வெள்ளி, டிசம்பர் 25, 2020

நானும் தோழர் அ குமரேசனும் தீக்கதிரும்


1991ஆம் ஆண்டு the hinduவில் வெளிவந்த ஒரு சிறு செய்தியை மொழிபெயர்த்து தீக்கதிருக்கு அனுப்பி வெளியிட வேண்டியிருந்தேன். அப்போது மதுரையில் இருந்து வந்தது. இரண்டு நாட்கள் கழித்து தபாலில் தீக்கதிர் வீட்டுக்கு வந்தது. என் மொழியாக்கம் அச்சாகி இருந்தது! முதல் முதலில் என் எழுத்து அச்சில் வருகின்றது. அதுவும் தீக்கதிரில்! நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை! 

என் சிறு வயதில் தீக்கதிர் வாரப்பத்திரிக்கையாக வரும்போதே நான் வாசித்துள்ளேன், என் அண்ணன் வாங்கி வருவார். எட்டாம் வகுப்பு படித்த போது இருக்கலாம், என் அண்ணன் ஒரு நாள் 'சி ஐ டி யு கைத்தறி நெசவாளர் சங்கத்தில் ஒரு வகுப்பு இருக்குதுடா, போ' என்றார். என் வயது ஒத்த பையன்கள் சிலர் அங்கு இருந்தார்கள். தரையில் பாய் விரித்து உட்கார்ந்து இருந்தோம். எங்களுக்கு முன் ஒருவர் தரையில் அமர்ந்து உலகம், பிரபஞ்சம், உயிர்களின் தோற்றம், குரங்கு, மனிதன்... என்று பேசினார். புதுசாக இருந்தது, பாடங்களில் அதுவரை படிக்காதது. முடிந்தபோது சிலந்தியும் ஈயும் என்ற புத்தகத்தை காசு வாங்காமல் படிக்க கொடுத்தார்கள். அதுவும் புதுசாக இருந்தது. எட்டாவது படிக்கும்போது தினமணி கதிரில் ட்ரெயின் டு பாகிஸ்தான் தமிழ் மொழிபெயர்ப்பை வாசித்தேன், ரா.கி.ரங்கராஜன் என்று நினைவு. மதுரை செல்லூர் கைத்தறி பண்ணாடிமார்கள், அதாவது முதலாளிகள், நடத்திய கலைவாணர் என் எஸ் கே படிப்பகத்தில் பழியாக கிடந்து எல்லா நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என அனைத்தையும் வாசித்தேன். சிறுகதைகள், நாவல் என அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தபோது அதே சி ஐ டி யு சங்கத்தில் நானும் உறுப்பினராக சேர்ந்த நாளும் அவசியமும் வந்தது! 10 பைசா, 15 பைசா, 25 பைசா, 1 ரூபாய் என சோவியத் நூல்களின் அறிமுகமும் சேர்ந்தே வந்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இயல்பாக இணைந்தேன்.

வேலை காரணமாக சென்னை வந்தேன். வாசிப்பின் தளம் விரிந்த பின் எழுத முனைந்தேன். அலுவலகத்தில் முல்லை என்றொரு கையெழுத்து ஏட்டை நடத்தினோம், அதில் எழுதினேன். அதன் தொடர்ச்சிதான் 1991இல் தீக்கதிரில் வெளியான சிறு செய்தி. கார்பன் பேப்பர் வைத்து நகல் எடுத்து எழுதினேன், இப்போதும் நகல் என்னிடம் உள்ளது. தொடர்ந்து கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள் எழுதினேன், தீக்கதிர் முழுப்பக்கத்தில் வெளியிட்டது. மூன்றாம் நாள் எனக்கான பிரதி தபாலில் தவறாமல் வீட்டுக்கு வரும். 1991 டிசம்பர் மாதம் மதுரை தீக்கதிர் அலுவலகம் சென்று தோழர் கே.முத்தையா அவர்களை சந்திக்க விரும்பினேன், சென்றேன், தோழர்களிடம் அறிமுகம் செய்துகொண்ட பின் என்னை கே.எம்.மிடம் அழைத்து சென்றார்கள். மனசில் படபடப்பு. மூத்த தோழர், எப்படி பேசுவாரோ என்ற தயக்கம் இருந்தது. நான் நேசிக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்களை பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டு இருப்பேன், அவர்களிடம் பேசுவதற்கோ தொடர்பு வைத்துக்கொள்ளவோ முயற்சி செய்ய மாட்டேன், எதனாலோ, இன்று வரை அப்படியே. தோழர் கே.எம். வாய் நிறைய சிரிப்புடன் உற்சாகமாக என் கையைப் பிடித்துக்கொண்டு 'நல்லா எழுதுறீங்க, தொடர்ந்து எழுதுங்க' என்று வாழ்த்தினார். என் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை!

1993 அல்லது 94, தீக்கதிர் சென்னைப்பதிப்பு தொடங்கியது. தோழர்கள் சு பொ அகத்தியலிங்கம், அ குமரேசன் ஆகியோர் சென்னைக்கு வந்தார்கள். ஆவடியில் த மு எ ச கிளையை நானும் தோழர் ஜெயராமனும் முனைந்து தொடங்கினோம். முதல் கிளை மாநாடு முடிந்தது, மாவட்ட மாநாட்டில் வட சென்னை, தென் சென்னை என இரண்டாக பிரிக்கப்பட்டது. ஒன்றாக இருந்த மாவட்டத்தில் தலைவர், செயலாளர் பொறுப்புகளில் இ.மு.வெற்றிவளவனும் பிரளயனும் இருந்தார்கள். வைகறைப்பூக்கள் என்ற படத்தை வெற்றிவளவன் இயக்கினார், ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜெயா டிவியில் (?) ஒளிபரப்பினார்கள். வட சென்னையில் நா.வே.அருள், பா ராமச்சந்திரன், கு பா தேவராஜன், அபுதாகீர், காரு ராஜேந்திரன், ச உமாகாந்தன், மணிமொழி, தயாளன், பாலு சத்யா போன்ற மதிப்புமிக்க எழுத்தாளர் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற பெரும் வாய்ப்பு கிடைத்தது. அறிமுகம் ஆன ஒரு வருடத்திலேயே லட்சுமணன் என்ற அருமையான இளம் வயது படைப்பாளி அகால மரணம் அடைந்தது மறக்க முடியாது.

தீக்கதிர் சென்னைக்கு வந்த பின் த மு எ ச இயக்க வேலைகளுடன் தோழர் அ கு அறிமுகம் ஆனார். அப்போது ஹாஷ்மியும் அருணும் சிறு பிள்ளைகள். வண்ணக்கதிரிலும் இலக்கியச்சோலையிலும் எழுத தொடங்கினேன். வண்ணக்கதிர் பொறுப்பு அ கு. விடமும் இலக்கியச்சோலை பொறுப்பு தோழர் மயிலை பாலுவிடமும் இருந்தன. என் எழுத்து வளம் பெற்று உரம் பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் அ கு என்பது மிகை அல்ல. எப்படி? ஒரு பதிவு வெளியான உடன் நன்றி தெரிவிப்பேன், அவர் 'உங்கள் நன்றியை இன்னொரு கட்டுரையாக கொடுங்கள்' என்பார், எழுதுவேன், வெளியிடுவார். புதன்கிழமை அடுத்த வண்ணக்கதிருக்கான வேலைகளை முடிப்பார், அதன் பொருட்டு பல நேரங்களில் தீக்கதிர் அலுவலகத்திலேயே இரவு தங்கி விடுவார் என்பதை நான் அறிவேன். வீட்டில் இருந்து இட்டிலியும் எள்ளு எண்ணெய்ப்பொடியும் கொண்டு வந்து விடுவார், இரவு உணவுக்கு. அதை நானும் பகிர்ந்து உண்ட கதை பின்னால். அதன் பின் பெண்ணே நீ, சமரசம் ஆகியவற்றில் எழுதினேன், மயிலை பாலு அவர்களின் அறிமுகத்தால் மாப்பிளா கிளர்ச்சி, மாவோ தொகுதிகள் 2, ஸ்டாலின் தொகுதி 1 ஆகியவற்றை அலைகளுக்காக மொழிபெயர்த்தேன். மாப்பிளா மொழியாக்கம் வந்த பின் மக்கள் டிவியில் கஜேந்திரன் என்னை நேர்காணல் செய்தார். எல்லாவற்றுக்கும் வேராக இருந்தது தீக்கதிரும் வண்ணக்கதிரும்.

வரிக்கு வரி, சொல்லுக்கு சொல் திருத்துவது, பொருளையே மாற்றுவது என்பதெல்லாம் அவர் அறியாதது. ஒரு கட்சி நடத்தும் பத்திரிகை, வரிசையாக ஆசிரியர் குழு உட்கார்ந்து லென்ஸ் வைத்து வாசித்து ஆய்வு செய்த பின்னரே வெளியிடுவார்கள் என்று பலர் நினைக்கக் கூடும். உண்மை அல்ல. இதுவரையிலும் நான் எழுதிய கட்டுரைகள், மொழியாக்கங்கள் ஒரு சிறு மாற்றமும் இன்றியே தீக்கதிரிலும் வண்ணக்கதிரிலும் வெளி வந்துள்ளன! எத்தனை என்று கணக்கில்லை. சில என் பெயரிலும் பல புனை பெயரிலும். 

தொடர்ந்து ஆவடியில் த மு எ சவின் பல நிகழ்ச்சிகளில் அ கு கலந்துகொண்டு எங்களை பெருமைப்படுத்தினார். பெயருக்கு வந்து போனதில்லை, நிகழ்வுக்கான முழு தயாரிப்புடனும் குறிப்புகளுடனும் அவர் வருவார், உரையாற்றுவார். செவ்வாய்ப்பேட்டை திரூரில்தான் அவர் வீடு. சு பொ.வின் வீடும் அங்குதான். இது எங்களுக்கும் அவருக்கும் பெரிய வசதியாக இருந்தது, ஆவடியில் இருந்து அரை மணி நேர ரயில் பயணமே. அவர் வீட்டுக்கு இரண்டு முறை சென்றுள்ளேன். அவருடைய தந்தை, அன்புக்குரிய மனைவி ஆகியோரின் அன்புக்கு பாத்திரன் ஆனேன்.

சு பொ அவர்களின் விடுதலைத்தழும்புகள் நூலுக்கு தமிழக அரசின் விருது அளிக்கப்பட்டது, ஆவடி த மு எ ச பாராட்டு விழா நடத்தினோம் என்பதையும் சொல்ல வேண்டும். சு பொ.வும் அ கு. வும் பிரிக்கப்பட முடியாதவர்கள், தீக்கதிரும் வண்ணக்கதிரும் போல. அருணாசலம் சங்கர ஆறுமுக குமரேசன் என்ற பெயரின் ஆங்கில முதல் எழுத்துக்களின் சுருக்கமே அசாக் என்ற பெயரின் ரகசியம் என்பதை சு பொ ரகசியமாக கொற்றலை நிகழ்வில் சொல்லியிருக்கிறார்.

அவர் ஒரு முழுமையான இயக்கவாதி. அவருடன் விவாதிக்கலாம், கருத்து உடன் படலாம், மாறு படலாம். எல்லாவற்றையும் நட்பின் அடிப்படையில் பண்புடன் அணுகுவார். தீக்கதிர் முதல் பக்கத்தில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அரசு விளம்பரம் வெளியானது. பல தோழர்கள் அது சரி அல்ல என விமர்சனம் செய்திருக்கிறார்கள். நான் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு கடுமையான சொற்களால் விமர்சித்தேன். பின்னர், அப்படி பேசியிருக்க கூடாதோ என்று வருந்தி, அவர் என்ன மாதிரி எடுத்துக்கொண்டாரோ என்று வருத்தமுற்றேன். ஆனால் பின்னொரு நாள் அவரிடம் பேசியபோது அப்படி ஒரு உரையாடல் நடந்ததாகவே அவர் காட்டிக்கொள்ளவில்லை.

தீக்கதிர் அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட வேலையின் பொருட்டு 15 நாட்கள் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது சிந்தாதிரிப்பேட்டை வெங்கடேச கிராமணியார் தெருவில் இயங்கி வந்தது. அ கு, சு பொ, மயிலை பாலு ஆகியோருடனும்  பிற தோழர்களுடனும் நெருங்கி இருக்க வேண்டிய அற்புதமான காலமாக அமைந்தது. பத்திரிகையின் உருவாக்கத்தை நேரில் கண்டு உணர முடிந்தது. இரவு வீடு திரும்ப ஒன்றரை மணி நேர ரயில் பயணம் அவசியமானதாக இருந்தது, அந்த ஒன்றரை மணி நேரமும் ரயிலில் அ கு. வுடன் பயணித்து பலப்பல விடயங்களை பகிர்ந்து கொள்ளவும் தெரிந்துகொள்ளவும் முடிந்தது. கட்சியின் முழு நேர ஊழியர் ஒருவரின் பொருளாதார நிலையை நெருங்கிப் பார்ப்பவர்கள் அறிவார்கள். அது பற்றிய சலிப்போ வருத்தமோ ஒரு நாளும் நான் அவரிடம் கண்டதில்லை.

அவருடைய அறிமுகம்தான் வின் டிவியில் 16 வாரங்கள் நானும் 'கவிதை' வாசிக்க காரணமாக அமைந்தது. உலக நடப்பு என்ன? பிறருக்கு கிடைக்கும் டிவி வாய்ப்பு கண்டு பொறாமைப் படுவது அல்லது அதை எப்படியாவது கெடுப்பது. அ கு என்ன செய்தார்? ஆறு பேர் கொண்ட கவிஞர் குழுவை உருவாக்கினார். புத்தாண்டு, பொங்கல், காலம், நகரம், கயிறு, கொடி என பல தலைப்புகளில் நாங்கள் கவிதை வாசித்தோம். நா வே அருள், கும்மிடிப்பூண்டி சுரேஷ், சி எம் குமார், பாலு சத்யா, மு முருகேஷ், ஜீவி, கவிஞர் சினேகன் ஆகியோருடன் என் முகமும் உலகெங்கும் அறிமுகம் ஆனது. காரணம் அ கு. இதனால் கவிதை உலகுக்கு கிடைத்த பெரும் பயன் என்னவெனில், இவர்கள் எழுதுவதுதான் கவிதை என்று நான் உணர்ந்த பின், நான் கவிதை எழுதுவதை நிறுத்தினேன். ஆனாலும் அவ்வப்போது எழுதுவதை அங்கீகரித்து வண்ணக்கதிரில் வெளியிடும் பெருந்தன்மை அ கு.வுக்கே உரியது! டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து முகநூலில் நான் எழுதியதை கவிதை என அங்கீகரித்து  கலப்பைப்புரட்சிக்காக வெளியிட்ட பெருந்தன்மை நா வே அருளுக்கும் கி ரமேசுக்கும் நாகராஜனுக்கும் உள்ளது!

வட சென்னை த மு எ க ச, கொற்றலை நிகழ்வில் அ கு. வின் படைப்புகள் குறித்த ஆய்வை கடந்த ஞாயிறு நடத்தியுள்ளனர். யூடியூப்பில் பதிவு உள்ளது. ஆய்வுரை நிகழ்த்திய சு பொ அகத்தியலிங்கம், அ கு 35 புத்தகங்களை எழுதியுள்ளார் என்று தெரிவித்தபோது உண்மையில் வியப்புற்றேன். அவற்றில் 18 மொழிபெயர்ப்பு நூல்கள். கனமான விடயங்களை பேசுவதும் விவாதிப்பதும் எல்லோருக்கும் கை வரக்கூடும், ஆனால் சிறு குழந்தைகளுக்கு ஆன பிற மொழிக்கதைகளை 4 நூல்களாக எழுதி உள்ளார் என்பதும், வண்ணக்கதிரில் அவரே எழுதிய சிறார் கதைகளை ஒரு நூலாக வெளியிட்டுள்ளார் என்பதும் சொல்லியாக வேண்டிய ஒன்று. மதம் மக்கள் புரட்சி என்ற ஃபிடல் காஸ்ட்ரோவின் நேர்காணல் தொகுப்பு முக்கியமான ஒன்று. 2009 அலைகள் வெளியீடு.

பார்ப்பது, கேட்பது, உணர்வது, கொள்வது, கொடுப்பது, எழுதுவது என வாழ்வின் அனைத்து இயக்கங்களையும் ஒரு இயக்கவாதியின் அணுகுமுறையோடு அணுகுவதும், அவற்றையே ஒரு பத்திரிக்கையாளனின் கண்கொண்டு பார்த்து தன் இயக்கத்துக்கான பிரச்சார ஏட்டில் தகுந்தவாறு ரசனையுடன் எழுதி பதிவாக்குவதும், தோழர் அ குமரேசன், உங்களால் மட்டுமே முடியும்! சு பொ சொன்னதுபோல, தீக்கதிரும் வண்ணக்கதிருமே உங்கள் மூச்சாக அப்போதும் ஓய்வு பெற்ற பின் இப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள்! என் மகள் எப்படி இருக்காங்க என்று எப்போதும் என் மனைவியை நலம் விசாரிப்பீர்கள்! நீங்கள் என் எழுத்துக்கு வழிகாட்டியாய் இருக்கின்றீர்கள்! நீங்கள் எழுதுங்கள், தொடர்ந்து எழுதுங்கள்!

கருத்துகள் இல்லை: