மங்கலநாதர் என்ற கந்தர்வனின் கதை. புகழ்பெற்ற கதைகள் வரிசையில் செம்மலர் வெளியிட்டது. தன் பெண்களுக்கு மிக ஆர்ப்பாட்டமாக ஊரை வளைத்துப்போட்டு கல்யாணம் செய்து வைப்பவர், நொடித்த நிலையில் கடைசிப்பெண்ணுக்கு எப்படி தன் மனசை சமாதானம் செய்து கொண்டு படு சிக்கனமாக கல்யாணம் செய்து வைக்கின்றார் என்பது பற்றிய கதை. கடவுள் பக்தியை மிக மெல்லிய தொனியில் கேலி செய்யும் கதை. இதுவரை எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட மங்கலநாதர் இதையும் ஏற்றுக்கொள்வார் என்று சமாதானம் செய்து கொள்கின்றார், தன் ஏழ்மை நிலையை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை, ஆனால் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள கடவுளை சாக்காக அழைக்கும் மனநிலை, பக்தியில் இருந்து வெளியே வர முடியாமல் மருகும் மனநிலை என பல நுட்பங்களை இக்கதையில் ஒளித்து வைத்திருப்பார்.
வண்ணக்கதிரில் சுப்பாராவின் கடவுளின் மொழியை வாசித்துவிட்டு அதே போன்று என்ன நுட்பம் என வியப்படைந்தேன். அ குமரேசன் அவர்களிடம் தொலைபேசி எண் வாங்கி மதுரையில் இருந்த சுப்பாராவ் அவர்களிடம் பேசினேன். மென்மையான குரலில் பேசி மகிழ்ச்சியை தெரிவித்தார்.
பிராமண குடும்பத்துப்பெண், கம்ப்யூட்டர் வகுப்புக்கு போன இடத்தில், வேற்று சாதியினன் ஆன அவனை காதலிக்கின்றாள், பிடிவாதமாக இருந்ததால் திருமணம் செய்து வைக்கின்றனர். பின்னொரு நாளில் தென்காசியில் நடக்கும் குலதெய்வ பூஜையில் எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களையும் நிறைவு செய்த பின்னும் பொங்கல் பொங்காமல் எல்லோரையும் மிரட்டி விடுகின்றது. குழந்தைகள் உட்பட எல்லோரும் பட்டினி. காரணம் என்ன? அவன் இல்லாத குறையோ? அவன் இந்தக் குடும்பத்தில் ஒருவன் இல்லையா? அதுதான் தோஷமாகி விட்டதா? அவள் அவனை அழைக்கின்றாள், அவன் குளித்து சகல பக்தி லட்சணங்களுடன் வந்து அவளுடன் சேர்ந்து 'சாமீ! ரொம்ப வருஷம் கழிச்சு நடக்கிற பூஜை, யார் என்ன தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிக்கணும், பெரியவங்க கொழந்தைங்க எல்லாம் காலைலேர்ந்து பட்டினி. நீதா மனசு வச்சு காப்பாத்தனும்' என்று சத்தமாக சொல்லி பொங்கல் பானையை நமஸ்கரிக்க பால் பொங்கி வழிகின்றது. பின் என்ன, எல்லோரும் நிம்மதி அடைந்து சாப்பிட உட்கார்ந்தார்கள் என்பதை சொல்ல வேண்டுமா? நுட்பமான கதை!
மதுரைக்கு சென்று எல் ஐ சி அலுவலகத்தில் அவரை சந்தித்தேன். கதைகளை பற்றி கொஞ்சமும் பொதுத்துறை தனியார்மயம், எல் ஐ சி இந்திய பட்ஜெட்டுக்கு தரும் பெரும் பங்கு, கிண்டில் என பலவும் பேசினோம், கீழே வந்து நல்ல காப்பி அருந்தினோம். விடைபெற்று, பின்னால் இருந்த திருமலை நாயக்கர் மஹாலில் இரண்டு மணி நேரம் சுற்றினேன், வெளியே வந்து திருமங்கலத்துக்கு பேருந்து பிடிக்க நின்றபோது அவர் தன் நண்பர்களுடன் காப்பி அருந்திக்கொண்டு இருந்தார். வந்த ஒன்றிரண்டு பேருந்துகளை விட்டுவிட்டு அவரையே பார்த்துக்கொண்டு நின்றேன்.
அவருடைய கதைகள் தாத்தாவின் டைரிக்குறிப்பு என்று தொகுப்பாக வந்தபோது தன்னுரையில் என்னையும் அவர் குறிப்பிட்டு இருந்ததையே பல வருடங்களுக்கு பிறகுதான் கண்டறிந்தேன்! வடகிழக்கு மாநில மக்களின் கதைகளை தமிழுக்கு கொடுத்தார். லைபாக்லை ஆன்ட்டி என்று தொகுப்பு. 2014இல் ஷில்லாங், சிரபுஞ்சிக்கு குடும்பத்துடன் சென்று இருந்தேன். எளிமையும் அமைதியும் ஆன ஊரும் மக்களும். லைபாக்லை வாசிக்கும்போது நினைவுக்கு வந்தார்கள். விரைவில் அது குறித்து எழுதுவேன். அவர் மொழியாக்கத்தில் நமக்கு உலகப்பெரும் இலக்கியங்கள் கிடைத்துள்ளன.
அன்பான வாழ்த்துக்கள் தோழர் சுப்பாராவ்! இங்கே புகைப்படத்தில் ஷில்லாங்கின் சிறிய சந்தை. அவர்களுக்கு அதுதான் பெரிய பஜார்! மனசுதானே தீர்மானிக்கின்றது, தென்காசி சாமியும் சாமியின் மக்களும் போல!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக