திங்கள், டிசம்பர் 27, 2021

தாள்களிலிருந்து கிளர்ந்து எழும் போதை


மதுரையில் வக்ஃப் கல்லூரி முதல்வரை நேரில் சந்தித்து கருணை மனு கொடுத்தும் காமெர்ஸ் தர மறுத்துவிட்டார். கணக்கு சயின்ஸ் க்ரூப் படிச்சிட்டு காமெர்ஸ் எடுத்தால் உங்களால் முடியாது தம்பி என்று மென்மையான குரலில் திருப்பி அனுப்பிவிட்டார். வருத்தத்துடன் வெளியே வந்தேன். சரிதான், நமக்கு இட்ட வழி இதுவே என்று என் பெற்றோரின் வழியில் கைத்தறி தொழிலாளியாக மாறினேன். காலம் உண்மையில் மிக வினோதமானது! சமயத்தில் நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்தி விடுகின்றது! பலவிதமான திருப்பங்கள், சுழற்சிகளுக்கு பிறகு ஒரு கட்டத்தில் அதே அக்கவுண்ட்ஸ் துறையில் பணி வாய்ப்பை ஏற்படுத்தி நான் இன்று இருக்கும் நல்ல நிலைக்கு என்னை உயர்த்திவிட்டதை என்னென்று சொல்ல!

உண்மையில் கைத்தறி தொழிலை கையில் எடுத்தது என்னை வேறொரு தளத்துக்கு எடுத்து சென்றது. தொழிலில் நேரடியாக ஈடுபட்டேன் என்பது ஒருபுறம். எட்டாவது வகுப்புக்கு முன்பே பள்ளி இறுதி விடுமுறை நாட்களில் தறியின் தொழிநுட்பம் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டு ஒரு நாளைக்கு 25 பைசா சம்பாதித்தேன். எனவே கைத்தறி தொழிலின் அடிப்படை நுட்பங்களை தெரிந்து வைத்து இருந்தேன். குறிப்பாக ஜகார்டு எனப்படும் பூவேலைப்பாடு சார்ந்த நுட்பங்களை அறிந்த ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்து சில மாதங்கள் செய்ததால் அதையும் அறிவேன். பள்ளி திறக்கும்போது நோட்டு பென்சில் பேனா வாங்க அது உதவியாய் இருந்தது. எனவே கல்லூரி படிப்பு கைகூடாமல் போனது வருத்தமே என்றாலும் சும்மா இருந்து சோறு சாப்பிடக்கூடாது, உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பின்னர் அஞ்சல் வழி வரலாறு முதுகலை படித்தது வேறு கதை.

மூத்த அண்ணன் கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கியவர். எனவே பள்ளியில் படிக்கும்போதே சோவியத்நாடு, ஸ்புட்னிக், என் சி பி எச் நூல்கள் எல்லாவற்றையும் அறிந்து இருந்தேன். அன்றியும் மதுரையின் அரசியல் கூட்டங்கள், என் சி பி எச்சின் பாரதி நடமாடும் புத்தக விற்பனை நிலையம், 80 மேலக்கோபுர வீதி விற்பனை நிலையம் ஆகியனவும், செல்லூர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் படிப்பகமும், மதுரையின் தெருக்கள்தோறும் இருந்த படிப்பகங்களும் வாசி வாசி என்று விடாமல் துரத்தின. படிப்பகங்கள் என்றால் பெரிதாக இல்லை, ஒரு கீத்துகொட்டகை, ரெண்டு நாளிதழ்கள், ஒரு கயிறு கட்டி அதில் குமுதம், ஆனந்தவிகடன், கல்கண்டு போன்ற வார இதழ்கள், இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் டேவிட், மாண்ட்ரேக், வேதாளன் போன்ற படக்கதைகள் ஆகியவற்றை தொங்கவிட்டிருப்பார்கள். உண்மை, விடுதலை, சோவியத் நாடு, குங்குமம், சாவி உள்ளிட்ட கணக்கற்ற வார இதழ்கள், முரசொலி, தினமணி, தினமலர், தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்கள் என வாசிப்புக்கு நேரம்தான் இருக்காது. இவற்றை முடித்தால் சி ஐடியு சங்கம் சென்று தீக்கதிர், செம்மலர் வாசிக்கலாம். தீக்கதிர் வார இதழாக வந்துகொண்டு இருந்ததும் நினைவில் உள்ளது. தவிர செல்லூரின் கிளை நூலகம், மத்திய நூலகம் ஆகியவற்றின் உறுப்பினராக இருந்த பக்கத்து வீட்டு வாத்தியார் திரு சுந்தரராஜன் தன் உறுப்பினர் அட்டையை என்னிடம் கொடுத்து வாசிக்க சொன்னார், ஒரே நாளில் இரண்டு புத்தகங்களை வாசித்து முடித்து மாற்றியதும் உண்டு. என் சி பி எச்சின் 15, 25 பைசா, 1, 2 , 5, 10 ரூபாய் மதிப்புள்ள தரமான சோவியத் பதிப்புகள். தவிர கீவ், உக்ரெய்ன், மாஸ்கோ, சைபீரியா ஆகிய சோவியத் நகரங்களின் அழகை ஆயில் தாளில் அச்சிட்டு வந்த மிக மிக அழகிய கெட்டி அட்டை புகைப்பட நூல்கள் இப்போது மெல்லிய வெண்புகை போன்ற கனவாய்....

ஏ பாலசுப்பிரமணியம், எம் ஆர் வெங்கட்ராமன், பி ராமமூர்த்தி, பி ராமச்சந்திரன், என் சங்கரய்யா, மைதிலி சிவராமன், ஐ மாயாண்டி பாரதி ஆகியோர் எடுத்த வகுப்புகளில் இருந்துள்ளேன். முதுபெரும் தோழர் கே பி ஜானகி அம்மா அவர்கள் சங்கத்துக்கு வருவார்கள்.

சங்கத்தில் செல்லூரின் கைத்தறி தொழிலாளிகளாக இருந்த மிகப்பல சேட்டன்மார்களை, ஆம் மலையாளிகளை பார்க்கலாம். திக்கான கலரில் பூப்போட்ட மூட்டி தைக்காத கைலிகள் கட்டி இருப்பார்கள். அவர்கள் பேசும் மலையாளத்தை கவனிப்பேன். அதேபோல் அவர்களுடன் சென்று அரிசிப்புட்டு, கேழ்வரகு புட்டு, கடலை, அப்பளம், எண்ணெய் சாப்பிடவும் பழகினேன். கேரளாவின் மீது ஒரு மரியாதை உருவானது. பின்னொரு காலத்தில் பணி நிமித்தம் கொச்சிக்கு இடம் மாறியபோது உண்மையில் மகிழ்ச்சி அடைந்து ஏற்றுக்கொண்டதற்கு அதுவும் ஒரு காரணம். 

கைத்தறி தொழிலில் ஒரு நாளைக்கு 18, 20 ரூபாய் கிடைக்கும், அவ்வளவே. இதில் என்னுடன் தொழிலாளியாக இருந்த (என் அண்ணன்மார் இருவரின் நண்பர்) தோழர் முருகன், என்னைப்போல் இசை வெறியர். என்னைப்போல் தீவிர வாசிப்பாளர். கட்சிக்காரர். செல்லூரின் மேடை நாடக சீசன்களில் என் அண்ணனும் அவரும் பின்பாட்டு பாடுவார்கள். கேட்க வேண்டுமா? அவரும் நானும் சேர்ந்துதான் மதுரையின் தியேட்டர்களை மில்லி மீட்டர் மில்லி மீட்டராக  அளவெடுத்தோம். சம்பாத்தியத்தில் ஒருபகுதி சினிமாவுக்கு சென்றது. சினிமாவும் கட்சி கூட்டங்களும் இசையும் நூல் வாசிப்பும் சேர்ந்தே பயணம் செய்தன. புத்தகங்களின் மீது அடங்காத காதல், வெறிதான், இருந்தாலும் வாங்குவதற்கு பணம் இல்லாத வாழ்க்கை சூழல். ஆனாலும் என்ன, என் சிந்தனையை, சிந்தனைப்போக்கை வார்த்த காலம் அதுதான். முருகன் இந்தியன் ஆயிலில் வேலை செய்து ஓய்வும் பெற்றுவிட்டார்.

பிள்ளைகளை தறித்தொழிலில் ஈடுபட வைத்தது போதும் என்று என் அப்பா முடிவு செய்தார். இடம் பெயர்ந்து ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தேன். ஆறு மாதம்தான். மீண்டும் மதுரைக்கு வந்துவிட்டோம். ஆம்பூரின் 2 ரூபாய் நெய் மணக்கும் மாட்டுக்கறி பிரியாணி மட்டும் இப்போதும் நாக்கில் நினைவு உள்ளது.

சென்னைக்கு தொழில் பழகுனர் வேலைக்கு வந்து சேர்ந்தேன். ஒன்றரை வருடம் முடித்தபின் வேலை நிரந்தரம் ஆனது. உடன் பயின்ற நண்பன் சுந்தரவேலுதான் அரசினர் காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த பபாசி புத்தக கண்காட்சிக்கு அழைத்துச்சென்று அறிமுகம் செய்தான். அங்கே பிடித்தது வேகம். ஆம், சம்பாத்தியத்தில் பெரும்பகுதி புத்தகங்கள் வாங்கவென்றே ஆனது. அது ஒரு வெறி. சுமார் 40, 50 ஸ்டால்கள் மட்டுமே இருந்த பபாசியின் 1983, 84 காலம். அப்போதே இரண்டு மூன்று முறைகள் சென்று அன்றைய மதிப்பில் 400 ரூபாய்க்கு குறையாமல் வாங்கினால்தான் நிம்மதி. அன்னம், நர்மதா, வானதி, தமிழ்ப்புத்தகாலயம், என் சி பி எச், சோவியத்தின் ராதுகா, மிர், நோவோஸ்தி என பெரிய சேகரிப்பு அப்போது தொடங்கியதுதான். அப்பா சிறுவனாக இருந்தபோது, மனித இனங்கள், நெஞ்சை அள்ளும் வானவியல், உலகை குலுக்கிய பத்து நாட்கள், தூக்கு மேடை குறிப்புகள், இவர்தான் லெனின், எறும்பும் புறாவும், புஷ்கின், கோர்க்கி, பரீஸ் வசிலியெவ், ஸ்தாலின்க்ராட் சண்டை, புத்துயிர்ப்பு, அதிகாலையின் அமைதியில் என்று எத்தனை எத்தனை புத்தகங்கள்! எல்லாம் சோவியத்தின் புரட்சிகர வாசத்தை தம் பக்கங்களுக்குள் அடக்கிக்கொண்டு இப்போதும்.... இவையன்றி வெளியே பிளாட்பாரத்தில் விற்கப்பட்ட பழைய நூல்களில் மிக அரிய நூல்கள் பலவற்றை வாங்கி இருக்கின்றேன்.

இவை தவிர என்னை வளர்த்ததில் முக்கிய பங்கு 1989 முதல் 2003 வரை ஈடுபட்ட தொழிற்சங்க அனுபவம் என்பது உண்மை. தமுஎசவில் இணைந்து செயல்பட்டதும் தோழர்களின் தொடர்பும் கூட்டங்களும் பெரும் அனுபவத்தை தந்தன.

என் தகுதியை மீறியவனவாக இருந்தவை ஆங்கில நூல்கள்தான். 1984 தொடங்கி தி ஹிந்து வாசித்துக்கொண்டு இருக்கின்றேன். அதில் வரும் ஆங்கில நூல்களின் விமர்சனங்கள் எப்போதும் என் கவனத்துக்கு உரியவை. டைரியில் குறித்து வைப்பேன், அவ்வளவுதான், வாங்க வழியில்லை. அப்போது மவுண்ட்ரோட் ஹிக்கின்போதம் சென்றால் டிக்சனரி தவிர வேறு எதுவும் வாங்கமுடியாது, விலையும் அப்படி, நான் நினைத்து செல்லும் நூலும் இருக்காது. வெறுப்பாக இருக்கும்.

காலம் வேறு மாதிரி வழியை காட்டுகின்றது. உலகமயம் என் போன்றவர்களுக்கு வேறு மாதிரியாக ஒரு வழியை திறந்துவிட்டது. அமேசான் போன்ற பிரிண்ட் ஆன் டிமாண்ட் ஆன்லைன் விற்பனை, இப்போது ஆங்கில நூல்கள் குறித்த என் கனவை நனவாக்கி உள்ளன. வாங்கி குவிக்கின்றேன். சிலவற்றை வாசிக்கின்றேன், வாசிக்க வேண்டியவை ஏராளம். தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய வேண்டிய நூல்கள் ஏராளம் ஏராளம். செய்ய வேண்டும். கவலை இல்லை, என் மகன் வாசிப்பான், தோழர்கள் வாசிப்பார்கள், நம் பிள்ளைகள் வாசிப்பார்கள். தம் வாசிப்பின் வழியே புதிய சிந்தனைகளை வளர்த்துக்கொள்வார்கள், உலகத்தை மாற்றும் வழியை கண்டறிவார்கள்.

1991இல் இருந்து எழுதிக்கொண்டும், மொழியாக்கம் செய்து கொண்டும் இருக்கின்றேன். என் கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுத்தவற்றை வரும் ஜனவரியில் நூலாக வெளியிட உள்ளேன். வள்ளியப்பன் மெஸ்ஸும் மார்கரீட்டா சீஸ் பிஸாவும் என்பது நூல். நோஷன் பிரெஸ் வெளியீடு.

வாசிப்போம்! எழுதுவோம்!

- மு இக்பால் அகமது

26.12.2021

கருத்துகள் இல்லை: