செம்மறி ஆட்டு மந்தை. ஒன்றை ஒன்று தள்ளிக்கொண்டு எல்லாம் ஒரே போக்கில் ஒரு குறுகிய வழியே முண்டிக்கொண்டு சென்று கொண்டு இருக்கின்றன. இந்தக் காட்சி அப்படியே சன்னமாக பனித்திரை போல் மறைகின்றது. செம்மறி ஆடுகளின் இடத்தில் நூற்றுக்கணக்கான மனிதர்கள்... மனிதர்கள், எல்லோரும் தொழிலாளர்கள். ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு எல்லாம் ஒரே போக்கில் ஒரு தொழிற்சாலையின் வாசல் வழியே முண்டிக்கொண்டு உள்ளே செல்கின்றார்கள். மனித மந்தை.
1936இல் வெளியான மாடர்ன் டைம்ஸ் Modern Times படத்தின் முதல் காட்சிதான் இது. எழுதி இயக்கி நடித்தவர் சார்லி சாப்ளின். இசையமைத்து ஒரு பாடலும் பாடினார். தன் காலத்தை தாண்டி எதிர்காலத்தை கனவு கண்டவன், அதையே திரையில் ஓவியமாக தீட்டிய பெருங்கலைஞன். காலையில் கண்விழித்தால் தொழிற்சாலை நோக்கி ஓடுவதையும் வேலை முடிந்து வீடு திரும்புவதையும் உழைத்து உழைத்து ஓடாய் போவதையும் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாத மனித எந்திரங்கள் ஆன தொழிலாளிகள் பற்றி, வாழ்க்கையின் ரசனையான, மென்மையான பக்கங்களுக்கு இடமே இல்லாமல் மாற்றப்பட்ட தொழிலாளிகள் பற்றி இந்தக் காட்சியை விடவும் அற்புதமாக 85 வருடங்களுக்கு முன் வேறு எவருக்கும் சித்தரிக்க தோன்றி இருக்கவில்லை!
கார்க்கியின் தாய் நாவலின் முதல் பக்கம் முதல் பத்தியே கூட இப்படித்தான் தொடங்குகிறது. "புகையும் எண்ணெய் அழுக்கும் நிறைந்த காற்றில் தொழிலாளர் குடியிருப்புக்கு மேல் நாள்தோறும் அந்த ஆலைச்சங்கு அலறி க்கூச்சலிடும். வேலையால் இழந்த சக்தியை தூக்கத்தால்மீண்டும் பெறாத தொழிலாளர்கள், ஆலைச்சங்கின் அழைப்புக்கு பணிந்து, அழுது வடியும் வீடுகளில் இருந்து கடுகடுத்த முகங்களுடன் அடித்து மோதிக்கொண்டு வெளியே ஓடி கலைந்த கரப்பான் பூச்சிகளைப் போல தெருக்களில் மொய்ப்பார்கள். குளிரும் குமரியிருட்டும் கவிந்த அந்த அதிகாலையில் செப்பனிடப்படாத சாலையில், அவ்வாலையின் கற்கூடாரங்களை நோக்கி விரைவார்கள்".
தாய் நாவலில் நிகலாய் வெஸோவ்ஷிக்கோவின் குரல் இப்படி ஒலிக்கும்: அவர்கள் பழத்தைப் பிழிந்து சாறு எடுப்பது போல் நம் ரத்தத்தைக் கசக்கிப் பிழிகின்றார்கள்.
மாடர்ன் டைம்ஸின் கதை என்ன? எலெக்ட்ரோ ஸ்டீல் கம்பெனியில் வேலை செய்கின்றான் கதாநாயகன். அதன் முதலாளி, தன் அறையில் உட்கார்ந்து கொண்டே தொழிற்சாலை முழுவதையும் நேரடியாக கண்காணிக்க முடியும். ஆம்! தொழிற்சாலையின் அனைத்து இடங்களிலும் டிவி திரைகள் உள்ளன, கழிப்பறை உட்பட! முதலாளியின் அறையிலும் உள்ளது. "ஹேய் செக்சன் 5! 41ஐ வேகப்படுத்து" என்று டிவி திரை வழியே ஃபோர்மேனுக்கு உத்தரவு ஐடா முடியும்! இப்போது உலகம் முழுவதும் பணி இடங்களில் இப்படியான கண்காணிப்பு திரைகள் இருப்பதை கவனியுங்கள், இதை 1936இல் முன்னுணர்ந்தவர் சாப்ளின்!
அமெரிக்காவின் ஹென்றி ஃபோர்ட் கம்பெனியானது கார் உற்பத்தியின் முன்னோடி. Assembly line என்ற தொழிநுட்ப உத்தியை அறிமுகப்படுத்தியது அந்தக் கம்பெனிதான் என்று சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகனின் வேலை , அசெம்பிளி லைனில் கன்வேயர் பெல்டில் இடைவிடாமல் நகர்ந்து கொண்டே இருக்கும் நட்டுகளை இரண்டு கைகளாலும் ஸ்பானர் பிடித்து முடுக்கி விடுவதாகும். ஒரு மில்லி வினாடி கூட கண் மூடவோ கை ஓயவோ முடியாது. கன்வேயர் பெல்ட் நிற்காது என்பது மட்டும் அல்ல, இவனது வேலையின் அடுத்த கட்டத்தை செய்ய அடுத்த தொழிலாளி அருகில் நிற்கின்றான். மூக்கை சொறிந்து கொள்ளவோ முகத்தின் முன் கிர் என பறந்து தொந்தரவு செய்யும் ஈயை விரட்டவோ பக்கத்தில் இருப்பவனை ஒரே ஒரு வினாடி நிமிர்ந்து பார்க்கவோ முடியவே முடியாது!
ஒரு சிறு இடைவெளியில் ஆசையோடு சிகரெட் பிடிக்க முனையும்போது அங்கேயும் முதலாளி திரையில் தோன்றி "ஹேய், ஓடு, வேலை செய்" என்று நாயை விரட்டுவது போல் விரட்டுகின்றான்.
உணவு இடைவேளை என்ற கணக்கில் அரை மணி நேரம் வீணாவதாக முதலாளி கவலைப்படுகின்றான். தொழிலாளி வேலை பார்த்துக்கொண்டே சாப்பிடவும் முடியாதா? உற்பத்தி பெருகுமே? லாபம் உயருமே? எனவே உணவூட்டும் எந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப் படுகின்றது. "இந்த மெஷின் தொழிலாளி வேலை செய்து கொண்டு இருக்கும்போதே உணவை ஊட்டிவிடும் சார்! தனியாக உணவு இடைவேளை தேவையில்லை! எனவே உற்பத்தி பெருகும், லாபம் உயரும்! உற்பத்தியை பெருக்கு, தொழில் போட்டியில் முந்து என்பதே எங்கள் நோக்கம் சார்" என்று மெஷினை விற்க வந்தவன் முதலாளிக்கு விளக்குகின்றான். இந்த மெஷினை சோதனை செய்ய நமது கதாநாயகன்தான் தேர்ந்தெடுக்கப் படுகின்றான்! முதலாளித்துவம் லாப வேட்டை ஒன்றையே குறிக்கோளாக கொண்டது என்ற விதியை நகைச்சுவை காட்சி மூலம் காட்டி முதலாளித்துவத்தின் முகத்தில் உமிழ்வார் சாப்ளின்.
மெஷினில் கோளாறு ஏற்படவே முதலாளி அந்த மெஷினை நிராகரிக்கின்றான். இந்த மோசமான மதிய 'உணவு'க்குப் பின், தன் அஸெம்ப்ளி லைனுக்கு கதாநாயகன் வருகின்றான். டிவி திரையில் தோன்றும் முதலாளி உத்தரவு இடுகின்றான், "செக்சன் 5, வேகத்தை அதிகப்படுத்து!" அவ்வளவுதான்! கன்வேயர் பெல்ட் தன் வேகத்தை மிகவும் அதிகப்படுத்த, அதன் வேகத்துக்கு இவனால் ஈடு கொடுத்து நட்டை முடுக்க முடியவில்லை. முடுக்கப்படாத நட்டுகள் ஏராளமாக நகர்ந்து விடுகின்றன. அடுத்து இருப்பவனோ இவனை மோசமாக திட்டுகின்றான். நட்டுகளை துரத்திக்கொண்டே இவன் பின்னால் போக... அந்தோ...எல்லோரும் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே கன்வேயர் பெல்டில் இவனும் விழுந்து மிகப்பெரிய ராட்சஸ மெஷினுக்குள் இழுக்கப்படுகின்றான். பல்வேறு பல்சக்கரங்களின் ஊடே இவனும் ஒரு ஜடப்பொருளாக வளைந்து நெளிந்து சுழன்று....ஆனால் கைகள் மட்டும் ஒரே தாளகதியில் பார்க்கின்ற நட்டுகளை எல்லாம் முடுக்கிக்கொண்டே இருக்க... இது போன்றதொரு அற்புதமான காட்சி இதுவரையில் திரையில் வந்ததாக தெரியவில்லை.
படத்தின் இறுதி வரையிலும் ஒரு நிரந்தரமான வேலை கிடைக்காத இளைஞனாகவே சாப்ளின் இருப்பார். இறுதிக்காட்சியில் தன் அன்புக்குரிய பெண்ணின் தோளை அணைத்தபடியே தொலைவில் உதிக்கும் சூரியனை நோக்கி செல்வதாக நம்பிக்கை தரும் வண்ணம் படத்தை முடிப்பார்.
படத்தில் "நீ ஒரு கம்யூனிஸ்ட்!" என்று போலீஸ் அவரை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுவது பொருள் பொதிந்த ஒன்று. அவரது சொந்த வாழ்க்கையில் பிற்காலத்தில் தானே இதை அனுபவிக்க நேரும் என்று அவர் நினைத்துப் பார்த்திருப்பாரோ என்னவோ?! அவரை ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறி தன் நாட்டுக்குள் நுழையக் கூடாது என அமெரிக்க அரசு தடை விதித்து இருந்தது வரலாறு. பிற்காலத்தில் அதே அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற அவர் அழைக்கப்பட்ட போது, அவருக்கு உரையாற்ற ஐந்து நிமிடங்கள் கொடுக்கப்பட்டது, ஆனால் ஒரு வார்த்தையும் பேசாமல் அவர் விருதினைப் பெற்றுக்கொண்டபோது கூடி இருந்த மக்கள் கூட்டம் எழுந்து நின்று 12 நிமிடங்கள் கைதட்டி அவரை பெருமைப்படுத்தியது.
இப்படம் வெளியானது 85 வருடங்களுக்கு முன்பு. சாப்ளின் கண்ட சமூகத்துக்கும் இன்றைய சமூகத்துக்கும் வடிவத்திலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் வேறுபாடு இருக்கலாம். ஆனால் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற நவீன சுரண்டல் வடிவம், முதலாளித்துவத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையே ஆன முரண்பாடுகளை 1990களுக்குப் பிறகு உலகளாவிய அளவில் கூர்மை அடைய செய்துள்ளதை நாம் பார்க்கின்றோம். லாபம், மேலும் லாபம், மேலும் மேலும் லாபம், இதுவே உலக முதலாளித்துவத்தின் ஒற்றைக் குறிக்கோள். நவீன எந்திரங்களும் தொழிநுட்ப வளர்ச்சியும் உற்பத்தியை அதிகரித்து உள்ளன என்பது உண்மைதான், ஆனால் உலகெங்கும் நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மாறாக காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல கோடிகளாக உயர்ந்துகொண்டே போவது எதன் பொருட்டு? லாபம், மேலும் லாபம், மேலும் மேலும் லாபம்.
தாய் நாவலில் ஹஹோல் உரத்த குரலில் முழங்குவான்: உலகில் பல்வேறு இன மக்கள் இருப்பதாக சொல்கின்றார்கள். நான் நம்பவில்லை. எந்த நாட்டுத் தொழிலாளி ஆனாலும் சரி, ரஷ்யாவில் உள்ள தொழிலாளர்கள் எப்படி நாயினும் கேடு கெட்டு வாழ்கின்றனரோ, அதே வாழ்க்கையைத்தான் சகல நாட்டுத் தொழிலாளர்களும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்!
சார்லி சாப்ளினின் modern times மிகப்பெரிய அரசியல் படம் என்பதில் சந்தேகமே இல்லை. 1936இல் இப்படம் வெளியாகின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையே ஆன முரண்பாடுகள், 1939இல் இரண்டாம் உலகப்போர் என்ற வடிவில் வெடிக்கின்றன என்பதை கணக்கில் கொண்டால் இது புரியும். அந்த வகையில் modern times உலக திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமானது.
இந்தப்படம் பாதி பேசாப்படம், மீதி பேசும்படம்.
... .... .....
16.1.2005 தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளியானது, சில மாற்றங்களுடன் இங்கே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக