மதுரையுடன் என் தனிப்பட்ட நேரடி உறவு எனில் சுமார் பதின்மூன்று வருடங்கள் மட்டுமே. அதன் பின் சொந்தங்கள், நட்புக்களின் உறவுகள் வடிவில் இப்போதும் மதுர என்னுடன் உறவாடிக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் அந்த பதின்மூன்று வருடங்கள்தான் என் மூளையின் வடிவத்தை, சிந்தனைப்போக்கின் திசையை தீர்மானித்தன என்பதை வயது கூடும்போது பலவேறு நேரங்களில் உணர்ந்து இருக்கின்றேன். 19 வயதுக்கு உட்பட்ட ஒரு இளைஞனின் சிந்தனை எப்படி அல்லது எதன் மீது கட்டமைக்க படுகின்றது என்பது மிக இன்றியமையாதது என்று நினைக்கின்றேன். அந்த வயதில் என்னை நேரடியாக பாதித்தவையும் தொடர்புடையவையும் குறிப்பாக இவைதான்: நூலகம், படிப்பகங்கள், என் சி பி எச், கட்சிக் கூட்டங்கள், பட்டிமன்றம், வழக்காடு மன்றம் ஆகியன ஒரு புறம். மற்றது கலையும் இசையும் சார்ந்தது, சினிமா, தியேட்டர்கள், தெரு நாடகங்கள், கரகாட்டம், ஆர்கெஸ்ட்ரா மேடை கச்சேரி, காந்தி மியூசியம் இப்படி. கல்லூரி கால அனுபவம், காதல் போன்றவற்றுக்கு என் குடும்ப சூழல் அனுமதி தரவில்லை என்பதே உண்மை.
ச சுப்பாராவின் மதுரை போற்றுதும் என்னிடம் வந்து சேர்ந்து ஒரு மாதத்துக்கு மேலாக ஆயிற்று. மதுரையின் பண்டைய கால வரலாறு, பெருமை, புராணம், சிவன், மீனாட்சி, வைகை, கேசட் காலம் என சுப்பாராவ் பலவற்றிலும் மூழ்கி முத்து எடுக்கின்றார். மதுர என்றதுமே ஒரு மேலோட்ட வாசிப்பு முடித்தாகிவிட்டது. ஆனால் மனைவி பிள்ளைகளுடன் குடும்பத்தோடு 1000 கிலோமீட்டர் பயணம் போகும் ஒருவன் தன் இளம்பருவ காதலின் நினைவுகளுடன் தொடர்புள்ள ஒரு ஊரின் ஊடே செல்லும்போது எல்லோரையும் விலக்கிவிட்டு தனியே ஒரு பின்னோக்கிய பயணம் செல்வதுபோல, படிப்பகங்கள், கட்சிக்கூட்டங்கள், சாந்தி தியேட்டருக்கு போய்... ஆகிய அத்தியாயங்களில்தான் மனம் பிரேக் அடித்து கச்சிதமாக நிற்கின்றது.
நினைத்துப்பார்க்கும்போது மதுரையின், குறிப்பாக செல்லூரின் நூலகம், கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் நூலகம் ஆகியனவும், செல்லூரின் சி ஐ டி யு கைத்தறி சங்கமும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டங்களும் அவற்றின் தலைவர்களும் அந்த தெருமுனை கூட்டங்களிலும் திலகர் திடல் கூட்டங்களிலும் நிகழ்த்திய உரைகள், மாரி மணவாளன் கச்சேரி, எமர்ஜென்சி காலத்தின் பின் வந்த 1977 தேர்தல், ஜனதா கட்சி உதயம், காங்கிரஸ்க்கு எதிர் அணியில் அதிமுக தவிர்த்து அனைத்து கட்சிகளும் திரண்டது, அக்கட்சிகளின் பெருந்தலைவர்களின் பிரச்சாரம் ஆகியவை எவ்வித பாசாங்கும் இன்றி நேரடியாக என் சிந்தனை என்னும் இளம் நிலத்தில் புதிய விதைகளை ஊன்றின என்றால் மிகையாகாது. கம்யூனிஸ்ட் பெருந்தலைவர்களின் நேரடி வகுப்புகளில் கலந்து கொண்ட அனுபவங்கள், அவர்கள் பேசிய பெரிய உலக, தேசிய அரசியல் புரிந்ததோ இல்லையோ, அவர்கள் சாதாரணமான ஆட்கள் இல்லை, அவர்கள் பேசுவதும் சாதாரண விஷயம் இல்லை, எனவே அவற்றை கேட்கின்ற நானும் சாதாரண ஆள் இல்லை என்பதாக மனதுக்குள் ஒரு பெருமித உணர்வு இருந்தது உண்மைதான்.
மதுரை செல்லூரின் கைத்தறி முதலாளிகளை பண்ணாடிகள் என்போம். அவர்கள் ஒன்றிணைந்து செல்லூரில் கலைவாணர் என் எஸ் கே படிப்பகம் நடத்தி வந்தார்கள். அங்கேதான் எனக்கான வாசிப்பெனும் பெரும் மாளிகையின் முதல் பெருங்கதவு திறந்து கிடந்தது. பள்ளி நேரம் போக மீதி நேரம் அங்கேயே பழியாக கிடந்தேன். எத்தனை பத்திரிக்கைகள்! எத்தனை வார, மாத இதழ்கள்! ஒரு துண்டு தாளும் பாக்கியின்றி அனைத்தையும் வாசித்தேன். என் வயதின் எல்லையை மீறியவற்றையும் வாசித்திருக்கிறேன். குஷ்வந்த் சிங் எழுதிய ட்ரெயின் டூ பாகிஸ்தான் அப்போது தினமணி கதிரில் ரா கி ரங்கராஜன் மொழிபெயர்ப்பில் வந்தது. குமுதத்தில் ஹென்றி ஷாரியரின் பட்டாம்பூச்சி தமிழில் வந்தது. வாசித்தேன். என் அண்ணனின் அறிமுகத்தால் சி ஐ டி யு சங்கம் வேறு மாதிரியான புத்தகங்களை என் சி பி எச் மூலம் திறந்துவிட்டது. இவை தவிர செல்லூர் கிளை நூலகம், மத்திய நூலகம் ஆகியவற்றின் உறுப்பினர் அட்டையை வாத்தியார் திரு.சுந்தரராஜன் எனக்கு கொடுத்திருந்தார் என்பதால் அங்கேயும் நூல்களை பெற்று வாசித்தேன்.
இவை ஒருபுறம் இருக்க, திரும்பிய திசை எங்கும் பட்டிமன்றம், வழக்காடுமன்றம், கரகாட்டம், அமெரிக்கன் கல்லூரி ஆர்கெஸ்ட்ரா, பாண்டியன் போக்குவரத்து கழக ஆர்கெஸ்ட்ரா, செல்லூர் நண்பர்கள் சீரமைப்புக்குழு நடத்தும் ஒரு வார பொங்கல் விழா நிகழ்ச்சிகள், பாட்டு, கூத்து, காந்தி மியூசியம் இசை நிகழ்ச்சிகள் என்று மறுபுறம். நண்பர்கள் சீரமைப்புக்குழுவை அப்போது நடத்திக்கொண்டு இருந்தவர்கள் எம் ஜி ஆர் ரசிகர்கள் ஆன அமெரிக்கன் கல்லூரி நண்பர்கள். தலைவராக இருந்தவர் செல்லூர் ராஜு, பிற்காலத்தில் அமைச்சராக இருந்தார்.
தியேட்டர்கள். மதுரையின், தென் மாநில மக்களின் நேசத்துக்கு உரியது இலங்கை வானொலி. அரசியலுக்கு மட்டுமல்ல, பாட்டு, சினிமா இரண்டுக்கும் மதுரை தலைநகரம். இப்போது மிகப்பல தியேட்டர்கள், ஆசியாவின் மிகப்பெரிய தங்கம் உட்பட, இடிக்கப்பட்டு விட்டன அல்லது வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகிவிட்டன. இது பற்றி தனியே நானும் எழுதிவிட்டேன், விரைவில் வெளியாக இருக்கும் நூலிலும் எழுதியுள்ளேன்.
மதுரையில் பிறந்தவர்கள், மதுரையில் வாழ்ந்தவர்கள், இப்போதும் வாழ்பவர்கள், வேலை நிமித்தம் வந்தவர்கள், திருமண பந்தத்தால் உறவாடும் நண்பர்கள், படித்தவர்கள், மதுரையை விட்டு இப்போது நெடுந்தொலைவில் வாழ்பவர்கள் என்று எல்லோருக்கும் பொதுவான ஒரு சொத்துப்பத்திரத்தை எழுதியுள்ளீர்கள் சுப்பாராவ்! பரந்து விரிந்த இந்த சொத்தில் எங்கோ ஒரு மூலை எனக்கும் சொந்தமாக எப்போதும் உள்ளது!
மதுர போற்றுதும்...
- மு இக்பால் அகமது
....
மதுரை போற்றுதும்
ச சுப்பாராவ்
சந்தியா பதிப்பகம், சென்னை 83
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக