சனி, டிசம்பர் 05, 2020

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

தேசப்பிரிவினை அவர்கள் இதயங்களைக் கிழித்து

எல்லையில் எறிந்தபோது

அது மேற்கில் விழுந்ததா

கிழக்கில் விழுந்ததா என்று

சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆய்வில் இருந்தீர்கள்


ஒரே ஒரு ரொட்டிக்காக ஒரு மனிதனும் ஒரு நாயும் கட்டிப்புரண்டபோது

அவன் சுன்னத் செய்திருந்தானா அல்லது

கிர்பான் தரையில் வீழ்ந்து கிடந்ததா என

கோப்பை கோப்பையாய் தேநீரை காலி செய்தபடியே

கோட்டையில் விவாதித்துக்கொண்டு இருந்தீர்கள்


அவர்கள்

விளைவித்த செங்கதிர்மணிகளில்

தொலைந்துபோன தம் மூதாதையரின் முகங்களைக்கண்டவர்கள்

முன்னர் சிந்திய குருதியின் செம்மை ஜொலிக்கக் கண்டவர்கள்


அவர்கள் என் பாட்டனுக்கு ரொட்டி தயாரித்தார்கள்

அவர்கள் உன் பாட்டனுக்கும் ரொட்டி தயாரித்தார்கள்

அவர்கள் என் தாய் தகப்பனுக்கு ரொட்டி தயாரித்தார்கள்

அவர்கள் உன் தாய் தகப்பனுக்கும் ரொட்டி தயாரித்தார்கள்

அவர்கள் எனக்கும் என் மனைவிக்கும் பிள்ளைக்கும்

உனக்கும் உன் மனைவி பிள்ளைக்கும்

ரொட்டி தயாரிக்கின்றார்கள்

அதே செங்கதிர்மணிகளால்


நீயோ பொய்மையால் மழுங்கிய உன் பேனா முனைதான்

தலைமுறைகளாய் கூர் ஏறிய அவர்களின் ஏர் முனையை 

இனி உய்விக்க இருப்பதாய் பசப்புகின்றாய்

உன் வெற்றுக்காகிதங்களால்

சட்டத்தோரணம் கட்டுகின்றாய்

உன் கார்பொரேட் நண்பர்களிடம்

கமிஷனுக்கு வாங்கிய துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டுகின்றாய்


நீ நினைக்கின்றாய்

அவர்கள் வெறும் கோதுமை மாவுடனும்

காய்கறிகளுடன் மட்டுமே வந்திருப்பதாக,

மறந்துவிடாதே,

சட்லெஜ் நதியின் கரையில்

இப்போதும் தகிக்கும் அவன் சாம்பலின் வெப்பத்தை 

இதயத்தில் ஏந்தியபடி

உன் வாசலில் நிற்கின்றார்கள்

உன் ஆயுதங்களை எதிர்கொள்ள.

கருத்துகள் இல்லை: