புதன், டிசம்பர் 22, 2021

1857 சிப்பாய் புரட்சி பற்றி கார்ல் மார்க்ஸும் ஃப்ரெடெரிக் எங்கெல்ஸும்


1857 சிப்பாய் புரட்சி   பற்றி கார்ல் மார்க்ஸும் ஃப்ரெடெரிக் எங்கெல்ஸும்

- இர்ஃபான் ஹபிப்

தமிழில்: மு. இக்பால் அகமது

(சிப்பாய்க்கிளர்ச்சி என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் 1857 கிளர்ச்சியை  தொடர்ந்து கவனித்து வந்த கார்ல் மார்க்ஸும் ஃப்ரெடெரிக் எங்கெல்ஸும் அக்கிளர்ச்சியை சமூக அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் விமர்சித்து New York Daily Tribune என்ற பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதி வந்தனர். அக்கட்டுரைகளின் தொகுப்பு The First Indian War of Independence 1857-1859 என்ற நூலாக 1959ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் முன்னேற்றப்பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. அக்கட்டுரைகளின் அடிப்படையில் இர்ஃபான் ஹபிப் அவர்கள் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் இது)

நியூ யார்க் டெய்லி ட்ரிப்யூன் (New York Daily Tribune-நி.யா.டெ.ட்.) என்ற பத்திரிக்கையின் லண்டன் செய்தியாளராக 1853இல் கார்ல் மார்க்ஸ் பணியாற்றத் தொடங்கினார்.  அந்நாட்களில் அமெரிக்காவில் அதிகம் வாசிக்கப்பட்ட பத்திரிக்கை இதுவே.  அவர் எழுதிய விவாதத்திற்குரிய இரண்டு கட்டுரைகளான "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி"   (British Rule in India), "பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் ஏற்படுத்தவுள்ள விளைவுகள்"(Future Results of the  British Rule in India)   ஆகிய இரண்டிலும், இந்தியாவின் தொன்றுதொட்ட சமூக-பொருளாதார அமைப்பை பிரிட்டிஷ் ஆட்சி எவ்வாறு கொடூரமாக நசுக்கி இந்திய மக்கள் மீது சொல்லொண்ணா துயரத்தை திணித்தது என்பது பற்றி விளக்குகின்றார்.  இந்தியாவில் ஒரு மறுமலர்ச்சி தோன்றுவதற்கு சாதகமான சூழ்நிலையை தன்னையறியாமலேயே பிரிட்டிஷ் காலனியாதிக்கம் வளர்த்துக்கொண்டிருந்தது என்று மார்க்ஸ் குறிப்பிடுகின்றார்.  இரண்டாவது கட்டுரையில், "ஹிந்துக்கள் (அமெரிக்கர்கள் பொதுவாக இந்தியர்களை இப்படித்தான் குறிப்பிட்டார்கள்) ஆங்கிலேய ஆட்சியை ஒட்டுமொத்தமாகத் தூக்கியெறிவதற்குத் தேவையான வலிமையை வளர்த்துக்கொள்வார்கள்" என்று அவர் நம்பிக்கையோடு குறிப்பிடுகின்றார். "பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி போர்த்தந்திரங்களை நன்கு கற்றுணர்ந்துள்ள இந்திய ராணுவ வீரர்கள்தான், இந்தியா தன்னெழுச்சியுற்று விடுதலையடைவதற்குத் தேவையான இன்றியமையாக் கூறுகளாயிருப்பர்" என்ற  மார்க்ஸின் கணிப்பு (நி.யா.டெ.ட். ஆகஸ்ட் 8, 1853) அணுவளவும் பொய்யாகவில்லை என்பதை வரலாறு மெய்ப்பித்தது. 

1857 மே மாதம் வங்காளப்படை புரட்சியில் இறங்கியபோது, இப்புரட்சி குறித்த தனது முதல் கட்டுரையில் (நி.யா.டெ.ட். ஆகஸ்ட் 4, 1857), மார்க்ஸ் இவ்வாறு கூறுகின்றார்: "இந்திய ராணுவ வீரர்களின் உறுதி மற்றும் நம்பகத்தன்மையின் மீது  இந்திய மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது முதல் பார்வையிலேயே  தெளிவாகத் தெரிந்தது. அது என்ன உறுதி?  ஒரு புறம் இந்திய ராணுவ வீரர்கள் அரசுக்கு எதிரான எதிர்ப்பை திரட்டிக்கொண்டிருக்க, மறுபுறம் அதே நேரத்தில், இந்திய வரலாற்றில், ஆளும் சக்திகளுக்கு எதிரான முதல் குவிமையத்தை பிரிட்டிஷ் ஆளும் வர்க்கமே தன்னையறியாமல் திரட்டிக்கொண்டிருக்கின்றது என்பதே அது. (வங்கப்படைப்பிரிவின் பாரக்பூர் இராணுவ முகாமில் 29.03.1857 அன்று முதல் கலகக்கொடியை உயர்த்திய சிப்பாய் மங்கள் பாண்டேயை சுட்டுத்தள்ளுமாறு ஹெவ்சன் என்ற ஆங்கிலேய அதிகாரி இந்தியச்சிப்பாய்களுக்கு உத்தரவிட அவர்கள் சுட மறுத்தார்கள். பாண்டே மூன்று வெள்ளை சிப்பாய்களை சுட்டு வீழ்த்தினார். பாண்டேயை ஹெவ்சன்னும் மற்றொரு அதிகாரியும் சுட முயல பாண்டே தன்னைத்தானே சுட்டுக்கொண்டார், ஆனால் சாகவில்லை. ராஜத்துரோக குற்றம் சாட்டப்பட்டு ராணுவ நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட பின் அடுத்த மாதம் 8ஆம் நாள் தூக்கில் இடப்பட்டார்.  பாண்டேயின் மரணமோ இந்தியச்சிப்பாய்களை கிளர்ச்சிக்குத் தூண்டியது.  மீரட் நகரில் கலகம் வெடித்த்து.  மே 10, 1857 ஞாயிறு அன்று பொதுமக்களும் சிப்பாய்களும் வீதிகளில் திரண்டனர். பிரிட்டிஷாரால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 85 இந்தியச்சிப்பாய்களை சிறையில் புகுந்து மீட்டனர். மீரட் நகரமே சிப்பாய்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ‘டெல்லி சலோ’ (டெல்லியை நோக்கி செல்வோம்) என சிப்பாய்கள் அணிதிரண்டனர் – மொ-ர்). 

மார்க்ஸ் தனது அடுத்த செய்தியில், (நி.யா.டெ.ட். ஆகஸ்ட் 4, 1857), சிப்பாய்களின் கிளர்ச்சி  தீவிரமடைந்துகொண்டே செல்வதையும்,  அவர்களது நடவடிக்கைகளின் உறுதியையும்  பார்க்கும்போது, மே 11 முதல் டெல்லியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட சக சிப்பாய்களுக்கு ஆதரவாக அங்கே செல்ல அவர்கள் "ஏதோ முன்கூட்டியே  திட்டமிடப்பட்டது போல்" அது  இருந்ததாக கூறுகின்றார்.  ஆனால் கிளர்ச்சியாளர்களின் திட்டத்தில் ஒரு பெரும் குறை இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டத்தவறவில்லை.  இது போன்ற "ஒரு மிகத்தீவிரமான நீண்டகாலப் போரைத்திட்டமிடும்போது, அதுவும் பிரிட்டிஷ் படைகள் டெல்லிக்கு அருகில் முகாமை அமைத்துவிட்ட சூழ்நிலையில், "இக்கிளர்ச்சிக்கு தலைமை ஏற்கும் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைக்காதது" தவறு.  அது மட்டுமின்றி ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கிளர்ச்சியை வழிநடத்திச் செல்லத்தக்க கட்டுப்பாட்டுமையத்தை உருவாக்கவும் சிப்பாய்கள் தவறிவிட்டார்கள் என்பதையும் அன்று காலையிலேயே மார்க்ஸ் கண்டுணர்ந்தார்.     

சிப்பாய்க்கிளர்ச்சியின் போக்கை தொடர்ந்து கவனித்த மார்க்ஸ், இக்கிளர்ச்சியில் ஏதோ வெறும் சிப்பாய்கள் மட்டுமே குதித்துள்ளார்கள் என்பது மாறி, "பிராமணர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என அனைத்து மதத்தவரும் தங்களுடைய பொதுவான ஒரு பிரச்னைக்காக ஒன்றுபட்டுள்ளார்கள், இதன் மூலம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஒரு ஒன்றுபட்ட எதிர்ப்பு வேகமாக வளர்ந்து வருகின்றது" என்று குறிப்பிட்டார்.   "இது ஒரு தேசிய எழுச்சியே என்பதை  அடுத்தடுத்து தொடரும் கிளர்ச்சியின் போக்குகள் மெய்ப்பிக்கும். இது வெறும் சிப்பாய்களின் கலவரமே என்று கருதும் ஜான் புல் போன்றவர்களின் கருத்து உடைபடும் (ஜான் புல் என்பது 18ஆம் நூற்றாண்டின் அங்கதச்சுவை நாடகமொன்றின் கதாபாத்திரம்; பின்னர் சாமான்ய பிரிட்டிஷ் குடிமகனை குறிக்க பேச்சுவழக்கில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்-மொ-ர்) " (நி.யா.டெ.ட். ஆகஸ்ட் 14, 1857).  

தனது அடுத்த கட்டுரையில் (நி.யா.டெ.ட். ஆகஸ்ட் 29, 1857), டெல்லியில் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த இந்திய சிப்பாய்கள் வலுவுடன் இருந்ததாகவும், "இந்துக்கள் பிரிட்டிஷ் ஆட்சி மீது வெறுப்புற்றிருந்தார்களா அனுதாபம் கொண்டிருந்தார்களா போன்ற விவாதங்களெல்லாம் இப்போது முட்டாள்தனமானவை" என்றும் எழுதியிருந்தார்.  அத்தியாவசியப்பொருட்களை பெறுவதிலும் போக்குவரத்திலும் ஆங்கிலேயர்கள் சிரமங்களை சந்தித்தார்கள் என்பது "விவசாயிகளின் அனுதாபம் அவர்களுக்கு இல்லை" என்பதைக் காட்டியதுதான் என அவர் குறிப்பிடுகின்றார்.   விவசாயிகளின் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு இருந்தது என்று இந்த இடத்தில்தான் மார்க்ஸ் முதன்முதலாக  குறிப்பிடுகின்றார்.   அதுவரையிலும், தமது நிலத்தை பிரிட்டிஷாரிடம் இழந்த நிலப்பிரபுக்கள், பதவி பறிபோன குறுநில மன்னர்கள்  போன்றவர்களின் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு இருப்பது பற்றித்தான் அவர் குறிப்பிட்டு வந்தார்.  அதே நேரத்தில் "ஒரு இந்தியக்கிளர்ச்சி ஒரு ஐரோப்பிய புரட்சிக்கான குணாம்சங்களை வரித்துக்கொள்ளும் என்று எதிர்பார்த்தால் அது ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே சாத்தியம்" என்றும் எச்சரிக்கையுடன் குறிப்பிடுகின்றார்.

ஆனாலும் அந்த இந்தியக்கிளர்ச்சி தொடர்ந்து  விரிவடைந்து பரவுவதைக் கண்டபின், அது முழுமை பெற்ற "புரட்சி" என்று மார்க்ஸ் மதிப்பிடத்தொடங்குகின்றார். செப்டம்பர் 1 அன்று அவர் எழுதிய செய்தியில் (நி.யா.டெ.ட். செப்டம்பர் 15, 1857), டெல்லியில் ஒரு அசைவற்ற நிலை  ஏற்பட்டிருப்பதையும், அதே நேரம் ஆக்ரா, கான்பூர், லக்னோ மற்றும் பல பகுதிகளில் கிளர்ச்சி வெடித்துள்ளதையும்  குறிப்பிடும் அவர், "புரட்சி எனும் பெருங்கடல் நடுவே தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவே பெரும்பிரயத்தனம் செய்ய வேண்டிய அளவுக்கு பிரிட்டிஷ் படைகள் சிறுசிறு துண்டுகளாக சிதறத்தொடங்கியிருந்தார்கள்"  என்று நிலைமையை மதிப்பிடுகின்றார். செப்டம்பர் 4க்குப்பின் அவர் எழுதிய செய்தியில் (நி.யா.டெ.ட். செப்டம்பர் 16, 1857), 1789 ஃப்ரெஞ்சு புரட்சியின் போக்கை நினைவுகூர்கின்றார்: "ஃப்ரெஞ்சு அரசாட்சிக்கு எதிரான முதல் தாக்குதல் விவசாய சமூகத்திலிருந்து வரவில்லை,  மாறாக உயர்குடி பிரபுக்களிடமிருந்தே வந்தது. இந்தியப்புரட்சியோ விவசாயிகளிடமிருந்தோ, பிரிட்டிஷாரால் சித்தரவதை செய்யப்பட்டவர்கள், அவமதிக்கப்பட்டவர்கள், நிர்வாணப்படுத்தப்பட்டவர்கள் போன்றோரால் தொடங்கப்படவில்லை; மாறாக, பிரிட்டிஷார் யாருக்கு நல்ல சீருடை அளித்து,  நல்ல உணவளித்து, சீராட்டிப் பாதுகாப்பாக வளர்த்தார்களோ அதே சிப்பாய்கள்கள்தான் பிரிட்டிஷாருக்கு எதிரான கொடியை உயர்த்தினார்கள்".  இதன் பொருள் தெளிவானது: "இக்கிளர்ச்சி சிப்பாய்களால் தலைமையேற்று நடத்தப்பட்டது, ஆனால் விரைவில் இந்திய மக்கள்சமூகமும், குறிப்பாக விவசாயிகள், இக்கிளர்ச்சியில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்கள்.  இதன் மூலம் கிளர்ச்சி ஒரு முழுப்புரட்சியென்று சொல்லத்தக்க நிலையை அடைந்தது".

இக்கிளர்ச்சியின்பால் மார்க்ஸ் அனுதாபம் கொண்டிருந்தார் என்பது அவரது கட்டுரைகளில் நன்றாகவே தெரிகின்றது. கிளர்ச்சி பற்றிய அவரது தொடக்ககால கட்டுரைகளில், டெல்லியை   கிளர்ச்சியாளர்கள் முற்றாகப் பிடித்துவிட்டதாகவும், அதை மீட்கும் முயற்சியை ஆங்கிலேயர்கள் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றார்.  தனது இக்கருத்தை அக்டோபர் மாதம் வரையிலும் கூட அவர் வலியுறுத்திக்கொண்டேயிருந்தார்.  தனது அக்டோபர் 7 செய்தியிலும் (நி.யா.டெ.ட். அக்டோபர் 23) அவ்வாறே எழுதியிருந்தார்.  ஆனால் செப்டம்பர் மாத மத்தியில் டெல்லி மீண்டும் பிரிட்டிஷார் கையில் வீழ்ந்த செய்தி மார்க்ஸுக்கு வருத்தமளித்த செய்தியாகும் (நி.யா.டெ.ட்.  நவம்பர் 14). தனது உற்ற நண்பர் எங்கெல்ஸுக்கு நவம்பர் 13, 1857, அன்று அவர் எழுதிய கடிதத்தில், டெல்லியின் வீழ்ச்சி "தனக்கும் டெய்லி ட்ரிப்யூனுக்கும் நிச்சயம் ஏமாற்றமளித்த ஒன்றுதான்" என்று ஒப்புக்கொள்கின்றார்.  ஆனால் தனது மற்றொரு செய்தியில் (நி.யா.டெ.ட்.  அக்டோபர் 11, 1857) தனது நிலை சரியானதுதான் என்று நிறுவ முற்படுகின்றார்.  பிரிட்டிஷார் தமது முழுக்கவனத்தையும் டெல்லி மீது திருப்பியதன் மூலம், "தமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத" நாட்டின் பிற பகுதிகள் "சிப்பாய்களின் பிடிக்குள் வருவதற்கான ஒரு வாய்ப்பை தம்மை அறியாமலேயே பிரிட்டிஷார் உருவாக்கியதாக” கணிக்கின்றார்.  இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தமது பிடிக்குள் வந்துவிட்ட மிகப்பெரும்பகுதியை (சரியாகச்சொன்னால் உத்தரப்பிரதேசம் முழுமையும்) சிப்பாய்கள் சரியாகத்திட்டமிட்டுப் பாதுகாப்பார்கள் என்று நம்பினார்.

இதன் பிறகு, சிப்பாய் கிளர்ச்சி பற்றிய செய்திகளை அளிக்கும் பொறுப்பை நண்பர் எங்கெல்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என விரும்பினார்.  அதேபோல் இதன் பிறகு கிளர்ச்சி பற்றிய அனைத்து செய்திகளையும் எங்கெல்ஸே  எழுதினார்.  டெல்லிமீது தாக்குதல் தொடுத்து பிரிட்டிஷார் பெற்ற வெற்றி பற்றி எங்கெல்ஸ் ஆய்வு செய்தார்.  "சிப்பாய்கள் தமது போரில் சில விஞ்ஞானப்பூர்வ அணுகுமுறைகளை கையாண்டார்கள்;  ஆனாலும் இப்போர்த்தந்திரங்களில் ஒரு முதிர்ச்சி இல்லை, வலிமை இல்லை" எனக் கருதினார் (நி.யா.டெ.ட். டிசம்பர் 5,1857). சிப்பாய்கள் கைப்பற்றியிருந்த லக்னோ இல்லத்தை, பிரிட்டிஷ் பிரதேச ராணுவ தளபதியான கேம்ப்பெல் (Campbell)  நவம்பர் 14 முதல் 23 வரையிலான பத்து நாட்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை விவரிக்கும் இரண்டு கட்டுரைகளிலும் தனது ஆய்வைத்தொடர்ந்தார்.  ஐந்து மாதங்களுக்கும் மேலாகத் தமது பிடிக்குள் வைத்திருந்த லக்னோ இல்லத்தை சிப்பாய்கள் தமது கையிலிருந்து இழந்ததை எங்கெல்ஸ் விமர்சிக்கின்றார்.  ஆனாலும், "கேம்ப்பெல்லின் வருகைக்குப்பின் உடனடியாக, ஒரு தேசிய எழுச்சியின் வலிமை எப்படியிருக்கும்  என்பதை அவுத்தை (Oudh) சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் நிரூபித்துக்காட்டினார்கள்."  இதன் பிறகு கேம்ப்பெல் லக்னோவிலிருந்து தனது படைகளுடன் பின்வாங்க நேரிட்டது.  "ஒரு தேசிய எழுச்சியின்  வலிமையென்பது, கடுமையான  போர்க்களத்தை சந்திப்பது என்பதில் இல்லை; மாறாக, அங்கங்கே தாக்குதல் நடத்துவது, நகரங்களை கைப்பற்றுவது, எதிரியின் தகவல்தொடர்பை சேதப்படுத்துவது ஆகியவற்றில்தான் அடங்கியுள்ளது" என எங்கெல்ஸ் விமர்சிக்கின்றார் (நி.யா.டெ.ட். ஃபிப்ரவரி 1, 1858).

லக்னோ, 1858 மார்ச்சில் பிரிட்டிஷாரிடம் மீண்டும் வீழ்ந்தது பற்றி விவாதிக்கும் தனது இரண்டு கட்டுரைகளில், ஒரு திறந்த போர்க்களத்தில் சண்டையிட்டு வெற்றிபெற இயலாத நிலையிலும், ஒரு "தேசிய எழுச்சி" என்பதை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்ற அம்சம் குறித்து எங்கெல்ஸ் மீண்டும் பேசுகின்றார்.   பிரிட்டிஷ் படைகள் மிகக்கடுமையான போரில் ஈடுபட்டன என்ற கருத்தையும், பிரிட்டிஷ் வீரதீரசாகசம் போன்ற புகழ்ச்சிகளையும் அவர் ஒதுக்கித்தள்ளுகின்றார்.  கிளர்ச்சியாளர்கள் தமது தற்காப்பு நடவடிக்கைகளில் வலிமையாக இல்லாததுதான் தோல்விக்கு காரணம் என்று குறிப்பிட்டு அது பற்றி அதிருப்தி தெரிவிக்கின்றார்.  ஆனாலும், கிளர்ச்சியாளர்கள் கும்பல் கும்பலாக சிதறி நாடெங்கிலும் பரவிச்சென்றுள்ளார்கள் என்பதைக் கணக்கில் கொண்டு, அவர்கள் "கெரில்லா யுத்தத்"தை தொடங்கக் கூடும் என்று எதிர்பார்த்தார் (நி.யா.டெ.ட். மே 25, ஜூன் 15, 1858).  அவரது இந்தப் பெரும் எதிர்பார்ப்பை நிறைவேற்றியவர்கள் இருவரே. ஜகதீஸ்பூரின் குன்வர் சிங், அவரது சகோதரர் அமர் சிங்.  அமர் சிங் பற்றி பின்னர் பேசும்போது, "அவருக்கு கெரில்லா யுத்த தந்திரம் பற்றி ஓரளவு ஞானம் இருந்தது;  அவரது போர்முறை, பிரிட்டிஷாரின் தாக்குதலுக்காக காத்திருப்பது என்பதல்ல, எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் தாமாகவே பிரிட்டிஷாரை தாக்குவது என்பதாகவே இருந்தது."  எங்கெல்ஸின் இக்கட்டுரை 1857 சிப்பாய் புரட்சி பற்றிய அவரது இறுதிக்கட்டுரையாக இருந்தது.    "கெரில்லாயுத்தம்" வெடிக்கும் என்ற அவரது நம்பிக்கை, 1858இன் இலையுதிர்காலத்தின்போதெல்லாம் உதிர்ந்து போன நம்பிக்கையாகிவிட்டது.    புரட்சி அதன் "போர்க்குணத்தை" இழந்து தேய்ந்து போனதாக அவர் முடிவு செய்தார்.  ஆனால் அவரிடம் ஒரு நம்பிக்கைக்கீற்று அப்போதும் இருந்தது: "பதினைந்து கோடி இந்தியமக்களின் சிந்தனையில் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வுகளை இப்புரட்சி விதைத்து சென்றுள்ளது; அந்த உணர்வு வீண் போகாது, அதன் விளைவு  இன்றில்லையென்றாலும் ஒரு நாள் வெளியே முளைத்துக்கிளம்பும் " (நி.யா.டெ.ட். அக்டோபர் 1, 1858).

.... .... ....

அரசியல் கூறுகள்

சிப்பாய்ப்புரட்சியின் போர்நுட்பக்கூறுகளை எங்கெல்ஸ் ஆராய்ந்தார் எனில், மார்க்ஸ் அதன் அரசியல் கூறுகளை ஆய்வு செய்தார். அவர் முதலில் கவனம் செலுத்தியது, கிளர்ச்சியாளர்கள் செய்த "அட்டூழியங்கள்" பற்றி இங்கிலாந்தில் செய்யப்பட்ட திட்டமிட்ட மூளைச்சலவைப்பிரச்சாரங்களை எதிர்கொள்ளவெண்டும் என்பதுதான்.  தனது கட்டுரை ஒன்றில்  கிளர்ச்சியாளர்கள் மோசமான "அட்டூழியங்கள்" செய்தார்கள் என்று ஒப்புக்கொள்கின்றார் (நி.யா.டெ.ட். செப்டம்பர் 16, 1857).  ஆனால் அவை எப்படிப்பட்ட "அட்டூழியங்கள்"?  "ஆளும்வர்க்கங்களுக்கு எதிரான போர்களிலும், தேசியஇனங்கள், இனங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக மதங்கள் ஆகியவற்றின் பேரால் நடக்கக்கூடிய  போர்களிலும் சாதாரணமாக என்ன மாதிரியான "அட்டூழியங்கள்' நடக்குமோ அவைதான் இப்போதும் நடந்துள்ளன."  தமது இக்கூற்றுக்கு ஐரோப்பாவின் சொந்த வரலாற்றிலிருந்தே அவர் உதாரணங்களை முன்வைக்கின்றார்.  சமீபத்தில் சீனாவுக்கு எதிராக இதே பிரிட்டிஷார் நடத்திய "அபினி யுத்தத்"தில் (Opium War), சீனப்பெண்களை பிரிட்டிஷார் நாசம் செய்தது, குழந்தைகளை தீயில்போட்டு வாட்டியெடுத்தது, கிராமங்களை ஒட்டுமொத்தமாக கொளுத்தியது போன்ற பிரிட்டிஷாரின் அட்டூழியங்களை பட்டியலிடுகின்றார்.  சிப்பாய்க்கிளர்ச்சியை ஒடுக்குவது என்ற பேரால் பிரிட்டிஷ் அதிகாரிகள் எத்தனை கொடூரமாக நடந்துகொண்டார்கள் என்பதற்கு பல சான்றுகளைத் தருகின்றார்.  கிளர்ச்சியில் ஈடுபட்டோர், ஈடுபடாதோர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் சித்ரவதைக செய்த்து, தூக்கில் இட்டது போன்ற கொடூர நடவடிக்கைகளைக் குறிப்பிடுகின்றார். ஆனால்  எங்கேயோ கண்காணாத தூரத்தில் கடல்கடந்து உட்கார்ந்து கொண்டு, விசமத்தனமான உள்நோக்கத்துடன், மிகைப்படுத்தப்பட்டு ஒரு சில "கோழைகள்" பரப்புகின்ற   கிளர்ச்சியாளர்களின் "அட்டூழியங்கள்" பற்றிய செய்திகளை மார்க்ஸ் கேள்வி கேட்கின்றார். 

இதனைத்தொடர்ந்து, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள் சந்திக்கும் உடல்ரீதியான சித்ரவதைகளை அவர் விவரிக்கின்றார் (நி.யா.டெ.ட். செப்டம்பர் 17, 1858).  நி.யா.டெ.ட். ஏப்ரல் 5, 1858, இதழில்,  கிளர்ச்சியாளர்களின் "அட்டூழியங்கள்" பற்றி பரப்பப்படும் செய்திகளை விமர்சித்தார். இத்தகைய "செய்திகளை"ப்பரப்பி, பிரிட்டன் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு கொதிப்படையச் செய்வதில் பிரிட்டிஷ் நிர்வாகம் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தாலும், பின்னர் இவை யாவும் பொய்கள் என்று கண்டறியப்பட்டன.  அதை அவர் விமர்சித்தார்.  கிளர்ச்சியாளர்கள், கிளர்ச்சியில் ஈடுபடாமல் அவர்களுக்கு உதவி செய்தவர்கள், சாதாரண பொதுமக்கள் ஆகியோர் மீது மிக சமீபத்தில் பிரிட்டிஷார் ஏவிவிட்ட கொடூர சித்தரவதைகளை அவர் பட்டியலிட்டார்.  பிரிட்டிஷாரின் ரத்தவெறியை அவர் கடுமையாக கண்டனம் செய்தார்.  "உங்களிடம் காணப்படும் அடங்கா ரத்தவெறி, ஒரேயொரு கொடுங்கோல் மன்னனிடம் இருந்தால் கூட  அதைத் தாங்க முடியாது;  ஆனால்  ஒரு தேசமே அத்தகைய வெறிகொண்டு அலையும்போது, ஐயோ, அது எத்தனை கொடுமையாக இருக்கும்!" என்று கடும் சொற்களை பயன்படுத்தியிருந்தார்.  லக்னோ, பிரிட்டிஷ் ராணுவவீரர்களின் கைகளில் சிக்கியதையும் அவர்கள் அந்நகரை  சூறையாடியதையும்  மிகுந்த வேதனையுடன் எங்கெல்ஸும் குறிப்பிடுகின்றார். பிரிட்டிஷ் படைகள் எந்த அளவுக்கு "நாகரிகமயம்” அடைந்துள்ளன, ”மனிதநேய”த்துடன் உள்ளன என்பதையே இவை காட்டுகின்றன என்றும் எங்கெல்ஸ் குத்திக்காட்டுகின்றார் (நி.யா.டெ.ட். மே 25, 1858). (... பிரிட்டிஷ் படைகள் செய்த கொடுமைகளில் பத்தில் ஒரு பகுதியை வேறு எந்த நாட்டின் ராணுவம் செய்திருந்தாலும் பிரிட்டனின் பத்திரிக்கைகள் எந்த அளவுக்கு கொதித்து கண்டனம் செய்திருப்பார்கள்! ஆனால் இச்’சாகசங்கள்’ யாவும் பிரிட்டிஷ் ராணுவம் செய்தவை ஆதலால், அவை யாவும் ஒரு சாதாரணப்போரில் வழக்கமாக நடக்கின்ற ஒன்றுதான் என்பதாக பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் கண்களை மூடிக்கொண்டிருந்ததாக எங்கெல்ஸ் கண்டனம் செய்கின்றார் – மொ-ர்).   பிரிட்டிஷார், போர்மரபுகளையெல்லாம் மீறி தாங்கள் சிறைப்பிடித்த போர்க்கைதிகளை சுட்டுக்கொன்றதை, லண்டன் பால் மால் கெஜெட்டில் (Pall Mall Gazette) (நவம்பர் 11, 1870) அவர் நினைவுகூர்ந்தார்.

மார்க்ஸின் அடுத்த கேள்வி சட்டப்பூர்வ உரிமை பற்றியது.  அவுத் மாகாணத்தை 1856இல் சட்டவிரோதமாக தனது ராஜ்யத்துடன் பிரிட்டிஷ் அரசு இணைத்துக்கொண்டது.  அவுத் மக்களின் விருப்பத்துக்கு எதிரான இந்த கேடுகெட்ட நடவடிக்கையில் பிரிட்டிஷார் ஈடுபட்டபின், தமது ராஜ்யத்துக்கு எதிராக அவுத் மக்கள் கிளர்ச்சியில் பங்கு பெற்றார்கள் என்று பிரிட்டிஷ் நிர்வாகம் அலறுவதில் அர்த்தமில்லை; இதில் அவுத் மக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசமாக இல்லை என்று கூறுவதிலும் அர்த்தமில்லை.  "உண்மையைச்  சொல்லவேண்டுமானால், கடந்த காலத்தில், இந்திய தேசத்து மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக பிரிட்டிஷார் செய்த நம்பிக்கைத்துரோக- கொடூர அடக்குமுறைகள் யாவும் இப்போது அவர்களுக்கு எதிராகவே திருப்பித் தாக்கத்தொடங்கியுள்ளன".  அவர்களது நம்பிக்கைத்துரோக- கொடூர அடக்குமுறைகளின் கிரீடமாக-சிகரமாக இப்போது  விளங்குவது, 1858 மார்ச் 3ஆம் தேதிய கானிங் பிரபுவின் ஆணை.  "அவுத் மாகாணத்தின் அனைத்து சொத்துக்களையும் அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து அரசு கைப்பற்றுகின்றது; அவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கான தமது விசுவாசத்தை நிரூபிக்கும்வரை இச்சொத்துக்கள் அரசின் கையில் இருக்கும்" என்பதே இந்த அரசாணை! (நி.யா.டெ.ட். மே 28, 1858).

1857 கிளர்ச்சி குறித்து மார்க்ஸ் தொடர்ந்து எழுதி வந்தமைக்கு மற்றுமொரு நோக்கமும் உண்டு.  அதாவது இங்கிலாந்தில் இந்திய மக்களுக்கு ஆதரவான மக்கள் உணர்வைத்திரட்டுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தேவையான ஆதாரங்களை அளிப்பதே அவரது நோக்கம்.  உதாரணமாக சார்ட் இயக்கத்தை சேர்ந்த எர்னெஸ்ட் ஜோன்ஸ் (சார்ட் இயக்கம், இங்கிலாந்தில் பாராளுமன்ற சீர்திருத்தம் கொண்டுவர நடந்த இயக்கம் (1837-48) -மொ-ர்). இந்தியாவில் இருக்கின்ற ஆங்கிலேய "ஆளும்வர்க்க"மும் இங்கிலாந்தில் இருக்கின்ற சில கூட்டங்களும் வசதிவாய்ப்புக்களுடன் வாழ்வதற்காக, பிரிட்டிஷ் ஆட்சி இந்திய மக்கள் மீது முறைகேடான ஆட்சி நடத்தி வருகின்றனர், வரம்புமீறிய வரிச்சுமையை மக்கள் தலையில் சுமத்துகின்றனர் என மார்க்ஸ் அம்பலப்படுத்தினார்.   ஆனால் சாமான்ய பிரிட்டிஷ் குடிமகனுக்கோ வரிசெலுத்துவோருக்கோ இந்தியாவிலிருந்து ஒரு பலனும் இல்லை; சரியாகச் சொன்னால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது எல்லையை விரிவு படுத்தும் நடவடிக்கைகளுக்காக அவர்கள்-சாமானிய பிரிட்டிஷ் மக்கள்- தமது பணத்தை இழக்கவேண்டியுள்ளது (காண்க:'British Incomes in India', நி.யா.டெ.ட். செப்டம்பர் 21,1857; 'Taxes in India' நி.யா.டெ.ட். ஜூலை 23, 1858).   சிப்பாய்க்கிளர்ச்சியை அடக்கி ஒடுக்க பிரிட்டிஷ் ஆட்சி எவ்வளவு பணம் செலவழித்தது, இந்த செலவை சரிக்கட்ட இங்கிலாந்தின் சாமானியக்குடிமகனின் தலை மீது பிரிட்டிஷ் அரசு எவ்வளவு வரிச்சுமையை ஏற்றப்போகின்றது என்பது பற்றி விளக்கமாக ஆய்வு செய்த மார்க்ஸ், ஏப்ரல் 1859இல் இவ்வாறு முடிக்கின்றார்: "'ஆரவாரமான' இந்த மறுவெற்றியின் மூலம் நாம் ஈட்டும் இந்த பணபலன்கள் அத்தனை எளிதில் நமக்கு கிடைத்துவிடவில்லை  என்று ஒப்புதல் வாக்குமூலம் தருவார்கள்; இந்திய வர்த்தகச்சந்தையின்  ஏகபோகத்தை மான்செஸ்டெரின் கட்டுப்பாடற்ற வர்த்தகர்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துவிட  வேண்டும்-இதற்காகவே   சாமான்ய இங்கிலாந்துக்குடிமகன்  அரசுக்கு அநியாய  இறக்குமதி வரி கொடுக்கின்றான்  என்று ஒப்புதல் வாக்குமூலம் தருவார்கள்". 

அந்த நாட்களில் கட்டுப்பாடற்ற பிரிட்டிஷ் வர்த்தகர்கள் காலனியாதிக்கத்திற்கு எதிராக பிரச்சாரம்  செய்து வந்தார்கள். ஆனால் மார்க்ஸுக்கு இவர்களது நடவடிக்கைகளில் பலத்த சந்தேகம் இருந்தது.  அவரது சந்தேகம்தான் மேலே கூறியுள்ள இறுதி வார்த்தைகளாக வெளிப்பட்டுள்ளது.   ஜான் கல்லாகர், ஆர்.ராபின்சன் ஆகிய இருவரும் 1953இல் "சுதந்திர வர்த்தகம் என்னும் ஏகாதிபத்தியம்" என்ற சொல்லைக் கண்டுபிடிப்பதற்கு சுமார் நூறு வருடங்களுக்கு முன்பே அச்சொல்லின் முழுமையான சாரத்தை  மிகக்கூர்மையாகவும் சுருக்கமாகவும் மார்க்ஸ் கூறியிருக்கின்றார்.  1857 இந்திய "தேசியப்புரட்சி" ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.  ஏன்? ஒரே நோக்கம்தான்: பிரிட்டிஷ் தொழில் மூலதனம், பிரிட்டிஷ் அரசாட்சி என்ற பெயரில் இந்தியாவை ஆள வேண்டும் - வன்முறையும் தீவிரவாதமும் ஆட்சி செய்தால் எப்படியிருக்குமோ அப்படி.  

... ... ....

கருத்துகள் இல்லை: