சனி, டிசம்பர் 25, 2021

கே எஸ் சேதுமாதவன்: வெள்ளித்திரையின் புதிய வெளிச்சம்

எட்டு வயதில் தன் கண் முன்னே தந்தை மாரடைப்பால் இறப்பதை புரிந்தும் புரியாமலும் பார்த்து நிற்கின்றான் அச்சிறுவன். அவனுக்கு கீழே மூன்று தங்கைகளும் ஒரு தம்பியும் வேறு இருக்க, அவனது தாயோ நடப்பதை நம்ப முடியாமலும் என்ன செய்வது என்று தெரியாமலும் திகைத்து நின்று ஓவென்று அழுகின்றார். எட்டு வயது சிறுவன் அதன் பின் நடப்பன எல்லாவற்றையும் கவனிக்கின்றான். இறந்துபோன அவன் தந்தை அரசின் வன இலாகா அதிகாரி. இதன் பின்னர் அம்மா தன் சொந்த ஊரான கேரளாவின் பாலக்காட்டுக்கு ஐந்து பிள்ளைகளுடன் இடம் பெயர்கின்றார்.


  • அச்சிறுவன் பிற்காலத்தில் இந்திய நாடு அறிந்த மிகச்சிறந்த திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக ஜொலிக்கின்றான். பெயர் சேது மாதவன். அப்பெயரை ஈட்டுமுன் அவன் சந்தித்த சிரமங்கள், அனுபவங்கள் யாவும் பெரும் வரலாற்றுப்பதிவுகள்.

    கேரளாவில் பாலக்காட்டில் சுப்ரமணியன், லட்சுமி தம்பதியருக்கு 29.5.1927 அன்று பிறந்தவர்தான் சேது மாதவன். பாலக்காட்டில் இருந்து பணி நிமித்தமாக தமிழ்நாட்டில் வட ஆற்காடு மாவட்டத்துக்கு வருகின்றது சுப்பிரமணியனின் குடும்பம். அப்போது சேதுவின் டியூசன் ஆசிரியர் ஆக இருந்தவர் நாதமுனி நாயுடு, ஆந்திராவின் சித்தூரை சேர்ந்தவர். தெலுங்கு பேசும் குடும்பம். ஆக மலையாளி ஆன சேது, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளையும் பேச கற்றுக்கொண்டார்.

    பள்ளி இறுதி வகுப்பான பி யு சியை பாலக்காட்டில் அரசு விக்ட்டோரியா கல்லூரியில் முடித்தார். 1947இல் மெட்ராஸ் ப்ரெசிடென்சி கல்லூரியில் இளங்கலை தாவரவியல் படிப்பை முடிக்கின்றார். 1925இல் பிறந்தவரும் மாணவப்பருவம் தொட்டே இடதுசாரி கம்யூனிச இயக்கத்தில் தன்னை கரைத்துக்கொண்டவரும் பிற்காலத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த மக்கள்இசைமேதையாக திகழ்ந்தவரும் ஆன எம் பி சீனிவாசன் சேதுவின் கல்லூரி சீனியர். இருவருக்கும் இடையே ஆன மாணவப்பருவநட்பு பிற்காலத்தில் திரைப்பட துறை சார்ந்த நட்பாக மாறியபோது இருவரும் இணைந்து செய்த சாதனைகள் அதற்கு முன் திரையுலகம் கண்டிடாதவை.

    1948இல் திருவல்லிக்கேணி விக்டரி ஹாஸ்டலில் சேது தங்கியிருந்தபோது சுகுமாரன் என்ற நண்பர் அவருக்கு புகழ்பெற்ற ஆங்கில திரைப்படங்களையும் புத்தகங்களையும் அறிமுகம் செய்கின்றார். புதினங்கள் வாசிப்பதில் இயற்கையான ஈடுபாடு கொண்டிருந்த சேதுவுக்கு, எழுதப்பட்ட கதைகளின் அடிப்படையில் ஆன திரைப்படங்கள் மீது ஈடுபாடு ஏற்பட்டது. அவர் திரைப்பட இயக்குனராக உருவான பின் மலையாள புனைவுகள் பலவற்றை படமாக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ ஜே க்ரோனின் என்பவர் எழுதிய கீஸ் ஆஃப் தி கிங்டம் என்ற கதை திரைப்படம் ஆனதை தன் பள்ளி நாட்களில் சேது பார்த்து ரசித்து இருந்தார். மெட்ராஸ் கல்லூரி நாட்களில் ஹால் கெயின் என்பவரின் தி பாண்ட்மேன் என்ற கதையை வாசித்துவிட்டு இரண்டு நாட்கள் காய்ச்சலில் விழுந்திருக்கின்றார். ரத்த உறவுள்ள இரண்டு ஆண்கள் ஒரே பெண்ணின் மீது காதல் கொள்ளும் கதை அது.

    அப்போதுதான் திரைப்பட கல்லூரி மாணவர்கள் சிலரின் நட்புக்கிடைக்கின்றது. ஆங்கில திரைப்படங்கள் பலவற்றை பார்க்கின்றார். திரைப்பட துறையில் சேர வேண்டும் என்ற ஆவல் அவருக்குள் தீவிரம் ஆகின்றது. குறிப்பாக அப்போது கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டுடியோவில் வேலைக்கு சேர விரும்புகின்றார். குடும்பத்தின் மூத்த மகன் அரசு உத்தியோகத்தில் சேர்ந்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கனவில் இருந்த அம்மாவுக்கு, சேதுவின் ஆசை அதிர்ச்சி அளிக்கின்றது. எப்படியோ அம்மாவின் சம்மதம் பெற்று விடுகின்றாரே தவிர சென்ட்ரல் ஸ்டுடியோவில் சேர்வது முடியாமல் போகின்றது. அப்போதுதான் ஒரு திருப்பம் நேர்கின்றது. பாலக்காடு விக்ட்டோரியா கல்லூரியில் அவரது ஜுனியர் ஆக படித்த ஓ வி விஜயனை சந்திக்கின்றார். விஜயன் அப்போது மலையாள எழுத்தாளர், கார்ட்டூன் ஓவியர். விஜயனின் நண்பர் ஒருவரின் அப்பா காவல்துறை அதிகாரி, அவரது பரிந்துரையின் பேரில் சென்ட்ரல் ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்ந்த சேதுவின் முறையான சினிமா பயணம், 1951இல் மர்மயோகி படப்பிடிப்பை பார்த்த நாளில் தொடங்குகின்றது. அது 1951, நாயகன் எம் ஜி ஆர். இயக்குனர் கே ராம்நாத்.

    ராம்நாத்தின் உதவியாளர்களில் ஒருவர் சேது. முதல் மூன்று மாதங்களுக்கு ஊதியமோ உதவித்தொகையோ இல்லாமல் போக, ஊரில் இருந்த அம்மா அவருக்கு அனுப்பும் பணம் உணவுக்கும் புத்தகங்களுக்கும் செலவாகிறது. பின் 40 ரூபாய் உதவித்தொகை கிடைக்கின்றது, அதுவே பின்னர் 150ஆக உயர்ந்தது.

    இதன் பின் சேலம் மாடர்ன் தியேட்டர்சில் டி ஆர் சுந்தரத்தின் உதவியாளர் ஆக சேர்கின்றார். அமெரிக்காவுக்கு படிக்கப்போன இடத்தில் திரைப்பட நுணுக்கங்களை கற்றுக்கொண்டு தமிழகம் வந்து 1936இல் மாடர்ன் தியேட்டர்சை சேலத்தில் நிறுவினார் சுந்தரம். மாடர்ன் தியேட்டர்ஸ் 96 படங்களை உருவாக்கியது, ஏறத்தாழ 56 படங்களை சுந்தரமே இயக்கினார். ஒரு திரைப்படத்தை படப்பிடிப்பில் தொடங்கி இறுதி பிரிண்ட் வரை அச்சிட்டு வெளியாக்க தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தது அந்த ஸ்டுடியோ. மிகப்பல படங்களில் சுந்தரத்தின் உதவியாளராக பணி ஆற்றி இருக்கின்றார் சேது. உதவியாளர்களுக்கு ஒரு வேலை இருந்தது. தியேட்டர்களில் வெளியாகும் படங்களை பார்த்து வந்து கதை, இயக்கம், தொழிநுட்பம் பற்றி சுந்தரத்துக்கு விளக்கி சொல்ல வேண்டும். இது ஒரு பயிற்சி.

    சுந்தரம் திரைப்பட நுணுக்கத்தில் தேர்ச்சி பெற்றவர், படப்பிடிப்பை திட்டமிட்டு கச்சிதமாக முடிப்பதில் உறுதியாக இருந்தார், எனவே செலவும் பிலிம் சுருள்களை வீணாக்குவதையும் தவிர்த்தார். கண்டிப்பானவர். இவரது கண்டிப்புக்கு எம் ஜி ஆரும் பானுமதியும் கூட ஆளானவர்கள். அவரிடம் பெற்ற பயிற்சிதான் சேதுவை முழுமையான ஒரு திரைப்பட கலைஞராக உருவாக்கியது.

    மலையாளத்தின் முதல் வண்ண திரைப்படம் ஆன கண்டம் பெச்ச கொட்டு படத்தில் சுந்தரத்துக்கும் சேதுவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக சேது மாடர்ன் தியேட்டர்சில் இருந்து விலகுகின்றார். இதில் ஓரளவு தொடர்புடைய விநியோகஸ்தர் டி ஈ வாசுதேவன், 1961இல் மலையாளத்தில் ஞானசுந்தரி படத்தை எடுத்து சேது மாதவனை இயக்க சொல்லி சேதுவை மலையாளத்தில் ஒரு இயக்குனர் ஆக்கினார்.

    எம் டி வாசுதேவன் நாயர், முட்டத்து வர்க்கி, தோப்பில் பாசி, மலையாற்றூரர், தகழி சிவசங்கரபிள்ளை, பி பத்மராஜன், பி கேசவதேவ், கே டி முஹம்மத் ஆகியோரின் பல கதைகளை படமாக்கியிருக்கிறார் சேது. 60 படங்களுக்கு மேல் இயக்கினார். கன்யாகுமரி, கண்ணும் கரலும், ஓடையில் நின்னு, யக்சி, கடல்பாலம், அச்சனும் பாப்பாயும், அர நாழிக நேரம், பணி தீராத வீடு, புனர் ஜென்மம், ஓப்போள், சட்டக்காரி ஆகியனவும், ஹிந்தியில் ஜூலி, தமிழில் பால்மனம், மறுபக்கம், நம்மவர் ஆகியனவும் குறிப்பிடத்தக்கன. தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய முதல் படம் விஜய வீர என்ற சிங்கள மொழிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    கண்ணும் கரலும் என்ற படத்தில்தான் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகம் ஆனார். அவரே பிற்காலத்தில் சேதுவின் கன்யாகுமரி (1974) படத்தின் நாயகன் ஆகவும் ஆனார். அவர் கதாநாயகன் ஆக அறிமுகம் ஆன படம். கண்ணும் கரலும் படத்தின் இசையமைப்பாளர் எம் பி சீனிவாசன். கல்லூரிப்படிப்பின் பின் சேதுவுக்கும் எம் பி எஸ்ஸுக்கும் தொடர்புகள் இல்லாமல்தான் இருந்துள்ளது. சேலத்தில் இருந்தபோது தான் பார்த்த ஒரு படத்தின் இசை புதுசாக வித்தியாசமான முறையில் இருப்பதை கண்டு சேது சிந்திக்கின்றார். அந்த இசைக்கு சொந்தக்காரர் எம் பி எஸ்.

    பிற்காலத்தில் கண்ணும் கரலும் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தபோது அதே இசையமைப்பாளரை தன் படத்துக்கு இசையமைக்க அழைக்கின்றார். இருவரும் சந்திக்கும்போதுதான் கேட்கின்றார், "எம் பி எஸ், என்னை நினைவு இல்லையா, நான்தான் சேது". இப்படத்தில்தான் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகின்றார். மட்டுமின்றி, தன் குரல் வளத்தில் தலத், ரஃபி ரேஞ்சுக்கு உயரத்தை எட்டுகின்ற ஒரு இளைஞனை இருவரும் சேர்ந்து திரையுலகில் அறிமுகம் செய்கின்றனர், கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் என்பது அந்த இளைஞனின் பெயர். எம்பி எஸ்ஸின் இசையில் கால்பாடுகள் என்ற படத்தின் வழியே திரையுலகில் நுழைகின்றார் யேசுதாஸ். 

    கண்ணும் கரலும் படத்தின் நாயகர்கள் புகழ்பெற்ற சத்யனும் அம்பிகா சுகுமாரனும். படத்தில் ஒரு காதல் டூயட் பாட்டும் இல்லை, படம் ஓடாது என்று பலரும் சவால் விடுத்துள்ளனர். தயாரிப்பாளருக்கு நிதி உதவி செய்த சி சக்ரவர்த்தி ஐயங்கார், "சேது, படம் 50 நாட்கள் ஓடிவிட்டால் உனக்கொரு பரிசு நிச்சயம்!" என்று சவால் விடுக்க, தமிழர்கள் நிறைந்த பாலக்காட்டில் படம் அறுபது நாட்கள் ஓடியது. பட இயக்க நுட்பத்தில் அதுவரை இல்லாத நயத்தை வெளிக்கொண்டு வந்ததாகவும் மலையாள திரைப்பட வரலாற்றில் சேது மாதவன் ஒரு திருப்பத்தை தருவார் என்றும் அன்று பத்திரிகைகள் எழுதி பாராட்டின. நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் ஐயங்காரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது இதை சேது நினைவுபடுத்த, தன் மேல் இருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து சேதுவுக்கு போர்த்தி இருக்கின்றார். அதனை தன் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வந்தார் சேது.

    ஓடையில் நின்னு (1965) என்ற பி கேசவதேவின் கதை. ஒரு ரிக்ஸா ஓட்டுனர். நாயகன் தன் வளர்ப்பு மகளின் அம்மாவுடன் உறவில் உள்ளதாக கதை. அப்புத்தகம் தடை செய்யப்பட்டுள்ளது என்று சேதுவின் மனைவி அவருக்கு சொல்கின்றார். ஆனால் சில கிறித்துவ பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் அந்த கதை துணைப்பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. படம் வந்த பிறகு தியேட்டர்களில் மாணவர்கள் கூட்டமாக சென்று பார்த்திருக்கின்றார்கள். தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டபோது இப்படத்துக்கு சிறந்த படத்துக்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது.

    நாளை நமதே என்ற படம். இந்தி படத்தின் தமிழ்ப்பதிப்பு. பி மாதவன் இயக்கினாலும் சேது இயக்கினால் நல்லது என்று படத்தின் ஹீரோ எம் ஜி ஆர் சொல்லியிருக்கிறார். ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு தொடங்க வேண்டும், பத்தே முக்கால் மணிக்கு எம் ஜி ஆர் வந்திருக்கின்றார். மறுநாளும் அதே போல். சேது அவரிடம் நேரடியாகவே பேசினார், "நீங்கள் வரும் நேரத்தை சரியாக சொல்லி விடுங்கள், நேரமும் பணமும் வீணாவதை தவிர்க்கலாம்" என்று. எம் ஜி ஆரின் புகழும் அவரது ஹீரோ இமேஜும் உச்சியில் இருந்த நேரம் அது. அடுத்த நாளில் இருந்து எம் ஜி ஆர் சரியான நேரத்துக்கு வந்துள்ளார். மாடர்ன் தியேட்டர்சில் மர்மயோகி படப்பிடிப்பின்போது எம் ஜி ஆர் தாமதமாக வர, டி ஆர் சுந்தரம் உடனடியாக எம் ஜி ஆருக்கு பதிலாக டூப் நடிகரை வைத்து படப்பிடிப்பை நடத்தியதை சேது நேரில் பார்த்திருந்தார். அண்ணா, தலைவர் போன்ற பிரபலமானபெற்ற சொற்களால் எம் ஜி ஆரை எல்லோரும் அழைக்கும்போது, மிஸ்டர் எம் ஜி ஆர் என்று அழைத்தவர் சேது.

    உச்சிவெயில் என்ற இந்திரா பார்த்தசாரதியின் கதையை தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும் அரசு தொலைக்காட்சியும் இணைந்து மறுபக்கம் (1991) என்ற படமாக்கினர். படத்தை இயக்கினார் சேது மாதவன். பன்னிரண்டு லட்சம் ரூபாய் பட்ஜெட், இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு. படத்தின் நடிகர்கள் பணம் வாங்க மறுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வற்புறுத்தலின் காரணமாக நாயகன் சிவகுமார்15000 ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டாராம். மேலும் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கை மிச்சமாக்கி அரசுக்கே திருப்பி கொடுத்துள்ளார் சேது. எல் வைத்தியநாதன் இசையமைத்தார். சிறந்த திரைப்படத்துக்கான தங்கத் தாமரை, திரைக்கதைக்கான வெள்ளித்தாமரை விருதுகளை படம் வென்றது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்த்திரைப்படம் உச்சிவெயில்.

    சேதுவின் இளையமாகன் சந்தோஷ் ஒரு திரைப்பட இயக்குனர் ஆக பரிமளித்தார். இந்திரா பார்த்தசாரதியின் அப்புவின் நாயகன் என்ற கதையை தன் முதல் படமாக இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    "மனித வாழ்க்கையின் உண்மையான சம்பவங்களை படமாகுவதில் எனக்கு விருப்பம் அதிகம். ஓப்போள் போல மனுசிகளை நான் பார்த்திருக்கிறேன். அந்த கதை ஒரு குழந்தையின் பார்வையில் இருந்து எழுதப்பட்டது. ஆம், அக்கதையை எழுதும்போது நான் ஒரு சிறு பையனாகவே ஆனேன்" என்றார் சேது.

    சென்னை பிரஸிடென்சி கல்லூரியில் எம் பி எஸ் சேதுவுக்கு சீனியர். இடதுசாரி மாணவர் இயக்கத்தில் தீவிரமாக இயங்கியவர் எம் பி எஸ். பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மூழ்கினார். பிற்காலத்தில் ஈ எம் எஸ் அவர்களின் நேர்முக செயலாளராக இருந்த சுப்ரமணிய சர்மாவின் தூண்டுதல் எம் பி எஸ்ஸின் உள்ளே இருந்த இசைக்கலைஞனை வெளிக்கொண்டு வந்தது. சேதுவும் எம் பி எஸ்ஸும் இணைந்து பல மலையாள படங்களையும் புகழ்பெற்ற பாடல்களையும் வாரிக்கொடுத்தார்கள். ஓப்போள் திரைப்படத்தில் எட்டுமானூர் அம்பலத்தில் என்ற ஒரு பாட்டு. நதியில் இடம்பெறும் காட்சி. எஸ் ஜானகி பாடும் பாட்டை பின்னணி இசையுடன் பதிவு செய்தனர். நதியில் பாடும் பாட்டுக்கு இசை எதுக்கு என்று இருவரும் சிந்தித்தார்கள். இசை எங்கே இடம்பெறக்கூடாது என்பதில் எம் பி எஸ் போன்று தீர்மானமாக இருப்பவர்கள் மிக அரிது. அதே பாடலை இசை இல்லாமல் ஜானகியின் குரலில் மட்டும் பதிவு செய்தார்கள். பாடலுக்கு தேசிய விருதுகிடைத்தது. யூடியூப்பில் பாடல் காட்சி உள்ளது. 

    மனவியல் ஆய்வாளர் டாக்டர் ஆபிரகாம் கோவூரின் சிகிச்சை அனுபவங்களில் ஒன்றுதான் புனர்ஜென்மம் என்ற மலையாள திரைப்படம் ஆனது. சேது இயக்கினார். தமிழில் டி ஆர் சுந்தரத்தின் சகோதரர் ஆன டி ஆர் ராமண்ணா மறுபிறவி (1973) என்று இயக்கினார்.

    சேதுவும் எம் பி எஸ்ஸும் இணைந்து செய்த பல முயற்சிகள், சோதனைகள் திரையுலகில் வேறு யாரும் அதற்குமுன் முயற்சி செய்து பார்த்திடாதவை. அந்த வகையில் இருவரும் துணிச்சல் மிக்கவர்கள். மகா மேதைகள் ஆகிய இவர்கள் இருவரும் இணைந்து அல்லது தனியாக பத்து படங்களில் கூட தமிழில் வேலை செய்யவில்லை. 

    1994இல் தமிழில் சேது இயக்கிய நம்மவர், கரண் என்ற சிறந்த நடிகரை தமிழுக்கு தந்தது குறிப்பிடத்தக்கது.

    சேதுவின் இளைய சகோதரர் கே எஸ் ஆர் மூர்த்தி. சேது திரையுலக பணிகளில் மூழ்கிகிடந்த காலங்களில் அவரது குடும்பத்தை காத்து நின்றவர் மூர்த்திதான். மூர்த்தி 25 படங்களை தயாரித்தார், சிலவற்றை சேது இயக்கினார். அதிகம் பேசாத அண்ணனுக்கு குரலாகவும் கரங்களாகவும் இருந்துள்ளார் மூர்த்தி. 

    தேசிய, மாநில அளவில் ஏறத்தாழ 25 விருதுகளை தன் வாழ்நாளில் பெற்று பெருமையடைந்தவர் சேது. மலையாள திரைப்படத்தின் தளகர்த்தர் ஆன ஜே சி டேனியல் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதை குறிப்பிட வேண்டும். அவர் பெயரால் கேரள அரசு நிறுவிய ஜே சி டேனியல் விருது 2009ஆம் ஆண்டில் சேதுவுக்கு வழங்கப்பட்டது.

    வெகுமக்களின், சாமானிய உழைக்கும் மக்களின் பொழுதுபோக்கு சாதனம் சினிமா. அந்த ஊடகத்துக்குள்ளும் கலை நுட்பங்களை, புதிய கதைகளை, புதிய கதை சொல்லும் நேர்த்தியை அறிமுகம் செய்தவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியும். இந்திய அளவில் அவ்வாறு முன்வரிசையில் அணி செய்பவர்களில் ஒருவர் கே எஸ் சேது மாதவன். சென்னையில் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்தார் சேது. 24.12.2021 அன்று காலமானார். திரைப்பட உலகின், திரை ரசிகர்களின் நினைவில் சேது மாதவன் என்றும் வாழ்கின்றார்.


    (கே எஸ் சேது மாதவன் 29.5.1927 - 24.12.2021)
    ... .... ....

    தகவல்கள் உதவி: இணையம், சேதுவின் மருமகள் நவினா ஆர் (மகன் இயக்குனர் சந்தோஷின் மனைவி) எழுதிய Journey of a film maker, பிற நூல்கள்.

கருத்துகள் இல்லை: