திரையிசைப் பல்கலைக்கழகம் ஆக விளங்கும் திருநின்றவூர் சந்தான கிருஷ்ணன் என்ற சாதனையாளர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், மராத்தி, துளு, அசாமி, வங்கம், பஞ்சாபி
ஆகிய மொழிகளில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இன்று வரை வெளியான இசைதட்டுக்கள், இசை பற்றிய குறிப்புகள், திரைப்படம் பற்றிய வார, மாத இதழ்கள், திரைப்பட கலைஞர்கள் பற்றிய அரிய ஆவணங்கள், நூல்கள், திரைப்பட வரலாறு, சிடி, டிவிடி பதிவுகள், ஹிட்ச்காக், குரசோவா உள்ளிட்ட இயக்குனர்களின் அரிய படங்கள்...
வட்ட மேசை மாநாடு, பண்டிட் மதன் மோகன் மாளவியா, இரண்டாம் உலகப்போர் குண்டு வீச்சு, படைகளுக்கு அனுப்பப்பட்ட உத்தரவுகள், 60, 70 வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கச்சேரிகள், தனிப்பாடல்கள், சர்வதேச இசைக்கருவிகள், பாடல்களின் பதிவுகள்...
60, 70 வருடங்களுக்கு முன்பான HMV கிராமபோன் கருவிகள், வானொலி உள்ளிட்ட இசைகேட்பு சாதனங்கள்...
இப்படி ஒரு பல்கலைக்கழகம் போன்ற மாபெரும் சேமிப்பை ஒரு தனி மனிதர் தன் சேகரிப்பில் வைத்துள்ளார். மூன்று லட்சம் பாடல்களுக்கும் மேல் தனது சேகரிப்பில் வைத்துள்ளார் திருநின்றவூர் சந்தான கிருஷ்ணன்.
தமிழக அரசின் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அவர். தன் வாழ்நாளின் வருமானத்தில் பெரும்பகுதியை இதற்காக அர்ப்பணித்துளார் அவர் என்பது உடனே நமக்குத் தெரிகிறது. இதில் அவரது குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் உள்ளது என்பதை தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.
இசைத்தட்டு, கேசட், சிடி, நூல்கள் என்று சேகரிப்பது கூட பெரிதாக தெரியவில்லை. அவை அனைத்தையும் ஆவணப்படுத்தி வைத்துள்ளார், தகுந்த பாதுகாப்புடன் சேமித்து வைத்துள்ளார்.
...
அவர் வெறும் சேகரிப்பாளர் அல்லர். ஆய்வாளர். நிழல், படப்பெட்டி, தினத்தந்தி என மிகப்பல பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகள்
எழுதியுள்ளார். தியாகராஜ பாகவதர், எம் எல் வசந்தகுமாரி உள்ளிட்ட பலரின் இசை வாழ்க்கை பற்றிய ஆவணப்படங்களை தயாரித்து இயக்கி உள்ளார். மிகப்பல நூல்களை எழுதியுள்ளார். முன்னணி நாயகர், நாயகிகள் பற்றி இவர் எழுதியதை விடவும் துணை நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள் பற்றி எழுதியவை மிக அதிகம் என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
நாடறிந்த இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் இவரை மதித்து போற்றி மரியாதை செலுத்துகிறார்கள். மிகப்பல விருதுகளை பெற்றுள்ளார்.
கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த திரைப்படங்களின் பட்டியல் தேவையான அடிப்படை விவரங்களுடன் அவரிடம் உள்ளது. அவரது சேகரிப்பை திரையிசை குறித்து ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள், ஆர்வலர்கள் மட்டுமின்றி இசைத்துறையில் வல்லுனர்கள் ஆக இருப்போரும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
உடல் வளர்ச்சிக்கு உணவு தேவை. அதை நமக்கு உணர்த்த பசி என்னும் உணர்வு இருக்கிறது. மனம் என்கிற வளர்ச்சிக்கு இசை தூண்டுகோல். இசைத்தட்டுக்கள் மனிதர்களுடன் நேரடியாக பேசுகின்றன என்கிறார் சந்தான கிருஷ்ணன்.
இன்று அவரை சந்தித்தது வாழ்க்கையில் ஓர் அரிய மனிதரை சந்தித்த பெருமைமிகு உணர்வைத் தந்தது. ஒட்டுமொத்த இந்தியாவில் இவர் போல அரிய திரைப்பட ஆவணங்களின் சேகரிப்பு விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் மட்டுமே இருக்கும் என்பது உறுதி. அந்த வகையில் இவர் ஒரு பல்கலைக்கழகம்.
சந்திப்புக்கு உதவிய தோழர் பாவெல் சூரியன் (தெ.புகழேந்தி) அவர்களுக்கு நன்றி.
படத்தில் திரு. சந்தான கிருஷ்ணன், அவர் சேகரிப்பில் உள்ள 'நிஜங்கள் ' படத்தின் இசைத்தட்டு (எம் பி சீனிவாசன் இசை).
01.11.2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக