ஞாயிறு, செப்டம்பர் 08, 2024

திமுகவில் அறிவாளிகளின் தேய்மானமும் இரண்டாவது பாதி ஆட்சி காலத்தில் ஏற்பட்டுள்ள தடுமாற்றமும்


இவ்வாறு சொன்னவுடன் ஐயோ பிஜேபி வந்துடும் என்று பூச்சாண்டி காட்டும் நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்: தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகள் திமுக, அதிமுக. உண்மை இதுதான். மதவாத, இந்துத்துவா வலதுசாரி சக்திகளை உறுதியுடன் எதிர்த்து நிற்கும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பிற ஜனநாயக சக்திகளின் வலிமை சிறியதுதான். எனவே வலதுசாரி ஆர் எஸ் எஸ் அதன் பினாமி அமைப்புகள் அனைத்தையும் எதிர்த்து நிற்பதில் அந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கு வேறு யாரையும் விட பொறுப்பு அதிகம். எனவே தமிழ்நாட்டில் பி ஜே பி வந்தால் அதற்கு தலையாய பொறுப்பை அந்த இரண்டு கட்சிகளும்தான் முன்னின்று ஏற்க வேண்டும்.

அதிமுக பலம் இழந்து அல்லது கொள்கை கோட்பாடு என அனைத்தையும் கிழித்து எறிந்து விட்ட நிலையில் திமுகவுக்கு பொறுப்பு இன்னும் அதிகம் ஆகிறது. வலதுசாரி இந்துத்துவா சக்திகளுக்கு எதிரான அணியில் அவ்வாறே திமுக முன்னிலை வகிக்க வேண்டும் என்று ஜனநாயக சக்திகள் உளமார விரும்புவதில் நியாயம் உள்ளது.

...

1969இல் மு க அவர்களின் முதல் திமுக அமைச்சரவை பொறுப்புக்கு வருகிறது. 14 பேர்தான் அமைச்சர்கள். அவர்களில் முக, நெடுஞ்செழியன், அன்பழகன், ப உ சண்முகம், க இராசாராம், எஸ் ராமச்சந்திரன் (பண்ருட்டி), சி பா ஆதித்தனார், சி வீ எம் அண்ணாமலை என அனைவரும் திராவிட அரசியலின் தொடக்க நாட்களில் கூடவே வளர்ந்து வந்தவர்கள், அரசியல் அறிவு மிக்கவர்கள். 

மு க அவர்களின் இலக்கிய, அரசியல் அறிவு குறித்தும் அவர் எழுதிய நூல்கள் குறித்தும் இங்கே நான் எதுவும் சொல்ல போவது இல்லை, உலகறிந்த ஒன்று.

சி பா ஆதித்தனார். தமிழர்களின் எழுத்தறிவு, வாசிப்பு, அரசியல் தெளிவு அல்லது அறிதல் ஆகியவற்றில் மிகப்பெரிய புரட்சி செய்த பத்திரிகையாளர். தினத்தந்தியின் வரலாற்றை மட்டுமே பக்கம் பக்கமாக எழுதலாம். மாஜினி ரங்கசாமி அவர்களின் நூலை வாசித்து இருக்கிறேன்.

நாவலர் நெடுஞ்செழியன். 30 நூல்களுக்கும் மேல் எழுதி குவித்த அறிவாளி. அண்ணா, ஈ வெ கி சம்பத், முக ஆகியோரின் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர், சந்தேகம் இல்லை.

பேராசிரியர் க அன்பழகன். அதே வரிசையில் வைக்கப்பட வேண்டியவர். ஏறத்தாழ பத்து நூல்கள் எழுதினார். முக அவர்களை பெயர் சொல்லி அழைப்பவர் அவர் ஒருவர்தான் என்று சொல்வார்கள்.

ஆலடி அருணா. Hindi imperialism, Unfederal features of the Indian constitution உள்ளிட்ட மிகப்பல நூல்களை எழுதியுள்ளார்.

மின்துறை அமைச்சர் ஆன ஓ பீ ராமன், சாதிக் பாட்சா, எஸ் மாதவன், சி வீ எம் அண்ணாமலை ஆகியோர் அவர்கள் சார்ந்த துறைகளில் திறம் வாய்ந்தவர்கள். திராவிட அரசியல் பற்றி பேசியவர்கள். பண்ருட்டி ராமச்சந்திரன், சி பொன்னையன் ஆகியோரது இன்றைய அரசியல் நகர்வுகளில் நமக்கு கருத்து வேறுபாடு உள்ளது, ஆனால் அவர்களது திராவிட அரசியல் அனுபவம் சார்ந்த அறிவை தள்ளிவிட முடியாது.

க இராசாராம். ஒரு சாமானியனின் நினைவுகள் என்று நூல் எழுதினார்.

அதேபோல் முரசொலி மாறன், நாஞ்சில் மனோகரன், அன்பில் பொய்யாமொழி, சி பீ சிற்றரசு, கே ஆர் ராமசாமி, திருவாரூர் தங்கராசு ஆகியோரது கலை இலக்கிய, அரசியல் வாழ்க்கை சார்ந்த பணிகள், படைப்புகள், நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒதுக்க முடியாது.

...

எம் ஜி ஆரும் இவர்களில் பலரை பிற்காலத்தில் தன்னுடன் வைத்துக்கொண்டார். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு இவர்கள்தான் பதில் சொல்வார்கள்.

...

என் வயதுக்கு இவர்களில் அண்ணா, சம்பத் ஆகியோரை தவிர அநேகமாக மற்ற எல்லோரது அரசியல் பொதுக்கூட்டங்களையும் கேட்டு இருக்கிறேன். மேலே சொன்ன பட்டியல் முழுமையானது அல்ல. மதுரையில் வளர்ந்தவன் என்பதால் திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கம், காங்கிரஸ் இயக்கம் அல்லது இயக்கங்கள், தி க என  அரசியல் கூட்டங்களை தொடர்ந்து கேட்டு இருக்கிறேன்.

...

கலைஞர் அவர்களின் மறைவிற்கு பின் தற்போதைய 2021 மே மாதம் அமைந்த அமைச்சரவையில் அதே போன்ற திராவிட, தேசிய, உலக அரசியல் அறிந்த அறிவாளிகள் யார் யார் என்று தேடி பார்த்தேன். 34 பேர்களில் மூத்தவர் துரை முருகன், பொன்முடி, அப்பாவு ... இதற்கு மேல் நகரவில்லை. இவர்கள் அன்றி டி ஆர் பாலு, திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

போன்ற மிகச்சிலரே இருக்கிறார்கள். பொன்முடி அவர்கள் இந்தியாவில் திராவிட இயக்கம் உள்ளிட்ட சில நூல்களை எழுதியுள்ளார். இளைய தலைமுறையில் தமிழச்சி, தங்கம் தென்னரசு, டாக்டர் கலாநிதி போன்ற வெகு சிலர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

திமுகவின் thinktank என்று சொன்னால் இவர்கள்தான் எஞ்சி இருக்கிறார்கள். அவ்வளவுதானா? 

...

அன்றைய முக அவர்களின் அமைச்சர்கள் மேடைகளில் மணிக்கணக்கில் அரசியல் பேசுவார்கள்.

நான் பெயர்களை குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை என்றாலும் கேட்கிறேன். சேகர் பாபு, கே என் நேரு, ஏ வ வேலு, மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்களை திராவிட அரசியல் பற்றி தொடர்ந்து ஒரு பத்து நிமிடம் பேச சொல்லி கேட்க ஆசை படுகிறேன். ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட வலதுசாரி இந்துத்துவா சக்திகளின் வரலாறு, அரசியல் பற்றி தொடர்ந்து ஒரு பத்து நிமிடம் பேச சொல்லி கேட்க ஆசை படுகிறேன்.

...

2023இல் த மு எ ச மாநாட்டில் உதயநிதி சனாதனத்துக்கு எதிராக பேசியபின் பெரும் சர்ச்சை எழுந்தது. அதிர்ச்சி அளிக்கும் விதமாக திமுகவின் மூத்த அரசியல்வாதிகள் அவருக்கு ஆதரவாக வலிமையாக பேசவும் இல்லை, களத்தில் இறங்கவும் இல்லை, அதுதான் உண்மை. வழக்கை உதயநிதி நீதிமன்றத்தில் அவரே சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனில் சேகர் பாபு , மகேஷ் பொய்யாமொழி போன்றவர்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

...

தொடர்ந்து கல்வி நிறுவனங்களில் சங்கிகளின் தலையீடு இருந்து கொண்டே இருக்கிறது. அசோக் நகர் பள்ளியில் பேசிய சங்கி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்ததாக செய்திகள் வருகின்றன. பழனி முருகன் மாநாட்டில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் அஜெண்டாவை ஒட்டிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மார்க்சிய கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் அவர்கள் விமர்சனம் செய்தபோது எங்கேயோ மூலையில் எதிர்ப்பு குரல் வந்தால் கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் சேகர் பாபு அலட்சியமாக பேசினார்.

புதிய கல்வி கொள்கைக்கு உடன்படாததால் நிதி வெட்டு என்று ஒன்றிய அரசு சொல்கிறது. ஆனால் திமுக அரசும் அரசின் அமைச்சர்களும் பிரச்சார பீரங்கிகளும் தமிழக மக்கள் மத்தியில் புதிய கல்வி கொள்கையின் தீமைகள் பற்றி எப்போதும் பேசியதும் இல்லை, அது பற்றி பிரச்சாரம் செய்ததும் இல்லை என்பது அப்பட்டமான உண்மை. எனவே ஒன்றிய அரசு நிதி வெட்டு செய்த போது மக்கள் மத்தியில் பெரிதான எதிர்ப்புணர்வு இல்லை. திமுக ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் ஒருநாள் கட்சி ஆர்ப்பாட்டம் என்ற அளவில் முடிந்து போனது, அவ்வளவுதான்.

...

இதுதான் இன்றைய திமுக என்ற கட்சியின் நிலை, திமுக அரசின் நிலை என்றால் வருத்தப்பட வேண்டிய நிலையில் அக்கட்சி இருக்க வேண்டும். அவர்களை விடவும் அதன் கூட்டணி கட்சிகளும் இடதுசாரி ஜனநாயக கட்சிகள் இயக்கங்களும் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஆட்சியின் இரண்டாவது பாதியில் இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக ஆற்ற வேண்டிய எதிர்வினை மெளனம் என்ற நிலையில்தான் உள்ளது. சன் டிவி, கலைஞர் டிவியில் உட்கார்ந்து சிலர் பேசுகிறார்கள், அது களத்தில் ஒன்றுக்கும் உதவாது என்ற யதார்த்தத்தை திமுக உணர வேண்டும்.

அசோக் நகர் பள்ளி சம்பவம் தனித்த ஒன்று, தள்ளிவிட வேண்டிய ஒன்று என்று நான் நினைக்கவில்லை.

2026இல் அரசியல் களம் எப்படி இருக்கும் என்ற கவலையில் இதை எழுதுகிறேன்.

6.9.2024.

கருத்துகள் இல்லை: