பெண் மழை (சிறுகதை)
கோவிந்தன் பண்ணாடி வீட்டுக்கும் கோனார் வீட்டுக்கும் இடையில் உள்ள நாலடி சந்தின் மூலையில் மழைக்காலத்தில் ஓட்டுக் கூரையில் இருந்து அருவியெனக் கொட்டும் மழைநீரில்தான் ம்மா குளிப்பாள். மழை
பெய்யத்தொடங்கும்போதே அவள் முகம் சந்தோசத்தில் பிரகாசிக்கத் தொடங்கும். அது மழைக்காலத்துக்காக என்றே அவள் காத்திருப்பது போலவோ அல்லது மழை அவளுக்காக மட்டுமே பிரத்தியேகமாகப் பெய்வது போலவோ இருக்கும். வாப்பா வந்து "எங்கடா அவள?" என்று சத்தம் போடுவதற்கு முன் வீட்டுக்கு வந்து விடுவாள்.
மதுரையில் நாங்கள் குடியிருந்த வாடகை வீடு இரண்டு பக்கமும் நான்கு நான்கு வீடுகள் கொண்ட காம்பவுண்டு. லைன் வீடு. சிறுநீர் கழிப்பதற்காக மட்டும் மூன்றுக்கு மூன்று ஒரு கழிப்பறை இருந்தது. பிற வசதிக்கு நகராட்சி பொதுக் கழிப்பறைக்குத்தான் ஓட வேண்டும்.
பல்லாயிரம் நெசவாளர்கள் வாழ்ந்து வந்த அந்த ஊரில் குளிக்க வேண்டும் எனில் வைகை ஆற்றில் ஐம்பது அடி சுற்றளவில் நாற்பது அடி ஆழத்தில் இருக்கும் கிணற்றில் இருந்து பம்ப் செட்டில் 15 பைசா கொடுத்து ஆண்கள்
குளிப்பார்கள். ஆற்றில் ஆங்காங்கே முளைத்து இருக்கும் முட்புதர்களில் காலைக்கடனுக்கு ஒதுங்குவார்கள். ம்மாவும் அவளைப் போன்ற பெண்களும் எங்கே எப்படிக் குளித்தார்கள் என்று அந்த வயதில் நான் யோசித்தது இல்லை. இப்போதும் அந்தக் கேள்விக்குப் பதில் தெரியவில்லை. பறவைகளும்
விலங்குகளும் தம் வாழ்நாள் முடியும்போது எங்கே சென்று உயிரை நீத்துக் கொள்கின்றன என்று யாருக்காவது தெரியுமா? இயற்கையாக இறந்துவிடும் பறவைகள் விலங்குகளின் உடல்களை எங்கேயாவது நீங்கள் பார்த்து இருப்பீர்களா?
***
வாப்பா, ம்மா, பெரியண்ணன் உட்பட நான்கு ஆண்பிள்ளைகள் கொண்ட குடும்பம். தென்காசி எங்கள் சொந்த ஊர். உடனடியாக குற்றாலம் உங்கள் நினைவுக்கு வரலாம். குற்றாலம் மட்டும் அல்ல, தென்காசியைச் சுற்றி
இருக்கும் ஆறுகள், ஏரி குளங்கள், அணைக்கட்டுக்கள் என நீராதாரங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
தென்காசியின் பெரும்பகுதி முஸ்லிம் மக்கள் கைத்தறி நெசவாளர்கள். சேலையும் சீசன் துண்டு என்று பிரபலமாக அறியப்பட்ட காசித்துண்டு நெசவும்தான் இவர்களின் பிரதானத் தொழில். கூடவே பீடித் தொழிலும் உண்டு. குழித்தறி நெசவு அது. தரையில் குழி தோண்டி அதில்தான்
தறியை நிறுவி இருப்பார்கள். மழைக்காலங்களில் குழியில் நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி தொழில் செய்ய முடியாதபடி ஆகும்.
ஐந்து வயது இருக்கும் எனக்கு. ஒருநாள் இரவு தூங்கிக்கொண்டு இருந்த என்னை எழுப்பி ஒரு மாட்டுவண்டியில் ஏற்றினார்கள். நாலைந்து சாக்கு
மூட்டைகள் இருந்தன. மீண்டும் எழுப்பி ஒரு ரயிலில்ஏற்றினார்கள். மீண்டும் எழுப்பும்போது வெளிச்சமாக இருந்தது. மதுரை வந்துவிட்டதாக அண்ணனும் வாப்பாவும் பேசிக்கொண்டார்கள். பஞ்சம் பிழைக்க ராவோடு ராவாக
மதுரைக்கு வந்திருந்தோம். பெரிய அண்ணனுக்கும் எனக்கும் பதினொரு வயது வித்தியாசம்.
மெட்ராஸ் மண்ணடியில் வாப்பா வெண்கலப் பாத்திரம்வியாபாரம் செய்தார் என்று அண்ணன் சொல்லித் தெரியும். அதன் பின்னர் அவர் தென்காசி வந்து சிறிய ஒட்டல் நடத்தி வந்தது புகை போல நினைவில் உள்ளது. அதன் பின் சேலை நெய்யும் குழித்தறியை வீட்டிலேயே நிறுவினார். இவை யாவும் தொலைந்து மதுரைக்கு ஏன் வந்தோம் என்று கேட்டுத் தெரிந்துகொள்ளும் வயதில் நான் இல்லை.
தென்காசியில் குழித்தறி ஆனாலும் மதுரையின் ஜகார்ட், பேடு பலகைத்தறி ஆனாலும் இரண்டுமே மிகுந்த உடலுழைப்பு வேண்டுவன. இரண்டு கைகள், இரண்டு கால்கள், கண்கள், காது என அனைத்துப் புலன்களும் தொடர்ந்து ஒருசேர இயங்க வேண்டும். நெசவில் ஈடுபடும் ஆண்கள் சாரம் கட்டிக்கொள்வார்கள். மேலே வெற்றுடம்புதான். பெண்கள் அப்படி வெற்றுடம்புடன் இருக்க முடியாது. வெயில் காலத்தில் இந்த அவஸ்தை இன்னும் அதிகம் ஆகும் எனில் பெண்களின் பாடு கேட்கவே வேண்டாம். நெய்யும்போது மிதியடியை மிதிக்கும்போது சேலை முழங்கால்வரை
உயரும். வலதுகையால் ஊடிழை நாடாவை இடதும் வலதும் வீசும்போது இடுப்பும் மார்பும் தெரிவதும் அசைவதும் தவிர்க்க முடியாதவை. பல நூறு ஆண்கள் மத்தியில் இப்படி வேலை செய்தால்தான் குடும்பத்தில் அடுப்பு எரியும். தவிர குடும்பத்தின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கம்பெனியில்
வேலை செய்வார்கள். வாப்பா ஓரிடம், ம்மா ஓரிடம், மூத்த அண்ணன் ஓரிடம். தம்பிகள் ஆன நாங்கள் மூன்று பேரும் பள்ளிக்கூடம் போனோம்.
காலையில் நெசவுக்குப் போனால் வேலை முடித்து மடியை மடித்து ஒப்படைத்து கூலி வாங்கி வீடு திரும்ப ராத்திரி ஏழு மணிக்கு மேல் ஆகும். அதன் பின்தான் சமைக்க வேண்டும். பல நேரங்களில் சாப்பாடு தயாராகும்போது நானும் தம்பியும் தூங்கி இருப்போம்.
காம்பவுண்டு லைனின் எட்டுக் குடும்பங்களில் நாங்கள் மட்டுமே முஸ்லிம். மாமி, மாமா என்றுதான் மற்ற குடும்பங்களும் தெருக்காரர்களும் பழகினார்கள். தீபாவளி, பொங்கல், சித்திரைத் திருவிழா, தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்குவது, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, ஐயப்பனுக்கு
மாலை போடுவது இவைதான் நான் அறிந்த பண்டிகைகள். ரம்ஜான், பக்ரீத் போன்றவற்றை எப்போது கொண்டாடினோம் என்று நினைவில்லை. கடுமையான உடலுழைப்பை வேண்டிய நெசவுத்தொழிலில் நோன்பு
இருப்பதெல்லாம் சாத்தியம் இல்லை. அது பற்றி வாப்பாவோ ம்மாவோ ஒருபோதும் பேசிக்கொண்டதும் இல்லை. எனக்கு நினைவு தெரிந்து வாப்பாவோ ம்மாவோ தொழுததும் இல்லை, பள்ளிவாசலுக்குச் சென்றதும் இல்லை. பெருநாள் என்று வாப்பாவும் ம்மாவும் பேசிக்கொள்வார்கள். அதற்கென புது உடைகள், கொண்டாட்டம் என்று எந்த அடையாளமும்
இருக்காது. கறிக்குழம்பு வைப்பார்கள். அவ்வளவுதான்.
எங்களுக்கான புதுத்துணி என்பது பள்ளிக்கூட யூனிஃபார்ம் மட்டுமே. எப்போதும் உழைப்பு, பிள்ளைகளின் படிப்பு, அதற்கென உழைப்பு... இதுதான் வாழ்க்கை. குடும்பச்செலவைச் சரிக்கட்ட வாப்பா வட்டிக்குக் கடன் வாங்குவார். தென்காசியில் இருந்து உறவினர்கள் வந்தால் அது தனியான
செலவாகும். அதைச் சமாளிக்கப் பெரிய செம்பு தேக்சாவை என்னிடம் கொடுத்து பின்வாசல் வழியாக அடகுக்கடைக்கு அனுப்புவார் வாப்பா. பின்னால் வந்து பணத்தை வாங்கி வருவார்.
***
திருநெல்வேலியில் பெரிய அண்ணனுக்குப் பெண்பார்த்து கல்யாணம் முடித்தார்கள். திருநெல்வேலி போனபோதுதான் அங்கே பாய் முடையும் தொழிலில் முஸ்லிம் பெண்கள் ஈடுபடுவதைப் பார்த்தேன். கூடவே பீடி இலை சுற்றி கூலிக்கு வேலை செய்தார்கள்.
தென்காசியிலும் சரி மதுரையிலும் சரி திருநெல்வேலியிலும் சரி, புர்கா அணிந்த ஒரே ஒரு முஸ்லிம் பெண்ணைக்கூட நான் பார்த்தது இல்லை. தம் உடல் மீதான பெரிய அக்கறையோ ஆர்வமோ இன்றி செய்யும் தொழிலில்
கவனமாக இருந்தார்கள். ம்மாவைப் போலவே குப்பாயம் என்ற மேல் சட்டை, முழங்காலுக்கு கீழ்வரை சேலை என்று கட்டிக்கொண்டு அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
இளம்பெண்கள் பாவாடை தாவணியுடன் இருந்தார்கள். ரொம்ப வயசான கிழவிகள் சாரம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். இந்தக் கிழவிகள் ஆண்களைப்போல சுருட்டுப் புகைப்பதைப் பார்த்து அதிசயப்பட்டேன்.
தேவைப்படும்போது புகைப்பார்கள், கங்கை அணைத்து ஜன்னல் திண்டில் வைத்துவிட்டு, மீண்டும் எடுத்து புகைப்பார்கள்.
***
பெரியண்ணனுக்கு ஓசூரில் அரசு வேலை கிடைக்க, வாப்பா பெரிய நிம்மதி அடைந்தார். குடும்பம் அன்று இருந்த நிலையில் அரசு வேலை என்பது எத்தனை பெரிய விசயம் என்பதை அவராலும் ம்மாவாலும் மட்டுமே உணர்ந்திருக்க முடியும். காம்பவுண்டிலும் தெருவிலும் தலை நிமிர்ந்து
அனைவரிடமும் வாப்பா அது பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டு இருந்தார்.
எனக்கு நேர் மூத்தவன் வேலை தேடி மெட்ராஸ் செல்ல, நான் ஆம்பூரில் ஒரு தோல் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கேதான் என் வாழ்வில் முதல்முறையாகக் கருப்பு புர்கா அணிந்த முஸ்லிம் பெண்களைப் பார்த்தேன். பத்தொன்பது வயது இளைஞனுக்குப் பெண்களை இப்படி
புர்காவில் பார்ப்பது குறுகுறுப்பை ஏற்படுத்தி இருப்பதில் வியப்பில்லை. அது பெரிய தொழிற்சாலை. கம்பெனி வேனில் புர்காவுடன் வந்து இறங்கும் பெண்கள் வேலை இடத்துக்கு வந்தபின் அதை நீக்கி தாங்கள் அணிந்த வண்ணமயமான உடையுடன் இருப்பார்கள். அதுதான் எனக்கு அழகாய்ப்
பட்டது.
வேறொரு வித்தியாசத்தையும் நான் உணர்ந்தேன். ஆம்பூர் வாழ்க்கை முற்றிலும் வேறு ஒரு முஸ்லிம் கலாச்சார வாழ்க்கையை எனக்குக் காட்டியது. ஆண்களிடம் உருது, அரபு சொற்கள் உரையாடலில் சாதாரணமாகப் புழங்கின. ஆண்களுக்கு ஐந்து வேளை தொழுகை நடத்தத் தொழிற்சாலை
வளாகத்தின் உள்ளேயே பள்ளிவாசல் இருந்தது. ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டன. எப்போதாவது கறிக்குழம்பைக் கண்டிருந்த நான் அங்கே எப்போதும் எங்கே இருந்தும் மசாலா வாசனை மணப்பதை எண்ணி வியந்து போனேன்.
முக்கியமாக சக தொழிலாளிகள் நோன்பு காலத்தில் கறாராக நோன்பு இருக்க நானோ எப்போதும்போல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். இந்தச் சம்பிரதாயச் சடங்கு வாழ்க்கைக்குப் பழக்கம் இல்லாத என்னை யார் இவன் என்பது போல வித்தியாசமாகப் பார்த்தார்கள். ஒரு சம்பிரதாயமான
முஸ்லிம் கலாச்சார வாழ்க்கையை அங்கேதான் நான் முதல் பார்த்தேன். அதற்குப் பத்தொன்பது வருடங்கள் தேவைப்பட்டது.
***
காலம் ஓடியது. நேர் மூத்தவன் அரபு நாட்டில் வேலைக்குச் சென்றான். நானும் மத்திய அரசின் வேலை கிடைத்து சென்னைக்கு வந்தேன்.
அரபு நாட்டில் இருந்தவன் விடுமுறையில் இரண்டு வருடங்களுக்குப்பின்
வந்தான். தென்காசியில் வீடு வாங்கவேண்டும் என்று வாப்பா விரும்பினார். ஊர் உறங்கிய நள்ளிரவு வேளையில் பிழைப்புத் தேடி தென்காசியில் இருந்து வெளியேறிய வாப்பா அதே தென்காசியில் வீடு வாங்கித் தலைநிமிர்ந்து நடக்க ஆசைப்பட்டு இருப்பதில் வியப்பில்லை. நல்ல நிலையில் இருந்து நொடித்துப்போய் ஊரைவிட்டு ஓடிய ஒரு தகப்பனின் கனவும் தன்னை
நிரூபிக்கும் கர்வமும் அதில் இருந்தது. அவ்வாறே ஒரு வீட்டை வாங்கிச் செப்பனிட்டு மதுரையில் இருந்து குடும்பம் தென்காசிக்கு இடம்பெயர்ந்தது.
ஆக மிகப்பல வருடங்களுக்குப் பிறகு பிறந்த ஊருக்குக் குடும்பம் பெயர்ந்தது.
தென்காசிக்கும் திருநெல்வேலிக்கும் நான்சென்றபோதுதான் கண்டேன். அநேகமாக ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒருவர் அரபு நாட்டிலோ சிங்கப்பூர்
மலேசியாவிலோ இருப்பதாகச் சொன்னார்கள். எல்லார் வீடுகளிலும் சிறுவயதில் நான் கண்டிருந்த குழித்தறிகள், பாய்தறிகள் அநேகமாகக் காணாமல் போய் இருந்தன. தறிகள்இருந்த இடத்தைக் காணவில்லை. தரையை சிமெண்ட் அல்லது கொல்லம் செவ்வோடு போட்டுப் பூசி இருந்தார்கள். சோனி, சான்யோ, ஜேவிசி டேப் ரிகார்டர்கள் வரவேற்றன.
ஹதீஸ், கிராஅத், நாகூர் ஹனிபா பாடல்கள், யேசுதாஸ் அரபு மொழியில் பாடிய இஸ்லாமியப் பாடல்கள், பழைய சிவாஜி, எம் ஜி ஆர், இளையராஜா பாடல்கள் என ஒலித்துக் கொண்டு இருந்தன. யார்ட்லி பவுடர், கோடாலி தைலம், டைகர் பாம், ஜன்னத்துல் பிர்தவுஸ், டீ ரோஸ் வாசனைத்
திரவியங்கள், சாக்லேட் உள்ளிட்ட தின்பண்டங்கள் எனக் கணவனும் அண்ணனும் தம்பியும் கடல்கடந்து சம்பாதித்துக் கொண்டுவந்து சேர்த்த பண்டங்களால் குடும்பங்களில் வேறு உலகம் திறந்து விடப்பட்டது. எந்தத் தெருவில் நடந்தாலும் ஏதோ ஒரு ஹனிபா பாட்டு காதில் விழும்... "பாத்திமா
வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா அந்தப் பாதையிலே வந்த பெண்ணே...".
தென்காசியிலும் திருநெல்வேலியிலும் குழித்தறியும் பாயும் நெய்து கொண்டு இருந்த ம்மா வயதை ஒத்த கிழவிகள் மட்டும் எப்போதும்போல் குப்பாயமும் முழங்கால் வரை உயர்ந்த சேலையும் கட்டி பழங்கதைகள் பேசிக்கொண்டு இருந்தார்கள். வாலிப வயது யுவதிகளும் நடுத்தர வயதுப்பெண்களும் தலை முதல் கால் வரையான விதவிதமான வேலைப்பாடுகள் கொண்ட கருப்பு புர்கா அணிந்து வீதிகளில் போய்க்கொண்டு இருந்தார்கள். கல்யாணம்உள்ளிட்ட விசேஷங்களில் புர்கா அணிந்த பெண்களின் இருப்பு சாதாரணமான ஒன்றாக மாறியது. வயதான பெண்கள் எப்போதும் போல இருந்தார்கள்.
ஆம்பூர் இங்கே இடம்பெயர்ந்த மாதிரி இருந்தது.
***
தென்காசியில் அண்ணன் வாங்கிய வீடு மூன்று தட்டு வீடு. முன் தட்டு முடிந்ததும் வானம் பார்த்த வெட்டவெளி. மழைக்காலத்தில் நல்ல தண்ணீரைச் சேமித்து வைக்கலாம். தவிர வீட்டில் ஆழ்துளைக் கிணறு போடப்பட்டது. அடுத்தது அடுப்படி. நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் இருக்கிற
விசாலமான அடுப்படி. அடுத்தது பின்கட்டு. அங்கே இரண்டு படுக்கை அறைகள்.
சமையல் அறைக்கும் முன்கட்டுக்கும் இடையே உள்ள வெட்டவெளியில் விழும் மழைத்தண்ணீரைக் கூரை ஓட்டின் விளிம்பில் தகரத்தால் ஆன வடிகால் அமைத்து ஒரு மூலையில் அருவி எனக் கொட்டும் வகையில் செய்து தருமாறு
ம்மா அண்ணனிடம் கேட்க அவனும் செய்து கொடுத்தான். மழைக்காலத்தில் ம்மா அதில்தான் குளிப்பாள். மழைத்துளி விழத்தொடங்கும்போதே அவள் முகத்தில் ஜொலிப்பு ஏறும். கட்டியிருக்கும் உடையுடன் அப்படியே தலையைக்கொடுத்து மழை நிற்கும் வரை குளிப்பாள். வாப்பா சத்தம் போட்டாலும் காதில் வாங்க மாட்டாள்.
.
'ரேகைகள்' சிறுகதைத்தொகுப்பில் இடம் பெற்ற கதை,
வெளியீடு இக்றா பதிப்பகம், ராமநாதபுரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக