1) ’10000 வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்; நான்கு தடச்சாலை, 500 படுக்கை கொண்ட ‘உலகத்தரம்’ வாய்ந்த மருத்துவமனை, நடமாடும் ம்ருத்துவ வசதி,இளைஞர்களுக்கு 25% தள்ளுபடியுடன் கூடிய வங்கிக்கடன், மீனவர்களுக்கு மோட்டார் படகுகள், சிறு படகுத்துறைகள், குளிர்பதன மீன் பாதுகாப்பு வசதி, க்ரீன் ஹௌஸ், பல்லடுக்கு கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், பத்து லட்சம் லிட்டர் குடிநீர் வசதி, ஐந்து செண்ட்ரல் சிலபஸ் பள்ளிகள், கூடவே மாநில அரசுப்பள்ளிகள், எல்லா கிராமங்களையும் இணைக்கும் ப்ராட்பேண்ட் இணைப்பு....’ பயப்படாதீங்க சார், தேர்தல்லாம் ஒண்ணும் வரல, இவை யாவும் கூடங்கூளத்தை பார்வை இட்ட பின் அணுசக்தியின் காதலரும் வலதுசாரி இந்துதுவா அமைப்புக்களின் அபிமானத்துக்குரியவரும் ஆன அப்துல்கலாம் அரசுகு பரிந்துரைத்தவை. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் தேவை இல்லை என்று போராடிக் கொண்டிருப்பவர்களின் தர்க்கவாதங்களுக்கும் தேர்தல் கால அரசியல்வாதி போன்று இங்கே கலாம் அடுக்கிகொண்டே போகும் பல்வேறு ‘கனவு’களுக்கும் என்னய்யா தொடர்பு? கலாம் இங்கே அடுக்குகின்ற யாவும் ஒரு மக்கள் நல அரசால் எப்போதுமே எங்கேயும் செய்யப்பட வேண்டிய நலத்திட்டங்கள்தானே? கூடங்குள பிரச்னைக்கும் இந்த ‘கனவு’களுக்கும் பிரத்யேகமான தொடர்புதான் என்ன? சின்னப்புள்ளத்தனமா இருக்கு! 2) பல நீண்ட வருடங்களாக தொடரும் லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலை, சிறு தொழில்கள் அழிப்பு, சிறிய நடுத்தர தொழிற்சாலைகளில் வேலை செய்த பல கோடிப்பேர் வேலை இழப்பு (கலாம் சொல்கின்ற தங்க நாற்கர சாலைகள் எல்லாம் பன்னாட்டு முதலாளிகளின் இந்திய தொழிற்சாலைகள் தங்கள் சரக்குகளை எடுத்து செல்வதற்காக மட்டுமே இந்திய அரசால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டவை),பன்னாட்டு முதலாளிகளால் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் மறுக்கப்படும் இந்தியாவின் தொழிற்சாலை சட்டம் 1948, தொழிற்தகராறு சட்டம் 1947, தொழிற்சங்க சட்டம் 1926... இவை குறித்தெல்லாம் இது வரை ஒரு சொல் கூட உதிர்க்காமல் (கவனிக்க: இந்தியக்குடியரசுத்தலைவர் என்பவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டம், இந்தியாவின் மக்கள் நல சட்டங்களின் பாதுகாவலர் (Custodian of the Constitution), இவர்தான் அத்தகைய பதவியை அலங்கரித்தவர்) மிக கவனமாக இருக்கின்ற உலக முதலாளிகளின் சேவகன் இப்போது ஃப்ரான்ஸ், அமெரிக்க, ஐரோப்பிய முதலாளிகளின் அணு உலைகளை இந்தியாவில் விற்கும் சேல்ஸ் ரெப்ரெசெண்டிவ்-ஆக புதிய அவதாரம் எடுத்துள்ளார். 3) /அணுசக்தி என்பது மனித இனத்துக்கு கடவுள் கொடுத்த வரம், அதை ஆக்கத்துக்கு பயன்படுத்துவதும் அழிவுக்கு பயன்படுத்துவதும் நம் கையில்தான் உள்ளது/ சொன்னவர் கலாம்.... அது சரி, கலாம் சொல்கின்ற கடவுள் யார்? கையில் வீணையுடன் இருக்கின்ற சரஸ்வதியம்மாவா, அல்லது கிறித்துவர்களின் கடவுளா, முஸ்லிம்களின் அல்லாவா? 1998 போக்ரானில் சிரித்தவர் இந்த மூன்று பேரும் அல்லாத புத்தர் அல்லவா?! அது சரி, இந்திய அரசு மக்கள்பணத்தில் அணுகுண்டு வெடித்தால் அது சரஸ்வதியம்மாவின் அரசாங்கம் ஆக்க வேலைகளுக்காகவும் உலக அமைதி சமாதானம் அன்பு கருணை காதல் கருமாதி போன்ற மேலான சமாச்சாரஙளை பாதுகாப்பதற்காக வெடிப்பது, அதையே பாகிஸ்தான் அரசு பாகிஸ்தான் மக்கள் பணத்தில் வெடித்தால் அது தீவிரவாதிகள் அழிவுவேலைகளுக்காக வெடிப்பது, உடனடியாக தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியும் சமாதானமும் கெட்டு சீரழிந்து சின்னாபின்னமாகி விடும்! ... பிருத்விராஜன் சாரின் காமெடி வடிவேலையும் மிஞ்சுகின்றது! (1998 போக்ரான் குண்டுவெடிப்பு திட்டம் முடியும் வரை கலாம் தனக்கு சூட்டிக்கொண்ட ரகசிய சங்கேத பெயர்).
(மேலே உள்ள படம் செர்னோபில் அழிவு)
(மேலே உள்ள படம் செர்னோபில் அழிவு)
2 கருத்துகள்:
ஆடு வெட்டப்போவதற்கு முன் மாலை, மேளம் எல்லாம் வைத்து கூட்டிப்போவார்கள். ஆடு போல தென்தமிழக மக்களை ஆக்கப் பார்க்கிறார்கள். அணு உலை குறித்து சொல்லக்கூடிய அளவிற்கு அறிவியல் அறிவு என்னிடம் இல்லை. ஆனால், இன்று நொய்யலில் வெள்ளம் வந்ததே! அதை அறிவியலால் தடுக்க முடிந்ததா? ஆற்றின் பாதையை அறிவியலோ, அரசோ மாற்ற முடியாது. இயற்கையை நேசிப்போம். இயற்கையோடு இயைந்து வாழ்வோம். நல்ல பகிர்வு. நன்றி.
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் தோழர் ராஜா சொன்னதே சரி: ’கலாம் ஒரு அரசு அதிகாரியாக இருந்தவர்; அவர் இப்படித்தான் பேசுவார்’. அமெரிக்க நலனை மட்டுமே கருத்தி வைத்து வரையப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிகள் தமது ஆதரவை திரும்பப் பெற்றபோது அம்ர்சிங்கின் துணையோடு (பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவு பெற்று) காங்கிரஸ் அரசைக் காப்பாற்றியவர் கலாம் என்று போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார் சொல்வதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. உங்கள் கருத்துக்கு நன்றி.
கருத்துரையிடுக