சனி, நவம்பர் 16, 2024

கவிஞர் தணிகைச்செல்வன்

 

கவிஞர் தணிகைச்செல்வன் மறைந்தார்.


1935ஆம் ஆண்டு பிறந்தவர். செங்கல்பட்டில் இருந்து ஐந்து கல் தொலைவில் உள்ள உறைகாட்டுப்பேட்டை அவரது ஊர். அவரது இயற்பெயர் எத்திராஜ்.

செயின்ட் கொலம்பஸ் உயர்நிலைப்பள்ளியில் 1951 ஆம் ஆண்டு பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்ற இரண்டு மாணவர்களில் அவரும் ஒருவர்.

அவரது பதினான்காவது வயதில் எழுதிய கதை தியாகபூமி என்ற வார இதழில் வந்தது. அவரது ஊரில் வாழ்ந்த நெசவாளர்களின் வறுமையை கருவாகக் கொண்டு, வேலையின்மையால் அனாதை ஆகிப்போன ஒரு சிறுவனைப் பற்றிய கதை அது. 

பலிபீடம் என்ற அவரது நாடகத்துக்கு அறிஞர் அண்ணா தலைமை தாங்கி நடத்துவதாக இருந்தது. அவர் வர இயலாமல் போனதால் திமுக மாவட்ட செயலாளர் கே டி எஸ் மணி தலைமையில் நடந்தது.

1958ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆறாம் தேதி நேருவுக்கு கருப்புக்கொடி காட்ட திமுக முடிவு செய்தது. பெரியாரையும் தமிழ்நாட்டு தலைவர்களையும் முட்டாள்கள் என்று அவர் தூற்றினார் என்பது காரணம். அவ்வாறு கருப்புக்கொடி காட்டியவர்களில் தணிகைச்செல்வனும் ஒருவர் என்று வழக்கு போட்டு அன்றைய காஙகிரஸ் ஆட்சி அவரை அரசுப்பணியில் இருந்து நீக்கியது. ' அந்த பணி நீக்கம் என் படைப்பு ஊக்கத்தை மிகுதியாக்கும் தூண்டுகோலாக ஆனது ' என்று சொன்னார் அவர்.

இராயப்பேட்டை தோழர் சி. கே. சிவசங்கரன் என்பவர்தான் மார்க்சியத்தையும்
மூத்த கம்யுனிஸ்ட் தோழர் ஆன ஐ. மாயாண்டி பாரதி அவர்களையும் தணிகைச்செல்வனுக்கு அறிமுகம் செய்தார். அதற்கு முன்பாகவே சிங்காரவேலர், பெரியார், அண்ணா, குத்தூசி குருசாமி ஆகியோரின் எழுத்துக்கள், கலைஞர் ஆற்றிய உரைகள் ஆகியவை பொதுவுடைமை இயக்கம், அதன் தலைவர்கள் குறித்த அறிமுகத்தை அவருக்கு ஏற்படுத்தி உள்ளன.
...

சரித்திரம் சுழலும்போதும் 
சமுத்திரம் குமுறும்போதும் 
பொறுத்தவள் பொங்கும்போதும்
புயல்மழை சீறும்போதும் 
பறித்தவள் ஆதிக்கத்தைப் 
பசித்தவன் எதிர்க்கும்போதும் 
மறித்தவன் வென்றதில்லை
மறுப்பவன் நின்றதில்லை

என்ற கவிதை தீக்கதிரில் வெளியானது.
...

1974 நவம்பர் மாதம் மதுரையில் கூடிய  த மு எ ச அமைப்பு கூட்டத்தில் சங்கத்தின் கொள்கை அறிக்கை வரைவதற்கு அமைக்கப்பட்ட குழுவில் 14 பேர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் தணிகைச்செல்வன்.

மற்றவர்கள், கே முத்தையா, கு சின்னப்ப பாரதி, டி செல்வராஜ், த ச ராசாமணி, இரா. கதிரேசன், தி வரதராசன், மேலாண்மை பொன்னுசாமி, நெல்லைச்செல்வன், பெ மணியரசன், அஸ்வகோஷ், நாமக்கல் சுப்பிரமணியம், கம்பராயன், மோகனசந்திரன்.

அவசரநிலை emergency அறிவிக்கப்பட்ட நிலையில்,
சங்கத்தின் முதல் மாநாடு 1975 ஜூலை மாதம் 12, 13 இரு நாட்கள் நடந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழுவில் தணிகைச்செல்வனும் ஒருவர். மாநாட்டில் அவர் வழங்கிய இருபது நிமிட கவிதை பெரும் வீச்சை உருவாக்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் ஏ பாலசுப்ரமணியம் தணிகையை அழைத்து, ஊருக்கு போவதற்கு முன் நீங்கள் கைது செய்யப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
அவ்வாறே நடந்தது. ஆனால் கைது செய்யப்பட்டவர் அவர் அல்லர்! அடையாளம் தெரியாமல் டாக்டர் திம்மையா என்பவரை கருங்குழி என்ற ஊரில் வைத்து போலீஸ் கைது செய்து பின்னர் அவரை விடுவித்துள்ளது.
...

எமர்ஜென்ஸி காலத்தில் அவர் பங்கு பெற்ற எமர்ஜென்ஸி
எதிர்ப்பு இலக்கிய கூட்டங்கள் மட்டுமே 217 ஆகும். அவர் எழுதிய கவிதை ஒன்றை
செம்மலர் இதழில் வெளியிடக்கூடாது என்று அரசு நிர்வாகம் தடை போட்டது. அதே கவிதை ச. செந்தில்நாதன் வெளியிட்ட சிகரம் இதழில் வெளிவந்தது! கவிதை இதுதான்:

கோழியே 
வானத்தைப்பார் நிமிர்ந்து
வல்லூறுப்பறவை ஒன்று 
பூனை போல் கூர்ந்த கண்கள்
புலிநகம் இவற்றால் சின்னச்
சேனையாம் உனது குஞ்சுச்
சிமிழ்களை விழுங்கப் பார்க்கும்
... ....
உறவுகள் நமக்குள் ஒன்று
உயிர்களைக் காக்கும் போரில்
சிறகுகள் பறி போனாலும்
சீறுவாய் கோழி! வாழி!

போராடும் வழியை விட்டால்
புதுவாழ்வு என்பதற்கு
வேறென்ன வழி உனக்கு
விடியலைக் காண்பதற்கு?
...

1975 தொடங்கி 1985 வரை ஆன பத்தாண்டு காலத்தில் அவர் பங்கு பெறாத வெகுஜன அரங்கங்கள் மிக குறைவு. உரையிடை இடப்பட்ட கவிதை என்ற கலப்பு வடிவத்தில் அவர் கொடுத்த கவிதைகள் ஏராளம்.

என். ராம், மைதிலி சிவராமன், தணிகைச்செல்வன் ஆகியோர் அடங்கிய மூவர் அணி கோவை மாவட்டத்தின் அனைத்து இயக்க நிகழ்ச்சிகளிலும் அந்த நேரத்தில் தீவிரமாக இயங்கியது. இதற்கு பின் பலமாக இருந்தவர் மூத்த தோழர் கே. ரமணி.
...

தேநீர் என்ற டி செல்வராஜின் கதை பின்னர் ஊமை ஜனங்கள் என்று திரைப்படம் ஆனது. அப்படத்தில் 
வெகுகாலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை
ஒரு நாளில் காணவேண்டும் நல்ல தீர்வை, 

அடிபடவும் இடிபடவும்
மிதிபடவும் கொடுமைதரும்
ஆதிக்கம் பொடிபடாதா 
ஆகிய இரண்டு பாடல்களை அவர் எழுதினார்.
...

சிக்காகோவின் வீதியிலே
சிந்திய தோழர்கள் குருதியிலே 
நனைந்து வந்த செம்மலரே
நிமிர்ந்து நிற்கும் செங்கொடியே,
வீர வணக்கம், வீர வணக்கம்!

என்ற அவரது கவிதையுடன் தொடங்கப் படாத இடதுசாரிகளின் போராட்டம் தமிழ்நாட்டில் எங்கும் இல்லை.

தோழர் தணிகை, வீர வணக்கம்!
...

29.10.24 இரவு மணி 10.24

கருத்துகள் இல்லை: