1971
விடுதலைப் போரில் (பாகிஸ்தானிடமிருந்து) பங்கு பெற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு தரப்படும் என அவாமி லீக் கட்சியின் பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்தார். வங்கத்தின் தந்தை என்று மக்களால் போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஹசீனா. இதனை எதிர்த்து 2018இல் மாணவர்கள் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து அந்த இடஒதுக்கீட்டை அவரே ரத்துசெய்தார். பங்களாதேஷ் உயர்நீதிமன்றம் மீண்டும் அந்த இட ஒதுக்கீட்டை உறுதிசெய்ய, உச்சநீதிமன்றம் அதனை ஐந்து விழுக்காடாகக் குறைத்தாலும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது. உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் பங்களாதேஷ் மக்களும் இந்தப் போராட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
மிகப்பெரிய கலவரங்கள், துப்பாக்கிச்சூடு, பல நூறு மாணவர்களின் மரணம், தொடர்ந்த அரசியல் குழப்பம் ஆகியவற்றைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தார்.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் ஊடகங்களும் நடைபெற்ற கலவரங்களுக்கும் ஹசீனா வெளியேறியதற்கும் இடஒதுக்கீடு மட்டுமே காரணம் என்பதாக செய்திகளைப் பரப்புகின்றன. இது உண்மையா?
கடந்தகாலம் அமைதி நிரம்பிய ஒன்றா?
1971 விடுதலைப் போருக்கு முன் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகத்தான் வங்கதேசம் இருந்தது. இருபகுதி அல்லது இரு நாட்டு மக்களும் இஸ்லாமியர் என்றாலும் மேற்கே உருது மொழியும் கிழக்கே வங்கமொழியும் பேசும் விசித்திரமான யதார்த்தம் நிலவியது. வங்காள மொழியைத் தேசிய மொழியாக அங்கீகரிக்க மறுத்ததைக் கண்டித்து 1952இல் மாணவர் போராட்டம் வெடித்தது. தொடர்ந்த இருபது வருடங்களும் போராட்டங்களால் நிரம்பிய காலமே. 1952
போராட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் முதலில்
பலியானவர்கள் மாணவர்கள்தான்.
1972-இல் பாகிஸ்தானிலிருந்து விடுபட்டு பங்களாதேஷ் சுதந்திர நாடானது. 1975 ஆகஸ்ட் 15 அன்று அன்றைய ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மான் ராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். 1983 இல் தன்னை ராணுவ சர்வாதிகாரியாக அறிவித்துக் கொண்ட ஹுசேன் முகமது எர்ஷத்தின் கீழ் நான்கு பிரதமர்கள் ஆட்சி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1982-இல் எர்ஷத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. 1971 போரில் பாகிஸ்தானுடன் ஒத்துழைத்த துரோகிகளுக்கு கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும் என்று கோரி 2013 இல் ஒரு போராட்டம் வெடித்தது. அதிக வரிவிதிப்பை எதிர்த்து 2015-லும்
சாலைப்போக்குவரத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று கோரி 2018 இலும் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பிடத்தக்கவிதமாக பாகிஸ்தானுடன் ஒத்துழைத்தவர்கள் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள்.
2024 இல் நடந்த போராட்டங்கள் 'பாகுபாட்டுக்கு எதிரான மாணவர்கள்
(Students Against Discrimination -SAD) என்ற அமைப்பின் கீழ் நடத்தப்பட்டன. எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியும் இந்த அணியின் பின்னால் இல்லை என்று கூறப்பட்டதால் ஒட்டுமொத்த மாணவர்களும் இந்த அமைப்பின் கீழ் திரண்டார்கள். தொடக்கத்தில் மாணவர்களின் போராட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் விலகி இருந்தாலும் சூழ்நிலையின் கட்டாயத்தால் பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் மாணவர்களின் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டதால் போராட்டத்தின் வீச்சு பலமானது.
முன்னர் கூறிய இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள் கூடவோ குறையவோ கடந்த ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துகொண்டேதான் உள்ளன. ஆனால் 2008,
2013 ஆம் ஆண்டு போராட்டங்கள் மிக வலுவானவை. 2018 இல் மொத்த இட ஒதுக்கீடு 56 விழுக்காடாக இருந்தது. இதில் விடுதலைப்போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 விழுக்காடு, பெண்களுக்கு 10 விழுக்காடு, சிறுபான்மை இன மக்களுக்கு 5 விழுக்காடு, உடல் ஊனமுற்றோருக்கு ஒரு விழுக்காடு, குறிப்பிட்ட சில மாவட்ட மக்களுககு பத்து விழுக்காடு, மீதம் உள்ள 44 விழுக்காடு தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோருக்கு என இருந்தது. இதன் உட்பொருள் என்னவெனில் சாமான்ய உழைக்கும் மக்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றாலும் வேலை வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படும் என்பதுதான். முக்கியமாக, அன்றைய விடுதலைப் போரில் முஜிபுர் ரஹ்மானின் (அல்லது இன்றைய ஷேக் ஹசீனாவின்) கட்சிக்காரர்கள் பெரும்பங்கு வகித்தார்கள் என்பதால் இந்த இட ஒதுக்கீட்டை அனுபவிக்கப் போகிறவர்கள் ஹசீனாவின் அவாமிலீக் கட்சிக்காரர்கள்தான் என்பது போராட்டக் காரர்களின் வாதம். மேலும் மொத்த மக்கள் தொகையில் அவ்வாறான விடுதலைப்போர் வீரர்களின் வாரிசுகளின் எண்ணிக்கை 0.12 இல் இருந்து 0.20 விழுக்காடு மட்டுமே உள்ளனர் என்பதும் இவர்களின் கணக்கு. சிறுபான்மை மக்களுக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் ஆன இட ஒதுக்கீடு எப்போதும் ஒரு பிரச்னையாக இருந்ததில்லை.
உயர்நீதிமன்றத்தின் ஆணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தகுதி அடிப்படையில் 93 விழுக்காடு இடங்களை நிரப்பவும், 5 விழுக்காடு இடங்களை மட்டுமே விடுதலைப்போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கவும் உத்தரவிட்டது. கடந்த ஐம்பது வருடங்களில் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் எண்ணிக்கை குறைந்துவிட்ட நிலையில், அவர்களின் பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என தொடர்ந்து இட ஒதுக்கீட்டை வழங்கிக் கொண்டே போவதானது இந்த ஒதுக்கீட்டின் பலனை தவறாகப் பயன்படுத்துவதற்கும் தகுதியில்லாதோர் ஏமாற்றி பயன்படுத்துவற்கும் இட்டுச் செல்லும். குறிப்பாக ஹசீனாவின் கட்சிக்காரர்கள் இதனை அனுபவிப்பதற்கான வழி என்று மாணவர்களும் எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டினார்கள். 2018 போராட்டங்களைத் தொடர்ந்து அரசுப்பணிகளில் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டையும் ஹசீனா ரத்துச் செய்ய அதுவும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியது. மாணவர்கள் கோரிக்கை இட ஒதுக்கீட்டை
மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான், ஒழிக்க வேண்டும் என்பது அல்லவே!
ஹசீனா அரசின் அடக்குமுறை
பங்களாதேஷ் விவசாயிகள் சம்மேளனம் ஆன பங்களாதேஷ் க்ரிஷோக் ஃபெடரேஷன் தனது இணையத்தளத்தில் (www.krishok.org) 8.8.2024 இல் பதிவிட்டுள்ள தகவல் இது. 2024 போராட்டங்கள் பல்கலைக்கழகங்களில்தான் வெடித்தன. மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக ஹசீனா அரசு போலீசையும் ராணுவத்தையும் ஏவி தாக்குதல் நடத்தியது. கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்க வேண்டும். பல்லாயிரம் மாணவர்கள் கண் பார்வையை அல்லது உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர்.
மட்டுமின்றி, "விடுதலைப் போராட்ட வீரர்களின் பேரக்குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை எனில் 'ரசாக்கர்'களின் பேரக் குழந்தைகளுக்கா கொடுப்பது?" என்று ஹசீனா தொலைக்காட்சியில் வெறுப்புரை ஆற்றி மாணவர்களின் கோபக்கனலில் எண்ணெயை ஊற்றினார். 1971 போரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒத்துழைத்த துரோகிகளைத்தான் அந்நாட்டு மக்கள் 'ரசாக்கர்' என்று இழிவாக அழைக்கிறார்கள். 'ரசாக்கரா? யார்? நான் யார்? நீ யார்? நீ தான் சர்வாதிகாரி!" என்று மாணவர்கள் பதில் முழக்கங்களை எழுப்பினார்கள். ஹசீனாவின் கட்சி அமைச்சர் ஒருவர்
தொலைக்காட்சியில் தோன்றி போராட்டக்காரர்களை "அடக்குமாறு" தனதுகட்சி மாணவர் பிரிவைத் தூண்டிவிட்டபின் போராட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ காட்சிகள் சமூகத் தளங்களில் பரவின. ராணுவமும் எல்லைக் காவல் படையும் களத்தில் இறங்கி 'கண்டவுடன் சுடும்’ உத்தரவைப் பின்பற்றினர்.
ஜுலை 15 அன்று டாக்கா பல்கலைக்கழகத்தில் ஆறு மாணவர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். பேகம் ரொக்கியா பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு மாணவர் அபு சையத்தை ரங்க்பூரில் பட்டப்பகலில் சுட்டுக் கொன்றனர்.
ஐ.நா. அமைதிப்படை பயன்படுத்தும் கவச வாகனங்களையும் ஹெலிகாப்டர்களையும் போராட்டக்காரர்களை ஒடுக்க ஹசீனா அரசு பயன்படுத்தியதாக ஐ.நா. பிரதிநிதி ஒருவர் அதிகாரப்பூர்வமாகவே குற்றம் சாட்டியுள்ளார்.
2024 போராட்டங்களின் தொடக்கப் புள்ளிகள் இதுபோன்ற நிகழ்வுகள் தான். ஹசீனா பதவியைத் துறந்து இந்தியாவை நோக்கி ஓடிவந்த அன்றும் 39 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
தேர்தல் முறைகேடுகளும் ஊழலும் அடக்குமுறையும்
சுமார் இருபதுவருட குழப்பம் மிகுந்த, ஆட்சிக் கவிழ்ப்புகள், சதிவலைகள் நிரம்பிய அரசியல் சூழலுக்குப்பின் 1996 ஜூன் மாதம் தேர்தல் மூலம் ஆட்சியைப் பிடித்த ஹசீனா பிரதமர் ஆனார். அன்றைய சூழ்நிலையில் அவர் ஜனநாயகத்தின் காவலராகப் பார்க்கப்பட்டதில் அதிசயம் ஏதும் இல்லை. ஆனால் 2001 தேர்தலில் அவர் கட்சி தோல்வியுற்றது. அதற்கு அடுத்த எட்டு வருட காலத்தில் ஐந்து வருடம் பங்களாதேஷ் தேசிய கட்சித் தலைவர் கலீதா ஜியா பிரதமராக இருந்தார். 2009 இல் நடந்த தேர்தலில் ஹசீனா மீண்டும் பதவிக்கு வந்தார். 2024 ஆகஸ்டு மாதம் வரை சுமார் 15 வருடங்கள் பிரதமராக இருந்தார். இந்தக் காலகட்டத்தில் நடந்த தேர்தல்கள் அனைத்திலும் தில்லுமுல்லுகள் செய்தும் வாக்காளர்களை மிரட்டியுமே அவரால் ‘வெற்றி’ பெற முடிந்தது என்று எதிர்க்கட்சிகள் வலுவாகக் குற்றம் சாட்டின. உண்மையில் 2014,
2024 தேர்தல்களை
எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் ஹசீனா 'பெரும்பான்மை' பெற்றதில் வியப்பில்லை. இந்தக் காலத்தில்தான் அரசு நிர்வாகம், நீதித்துறை, ராணுவம், நிதி நிர்வாகம் என அனைத்து மட்டங்களிலும் சீர்கேடுகளும் லஞ்ச ஊழலும் பெருகின. அதிர்ச்சியளிக்கும் விதமாக, தனது பிரதமர் இல்லத்தில் இருந்த கடைநிலை ஊழியர் ஒருவரே 34 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 285 கோடி ரூபாய், இந்திய நாணய மதிப்பில்) அளவுக்கு முறைகேடாக சம்பாதித்ததாக ஹசீனாவே ஒத்துக் கொண்டார்.
நாட்டின் 21 தென் மாவட்டங்களை தலைநகர் டாக்காவுடன் இணைக்கும் பத்மா பாலம் கட்ட உலக வங்கி 870 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் கொடுத்திருந்தது. இதில் அரசு அதிகாரிகள் பயங்கர ஊழல் செய்வதாக உலக வங்கியே (!) குற்றம் சாட்டி கடன் தொகையை ரத்து செய்தது. இது முகமது யூனுஸ் செய்த சதி, ஹில்லாரி கிளிண்டனுடன் கூட்டுச் சேர்ந்து யூனுஸ் உலக வங்கியை நிர்ப்பந்தம் செய்து கடனை ரத்துச் செய்தார் என்று ஹசீனா குற்றம் சாட்டினார். ஆனால் 260 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் அதே பாலத்தை ஹசீனா கட்டினார். அதாவது உலக வங்கி மதிப்பீட்டைப் போல மூன்று மடங்கு செலவில்!
பங்களாதேஷ் மத்திய வங்கியில் இருந்து 8.10 கோடி அமெரிக்க டாலர் பணம் திருட்டுப் போனது.
2018 இல் டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டம் (Digital
Security Act, 2018) என்ற சட்டத்தைக் கொண்டு வந்து, அரசை விமர்சிப்பவர்கள், இணைய தளத்தில் எழுதுபவர்கள், பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் என சகல தரப்பினரையும் ஒழித்துக்கட்டினார் ஹசீனா. யாரையும் எப்போதும் கைது செய்யலாம் என்பதுடன் விதவிதமான தண்டனைகளும் வழங்கப்பட்டன. குற்றம் சாட்டப்படுவோரின் தொலைபேசி, கணினிகள் உள்ளிட்ட சாதனங்களை அரசு கைப்பற்றலாம். இவ்வாறு பல நூறு பேர் காணாமற் போனார்கள். ப்ளாக் எனப்படும் வலைப்பூ எழுத்தாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். பலர் வெளிநாடுகளுக்குத் தப்பித்து ஓடினார்கள். ஏறத்தாழ இருநூறு இணையதளங்களை 'அரசுக்கு எதிரான அவதூறு பரப்புவதாகச் சொல்லி ஹசீனா அரசு மூடியது. 2017 ஆம் ஆண்டு மியான்மரில் சிறுபான்மை இல்லாமியர்கள் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 10 லட்சம் ரோஹிங்க்ஞா இஸ்லாமியர் பங்களாதேஷுக்குள் தஞ்சம் புகுந்தபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே ஒரு நல்ல விசயம் மட்டும் ஹசீனா ஆட்சியில் நடந்தது. ஆனால் இந்த மக்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றித் தனியே எழுத வேண்டிய நிலை உள்ளது.
இந்தியாவின் அக்கறை என்ன?
இத்தனை நெருக்கடிகளுக்கும் இடையில் நாட்டைத் தனது இடுக்கிப்பிடியில்தான் ஹசீனா வைத்திருந்தார். இந்தியாவும் மேற்கத்திய நாடுகளும் பங்களாதேஷில் பல நுறு கோடி டாலர் மதிப்புக்கு தொழில் முதலீட்டைச் செய்துள்ளன. எனவே ஹசீனா அரசை ஆதரித்தன. மேற்கத்திய உலகம், அமெரிக்கா உட்பட 'தீவிரவாதத்துக்கு' எதிராக எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது ஆதரவைத் தயங்காமல் அளித்தவர் ஹசீனா. இத்தனை எதிர்மறையான அடையாளங்களைச் சுமந்து கொண்டிருந்தாலும் தன்னை ஜனநாயகவாதி, மதச்சார்பற்றவர் என்று சொல்லிக் கொள்ள அவர் எப்போதும் வெட்கப்பட்டதே இல்லை.
கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து பங்களாதேஷ் தன் நாட்டுக்குள் இறக்குமதி செய்த பொருட்களின் மதிப்பு (மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில்):
2009-10 : 3202.10
10-11: 4560
11-12: 4743
12-13: 4776
13-14: 6034
14-15: 5816
15-16: 5452
16-17: 6400
17-18: 8400
18-19: 9400
மின்சாரம், கட்டுமானம், சாலைப்போக்குவரத்துக் கட்டுமானம், நீர்வழிப்போக்குவரத்து, எல்லைப் பாதுகாப்புக் கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், விவசாயம்சார் தொழில்கள், உணவுப்பதனம், சுற்றுலா. குளிர்பதனக் கிடங்கு, மருந்துக் கிடங்கு, மருந்து தயாரிப்பு, ஆயத்த ஆடைத் தொழில், கப்பல் கட்டுமானம், இவற்றுடன் கல்விகள் தொழில்களிலும் இந்திய முதலாளிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் மூலதனம் பங்களாதேஷில் கொட்டிக் கிடக்கிறது என்ற உண்மையின் பின்னணியில் இந்திய அரசு தனது அண்டை நாட்டில் நடக்கும் ஜனநாயகப் படுகொலைகளை ஏன் மவுனமாகப்
பார்த்துக் கொண்டிருந்தது, ஹசீனா தப்பிக்கவும் திரிபுராவில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கவும் ஏன் அனுமதித்தது போன்ற கேள்விகளுக்கு எளிதில் விடை காண முடியும்.
அம்பானி, அதானி, டாடா, டாபர், கோத்ரெஜ், ஆதித்ய பிர்லா, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், சன் ஃபார்மா, விஜபி, சியாட் டயர்ஸ், ஏர்டெல், ஆதித்ய பிர்லா சிமெண்ட் என இந்தியப் பெருமுதலாளிகளின் முதலீடு பங்களாதேஷில் இடப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமரின் இரண்டு முக்கியமான நண்பர்களான அதானி, அம்பானி ஆகியோரின் முதலீட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை பிரதமர் மோடிக்கு உண்டு எனில் சர்வாதிகார ஆட்சி நடத்திய ஹசீனாவை இந்திய அரசு ஆதரித்ததிலும் பாதுகாத்ததிலும் வியப்பில்லை.
அமெரிக்காவின் ஆகப்பெரிய முதலீடும் பங்களாதேஷில் உள்ளது. 2023 ஜூன் கணக்கின்படி 395 கோடி அமெரிக்க டாலர் நேரடி மூலதனம் அங்கே உள்ளது. அதேபோல் 230 கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு அமெரிக்கா பங்களாதேஷுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 830 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை பங்களாதேஷ் தனது நாட்டுக்குள் இறக்குமதி செய்துள்ளது.
சர்வதேச அரசியல் உறவு
வங்காள விரிகுடாவின் வடக்குக் கரையில் அமைந்த அந்த நாடு இந்தியாவுடனும் சீனாவுடனும் கொண்டுள்ள அரசியல், வணிக உறவுகளின் ஏற்ற இறக்கம் தெற்காசியப் பிரதேசத்தில் நிலவும் அரசியல் நிலைப்பாட்டை பாதிக்கக் கூடியவை. மேலும் உலகில் இஸ்லாமியர் அதிகம் உள்ள நாடுகளில் நான்காவது நாடு, உலக மக்கள் தொகையில் எட்டாவது நாடு பங்களாதேஷ் என்பதும் அமெரிக்காவின் கவனத்துக்குக் காரணம் ஆனவை.
இந்துமாக்கடல் பரப்பில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஜிபூட்டி (Djibouti) நாட்டில் அமைந்துள்ள சீனாவின் ராணுவத்தளம், வங்காள விரிகுடாவில் இருந்து அந்தமான் கடல் வரை பரந்த நீர்ப்பரப்பில் இருக்கும் சீனக் கப்பல்களின் எண்ணிக்கை, பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் நிறுவப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பல் தளத்துக்கும் போர்க்கப்பல் தளத்துக்கும் கட்டுமானத்தில் சீனா செய்துள்ள பெரும் உதவி, 2016 இல் சீனாவிடமிருந்து 20.50 கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு வாங்கியுள்ள இரண்டு நீர் மூழ்கிக் கப்பல்கள் ஆகியன அமெரிக்காவின் கவனத்தில் எப்போதும் உள்ளன. மட்டுமின்றி மாலத்தீவுடன் சீனா செய்துள்ள ராணுவ உடன்படிக்கை, இலங்கைக்கும் நேபாளத்துக்கும் ராணுவ அதிகாரிகளை சீனா அனுப்பியது என ராணுவம் சார்ந்த பலவித அசைவுகளும் இந்தியாவின், அமெரிக்காவின் கவனத்தில் உள்ளன.
ஆர்.எஸ்.எஸ்.சின் பொய்ப் பிரச்சாரமும் உண்மை நிலையும்:
அங்கே நிலவும் அரசியல் குழப்பத்தில் இந்தியாவில் உள்ள வலதுசாரி இந்துத்துவா ஆர்எஸ்எஸ் அமைப்பு மீன்பிடிக்க முயல்கிறது. பெரும்பான்மை சமூக மக்கள் இஸ்லாமியர்கள் என்ற பின்னணியில், பங்களாதேஷில் சிறுபான்மை இந்துமத மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் இந்துமத மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்படுவதாகவும் இந்தியாவில் ஆர்எஸ்எஸ் சார்பு ஊடகங்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து இந்திய இஸ்லாமிய மக்களுக்கு எதிரான தமது பிரச்சாரத்தை வலுப்படுத்த முயற்சி செய்கின்றன.
உண்மை நிலவரம் என்ன?
'பங்களாதேஷ் தேசிய ஹிந்து மகா கூட்டணி' (பங்களாதேஷ் ஜாதியோ ஹிந்து மஹா ஜோட்) (Bangladesh
National Hindu Grand Alliance) என்ற வலதுசாரி இந்து அமைப்பு 2006 இல் தொடங்கப்பட்டது. இதில் 23 ஹிந்து அமைப்புக்கள் உறுப்பினராக உள்ளன. இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஆன கோவிந்தோ சந்திர பிரமாணிக் என்பவர் இந்தியாவில் இயங்கும் ஆர்எஸ்எஸ்சின் உறுப்பினர் என்பதுடன் விஸ்வ இந்து பரிஷத்தின் பங்களாதேஷ் தலைவரும் ஆவார். ஆர்எஸ்எஸ்சுடன் தொடர்புடைய இந்த பை
வலது சாரி இந்துத்துவா அமைப்பு 353 வேத பள்ளிக்கூடங்களை நிறுவியுள்ளது. ஈடிவி பாரத்துக்கு பிரமாணிக் அளித்த காணொளி செவ்வியில் (10.8.2024) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
"பங்களாதேஷில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக சிறுபான்மை இந்துமத மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அச்சம் அடைந்ததற்கு மாறாக அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஜமாத்-இ-இஸ்லாமியும் கலீதாஜியாவின் பங்களாதேஷ் தேசியக்கட்சியும் இந்துக்கள் மீதான எந்தவொரு தாக்குதலையும் அனுமதிக்கக் கூடாது, கோவில்களைப் பாதுகாக்க வேண்டும், கொள்ளைகளை அனுமதிக்கக் கூடாது' எனத் தமது கட்சியினருக்கு கறாராக அறிவுறுத்தி உள்ளனர். அவ்வாறே இந்துமத மக்களுக்கும் கோவில்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இந்துக்கள்மீதும் இஸ்லாமியர்கள் மீதும் கூட தாக்குதல்கள் நடந்தன. இவை இதுபோன்ற நேரங்களில் சமூக விரோதிகள் வழக்கமாக செய்கின்ற வன்முறைகள்தான். இந்தியாவில் ஊடகங்கள் இந்துக்கள் மீதும் தாக்குதல் நடப்பதாக செய்தி பரப்புவது உண்மைக்கு மாறானது" என்று கூறுகின்றார். அவரே தொடர்ந்து, "1971-க்குப் பிறகு ஏறத்தாழ 4.5 கோடி இந்துக்கள் இங்கே இருந்து இந்தியாவுக்குள் சென்று விட்டார்கள், இது தொடர்ந்து நடக்கின்ற ஒன்ற; கடந்த ஆறு வருடங்களில் பங்களாதேஷில் இந்துமத மக்களின் எண்ணிக்கை 2.8 விழுக்காடு குறைந்துள்ளது” என்று கூறுகிறார்.
இதுதான் உண்மை நிலை. இங்கே இந்தியாவில் ஆர்எஸ்எஸ் சார்பு ஊடகங்கள் ஒருபுறம் பொய்ச்செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்க, பொறுப்பாகப் பேச வேண்டிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ அவ்வாறு இந்தியாவுக்குள் வருவோரை "ஊடுருவல் செய்யும் கரையான்கள்" என்று இழிவாகப் பேசினார். பிரதமர் மோடி எப்போதும்போல் மவுனமாக இருக்கிறார்.
கடந்த பதினைந்து ஆண்டுகால சர்வாதிகார ஹசீனா ஆட்சிக்கு 2014 முதல் மோடி அரசு கொடுத்து வரும் கண்மூடித்தனமான ஆதரவைக் கண்டு பங்களாதேஷ் மக்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள் என்பதுதான் யதார்த்தம். அண்டை நாட்டுடன் ஆன உறவின் எல்லை, எல்லைக்கு அப்பால் இருந்து
தஞ்சம் தேடி இந்தியாவுக்குள் வரும் மக்களை எவ்வாறு நடத்துவது போன்றவற்றில் புரிதலோ அரசியல் முதிர்ச்சியோ இந்தியப் பிரதமருக்கும் அவரது சகாக்களுக்கும் இல்லை என்பது தெளிவு.
பங்களாதேஷின் பிரபல யூடியுபரும் பல லட்சம் முகநூல் வாசகர்களைக் கொண்டவருமான பினாகி பட்டாச்சார்யா இப்போது பிரான்சில் தஞ்சம் புகுந்து வாழ்கிறார். அரசைத் தீவிரமாக விமர்சனம் செய்து வந்த பினாகியை ராணுவம் தனது விசாரணைக்கு அழைத்தபோது எச்சரிக்கை அடைந்து தப்பித்து ஓடி விட்டார். பினாகியும் அவரது நண்பர்களும் இணைந்து "இந்தியாவே வெளியேறு!” என்ற இயக்கத்தைத் தொடங்கினார்கள். "எமது இயக்கம் இந்திய மக்களுக்கு எதிரானது அல்ல. சர்வாதிகார ஹசீனாவுக்கு இந்திய ஆளும் வர்க்கமும் இந்திய அரசும் கொடுத்து வரும் ஆதரவுக்கு எதிராக பங்களாதேஷ் மக்கள் தொடுக்கும் தீவிரமான அரசியல் போர்தான். எமது தாய்நாட்டின் சுயாதிபத்தியத்தை, மரியாதையை மீட்டெடுக்கவே நாங்கள் தொடுத்துள்ள போர் இது” என்கிறார் பினாகி. வழக்கம்போலவே இந்தியாவின் 'கோடி மீடியா’க்கள் பினாகி மீதும் அவதூறுகளையும் பொய்க் குற்றச்சாட்டுக்களையும் சுமத்திப் பிரச்சாரம் செய்கின்றன.
இடதுசாரிகளின் நிலை
1950, 60களில் பங்களாதேஷின் இடதுசாரிக் கட்சிகள் சொல்லத்தக்க அளவில் மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தார்கள். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட இடதுசாரிக் கட்சிகள் உள்ளன என்று பொருள். 1952 "மொழி இயக்கம்”,1969 "மக்கள் கிளர்ச்சி” ஆகியவை இடதுசாரிகளின் செல்வாக்கை உயர்த்தின. விவசாயிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மத்தியில் இடதுசாரிகளின் செல்வாக்கு இருந்தது. 1971 விடுதலைப் போரில் இடதுசாரிக் கட்சிகள் தீவிரமாகப் பங்கேற்றன. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது சில இடதுசாரிக் கட்சிகள் ஆளும் அரசுக்கு ஆதரவாகவும் மற்றவை எதிராகவும் இருந்த பிரிவினை நிலை தொடர்ந்து இருந்துள்ளது. குறிப்பாக 1972 முதல் 75 வரையான காலகட்டத்தில் அரசுடன் சில இடதுசாரிக் கட்சிகளும் இருந்த நிலையில், அரசுக்கு எதிரான நிலை எடுத்த இடதுசாரிக் கட்சிகளின் பல்லாயிரம் ஊழியர்கள் அரசால் படுகொலை செய்யப்பட்ட வரலாறும் உள்ளது.
பங்களாதேஷ் கம்யூனிஸ்ட் கட்சி 2024 ஜுன் 6 அன்று, ஊழலை ஒழிப்பது, அரசியல் மாற்றம் ஆகிய முழக்கங்களை முன்வைத்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. இப்போதைய நிலையில் இடதுசாரிக்கட்சிகள் மக்கள் மத்தியில் போதிய செல்வாக்கு இல்லாத கட்சிகளாகவே நீடிக்கின்றன. கடந்த கால அனுபவங்களின் வெளிச்சத்தில் தமது நிலையை, நடைமுறை வியூகங்களை, கொள்கை நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய இடத்தில்தான் பங்களாதேஷின் இடதுசாரிக் கட்சிகளும் இயக்கங்களும் இருக்கின்றன.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு
முகமது யூனுஸ் தலைமையில் அவருடன் பதினாறு பேர் கொண்ட அமைச்சரவை தற்காலிக அரசை அமைத்துள்ளது. சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு மக்களிடையே நுண்கடன் திட்டத்தை அறிமுகம் செய்து பிரபலமாகி அதன் தொடர்ச்சியாகவே நோபல் விருதை வென்றவர் யூனுஸ்.
"போதிய அளவுக்கு நிர்வாகத்திலும் நீதித்துறையிலும் தேர்தல் கமிசன் நிர்வாகத்திலும் முக்கியத் துறைகளிலும் சீர்திருத்தங்களை நிறைவேற்றிய பின், நியாயமான பாரபட்சமற்ற மக்கள் அனைவரும் பங்கு பெறும் தேர்தலை நடத்தத் தேவையான நடவடிக்கை எடுப்போம்" என்கிறார் யூனுஸ்.
ஹசீனாவின் ஆட்சிக்காலத்தில் காணாமற்போன பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் ஆகியோரைத் தேடிக் கண்டுபிடிக்க வழி செய்யும் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றில் யூனுஸ் கையெழுத்து இட்டுள்ளார். சீரழிந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் நிலைப்படுத்த சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்), உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து 800 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு யூனுஸ் கடன் கேட்டிருப்பதாக 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' எழுதுகிறது.
இவை அவர் மீதான நேர்மறையான தோற்றத்தை உருவாக்குபவை எனினும் அவர் மீதான விமர்சனங்களும் உள்ளன.
'ஏழை எளிய மக்களின் பக்கம் நிற்பதைக் காட்டிலும் அரசு சாரா அமைப்புக்களுடன் (என்.ஜி.ஓ) தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதில்தான் அவர் ஆர்வம் காட்டுபவர்; அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையாள்" என்றும் சில இடதுசாரி அமைப்புக்கள் யூனுஸ் மீது குற்றம் சாட்டுகின்றன.
பங்களாதேஷின் அரசியல் நிலவரங்களை அமெரிக்க உயர் அதிகார மட்டங்களுடன் தொடர்ந்து அவர் விவாதித்து வந்தார் என ‘விக்கிலீக்ஸ்' அம்பலப்படுத்தியதாக 'டைம்' இதழ் சொல்கிறது.
1983 இல் பங்களாதேஷ் கிராமின் வங்கியை யூனுஸ் நிறுவி ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கு பிணை இல்லாத நுண்கடன்களை (Micro
credits) வழங்கினார். நிதி முறைகேடுகள் அங்கே நடப்பதாகக் கூறி யூனுஸை வங்கியின் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கினார் ஹசீனா.
யூனுஸின் முதன்மை நிறுவனமான பங்களாதேஷ் கிராமின் வங்கியின் கிளை நிறுவனங்களில் ஒன்றான கிராமின் டெலிகாம் நிறுவனத்தில் தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் யூனுஸுக்கும் அவரது நண்பர்கள் மூவருக்கும் ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது. பின்னர் அவர்களுக்கு 'பெயில்' வழங்கப்பட்டது. அவரது பொறுப்பில் உள்ள கிராமின்ஃபோன் என்ற தொலைத்தொடர்பு நிறுவனம்தான் அந்நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழை எளிய மக்களுக்கு உத்தரவாதம் இல்லாத கடனை அளிப்பதாகச் சொன்னாலும் வாங்கிய கடனை அடைக்கப்பதற்கே மக்கள் மீண்டும் வங்கியில் நுண்கடன் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. யூனுஸ் மீதான முதல் நிதி மோசடிக்குற்றச்சாட்டு 2010 இல் கிளம்பியது. நார்வே நாட்டின் நொராட் (NORAD - Norweigian Agency for
Development Co-operation) என்ற நிறுவனம் வழங்கிய பல கோடி டாலர் நிதி உதவிகளை அவர் கையாடல் செய்ததாக டென்மார்க் ஆவணப்பட இயக்குநர் டாம் ஹீன்மான் (Tom Heinemann) குற்றம் சாட்டியதுடன் அதுபற்றி Caught
in Microdebt (நுண்கடன் வலையில் வீழ்ந்த கதை) என்ற ஆவணப் படத்தையே தயாரித்துள்ளார். படம் யூடியுப்பில் உள்ளது.
தம்மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் தமது பிரத்யேக இணையத்தளத்தில் (www.muhammadyunus.org) மறுத்து விளக்கம் கூறியுள்ளார் யூனுஸ். அவற்றையும் அனைவரும் பார்க்க முடியும்.
02.09.2024
…
கட்டுரை எழுத உதவிய வலைத்தளங்கள்:
wikipedia, Krishok.org, thefederal.com,
aljazeera.com, scmp.com, theprint.com, foreignpolicy.com, livemint.com, thehindu.com,
thedailystar.net, etvbharat.com, industantimes.com, businessstandard.com,
ndtv.com, firstpost.com, thefinancialexpress.com, crisis24.garda.com,
drishtiias.com, rescue.org, wtcmumbai.org, muhammadyunus.org
…
திணை (செப்டம்பர்-நவம்பர் 2024) காலாண்டிதழில்
வெளியான கட்டுரை.