தோழர் மு.இக்பால் அகமது
நேர்காணல்: பாவெல் சூரியன்
தோழர் மு. இக்பால் அகமது ஒரு இடதுசாரி
எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கும்
தமிழ் இலக்கிய ஆளுமை. ஜோசப் ஸ்டாலின், மாவோ ஆகியோரின் தேர்வு நூல்களில் சில தொகுதிகள் இவரது தமிழ் மொழிபெயர்ப்பில் அலைகள் வெளியீட்டக வெளியீடாக வந்துள்ளன. கேரளத்து விவசாயிகளின் வீரஞ்செறிந்த மாப்ளா கிளர்ச்சி பற்றி கான்ராட்
உட் எழுதிய வரலாற்று ஆய்வு நூலைத் தமிழில் தந்திருக்கிறார் (2007). ’வள்ளியப்பன் மெஸ்ஸும் மார்கரீட்டா பிஸ்ஸாவும்’ என்ற இவரது நூல் மிகவும் சிறப்பான படைப்பு. தீக்கதிர்
உள்ளிட்ட பல இடதுசாரி இதழ்களில் அரசியல், இலக்கியக் கட்டுரைகள் எழுதிவருபவர். ’பற்றியெரியும் மணிப்பூர்’ என்பது சமீபத்திய இவரது குறுநூல்,
பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திலும்,
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்
நலக்குழுவிலும் செயலாற்றுகிறவர்; பல்வேறு பொறுப்புகளில்
பங்காற்றுபவர்.
ஒரு நெசவுத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், ஒன்றிய அரசின்
பாதுகாப்பு ஆராய்ச்சி-வளர்ச்சித்துறையில் (DRDO) முதல்நிலை அலுவலராகப் பணியாற்றிச்
சமீபத்தில் ஓய்வு பெற்றவர். சேர்ந்திசைச்
செம்மல் எம்.பி.சீனிவாசன் (எம்.பி.எஸ்) பற்றி முகநூலில் விரிவாகப் பதிவிட்டிருக்கிறார். அது
எம்.பி.எஸ்சின் அரசியல் சார்ந்த இசை வாழ்வும், பணியும் என்று சொல்லத்தக்க
அளவில் அவரது அரசியல், திரையிசை, சேர்ந்திசை,
தொழிற்சங்கச் செயற்பாடுகளின்
பதிவாக இருக்கிறது. விரைவில் நூலாக வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்.
இஸ்லாமிய மாப்ளா விவசாயிகள் உயர்சாதி
நிலப்பிரபுக்களுக்கும் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கும் எதிராக நடத்திய கிளர்ச்சியைத்
திட்டமிட்டு இந்துமத எதிர்ப்பாகச் சித்தரித்தது காலனியாட்சி; நிலப்பிரபுக்களான ஜென்மிக்களுக்கு
எதிரான அந்தப் போராட்டத்தை இந்துக்களுக்கு எதிரானதாகச் சித்தரித்தன ஆரிய சமாஜம், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட வலதுசாரி
இந்துத்துவ அமைப்புகள். காலனியாட்சியும், நிலவுடைமை ஆதிக்கமும் கைகோர்த்து, விவசாயிகளின்
வீறுகொண்ட எழுச்சியை அழிப்பதற்காக
மதச்சாயம் பூசியதை கான்ராட் உட் எழுதிய நூல் தெளிவாக வரையறுக்கிறது.
மாப்ளாக்களை ஒடுக்குவதற்காக நாயர் படை என்ற பெயரில் உருவாக்கப்பட்ட மலபார் போலீஸ்தான்
கீழத்தஞ்சை விவசாயத் தொழிலாளரை வேட்டையாடியது. ஒடுக்குமுறைக்கு எதிரானவர்களை
அழிப்பதில் அவர்களுக்குத் துளியளவும் மதபேதம் இல்லை என்பதே இதன் அடிப்படை.
நாட்டின் உயரிய அமைப்பான பாதுகாப்புத்துறையும் கூட
கார்ப்பரேட்மயம் என்ற வடிவத்தில் தனியார்
வசமாகிக்கொண்டிருக்கிறது. வரலாறு, தற்கால அரசியல், சினிமா, இசை என ஒரு விரிவான அலசல் இந்த
நேர்காணலில் இடம்பெற்றிருக்கிறது. இனி அவரின் நேர்க்குரலில்…….
பொது உடைமை இயக்கத்துடனான உங்கள்
அறிமுகமும், தொடர்பும் ஏற்பட்டது எப்படி?
நாங்கள் வசதி வாய்ப்பான குடும்பமில்லை; எளிய கைத்தறி நெசவாளர் குடும்பம்தான். தென்காசியிலிருந்து
மதுரைக்குப் பிழைக்க வந்தவர்கள். ”ஊரை
விட்டு ஓடும் குடும்பங்கள் ஊர் அடங்கிய
நடுஇரவில்தான் காலி செய்துவிட்டுப்
போகிறார்கள்” என்று எஸ்.ராமகிருஷ்ணன் சொல்வதுபோல நாங்களும் ஒரு நடுஇரவில் பிழைப்புக்காக
இடம்பெயர்ந்தோம். அப்போது நான் இரண்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். எனது
மூத்த சகோதரர் திரு. சையது சுலைமான்
என்னைவிட 11 வயது மூத்தவர்-அப்பா ஸ்தானத்தில்
உள்ளவர். நாங்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அவர் குடும்பத்தைக்
காப்பாற்றுவதற்காக அப்பாவோடு சேர்ந்து வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்.
வளர்ந்து வரும்போது அண்ணனின் அரசியல் போக்கு, நெசவாளர் சங்கம்,
கட்சி, இவற்றில் அவரது ஈடுபாடு என எனக்கும் கொஞ்சம் புரிதல் ஏற்படுகிறது. சி.ஐ.டி.யு.உடன்
இணைக்கப்பட்ட ஐக்கிய கைத்தறி நெசவாளர் சங்கம் மதுரை செல்லூரில் இருந்தது. நெசவாளர்
சங்கத்தில் புத்தக வாசிப்பு நடக்கிறது;
போனால் ஒரு புத்தகம் இலவசமாகக்
கொடுப்பார்கள் என்று அண்ணன் என்னை
அனுப்பிவைத்தார். நானும் போய்க் கலந்துகொண்டேன். வாசிப்பின் மீதான ஆர்வமும், தொழிற்சங்க,
அரசியல் அறிமுகமும் இந்தப்
புள்ளியில்தான் தொடங்கியதாக நான் உணர்கிறேன். எனது 18ஆவது வயதில்தான் சோசலிஸ்ட்
வாலிபர் முன்னணி (DYFIயின் பழைய
பெயர் )யில் சேர்ந்து பிறகு கட்சியிலும்
இணைந்து 1982இல் வேலை நிமித்தம் சென்னைக்கு
வரும் வரை ஓரிரு வருடங்கள் பணியாற்றி இருக்கிறேன். சென்னையில் வேலை, தொழிற்
சங்கப் பணிகள் என்று இயங்கியபோது மீண்டும் கட்சியில் இணைந்தேன்.
ஒரு நெசவுத் தொழிலாளியாக மதுரையில்
நீங்கள் பெற்ற அனுபவங்களென்ன?
பன்னிரண்டாம் வகுப்பு முடித்தபின்பு குடும்பச்சூழல் காரணமாக கல்லூரிக்குச் செல்ல முடியாமல் போனதால் குடும்பத்தின் வழியில் தறித்
தொழிலாளியாகிவிட்டேன். மதுரையில் துண்டு நெசவுதான் –ஜக்காட் துண்டு, பேட் துண்டு என்று அங்குலக் கணக்கில் துண்டு அறுப்பதை ஒரு மடி
என்பார்கள். இதற்கான ஊதியத்தை அறுப்புக் கூலி என்றும் சொல்வார்கள். மதுரை செல்லூர் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 30,000 தொழிலாளர்கள் கொண்ட கைத்தறித்தொழிலின்
மிகப் பெரும் திரட்சியான பகுதி. துண்டு
நெசவில் ஈடுபட்டவர்கள் முழுக்க
செளராஷ்டிரா சமூகத்தினர் அல்லாத
மக்கள். அந்தப் பக்கம் அனுப்பானடி,
விளக்குத்தூண், கிருஷ்ணாபுரத்தில் பெரும்பான்மை
செளராஷ்டிர சமூக மக்களின் பிரதானமான
தொழில் பட்டு நெசவு. ஆனாலும் துண்டு
நெசவிற்கான அடிப்படைத் தொழில்களான பாவோட்டுவது, தாராக்குவது,
தார் சுத்துவது, இவற்றில் செளராஷ்டிர சமூகப் பெண்கள் ஈடுபடுவார்கள். தீபாவளி, பொங்கல், சித்திரைத் திருவிழா, அழகர் ஆற்றில் இறங்குவது, மீனாட்சியம்மன் தேரோட்டம் இந்தப் பண்டிகைகள் தவிர வேறெந்த
விடுமுறையும் கிடைக்காது. தொழிலுக்குப் போனால்தான் கூலி. பண்ணாடி இனி வேலைக்கு
வராதே என்று சொன்னால் போய்விட வேண்டியதுதான். நான் வேலைசெய்யும்போது ஒரு நாளைக்கு 18/20 ரூபாய்க்கு மேல் சம்பாதித்ததில்லை. குஜராத், டெல்லி போன்ற வட மாநிலங்களிலிருந்தும் சில வெளிநாடுகளில்
இருந்தும் கைத்தறித் துண்டுகளுக்கான ஆர்டர்கள் வந்தன.
செல்லூர், எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வென்ற மதுரை மேற்குத் தொகுதியைச் சேர்ந்தது. சி.பி.எம் ஆதரவும் நெசவுத் தொழிலாளரின் முழுமையான ஆதரவும்
அவருக்கு இருந்தது. அவர் வென்றால் கைத்தறித் தொழிலாளருக்குப் பாதுகாப்புச் சட்டம்
கொண்டு வருவதாகக் கொடுத்த வாக்குறுதியை அவரோ,
அதன் பிறகு வந்த எவருமோ
நிறைவேற்றவேயில்லை. அப்படி செய்திருந்தால் தொழில் நசிந்து போனாலும் அவர்களின்
வாழ்வாதாரமாவது எஞ்சியிருந்திருக்கும். செல்லூர் நெசவுத்தொழில் 30 ஆண்டுகளுக்கு முன்பே முற்றிலும் அழிந்து போனது. இப்போது
அங்கே அந்தத் தொழிலுக்கான தடயமே இல்லாமல் போய்விட்டது. தொழில் நசிந்த பிறகு தியேட்டர்,
லாட்ஜ், ஹோட்டல் என்று பண்ணாடிகள் மூலதனத்தை இன்னொரு தொழிலில்
போட்டு நிமிர்ந்துவிட்டார்கள். எதுவுமற்ற தொழிலாளி எங்கே போவான்? விவசாயத்தில் நஷ்டப்பட்டதால் நிலத்தைப் பறிகொடுத்துவிட்டுப்
பெரு நிறுவனங்களின் வாசலில், ஏ.டி.எம்.வாசலில் செக்யூரிட்டிகளாக அத்தக்கூலிக்கு வேலைசெய்யூம்
விவசாயிகளைப் போல உதிரித் தொழிலாளராக வேரிழந்து எங்கெங்கொ போயிருப்பார்கள்.
உடலுழைப்பிலிருந்து (நெசவு)
கருத்துழைப்புக்கு
மாறிய தருணத்தை முன்வைத்து ஒரு கேள்வி. மதுரைக்கும், சென்னைக்குமான இடமாற்றத்தில் ஏற்பட்ட
முரண்களாக எதிர்கொண்டது எவற்றை?
1982இல் ஒரு ஆறு மாத காலம் ஆம்பூர் தோல் தொழிற்சாலையிலும் வேலை செய்தேன். 1982இல் ஆவடியிலுள்ள பாதுகாப்புத் துறையில் தொழில் பழகுனராக (Apprentice) வேலை கிடைத்து சென்னைக்கு வந்துவிட்டேன். பயிற்சி முடித்த பின்பு பணி நியமனமும் கிடைத்தது. பின்பு 1988இல் தேர்வெழுதி பாதுகாப்பு ஆராய்ச்சி- வளர்ச்சி நிறுவனத்தில் (DRDO -Defence Research and Development Organisation) பணியில் சேர்ந்தேன். சென்னைக்கு வருகிறபோது எனக்கு வேறு ஒரு சூழல் அறிமுகமாகிறது. இங்கே கூலித் தொழிலிலிருந்து (Waged Sector) மாறுபட்ட, ஊதியம் பெறும் (Salaried Sector) ஆலைத் தொழிலும் அதற்கான தொழிற்சங்கமும் இருப்பதை பார்க்கிறேன். அடிப்படை ஊதியம், பஞ்சப்படி, வீட்டு வாடகைப் படி, நகர ஈட்டுப் படி, போனஸ், விடுமுறைப் பயணப்படி, சேம நல நிதி, காப்பீடு, வார இறுதி விடுமுறைகள், ஈட்டிய, மருத்துவ, மகப்பேறு விடுப்புகள், பணி முடித்த பிறகு ஓய்வூதியம், அனைத்துக்கும் மேலாகப் பணிப் பாதுகாப்பு என்று அரசுத்துறையில் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளருக்கான உரிமைகளைப் பார்க்க முடிந்தது. இவை எல்லாமும் நீண்ட பல வருடங்களாகப் போராடிப் பெற்றவைதாம். இவை போன்ற உரிமைகள் ஒவ்வொரு கூலித் தொழிலாளிக்கும் ஏன் விவசாயத் தொழிலாளிக்கும் கிடைக்கவேண்டும். மற்றபடி மேதினத்தில் வாழ்த்துச் சொல்கிறபோது கரத்தாலும், கருத்தாலும் உழைக்கின்ற அனைவருக்கும் மே தின வாழ்த்துகள் என்போம். எனவே உடலுழைப்பானாலும், கருத்துழைப்பானாலும் உழைப்பு மேலானது; அதில் மேல், கீழ் என்றெல்லாம் இல்லை.
பாதுகாப்புத் துறை சார்ந்த
தொழிற்சாலைகள் எவை? நேரடியாக அரசே நிர்வகிக்கக்கூடிய
முக்கியத்துவம் வாய்ந்த இவையும் கார்ப்பரேட்மயமாகியிருப்பதாகச் சொல்வதன் பின்னணி என்ன?
முப்படைகள் ஆன ஆயுதப்படைகள் நேரடியாகக் களத்தில் இருப்பவை. ஆயுதத் தளவாடத் தொழிற்சாலைகளின் வரலாறு பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலத்திலிருந்தே துவங்குகிறது. வங்காளம், மகாராஷ்டிராவில் அகமத்நகர், ஒரிசா இங்கெல்லாம் உள்ள தளவாடத் தொழிற்சாலைகள் 200 ஆண்டுகள் பழமையானவை. உதாரணமாக வங்காளத்தின் இச்சாப்பூரில் 1787 இல் துப்பாக்கிப் பவுடர்(Gun Powder) தொழிற்சாலையும், 1801 இல் காசிப்பூரில் கன் கேரேஜ் தொழிற்சாலையும் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகத்தால் தொடங்கப்பட்டன.
டி.ஆர்.டி.ஓ. நிறுவனம் முப்படைகளுக்கும் தேவையான போர்க் கருவிகளை உற்பத்தி செய்வதற்கு
முன்பாக ஆராய்ச்சி செய்யவும்,
வடிவமைக்கவும் 50 ஆண்டுகளுக்கு முன்பு
ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இது தவிர பாதுகாப்புத் துறையின் கீழ் நிறைய நிறுவனங்கள், பிரிவுகள் இருக்கின்றன. ஆவடி படை உடைத் தொழிற்சாலை, டேங்க் தொழிற்சாலை எனப்படும் கனரக வாகன தொழிற்சாலை,
திருச்சி துப்பாக்கித் தொழிற்சசாலை, அரவங்காடு வெடி மருந்துத் தொழிற்சாலை உள்ளிட்ட
தளவாடத் தொழிற்சாலைகளும், ஒட்டுமொத்தப் பாதுகாப்புத்துறை நிறுவனங்களின் கணக்குகளைக் கண்காணிக்கவும், தணிக்கை செய்யவுமான பாதுகாப்புக் கணக்குத் தணிக்கைப் பிரிவும் (Defence Accounts Department) இருக்கின்றன. இப்படி 41 தொழிற்சாலைகள் எண்பதாயிரம்
தொழிலாளர்களுடன் ஆயுதத் தளவாடத் தொழிலக வாரியத்தின் (Ordnance Factory Board) கீழ் இருந்தன. இவை அன்றி ராணுவத்தின்
கீழ் பல துறைகள் இயங்குகின்றன.
உடைத்தொழிற்சாலையில் பாராசூட், காலணி, கூடாரம், உடைகள் இவற்றைத் தயாரிப்பதில்
ஒன்றும் பெரிய தொழில் நுட்பமெல்லாம் கிடையாது, இவற்றைக் காண்ட்ராக்டில் (தனியார்)
விட்டுவிடலாம் என்று கடந்த கால அரசுகள்
நீண்ட காலமாகப் பேசிக்கொண்டிருந்தாலும், இன்றைய
பி.ஜே.பி. அரசு 2021ஆம் ஆண்டு அதை
அமல்படுத்திவிட்டது. தளவாடத் தொழிலக வாரியத்தையும்
கார்ப்பரேட்மயமாக்கிவிட்டார்கள். தனியார்மயமாக்கலுக்கு முன்னோட்டமாக தளவாட தொழிலக
வாரியத்தின் கீழேயிருந்த 41 தொழிற்சாலைகளையும் தொழிலின், உற்பத்திப்பொருளின் தன்மைக்கேற்ப ஏழு பிரிவாகப்
பிரித்துவிட்டார்கள். தொழிலாளரிடம், அவர்கள் அரசு ஊழியர்களாகத் தொடர்கிறார்களா இல்லையா
என்பதிலேயே குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார்கள். ஒட்டுமொத்த 100 சதவீத அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விட்டதால்
தொழில் நடத்த மூலதனத்தைப் போடுவதிலும்,
தொழிலாளருக்கு ஊதியம்
கொடுப்பதிலும் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிட்டார்கள். ஒவ்வொரு மாத ஊதியத்தையும்
தில்லி அல்லது கல்கத்தாவிற்கு எழுதித்தான் வாங்கவேண்டும் எனும் அவல நிலை உள்ளது. பல்லாயிரம் ஊழியர்களைக் கொண்ட பாதுகாப்புக்கணக்குத் தணிக்கைப் பிரிவுக்கும் வேலை இல்லை என்றாகி, அதன் கண்காணிப்பிலிருந்தும், பிடியிலிருந்தும் பாதுகாப்புத் துறையின் தொழிற்சாலைகள் விடுபட்டுவிட்டன. பிரிட்டிஷ்
அரசு சில பத்தாண்டுகள் முன்பு இதே போன்ற முடிவெடுத்து பாதுகாப்புத்துறையை
கார்பொரேட்மயம் ஆக்கியபின் மிகப்பெரிய சிக்கல்களையும் இடர்களையும் சந்தித்தது
என்பது வரலாறு.
பாதுகாப்புத்துறைத் தொழில்நுட்பம்
என்பது ராணுவம் சார்ந்தது, சிவில் சமூகத்திற்கும் அதற்கும்
எந்தத் தொடர்புமில்லை என்று சொல்லலாமா?
பொதுவாக நினைக்கிற மாதிரி பாதுகாப்பு
ஆராய்ச்சி-வளர்ச்சி நிறுவனம்
படைத்துறைகளுக்கு மட்டுமே ஆய்வு
செய்வதில்லை. பொது சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய பணிகளையும் செய்கிறது.
உதாரணமாக கடுமையான 50 டிகிரிக்கும் மேல் வெப்பம்
நிலவும் ராஜஸ்தான் பாலைவனத்திலும்,
மைனஸ் 40 டிகிரியில் கடுங்குளிர் நிலவும் சியாச்சின் பனிப்
பிரதேசத்திலும் பணியாற்றும் இராணுவத்திற்கு என்ன மாதிரி உணவு, உடை ஏற்றது,
எது சரியான எரிபொருள், உணவைச் சூடாக வைப்பது எப்படி போன்ற ஆய்வுகள் பொதுசமூகத்திற்கும்
பலனளிக்கின்றன.. ராஜஸ்தானில் ஜோத்பூர் ஆய்வுக்கூடத்தில் சுற்றுவட்ட பாலைவனத்தில்
எங்கே தண்ணீர் கிடைக்கிறது? அது குடிக்கத் தகுதியானதா? அப்படி தகுதியில்லாத பட்சத்தில் அதை எப்படித்
தகுதிப்படுத்துவது என்று செய்யப்படும் ஆய்வின் பலன்கள் படையினருக்கு மட்டுமல்லாமல்
சிவிலியன் மக்களுக்கும் சென்றடைகிந்றன. அதேபோல் லே-லடாக்கின் ஆய்வுக்கூடத்தில்
கடும் குளிர் பிரதேசத்தில் காய்கறி பயிர்செய்வது, கால்நடை வளர்ப்பு பற்றிய ஆய்வுகளை அங்குள்ள பொது சமூகத்தோடு இணைந்துதான் செய்கிறார்கள்.
விண்வெளிக்குச் செல்பவர்கள், விண்கலத்தில்
தங்கியிருந்து ஆய்வுசெய்பவர்களுக்கான உணவு, தக்க எடையில் ஆன உடைகள், அவர்கள் பயன்பாட்டிற்கான அவசியப்
பொருட்கள் என விரிவான ஆய்வுகள்
செய்யப்படுகின்றன. முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நாம்
கட்டியிருந்த கேசியோ எலெக்ற்றானிக் கைக்கடிகாரம் விண்வெளி பயணம் செய்பவர்களுக்காகக்
கண்டுபிடிக்கப்பட்டதுதான். இன்று பொதுப் புழக்கத்திலிருக்கும் தோசை தவா கூட
அவர்களுக்கான ஆய்வில் கிடைத்ததுதான்.
மாற்றுத்திறனாளிகளுக்கான எடை குறைவான அதே நேரத்தில்
உறுதியான, விலை குறைவான ஊன்றுகோல் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் முன்னெடுப்பில்
கண்டுபிடிக்கப்பட்டதுதான். அந்த ஊன்றுகோல் ராக்கெட் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும்
உலோகக் கலவையால் ஆனது. அதேபோல் இதய சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஸ்டெண்ட் பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகளால்
கண்டுபிடிக்கப்பட்டது. தூரத்தை அளப்பதற்கும், தூரத்திலுள்ள பொருட்களை உணர்வதற்குமான சோனார் கருவி (Sound Navigation And Ranging) நீர்மூழ்கிக் கப்பலில் பயன்படுத்தப்படுவது.
இந்தக் கருவி நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலத்தில் இடிபாடுகளில்
சிக்கிக்கொண்டிருப்பவர்களைக் கண்டறிந்து மீட்கும் பணிகளில் பேருதவியாக இருக்கிறது.
பெட்ரோல், டீசல் வாகனங்களில் பயன்படும் வடிகட்டியின் மேம்பட்ட வடிவமாக உயர் தொழில்நுட்பத்தில் அதிநுண் வடிகட்டும்
கருவியை (Fine Micro Filter) கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மனிதனின் சிறுநீரகத்திற்கு மாற்றாக அதைப் பயன்படுத்தும் ஆய்வும்
தொடர்கிறது. இவற்றைத் தொழில்நுட்ப ஆய்வின் சுழற்சி (Spin Off Technology) என்பார்கள். பாதுகாப்புத்துறை நோக்கத்திற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதைப் பொதுச்சமூகத்தின்
பயன்பாட்டுக்குக் கொண்டுசெல்வது என்பதே இதன் சாரம்.
இத்துறை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள
பொதுத்துறையாகவே நீடிப்பதற்கும்,
தனியார் அல்லது ஒப்பந்தமுறைகளுக்கு மாற்றம் பெறுவதற்குமான முரண்கள் என்ன? அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது?
அரசின் கைகளில் பொதுத்துறையாக இருக்கும்வரைதான் பாதுகாப்புத்
துறையின் கண்டுபிடிப்புகளைப் பொதுச்சமூகத்தின் பயன்பாட்டுக்குக் கொண்டு
செல்லமுடியும். 2015 சென்னை பெரு வெள்ளத்தில் மக்கள்
சிக்கித் தவித்தபோது அரசின் விமானங்கள்,
ஹெலிகாப்டர்கள் மூலம்தான் மக்களை
மீட்கமுடிந்தது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, இப்போது சொந்தமாக விமானமே இல்லாத நாடாகிவிட்டது. விமானங்களைத்
தனியாரிடம், டாட்டாவிடம் கொடுத்துவிட்டார்கள். ஏர் இந்தியா அரசின் கைகளில் இருந்தபோது
மக்களுக்குப் பயன்பட்ட மாதிரி இப்போது டாட்டா கொடுப்பாரா? 1962 இந்திய சீனப் போரின்போது டாடா கம்பெனியின் ட்ரக்குகளை
வாங்க அரசு முடிவு செய்தபோது டாடா நிறுவனம் அதன் விலையை உயர்த்தியது என்பது வரலாறு.
கொரோனா பெருந்தொற்றின் ஊரடங்கு காலத்தில் அரசின்
கைகளில் இருந்த ரயில்வேத் துறையின் மூலமாகத்தான் வடமாநிலத்தின் புலம்பெயர்
தொழிலாளரை அவர்களின் சொந்த ஊர்களுக்கு,
கேரள இடதுசாரி அரசு அவர்களுக்கான
உணவு, தண்ணீர் உட்படக் கொடுத்து கெளரவத்துடன் அனுப்பி வைத்தது.
தமிழ்நாட்டில் போக்குவரத்துத்துறை அரசின் கைகளில் இருப்பதால்தான் மகளிருக்கான, மாணவர்களுக்கான இலவசப் பயணம் கூட சாத்தியமாயிருக்கிறது. பொங்கல், தீபாவளி நேரங்களில் தனியார்
பேருந்து கட்டணங்களைப் பாருங்கள்.
கார்கில் போரில் பாகிஸ்தான் வீரர்கள் அணிந்திருந்த
காலணிகளில் ’மேட் இன் இந்தியா’ என்று பொறிக்கப்பட்ட ஒரு விசயம் அப்போது பெரிதாகப் பேசப்பட்டது. இந்தியாவின் தனியார்
கம்பெனி காலணிகள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட, அங்கிருந்து பாகிஸ்தான் அரசு
இறக்குமதி செய்து தனது ராணுவ வீரர்களுக்குக் கொடுத்திருக்கிறது. முதலாளிகளுக்கு யாருக்கு விற்கிறோம் என்றெல்லாம் அக்கறையில்லை; அவர்களுக்கு
லாபம் மட்டுமே குறிக்கோள். பாதுகாப்பையும்
கிட்டத்தட்ட ஒப்பந்தப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டார்கள். அதன் விளைவாகத்தான்
அக்னிவீர் மீதான எதிர்ப்பும் எழுந்திருக்கிறது.
கல்வி, மருத்துவம் போல அரசின் தொழில்துறைகளும் தனியார் கையில்
கொடுக்கப்பட்டு வணிகமயம் ஆக்கப்படுகின்றது. அரசுக்குச்
சமூகக் கடமையும் பொறுப்பும் இருக்கிறது. அடிப்படையான நலப்பணிகளை, நாட்டின் பாதுகாப்பில் லாபக்கணக்குப் பார்க்கக்கூடாது.
2016இல் ரிலயன்ஸ் கம்பெனி ஜியோ தொடங்கும்போது ஆறு மாதம்
கட்டணமில்லாத சேவை என்றார்கள். கொஞ்சம் கொஞ்சமாக விலை ஏற்றி, தற்போது அது உச்சத்துக்குப் போய்விட்டது. தனியார் கம்பெனிகள் 5 ஜி, 6 ஜி பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்
இந்தக் காலகட்டத்தில், இப்போதுதான் பி.எஸ்.என்.எல். சேவையை 3ஜியிலிருந்து 4
ஜிக்குத் தரம் உயர்த்த அரசு அனுமதித்துள்ளது.
அலைக்கற்றைகள், மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்புக்
கோபுரங்கள், அதன் அடிப்படைக் கட்டுமானங்கள், கருவிகள் எல்லாவற்றையும் அம்பானி, அதானிகளிடம் கொடுத்துவிடுவது என்பது அரசின் முடிவாக
இருப்பதால் பி.எஸ்.என்.எல். பின்தங்கிவிட்டது. ஆனால் அந்தமானில், லட்சத்தீவில்,
இமயமலையின் வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் இந்தியர்கள் வசிக்கும், ஆனால் எளிதில்
அணுகமுடியாத எல்லா இடங்களிலும் பி.எஸ்.என்.எல். மட்டும்தான் மக்களுக்கான தகவல்
தொடர்பைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அது அரசு நிறுவனமாக இருப்பதால்தான்
அப்படியான சேவையைக் கொடுக்கமுடிகிறது. அங்கெல்லாம் லாபம் இல்லையென்பதால் அதானியோ, அம்பானியோ அந்தப் பக்கமே போவதில்லை.
இந்தியா என்பது டெல்லி மட்டும் அல்ல; பொதுவாகக் காஷ்மீர்
முதல் கன்னியாகுமரி வரை என்கிறோம்; அதுவும் தவறு. இந்தியாவின் தென்முனை கன்னியாகுமரியல்ல, நிக்கோபர் தீவின் இந்திரா முனைதான். அதேபோல மேற்குமுனை
குஜராத் அல்ல, லட்சத்தீவுதான். நிக்கோபர் தீவு யாரும்
போகமுடியாத தடைசெய்யப்பட்ட பகுதி. இப்போது அதையும் மிகப்பெரிய துறைமுக நகரமாக, வணிகக் கேந்திரமாக மாற்றுவோம் என்று தனியாரிடம் கையளிக்கக் கூடிய
பெரிய திட்டம் ஒன்றை ஒன்றிய வலதுசாரி இந்துத்துவ அரசு கொண்டுவருகிறது.
இதனால் பல லட்சம் வருடங்கள் வயதான அங்குள்ள பவளப்பாறைகள், ஆழ்கடல் வளங்கள்,
கடல்வாழ் உயிரினங்கள், காடுகள் இவை அனைத்தும் அழியும்; இயற்கைச் சமநிலை, பல்லுயிர்ப் பரவல் சீர்கேட்டுக்கு
உள்ளாகும். ஏற்கனவே அதானி வசமுள்ள
குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் டன் கணக்கில் போதைப்பொருள் தொடர்ந்து கைப்பற்றப்படுவதைப்
பார்க்கிறோம். இந்தியாவின் மையப்பகுதியிலேயே இதுதான் நிலைமையென்றால் யாரும் அணுகமுடியாத நிக்கோபரின் நிலைமை என்னவாகும்? உண்மையில் இத்திட்டத்தால் பயன் அடையப்போவது யார்?
கார்ப்பரேட்மயமாக்கலின் விளைவாகத் தொழிலாளர்
திரட்சியில் ஏற்பட்டிருக்கிற
ஆபத்து என்ன? அதைத் தொழிற்சங்கரீதியாக எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கருதுகிறீர்கள் ?
பாதுகாப்புத்துறை உட்பட எல்லாத் துறைகளிலும் வேலைக்கு
நிரந்தர ஊழியர்களை எடுப்பது குறைந்து போய்,
தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்களைக்
கொண்டு நிரப்புகிறார்கள். குறைந்தபட்சக் கூலிச் சட்டத்தின் கீழ் (Minimum Wages Act) நியமனம் பெறுகிற அவர்களுக்கு
அடிப்படை ஊதியம், பஞ்சப்படி, சேம நிதி, மருத்துவ ஈட்டுறுதி(ESI), போனஸ் மட்டும் இருக்கும்;
வேறு எதுவும் கிடைக்காது. ரயில்வேத் துறைகளில் ஏறத்தாழ இரண்டரை லட்சம்
காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அவற்றுள் கணிசமான இடங்கள் சேவை, பராமரிப்பு,
பாதுகாப்புப் பிரிவுகளில் உள்ளவை
என்பதையும், தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும்
ரயில் விபத்துகளையும் தொடர்புபடுத்திப்
பார்க்காமல் இருக்கமுடியாது. விருப்ப ஓய்வென்ற பெயரில் பி.எஸ்.என்.எல். போல தொழிலாளரை வெளியேற்றுவதன் மூலம்
அவர்கள் தங்களுக்கான உரிமையைப் பேசக்கூடிய சக்தியை இழக்கச் செய்வது; அதன் வழியாக அவர்களை மனச் சோர்வடையச் செய்வது. இறுதியில்
சங்கங்களை ஒழிப்பது, இதுதான் அரசின் தந்திரம். உண்மையில் அரசுத்துறை, பொதுத்துறை
நிறுவனங்களை, அரசு வங்கிகளைக் காப்பாற்றிக்கொண்டு இருப்பவர்கள் தொழிலாளர்களும்
சங்கங்களும்தான், அரசோ உயர்மட்ட அதிகார வர்க்கமோ அல்ல.
தளவாடத் தொழிலக வாரியத்தைக் கார்ப்பரேட்மயமாக்கி அதை
ஏழு நிறுவனங்களாகப் பிரித்த பிறகு ஒரே கூரையின் கீழேயிருந்த துறைகள் ஒன்றுக்கொன்று
தொடர்பில்லாமலும், அதன் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர்
தொடர்பில்லாமலும் ஆக்கப்பட்டுவிட்டார்கள்.
இது மீண்டும் பழைய காலத்திற்கு அவர்களைப் பின்தள்ளும். இதன் அடுத்த நகர்வாகத்
தொழிற்சங்கச் சட்டம் 1926(Trade Union
Act, 1926), தொழிற் தகராறு சட்டம் 1947(Industrial Disputes Act, 1947), தொழிற்சாலைச் சட்டம் 1948 (Factories Act, 1948) உள்ளிட்ட முக்கியத்துவம் மிக்க 44 சட்டங்களை
ஒழித்து அவற்றின் இடத்தில் வழிகாட்டும்
நெறிமுறைகள் என்ற வகையில் நான்கு வழிகாட்டு நெறிகளாகச் (Labour Code) சுருக்கியிருக்கிறார்கள். 2019, 20இல் நாடாளுமன்றத்தில்
ஒப்புதல் பெறப்பட்டாலும் தொழிற் சங்கங்கள், மாநில அரசுகளின் எதிர்ப்பால் இவை
இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. சட்டம் என்பதற்கும், இத்தகைய வழிகாட்டு நெறி என்பதற்கும் அடிப்படையிலேயே நிறைய வேறுபாடிருக்கிறது.
நம் முன்னோடிகள் உயிர்த் தியாகங்கள் செய்து போராடிப் பெற்ற உரிமைகள் எல்லாவற்றையும் இன்றைய
வலதுசாரி பி.ஜே.பி. அரசு மிகவும் எளிதாக
நீர்த்துப்போகச் செய்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. தொழிற்சங்க இயக்கத்தை இந்த
அரசாங்கம் திட்டமிட்ட நகர்வுகள் மூலமாகச் சிதைத்தும் அழித்தும் வருகிறது. இவற்றின்
மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்
சமூகம் என்ற பெருந்திரள் தேய்ந்துகொண்டே வருகிறது.
பாதுகாப்புத் துறையில் இடதுசாரி சிந்தனையுள்ள ஒரே
அமைப்பாக ஏ.ஐ.டி.இ.எஃப். (All India
Defence Employees Federation) மட்டுமே இருக்கிறது. கடந்த காலங்களில் ஏ.ஐ.டி.இ.எஃப்.
தொழிலாளர் உரிமைக்காக வேலைநிறுத்தங்கள் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியபோது, காங்கிரஸ், பி.ஜே.பி கட்சிகளின் தொழிற்சங்கங்களும், அந்தந்த மாநிலங்களில் இயங்கும் கட்சிகளின் கீழான
தொழிற்சங்கங்களும் அரசு நிர்வாகத்தோடு சேர்ந்துகொண்டும், காவல்துறையின் துணையோடும் போராட்டங்களைச் சீர்குலைத்தார்கள் என்பது வரலாறு. இப்போது
தொழிலே அழியப் போகிறது, தொழிலாளருக்கு வாழ்க்கை சார்ந்த
நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என்பதால் இந்த அணிகளும் வேறு வழியின்றி ஒரே குடையின் கீழ் போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்க இயக்கம், அவை இடதுசாரி
சிந்தனையுள்ள அமைப்பாகவே இருந்தாலும், வர்க்க அரசியலைப் பேசாமல் தொழிலாளரின் பொருளாதார நலன்
சார்ந்து மட்டுமே போராடிக்கொண்டிருந்தால் அவை தேக்கம் அடையும், தோல்வி அடையும். சமூகம் சார்ந்த போராட்டங்களில் தங்களை
இணைத்துக்கொள்ளவும் வர்க்க அரசியல் அடிப்படையில் நிற்கவும் தொழிற்சங்கங்கள் தமது
உறுப்பினர்களைப் பயிற்றுவிக்கவேண்டும். ஒன்றிய அரசும், கார்ப்பரேட்களும் வெளிப்படையாகவே
சாமான்ய மக்களுக்கு எதிராகக் கைகோர்த்து நிற்கின்றனர் என்ற வெளிச்சத்தில் இதைப் பார்த்தாக
வேண்டும். அப்போதுதான் அவர்களால் இத்தகைய தனியார்மய, கார்ப்பரேட்மயமாக்கலை எதிர்ப்பதில் சோர்வுற்று நிற்காமல் விழிப்போடு வீரியமாக
எதிர்கொள்ளமுடியும் .
ஒரு நல்ல படைப்பாளி உருவாக தீவிர
வாசிப்பு வசப்படவேண்டும் என்பார்கள். வாழ்க்கையில் வாசிப்பின் அவசியம் என்னவாக
இருக்கிறது? வாசிப்பிற்கு நீங்கள்
வசப்பட்டது எப்படி?
மதுரை இயல்பாகவே தமிழ்நாட்டின் அரசியல் தலைநகரமாக
இருந்தது. தினந்தோறும் அங்கு ஏதாவது ஒரு பகுதியில் அரசியல் கூட்டங்கள் நடந்துகொண்டிருக்கும். படிக்கிற காலத்திலேயே
நிறைய திராவிட இயக்க, இடதுசாரி இயக்கத் தலைவர்களின் பேச்சைக் கேட்டிருக்கிறேன்.
மதுரை கலைவாணர் என்.எஸ்.கே. படிப்பகத்தில் பத்திரிகைகளும், புத்தகங்களும் படித்தேன். சி.ஐ.டி.யூ. கைத்தறி நெசவாளர் சங்கத்தில் ஒருவர் வகுப்பு எடுத்தார். வகுப்பென்றால்
ஆசிரியர் மாணவர் என்றில்லாமல் எங்களோடு சமதையாக தரையில் பாய் விரித்து உட்கார்ந்திருந்தார். உலகம் தோன்றியது எப்படி? உயிரினங்களின் தோற்றம்,
பரிணாம வளர்ச்சி இப்படியான நிறைய விஷயங்களை எங்களைப் போன்ற
சிறுவர்களுக்குப் புரிகிற மாதிரி சொல்லிக் கொடுத்தார். ’சிலந்தியும் ஈயும்’
என்ற புத்தகத்தின் கதையைச் சொல்லி
அந்தப் புத்தகத்தையும் எல்லாருக்கும் கொடுத்தார். அதில் சுரண்டப்படுபவனுக்கும், சுரண்டுபவனுக்குமான போராட்டத்தைக் கார்ல் லீப்னஹ்ட்
சிறப்பாக எழுதியிருப்பார். அடிப்படை
வர்க்க அரசியலை அறிந்துகொள்ள முற்படுகிறவர்களுக்கு எப்போதும் பொதுவுடைமை இயக்கத்தினர்
அந்தப் புத்தகத்தைத்தான் வாசிக்கக் கொடுக்கிறார்கள் என்பது எனக்குப் பின்நாட்களில்
தெரிந்தது. என் வீட்டிற்கருகேயிருந்த சுந்தரராஜன் என்ற தமிழாசிரியர் என் வாசிப்பு
ஆர்வத்தைப் பார்த்துவிட்டு செல்லூர் கிளை நூலகத்தில் அவருக்கிருந்த இரண்டு நூலக
அட்டைகளை எனக்குக் கொடுத்தார்.
பாடப்புத்தகங்களைவிட நூலகத்தில் படித்ததுதான் அதிகம். ஒரே நாளில் மூன்று, நான்கு புத்தகமெல்லாம் படித்திருக்கிறேன். கதைகள்தான்.
வாசிப்புப் பழக்கம் என்பது வெறும் வாசிப்போடு நிற்காமல் நான் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் இணைந்தபோது களப்பணியோடும் சேர்ந்துகொண்டது. வாசிப்பு களப்பணியோடு இணையும் போதுதான் வாசிப்பதன் பயன் முழுமையடையும். நவம்பர் புரட்சிக்கு முந்தைய ஆறு மாத காலத் தலைமறைவு வாழ்க்கையிலும் கூட தோழர் லெனின் அதிகாலையிலேயே அன்றாடப் பணிகளைத் தொடங்கிவிடுவார் என்று அறிகிறோம். வைக்கோற்போருக்கு உள்ளே இருந்த தலைமறைவு இடத்தில் அமர்ந்து கொண்டு எழுதுகிறார், வாசிக்கிறார். எந்த வசதிகளுமற்ற தலைமறைவு வாழ்க்கையில் தான் ’என்ன செய்ய வேண்டும்?’, ’அரசும் புரட்சியும்’ போன்ற அரிய நூல்களை அவர் எழுதுகிறார். அவர் வாழ்ந்த 54 வயதிற்குள் கற்பனை செய்ய இயலாத அளவிற்கு எழுதிக் குவித்திருக்கிறார்; அதோடு மட்டுமல்ல உலகின் முதலாவது வர்க்கப்புரட்சிக்குத் தலைமை தாங்கி நடத்தி முடித்திருக்கிறார்.
வாசிப்பு, எழுத்து, இயக்கம் இவை எல்லாமும் ஒன்றோடொன்று
இணைந்திருக்கவேண்டும். வாசிப்பு நமது அறிவுத் தளத்தை விரிவுபடுத்தும்; களப்பணிகள்தாம் கற்றதில் எது சரி, எது தவறென சோதித்தறிய
உதவும். வாசிப்பு எப்போதும் யாருக்கும் முற்றுப்பெறுவதில்லை. செயலாற்றும்
ஊழியர்களுக்கு மட்டுமல்ல, வழிநடத்தும் தலைவர்களுக்கும்
வாசிப்புப் பழக்கம் அன்றாடப் பணியாக இருக்கவேண்டும். வாசிப்பு ஒரு தொடர் இயக்கம்.
நீங்கள் விரும்பி வாசிக்கிற
நூல்கள் எவை? உங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்? ஏன்?
அரசியல்,
வரலாறு, இசை மூன்றும் அதிகமாகக் கவர்ந்த துறைகள். சமீபமாகச்
சுற்றுச் சூழல் நூல்களையும் நிறைய வாசிக்கிறேன். என் சிறு வயதில் வெகுஜன இதழ்கள்
படிக்கிற காலத்தில் சுஜாதாதான் எனக்குப் பிடித்த எழுத்தாளர். தமிழில் ஒரு புதிய எழுத்து நடையைக் கொண்டுவந்தவர். வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்கி கடைசிப்பக்கத்தில் அந்தப்
புதிரை விடுவிக்கும் பொதுவான தமிழ்த்
துப்பறியும் எழுத்தாளர்களின் வகைமையிலிருந்து மாறுபட்டவை சுஜாதாவின் படைப்புகள். துப்பறியும் நாவல் என்பது துப்பாக்கி-கொலை-ரத்தம் மட்டுமல்ல,
மனிதனுடைய மனநிலை, வாழ்க்கை முறை, ஒருவருக்கொருவரான உறவு,
நட்பு, பகைமை, சொத்து, குடும்பச் சண்டைகள்,
சமூக நியதிகள் எல்லாம்
சேர்ந்ததுதான் அதன் மையமான விஷயம். அவரது எழுத்தில் இந்தக் கூறுகளை பார்க்க
முடிந்தது. ஒரு புதிய உத்தியும், விஞ்ஞானப் பார்வையும், புத்திசாலித்தனமும் மொழியும் இருந்தன. அதனால் அவை தனித்துவம் பெற்றன. பிறகு அதைத்தாண்டி வேறு ஒரு
தளத்துக்கு நகர்ந்துவிட்டேன். இது எல்லாருக்கும் ஏற்படுகிற மாற்றம்தான். அண்ணன்
வரவழைத்த சோவியத் நாடு, என்.சி.பி.ஹெச். நூல்கள் என
செவ்விலக்கியங்களின் வாசிப்பாக இருந்தது.
சென்னைக்கு வந்தது, புத்தகச் சந்தை அறிமுகம் என சூழல் மாறியபோது தமிழின் முன்னோடிகள் ஆன கி.ரா, சா.கந்தசாமி,
தி.ஜா.ரா, இந்திரா பார்த்தசாரதி,
சு.சமுத்திரம் என என் வாசிப்புத்
தளமும் மாறியது. செம்மலர், சுபமங்களா, தீராநதி போன்ற இதழ்கள் முக்கியமானவை.
புனைவு இலக்கியத்தில் இடதுசாரி எழுத்தாளர்கள் கு.சின்னப்ப பாரதி, தொ.மு.சி.ரகுநாதன், டி.செல்வராஜ், செ.யோகநாதன், அசோகமித்திரன், பிரபஞ்சன், மலையாள எழுத்தாளர்கள், சோவியத் எழுத்தாளர்கள் ஆகியோரின் படைப்புக்களும், அபுனைவு இலக்கியத்தில் கலாநிதி கைலாசபதி, கா.சிவத்தம்பி, வல்லிக்கண்ணன், தி.க.சி, நா.வானமாமலை, தொ.பரமசிவம், கே.முத்தையா, அருணன், ச.செந்தில்நாதன் ஆகியோரின் படைப்புகளும் முக்கியமானவை. ரோமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப், கே.என்.பணிக்கர், சதீஷ் சந்திரா உள்ளிட்ட வரலாற்றறிஞர்களின் படைப்புக்கள் முக்கியமானவை. இது முழுமையான பட்டியல் இல்லை. இவர்களுக்கு பின்னால் எழுதவந்த மிகப்பல எழுத்தாளர்களின் படைப்புக்களும் முக்கியமானவை.
சுற்றுச்சூழல் சார்ந்து தியடோர் பாஸ்கரன், மா.கிருஷ்ணன், சலீம் அலி, ரோமுலஸ் விட்டேகர்(சென்னை பாம்புப் பண்ணை/முதலைப்பண்ணை நிறுவனர்), சாய், நக்கீரன், ஜே.சி.டானியல், ரஷ்கின் பாண்ட், மாதவ் காட்கில், சாலீம் அலி, ராமச்சந்திர குஹா இவர்களின் நூல்களை விரும்பி வாசிக்கிறேன்.
இன்னாருடைய எழுத்துதான் ஈர்த்தது எனக் குறிப்பாக இல்லாமல் ஒவ்வோர் எழுத்தாளரும் அவர்கள் எடுத்துக்கொண்ட கருத்தாலும், அவர்களின் எழுத்து நடையாலும் பிடித்தவர்கள்தாம். ஒவ்வொருவருடைய வாசிப்பும், பார்வையும் அவரவர் வயதுக்கேற்றவாறு, அனுபவத்துக்கேற்றவாறு மாறுகிறது. வாசிப்புப் பழக்கம் தொடர்ந்துகொண்டேயிருந்தால்தான் வாசிப்பின் தன்மை மாறும், அவர்கள் நாடக்கூடிய எழுத்தாளரும் மாறுவர்; வாசிப்பின் மையமான விசயங்களும் மாறிக்கொண்டே வரும். ஒரு கட்டத்தில் எவற்றை வாசிக்கவேண்டும் என்ற முதிர்ச்சியை வாசிப்பு ஏற்படுத்திக் கொடுக்கும்.
வாசிப்பில் தற்போதைய
விருப்பத்தேர்வாக எது இருக்கிறது?
கொரோனா ஊரடங்குகாலத்தில் கம்யூனிஸ்டும் இசையமைப்பாளருமான
எம்.பி.சீனிவாசன் அவர்களைப் பற்றிய வாசிப்பில் ஈர்ப்பான செய்திகளை முகநூலில்
பகிர்ந்தது மிகவும் வரவேற்புப் பெறவே தொடர்ந்து
பதிவுகளாக்கினேன். அவர் பற்றிய தேடலின்போதுதான் அவர் பற்றி அறந்தை நாராயணன் எழுதி 1991இல் வெளியான ஒரே ஒரு நூல்
மட்டுமே இருக்கிறது என்றறிய முடிந்தது. அவர் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்காக
மிகப் பல நூல்களை வாங்கி வாசித்தேன். இணையம் பேருதவி செய்கிறது. என்
முழு கவனமும் இப்போது இசை, திரைப்படம் பற்றியதாக உள்ளது.
எம்.பி.எஸ். நூலுக்காக அதை மேற்கொண்டிருக்கிறேன். அவற்றை வாசிக்கும் போது இசை
பற்றி மட்டுமல்லாது, தமிழ் மரபு சார்ந்த இசை, கடந்த ஒரு நூற்றாண்டில் தமிழிசை, திரையிசை ஆகிய தளங்களில்
ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அவற்றை செய்த கலைஞர்கள் குறித்த வரலாறு, தமிழ், மலையாள, வங்காள சினிமா வரலாறு, அத்துறையில்
இந்திய மக்கள் நாடகமன்றத்தைச் (IPTA) சேர்ந்த இடதுசாரிக் கலைஞர்கள்
ஆற்றிய மகத்தான பணிகளையும் அறிந்துகொள்ள முடிந்தது. தமிழக இடதுசாரி கலை இலக்கிய அமைப்புக்கள் தோன்றி
வளர்ந்த வரலாற்றை அதிக கவனத்துடன் தெரிந்துகொள்ள முடிந்தது.
இந்த நூலின் தகவல்கள், தரவுகளுக்காக இடதுசாரி இயக்க வரலாறு, இடதுசாரி தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் வாசிக்க
வேண்டிய அவசியமும் உள்ளது. ’இவர்களின் வரலாற்றை இவர்களும் சொல்வதில்லை; மற்றவர்களையும் சொல்ல விடுவதில்லை’ என்ற நேர்மையான
ஒரு குற்றச்சாட்டு இடதுசாரிகள் மீது உண்டு. தோழர் என்.ராமகிருஷ்ணன் (தோழர் என்.சங்கரய்யாவின் சகோதரர்) பதிவாக்கவில்லையென்றால் இப்போது தெரிகிற வரலாறும் நமக்குத் தெரியாமல் போயிருக்கும். இடதுசாரி இயக்க முன்னோடிகளின் வரலாறு, தனிப்பட்ட நபர்களின் வரலாறு அல்ல; அவை இயக்கங்களின் வரலாறு
என்ற புரிதலுடன் தலைவர்கள் தமது தன்னடக்கத்தை விட்டுத்தர வேண்டும். தற்போது எம்.என்.ராய் (மனபேந்திர நாத் ராய்) வரலாற்றைப்
படித்துக்கொண்டிருக்கிறேன். இரண்டாம் அகில நடவடிக்கைகளில் அவர் நேரடியாகப் பங்கு
பெற்றவர்; தோழர்கள் லெனினையும், ஸ்டாலினையும் சந்தித்தவர். இந்திய இடதுசாரிகளில் மூத்தவர். மிகப்பல
அரிய நூல்களை நாம் மறுபதிப்புச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இடதுசாரி இலக்கியப்
பதிப்பாளர்களுக்கு எனது வேண்டுகோளாக வைக்கிறேன்.
திராவிட இயக்கங்கள் காட்சி
ஊடகத்தின் வழியாக அதிகாரத்தைக் கைப்பற்றி அரைநூற்றாண்டு கடந்த பின்னாலும், ஏன் இன்னமும் அது இடதுசாரிகளுக்கான கலாச்சார ஆயுதமாகப்
பரிணமிக்கவில்லை?
பேசும்பட காலகட்டத்தின் திரைப்படங்கள்
எல்லாம் புராணக்கதைகளாக இருந்து, பிற்பகுதியில்
கல்கியின் தியாகபூமி, சேவாசதனம் போன்றவை வந்தன. 1952இல் வந்த பராசக்தி இந்த மாற்றத்தில் (Transition) ஒரு பெரிய வெட்டை ஏற்படுத்தியது என்பதை
மறுப்பதற்கில்லை. ஓர் இரவு, வேலைக்காரி, ரத்தக்கண்ணீர் என்று அண்ணா, கலைஞர், திருவாரூர் தங்கராசு இவர்களின்
செல்வாக்கு 1960களில் நீடித்தது. நாம் இங்கே நுட்பமாகப்
பார்க்கவேண்டியது திராவிட அரசியல் என்பது வர்க்க அரசியல் கிடையாது. சமூக
சீர்திருத்தம், பிராமணீய எதிர்ப்பு அரசியலையும், சாதி ஒழிப்பையும் பேசினார்களேயொழிய வர்க்க அரசியலைப் பேசத்
தவறினார்கள். அதாவது தேசிய அரசியல் பேசிய தேசியக்கட்சிகள் எவ்வாறு வர்க்க
அரசியலைப் பேசவில்லையோ, அவ்வாறே திராவிட இயக்கங்களும்
வர்க்க அரசியலைப் பேசவில்லை.
வர்க்க அரசியலைப் பேசத் தொடங்கிய இடதுசாரிப் படங்களாக அவன் அமரன், பாதை தெரியுது பார், தாமரைக் குளம், பாண்டித் தேவன் ஆகிய படங்களைத்தான் ’தமிழ் சினிமாவின் வரலாறு’ என்ற தனது நூலில் அறந்தை நாராயணன் பதிவு செய்கிறார். நான் சொல்லும் இந்த நான்கு படங்களிலும் ஈடுபட்டவர்கள் கம்யூனிஸ்டுகள். பாதை தெரியுது பார் - நிமாய் கோஷும் எம்.பி.சீனிவாசனும்(எம்.பி.எஸ்) ஒன்றுசேர்கிற இடம் இதுதான். முன்னவர் இயக்கமும், ஒளிப்பதிவும், பின்னவர் இசையும் என்று இணை சேர்ந்த இந்த இருவரும்தாம், இப்போது எளிதாகச் சொல்கிற Crowd Funding எனும் கூட்டுநிதிதிரட்டல் என்பதை அன்றே (1960) செய்து காட்டியவர்கள். தலைக்கு ரூபாய் 500 முதல் 5000 வரை வாங்கி குமரி பிலிம்ஸ் என்ற படக்கம்பெனியைத் தொடங்கி அந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். தோழர் M.R.வெங்கட்ராமன் (எம்.பி.எஸ்சின் சிற்றப்பா) படப்பிடிப்பைத் தொடங்கி வைக்க, ஒளிப்பதிவைத் தொடங்கி வைத்தவர் தோழர் ஜீவானந்தம். பாடல்களைப் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கே.சி.எஸ். அருணாச்சலம், ஜெயகாந்தன் எழுத திரைக்கதை வசனம் எழுதினார் ஆர்.கே.கண்ணன். மேற்கத்திய பாணி வடிவில் கர்நாடக இசையை வித்தியாசமாகப் பயன்படுத்தி எம்.பி.எஸ். அமைத்திருந்த இசையமைப்பைத் திரு.M.S.விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் பாராட்டி இருக்கிறார்கள். படம் தேசிய விருதை வென்றது; பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. படத்தின் வினியோக உரிமையை ஏ.வி.எம். நிறுவனமே வாங்கி எங்கோ சில தியேட்டர்களில் ஓரிரு நாட்கள் ஓட்டிவிட்டு படச் சுருளையே அழித்துவிட்டதாகக் குற்றச்சாட்டு உண்டு. இப்போது அந்தப் படத்தின் பிரதியே இல்லை; பாடல்கள் மட்டும் யூடியூப்பில் கிடைக்கின்றன.
திரைப்பட
உலகமும் எல்லாக் கலைகளையும் போல நிதிமூலதனம் குவிக்கப்பட்டவர்களின் கைகளில் தானே
இருக்கிறது! எனவே வர்க்க அரசியல் பேசிய படங்கள், அத்தகைய படங்களுக்கான முயற்சிகள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை. உதாரணமாக
அக்ரஹாரத்தில் கழுதை, பசி, குடிசை, தண்ணீர் தண்ணீர், ஏழாவது மனிதன், கண் சிவந்தால்
மண் சிவக்கும், ஒரு இந்தியக்கனவு, பாரதி, இரணியன் ஆகிய படங்கள். ஆனால் அவை தமிழ்
சினிமா வரலாற்றில் குறிப்பிடத்தக்க பதிவைச் செய்தன என்பது உண்மை. தமிழ்ச்சூழலை
விடவும் வங்கத்திலும், கேரளத்திலும் அரசியல் பண்பாட்டுச்
சூழல் மேம்பட்டவை என்பதால் அங்கே அவை வெற்றிபெற்றிருக்கின்றன. அங்கே புகழ் பெற்ற
எழுத்தாளர்களின் நாவல்கள், கதைகள் படமாக்கப்பட்டுள்ளன.
வங்கத்திலிருந்து வந்து, சென்னைவாசியாகவே வாழ்ந்து மறைந்தவர் நிமாய் கோஷ். திரை
உலகிலும், திரைப்படத் தொழிலாளர்
வாழ்க்கையிலும் ஒளி சேர்த்தவர் அவர். அவரது திரையுலகப் பணிகள் எவை?
1952இல் சோவியத் யூனியனுக்குச் சென்ற கலாச்சாரப் பரிவர்த்தனைக் குழுவில் தமிழ்நாட்டிலிருந்து இயக்குனர் கே. சுப்பிரமணியம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், மேற்கு வங்கத்திலிருந்து நிமாய் கோஷ் ஆகியோர் இருந்தார்கள். கிழக்கு வங்கத்திலிருந்து அகதிகளாக வந்து, கல்கத்தாவின் ரயில், பேருந்து நிலையங்களிலும், சேரிகளிலும், தெரு ஓரங்களிலும் தஞ்சம் புகுந்த மக்கள் படும் பாட்டை காமிராவை மறைத்துக்கொண்டு நேரடியாகப் பதிவாக்கி ’சின்னமுல்’ என்று படமாக்கியிருந்தார் நிமாய். ’சின்னமுல்’ என்றால் ’வேருடன் பிடுங்கி எறியப்பட்டவர்கள்’ என்று பொருள். தொழில்முறை நடிகர்கள் இல்லாமல், மக்களை வைத்தே அவர்களின் வாழ்வியல் அவலத்தை நேரடிக் காட்சியாக்கியிருந்தார். ரஷ்யாவின் பிரபல திரைப்பட இயக்குனர் புட்டோவ்கின் இந்தியாவுக்கு வந்திருந்தபோது கலாச்சார விருந்தினர் என்ற முறையில் இந்திய அதிகாரிகள் அவருக்குத் திரையிட்டுக் காண்பித்தவையெல்லாம் யானை, பாம்பு, பல்லி இடம்பெற்ற மாயக்கதைகள் அல்லது மேஜிக் படங்களாக இருந்தன. இதனால் நொந்துபோயிருந்த அவர் தற்செயலாகச் ’சின்னமுல்’ படத்தைப் பார்த்துவிட்டு ”முதன்முதலாக ஓர் இந்தியப் படத்தைப் பார்க்கிறேன். இதுதான் இந்தியா” என்று மகிழ்ச்சியில் குதிக்கிறார். அதை இயக்கியவர் யார் என்று கேட்கிறபோது குட்டையான ஒரு சின்ன மனிதரை (நிமாய் கோஷ்) அழைத்துவந்து காண்பிக்கிறார்கள். அது, அவருக்கு மற்றுமோர் ஆச்சரியம். அந்தப் படத்தை வாங்கி மொழி மாற்றி ரஷ்யாவில் நூற்றுஎண்பது இடங்களில் திரையிட்டிருக்கிறார்கள்.
அதன் பின்னர்தான்
நிமாய் சோவியத் ரஷ்யாவிற்குச்
சென்றார். ரஷ்யாவில் நிமாய் கோஷுக்குக் கிடைத்த மிகப்பெரிய
வரவேற்பை பார்த்தபின்புதான் அவரின் சிறப்பை, தனித்துவத்தை என்.எஸ்.கே, அறிந்துகொள்கிறார்; தமிழ்நாட்டுக்கு வருமாறு அழைக்கிறார். அதுதான் நிமாய் கோஷ் என்னும் மாபெரும் கலைஞனின் தமிழ்த்
திரையுலகப் பிரவேசத்திற்கும், பின்னாளில் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கிய
சிற்பியை நாம் இங்கே பெற்றமைக்கும் அடிப்படையாக அமைந்தது. அதற்காகக் கலைவாணரை
நினைவு கூர்வது நமது கடமை. சென்னை வந்த பிறகு அவர் ஒளிப்பதிவு செய்த முதல் படம்
‘இன்ஸ்பெக்டர்’. ஆனால் அதற்கு முன்பே என்.எஸ்.கிருஷ்ணன்
இயக்கிய ‘மணமகள்’ படத்திற்கு அவர் ஒளிப்பதிவு செய்ததாகத் தியடோர் பாஸ்கரன்
சொல்கிறார். பாலச்சந்தரின் முதல்
படமான ’நீர்க்குமிழி’க்கு அவர்தான்
ஒளிப்பதிவாளர். சத்யஜித் ரேயின் நண்பரான
அவர் இயக்கிய சின்னமுல் பதேர் பாஞ்சாலிக்கு
முந்தைய படம் என்பது குறிப்பிடத் தக்கது.
நிமாய் கோஷும் எம்.பி.சீனிவாசனும் சேர்ந்துதான் தமிழ்த் திரையுலகத்தின் சினிமா இசையமைப்பாளர் சங்கத்தை (Cine Musicians’ Union ) முதன்முதலாகத் தொழிற்சங்கமாகப் பதிவு செய்தார்கள். இதுதான் திரைப்பட இசைக் கலைஞர்களுக்கு (பாடல் பதிவு, பின்னணி இசைப்பதிவு முடிந்தவுடன்) உடனடி ஊதியத்தைப் (Spot Payment) பெற்றுத் தரவும், இசை அமைப்பாளர், பாடலாசிரியருக்கு வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களுக்கு ராயல்டி பெறவுமான ஐரோப்பிய முறையை இங்கும் அமல்படுத்தக் காரணமாக இருந்தது. அதுவரை நாயகர்கள் அல்லது முக்கியமான நடிகர்களை மட்டுமே கொண்டாடிக்கொண்டும், மற்ற நடிகர்களை உதிரிகள்(Extra) என்றும் அழைக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி இனி அவர்களைத் துணை நடிகர்கள் என்றுதான் அழைக்கவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி அவர்களுக்கான துணை நடிகர்கள் சங்கம் நிறுவப்பட்டது. தொடர்ந்து ஒப்பனைக் கலைஞர்கள் சங்கம், திரைப்பட எழுத்தாளர் சங்கம், சண்டைப் பயிற்சியாளர் சங்கம், துணை இயக்குனர்கள் சங்கம்,ஒளிப்பதிவாளர் சங்கம், தயாரிப்பு உதவியாளர் சங்கம் என்று பல்வேறு சங்கங்களை ஏற்படுத்தி, அவற்றை ஒருங்கிணைத்து FEFSI என்ற திரைப்பட தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாகும் அளவுக்கு இவர்கள் நிகழ்த்திய சாதனை சிறப்பானது.
அதுவரையிலும்
பெரும் பணக்காரர்கள், ஸ்டுடியோ அதிபர்களின்
பிடியிலிருந்த திரைத்துறையை, தொழிலாளர்களை சட்டப்பாதுகாப்பிற்குள்ளும், அரசின் பார்வைக்குள்ளும் திருப்பிய பெரும் பணி அது. நிமாய் தன்
சொந்த பட வாய்ப்புகளை ஒதுக்கிவிட்டுச் சக தொழிலாளரைப்
பற்றித்தான் எப்போதும் சிந்தித்துக்கொண்டிருந்தார். நிமாய் கோஷ் பற்றி சுனிபா பாசு
என்பவரால் எழுதப்பட்ட நூல் தேசிய திரைப்பட ஆவணக் கழகத்தின்(NFAI) முயற்சியில் வெளியிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்
அம்ஷன் குமார் மொழியாக்கத்தில், திரு. கருணாபிரசாத்
அவர்களின் ’போதிவனம்”
அதைத் தமிழில் வெளியிட்டிருக்கிறது. நிமாய்
கோஷ் பற்றிய நூல் தமிழில் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. நிமாய்,
எம்.பி.எஸ். இருவரும் இடதுசாரிகள் என்பதால் திட்டமிட்டு பட அதிபர்கள் அவர்களை ஒதுக்கினார்கள்.
மாப்ளா கிளர்ச்சி ஆங்கிலேயரை
எதிர்த்த அரசியல் போராட்டமா?
சமூகத் தளத்தில் அதன் தாக்கம் என்னவாக இருந்தது?
அது ஒரு வர்க்கப் போராட்டம்தான். பிரிட்டிஷ் ஆட்சி
அதிகாரம், நிலப் பிரபுக்களான ஜென்மிகள் என்று சொல்லப்படும்
நம்பூதிரிகள், இவர்களின் சுரண்டல் வர்க்கத்தின் கூட்டணிக்கு எதிராகப் போராடிய
குத்தகை விவசாயிகளான மாப்ளாக்களின் போராட்டம் அது. குத்தகை விவசாயிகளில்
பெரும்பான்மையினர் இஸ்லாமிய மாப்ளாக்களாக இருந்ததாலும், கிலாபத் இயக்கம் அதை ஆதரித்ததாலும் திசைதிருப்பலாக அதை
இஸ்லாமிய மாப்ளாக்களுக்கும், இந்து நம்பூதிரிகளுக்குமான போராட்டமாக மதச்சாயம் பூசினார்கள்.
நம்பூதிரிகள் காலனியாட்சிக்கு ஆதரவாக நின்றதால் மாப்ளா விவசாயிகளிடமிருந்த குத்தகை உரிமையைப் பறித்து பிரிட்டிஷ்
அரசாங்கம் நிலத்தை நம்பூதிரிகளுக்கு வழங்கியது. இதை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த
மாப்ளா விவசாயிகளின் ஆயுதப் போராட்டம்தான்
மாப்ளா கிளர்ச்சி. இந்தப்
போராட்டத்தில் மாப்ளாக்கள் கூடவே செருமர்கள்,
தீயர்கள் எனும் தாழ்த்தப்பட்ட மக்களும், சில நாயர்களும் இருந்தார்கள். அடிப்படையான நில உறவுதான்
கிளர்ச்சியின் மையமாக இருந்தது.
காலனியாட்சியில் நாடுகடத்தப்பட்டவர்களுக்கான சிறைச்சாலையாக
இருந்த அந்தமான் ‘இந்தியாவின் சைபீரியா’ என்றே அழைக்கப்பட்டது. அப்படி அங்கு சிறை
வைக்கப்பட்டிருந்த மாப்ளாக்களின் வரலாறு என்ன?
1857
சிப்பாய்ப் புரட்சிக்குப் பிறகு இந்தியாவில் நிகழ்ந்த அரசியல் போக்குகள் காரணமாக அரசியல்
கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்தபோது சிறைகளில் இடம் இல்லாத நிலையே ஏற்பட்டது, ஏற்கனவே 1796இல் கைவிடப்பட்ட அந்தமான் சிறைக்கட்டுமானத்
திட்டத்தைப் பிரிட்டிஷ் நிர்வாகம் மீண்டும் கையில் எடுத்தது. கைதிகளைகொண்டே சிறையைக்
கட்டி அவர்களையே அதில் சிறை வைத்த தந்திரத்தை என்ன சொல்ல! 1921 மாப்ளா கிளர்ச்சியில்
ஈடுபட்ட 1,133 பேரை அந்தமான் சிறையில் அடைத்தது. இவர்களில் பெண்களும் இருந்தார்கள்.
இன்று அந்தமானில் நாம் பார்க்கும் முஸ்லிம்களில் மிகப்பலர் மாப்ளா சமூக மக்கள்தான்.
தமது சொந்த மாநிலம் ஆன கேரளாவின் நினைவுகளை நிலைநிறுத்த அந்தமானில் காலிகட், வாண்டூர்,
மன்னார்கட், திரூர், மஞ்சேரி என்று தாங்கள் உருவாக்கிய ஊர்களுக்குப் பெயர் வைத்துக்கொண்டார்கள்.
ஆம், காடாகக் கிடந்த தீவை நாடாக மாற்றியவர்கள் அவர்கள்தாம்.
இதே
கொடுஞ்சிறையில்தான் புரட்சியாளன் பகத்சிங்கின் தோழர்கள் சிவவர்மா, பட்டுகேஸ்வர் தத்
ஆகியோரும், பிமல் குமார் தாஸ்குப்தா, சுசீல் குமார் தாஸ்குப்தா, ப்ரபோத் சந்திர ராய்,
கமல்நாத், புபால் கோஷ் ஆகிய புரட்சியாளர்களும் அடைக்கப்பட்டார்கள். அது அனைவரும் வாசிக்க
வேண்டிய நெடிய தனிப்பட்ட போராட்ட வரலாறு, காலத்தின் தேவை.
முதலாளித்துவவர்க்கம் கட்டமைத்திருக்கும் அரசின் அங்கீகாரம் பெற்றுதான் இங்கே ஒரு பொதுவுடைமைக்கட்சி கூட இயங்கமுடியும். எதிரியின் அதிகார வரம்பிற்குள் நின்றுகொண்டு அதே முதலாளித்துவத் தேர்தல் நடைமுறையில் நின்று வர்க்க அரசியல் பேசுவது, வர்க்கவிடுதலை என்பதெல்லாம் சாத்தியந்தானா?
1946-50 வரையான வங்காளத்தின் தெபாகா எழுச்சி, 1946 வரை புன்னபுரா வயலார் சமர், 1700களில் தொடங்கி 1922 வரை நடைபெற்ற மாப்ளா கிளர்ச்சி, 1947க்குப் பின்னும் தொடர்ந்த தெலுங்கானாப் புரட்சி என இவை
யாவும் அரசால் ஒடுக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் ஆயுதக்கிளர்ச்சி வழியில் இனி சமூக
மாற்றம் நிகழாது என்று ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஆயுத வழியைக் கைவிடுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம்தான் நமது
வழிமுறை என்று முடிவெடுத்து
அதுதான் இன்றுவரையிலும்
தொடர்கிறது. நாம் பயணித்த இந்த வழியில் இன்றைக்கு எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறோம் என்று பார்த்தால் அது
ஒரு தேய்மானத்துக்கே இட்டுச்சென்றுள்ளது, சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியைப்
பெறவில்லை என்பதை மறுக்கமுடியாது. அதற்காகக் கட்சி ஆயுத வழிக்குப்
போயிருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆயுத வழியைக் கைவிட்டுவிட்டதாக அறிவித்த
அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும், அதன் ஊடாகவும் இந்திய அரசியலில் மிகப்பல மாற்றங்களைப் பார்க்கமுடிகிறது.
குறிப்பாகக் கடந்த முப்பது வருடக் காலக்கட்டத்தில்
இந்துத்துவ வலதுசாரி சக்திகள் தமது பலத்தை அதிகரித்து பல மாநிலங்களிலும், மூன்றாவது முறையாக மையத்திலும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்திருக்கிறது.
நாளடைவில் நாடாளுமன்றத்தேர்தல் அரசியல் என்ற வலையில் சிக்கி நாம் தேய்ந்து கரைந்து போய்விட்டோமோ என்று
கருதுகிறேன். நாம் பெருமையுடன் பேசிக்கொண்டிருந்த மேற்குவங்கத்தை, திரிபுராவை இழந்துவிட்டோம். கேரளத்தில் திருப்திப்பட்டுக்கொள்ளலாம்
என்றாலும் சமீப நாடாளுமன்றத் தேர்தல் முடிவு சிந்திக்க வைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் சில எம்.பி.க்கள் இருக்கிறார்கள் என்றால், 1967க்குப்
பிறகான நீண்ட திராவிட அரசியல் வளர்ச்சி
என்ற கண்ணோட்டத்திலும், தொடர்ச்சியாக மைய அரசுகளின் எதேச்சாதிகாரத்துக்கு
எதிரான இங்குள்ள மக்களின் மனநிலையையும், சமீபகாலத்தில் ஜெயலலிதாவிற்குப் பிறகு நிகழ்ந்த
அதிமுகவின் சரிவையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.
முதலாளித்துவக் கட்சிகள் அவர்களுக்குள்
மோதிக்கொண்டாலும் தங்களுக்குப் பொதுவான எதிரி இடதுசாரிகள் என்பதில் தெளிவாக
இருக்கிறார்கள். மேற்கு வங்கத்திலும்,
திரிபுராவிலும் பி.ஜே.பி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், நக்சல் இயக்கம் இவர்கள் இணைந்துதான் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியை அழித்தார்கள். கட்சித் தோழர்கள் பலர் குடும்பத்தோடு கொல்லப்பட்டதும், பல தோழர்கள்
ஊரைவிட்டு வெளியேறியதும், வீடுகளும் கட்சி அலுவகங்களும் தீவைத்துக் கொளுத்தப்பட்டதும் நடந்தன. 2024 தேர்தல் சமயத்தில்தான் கட்சித் தோழர்கள் பலர் வீடுகளுக்கே
திரும்பியிருக்கிறார்கள்; பல கட்சி அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட்டு
திறக்கப்பட்டுள்ளன என்று பார்க்கிறோம். இந்தப் பின்னடைவுகளை ஆராய்வது கட்சியினுடைய
வேலை; நான் அதற்குள் போக விரும்பவில்லை.
குறிப்பாக சில நிகழ்வுகளைப் பதிவு செய்ய
விரும்புகிறேன். ஐம்பத்தொன்பது இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன்
இயங்கிய யு.பி.ஏ.1 அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றது மிகப்பெரிய அரசியல் பிழை
என்று கருதுகிறேன். இந்த நகர்வால் எதிர்காலத்தில் பலன் பெறப்போவது யார் என்ற தொலைநோக்குப்பார்வை
இடதுசாரிகளுக்கு இல்லாமல் போனதா? அதனால் பலன் பெற்றவை வலதுசாரி இந்துத்துவா சக்திகள்தாம் என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த
நகர்வு இந்திய அரசியலின் எதிர்காலத்தில் மட்டுமின்றி இடதுசாரி அரசியலுக்கும்
ஆகப்பெரிய எதிர்வினையை ஏற்படுத்தியது.
ஏறத்தாழ அதே காலகட்டத்தில் மேற்கு வங்கத்தில்
இடதுசாரி அரசு தொழில் வளர்ச்சி என்பதன் பெயரால் எடுத்த முடிவுகளை வர்க்க எதிரிகள்
தமக்குச் சாதகமாகத் திருப்பி மக்களை அரசுக்கு எதிராக ஒன்று திரட்டினார்கள்.
இடதுசாரி அரசுக்கு எதிர் அணியில் இருந்தவர்கள் யார் யார் என பின்னர் அம்பலம் ஆனது,
சரிதான். நிலம் மீதான உறவு என்பது இந்தியமக்கள் உணர்வுகளுடன் நேரடியாகத்
தொடர்புடையது. இடதுசாரிகளை விடவும் வேறு
யாராலும் இதைச் சரியாகப்
புரிந்துகொள்ளமுடியாது. அவ்வாறு இருக்க, நிலச்சீர்திருத்தம், நிலப்பங்கீடு
ஆகியவற்றில் பெரும் சாதனை செய்த ஒரு இடதுசாரி அரசே தொழில் வளர்ச்சி என்ற பெயரில்
அதே நிலத்தை மீண்டும் கைப்பற்றியது அரசுக்குப் பாதகமாக முடிந்தது. டாடா என்ற
பெருமுதலாளி மேற்கே குஜராத்துக்குத் தனது கார்த் தொழிற்சாலையைப் பெயர்த்து எடுத்துக்
கொண்டு போனார், அவருக்கு ஒரு நட்டமும் இல்லை. ஆனால் இந்த முடிவால் ஏற்பட்ட
சரிவுகளில் இருந்து இடதுசாரிகள் இன்னும் மீளவில்லை என்பது கசப்பான உண்மை.
பொதுவாக ஒரு இடதுசாரி இயக்க அனுதாபியாகவும், இடதுசாரிகள் மட்டுமே மக்களின் பிரச்சனைகளை வர்க்கக் கண்ணோட்டத்துடன்
அணுகித் தீர்க்கமுடியும் என்ற நம்பிக்கையுள்ள ஒருவனாகவும் பார்க்கும்போது இந்தத்
தேய்மானம் நமக்குப் பெரும் கவலைதரக்கூடியது என்பதுதான் எனது கருத்து.
தங்கள் நூலில் பயண அனுபங்களை
விரிவாகப் பதிவிட்டிருக்கிறீர்கள். உணர்வியலாக (Emotional) அணுகும் அளவிற்குப் பயணங்களை நாம் அப்படிப் பார்க்கமுடியுமா?
பயணம் என்பது வெறும் இடப்பெயர்வு மட்டுமல்ல. அதற்கொரு
விரிவான பொருளிருக்கிறது. ஆற்றங்கரை நாகரிகம் என்று சொல்கிறோம்-வெறுமனே அது
மட்டும்தானா நாகரிகம்? மலையிலிருக்கும் மனிதர்களுக்கும், காட்டிலிருக்கும் மனிதர்களுக்கும் அவரவருக்கான நாகரிகம்
இருக்கத்தானே செய்கிறது. ராஜஸ்தான், ஒரிசா, வடகிழக்கில் ஷில்லாங், சிலிகுரி, வடக்கே
டேரா டூன், அதைத் தாண்டி மசூரி ஆகிய ஊர்களுக்கும் அந்தமானுக்கும் போயிருக்கிறேன்.
நமக்கு இருப்பது மாதிரியே அவர்களுக்கேயான மொழி,
உடை, கலாச்சாரம், உணவுப்பழக்கங்கள், பண்பாடு இருப்பதைப்
பார்க்கமுடிகிறது. இந்தியாவில் தனித்தனியான கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், பண்பாடு இருந்தாலும் இந்தியன் என்பதில்
ஒற்றையாய் ஒன்றுபடுவதாகவும், இதை அதன் பன்மைத்துவம் என்றும்
சொல்கிறோம். அந்தப் புள்ளியிலும் கூட நான் வேறுபடுகிறேன்; இந்தியன் என்று இங்கே யாருமேயில்லை. தமிழர் தமிழராக, மலையாளி மலையாளியாக,
காஷ்மீரி காஷ்மீரியாக
இருக்கிறார்கள். ஷில்லாங்கில் காசி மொழி பேசும் மக்கள் அவர்கள் கலாச்சாரத்துடன்
இருக்கிறார்கள். அந்தமான் நிக்கோபார்
தீவுகளில் ஆறு விதமான பழங்குடி இனங்கள் உள்ளன.
ஒற்றைக் கலாச்சாரம், ஒரே பண்பாடு, ஒரே உணவு, ஒரே மொழி, ஒரே உடை, ஒரே மதம் என்பது சாத்தியமில்லாத ஒன்று- அதன் முடிவு ஒற்றை
ஆதிக்கம் மட்டுமே. எப்போது இவர்கள் எல்லாரையும் இந்தியன் என்று ஒற்றை அடையாளத்தில்
சுருக்க முயற்சிக்கிறார்களோ அப்போதுதான் பிரச்சனையே. அவரவருக்கான அடையாளத்தை
ஆட்சியாளர்கள் அங்கீகரிக்கும்போதுதான்
இந்தியா ஒற்றுமையாக இருக்கமுடியும். எனவே அவற்றை நாம் அங்கீகரிக்க வேண்டும்; மதிக்க வேண்டும். இதைத் தான் பயணம் நமக்குக் கற்றுத் தருகிறது.
நான் அந்தமான் போயிருந்தபோது அங்குள்ள ஜார்வா பழங்குடிகளைப் பார்த்தேன். அவர்கள் 60,000 வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து கடல்வழியாகப் பயணித்து அந்தமானில் குடியேறியவர்கள் என்று வரலாறு சொல்கிறது. காட்டின் ஊடான இரண்டு மணி நேரப் பயணத்தில் காரிலிருந்து இறங்கக்கூடாது; பழங்குடியினரைப் புகைப்படம் எடுக்கக்கூடாது; தொடக்கூடாது; அவர்களுக்கு உணவு கொடுக்கக்கூடாது என்று நிபந்தனை (Restricted Travel) இருக்கிறது. அவர்களின் ஆப்ரிக்க மரபு, நோய் எதிர்ப்புத் திறன், பாரம்பரியமான உடலமைப்புக்கூறு இவையெல்லாம் பிரத்யேகமானவை. அவர்களின் கறுப்பே வேறு. மினுமினுப்பான அழகிய கறுப்பு. அவர்களுக்குள்ளேயேதான் மண உறவு; வேறு எந்த இனக்குழுவுடனும் தொடர்பில்லை.
நாங்கள் காரில் சென்று கொண்டிருந்த போது ஒரு வளர்ந்த வாலிபனும் இளம்
பெண்ணும் எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய மான்-நம்மால் அதைத்
தூக்கவே முடியாது-அதை அநாயசமாக தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு கையில் பெரிய
அம்புடன் வந்தவன், அந்த அம்பால் காரைத் தட்டி ஏதோ
சத்தமாகப் பேசினான். ‘நீங்கல்லாம் ஏன் இங்கே வந்தீங்க’ன்னு அவன் கேட்பதாகத்தான் நான் புரிந்துகொண்டேன். நம்மிடம் கேட்பதற்கு அவனுக்கு
வேறு என்ன இருக்கிறது? அந்தக் காட்சியைப் பார்த்தபோது சங்க இலக்கியத்திலோ ஐம்பெரும் காப்பியங்களிலோ கம்பராமாயணத்திலோ காண இயலாத ஒரு செவ்வியல் காப்பியக் காட்சியாகத்தான் நான்
உணர்ந்தேன். அது 2015-ல் பார்த்த காட்சியல்ல; 60,000 ஆண்டுகளுக்கு முந்தைய காட்சி அந்தக் கணத்தில் மீண்டும் கண்
முன்னே நினைவூட்டப்பட்டதாகவே உணர்ந்தேன்.
காடு மலைகள் பார்த்து ரசிக்க மட்டுமல்ல,
மனிதர்களின் பல்வேறுபட்ட நாகரிகங்களை,
வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் பயணங்கள் பயன்படுகின்றன.
படைப்பாளர், படைப்பாளர் சங்கத்தின் செயற்பாட்டாளர் என்ற வகையில், இடதுசாரி கலை இலக்கிய அமைப்புகளின் பணிகள் எப்படி இருக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள் ?
தனிநபர்களின் வாசிப்பு என்பதைத் தாண்டி கலை இலக்கியப்
பணிகளை ஒரு இயக்கமாக முன்னெடுக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. கலை இலக்கியப்
பெருமன்றமும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
கலைஞர்கள் சங்கமும் தமிழ்நாட்டில் பிரதான கலை இலக்கியப் பண்பாட்டு அமைப்புக்களாக
இயங்கிக்கொண்டிருக்கின்றன. எப்படி ஒரு கட்சியில் தொழிலாளர், விவசாயி, பெண்கள், மாணவர் என அவரவரையும் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்புகள் உள்ளனவோ இவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய பொதுவான அமைப்பாக கலை இலக்கிய
அமைப்புகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவினருக்கும் பண்பாட்டுத் தளத்தில் வழிகாட்டவும், ஒவ்வோர் அமைப்பிலிருந்தும் கலை இலக்கியகர்த்தாக்களை
உருவாக்கவும் ஆன இரண்டு திசைகளில் அவை பங்காற்றுவதால் தனித்துவமானவையாகத்
திகழ்கின்றன. எழுத்தும் படைப்பும் மட்டுமல்ல, பாட்டு, இசை, ஓவியம் என்று கலைகள் விரிவான வடிவமும்
தளமும் கொண்டவை. சுத்தமான கர்நாடக
சங்கீதம் எப்படிக் கலை வடிவமோ அதேபோல பாட்டும்,
கூத்தும், பறையும், கானாவும் கலை வடிவமே.
எம்.பி.எஸ். சொல்வதுபோல் எல்லாப் படைப்புகளையும் போல
இசையும் மனிதனின் உருவாக்கத்தில் விளைந்ததுதான். மனித சமூகம் வளர்ந்து வரும்போது
அதன் கூடவே எல்லா வடிவங்களும் வளர்ந்து
வரும். சமூக உறவுகளுக்குள், உற்பத்தி உறவுகளுக்குள் ஆன முரண்பாட்டின் விளைவாக, முதலாளித்துவ
அமைப்பு உழைப்பாலும், உழைப்பாளராலும் உருவான அனைத்துக் கலைப்படைப்புகளையும்
கைப்பற்றிக்கொள்கிறது. முதலாளி –பாட்டாளி வர்க்கப் பிரிவினை என்பது
சொத்துடைமையில் மட்டுமல்ல, ஏற்கனவேயிருந்த கலை வடிவங்களையும் அபகரித்து அது தன்
ஆளுமைக்குள் வைத்துக்கொள்கிறது. அதே கலை வடிவங்களை உழைக்கும் மக்களின் சிந்தனைத் திறனை
மழுங்கடிக்கக்கூடிய ஆயுதங்களாகத் தந்திரமாக மாற்றிப் பயன்படுத்துகின்றது. புத்தகப்
பதிப்பாளர்களும், புத்தகச் சந்தையில் கடைகளும் பெருகியிருந்தாலும் மக்கள் பயன்பாட்டுக்கான படைப்புகள் போதுமானதாக
இல்லை அல்லது கருத்தாக்கத் தளத்தில்
இன்னமும் நாம் சரியான இடத்தை எட்டவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இதைப் பொது
உடைமை இயக்கங்களின் கலை இலக்கியப் பண்பாட்டு அமைப்புகள் கவனத்தில் கொண்டு வாசிப்புத்தளத்தை
விரிவுபடுத்தவேண்டும்; தத்துவார்த்த அடிப்படையில் சரியான படைப்புகளை உருவாக்கவும், அதற்கான படைப்பாளிகளை
உருவாக்கவும் தீவிரமாக செயலாற்ற வேண்டும். கருத்தியல் தளத்தில் தொடர்ந்த போரை நாம்
நிகழ்த்திக்கொண்டே இருக்க வேண்டும் என்று வலதுசாரி இந்துதுவா அமைப்புகளின் திட்டமிட்ட
துல்லியமான செயல்பாடுகள் நம்மை
எச்சரிக்கின்றன.
....
பேசும் புதியசக்தி,
அக்டோபர் 2024.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக