ஞாயிறு, டிசம்பர் 27, 2020

Modern Timesம் கம்யூனிச கோட்பாடும்

மனநிலை பிறழ்ந்து சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் கதாநாயகன் வேறு ஒரு உலகத்தை காண்கின்றான்.கடுமையான பொருளாதார நெருக்கடியில், தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன, வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகின்றது. தொழிலாளர்கள் கூட்டம் வீதியில் திரண்டு நின்று பெரும் முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்துகிறார்கள். அப்போது அந்த வழியே  கட்டுமானத் தொழிலாளர்களை ஏற்றி வரும் லாரியில் இருந்து சிவப்புக்கொடி கீழே விழுகின்றது. கொடியை எடுத்து லாரியில் இருப்போரிடம் கொடுப்பதற்கு லாரியின் பின் இவன் ஓடுகின்றான். கையில் சிவப்பு க்கொடியுடன் ஓடும் இவன்தான் போராட்டத்திற்கு தலைவன் என்று கருதிய போலீஸ், "ஓ நீதான் தலைவனா? கம்யூனிஸ்ட்?" என்று கேட்டு போலீஸ் வண்டியில் ஏற்றுகின்றனர். இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. நீதிமன்றம் இவனை சிறையில் அடைக்க உத்தரவு இடுகின்றது. இந்தக் காட்சி, அடக்குமுறை கருவியான போலீசின் கண்மூடித்தனமான அணுகுமுறையை மட்டும் இன்றி, கம்யூனிஸ்டு என்பவன் போராட்டத்தில் முன்னே நிற்பான் என்ற யதார்த்தத்தையும் சொல்லும்.

சிறையில் இருக்கும்போது, சிறையில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஒரு கும்பலின் முயற்சியை இவன் தன்னை அறியாமலேயே முறியடித்து விட, சிறை நிர்வாகம் அவனுக்கு சிறைக்குள் ஒரு சொகுசு வாழ்க்கையை அனுமதிக்கிறது. பத்திரிகைகள் தரப்படுகின்றன.ஆனால் வரும் செய்திகள் எல்லாம் வேலைநிறுத்தம், வன்முறை, போராட்டம் என்றே இருக்க, "நல்லவேளை, ஜெயிலுக்கு வந்தது நல்லதா போச்சு!" என்று நிம்மதி அடைகின்றான். நகர அதிகாரி ஒருநாள் இவனுக்கு மன்னிப்பு அளித்து "உனக்கு விடுதலை"என்று சொன்னதும் நடுங்கிப் போகின்றான்! வெளியே போனால் பிழைக்க முடியுமா? நேரத்துக்கு சாப்பாடு கிடைக்குமா? சாப்ளினின் முத்திரை இந்தக் காட்சியில் பளிச்சிடும். "ஐயா! நான் இங்கே சந்தோசமாக இருக்கேன்! என்னை இங்கேயே இருக்க விடுங்கள்" என்று கெஞ்சும்போது, முதலாளித்துவ சமூகத்தில் சிறைச்சாலையை விடவும் மோசமாக சிறைக்கு வெளியே உள்ள பொதுவாழ்க்கை கேடுகெட்டு கிடப்பதை குத்தலும் கேலியுமாக சொல்லி உடைக்கின்றார் சாப்ளின். 

வெளியே வந்து பார்த்த வாழ்க்கை கொடூரமாக இருப்பதை பார்த்து நடுங்கி, மீண்டும் சிறைக்கு செல்வதே உத்தமம் என்று முடிவு செய்கின்றான். தெரிந்தே ஒரு குற்றம் செயகின்றான், போலீஸ் அவனை கைது செய்கின்றது. ஏற்கனவே அறிமுகம் ஆன ஒரு இளம்பெண்ணை போலீஸ் வண்டியில சந்திக்கின்றான். ஒரு சரிவில் வண்டி தாறுமாறாக திரும்பும்போது இருவரும் கீழே உருண்டு தப்பித்து ஓடுகின்றார்கள். கைவிடப்பட்ட ஒரு பழைய வீட்டில் இருவரும் குடியேறுகின்றனர். அன்பை மட்டுமே பரிமாறிக்கொண்டு ஒன்றாக வாழ முடிவு செய்கின்றனர். குடியிருக்க வீடில்லாத கிரெடிட் கார்ட், வீட்டுக்கடன், டாப் அப் லோன் சமூகத்தில் குடிமகன் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஒருமுறையாவது வரும் சொந்த வீட்டுக்கனவு இவர்களுக்கும் வருகின்றது. தோட்டம் சூழ்ந்த அழகிய வீடு. ஜன்னலை தொட்டுக்கொண்டு நிற்கும் ஆரஞ்சு மரத்தில் இருந்து ஒரு பழத்தை அலட்சியமாக பறிக்கின்றான். சமையலறை வாசலைத் தொட்டுக்கொண்டு திராட்சைக்கொடியில் குலைகள் வா வா என அழைக்கின்றன. கனத்து கீழிறங்கும் மடி நிறைய பாலை சுமந்து கொண்டு ஒரு பசு எப்போதும் சமையலறையை ஒட்டி வந்து நின்று கொண்டு "கறந்துட்டு போங்க" என்ற பாவனையில் தயாராக நிற்கின்றது. இந்த உலகத்தின் ஒவ்வொரு சாமானியனுக்கும் உள்ளபடியே கிடைக்க வேண்டியவைதான் இவை அனைத்தும். 

Assembly line தொழில்நுட்பம் தொழிலாளர்களை எந்த அளவுக்கு நொடி நேரமும் ஓய்வின்றி பணி செய்ய நிர்ப்பந்திக்கிறது, அவர்களை எப்படி மற்றொரு எந்திரமாக மனதளவிலும் உடல் அளவிலும் மாற்றி விடுகின்றது என்பதையும் ஓய்வற்ற உழைப்பின் காரணமாக தொழிலாளி எப்படி மனபிறழ்வுக்கு ஆளாகின்றான் என்பதையும் இந்தப்படத்தில் அவர் சித்தரித்தது போல் இதுவரையில் வேறு எந்தப் படத்திலும் காட்டப்பட்டது இல்லை. உணவு நேரத்திலும் உற்பத்தியை நிறுத்தாமல் இருப்பது எப்படி என்று சிந்திப்பதே முதலாளித்துவம் என்பதை, தொழிலாளிக்கு உணவூட்டும் எந்திரத்தை கண்டுபிடித்து பரிசோதனை செய்யும் காட்சியில் நகைச்சுவை போங்க அவர் காட்டி இருந்தாலும் அதனுள் பட்டவர்த்தனமாக தென்படுவது முதலாளித்துவத்தின் கோர முகம்தான். அந்த வகையில் அக்காட்சியில் மேலோங்கி நிற்பது அவலச்சுவைதான். 

அவருடைய படங்களில் காட்சிகளும் வசனங்களும் சமூக சீரழிவுகளை எள்ளி நகையாடுபவை, சுரண்டல் பேர்வழிகளின் முகமூடியை கிழிப்பவை.  நகைச்சுவையாகவே இவற்றை காட்சிப்படுத்திய போதே அமெரிக்க அரசு அவரை தன் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை, அவரை அமெரிக்க எதிரிகள் பட்டியலில் வைத்திருந்தது.  கம்யூனிஸ்ட் என்று சொன்னது. ஹிட்லரின் "ஒழித்துக்கட்டப்பட வேண்டியவர்கள்" பட்டியலில் சார்லி சாப்ளினின் பெயர் இருந்தது.

1936இல் இப்படத்தை வெளியிடுகின்றார் சாப்ளின். 1937இல் the great dictator படத்தை தயாரிக்க தொடங்குகின்றார். 1939இல் ஏகாதிபத்தியங்களுக்கு இடையே ஆன முரண்பாடுகள் முற்றி இரண்டாம் உலகப்போராக வெடிக்கின்றது. உண்மையில் 1917இல் முடிவுற்ற முதல் உலகப்போரின் தொடர்ச்சிதான் இரண்டாம் போர். முதலாம் போரின் முடிவில் உலக நாடுகள் நிர்ப்பந்தம் செய்து ஜெர்மனியின் பொருளாதாரத்தையும் ராணுவ பலத்தையும் ஒடுக்கி அடக்கியதால்தான் கோபமுற்ற ஜெர்மனி ஹிட்லரின் ஆட்சியின் கீழ் இரண்டாம் போரை தொடங்கியது என முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் சொல்வார்கள். அது, ஒரு காரணம் மட்டும்தான். 1917க்குப் பின் அமெரிக்க, பிரிட்டிஷ், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய நாடுகள், முதல் உலகப்போரில் ஏற்பட்ட பெரும் பொருளாதார சரிவை ஈடு செய்யும் நோக்கில் தங்களுக்குள் நாடு பிடிக்கும் போட்டியில் தீவிரமாக இறங்கியதுதான் முக்கியமான காரணம்.

இப்படியான கால கட்டத்தில் சார்லி சாப்ளின் என்ற மகத்தான கலைஞன்,  தன் திறமையை, முதலாளித்துவ சமூக சீரழிவுகளை அம்பலப்படுத்த திரைப்படம் என்ற கருவியை, ஊடகத்தை மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொண்டான். விக்ட்டோரியா மகாராணியின் ஆட்சி சொர்க்கம் என்று மற்றவர்கள் புகழ்ந்தபோது "அது ஒரு நரகம்" என்று வெளிப்படையாக விமர்சனம் செய்தவர், அதே லண்டன் மாநகரில் பிறந்த சார்லி சாப்ளின். 1930களின் பொருளாதார பெருமந்தமும் 2008இல் அமெரிக்காவில் மீண்டும் நிகழ்ந்த பொருளாதார பெருமந்தமும், முதலாளித்துவ சமூகத்தின் சீரழிவுகளைத்தான் அம்பலப்படுத்தின. அவர் தன்னை ஒருபோதும் கம்யூனிஸ்ட் என்று வெளிப்படையாக சொல்லிக்கொண்டது இல்லை, ஆனால் அவர் சொல்லும் செயலும் அவரை கம்யூனிஸ்ட் என்றே காலம் நெடுகிலும் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டே இருந்தன. 

1940-50 காலத்தில் குடியரசு கட்சி செனட்டர் ஆன ஜோசப் மெக் கார்த்தி  Joseph McCarthy தலைமையில் Second Red Scare ரகசிய கோப்பின் கீழ் , கம்யூனிஸ்ட் என சந்தேகிக்கப்படுபவர்கள், அதாவது அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஆக கருதப்பட்ட கலைஞர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. FBI சாப்ளினை Parlour Bolshevik என்று குறிப்பிட்டது. FBI இயக்குனர் ஆன J Edgar Hoover, உளவு அமைப்பான MI5 ஐ ஏவி சாப்ளினை உளவு பார்த்தார். பட்டியலில் சாப்ளினுடன் இருந்த பிற கலைஞர்கள்:

கவிஞர் Langston Hughes

இயக்குனர், எழுத்தாளர் Orson Welles

இசைக்கலைஞர் Leonard Bernstein

பாடகர்,  நடிகர் (பெண்மணி) Lena Horne

திரைக்கதை ஆசிரியர் Dalton Trumbo 

கவிஞர், எழுத்துக்கள், விமர்சகர் (பெண்மணி) Dorothy Parker.

இந்தப் பட்டியலை வாசிக்கும்போது பீமா கோரேகான் பொய் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ள சமூகப்போராளிகள் நம் நினைவுக்கு வந்தால், இன்றைய அரசு எப்படிப்பட்டது என்பதை புரிந்துகொள்ளலாம்.

கலைஞர்கள் ஒவ்வொருவரும் கம்யூனிஸ்ட் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லைதான், ஆனால் எந்த ஒரு கலைஞனும் பொது உடைமைக் கோட்பாட்டுக்கு எதிரானவன் ஆக ஒருபோதும் இருக்க முடியாது.

சார்லி சாப்ளினின் ஓவியமும் கார்க்கியின் காவியமும்


செம்மறி ஆட்டு மந்தை. ஒன்றை ஒன்று தள்ளிக்கொண்டு எல்லாம் ஒரே போக்கில் ஒரு குறுகிய வழியே முண்டிக்கொண்டு சென்று கொண்டு இருக்கின்றன. இந்தக் காட்சி அப்படியே சன்னமாக பனித்திரை போல் மறைகின்றது. செம்மறி ஆடுகளின் இடத்தில் நூற்றுக்கணக்கான மனிதர்கள்... மனிதர்கள், எல்லோரும் தொழிலாளர்கள். ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு எல்லாம் ஒரே போக்கில் ஒரு தொழிற்சாலையின் வாசல் வழியே முண்டிக்கொண்டு உள்ளே செல்கின்றார்கள். மனித மந்தை.

1936இல் வெளியான மாடர்ன் டைம்ஸ் Modern Times படத்தின் முதல் காட்சிதான் இது. எழுதி இயக்கி நடித்தவர் சார்லி சாப்ளின். இசையமைத்து ஒரு பாடலும் பாடினார். தன் காலத்தை தாண்டி எதிர்காலத்தை கனவு கண்டவன், அதையே திரையில் ஓவியமாக தீட்டிய பெருங்கலைஞன். காலையில் கண்விழித்தால் தொழிற்சாலை நோக்கி ஓடுவதையும் வேலை முடிந்து வீடு திரும்புவதையும் உழைத்து உழைத்து ஓடாய் போவதையும் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாத மனித எந்திரங்கள் ஆன தொழிலாளிகள் பற்றி, வாழ்க்கையின் ரசனையான, மென்மையான பக்கங்களுக்கு இடமே இல்லாமல் மாற்றப்பட்ட தொழிலாளிகள் பற்றி இந்தக் காட்சியை விடவும் அற்புதமாக 85 வருடங்களுக்கு முன் வேறு எவருக்கும் சித்தரிக்க தோன்றி இருக்கவில்லை!

கார்க்கியின் தாய் நாவலின் முதல் பக்கம் முதல் பத்தியே கூட இப்படித்தான் தொடங்குகிறது. "புகையும் எண்ணெய் அழுக்கும் நிறைந்த காற்றில் தொழிலாளர் குடியிருப்புக்கு மேல் நாள்தோறும் அந்த ஆலைச்சங்கு அலறி க்கூச்சலிடும். வேலையால் இழந்த சக்தியை தூக்கத்தால்மீண்டும் பெறாத தொழிலாளர்கள், ஆலைச்சங்கின் அழைப்புக்கு பணிந்து, அழுது வடியும் வீடுகளில் இருந்து கடுகடுத்த முகங்களுடன் அடித்து மோதிக்கொண்டு வெளியே ஓடி கலைந்த கரப்பான் பூச்சிகளைப் போல தெருக்களில் மொய்ப்பார்கள். குளிரும் குமரியிருட்டும் கவிந்த அந்த அதிகாலையில் செப்பனிடப்படாத சாலையில், அவ்வாலையின் கற்கூடாரங்களை நோக்கி விரைவார்கள்".

தாய் நாவலில் நிகலாய் வெஸோவ்ஷிக்கோவின் குரல் இப்படி ஒலிக்கும்: அவர்கள் பழத்தைப் பிழிந்து சாறு எடுப்பது போல் நம் ரத்தத்தைக் கசக்கிப் பிழிகின்றார்கள். 

மாடர்ன் டைம்ஸின் கதை என்ன? எலெக்ட்ரோ ஸ்டீல் கம்பெனியில் வேலை செய்கின்றான் கதாநாயகன். அதன் முதலாளி, தன் அறையில் உட்கார்ந்து கொண்டே தொழிற்சாலை முழுவதையும் நேரடியாக கண்காணிக்க முடியும். ஆம்! தொழிற்சாலையின் அனைத்து இடங்களிலும் டிவி திரைகள் உள்ளன, கழிப்பறை உட்பட! முதலாளியின் அறையிலும் உள்ளது. "ஹேய் செக்சன் 5! 41ஐ வேகப்படுத்து" என்று டிவி திரை வழியே ஃபோர்மேனுக்கு உத்தரவு ஐடா முடியும்! இப்போது உலகம் முழுவதும் பணி இடங்களில் இப்படியான கண்காணிப்பு திரைகள் இருப்பதை கவனியுங்கள், இதை 1936இல் முன்னுணர்ந்தவர் சாப்ளின்!

அமெரிக்காவின் ஹென்றி ஃபோர்ட் கம்பெனியானது கார் உற்பத்தியின் முன்னோடி. Assembly line என்ற தொழிநுட்ப உத்தியை அறிமுகப்படுத்தியது அந்தக் கம்பெனிதான் என்று சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகனின் வேலை , அசெம்பிளி லைனில் கன்வேயர் பெல்டில் இடைவிடாமல் நகர்ந்து கொண்டே இருக்கும் நட்டுகளை இரண்டு கைகளாலும் ஸ்பானர் பிடித்து முடுக்கி விடுவதாகும். ஒரு மில்லி வினாடி கூட கண் மூடவோ கை ஓயவோ முடியாது. கன்வேயர் பெல்ட் நிற்காது என்பது மட்டும் அல்ல, இவனது வேலையின் அடுத்த கட்டத்தை செய்ய அடுத்த தொழிலாளி அருகில் நிற்கின்றான். மூக்கை சொறிந்து கொள்ளவோ முகத்தின் முன் கிர் என பறந்து தொந்தரவு செய்யும் ஈயை விரட்டவோ பக்கத்தில் இருப்பவனை ஒரே ஒரு வினாடி நிமிர்ந்து பார்க்கவோ முடியவே முடியாது! 

ஒரு சிறு இடைவெளியில் ஆசையோடு சிகரெட் பிடிக்க முனையும்போது அங்கேயும் முதலாளி திரையில் தோன்றி "ஹேய், ஓடு, வேலை செய்" என்று நாயை விரட்டுவது போல் விரட்டுகின்றான். 

உணவு இடைவேளை என்ற கணக்கில் அரை மணி நேரம் வீணாவதாக முதலாளி கவலைப்படுகின்றான். தொழிலாளி வேலை பார்த்துக்கொண்டே சாப்பிடவும் முடியாதா? உற்பத்தி பெருகுமே? லாபம் உயருமே? எனவே உணவூட்டும் எந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப் படுகின்றது. "இந்த மெஷின் தொழிலாளி வேலை செய்து கொண்டு இருக்கும்போதே உணவை ஊட்டிவிடும் சார்! தனியாக உணவு இடைவேளை தேவையில்லை! எனவே உற்பத்தி பெருகும், லாபம் உயரும்! உற்பத்தியை பெருக்கு, தொழில் போட்டியில் முந்து என்பதே எங்கள் நோக்கம் சார்" என்று மெஷினை விற்க வந்தவன் முதலாளிக்கு விளக்குகின்றான். இந்த மெஷினை சோதனை செய்ய நமது கதாநாயகன்தான் தேர்ந்தெடுக்கப் படுகின்றான்! முதலாளித்துவம் லாப வேட்டை ஒன்றையே குறிக்கோளாக கொண்டது என்ற விதியை நகைச்சுவை காட்சி மூலம் காட்டி முதலாளித்துவத்தின் முகத்தில் உமிழ்வார் சாப்ளின். 

மெஷினில் கோளாறு ஏற்படவே முதலாளி அந்த மெஷினை நிராகரிக்கின்றான். இந்த மோசமான மதிய 'உணவு'க்குப் பின், தன் அஸெம்ப்ளி லைனுக்கு கதாநாயகன் வருகின்றான். டிவி திரையில் தோன்றும் முதலாளி உத்தரவு இடுகின்றான், "செக்சன் 5, வேகத்தை அதிகப்படுத்து!" அவ்வளவுதான்! கன்வேயர் பெல்ட் தன் வேகத்தை மிகவும் அதிகப்படுத்த, அதன் வேகத்துக்கு இவனால் ஈடு கொடுத்து நட்டை முடுக்க முடியவில்லை. முடுக்கப்படாத நட்டுகள் ஏராளமாக நகர்ந்து விடுகின்றன. அடுத்து இருப்பவனோ இவனை மோசமாக திட்டுகின்றான். நட்டுகளை துரத்திக்கொண்டே இவன் பின்னால் போக... அந்தோ...எல்லோரும் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே கன்வேயர் பெல்டில் இவனும் விழுந்து மிகப்பெரிய ராட்சஸ மெஷினுக்குள் இழுக்கப்படுகின்றான். பல்வேறு பல்சக்கரங்களின் ஊடே இவனும் ஒரு ஜடப்பொருளாக வளைந்து நெளிந்து சுழன்று....ஆனால் கைகள் மட்டும் ஒரே தாளகதியில் பார்க்கின்ற நட்டுகளை எல்லாம் முடுக்கிக்கொண்டே இருக்க... இது போன்றதொரு அற்புதமான காட்சி இதுவரையில் திரையில் வந்ததாக தெரியவில்லை.

படத்தின் இறுதி வரையிலும் ஒரு நிரந்தரமான வேலை கிடைக்காத இளைஞனாகவே சாப்ளின் இருப்பார். இறுதிக்காட்சியில் தன் அன்புக்குரிய பெண்ணின் தோளை அணைத்தபடியே தொலைவில் உதிக்கும் சூரியனை நோக்கி செல்வதாக நம்பிக்கை தரும் வண்ணம் படத்தை முடிப்பார்.

படத்தில் "நீ ஒரு கம்யூனிஸ்ட்!" என்று போலீஸ் அவரை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுவது பொருள் பொதிந்த ஒன்று. அவரது சொந்த வாழ்க்கையில் பிற்காலத்தில் தானே இதை அனுபவிக்க நேரும் என்று அவர் நினைத்துப் பார்த்திருப்பாரோ என்னவோ?! அவரை ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறி தன் நாட்டுக்குள் நுழையக் கூடாது என அமெரிக்க அரசு தடை விதித்து இருந்தது வரலாறு. பிற்காலத்தில் அதே அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற அவர் அழைக்கப்பட்ட போது, அவருக்கு உரையாற்ற ஐந்து நிமிடங்கள் கொடுக்கப்பட்டது, ஆனால் ஒரு வார்த்தையும் பேசாமல் அவர் விருதினைப் பெற்றுக்கொண்டபோது கூடி இருந்த மக்கள் கூட்டம் எழுந்து நின்று 12 நிமிடங்கள் கைதட்டி அவரை பெருமைப்படுத்தியது.

இப்படம் வெளியானது 85 வருடங்களுக்கு முன்பு. சாப்ளின் கண்ட சமூகத்துக்கும் இன்றைய சமூகத்துக்கும் வடிவத்திலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் வேறுபாடு இருக்கலாம். ஆனால் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற நவீன சுரண்டல் வடிவம், முதலாளித்துவத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையே ஆன முரண்பாடுகளை  1990களுக்குப் பிறகு உலகளாவிய அளவில்  கூர்மை அடைய செய்துள்ளதை நாம் பார்க்கின்றோம். லாபம், மேலும் லாபம், மேலும் மேலும் லாபம், இதுவே உலக முதலாளித்துவத்தின் ஒற்றைக் குறிக்கோள். நவீன எந்திரங்களும் தொழிநுட்ப வளர்ச்சியும் உற்பத்தியை அதிகரித்து உள்ளன என்பது உண்மைதான், ஆனால் உலகெங்கும் நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மாறாக காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல கோடிகளாக உயர்ந்துகொண்டே போவது எதன் பொருட்டு? லாபம், மேலும் லாபம், மேலும் மேலும் லாபம்.

தாய் நாவலில் ஹஹோல் உரத்த குரலில் முழங்குவான்:  உலகில் பல்வேறு இன மக்கள் இருப்பதாக சொல்கின்றார்கள். நான் நம்பவில்லை. எந்த நாட்டுத் தொழிலாளி ஆனாலும் சரி, ரஷ்யாவில் உள்ள தொழிலாளர்கள் எப்படி நாயினும் கேடு கெட்டு வாழ்கின்றனரோ, அதே வாழ்க்கையைத்தான் சகல நாட்டுத் தொழிலாளர்களும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்!

சார்லி சாப்ளினின் modern times மிகப்பெரிய அரசியல் படம் என்பதில் சந்தேகமே இல்லை. 1936இல் இப்படம் வெளியாகின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையே ஆன முரண்பாடுகள், 1939இல் இரண்டாம் உலகப்போர் என்ற வடிவில் வெடிக்கின்றன என்பதை கணக்கில் கொண்டால் இது புரியும். அந்த வகையில் modern times உலக திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமானது.

இந்தப்படம் பாதி பேசாப்படம், மீதி பேசும்படம்.

... .... .....

16.1.2005 தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளியானது, சில மாற்றங்களுடன் இங்கே

வெள்ளி, டிசம்பர் 25, 2020

மக்களை நேசித்த மகா சர்வாதிகாரி

ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் அணிவகுத்து அமைதியாக காத்திருக்கின்றார்கள். டோமேனியா நாட்டின் சர்வாதிகாரியும் அகில உலகையும் அண்ட சராசரங்களையும் நடுநடுங்கச் செய்யும் கொடுங்கோலனும் ஆன அடினாய்ட் ஹின்கெல் இப்போது நாட்டு மக்களுக்கு வானொலியில் நேரடியாக உரையாற்றப் போகின்றான். ஆரிய இனமே ஆளப்பிறந்த இனம், மற்ற அனைவரும் ஆரியர்களுக்கு அடிமைகளாக வாழப்பிறந்தவர்கள்.  

இந்த உலகத்தின் துன்ப துயரங்கள் அனைத்துக்கும் காரணம் யூத இனமே என்ற கொள்கை கொண்டவன் சர்வாதிகாரி ஹின்கெல். இதோ, டோமேனியா நாட்டு மக்களுக்கான தன் உரையை அவன் தொடங்கி விட்டான்:

"மன்னிக்க வேண்டும்! நான் ஒரு சக்கரவர்த்தியாக இருக்க விரும்பவில்லை. அது என் வேலையும் இல்லை. .. நாட்டை ஆள வேண்டும் என்பதோ யாரையாவது ஜெயிக்க வேண்டும் என்பதோ எனக்கு அவசியமும் இல்லை. நான் அனைவருக்கும் உதவி செய்யவே விரும்புகின்றேன், இயன்றவரை. ஆம், யூதர்கள், எந்த மதத்தையும் சாராதவர்கள், கறுப்பர், வெள்ளையர் என எல்லோருக்குமே...." என்ன இது? சர்வாதிகாரி ஹின்கெல்தானா இது? நாட்டு மக்களும் ராணுவ வீரர்களும் நம்ப முடியாது அதிர்ச்சியில் உறைந்து போகின்றார்கள்!

1940ஆம் ஆண்டு வெளிவந்த The Great Dictator படத்தின் இறுதிக்காட்சிதான் இது. படத்தை எழுதி இயக்கியவர் சார்லி சாப்ளின். பேசும் படங்கள் 1927க்குப் பிறகு வெளிவந்தன என்றாலும் அவர் பேசாப்படங்களையே விரும்பினார், இயக்கினார். அந்த வகையில் இப்படமே அவரது முதல் முழு நீள பேசும் படம் ஆகும்.

ஜெர்மனியின் நாஜி ஹிட்லரையும் இத்தாலியின் பாசிச முசோலினியையும் நையாண்டித்தடி கொண்டு மிகக்கடுமையாக தாக்கிய பபாம் இது. 1937இல் பபாம் தொடங்கப்பட்டது, 1940இல் வெளியானது. 1937 என்பது ஹிட்லரின் கோர முகம் முழுமையாக வெளிப்படவில்லை. 1939இல் இரண்டாம் உலகப்போரை ஹிட்லர் தொடங்கி வைத்தான். எனவே இப்படம் உண்மையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் திரைப்படம்தான்.

படத்தில் சாப்ளின் வைத்துள்ள பெயர்கள் சிரிப்பை வர வைப்பவைதான், ஆனால் ஒவ்வொரு பெயருக்கும் பின்னால் கனமான அர்த்தம் இருந்தது. பாருங்கள்:

டோமேனியா-நாஜி ஜெர்மனி (டோமேய்ன் விஷம் என்றால் விஷமாக திரிந்துவிட்ட உணவு என்று பொருள்)

பாக்டீரியா-பாசிஸ்ட் இத்தாலி

ஹின்கெல்- ஹிட்லர்

பென்சினோ நெப்பாலோனி- முசோலினி

கார்பேஜ்- கோயபெல்ஸ் (garbage என்றால் குப்பை)

ஹிட்லரின் ஸ்வஸ்திக் சின்னத்துக்குப் பதில் இரண்டு பெருக்கல் அடையாளங்கள்.

டோமேனியாவின் சர்வாதிகாரி ஹின்கெல், அதாவது ஹிட்லர். அவனைப்போலவே உருவம் கொண்ட, யூத இனத்தை சேர்ந்த ஒரு முடி திருத்தும் தொழிலாளி டோமேனியா ராணுவத்தில் வேலை செயகின்றான். வழக்கம் போலவே இந்தப் பாத்திரத்துக்கும் சாப்ளின் பெயர் வைக்கவில்லை. ஆனால் முதல் முதலாக தன் பாத்திரம் ஒன்றுக்கு அவர் பெயர் வைத்ததும் இந்தப்படத்தில்தான். ஹின்கெல். இரண்டு பாத்திரங்களிலும் அவரே நடித்தார்.

ஹின்கெல் விமான விபத்தில் சிக்கி கீழே விழுந்துவிட, மீட்க வந்தவர்கள் ஹின்கெல் என்று கருதி முடி திருத்தும் தொழிலாளியை அரண்மனைக்கு தூக்கிக்கொண்டு வந்து விடுகின்றனர். அதன் பின் நடப்பதே கதை. சர்வ உலகையும் தன் காலின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்ற அகங்காரத்தில் பூகோள உருண்டை (காற்று அடைத்த பந்து) ஒன்றை மேலும் கீழும் அந்தரத்தில் மிதக்க வைத்து அவர் தட்டித்தட்டி விளையாடும் காட்சி மிகப் புகழ்பெற்ற காட்சி. ஒரு ஒழுங்கான நடனம் போல் அமைந்த காட்சி அது. கர்வமும் ஆணவமும் தொனிக்க ' உலகத்தை' பந்தாக்கி ஆடுகின்றான் ஹின்கெல். ஆட்டம் தொடர்ந்து கொண்டு இருக்க, ஒரு வினாடியில் டம் என்று பெரும் சத்தத்துடன் 'உலகம்' வெடிக்கின்றது. ஆணவமும் சர்வாதிகாரமும் நிலைத்ததாக வரலாறு இல்லை, இந்த உலகம் சர்வாதிகாரிகளுக்கு கட்டுப்பட்டதில்லை, சர்வாதிகாரிகளின் வரலாறு என்றாவது ஒருநாள் வெடித்துச் சிதறும் என்று பார்வையாளர்களுக்கு சொல்கின்றார் சாப்ளின். எளிய பந்தாட்ட காட்சிதான், எத்தனை பெரிய அரசியல் அதில்!

தான் ஆக்கிரமிப்பு செய்திருந்த நாடுகளில் இப்படத்தை திரையிட ஹிட்லர் தடை செய்து இருந்தான். ஆனால் போர்ச்சுகல் நாட்டின் வழியாக இந்தப் படத்தின் பிரதியை வரவழைத்து ஹிட்லர் இரண்டு முறை பார்த்ததாக சொல்லப்படுகிறது. பார்த்தபின் அவன் என்ன சொன்னான் என்பதும் தெரியவில்லை. "ஹிட்லரின் கருத்து என்னவென்று தெரிந்துகொள்ள எதை வேண்டுமானாலும் கொடுக்க சம்மதம்" என சாப்ளின் கூறியதாக சொல்கின்றனர். ஹிட்லர் ஆக்கிரமிப்பில் இருந்த பால்கன் பகுதியில், ஜெர்மன் ராணுவத்தினர்க்கான திரையரங்கில், ஹிட்லர் எதிர்ப்பாளர்கள் ஒரு இசை நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, கிரீஸ் நாட்டில் இருந்து கிடைத்த இப்படத்தை திரையிட்டதாகவும், பல ஜெர்மனி வீரர்கள் ரசித்துப் பார்த்ததாகவும், படத்தைப் புரிந்துகொண்ட சிலர் இடத்தை காலி செய்ததாகவும், சிலர் கோபம் கொண்டு துப்பாக்கியால் திரையில் சுட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஸ்பெயின் நாட்டு சர்வாதிகாரி பிரான்ஸிஸ்க்கோ பிராங்கோ 1975இல் இறக்கும் வரை, தன் நாட்டில் இப்படத்திற்கு தடை விதித்து இருந்தான். 

ஹிட்லர், முசோலினி ஆகியோரின் ஆக்கிரமிப்பு, சர்வாதிகார கொள்கை, யூத இனத்தின் மீது ஹிட்லர் கொண்டிருந்த அளவற்ற வெறுப்பு ஆகியவை சாப்ளினை வெகுவாக பாதித்தன. படப்பிடிப்பு நடந்த நாட்களில், ஹின்கெலின் பாத்திரம் படமாக்கப்பட்ட நாட்களில் மனநிலை கடினமானவராகவே காணபட்டாராம் சாப்ளின். ஐரோப்பாவில் ஹிட்லரின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போகும் செய்திகளால் அவர் மனம் வருந்தியுள்ளார். இறுதியாக, பிரான்ஸை ஆக்கிரமித்த செய்தி வந்தபோதுதான், அந்தப் புகழ்பெற்ற உரையை படத்தின் இறுதியில் வைப்பது என அவர் முடிவு செய்தார். இரண்டாம் உலகப்போர் 1939இல் தொடங்க, அடுத்த வருடமே வெளியான இப்படம் இந்த சர்வாதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்ததால் உலகின் கவனத்தை ஈர்த்ததில் வியப்பில்லை.

Look up, Hannah என்ற அடைமொழியால் அந்த இறுதிக்காட்சி உரை அழைக்கப்படுகிறது. "நாம் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளவே விரும்புகின்றோம். மனிதர்கள் அப்படிப்பட்டவர்கள்தான். சக மனிதனின் மகிழ்ச்சியில்தான் நாம் வாழ விரும்புகின்றோம், துயரில் அல்ல. ஒருவரை ஒருவர் வெறுக்கவோ தாழ்த்தவோ அல்ல. இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் வாழ இடம் உண்டு.... வஞ்சகம், மனித உள்ளங்களில் விஷத்தை கலந்துவிட்டது. வஞ்சகம், உலகத்தை வெறுப்பால் கட்டியுள்ளனது. நம்மை துயரிலும் ரத்தச்சேற்றிலும் தள்ளியுள்ளது. எந்திரங்கள் நிறையவே உற்பத்தி செயகின்றன, ஆனால் நாம்தான் எதுவும் அற்றவர்கள் ஆக உள்ளோம். எந்திரங்களை விடவும் மனிதாபிமானமே நமது தேவையாக உள்ளது. புத்திசாலித்தனத்தை விடவும் அன்பும் பண்பும் தேவையாக உள்ளது.

"என் உரையை கேட்டுக்கொண்டு இருக்கும் மக்களுக்கு சொல்வேன், நம்பிக்கை இழக்காதீர்கள். நம் மீது படர்ந்துள்ள இதை துயரமானது, மனிதகுல முன்னேற்றம் கண்டு பீதி அடைந்துள்ள ஒரு சிலரின் வஞ்சகம், வெறுப்புணர்வின் வெளிப்பாடே அன்றி வேறில்லை! அவர்களின் இந்த வெறுப்புணர்வு அழியும், சர்வாதிகாரிகள் செத்து மடிவார்கள்! மக்களிடம் இருந்து அவர்கள் பறித்துக்கொண்ட அதிகாரம் மீண்டும் மக்களிடமே மலரும்! சர்வாதிகாரிகள்தான் அழிவார்கள், சுதந்திரம் என்றும் அழிவதில்லை!

"ஜனநாயகத்தின் பெயரால் நாம் அதிகாரத்தைப் பயன்படுத்துவோம்! ஒன்று படுவோம்! புது உலகம் படைக்க போராடுவோம்! வேலைக்கு உத்தரவாதமும், வளமான எதிர்காலமும், பாதுகாப்பான முதுமையும் தரக்கூடிய நாகரீக உலகத்தைப் படைப்போம்! சதிகாரர்களும் இதையே சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார்கள், அத்தனையும் பொய்! அவர்கள் அப்படித்தான்! அவர்கள் தங்களுக்கான சுதந்திரத்தை தேடிக்கொண்டார்கள். மக்களை அடிமைப்படுத்தினார்கள். நாம் உலக விடுதலைக்குப் போராடுவோம்! தேச வேற்றுமைகளை உடைப்போம்! பொறாமை, வஞ்சகம், சகிப்பின்மை ஆகியவற்றை ஒழிப்போம்! விஞ்ஞானமும் வளர்ச்சியும் மனித சமூகத்தின் வளர்ச்சிக்காகவே என்ற உலகத்துக்காக நாம் போராடுவோம்! ஹன்னா, நான் பேசுவது கேட்கின்றதா?...." சாப்ளினின் அன்னை பெயர் ஹன்னா என்பது குறிப்பிடத்தக்கது.

... ..... ....

இப்படத்தை 1990க்கு முன் ப்ளூ டைமண்ட் தொடர் காட்சி அரங்கில் இரண்டு காட்சிகள் பார்க்கும் பெரும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது அந்த திரையரங்கு இல்லை. இடிக்கப்பட்டு விட்டது. தவிர, இதை நான் எழுதியது 2005ஆம் ஆண்டு. 9 வருடங்களுக்குப் பின்னர் 2014ஆம் ஆண்டில் இந்திய நாஜிகள், பாசிஸ்டுக்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்று அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் ஹிட்லரின் கதி என்னவாயிற்று, முசோலினியின் கதி என்னவாயிற்று என்பதை வரலாறு நமக்கு தெளிவாக சொல்லி உள்ளது. சாப்ளினின் அந்த உரை 80 வருடங்கள் பழமையானது, ஆனால் சர்வாதிகாரிகளின் கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராகப் போராடும் அனைத்து உலக மக்களுக்கும் என்றும் புதிதாக, சுடர் விடும் ஒளியாக இருப்பது.

சார்லி சாப்ளின் நினைவு நாள் இன்று (16.4.1889-25.12.1977). 

மீள்பதிவு, வண்ணக்கதிர் 27.2.2005இல் வெளியானது, சில மாற்றங்களுடன் இங்கே.

தொ பரமசிவன்

தொ பரமசிவன் அவர்கள் (1950-24.12.2020), sbs ஆஸ்திரேலியா வானொலிக்கு அளித்த நேர்காணல்:

இந்தியாவிலேயே சாதிபெயரைப் பெயரில் போடாத ஒரு மக்கள் கூட்டம் உருவாகி இருப்பது தமிழகத்தில்தான். பெரியாருடைய புண்ணியம். பெரியார்தான் அந்த வழியைக்காட்டினார்.

சாதிப்பெயரை முழுமையாக மனிதன் விலக்குவது என்பதை காட்டியது தமிழ்நாடுதான், பெரியார்தான். அந்த விவேகம், அந்தப்பெருமையை நாம் இழந்துகொண்டு இருக்கின்றோம். தமிழகத்தில் இப்போது பெண்களும் சாதிபெயரைப் போடுகின்றனர்... உஷா ஐயர் என்பது போல். சாதி தன்னைத்தானே மறு உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறது. மார்க்சியம் பரவிய கேரளாவிலும் வங்கத்திலும் கூட சாதிய ஒட்டுக்களை போட்டுக்கொள்கின்றார்கள்.

சாதி என்பது உள்வட்டத்திருமண ஏற்பாடு. இதன் கடுமையை குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடம் பார்க்கலாம். இன்ன சாதி, இந்த ஊர் பெண், அதிலும் புங்குடு தீவு வெள்ளாளர் பெண் வேண்டும் என்ற விளம்பரத்தை... கனடாவில் பார்த்தேன். வேதனைப்பட்டேன். எங்கே போனாலும் சாதீய அழுக்கு மூட்டையை தமிழன் சுமந்துகொண்டே போகின்றான். டெல்லிப் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது என் சாதி ஒட்டை கேட்டார்கள், நீங்கள் ரெட்டியா, செட்டியா, குப்தாவா, மேனனா... நான் பரமசிவம், அவ்வளவுதான் என்று சொன்னேன்.

திராவிடம் என்ற சொல் பண்பாட்டு அடையாளம். தாய் மாமனுக்கு ஆன மரியாதை, பெண்களின் உடல் மீதான வன்முறையை நிராகரித்தல், இறந்து போன உடலுக்கு மரியாதை செய்தல், இந்த மூன்று அடையாளங்கள். திராவிடம் என்பது இனம், சாதி, மொழி அடையாளம் அல்ல. தாய் மாமனுக்கு மரியாதையை நான்கு தென் மாநிலங்களில் பார்க்கலாம். Cross cousin marriage. அதாவது முறைப்பெண்ணை அல்லது முறைப்பையனை திருமணம் செய்வது. இது பிராமணர் அல்லாதார் உடைய வழக்கம். பாரம்பரியமாகவே பெண்ணுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்ட சமுதாயத்தில் பெண் தனக்குரிய பங்கை தேர்ந்தெடுத்து கொள்ள கண்டுபிடிக்கப்பட்ட ஒரு உபாயம். சொத்து இல்லாமல் போய்விடக் கூடிய மகளுக்கு, அந்தக் குடும்பத்தின் சொத்தை அனுபவிக்கும் ஒரு வழியாக அதே குடும்பத்தில் உள்ள ஆணுக்கு திருமணம் செய்து வைப்பதன் மூலம், அல்லது அதே குடும்பத்தில் இருந்து ஒரு பெண்ணை எடுத்து திருமணம் செய்து கொள்வதன் மூலம் சொத்தின் பகுதியை மீண்டும் அனுபவிக்கும் வழி இது. சொத்துடைமை சார்ந்த இந்த வழக்கம் பெண்களால் உருவாக்கப்பட்டது. மாமன் மகளையோ அத்தை மகளையோ கடத்திக்கொண்டு போகலாம், அது ஒரு குற்றமாக பார்க்கப் படுவதில்லை. 

இறந்தவர்கள் மீண்டும் பிறக்கின்றார்கள், அழிவதில்லை என்ற நம்பிக்கை. தாத்தா, பாட்டிகள் மீண்டும் பிறக்கின்றார்கள், பேரன், பேத்தி வழியாக regenerate ஆகின்றார்கள். பெயரன், பெயர்த்தி என்ற சொல்லுக்கு மீண்டு வருபவர்கள் என்றுதான் பொருள். இது நம்பிக்கை சார்ந்தது, optimism. இறந்தவர்களின் உடலுக்கு செய்கின்ற மரியாதை எல்லாம் அவர்களின் பயணத்துக்கு வழியனுப்புதல்தான். வாயிலே அரிசி போடுதல், நெற்றியில் காசு வைத்தல்... பெரும் வயதானவர்கள் எனில், கிழவி எனில், அவள் கையில் வெற்றிலையையும் கதலிப் பழத்தையும் வைத்து, அந்தக் கூட்டத்தில் குழந்தை பெறாத பெண் யாராவது இருந்தால் அவளை அழைத்து, அந்த வெற்றிலையையும் கதலிப் பழத்தையும் அவள் முந்திச்சேலையில் போடுவார்கள். அதாவது நான் உனக்கு குழந்தையாக வந்து பிறப்பேன் என்று கிழவி சொல்வதாக நம்பிக்கை. ஆக இறப்பு என்பது, குறிப்பாக வயது முதிர்ந்தோரின் இறப்பு என்பது துயர சடங்காக இல்லாமல், மகிழ்ச்சிக்கு உரிய ஒன்றாக இருக்கும். வழியனுப்பும் சடங்கு, வேறொரு உலகத்திற்கு போகின்றார்கள், திரும்பவும் வருவார்கள் என்ற நம்பிக்கை.

நடுகல். 16ஆம் நாள் கருமாதி என்பதற்கு பெயரே கல் என்பதுதான். நாட்டார் வழக்கு. மூன்று கல்களை வைத்து செய்வது. அந்த வழக்கத்தை புலிகள் எடுத்து வணக்கத்துக்குரியதாக செய்தார்கள். மாவீரர் துயிலும் இடம் என்று... 

கேள்வி: கோவில்களிலும் சமூகத்திலும் நடக்கும் சடங்குகளை பெரியார் பலமாக எதிர்த்தார், அவரைப் போற்றும் நீங்கள் சடங்குகளை ஏற்றுக்கொள்கின்றீர்களே?

தொ. ப.:  பெரியார் காலத்து சமூகவியல் அறிவு அந்த அளவுக்கே இருந்தது. இன்றைக்கு பெரிதாக வளர்ந்துள்ளது. ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை விடமாட்டோம் என்றால் பெரியார் மூர்க்கமாக எதிர்த்து இருப்பார். Menstrual taboo என்றால் என்ன என்ற புரிதல் வேண்டும்.

மக்கள் சமூகத்தின் எல்லா அசைவுகளையும் கவனியுங்கள்.Lore எனப்படும் வழக்காறுகளை, பழமொழிகளை, கெட்ட வார்த்தைகளை எல்லாவற்றையும் ஆய்வு செய்யுங்கள். கோவிலில் ஆட்டை பலியிட்டு, அதன் காலை அதன் வாயில் வைத்து பீடத்தில் வைப்பார்கள். எல்லாமும் ஆய்வுக்கு உட்பட்டவையே, விலக்கு என்று எதுவும் இல்லை. Anything under the Sun. தேடுங்கள், என், எதற்கு?

..... ...

சிகிச்சைக்கு பின் என் வலது காலை அகற்றி விட்டார்கள். ... ஒன்றுமில்லை, நூலகத்தில் நின்றுகொண்டே புத்தகங்களை தேட முடியவில்லை என்ற ஒரே துயரம்தான். இரண்டு அடி கூட நடக்க முடியவில்லை அல்லவா?

... .... ......

இணைப்பை அனுப்பி வைத்த தோழர் எஸ் வி ஆர் அவர்களுக்கு நன்றி!  

www.sbs.com.au/language/tamil/audio/question-everything-advice-to-youngsters

ச சுப்பாராவ்

ச சுப்பாராவ்!

மங்கலநாதர் என்ற கந்தர்வனின் கதை. புகழ்பெற்ற கதைகள் வரிசையில் செம்மலர் வெளியிட்டது. தன் பெண்களுக்கு மிக ஆர்ப்பாட்டமாக ஊரை வளைத்துப்போட்டு கல்யாணம் செய்து வைப்பவர், நொடித்த நிலையில் கடைசிப்பெண்ணுக்கு எப்படி தன் மனசை சமாதானம் செய்து கொண்டு படு சிக்கனமாக கல்யாணம் செய்து வைக்கின்றார் என்பது பற்றிய கதை. கடவுள் பக்தியை மிக மெல்லிய தொனியில் கேலி செய்யும் கதை. இதுவரை எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட மங்கலநாதர் இதையும் ஏற்றுக்கொள்வார் என்று சமாதானம் செய்து கொள்கின்றார், தன் ஏழ்மை நிலையை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை, ஆனால் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள கடவுளை சாக்காக அழைக்கும் மனநிலை, பக்தியில் இருந்து வெளியே வர முடியாமல் மருகும் மனநிலை என பல நுட்பங்களை இக்கதையில் ஒளித்து வைத்திருப்பார்.

வண்ணக்கதிரில் சுப்பாராவின் கடவுளின் மொழியை வாசித்துவிட்டு அதே போன்று என்ன நுட்பம் என வியப்படைந்தேன். அ குமரேசன் அவர்களிடம் தொலைபேசி எண் வாங்கி மதுரையில் இருந்த சுப்பாராவ் அவர்களிடம் பேசினேன். மென்மையான குரலில் பேசி மகிழ்ச்சியை தெரிவித்தார். 

பிராமண குடும்பத்துப்பெண், கம்ப்யூட்டர் வகுப்புக்கு போன இடத்தில், வேற்று சாதியினன் ஆன அவனை காதலிக்கின்றாள், பிடிவாதமாக இருந்ததால் திருமணம் செய்து வைக்கின்றனர். பின்னொரு நாளில் தென்காசியில் நடக்கும் குலதெய்வ பூஜையில் எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களையும் நிறைவு செய்த பின்னும் பொங்கல் பொங்காமல் எல்லோரையும் மிரட்டி விடுகின்றது. குழந்தைகள் உட்பட எல்லோரும் பட்டினி. காரணம் என்ன? அவன் இல்லாத குறையோ? அவன் இந்தக் குடும்பத்தில் ஒருவன் இல்லையா? அதுதான் தோஷமாகி விட்டதா? அவள் அவனை அழைக்கின்றாள், அவன் குளித்து சகல பக்தி லட்சணங்களுடன் வந்து அவளுடன் சேர்ந்து 'சாமீ! ரொம்ப வருஷம் கழிச்சு நடக்கிற பூஜை, யார் என்ன தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிக்கணும், பெரியவங்க கொழந்தைங்க எல்லாம் காலைலேர்ந்து பட்டினி. நீதா மனசு வச்சு காப்பாத்தனும்' என்று சத்தமாக சொல்லி பொங்கல் பானையை நமஸ்கரிக்க பால் பொங்கி வழிகின்றது. பின் என்ன, எல்லோரும் நிம்மதி அடைந்து சாப்பிட உட்கார்ந்தார்கள் என்பதை சொல்ல வேண்டுமா? நுட்பமான கதை!

மதுரைக்கு சென்று எல் ஐ சி  அலுவலகத்தில் அவரை சந்தித்தேன். கதைகளை பற்றி கொஞ்சமும் பொதுத்துறை தனியார்மயம், எல் ஐ சி இந்திய பட்ஜெட்டுக்கு தரும் பெரும் பங்கு, கிண்டில்  என  பலவும் பேசினோம், கீழே வந்து நல்ல காப்பி அருந்தினோம். விடைபெற்று, பின்னால் இருந்த திருமலை நாயக்கர் மஹாலில் இரண்டு மணி நேரம் சுற்றினேன், வெளியே வந்து திருமங்கலத்துக்கு பேருந்து பிடிக்க நின்றபோது அவர் தன் நண்பர்களுடன் காப்பி அருந்திக்கொண்டு இருந்தார். வந்த ஒன்றிரண்டு பேருந்துகளை விட்டுவிட்டு அவரையே பார்த்துக்கொண்டு நின்றேன்.

அவருடைய கதைகள் தாத்தாவின் டைரிக்குறிப்பு என்று தொகுப்பாக வந்தபோது தன்னுரையில் என்னையும் அவர் குறிப்பிட்டு இருந்ததையே பல வருடங்களுக்கு பிறகுதான் கண்டறிந்தேன்! வடகிழக்கு மாநில மக்களின் கதைகளை தமிழுக்கு கொடுத்தார். லைபாக்லை ஆன்ட்டி என்று தொகுப்பு. 2014இல் ஷில்லாங், சிரபுஞ்சிக்கு குடும்பத்துடன் சென்று இருந்தேன். எளிமையும் அமைதியும் ஆன ஊரும் மக்களும். லைபாக்லை வாசிக்கும்போது நினைவுக்கு வந்தார்கள். விரைவில் அது குறித்து எழுதுவேன். அவர் மொழியாக்கத்தில் நமக்கு உலகப்பெரும் இலக்கியங்கள் கிடைத்துள்ளன.


அன்பான வாழ்த்துக்கள் தோழர் சுப்பாராவ்! இங்கே புகைப்படத்தில் ஷில்லாங்கின் சிறிய சந்தை. அவர்களுக்கு அதுதான் பெரிய பஜார்! மனசுதானே தீர்மானிக்கின்றது, தென்காசி சாமியும் சாமியின் மக்களும் போல!

டெல்லி விவசாயிகள் போராட்டமும் அணிதிரட்டப்பட்ட தொழிலாளர் இயக்கமும்: தொழிலாளர் சட்டங்கள் அழிக்கப்படும் பின்னணியில்

2016ஆம் ஆண்டில் இந்திய தொழிலாளிவர்க்க வரலாற்றில் நடந்த  இரண்டு போராட்டங்கள் மிக முக்கியமானவை. இரண்டும் வெவ்வேறு தளங்களில் நடந்தவை, இரண்டுமே அணி திரட்டப்படாத தொழிலாளர்களால் நடத்தப்பட்டவை, இரண்டுமே தன்னெழுச்சியாக நடந்தவை, இரண்டுமே ஊடகங்களால் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப் பட்டவை, இரண்டில் ஒன்று பெருமுதலாளியான டாடா குழுமத்துக்கு சொந்தமான நிறுவனத்தில் நடந்தது, இரண்டுமே மோடி ஆட்சியில் நடந்தவை.

2016 பிப்ரவரி 10 அன்று மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஒரு ஆணை வெளியிட்டது. ஒரு தொழிலாளி தனது பிராவிடெண்ட் நிதி சேமிப்பில் இருந்து தன் பங்காக தான் செலுத்திய சேமிப்பை மட்டுமே தன் பணிக்காலத்தில் அவசர தேவைக்காக எடுத்துக்கொள்ள முடியும், நிர்வாகம் அதாவது முதலாளி அளித்த பங்கை 58 வயது முடிந்த பின்னரே மீட்டுக்கொள்ள முடியும். சரியாக சொன்னால் தொழிலாளி செலுத்தும் 12 %இல் 3.67% மட்டுமே வைப்புநிதிக்கு போகும், மீதி 8.33% ஓய்வூதிய நிதியில்தான் சேரும். எனவே தன் அவசர தேவைக்கு 3.67 மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு முன் மிக மோசடியான ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது, அதாவது தொழிலாளி தன் தேவைக்காக தன் சேமிப்பில் இருந்து எடுக்கும் பணத்துக்கு வருமான வரி விதிப்பது! மிக பலத்த கண்டனங்களுக்குப் பிறகு அந்த திட்டத்தை மத்திய தொழிலாளர் 'நல' அரசு கைவிட்டது.

அணி திரட்டப்படாத அல்லது தொழிற்சங்கங்களில் இணைய முடியாத அல்லது தொழிற்சங்கங்களால் திரட்டப்பட்ட முடியாத பல லட்சம் அல்லது சில கோடி தொழிலாளர்கள் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலில்தான் இருக்கின்றனர். அதிலும் 85%க்கு மேல் இதில் பெண் தொழிலாளர்கள். முக்கியமாக பட்டியல் சாதி மக்கள், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள், இஸ்லாமிய மக்கள் ஆகியோர் இதில் பெரும்பாலான தொழிலாளர்கள்.    இத்தொழிலில் நடக்கும் மிகப் பெரும் சுரண்டல், பெண்கள் மீதான வன்முறை ஆகியவற்றை தனியே எழுத வேண்டும். மிக எளிதில் ஒரு தொழிலாளியை வேலையில் இருந்து நீக்கி விடவும் ஆவணங்களில் அத்தொழிலாளியின் பெயர் இல்லாமல் செய்துவிட முடியும் என்பதாலும் இத்தொழிலில் தொழிற்சங்கம் தொடங்க முனைவதும் ஒரு தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இணைவதும் பெரும் சவால்தான்.  மத்திய அரசின் 58 வயது அறிவிப்பு இத்தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஆவேசத்தையும் கொந்தளிப்பையும் பற்ற வைத்தது. விளைவு, எந்த ஒரு கட்சியும் சங்கமும் அறைகூவல் விடுக்காமலேயே 2016 ஏப்ரல் 18 அன்று பெங்களூரில் ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்கள் ஒரு லட்சத்துக்கும் மேல் தன்னெழுச்சியாக வீதிகளில், நெடுஞ்சாலைகளில் திரண்டனர். ஆண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் அதே போன்ற தன்னெழுச்சியான போராட்டம் நடந்தது. இப்போராட்டங்களை ஒடுக்க போலீஸ், சமூக விரோதிகளை ஏவி விட்டதில் பி ஜெ பி, காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகியவை ஒற்றுமையாக இருந்தன. இணையத்தில் இப்போராட்டம் குறித்த செய்திகள் விரிவாக உள்ளன. போராட்டத்தின் இரண்டாவது நாள், தன் அரசாணையை சத்தமின்றி மத்திய அரசு திரும்ப பெற்றுக்கொண்டது.

அதே போன்று உழைக்கும் பெண்கள் மிகப்பெரிய அளவில் தன்னெழுச்சியாக திரண்ட மற்றொரு போராட்டம், 2015 செப்டம்பர் மாதம் கேரளாவில் மூணாறில் நடந்தது. தேவிகுளம் தாலுகாவில் டாடாவுக்கு சொந்தமான 136600 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்ணன் தேவன் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், முக்கியமாக பெண்கள், முன்னின்று நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம். இத்தொழிலாளர்கள் அநேகமாக அனைவரும் தமிழர்களே. இப்போராட்டம் நடந்த பின்னர் நான் மூணாறில் ஐந்து நாட்கள் தங்க நேரிட்டது. மூணாறு முழுவதுமே டாடாவுக்கு சொந்தம் என்பது பொய் அல்ல என்பதை நேரில் கண்டேன். மே 2011இல் செய்து கொண்ட ஊதிய ஒப்பந்தம் டிசம்பர் 31, 2014 உடன் முடிவுற்றது. அதன் பின்னர் புதிய ஊதிய ஒப்பந்தம் காண்பது தொடர்பாக எழுந்ததுதான் 2015 போராட்டம். படிப்படியாக பிரச்சனை தீவிரமாக, 2015 செப்டம்பர் 5 அன்று கண்ணன் தேவன் அலுவலகம் முன்பு சுமார் 50 பெண்கள்தான் திரண்டு நின்று வேலை நிறுத்தத்தை அறிவித்தார்கள். சற்று நேரத்தில் செய்தி பரவி மூணாறு மலையகம் எங்கிலும் உள்ள பெண் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள். கேரளாவின் கம்யூனிஸ்ட் எதிர்ப்பில் ஊறிய சில பத்திரிகைகளும், டிவி சானல்களும் மூன்று நாட்களுக்கு பிறகுதான் இது பற்றியே செய்திகளை வெளியிட்டன. எப்படி? தொழிற்சங்க இயக்கத்தை தொழிலாளர்கள் கைவிட்டு விட்டார்கள் என்று ஒரு புறம், போராட்டங்கள் கேரளாவின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை என்று மறு புறமும். உண்மையில், மூணாறு தோட்டத்தொழிலாளர் பிரச்சனையில் தொடக்கம் முதலே சி ஐ டி யூ தலையிட்டு வந்தது, எர்ணாகுளத்திலும் திருவனந்தபுரத்திலும் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கும் போராட்ட களத்திற்கும் சி ஐ டியூ தலைவர்கள் நேரில் சென்றார்கள். மார்க்சிஸ்ட் தலைவர் வி எஸ் அச்சுதானந்தன் போராட்டம் முடியும்வரை தொழிலாளர்களுடன் இருந்தார். கண்ணன் தேவன் விற்பனைக்கூடத்துக்கு சென்று அங்கிருந்த தொழிலாளிகளிடம் நான் பேசினேன், இப்போராட்டம் மதிப்புக்குரிய ஊதிய உயர்வை அடையக் காரணமாக இருந்தது என்ற பெருமிதம் அவர்கள் மனதில் உள்ளதை நான் புரிந்துகொண்டேன். 

உண்மை என்ன? பவுதீக விதி என்ன? நீண்டகால காரணங்கள் உள்நெருப்பாக இல்லாமல் எந்த ஒரு போராட்டமும் குறிப்பாக வேலைநிறுத்தம் போன்ற பெரும் போராட்டங்கள் திடீரென வெடிப்பது இல்லை. முதலாளிகள் +அரசாங்கம் என்ற கூட்டணி, திட்டமிட்டு தொழிலாளிகளை சுரண்டுவது, நியாயமான பணி சூழலை மறுப்பது, தொழிலாளர் நலசட்டங்களை அலட்சியம் செய்வது அல்லது தொழிலாளர் நலன்களில் தில்லுமுல்லு செய்வது என்பது , உண்மையில் தொழிலாளர்களை சோர்வடைய செய்யும் தந்திரம் என்பதுடன், அவர்களை தொழிற்சங்கத்தின் பக்கம் திரும்பாவிடாமல் செய்யும் கொடூர உத்தியும் ஆகும். சமீப வருடங்களில் இது போன்ற அணிதிரட்டப்படாத லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீதிகளில் திரண்டு போராடிய வரலாறு இல்லை. பெருமுதலாளிகளின் ஊடகங்கள் இந்த இரண்டு போராட்டங்களையும் இருட்டடிப்பு செய்தன.

... .... .....

மோடி அரசு, இந்த செப்டம்பர் மாதம், 44 தொழிலாளர் நல சட்டங்களை நாசமாக்கி அவற்றை 4 வழிகாட்டு நெறிகள் என்று சுருக்கி அவற்றின் உயிரை கொன்றது. 150 வருடங்களுக்கு முன் நம் முன்னோர்கள் காலம் தொட்டு இன்றுவரை தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் போராடியும் உயிரத்தியாகம் செய்தும் வென்றெடுத்த பல சட்டங்களை, கொரோனா காலத்தை சாக்காக வைத்து மத்திய அரசு நீக்குகிறது, அழிக்கின்றது. International Labour Organizationஇல் ஒப்புக்கொண்டு கையெழுத்து இட்டுள்ள பல சட்டங்களை குப்பையில் போடுகின்றது, உதாரணமாக 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரம் ஆக்குகின்றது. ஆனால் மார்ச் மாதம் முதல், ஆகப்பெரிய அணிதிரட்டப்பட்ட சங்கங்களை கொண்ட மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கங்களும் சம்மேளனங்களும் கூட போராட்ட அறிவிப்புகள் அறிவிப்பதுடன் அல்லது வாயிற்கூட்டங்கள் போன்ற வடிவங்களுடன் நின்றுவிடுவதை நாம் பார்க்க முடிகின்றது. மத்திய அரசின் தொழிலாளர் வர்க்க விரோத நடவடிக்கைகளை அசைத்து வேருடன் பிடுங்கி எறிவதற்கான தீர்மானகாரமான போராட்டங்களை காணமுடியவில்லை. விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்கும் மூன்று சட்டங்களுக்கு எதிராக தன்னெழுச்சியாக திரண்டு, டெல்லி முழுவதையும் நிரப்பி மத்திய அரசை அசைத்துப்பார்க்கும் விவசாயிகள் அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்கள் அல்லர். பெங்களூர் மூணாறு தொழிலாளர்களும் அப்படியே. வீதிகளில் இறங்காமல், மக்கள் ஆதரவுடன் தொழிலாளிகளை திரட்டிப் போராடாமல் வெறும் ஆன்லைன் பேச்சுவார்த்தைகள் மூலம் கோரிக்கைகளை வென்றுவிடலாம் என்பது சாத்தியமா? நம் ஆயுதங்களை எதிரியே தீர்மானிக்கின்றான்.

....... ... ....

மூணாறு, பெங்களூர் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து புதுவிசையில் (2016 டிசம்பர்) நான் எழுதிய 'இந்தியத் தொழிற்சங்க - இடதுசாரி இயக்கங்களின் முன்னுள்ள சவால்' என்னும்   கட்டுரை தனியே உள்ளது.

நானும் தோழர் அ குமரேசனும் தீக்கதிரும்


1991ஆம் ஆண்டு the hinduவில் வெளிவந்த ஒரு சிறு செய்தியை மொழிபெயர்த்து தீக்கதிருக்கு அனுப்பி வெளியிட வேண்டியிருந்தேன். அப்போது மதுரையில் இருந்து வந்தது. இரண்டு நாட்கள் கழித்து தபாலில் தீக்கதிர் வீட்டுக்கு வந்தது. என் மொழியாக்கம் அச்சாகி இருந்தது! முதல் முதலில் என் எழுத்து அச்சில் வருகின்றது. அதுவும் தீக்கதிரில்! நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை! 

என் சிறு வயதில் தீக்கதிர் வாரப்பத்திரிக்கையாக வரும்போதே நான் வாசித்துள்ளேன், என் அண்ணன் வாங்கி வருவார். எட்டாம் வகுப்பு படித்த போது இருக்கலாம், என் அண்ணன் ஒரு நாள் 'சி ஐ டி யு கைத்தறி நெசவாளர் சங்கத்தில் ஒரு வகுப்பு இருக்குதுடா, போ' என்றார். என் வயது ஒத்த பையன்கள் சிலர் அங்கு இருந்தார்கள். தரையில் பாய் விரித்து உட்கார்ந்து இருந்தோம். எங்களுக்கு முன் ஒருவர் தரையில் அமர்ந்து உலகம், பிரபஞ்சம், உயிர்களின் தோற்றம், குரங்கு, மனிதன்... என்று பேசினார். புதுசாக இருந்தது, பாடங்களில் அதுவரை படிக்காதது. முடிந்தபோது சிலந்தியும் ஈயும் என்ற புத்தகத்தை காசு வாங்காமல் படிக்க கொடுத்தார்கள். அதுவும் புதுசாக இருந்தது. எட்டாவது படிக்கும்போது தினமணி கதிரில் ட்ரெயின் டு பாகிஸ்தான் தமிழ் மொழிபெயர்ப்பை வாசித்தேன், ரா.கி.ரங்கராஜன் என்று நினைவு. மதுரை செல்லூர் கைத்தறி பண்ணாடிமார்கள், அதாவது முதலாளிகள், நடத்திய கலைவாணர் என் எஸ் கே படிப்பகத்தில் பழியாக கிடந்து எல்லா நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என அனைத்தையும் வாசித்தேன். சிறுகதைகள், நாவல் என அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தபோது அதே சி ஐ டி யு சங்கத்தில் நானும் உறுப்பினராக சேர்ந்த நாளும் அவசியமும் வந்தது! 10 பைசா, 15 பைசா, 25 பைசா, 1 ரூபாய் என சோவியத் நூல்களின் அறிமுகமும் சேர்ந்தே வந்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இயல்பாக இணைந்தேன்.

வேலை காரணமாக சென்னை வந்தேன். வாசிப்பின் தளம் விரிந்த பின் எழுத முனைந்தேன். அலுவலகத்தில் முல்லை என்றொரு கையெழுத்து ஏட்டை நடத்தினோம், அதில் எழுதினேன். அதன் தொடர்ச்சிதான் 1991இல் தீக்கதிரில் வெளியான சிறு செய்தி. கார்பன் பேப்பர் வைத்து நகல் எடுத்து எழுதினேன், இப்போதும் நகல் என்னிடம் உள்ளது. தொடர்ந்து கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள் எழுதினேன், தீக்கதிர் முழுப்பக்கத்தில் வெளியிட்டது. மூன்றாம் நாள் எனக்கான பிரதி தபாலில் தவறாமல் வீட்டுக்கு வரும். 1991 டிசம்பர் மாதம் மதுரை தீக்கதிர் அலுவலகம் சென்று தோழர் கே.முத்தையா அவர்களை சந்திக்க விரும்பினேன், சென்றேன், தோழர்களிடம் அறிமுகம் செய்துகொண்ட பின் என்னை கே.எம்.மிடம் அழைத்து சென்றார்கள். மனசில் படபடப்பு. மூத்த தோழர், எப்படி பேசுவாரோ என்ற தயக்கம் இருந்தது. நான் நேசிக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்களை பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டு இருப்பேன், அவர்களிடம் பேசுவதற்கோ தொடர்பு வைத்துக்கொள்ளவோ முயற்சி செய்ய மாட்டேன், எதனாலோ, இன்று வரை அப்படியே. தோழர் கே.எம். வாய் நிறைய சிரிப்புடன் உற்சாகமாக என் கையைப் பிடித்துக்கொண்டு 'நல்லா எழுதுறீங்க, தொடர்ந்து எழுதுங்க' என்று வாழ்த்தினார். என் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை!

1993 அல்லது 94, தீக்கதிர் சென்னைப்பதிப்பு தொடங்கியது. தோழர்கள் சு பொ அகத்தியலிங்கம், அ குமரேசன் ஆகியோர் சென்னைக்கு வந்தார்கள். ஆவடியில் த மு எ ச கிளையை நானும் தோழர் ஜெயராமனும் முனைந்து தொடங்கினோம். முதல் கிளை மாநாடு முடிந்தது, மாவட்ட மாநாட்டில் வட சென்னை, தென் சென்னை என இரண்டாக பிரிக்கப்பட்டது. ஒன்றாக இருந்த மாவட்டத்தில் தலைவர், செயலாளர் பொறுப்புகளில் இ.மு.வெற்றிவளவனும் பிரளயனும் இருந்தார்கள். வைகறைப்பூக்கள் என்ற படத்தை வெற்றிவளவன் இயக்கினார், ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜெயா டிவியில் (?) ஒளிபரப்பினார்கள். வட சென்னையில் நா.வே.அருள், பா ராமச்சந்திரன், கு பா தேவராஜன், அபுதாகீர், காரு ராஜேந்திரன், ச உமாகாந்தன், மணிமொழி, தயாளன், பாலு சத்யா போன்ற மதிப்புமிக்க எழுத்தாளர் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற பெரும் வாய்ப்பு கிடைத்தது. அறிமுகம் ஆன ஒரு வருடத்திலேயே லட்சுமணன் என்ற அருமையான இளம் வயது படைப்பாளி அகால மரணம் அடைந்தது மறக்க முடியாது.

தீக்கதிர் சென்னைக்கு வந்த பின் த மு எ ச இயக்க வேலைகளுடன் தோழர் அ கு அறிமுகம் ஆனார். அப்போது ஹாஷ்மியும் அருணும் சிறு பிள்ளைகள். வண்ணக்கதிரிலும் இலக்கியச்சோலையிலும் எழுத தொடங்கினேன். வண்ணக்கதிர் பொறுப்பு அ கு. விடமும் இலக்கியச்சோலை பொறுப்பு தோழர் மயிலை பாலுவிடமும் இருந்தன. என் எழுத்து வளம் பெற்று உரம் பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் அ கு என்பது மிகை அல்ல. எப்படி? ஒரு பதிவு வெளியான உடன் நன்றி தெரிவிப்பேன், அவர் 'உங்கள் நன்றியை இன்னொரு கட்டுரையாக கொடுங்கள்' என்பார், எழுதுவேன், வெளியிடுவார். புதன்கிழமை அடுத்த வண்ணக்கதிருக்கான வேலைகளை முடிப்பார், அதன் பொருட்டு பல நேரங்களில் தீக்கதிர் அலுவலகத்திலேயே இரவு தங்கி விடுவார் என்பதை நான் அறிவேன். வீட்டில் இருந்து இட்டிலியும் எள்ளு எண்ணெய்ப்பொடியும் கொண்டு வந்து விடுவார், இரவு உணவுக்கு. அதை நானும் பகிர்ந்து உண்ட கதை பின்னால். அதன் பின் பெண்ணே நீ, சமரசம் ஆகியவற்றில் எழுதினேன், மயிலை பாலு அவர்களின் அறிமுகத்தால் மாப்பிளா கிளர்ச்சி, மாவோ தொகுதிகள் 2, ஸ்டாலின் தொகுதி 1 ஆகியவற்றை அலைகளுக்காக மொழிபெயர்த்தேன். மாப்பிளா மொழியாக்கம் வந்த பின் மக்கள் டிவியில் கஜேந்திரன் என்னை நேர்காணல் செய்தார். எல்லாவற்றுக்கும் வேராக இருந்தது தீக்கதிரும் வண்ணக்கதிரும்.

வரிக்கு வரி, சொல்லுக்கு சொல் திருத்துவது, பொருளையே மாற்றுவது என்பதெல்லாம் அவர் அறியாதது. ஒரு கட்சி நடத்தும் பத்திரிகை, வரிசையாக ஆசிரியர் குழு உட்கார்ந்து லென்ஸ் வைத்து வாசித்து ஆய்வு செய்த பின்னரே வெளியிடுவார்கள் என்று பலர் நினைக்கக் கூடும். உண்மை அல்ல. இதுவரையிலும் நான் எழுதிய கட்டுரைகள், மொழியாக்கங்கள் ஒரு சிறு மாற்றமும் இன்றியே தீக்கதிரிலும் வண்ணக்கதிரிலும் வெளி வந்துள்ளன! எத்தனை என்று கணக்கில்லை. சில என் பெயரிலும் பல புனை பெயரிலும். 

தொடர்ந்து ஆவடியில் த மு எ சவின் பல நிகழ்ச்சிகளில் அ கு கலந்துகொண்டு எங்களை பெருமைப்படுத்தினார். பெயருக்கு வந்து போனதில்லை, நிகழ்வுக்கான முழு தயாரிப்புடனும் குறிப்புகளுடனும் அவர் வருவார், உரையாற்றுவார். செவ்வாய்ப்பேட்டை திரூரில்தான் அவர் வீடு. சு பொ.வின் வீடும் அங்குதான். இது எங்களுக்கும் அவருக்கும் பெரிய வசதியாக இருந்தது, ஆவடியில் இருந்து அரை மணி நேர ரயில் பயணமே. அவர் வீட்டுக்கு இரண்டு முறை சென்றுள்ளேன். அவருடைய தந்தை, அன்புக்குரிய மனைவி ஆகியோரின் அன்புக்கு பாத்திரன் ஆனேன்.

சு பொ அவர்களின் விடுதலைத்தழும்புகள் நூலுக்கு தமிழக அரசின் விருது அளிக்கப்பட்டது, ஆவடி த மு எ ச பாராட்டு விழா நடத்தினோம் என்பதையும் சொல்ல வேண்டும். சு பொ.வும் அ கு. வும் பிரிக்கப்பட முடியாதவர்கள், தீக்கதிரும் வண்ணக்கதிரும் போல. அருணாசலம் சங்கர ஆறுமுக குமரேசன் என்ற பெயரின் ஆங்கில முதல் எழுத்துக்களின் சுருக்கமே அசாக் என்ற பெயரின் ரகசியம் என்பதை சு பொ ரகசியமாக கொற்றலை நிகழ்வில் சொல்லியிருக்கிறார்.

அவர் ஒரு முழுமையான இயக்கவாதி. அவருடன் விவாதிக்கலாம், கருத்து உடன் படலாம், மாறு படலாம். எல்லாவற்றையும் நட்பின் அடிப்படையில் பண்புடன் அணுகுவார். தீக்கதிர் முதல் பக்கத்தில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அரசு விளம்பரம் வெளியானது. பல தோழர்கள் அது சரி அல்ல என விமர்சனம் செய்திருக்கிறார்கள். நான் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு கடுமையான சொற்களால் விமர்சித்தேன். பின்னர், அப்படி பேசியிருக்க கூடாதோ என்று வருந்தி, அவர் என்ன மாதிரி எடுத்துக்கொண்டாரோ என்று வருத்தமுற்றேன். ஆனால் பின்னொரு நாள் அவரிடம் பேசியபோது அப்படி ஒரு உரையாடல் நடந்ததாகவே அவர் காட்டிக்கொள்ளவில்லை.

தீக்கதிர் அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட வேலையின் பொருட்டு 15 நாட்கள் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது சிந்தாதிரிப்பேட்டை வெங்கடேச கிராமணியார் தெருவில் இயங்கி வந்தது. அ கு, சு பொ, மயிலை பாலு ஆகியோருடனும்  பிற தோழர்களுடனும் நெருங்கி இருக்க வேண்டிய அற்புதமான காலமாக அமைந்தது. பத்திரிகையின் உருவாக்கத்தை நேரில் கண்டு உணர முடிந்தது. இரவு வீடு திரும்ப ஒன்றரை மணி நேர ரயில் பயணம் அவசியமானதாக இருந்தது, அந்த ஒன்றரை மணி நேரமும் ரயிலில் அ கு. வுடன் பயணித்து பலப்பல விடயங்களை பகிர்ந்து கொள்ளவும் தெரிந்துகொள்ளவும் முடிந்தது. கட்சியின் முழு நேர ஊழியர் ஒருவரின் பொருளாதார நிலையை நெருங்கிப் பார்ப்பவர்கள் அறிவார்கள். அது பற்றிய சலிப்போ வருத்தமோ ஒரு நாளும் நான் அவரிடம் கண்டதில்லை.

அவருடைய அறிமுகம்தான் வின் டிவியில் 16 வாரங்கள் நானும் 'கவிதை' வாசிக்க காரணமாக அமைந்தது. உலக நடப்பு என்ன? பிறருக்கு கிடைக்கும் டிவி வாய்ப்பு கண்டு பொறாமைப் படுவது அல்லது அதை எப்படியாவது கெடுப்பது. அ கு என்ன செய்தார்? ஆறு பேர் கொண்ட கவிஞர் குழுவை உருவாக்கினார். புத்தாண்டு, பொங்கல், காலம், நகரம், கயிறு, கொடி என பல தலைப்புகளில் நாங்கள் கவிதை வாசித்தோம். நா வே அருள், கும்மிடிப்பூண்டி சுரேஷ், சி எம் குமார், பாலு சத்யா, மு முருகேஷ், ஜீவி, கவிஞர் சினேகன் ஆகியோருடன் என் முகமும் உலகெங்கும் அறிமுகம் ஆனது. காரணம் அ கு. இதனால் கவிதை உலகுக்கு கிடைத்த பெரும் பயன் என்னவெனில், இவர்கள் எழுதுவதுதான் கவிதை என்று நான் உணர்ந்த பின், நான் கவிதை எழுதுவதை நிறுத்தினேன். ஆனாலும் அவ்வப்போது எழுதுவதை அங்கீகரித்து வண்ணக்கதிரில் வெளியிடும் பெருந்தன்மை அ கு.வுக்கே உரியது! டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து முகநூலில் நான் எழுதியதை கவிதை என அங்கீகரித்து  கலப்பைப்புரட்சிக்காக வெளியிட்ட பெருந்தன்மை நா வே அருளுக்கும் கி ரமேசுக்கும் நாகராஜனுக்கும் உள்ளது!

வட சென்னை த மு எ க ச, கொற்றலை நிகழ்வில் அ கு. வின் படைப்புகள் குறித்த ஆய்வை கடந்த ஞாயிறு நடத்தியுள்ளனர். யூடியூப்பில் பதிவு உள்ளது. ஆய்வுரை நிகழ்த்திய சு பொ அகத்தியலிங்கம், அ கு 35 புத்தகங்களை எழுதியுள்ளார் என்று தெரிவித்தபோது உண்மையில் வியப்புற்றேன். அவற்றில் 18 மொழிபெயர்ப்பு நூல்கள். கனமான விடயங்களை பேசுவதும் விவாதிப்பதும் எல்லோருக்கும் கை வரக்கூடும், ஆனால் சிறு குழந்தைகளுக்கு ஆன பிற மொழிக்கதைகளை 4 நூல்களாக எழுதி உள்ளார் என்பதும், வண்ணக்கதிரில் அவரே எழுதிய சிறார் கதைகளை ஒரு நூலாக வெளியிட்டுள்ளார் என்பதும் சொல்லியாக வேண்டிய ஒன்று. மதம் மக்கள் புரட்சி என்ற ஃபிடல் காஸ்ட்ரோவின் நேர்காணல் தொகுப்பு முக்கியமான ஒன்று. 2009 அலைகள் வெளியீடு.

பார்ப்பது, கேட்பது, உணர்வது, கொள்வது, கொடுப்பது, எழுதுவது என வாழ்வின் அனைத்து இயக்கங்களையும் ஒரு இயக்கவாதியின் அணுகுமுறையோடு அணுகுவதும், அவற்றையே ஒரு பத்திரிக்கையாளனின் கண்கொண்டு பார்த்து தன் இயக்கத்துக்கான பிரச்சார ஏட்டில் தகுந்தவாறு ரசனையுடன் எழுதி பதிவாக்குவதும், தோழர் அ குமரேசன், உங்களால் மட்டுமே முடியும்! சு பொ சொன்னதுபோல, தீக்கதிரும் வண்ணக்கதிருமே உங்கள் மூச்சாக அப்போதும் ஓய்வு பெற்ற பின் இப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள்! என் மகள் எப்படி இருக்காங்க என்று எப்போதும் என் மனைவியை நலம் விசாரிப்பீர்கள்! நீங்கள் என் எழுத்துக்கு வழிகாட்டியாய் இருக்கின்றீர்கள்! நீங்கள் எழுதுங்கள், தொடர்ந்து எழுதுங்கள்!

ஞாயிறு, டிசம்பர் 13, 2020

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்-1


தேசிய குற்றப்பதிவு அமைப்பு (National Crime Records Bureau) புள்ளிவிவரப்படி 2011ஆம் ஆண்டில் மட்டும் 14027 விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்துள்ளார்கள். 1995ஆம் ஆண்டு தொடங்கி 2011 வரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 270940. இதில் உச்சத்தில் நிறபது மஹாராஷ்ட்ரா மாநிலம். இக்காலகட்ட்த்தில் இங்கு மட்டும் உயிரை மாய்த்துக்கொண்டோர் 53818.  2011இல் மஹாராஷ்ட்ராவில் தற்கொலை செய்துகொண்டவர்கள் 3337. அதிகபட்சமாக இம்மாநிலத்தில் 2006இல் 4453 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்.  உண்மையான எண்ணிக்கை இதைவிடவும் அதிகமாகவே இருக்கும், ஏனெனில் அரசும் தனியார் பெருமுதலாளிகளின் விதைக்கம்பெனிகளும் ஒன்றுசேர்ந்து பெரும் செலவு செய்து தற்கொலை எண்ணிக்கையை ஊடகங்களில் குறைத்துக்காட்ட பெரும் பிரயத்தனம் செய்வது தொடர்கின்றது.
ஒரு புறம் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வர, தற்கொலை எண்ணிக்கையோ மறுபுறம் அதிகரித்துக்கொண்டே வருவது விசித்திரமாக உள்ளது.  குறிப்பாக மஹாராஷ்ட்ராவில் கிராமங்கள் அழிக்கப்பட்டு நகரமயமாதல் அசுரத்தனமான வேகத்தில் நடக்கும்போதும் தற்கொலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு, விவசாய சமூகத்தின் மீது அரசும் இந்த சமூகமும் தொடர்ந்து கொடுத்துவரும் அழுத்தமும் மன உளைச்சலுமே காரணமாகும்.
விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையில் (1995ஆம் ஆண்டு தொடங்கி 2011 வரை) உச்சத்தில் இருக்கும் ஐந்து மாநிலங்கள் (என்ன ஒரு பெருமை!): 
மஹாராஷ்ட்ரா – 53818
ஆந்திரா – 33326
கர்நாடகா – 37153
மத்தியப்பிரதேசம்+சத்தீஷ்கர் – 42388, மொத்தம் 166685.
1995-2011 காலகட்டத்தில் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் 270940 எனில் ஆனால் மேற்கண்ட 5 மாநிலங்களில் மட்டும் இதில் 61.52% தற்கொலைகள் நடந்துள்ளன.  உண்மையில் இந்தப்புள்ளிவிவரங்கள் எல்லாம் குறைத்துக்காட்டப்பட்டவை; மேலும் பல விவசாயிகளின் தற்கொலைகள் வேறு காரணங்களைகாட்டி காவல்துறையாலும் அரசாலும் இந்தப்பட்டியலில் மறைக்கப்பட்டிருக்கும் (numbers massage) என்பது தெளிவு. விவசாயிகள் தற்கொலைகளில் முதலிடம் பெறும் மஹாராஷ்ட்ராவின் விதர்ப்பாவிற்கு பிரதமர் மன்மோஹன் சிங் கருணை கூர்ந்து விஜயம் செய்த பின்னர் அரசு அதிகாரிகள் ராஜாவை விஞ்சிய மந்திரிகளாய் தற்கொலைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து குறைத்தே காட்டி வருகின்றார்கள்.  மத்தியில் விவசாயத்துறை மந்திரியாய் இருக்கின்ற, அதே மஹாராஷ்ட்ராவை சேர்ந்தவரான சரத்பவாரோ அரசின் புள்ளி விவரங்களை (தில்லுமுல்லானவை என்றாலும்) நாடாளுமன்றத்தில் சொல்வதை தவிர்த்தே வருகின்றார். அவருக்கு இதை விட முக்கியமான வேலைகள் இருக்கின்றன – கிரிக்கெட் வாரியத்துக்கு யார் தலைவராக இருப்பது, கிரிக்கெட் வாரியத்துக்கு தான் போட்டி போடலாமா அல்லது எதிர்த்துப் போட்டியிடுபவரை எப்படி கவிழ்த்து இந்தியத்தாயை வாழ வைப்பது போன்ற தலைபோகிற விசயங்கள்.  
சரி, நீங்கள் நெடுநேரமாய் கேட்க ஆவலாய் உள்ள கேள்விக்கு பதில் இதோ: தமிழகத்தில் 2011இல் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 82. காங்கிரசின் புதிய நவதாராளவாத-உலகமயக் கொள்கைகளை அப்படியே தமிழகத்தில் அமலாக்கும், உலகப்பெருமுதலாளிகளின் உள்ளூர் ஏஜெண்டுகளான இனமானத்தளபதிக்கும் புரட்சித்தலைவிக்கும் இந்தப்புள்ளிவிவரம் சமர்ப்பணம்.
(ஹிந்து நாளிதழில் வெளிவந்த பி.சாய்நாத் அவர்களின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)
தொடரும்....2

ஞாயிறு, டிசம்பர் 06, 2020

1949, டிசம்பர் 23, அயோத்தியா

1949, டிசம்பர் 23, காலை 9 மணி. பாபர் மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்ட பின், பைசாபாத் அயோத்தியா காவல்நிலைய அதிகாரி பண்டிட் ராம்தேவ் துபே  பின்வருவோர்க்கு எதிராக, இந்திய தண்டனை சட்டம் 147 கலவரம் செய்தல், 448 அத்துமீறி பிறர் இடங்களுக்குள் நுழைதல், 295 வழிபாட்டு தலத்தை சேதப்படுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை ஒன்றை பதிவு செய்கின்றார்: அபிராம் தாஸ், ராம் சகல் தாஸ், சுதர்சன் தாஸ், உடன் பெயர் அறியப்படாத 50 முதல் 60 பேர். மு.த.அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது கீழே:

ராம்தேவ் துபே ஆகிய நான் காலை 7 மணி அளவில் ஜன்மபூமிக்கு சென்றபோது அயோத்தியா காவல் நிலையத்தின் கான்ஸ்டபிள் மாதா பிரசாத் என்னிடம் சொன்னது என்னவெனில் 50 முதல் 60 பேர் கொண்ட ஒரு கும்பல் பாபர் மசூதியின் சுற்றுசுவரின் பூட்டை உடைத்துவிட்டு மசூதிக்குள் புகுந்தனர், மேலும் சுற்றுசுவரின் மேலும் படிக்கட்டுகளின் மேலும் கூட ஏறி உள்ளே புகுந்தனர். ஸ்ரீ பகவானின் சிலை ஒன்றை அங்கே வைத்து சீதா, ராம்ஜி மற்றும் பலரின் படங்களை காவி, மஞ்சள் வண்ணங்கள் கொண்டு மசூதியின் சுவர்களில் வரைந்தனர். ஹன்ஸ்ராஜ், கான்ஸ்டபிள் எண் 70, அந்த கும்பல் நுழையும்போது அப்போது அங்கே பணியில் இருந்தார். அவர் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினாலும் அந்த கும்பல் அவரை அலட்சியம் செய்தது. அங்கே நிறுத்தப்பட்டு இருந்த மாகாண ஆயுதப்படையின்  Provisional Armed Constabulary உதவி கோரப்பட்டது. ஆனால் அக்கும்பல் ஏற்கனவே மசூதிக்குள் சென்று விட்டது. மூத்த மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து செயலில் இறங்கினார்கள். அதன் பின் 5 முதல் 6 ஆயிரம் பேர் கொண்ட கூட்டம் அங்கே திரண்டு மசூதிக்குள் நுழைய முயற்சி செய்தது, மத அடிப்படையில் ஆன கோஷங்களை எழுப்பியது, கீர்த்தனைகள் பாடியது. ஆனால் வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால் ஒன்றும் நடக்கவில்லை. அபிராம் தாஸ், சகல் தாஸ், சுதர்சன் தாஸ் ஆகியோரும், பெயர் அறியப்படாத 50 -60 பேரும் கலகம் செய்து மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து சிலையையும் அங்கே வைத்ததன் மூலம் மசூதியை களங்கப்படுத்தி உள்ளார்கள். அங்கே பணியில் இருந்த அதிகாரிகளும் பொதுமக்கள் பலரும் நடந்தவற்றை பார்த்தார்கள். நிகழ்ச்சி நடந்தது உண்மையா என ஆய்வு செய்யப்பட்டது. நடந்தது உண்மை என உறுதியானது.

Prologue, Ayodhya the dark night - the secret history of Rama's appearance in babri masjid, Krishna Jha and Dhirendra K Jha, HarperCollins.

சனி, டிசம்பர் 05, 2020

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

தேசப்பிரிவினை அவர்கள் இதயங்களைக் கிழித்து

எல்லையில் எறிந்தபோது

அது மேற்கில் விழுந்ததா

கிழக்கில் விழுந்ததா என்று

சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆய்வில் இருந்தீர்கள்


ஒரே ஒரு ரொட்டிக்காக ஒரு மனிதனும் ஒரு நாயும் கட்டிப்புரண்டபோது

அவன் சுன்னத் செய்திருந்தானா அல்லது

கிர்பான் தரையில் வீழ்ந்து கிடந்ததா என

கோப்பை கோப்பையாய் தேநீரை காலி செய்தபடியே

கோட்டையில் விவாதித்துக்கொண்டு இருந்தீர்கள்


அவர்கள்

விளைவித்த செங்கதிர்மணிகளில்

தொலைந்துபோன தம் மூதாதையரின் முகங்களைக்கண்டவர்கள்

முன்னர் சிந்திய குருதியின் செம்மை ஜொலிக்கக் கண்டவர்கள்


அவர்கள் என் பாட்டனுக்கு ரொட்டி தயாரித்தார்கள்

அவர்கள் உன் பாட்டனுக்கும் ரொட்டி தயாரித்தார்கள்

அவர்கள் என் தாய் தகப்பனுக்கு ரொட்டி தயாரித்தார்கள்

அவர்கள் உன் தாய் தகப்பனுக்கும் ரொட்டி தயாரித்தார்கள்

அவர்கள் எனக்கும் என் மனைவிக்கும் பிள்ளைக்கும்

உனக்கும் உன் மனைவி பிள்ளைக்கும்

ரொட்டி தயாரிக்கின்றார்கள்

அதே செங்கதிர்மணிகளால்


நீயோ பொய்மையால் மழுங்கிய உன் பேனா முனைதான்

தலைமுறைகளாய் கூர் ஏறிய அவர்களின் ஏர் முனையை 

இனி உய்விக்க இருப்பதாய் பசப்புகின்றாய்

உன் வெற்றுக்காகிதங்களால்

சட்டத்தோரணம் கட்டுகின்றாய்

உன் கார்பொரேட் நண்பர்களிடம்

கமிஷனுக்கு வாங்கிய துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டுகின்றாய்


நீ நினைக்கின்றாய்

அவர்கள் வெறும் கோதுமை மாவுடனும்

காய்கறிகளுடன் மட்டுமே வந்திருப்பதாக,

மறந்துவிடாதே,

சட்லெஜ் நதியின் கரையில்

இப்போதும் தகிக்கும் அவன் சாம்பலின் வெப்பத்தை 

இதயத்தில் ஏந்தியபடி

உன் வாசலில் நிற்கின்றார்கள்

உன் ஆயுதங்களை எதிர்கொள்ள.

போபால் விஷவாயுகசிவு-36 ஆண்டுகள்


1984 டிசம்பர் 2-3க்கு இடைப்பட்ட நள்ளிரவு. போபால். பல்லாயிரம் மக்கள் தூக்கத்தில் செத்து மடிந்தனர். பல லட்சம் மக்கள் உடல் நலக்குறைவால் வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றவர்கள் ஆனார்கள். பிறக்கும் குழந்தைகள் உடல், மனம் ஊனமுற்றவர்களாக பிறந்தார்கள்.

யூனியன் கார்பைட் கம்பெனியில் இருந்து வெளியே கசிந்த MIC எனப்படும் மிதைல் ஐஸோ சயனேட் எனும் வாயுவே இதற்கு காரணம். அதன் தாய் கம்பெனி அமெரிக்காவில் இருந்தது. இந்த விபத்து(?) பற்றிய செய்திகளை அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா மாகாண மக்கள் தீவிரமாக கவனித்துக் கொண்டு இருந்தார்கள். அங்குதான் யூனியன் கார்பைடின் தாய் கம்பெனி உள்ளது. அப்போது அமெரிக்காவின் முக்கியமான மூன்று செய்தி டிவிக்கள் போபால் விஷவாயு கசிவை விரிவான செய்தியாக கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். 

இங்கே carbaryl எனப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை யூனியன் கார்பைட் உற்பத்தி செய்தது. தவிர, மிக அதிக அளவில் phosgene என்ற நச்சுப்பொருளையும் கிடங்கில் வைத்து இருந்தார்கள். இப்பொருள் முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் மனிதர்களை கொல்வதற்காக பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள்.

194 டிசம்பர் 31 அன்று போபால் ஹனுமான்கஞ் போலீஸ் நிலைய அதிகாரி வழக்குப்பதிவு செய்து கம்பெனியின் ஐந்து அதிகாரிகளை கைது செய்தார்.

அவர்களில் கம்பெனியின் இந்திய தலைமை நிர்வாகி ஆன அமெரிக்கர் வாரன் ஆண்டர்சன் ஆறே மணி நேரத்தில் பெயிலில் வெளியே வந்தான். மத்யபிரதேஷ் அரசு குற்றவாளி ஆன ஆண்டர்சனை அரசு விமானத்தில் ஏற்றி டெல்லிக்கு அனுப்பியது, அவன் அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்றான், அவ்வளவுதான். மற்றவர்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகு பெயிலில் வெளியே வந்தனர். மபி அரசின் முதல்வர் அர்ஜுன் சிங், அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி இருவரும் காங்கிரஸ் கட்சியினர் என்பதை தனியே சொல்ல வேண்டியதில்லை.

அமெரிக்காவில் இருந்த தாய் கம்பெனியில் உள்ள நிர்வாகத்துக்கும் இங்கே போபாலில் இருந்த கம்பெனி நிர்வாகத்துக்கும் உள்ள அச்சமூட்டும் வேறுபாடுகள் அதன் பின் வெளியே தெரிந்தன:

அமெரிக்க கம்பெனியில்:

1. திடீர் என பெரும் வாயு கசிவு ஏற்படும் நேரத்தில் அதைக் கட்டுப்படுத்த கூடுதல் அவசரகால vent scrubber ஏற்பாடு உண்டு.

2. அங்குள்ள உற்பத்தி முறைக்கு சிறிய அளவு MIC மட்டுமே இருப்பில் இருந்தால் போதும்.

3. வாயு கசிவு கணிப்பொறி மூலம் கண்டுபிடிக்கப்படும்.

4. பாதுகாப்பு முறைமைகள் அனைத்துமே கணிப்பொறியால் தானியங்கி முறையில் இயங்கி வந்தன.

5. வாயு தொட்டியில் வாயு கசிந்தாலோ வெப்பமும் அழுத்தமும் அதிகரித்தாலோ எச்சரிக்கை மணி தானாகவே இயங்கி அடிக்கும்.

6. குளிர்விக்கும் பிரிவில் உள்ள வேதிப்பொருட்கள் 0 டிகிரி சென்டிகிரேட்டுக்கு கீழே வைக்கப்பட்டன.

7. விபத்து நேரத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி தப்பிக்க வேண்டும், என்ன மாதிரியான அவசர கால சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பயிற்சி கம்பெனி ஊழியர்கள், அந்த ஊரின் பொதுமக்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது.

இந்திய கம்பெனியில்:

1. அவசர கால vent scrubber இல்லை. எனவே வாயு மிகப்பெரும் அளவு கசிந்து நீரிலும் காற்றிலும் நிலத்திலும் மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களிலும் கலந்து அனைத்தையும் விசமாக்கியது.

2. பெரும் அளவு வாயு சேமிப்பில் இருந்தது, அதுவும் பெரிய அளவிலான தொழில்நுட்ப ரீதியாக மட்டமான தொட்டியில்.

3. கசிவு ஏற்பட்டுள்ளது என்பதை, மனிதர்கள் முகர்ந்தால் அல்லது கண் எரிச்சல் ஏற்பட்டால் மட்டுமே தெரிந்து கொள்ளலாம். அதாவது விபத்து நேர்ந்ததை சொல்ல கணிப்பொறி அமைப்போ தானியங்கி அமைப்போ இல்லை. அதுவும் அனுமதிக்கப்பட்ட அளவைப்போல் 100 மடங்கு வெளியேறினால் மட்டுமே கண்கள் எரியும்!

4. பாதுகாப்பு முறைகள் எல்லாமே மனிதர்களால் செய்யப்படும். அதாவது கணிப்பொறியோ தானியங்கி அமைப்போ இல்லை.

5. எச்சரிக்கை மணி ஒழுங்காக இயங்கவில்லை, அது இயங்குகின்றதா என்று அவ்வப்போது சோதனை செய்யவும் இல்லை.

6. வேதிப்பொருட்கள் 11 முதல் 26 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் வைக்கப்பட்டன. மேலும் குளிர்விக்கும் பிரிவு செலவு கருதி ஆறு மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.

7. அப்படியான விபத்துக்கால, ஆபத்துக்கால பயிற்சிகள் எதுவும் அளிக்கப்படவில்லை.

மேலும் விபத்து நடக்கும் முன் MIC இருந்த தொட்டி 200 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் இருந்தது. 1996இல் போபால் செய்தி-நடவடிக்கைக்குழு என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், 1969 முதல் தொழிற்சாலை வளாகத்தில் அங்கும் இங்குமாக சேர்த்தும் புதைக்கப்பட்டும் இருந்த வேதிப்பொருட்களும், புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்களும் உற்பத்தியால் வெளியாகும் கழிவு வேதிப்பொருட்களும் அந்த ஊரின் மண்வளம், நீர் வளம் அனைத்தையும் நாசம் செய்ததும், இதனால் ஊர் மக்கள் பலவிதமான நோய்களுக்கு உள்ளாகி மோசமான வாழ்க்கை வாழ்வதும் தெரிந்தது. பாதரசம், குரோமியம், செம்பு, நிக்கல், ஈயம் உள்ளிட்ட பல நச்சுப்பொருட்கள் இதில் அடங்கும்.

விபத்துக்குப்பின் பல சமூக ஆர்வலர்கள், அமைப்புகள், தன்னார்வலர்கள் விசவாயு கசிவுக்கான காரணங்களை ஆராய முற்பட்டு அங்கே சென்றபோது அரசு நிர்வாகம் அனுமதிக்க மறுத்தது. விபத்து தொடர்பான பல வழக்குகள் இன்னும் முடியவே இல்லை என்பதும் இப்போதும் பிறக்கின்ற குழந்தைகள் உடல் அல்லது மன ஊனத்துடன் பிறக்கின்றன என்பதும் இந்தியாவில் விசாரணைக்கு வராமலேயே வாரன் ஆண்டர்சன் அமெரிக்காவில் மரணம் அடைந்தான் என்பதும் எதைக் காட்டுகின்றது?