த வெறுப்புணர்வு அழியும், சர்வாதிகாரிகள் செத்து மடிவார்கள்! மக்களிடம் இருந்து அவர்கள் பறித்துக்கொண்ட அதிகாரம் மீண்டும் மக்களிடமே மலரும்! சர்வாதிகாரிகள்தான் அழிவார்கள், சுதந்திரம் என்றும் அழிவதில்லை!

"ஜனநாயகத்தின் பெயரால் நாம் அதிகாரத்தைப் பயன்படுத்துவோம்! ஒன்று படுவோம்! புது உலகம் படைக்க போராடுவோம்! வேலைக்கு உத்தரவாதமும், வளமான எதிர்காலமும், பாதுகாப்பான முதுமையும் தரக்கூடிய நாகரீக உலகத்தைப் படைப்போம்! சதிகாரர்களும் இதையே சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார்கள், அத்தனையும் பொய்! அவர்கள் அப்படித்தான்! அவர்கள் தங்களுக்கான சுதந்திரத்தை தேடிக்கொண்டார்கள். மக்களை அடிமைப்படுத்தினார்கள். நாம் உலக விடுதலைக்குப் போராடுவோம்! தேச வேற்றுமைகளை உடைப்போம்! பொறாமை, வஞ்சகம், சகிப்பின்மை ஆகியவற்றை ஒழிப்போம்! விஞ்ஞானமும் வளர்ச்சியும் மனித சமூகத்தின் வளர்ச்சிக்காகவே என்ற உலகத்துக்காக நாம் போராடுவோம்! ஹன்னா, நான் பேசுவது கேட்கின்றதா?...." சாப்ளினின் அன்னை பெயர் ஹன்னா என்பது குறிப்பிடத்தக்கது.

... ..... ....

இப்படத்தை 1990க்கு முன் ப்ளூ டைமண்ட் தொடர் காட்சி அரங்கில் இரண்டு காட்சிகள் பார்க்கும் பெரும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது அந்த திரையரங்கு இல்லை. இடிக்கப்பட்டு விட்டது. தவிர, இதை நான் எழுதியது 2005ஆம் ஆண்டு. 9 வருடங்களுக்குப் பின்னர் 2014ஆம் ஆண்டில் இந்திய நாஜிகள், பாசிஸ்டுக்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்று அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் ஹிட்லரின் கதி என்னவாயிற்று, முசோலினியின் கதி என்னவாயிற்று என்பதை வரலாறு நமக்கு தெளிவாக சொல்லி உள்ளது. சாப்ளினின் அந்த உரை 80 வருடங்கள் பழமையானது, ஆனால் சர்வாதிகாரிகளின் கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராகப் போராடும் அனைத்து உலக மக்களுக்கும் என்றும் புதிதாக, சுடர் விடும் ஒளியாக இருப்பது.

சார்லி சாப்ளின் நினைவு நாள் இன்று (16.4.1889-25.12.1977). 

மீள்பதிவு, வண்ணக்கதிர் 27.2.2005இல் வெளியானது, சில மாற்றங்களுடன் இங்கே.

கருத்துகள் இல்லை: