திங்கள், டிசம்பர் 27, 2021

தாள்களிலிருந்து கிளர்ந்து எழும் போதை


மதுரையில் வக்ஃப் கல்லூரி முதல்வரை நேரில் சந்தித்து கருணை மனு கொடுத்தும் காமெர்ஸ் தர மறுத்துவிட்டார். கணக்கு சயின்ஸ் க்ரூப் படிச்சிட்டு காமெர்ஸ் எடுத்தால் உங்களால் முடியாது தம்பி என்று மென்மையான குரலில் திருப்பி அனுப்பிவிட்டார். வருத்தத்துடன் வெளியே வந்தேன். சரிதான், நமக்கு இட்ட வழி இதுவே என்று என் பெற்றோரின் வழியில் கைத்தறி தொழிலாளியாக மாறினேன். காலம் உண்மையில் மிக வினோதமானது! சமயத்தில் நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்தி விடுகின்றது! பலவிதமான திருப்பங்கள், சுழற்சிகளுக்கு பிறகு ஒரு கட்டத்தில் அதே அக்கவுண்ட்ஸ் துறையில் பணி வாய்ப்பை ஏற்படுத்தி நான் இன்று இருக்கும் நல்ல நிலைக்கு என்னை உயர்த்திவிட்டதை என்னென்று சொல்ல!

உண்மையில் கைத்தறி தொழிலை கையில் எடுத்தது என்னை வேறொரு தளத்துக்கு எடுத்து சென்றது. தொழிலில் நேரடியாக ஈடுபட்டேன் என்பது ஒருபுறம். எட்டாவது வகுப்புக்கு முன்பே பள்ளி இறுதி விடுமுறை நாட்களில் தறியின் தொழிநுட்பம் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டு ஒரு நாளைக்கு 25 பைசா சம்பாதித்தேன். எனவே கைத்தறி தொழிலின் அடிப்படை நுட்பங்களை தெரிந்து வைத்து இருந்தேன். குறிப்பாக ஜகார்டு எனப்படும் பூவேலைப்பாடு சார்ந்த நுட்பங்களை அறிந்த ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்து சில மாதங்கள் செய்ததால் அதையும் அறிவேன். பள்ளி திறக்கும்போது நோட்டு பென்சில் பேனா வாங்க அது உதவியாய் இருந்தது. எனவே கல்லூரி படிப்பு கைகூடாமல் போனது வருத்தமே என்றாலும் சும்மா இருந்து சோறு சாப்பிடக்கூடாது, உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பின்னர் அஞ்சல் வழி வரலாறு முதுகலை படித்தது வேறு கதை.

மூத்த அண்ணன் கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கியவர். எனவே பள்ளியில் படிக்கும்போதே சோவியத்நாடு, ஸ்புட்னிக், என் சி பி எச் நூல்கள் எல்லாவற்றையும் அறிந்து இருந்தேன். அன்றியும் மதுரையின் அரசியல் கூட்டங்கள், என் சி பி எச்சின் பாரதி நடமாடும் புத்தக விற்பனை நிலையம், 80 மேலக்கோபுர வீதி விற்பனை நிலையம் ஆகியனவும், செல்லூர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் படிப்பகமும், மதுரையின் தெருக்கள்தோறும் இருந்த படிப்பகங்களும் வாசி வாசி என்று விடாமல் துரத்தின. படிப்பகங்கள் என்றால் பெரிதாக இல்லை, ஒரு கீத்துகொட்டகை, ரெண்டு நாளிதழ்கள், ஒரு கயிறு கட்டி அதில் குமுதம், ஆனந்தவிகடன், கல்கண்டு போன்ற வார இதழ்கள், இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் டேவிட், மாண்ட்ரேக், வேதாளன் போன்ற படக்கதைகள் ஆகியவற்றை தொங்கவிட்டிருப்பார்கள். உண்மை, விடுதலை, சோவியத் நாடு, குங்குமம், சாவி உள்ளிட்ட கணக்கற்ற வார இதழ்கள், முரசொலி, தினமணி, தினமலர், தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்கள் என வாசிப்புக்கு நேரம்தான் இருக்காது. இவற்றை முடித்தால் சி ஐடியு சங்கம் சென்று தீக்கதிர், செம்மலர் வாசிக்கலாம். தீக்கதிர் வார இதழாக வந்துகொண்டு இருந்ததும் நினைவில் உள்ளது. தவிர செல்லூரின் கிளை நூலகம், மத்திய நூலகம் ஆகியவற்றின் உறுப்பினராக இருந்த பக்கத்து வீட்டு வாத்தியார் திரு சுந்தரராஜன் தன் உறுப்பினர் அட்டையை என்னிடம் கொடுத்து வாசிக்க சொன்னார், ஒரே நாளில் இரண்டு புத்தகங்களை வாசித்து முடித்து மாற்றியதும் உண்டு. என் சி பி எச்சின் 15, 25 பைசா, 1, 2 , 5, 10 ரூபாய் மதிப்புள்ள தரமான சோவியத் பதிப்புகள். தவிர கீவ், உக்ரெய்ன், மாஸ்கோ, சைபீரியா ஆகிய சோவியத் நகரங்களின் அழகை ஆயில் தாளில் அச்சிட்டு வந்த மிக மிக அழகிய கெட்டி அட்டை புகைப்பட நூல்கள் இப்போது மெல்லிய வெண்புகை போன்ற கனவாய்....

ஏ பாலசுப்பிரமணியம், எம் ஆர் வெங்கட்ராமன், பி ராமமூர்த்தி, பி ராமச்சந்திரன், என் சங்கரய்யா, மைதிலி சிவராமன், ஐ மாயாண்டி பாரதி ஆகியோர் எடுத்த வகுப்புகளில் இருந்துள்ளேன். முதுபெரும் தோழர் கே பி ஜானகி அம்மா அவர்கள் சங்கத்துக்கு வருவார்கள்.

சங்கத்தில் செல்லூரின் கைத்தறி தொழிலாளிகளாக இருந்த மிகப்பல சேட்டன்மார்களை, ஆம் மலையாளிகளை பார்க்கலாம். திக்கான கலரில் பூப்போட்ட மூட்டி தைக்காத கைலிகள் கட்டி இருப்பார்கள். அவர்கள் பேசும் மலையாளத்தை கவனிப்பேன். அதேபோல் அவர்களுடன் சென்று அரிசிப்புட்டு, கேழ்வரகு புட்டு, கடலை, அப்பளம், எண்ணெய் சாப்பிடவும் பழகினேன். கேரளாவின் மீது ஒரு மரியாதை உருவானது. பின்னொரு காலத்தில் பணி நிமித்தம் கொச்சிக்கு இடம் மாறியபோது உண்மையில் மகிழ்ச்சி அடைந்து ஏற்றுக்கொண்டதற்கு அதுவும் ஒரு காரணம். 

கைத்தறி தொழிலில் ஒரு நாளைக்கு 18, 20 ரூபாய் கிடைக்கும், அவ்வளவே. இதில் என்னுடன் தொழிலாளியாக இருந்த (என் அண்ணன்மார் இருவரின் நண்பர்) தோழர் முருகன், என்னைப்போல் இசை வெறியர். என்னைப்போல் தீவிர வாசிப்பாளர். கட்சிக்காரர். செல்லூரின் மேடை நாடக சீசன்களில் என் அண்ணனும் அவரும் பின்பாட்டு பாடுவார்கள். கேட்க வேண்டுமா? அவரும் நானும் சேர்ந்துதான் மதுரையின் தியேட்டர்களை மில்லி மீட்டர் மில்லி மீட்டராக  அளவெடுத்தோம். சம்பாத்தியத்தில் ஒருபகுதி சினிமாவுக்கு சென்றது. சினிமாவும் கட்சி கூட்டங்களும் இசையும் நூல் வாசிப்பும் சேர்ந்தே பயணம் செய்தன. புத்தகங்களின் மீது அடங்காத காதல், வெறிதான், இருந்தாலும் வாங்குவதற்கு பணம் இல்லாத வாழ்க்கை சூழல். ஆனாலும் என்ன, என் சிந்தனையை, சிந்தனைப்போக்கை வார்த்த காலம் அதுதான். முருகன் இந்தியன் ஆயிலில் வேலை செய்து ஓய்வும் பெற்றுவிட்டார்.

பிள்ளைகளை தறித்தொழிலில் ஈடுபட வைத்தது போதும் என்று என் அப்பா முடிவு செய்தார். இடம் பெயர்ந்து ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தேன். ஆறு மாதம்தான். மீண்டும் மதுரைக்கு வந்துவிட்டோம். ஆம்பூரின் 2 ரூபாய் நெய் மணக்கும் மாட்டுக்கறி பிரியாணி மட்டும் இப்போதும் நாக்கில் நினைவு உள்ளது.

சென்னைக்கு தொழில் பழகுனர் வேலைக்கு வந்து சேர்ந்தேன். ஒன்றரை வருடம் முடித்தபின் வேலை நிரந்தரம் ஆனது. உடன் பயின்ற நண்பன் சுந்தரவேலுதான் அரசினர் காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த பபாசி புத்தக கண்காட்சிக்கு அழைத்துச்சென்று அறிமுகம் செய்தான். அங்கே பிடித்தது வேகம். ஆம், சம்பாத்தியத்தில் பெரும்பகுதி புத்தகங்கள் வாங்கவென்றே ஆனது. அது ஒரு வெறி. சுமார் 40, 50 ஸ்டால்கள் மட்டுமே இருந்த பபாசியின் 1983, 84 காலம். அப்போதே இரண்டு மூன்று முறைகள் சென்று அன்றைய மதிப்பில் 400 ரூபாய்க்கு குறையாமல் வாங்கினால்தான் நிம்மதி. அன்னம், நர்மதா, வானதி, தமிழ்ப்புத்தகாலயம், என் சி பி எச், சோவியத்தின் ராதுகா, மிர், நோவோஸ்தி என பெரிய சேகரிப்பு அப்போது தொடங்கியதுதான். அப்பா சிறுவனாக இருந்தபோது, மனித இனங்கள், நெஞ்சை அள்ளும் வானவியல், உலகை குலுக்கிய பத்து நாட்கள், தூக்கு மேடை குறிப்புகள், இவர்தான் லெனின், எறும்பும் புறாவும், புஷ்கின், கோர்க்கி, பரீஸ் வசிலியெவ், ஸ்தாலின்க்ராட் சண்டை, புத்துயிர்ப்பு, அதிகாலையின் அமைதியில் என்று எத்தனை எத்தனை புத்தகங்கள்! எல்லாம் சோவியத்தின் புரட்சிகர வாசத்தை தம் பக்கங்களுக்குள் அடக்கிக்கொண்டு இப்போதும்.... இவையன்றி வெளியே பிளாட்பாரத்தில் விற்கப்பட்ட பழைய நூல்களில் மிக அரிய நூல்கள் பலவற்றை வாங்கி இருக்கின்றேன்.

இவை தவிர என்னை வளர்த்ததில் முக்கிய பங்கு 1989 முதல் 2003 வரை ஈடுபட்ட தொழிற்சங்க அனுபவம் என்பது உண்மை. தமுஎசவில் இணைந்து செயல்பட்டதும் தோழர்களின் தொடர்பும் கூட்டங்களும் பெரும் அனுபவத்தை தந்தன.

என் தகுதியை மீறியவனவாக இருந்தவை ஆங்கில நூல்கள்தான். 1984 தொடங்கி தி ஹிந்து வாசித்துக்கொண்டு இருக்கின்றேன். அதில் வரும் ஆங்கில நூல்களின் விமர்சனங்கள் எப்போதும் என் கவனத்துக்கு உரியவை. டைரியில் குறித்து வைப்பேன், அவ்வளவுதான், வாங்க வழியில்லை. அப்போது மவுண்ட்ரோட் ஹிக்கின்போதம் சென்றால் டிக்சனரி தவிர வேறு எதுவும் வாங்கமுடியாது, விலையும் அப்படி, நான் நினைத்து செல்லும் நூலும் இருக்காது. வெறுப்பாக இருக்கும்.

காலம் வேறு மாதிரி வழியை காட்டுகின்றது. உலகமயம் என் போன்றவர்களுக்கு வேறு மாதிரியாக ஒரு வழியை திறந்துவிட்டது. அமேசான் போன்ற பிரிண்ட் ஆன் டிமாண்ட் ஆன்லைன் விற்பனை, இப்போது ஆங்கில நூல்கள் குறித்த என் கனவை நனவாக்கி உள்ளன. வாங்கி குவிக்கின்றேன். சிலவற்றை வாசிக்கின்றேன், வாசிக்க வேண்டியவை ஏராளம். தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய வேண்டிய நூல்கள் ஏராளம் ஏராளம். செய்ய வேண்டும். கவலை இல்லை, என் மகன் வாசிப்பான், தோழர்கள் வாசிப்பார்கள், நம் பிள்ளைகள் வாசிப்பார்கள். தம் வாசிப்பின் வழியே புதிய சிந்தனைகளை வளர்த்துக்கொள்வார்கள், உலகத்தை மாற்றும் வழியை கண்டறிவார்கள்.

1991இல் இருந்து எழுதிக்கொண்டும், மொழியாக்கம் செய்து கொண்டும் இருக்கின்றேன். என் கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுத்தவற்றை வரும் ஜனவரியில் நூலாக வெளியிட உள்ளேன். வள்ளியப்பன் மெஸ்ஸும் மார்கரீட்டா சீஸ் பிஸாவும் என்பது நூல். நோஷன் பிரெஸ் வெளியீடு.

வாசிப்போம்! எழுதுவோம்!

- மு இக்பால் அகமது

26.12.2021

சனி, டிசம்பர் 25, 2021

ஒரே மதம்


மலம் அள்ளு

சாணம் அள்ளு

பிணம் தூக்கு

செருப்பு தை


அடிமையாய் இரு

ஏனென்றால்

உன் முன்னோரும் அடிமைகளே

உன் பிள்ளைகளும் அடிமைகளே

அவன் பிள்ளைகளும் அடிமைகளே


கல்வி கற்காதே

கல்வி கேளாதே

கல்வி பாராதே

நீ கற்பதும் பாவம்

நீ கேட்பதும் பாவம்

நீ வாழ்வதே பாவம்


செருப்பு அணியாதே

வேட்டி அணியாதே

துண்டு அணியாதே

ரவிக்கை அணியாதே


உழைப்பதன்றி வேறெதுக்கும் உரிமையற்ற நீ

நிலவுடைமை கொள்ளாதே

வாகனத்தில் செல்லாதே


என் வீட்டின் வாசல் பக்கம் வராதே

என் தெருவில் நடக்காதே

பொது இடங்களில் உட்காராதே

உன் பார்வையின் தொடுதலின் இருப்பின் வழியே

நீ ஒட்டுமொத்த உலகையே தீட்டாக்குகின்றாய்


உன் வாழ்க்கை நான் இட்ட பிச்சை

எனில்

ஓட்டுரிமை உனக்கொரு கேடா?

அவ்வாறிருக்க

தனித்தொகுதி வேறா, ஓஹோ!

... ... 

சரி, நான் வெளியேறுகின்றேன், வழியை விடு


என்ன என்ன சொல்கின்றாய்?


ஏன் பதறுகின்றாய்?

நான் வெளியேறுகின்றேன், வழியை விடு


இல்லை,

என்ன இருந்தாலும்

நீயும் நானும் ஒரே மதமல்லவா?


த்தூ...


- மு இக்பால் அகமது

மதுரை போற்றுதும், படிப்பகம் போற்றுதும், சினிமா போற்றுதும், அரசியல் போற்றுதும்

தென்காசி. என் ஆறு வயதில் ஒரு நாள் இரவு தூங்கிக்கொண்டு இருந்த என்னை எழுப்பி, மாட்டு வண்டி என்று நினைக்கிறேன், அதில் ஏற்றினார் என் அப்பா. அந்த வயசுக்கு நள்ளிரவு தூக்கம் கலைக்கப்பட்டதன் காரணம் புரியவில்லை. என்னை சுற்றி மூட்டை முடிச்சுகளாக இருந்தன. சரி என்று கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு மறுபடியும் தூங்க ஆரம்பித்தேன். மீண்டும் எழுப்பியபோது ரயில்வே ஸ்டேஷன் என்று தெரிந்தது. வந்த ரயிலுக்குள் என்னையும் தள்ளினார்கள், மீண்டும் தூங்க ஆரம்பித்தேன். மறுநாள் விடிகாலையில் மீண்டும் என்னை எழுப்பி "மதுரை வந்தாச்சு இறங்கு" என்றார்கள். சரி அதுக்கு ஆறு வயசு பையன் நான் என்ன செய்யணும் என்று புரியாமல் விழித்தேன். ஒரு குதிரை வண்டியில் ஏறி மதுரையில் செல்லூருக்கு பிழைக்க சென்றது எங்கள் குடும்பம் என்று சில வருடங்களுக்கு பின் புரிந்து கொண்டேன். இன்னும் சில வருடங்கள் சென்றன. 19ஆவது வயதில் வேலை நிமித்தமாக சென்னைக்கு நான் இடம்பெயர்ந்தேன். வேறொன்று புரிந்தது. ஊரை விட்டு பிழைப்பு தேடி ஓடும் குடும்பங்கள் எல்லாம் நடுசாமத்தில்தான் ஊரை காலி செய்கின்றன என்று எஸ் ராமகிருஷ்ணன் எழுதியதன் நேரடி அர்த்தம் காலத்தை பின்னோக்கி நகர்த்தும்போது சுள்ளென உரைத்தது.

மதுரையுடன் என் தனிப்பட்ட நேரடி உறவு எனில் சுமார் பதின்மூன்று வருடங்கள் மட்டுமே. அதன் பின் சொந்தங்கள், நட்புக்களின் உறவுகள் வடிவில் இப்போதும் மதுர என்னுடன் உறவாடிக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் அந்த பதின்மூன்று வருடங்கள்தான் என் மூளையின் வடிவத்தை, சிந்தனைப்போக்கின் திசையை தீர்மானித்தன என்பதை வயது கூடும்போது பலவேறு நேரங்களில் உணர்ந்து இருக்கின்றேன். 19 வயதுக்கு உட்பட்ட ஒரு இளைஞனின் சிந்தனை எப்படி அல்லது எதன் மீது கட்டமைக்க படுகின்றது என்பது மிக இன்றியமையாதது என்று நினைக்கின்றேன். அந்த வயதில் என்னை நேரடியாக பாதித்தவையும் தொடர்புடையவையும் குறிப்பாக இவைதான்: நூலகம், படிப்பகங்கள், என் சி பி எச், கட்சிக் கூட்டங்கள், பட்டிமன்றம், வழக்காடு மன்றம் ஆகியன ஒரு புறம். மற்றது கலையும் இசையும் சார்ந்தது, சினிமா, தியேட்டர்கள், தெரு நாடகங்கள், கரகாட்டம், ஆர்கெஸ்ட்ரா மேடை  கச்சேரி, காந்தி மியூசியம் இப்படி. கல்லூரி கால அனுபவம், காதல் போன்றவற்றுக்கு என் குடும்ப சூழல் அனுமதி தரவில்லை என்பதே உண்மை.

ச சுப்பாராவின் மதுரை போற்றுதும் என்னிடம் வந்து சேர்ந்து ஒரு மாதத்துக்கு மேலாக ஆயிற்று. மதுரையின் பண்டைய கால வரலாறு, பெருமை, புராணம், சிவன், மீனாட்சி, வைகை, கேசட் காலம் என சுப்பாராவ் பலவற்றிலும் மூழ்கி முத்து எடுக்கின்றார். மதுர என்றதுமே ஒரு மேலோட்ட வாசிப்பு முடித்தாகிவிட்டது. ஆனால் மனைவி பிள்ளைகளுடன் குடும்பத்தோடு 1000 கிலோமீட்டர் பயணம் போகும் ஒருவன் தன் இளம்பருவ காதலின் நினைவுகளுடன் தொடர்புள்ள ஒரு ஊரின் ஊடே செல்லும்போது எல்லோரையும் விலக்கிவிட்டு தனியே ஒரு பின்னோக்கிய பயணம் செல்வதுபோல, படிப்பகங்கள், கட்சிக்கூட்டங்கள், சாந்தி தியேட்டருக்கு போய்... ஆகிய அத்தியாயங்களில்தான் மனம் பிரேக் அடித்து கச்சிதமாக நிற்கின்றது.

நினைத்துப்பார்க்கும்போது மதுரையின், குறிப்பாக செல்லூரின் நூலகம், கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் நூலகம் ஆகியனவும், செல்லூரின் சி ஐ டி யு கைத்தறி சங்கமும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டங்களும் அவற்றின் தலைவர்களும் அந்த தெருமுனை கூட்டங்களிலும் திலகர் திடல் கூட்டங்களிலும் நிகழ்த்திய உரைகள், மாரி மணவாளன் கச்சேரி, எமர்ஜென்சி காலத்தின் பின் வந்த 1977 தேர்தல், ஜனதா கட்சி உதயம், காங்கிரஸ்க்கு எதிர் அணியில் அதிமுக தவிர்த்து அனைத்து கட்சிகளும் திரண்டது, அக்கட்சிகளின் பெருந்தலைவர்களின் பிரச்சாரம் ஆகியவை எவ்வித பாசாங்கும் இன்றி நேரடியாக என் சிந்தனை என்னும் இளம் நிலத்தில் புதிய விதைகளை ஊன்றின என்றால் மிகையாகாது.  கம்யூனிஸ்ட் பெருந்தலைவர்களின் நேரடி வகுப்புகளில் கலந்து கொண்ட அனுபவங்கள், அவர்கள் பேசிய பெரிய உலக, தேசிய  அரசியல்  புரிந்ததோ இல்லையோ, அவர்கள் சாதாரணமான ஆட்கள் இல்லை, அவர்கள் பேசுவதும் சாதாரண விஷயம் இல்லை, எனவே அவற்றை கேட்கின்ற நானும் சாதாரண ஆள் இல்லை என்பதாக மனதுக்குள் ஒரு பெருமித உணர்வு இருந்தது உண்மைதான். 

மதுரை செல்லூரின் கைத்தறி முதலாளிகளை பண்ணாடிகள் என்போம். அவர்கள் ஒன்றிணைந்து செல்லூரில் கலைவாணர் என் எஸ் கே படிப்பகம் நடத்தி வந்தார்கள். அங்கேதான் எனக்கான வாசிப்பெனும் பெரும் மாளிகையின் முதல் பெருங்கதவு திறந்து கிடந்தது. பள்ளி நேரம் போக மீதி நேரம் அங்கேயே பழியாக கிடந்தேன். எத்தனை பத்திரிக்கைகள்! எத்தனை வார, மாத இதழ்கள்! ஒரு துண்டு தாளும் பாக்கியின்றி அனைத்தையும் வாசித்தேன். என் வயதின் எல்லையை மீறியவற்றையும் வாசித்திருக்கிறேன். குஷ்வந்த் சிங் எழுதிய ட்ரெயின் டூ பாகிஸ்தான் அப்போது தினமணி கதிரில் ரா கி ரங்கராஜன் மொழிபெயர்ப்பில் வந்தது. குமுதத்தில் ஹென்றி ஷாரியரின் பட்டாம்பூச்சி தமிழில் வந்தது. வாசித்தேன்.  என் அண்ணனின் அறிமுகத்தால் சி ஐ டி யு சங்கம் வேறு மாதிரியான புத்தகங்களை என் சி பி எச் மூலம் திறந்துவிட்டது. இவை தவிர செல்லூர் கிளை நூலகம், மத்திய நூலகம் ஆகியவற்றின் உறுப்பினர் அட்டையை வாத்தியார் திரு.சுந்தரராஜன் எனக்கு கொடுத்திருந்தார் என்பதால் அங்கேயும் நூல்களை பெற்று வாசித்தேன்.

இவை ஒருபுறம் இருக்க, திரும்பிய திசை எங்கும் பட்டிமன்றம், வழக்காடுமன்றம், கரகாட்டம், அமெரிக்கன் கல்லூரி ஆர்கெஸ்ட்ரா, பாண்டியன் போக்குவரத்து கழக ஆர்கெஸ்ட்ரா, செல்லூர் நண்பர்கள் சீரமைப்புக்குழு நடத்தும் ஒரு வார பொங்கல் விழா நிகழ்ச்சிகள், பாட்டு, கூத்து, காந்தி மியூசியம் இசை நிகழ்ச்சிகள் என்று மறுபுறம். நண்பர்கள் சீரமைப்புக்குழுவை அப்போது நடத்திக்கொண்டு இருந்தவர்கள் எம் ஜி ஆர் ரசிகர்கள் ஆன அமெரிக்கன் கல்லூரி நண்பர்கள். தலைவராக இருந்தவர் செல்லூர் ராஜு, பிற்காலத்தில் அமைச்சராக இருந்தார். 

தியேட்டர்கள். மதுரையின், தென் மாநில மக்களின் நேசத்துக்கு உரியது இலங்கை வானொலி. அரசியலுக்கு மட்டுமல்ல, பாட்டு, சினிமா இரண்டுக்கும் மதுரை தலைநகரம். இப்போது மிகப்பல தியேட்டர்கள், ஆசியாவின் மிகப்பெரிய தங்கம் உட்பட, இடிக்கப்பட்டு விட்டன அல்லது வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகிவிட்டன. இது பற்றி தனியே நானும் எழுதிவிட்டேன், விரைவில் வெளியாக இருக்கும் நூலிலும் எழுதியுள்ளேன்.

மதுரையில் பிறந்தவர்கள், மதுரையில் வாழ்ந்தவர்கள், இப்போதும் வாழ்பவர்கள், வேலை நிமித்தம் வந்தவர்கள், திருமண பந்தத்தால் உறவாடும் நண்பர்கள், படித்தவர்கள், மதுரையை விட்டு இப்போது நெடுந்தொலைவில் வாழ்பவர்கள் என்று  எல்லோருக்கும் பொதுவான ஒரு சொத்துப்பத்திரத்தை எழுதியுள்ளீர்கள் சுப்பாராவ்! பரந்து விரிந்த இந்த சொத்தில் எங்கோ ஒரு மூலை எனக்கும் சொந்தமாக எப்போதும் உள்ளது! 

மதுர போற்றுதும்...

- மு இக்பால் அகமது


.... 

மதுரை போற்றுதும்

ச சுப்பாராவ்

சந்தியா பதிப்பகம், சென்னை 83

கே எஸ் சேதுமாதவன்: வெள்ளித்திரையின் புதிய வெளிச்சம்

எட்டு வயதில் தன் கண் முன்னே தந்தை மாரடைப்பால் இறப்பதை புரிந்தும் புரியாமலும் பார்த்து நிற்கின்றான் அச்சிறுவன். அவனுக்கு கீழே மூன்று தங்கைகளும் ஒரு தம்பியும் வேறு இருக்க, அவனது தாயோ நடப்பதை நம்ப முடியாமலும் என்ன செய்வது என்று தெரியாமலும் திகைத்து நின்று ஓவென்று அழுகின்றார். எட்டு வயது சிறுவன் அதன் பின் நடப்பன எல்லாவற்றையும் கவனிக்கின்றான். இறந்துபோன அவன் தந்தை அரசின் வன இலாகா அதிகாரி. இதன் பின்னர் அம்மா தன் சொந்த ஊரான கேரளாவின் பாலக்காட்டுக்கு ஐந்து பிள்ளைகளுடன் இடம் பெயர்கின்றார்.


  • அச்சிறுவன் பிற்காலத்தில் இந்திய நாடு அறிந்த மிகச்சிறந்த திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக ஜொலிக்கின்றான். பெயர் சேது மாதவன். அப்பெயரை ஈட்டுமுன் அவன் சந்தித்த சிரமங்கள், அனுபவங்கள் யாவும் பெரும் வரலாற்றுப்பதிவுகள்.

    கேரளாவில் பாலக்காட்டில் சுப்ரமணியன், லட்சுமி தம்பதியருக்கு 29.5.1927 அன்று பிறந்தவர்தான் சேது மாதவன். பாலக்காட்டில் இருந்து பணி நிமித்தமாக தமிழ்நாட்டில் வட ஆற்காடு மாவட்டத்துக்கு வருகின்றது சுப்பிரமணியனின் குடும்பம். அப்போது சேதுவின் டியூசன் ஆசிரியர் ஆக இருந்தவர் நாதமுனி நாயுடு, ஆந்திராவின் சித்தூரை சேர்ந்தவர். தெலுங்கு பேசும் குடும்பம். ஆக மலையாளி ஆன சேது, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளையும் பேச கற்றுக்கொண்டார்.

    பள்ளி இறுதி வகுப்பான பி யு சியை பாலக்காட்டில் அரசு விக்ட்டோரியா கல்லூரியில் முடித்தார். 1947இல் மெட்ராஸ் ப்ரெசிடென்சி கல்லூரியில் இளங்கலை தாவரவியல் படிப்பை முடிக்கின்றார். 1925இல் பிறந்தவரும் மாணவப்பருவம் தொட்டே இடதுசாரி கம்யூனிச இயக்கத்தில் தன்னை கரைத்துக்கொண்டவரும் பிற்காலத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த மக்கள்இசைமேதையாக திகழ்ந்தவரும் ஆன எம் பி சீனிவாசன் சேதுவின் கல்லூரி சீனியர். இருவருக்கும் இடையே ஆன மாணவப்பருவநட்பு பிற்காலத்தில் திரைப்பட துறை சார்ந்த நட்பாக மாறியபோது இருவரும் இணைந்து செய்த சாதனைகள் அதற்கு முன் திரையுலகம் கண்டிடாதவை.

    1948இல் திருவல்லிக்கேணி விக்டரி ஹாஸ்டலில் சேது தங்கியிருந்தபோது சுகுமாரன் என்ற நண்பர் அவருக்கு புகழ்பெற்ற ஆங்கில திரைப்படங்களையும் புத்தகங்களையும் அறிமுகம் செய்கின்றார். புதினங்கள் வாசிப்பதில் இயற்கையான ஈடுபாடு கொண்டிருந்த சேதுவுக்கு, எழுதப்பட்ட கதைகளின் அடிப்படையில் ஆன திரைப்படங்கள் மீது ஈடுபாடு ஏற்பட்டது. அவர் திரைப்பட இயக்குனராக உருவான பின் மலையாள புனைவுகள் பலவற்றை படமாக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ ஜே க்ரோனின் என்பவர் எழுதிய கீஸ் ஆஃப் தி கிங்டம் என்ற கதை திரைப்படம் ஆனதை தன் பள்ளி நாட்களில் சேது பார்த்து ரசித்து இருந்தார். மெட்ராஸ் கல்லூரி நாட்களில் ஹால் கெயின் என்பவரின் தி பாண்ட்மேன் என்ற கதையை வாசித்துவிட்டு இரண்டு நாட்கள் காய்ச்சலில் விழுந்திருக்கின்றார். ரத்த உறவுள்ள இரண்டு ஆண்கள் ஒரே பெண்ணின் மீது காதல் கொள்ளும் கதை அது.

    அப்போதுதான் திரைப்பட கல்லூரி மாணவர்கள் சிலரின் நட்புக்கிடைக்கின்றது. ஆங்கில திரைப்படங்கள் பலவற்றை பார்க்கின்றார். திரைப்பட துறையில் சேர வேண்டும் என்ற ஆவல் அவருக்குள் தீவிரம் ஆகின்றது. குறிப்பாக அப்போது கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டுடியோவில் வேலைக்கு சேர விரும்புகின்றார். குடும்பத்தின் மூத்த மகன் அரசு உத்தியோகத்தில் சேர்ந்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கனவில் இருந்த அம்மாவுக்கு, சேதுவின் ஆசை அதிர்ச்சி அளிக்கின்றது. எப்படியோ அம்மாவின் சம்மதம் பெற்று விடுகின்றாரே தவிர சென்ட்ரல் ஸ்டுடியோவில் சேர்வது முடியாமல் போகின்றது. அப்போதுதான் ஒரு திருப்பம் நேர்கின்றது. பாலக்காடு விக்ட்டோரியா கல்லூரியில் அவரது ஜுனியர் ஆக படித்த ஓ வி விஜயனை சந்திக்கின்றார். விஜயன் அப்போது மலையாள எழுத்தாளர், கார்ட்டூன் ஓவியர். விஜயனின் நண்பர் ஒருவரின் அப்பா காவல்துறை அதிகாரி, அவரது பரிந்துரையின் பேரில் சென்ட்ரல் ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்ந்த சேதுவின் முறையான சினிமா பயணம், 1951இல் மர்மயோகி படப்பிடிப்பை பார்த்த நாளில் தொடங்குகின்றது. அது 1951, நாயகன் எம் ஜி ஆர். இயக்குனர் கே ராம்நாத்.

    ராம்நாத்தின் உதவியாளர்களில் ஒருவர் சேது. முதல் மூன்று மாதங்களுக்கு ஊதியமோ உதவித்தொகையோ இல்லாமல் போக, ஊரில் இருந்த அம்மா அவருக்கு அனுப்பும் பணம் உணவுக்கும் புத்தகங்களுக்கும் செலவாகிறது. பின் 40 ரூபாய் உதவித்தொகை கிடைக்கின்றது, அதுவே பின்னர் 150ஆக உயர்ந்தது.

    இதன் பின் சேலம் மாடர்ன் தியேட்டர்சில் டி ஆர் சுந்தரத்தின் உதவியாளர் ஆக சேர்கின்றார். அமெரிக்காவுக்கு படிக்கப்போன இடத்தில் திரைப்பட நுணுக்கங்களை கற்றுக்கொண்டு தமிழகம் வந்து 1936இல் மாடர்ன் தியேட்டர்சை சேலத்தில் நிறுவினார் சுந்தரம். மாடர்ன் தியேட்டர்ஸ் 96 படங்களை உருவாக்கியது, ஏறத்தாழ 56 படங்களை சுந்தரமே இயக்கினார். ஒரு திரைப்படத்தை படப்பிடிப்பில் தொடங்கி இறுதி பிரிண்ட் வரை அச்சிட்டு வெளியாக்க தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தது அந்த ஸ்டுடியோ. மிகப்பல படங்களில் சுந்தரத்தின் உதவியாளராக பணி ஆற்றி இருக்கின்றார் சேது. உதவியாளர்களுக்கு ஒரு வேலை இருந்தது. தியேட்டர்களில் வெளியாகும் படங்களை பார்த்து வந்து கதை, இயக்கம், தொழிநுட்பம் பற்றி சுந்தரத்துக்கு விளக்கி சொல்ல வேண்டும். இது ஒரு பயிற்சி.

    சுந்தரம் திரைப்பட நுணுக்கத்தில் தேர்ச்சி பெற்றவர், படப்பிடிப்பை திட்டமிட்டு கச்சிதமாக முடிப்பதில் உறுதியாக இருந்தார், எனவே செலவும் பிலிம் சுருள்களை வீணாக்குவதையும் தவிர்த்தார். கண்டிப்பானவர். இவரது கண்டிப்புக்கு எம் ஜி ஆரும் பானுமதியும் கூட ஆளானவர்கள். அவரிடம் பெற்ற பயிற்சிதான் சேதுவை முழுமையான ஒரு திரைப்பட கலைஞராக உருவாக்கியது.

    மலையாளத்தின் முதல் வண்ண திரைப்படம் ஆன கண்டம் பெச்ச கொட்டு படத்தில் சுந்தரத்துக்கும் சேதுவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக சேது மாடர்ன் தியேட்டர்சில் இருந்து விலகுகின்றார். இதில் ஓரளவு தொடர்புடைய விநியோகஸ்தர் டி ஈ வாசுதேவன், 1961இல் மலையாளத்தில் ஞானசுந்தரி படத்தை எடுத்து சேது மாதவனை இயக்க சொல்லி சேதுவை மலையாளத்தில் ஒரு இயக்குனர் ஆக்கினார்.

    எம் டி வாசுதேவன் நாயர், முட்டத்து வர்க்கி, தோப்பில் பாசி, மலையாற்றூரர், தகழி சிவசங்கரபிள்ளை, பி பத்மராஜன், பி கேசவதேவ், கே டி முஹம்மத் ஆகியோரின் பல கதைகளை படமாக்கியிருக்கிறார் சேது. 60 படங்களுக்கு மேல் இயக்கினார். கன்யாகுமரி, கண்ணும் கரலும், ஓடையில் நின்னு, யக்சி, கடல்பாலம், அச்சனும் பாப்பாயும், அர நாழிக நேரம், பணி தீராத வீடு, புனர் ஜென்மம், ஓப்போள், சட்டக்காரி ஆகியனவும், ஹிந்தியில் ஜூலி, தமிழில் பால்மனம், மறுபக்கம், நம்மவர் ஆகியனவும் குறிப்பிடத்தக்கன. தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய முதல் படம் விஜய வீர என்ற சிங்கள மொழிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    கண்ணும் கரலும் என்ற படத்தில்தான் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகம் ஆனார். அவரே பிற்காலத்தில் சேதுவின் கன்யாகுமரி (1974) படத்தின் நாயகன் ஆகவும் ஆனார். அவர் கதாநாயகன் ஆக அறிமுகம் ஆன படம். கண்ணும் கரலும் படத்தின் இசையமைப்பாளர் எம் பி சீனிவாசன். கல்லூரிப்படிப்பின் பின் சேதுவுக்கும் எம் பி எஸ்ஸுக்கும் தொடர்புகள் இல்லாமல்தான் இருந்துள்ளது. சேலத்தில் இருந்தபோது தான் பார்த்த ஒரு படத்தின் இசை புதுசாக வித்தியாசமான முறையில் இருப்பதை கண்டு சேது சிந்திக்கின்றார். அந்த இசைக்கு சொந்தக்காரர் எம் பி எஸ்.

    பிற்காலத்தில் கண்ணும் கரலும் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தபோது அதே இசையமைப்பாளரை தன் படத்துக்கு இசையமைக்க அழைக்கின்றார். இருவரும் சந்திக்கும்போதுதான் கேட்கின்றார், "எம் பி எஸ், என்னை நினைவு இல்லையா, நான்தான் சேது". இப்படத்தில்தான் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகின்றார். மட்டுமின்றி, தன் குரல் வளத்தில் தலத், ரஃபி ரேஞ்சுக்கு உயரத்தை எட்டுகின்ற ஒரு இளைஞனை இருவரும் சேர்ந்து திரையுலகில் அறிமுகம் செய்கின்றனர், கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் என்பது அந்த இளைஞனின் பெயர். எம்பி எஸ்ஸின் இசையில் கால்பாடுகள் என்ற படத்தின் வழியே திரையுலகில் நுழைகின்றார் யேசுதாஸ். 

    கண்ணும் கரலும் படத்தின் நாயகர்கள் புகழ்பெற்ற சத்யனும் அம்பிகா சுகுமாரனும். படத்தில் ஒரு காதல் டூயட் பாட்டும் இல்லை, படம் ஓடாது என்று பலரும் சவால் விடுத்துள்ளனர். தயாரிப்பாளருக்கு நிதி உதவி செய்த சி சக்ரவர்த்தி ஐயங்கார், "சேது, படம் 50 நாட்கள் ஓடிவிட்டால் உனக்கொரு பரிசு நிச்சயம்!" என்று சவால் விடுக்க, தமிழர்கள் நிறைந்த பாலக்காட்டில் படம் அறுபது நாட்கள் ஓடியது. பட இயக்க நுட்பத்தில் அதுவரை இல்லாத நயத்தை வெளிக்கொண்டு வந்ததாகவும் மலையாள திரைப்பட வரலாற்றில் சேது மாதவன் ஒரு திருப்பத்தை தருவார் என்றும் அன்று பத்திரிகைகள் எழுதி பாராட்டின. நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் ஐயங்காரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது இதை சேது நினைவுபடுத்த, தன் மேல் இருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து சேதுவுக்கு போர்த்தி இருக்கின்றார். அதனை தன் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வந்தார் சேது.

    ஓடையில் நின்னு (1965) என்ற பி கேசவதேவின் கதை. ஒரு ரிக்ஸா ஓட்டுனர். நாயகன் தன் வளர்ப்பு மகளின் அம்மாவுடன் உறவில் உள்ளதாக கதை. அப்புத்தகம் தடை செய்யப்பட்டுள்ளது என்று சேதுவின் மனைவி அவருக்கு சொல்கின்றார். ஆனால் சில கிறித்துவ பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் அந்த கதை துணைப்பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. படம் வந்த பிறகு தியேட்டர்களில் மாணவர்கள் கூட்டமாக சென்று பார்த்திருக்கின்றார்கள். தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டபோது இப்படத்துக்கு சிறந்த படத்துக்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது.

    நாளை நமதே என்ற படம். இந்தி படத்தின் தமிழ்ப்பதிப்பு. பி மாதவன் இயக்கினாலும் சேது இயக்கினால் நல்லது என்று படத்தின் ஹீரோ எம் ஜி ஆர் சொல்லியிருக்கிறார். ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு தொடங்க வேண்டும், பத்தே முக்கால் மணிக்கு எம் ஜி ஆர் வந்திருக்கின்றார். மறுநாளும் அதே போல். சேது அவரிடம் நேரடியாகவே பேசினார், "நீங்கள் வரும் நேரத்தை சரியாக சொல்லி விடுங்கள், நேரமும் பணமும் வீணாவதை தவிர்க்கலாம்" என்று. எம் ஜி ஆரின் புகழும் அவரது ஹீரோ இமேஜும் உச்சியில் இருந்த நேரம் அது. அடுத்த நாளில் இருந்து எம் ஜி ஆர் சரியான நேரத்துக்கு வந்துள்ளார். மாடர்ன் தியேட்டர்சில் மர்மயோகி படப்பிடிப்பின்போது எம் ஜி ஆர் தாமதமாக வர, டி ஆர் சுந்தரம் உடனடியாக எம் ஜி ஆருக்கு பதிலாக டூப் நடிகரை வைத்து படப்பிடிப்பை நடத்தியதை சேது நேரில் பார்த்திருந்தார். அண்ணா, தலைவர் போன்ற பிரபலமானபெற்ற சொற்களால் எம் ஜி ஆரை எல்லோரும் அழைக்கும்போது, மிஸ்டர் எம் ஜி ஆர் என்று அழைத்தவர் சேது.

    உச்சிவெயில் என்ற இந்திரா பார்த்தசாரதியின் கதையை தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும் அரசு தொலைக்காட்சியும் இணைந்து மறுபக்கம் (1991) என்ற படமாக்கினர். படத்தை இயக்கினார் சேது மாதவன். பன்னிரண்டு லட்சம் ரூபாய் பட்ஜெட், இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு. படத்தின் நடிகர்கள் பணம் வாங்க மறுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வற்புறுத்தலின் காரணமாக நாயகன் சிவகுமார்15000 ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டாராம். மேலும் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கை மிச்சமாக்கி அரசுக்கே திருப்பி கொடுத்துள்ளார் சேது. எல் வைத்தியநாதன் இசையமைத்தார். சிறந்த திரைப்படத்துக்கான தங்கத் தாமரை, திரைக்கதைக்கான வெள்ளித்தாமரை விருதுகளை படம் வென்றது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்த்திரைப்படம் உச்சிவெயில்.

    சேதுவின் இளையமாகன் சந்தோஷ் ஒரு திரைப்பட இயக்குனர் ஆக பரிமளித்தார். இந்திரா பார்த்தசாரதியின் அப்புவின் நாயகன் என்ற கதையை தன் முதல் படமாக இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    "மனித வாழ்க்கையின் உண்மையான சம்பவங்களை படமாகுவதில் எனக்கு விருப்பம் அதிகம். ஓப்போள் போல மனுசிகளை நான் பார்த்திருக்கிறேன். அந்த கதை ஒரு குழந்தையின் பார்வையில் இருந்து எழுதப்பட்டது. ஆம், அக்கதையை எழுதும்போது நான் ஒரு சிறு பையனாகவே ஆனேன்" என்றார் சேது.

    சென்னை பிரஸிடென்சி கல்லூரியில் எம் பி எஸ் சேதுவுக்கு சீனியர். இடதுசாரி மாணவர் இயக்கத்தில் தீவிரமாக இயங்கியவர் எம் பி எஸ். பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மூழ்கினார். பிற்காலத்தில் ஈ எம் எஸ் அவர்களின் நேர்முக செயலாளராக இருந்த சுப்ரமணிய சர்மாவின் தூண்டுதல் எம் பி எஸ்ஸின் உள்ளே இருந்த இசைக்கலைஞனை வெளிக்கொண்டு வந்தது. சேதுவும் எம் பி எஸ்ஸும் இணைந்து பல மலையாள படங்களையும் புகழ்பெற்ற பாடல்களையும் வாரிக்கொடுத்தார்கள். ஓப்போள் திரைப்படத்தில் எட்டுமானூர் அம்பலத்தில் என்ற ஒரு பாட்டு. நதியில் இடம்பெறும் காட்சி. எஸ் ஜானகி பாடும் பாட்டை பின்னணி இசையுடன் பதிவு செய்தனர். நதியில் பாடும் பாட்டுக்கு இசை எதுக்கு என்று இருவரும் சிந்தித்தார்கள். இசை எங்கே இடம்பெறக்கூடாது என்பதில் எம் பி எஸ் போன்று தீர்மானமாக இருப்பவர்கள் மிக அரிது. அதே பாடலை இசை இல்லாமல் ஜானகியின் குரலில் மட்டும் பதிவு செய்தார்கள். பாடலுக்கு தேசிய விருதுகிடைத்தது. யூடியூப்பில் பாடல் காட்சி உள்ளது. 

    மனவியல் ஆய்வாளர் டாக்டர் ஆபிரகாம் கோவூரின் சிகிச்சை அனுபவங்களில் ஒன்றுதான் புனர்ஜென்மம் என்ற மலையாள திரைப்படம் ஆனது. சேது இயக்கினார். தமிழில் டி ஆர் சுந்தரத்தின் சகோதரர் ஆன டி ஆர் ராமண்ணா மறுபிறவி (1973) என்று இயக்கினார்.

    சேதுவும் எம் பி எஸ்ஸும் இணைந்து செய்த பல முயற்சிகள், சோதனைகள் திரையுலகில் வேறு யாரும் அதற்குமுன் முயற்சி செய்து பார்த்திடாதவை. அந்த வகையில் இருவரும் துணிச்சல் மிக்கவர்கள். மகா மேதைகள் ஆகிய இவர்கள் இருவரும் இணைந்து அல்லது தனியாக பத்து படங்களில் கூட தமிழில் வேலை செய்யவில்லை. 

    1994இல் தமிழில் சேது இயக்கிய நம்மவர், கரண் என்ற சிறந்த நடிகரை தமிழுக்கு தந்தது குறிப்பிடத்தக்கது.

    சேதுவின் இளைய சகோதரர் கே எஸ் ஆர் மூர்த்தி. சேது திரையுலக பணிகளில் மூழ்கிகிடந்த காலங்களில் அவரது குடும்பத்தை காத்து நின்றவர் மூர்த்திதான். மூர்த்தி 25 படங்களை தயாரித்தார், சிலவற்றை சேது இயக்கினார். அதிகம் பேசாத அண்ணனுக்கு குரலாகவும் கரங்களாகவும் இருந்துள்ளார் மூர்த்தி. 

    தேசிய, மாநில அளவில் ஏறத்தாழ 25 விருதுகளை தன் வாழ்நாளில் பெற்று பெருமையடைந்தவர் சேது. மலையாள திரைப்படத்தின் தளகர்த்தர் ஆன ஜே சி டேனியல் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதை குறிப்பிட வேண்டும். அவர் பெயரால் கேரள அரசு நிறுவிய ஜே சி டேனியல் விருது 2009ஆம் ஆண்டில் சேதுவுக்கு வழங்கப்பட்டது.

    வெகுமக்களின், சாமானிய உழைக்கும் மக்களின் பொழுதுபோக்கு சாதனம் சினிமா. அந்த ஊடகத்துக்குள்ளும் கலை நுட்பங்களை, புதிய கதைகளை, புதிய கதை சொல்லும் நேர்த்தியை அறிமுகம் செய்தவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியும். இந்திய அளவில் அவ்வாறு முன்வரிசையில் அணி செய்பவர்களில் ஒருவர் கே எஸ் சேது மாதவன். சென்னையில் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்தார் சேது. 24.12.2021 அன்று காலமானார். திரைப்பட உலகின், திரை ரசிகர்களின் நினைவில் சேது மாதவன் என்றும் வாழ்கின்றார்.


    (கே எஸ் சேது மாதவன் 29.5.1927 - 24.12.2021)
    ... .... ....

    தகவல்கள் உதவி: இணையம், சேதுவின் மருமகள் நவினா ஆர் (மகன் இயக்குனர் சந்தோஷின் மனைவி) எழுதிய Journey of a film maker, பிற நூல்கள்.

புதன், டிசம்பர் 22, 2021

1857 சிப்பாய் புரட்சி பற்றி கார்ல் மார்க்ஸும் ஃப்ரெடெரிக் எங்கெல்ஸும்


1857 சிப்பாய் புரட்சி   பற்றி கார்ல் மார்க்ஸும் ஃப்ரெடெரிக் எங்கெல்ஸும்

- இர்ஃபான் ஹபிப்

தமிழில்: மு. இக்பால் அகமது

(சிப்பாய்க்கிளர்ச்சி என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் 1857 கிளர்ச்சியை  தொடர்ந்து கவனித்து வந்த கார்ல் மார்க்ஸும் ஃப்ரெடெரிக் எங்கெல்ஸும் அக்கிளர்ச்சியை சமூக அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் விமர்சித்து New York Daily Tribune என்ற பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதி வந்தனர். அக்கட்டுரைகளின் தொகுப்பு The First Indian War of Independence 1857-1859 என்ற நூலாக 1959ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் முன்னேற்றப்பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. அக்கட்டுரைகளின் அடிப்படையில் இர்ஃபான் ஹபிப் அவர்கள் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் இது)

நியூ யார்க் டெய்லி ட்ரிப்யூன் (New York Daily Tribune-நி.யா.டெ.ட்.) என்ற பத்திரிக்கையின் லண்டன் செய்தியாளராக 1853இல் கார்ல் மார்க்ஸ் பணியாற்றத் தொடங்கினார்.  அந்நாட்களில் அமெரிக்காவில் அதிகம் வாசிக்கப்பட்ட பத்திரிக்கை இதுவே.  அவர் எழுதிய விவாதத்திற்குரிய இரண்டு கட்டுரைகளான "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி"   (British Rule in India), "பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் ஏற்படுத்தவுள்ள விளைவுகள்"(Future Results of the  British Rule in India)   ஆகிய இரண்டிலும், இந்தியாவின் தொன்றுதொட்ட சமூக-பொருளாதார அமைப்பை பிரிட்டிஷ் ஆட்சி எவ்வாறு கொடூரமாக நசுக்கி இந்திய மக்கள் மீது சொல்லொண்ணா துயரத்தை திணித்தது என்பது பற்றி விளக்குகின்றார்.  இந்தியாவில் ஒரு மறுமலர்ச்சி தோன்றுவதற்கு சாதகமான சூழ்நிலையை தன்னையறியாமலேயே பிரிட்டிஷ் காலனியாதிக்கம் வளர்த்துக்கொண்டிருந்தது என்று மார்க்ஸ் குறிப்பிடுகின்றார்.  இரண்டாவது கட்டுரையில், "ஹிந்துக்கள் (அமெரிக்கர்கள் பொதுவாக இந்தியர்களை இப்படித்தான் குறிப்பிட்டார்கள்) ஆங்கிலேய ஆட்சியை ஒட்டுமொத்தமாகத் தூக்கியெறிவதற்குத் தேவையான வலிமையை வளர்த்துக்கொள்வார்கள்" என்று அவர் நம்பிக்கையோடு குறிப்பிடுகின்றார். "பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி போர்த்தந்திரங்களை நன்கு கற்றுணர்ந்துள்ள இந்திய ராணுவ வீரர்கள்தான், இந்தியா தன்னெழுச்சியுற்று விடுதலையடைவதற்குத் தேவையான இன்றியமையாக் கூறுகளாயிருப்பர்" என்ற  மார்க்ஸின் கணிப்பு (நி.யா.டெ.ட். ஆகஸ்ட் 8, 1853) அணுவளவும் பொய்யாகவில்லை என்பதை வரலாறு மெய்ப்பித்தது. 

1857 மே மாதம் வங்காளப்படை புரட்சியில் இறங்கியபோது, இப்புரட்சி குறித்த தனது முதல் கட்டுரையில் (நி.யா.டெ.ட். ஆகஸ்ட் 4, 1857), மார்க்ஸ் இவ்வாறு கூறுகின்றார்: "இந்திய ராணுவ வீரர்களின் உறுதி மற்றும் நம்பகத்தன்மையின் மீது  இந்திய மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது முதல் பார்வையிலேயே  தெளிவாகத் தெரிந்தது. அது என்ன உறுதி?  ஒரு புறம் இந்திய ராணுவ வீரர்கள் அரசுக்கு எதிரான எதிர்ப்பை திரட்டிக்கொண்டிருக்க, மறுபுறம் அதே நேரத்தில், இந்திய வரலாற்றில், ஆளும் சக்திகளுக்கு எதிரான முதல் குவிமையத்தை பிரிட்டிஷ் ஆளும் வர்க்கமே தன்னையறியாமல் திரட்டிக்கொண்டிருக்கின்றது என்பதே அது. (வங்கப்படைப்பிரிவின் பாரக்பூர் இராணுவ முகாமில் 29.03.1857 அன்று முதல் கலகக்கொடியை உயர்த்திய சிப்பாய் மங்கள் பாண்டேயை சுட்டுத்தள்ளுமாறு ஹெவ்சன் என்ற ஆங்கிலேய அதிகாரி இந்தியச்சிப்பாய்களுக்கு உத்தரவிட அவர்கள் சுட மறுத்தார்கள். பாண்டே மூன்று வெள்ளை சிப்பாய்களை சுட்டு வீழ்த்தினார். பாண்டேயை ஹெவ்சன்னும் மற்றொரு அதிகாரியும் சுட முயல பாண்டே தன்னைத்தானே சுட்டுக்கொண்டார், ஆனால் சாகவில்லை. ராஜத்துரோக குற்றம் சாட்டப்பட்டு ராணுவ நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட பின் அடுத்த மாதம் 8ஆம் நாள் தூக்கில் இடப்பட்டார்.  பாண்டேயின் மரணமோ இந்தியச்சிப்பாய்களை கிளர்ச்சிக்குத் தூண்டியது.  மீரட் நகரில் கலகம் வெடித்த்து.  மே 10, 1857 ஞாயிறு அன்று பொதுமக்களும் சிப்பாய்களும் வீதிகளில் திரண்டனர். பிரிட்டிஷாரால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 85 இந்தியச்சிப்பாய்களை சிறையில் புகுந்து மீட்டனர். மீரட் நகரமே சிப்பாய்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ‘டெல்லி சலோ’ (டெல்லியை நோக்கி செல்வோம்) என சிப்பாய்கள் அணிதிரண்டனர் – மொ-ர்). 

மார்க்ஸ் தனது அடுத்த செய்தியில், (நி.யா.டெ.ட். ஆகஸ்ட் 4, 1857), சிப்பாய்களின் கிளர்ச்சி  தீவிரமடைந்துகொண்டே செல்வதையும்,  அவர்களது நடவடிக்கைகளின் உறுதியையும்  பார்க்கும்போது, மே 11 முதல் டெல்லியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட சக சிப்பாய்களுக்கு ஆதரவாக அங்கே செல்ல அவர்கள் "ஏதோ முன்கூட்டியே  திட்டமிடப்பட்டது போல்" அது  இருந்ததாக கூறுகின்றார்.  ஆனால் கிளர்ச்சியாளர்களின் திட்டத்தில் ஒரு பெரும் குறை இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டத்தவறவில்லை.  இது போன்ற "ஒரு மிகத்தீவிரமான நீண்டகாலப் போரைத்திட்டமிடும்போது, அதுவும் பிரிட்டிஷ் படைகள் டெல்லிக்கு அருகில் முகாமை அமைத்துவிட்ட சூழ்நிலையில், "இக்கிளர்ச்சிக்கு தலைமை ஏற்கும் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைக்காதது" தவறு.  அது மட்டுமின்றி ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கிளர்ச்சியை வழிநடத்திச் செல்லத்தக்க கட்டுப்பாட்டுமையத்தை உருவாக்கவும் சிப்பாய்கள் தவறிவிட்டார்கள் என்பதையும் அன்று காலையிலேயே மார்க்ஸ் கண்டுணர்ந்தார்.     

சிப்பாய்க்கிளர்ச்சியின் போக்கை தொடர்ந்து கவனித்த மார்க்ஸ், இக்கிளர்ச்சியில் ஏதோ வெறும் சிப்பாய்கள் மட்டுமே குதித்துள்ளார்கள் என்பது மாறி, "பிராமணர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என அனைத்து மதத்தவரும் தங்களுடைய பொதுவான ஒரு பிரச்னைக்காக ஒன்றுபட்டுள்ளார்கள், இதன் மூலம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஒரு ஒன்றுபட்ட எதிர்ப்பு வேகமாக வளர்ந்து வருகின்றது" என்று குறிப்பிட்டார்.   "இது ஒரு தேசிய எழுச்சியே என்பதை  அடுத்தடுத்து தொடரும் கிளர்ச்சியின் போக்குகள் மெய்ப்பிக்கும். இது வெறும் சிப்பாய்களின் கலவரமே என்று கருதும் ஜான் புல் போன்றவர்களின் கருத்து உடைபடும் (ஜான் புல் என்பது 18ஆம் நூற்றாண்டின் அங்கதச்சுவை நாடகமொன்றின் கதாபாத்திரம்; பின்னர் சாமான்ய பிரிட்டிஷ் குடிமகனை குறிக்க பேச்சுவழக்கில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்-மொ-ர்) " (நி.யா.டெ.ட். ஆகஸ்ட் 14, 1857).  

தனது அடுத்த கட்டுரையில் (நி.யா.டெ.ட். ஆகஸ்ட் 29, 1857), டெல்லியில் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த இந்திய சிப்பாய்கள் வலுவுடன் இருந்ததாகவும், "இந்துக்கள் பிரிட்டிஷ் ஆட்சி மீது வெறுப்புற்றிருந்தார்களா அனுதாபம் கொண்டிருந்தார்களா போன்ற விவாதங்களெல்லாம் இப்போது முட்டாள்தனமானவை" என்றும் எழுதியிருந்தார்.  அத்தியாவசியப்பொருட்களை பெறுவதிலும் போக்குவரத்திலும் ஆங்கிலேயர்கள் சிரமங்களை சந்தித்தார்கள் என்பது "விவசாயிகளின் அனுதாபம் அவர்களுக்கு இல்லை" என்பதைக் காட்டியதுதான் என அவர் குறிப்பிடுகின்றார்.   விவசாயிகளின் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு இருந்தது என்று இந்த இடத்தில்தான் மார்க்ஸ் முதன்முதலாக  குறிப்பிடுகின்றார்.   அதுவரையிலும், தமது நிலத்தை பிரிட்டிஷாரிடம் இழந்த நிலப்பிரபுக்கள், பதவி பறிபோன குறுநில மன்னர்கள்  போன்றவர்களின் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு இருப்பது பற்றித்தான் அவர் குறிப்பிட்டு வந்தார்.  அதே நேரத்தில் "ஒரு இந்தியக்கிளர்ச்சி ஒரு ஐரோப்பிய புரட்சிக்கான குணாம்சங்களை வரித்துக்கொள்ளும் என்று எதிர்பார்த்தால் அது ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே சாத்தியம்" என்றும் எச்சரிக்கையுடன் குறிப்பிடுகின்றார்.

ஆனாலும் அந்த இந்தியக்கிளர்ச்சி தொடர்ந்து  விரிவடைந்து பரவுவதைக் கண்டபின், அது முழுமை பெற்ற "புரட்சி" என்று மார்க்ஸ் மதிப்பிடத்தொடங்குகின்றார். செப்டம்பர் 1 அன்று அவர் எழுதிய செய்தியில் (நி.யா.டெ.ட். செப்டம்பர் 15, 1857), டெல்லியில் ஒரு அசைவற்ற நிலை  ஏற்பட்டிருப்பதையும், அதே நேரம் ஆக்ரா, கான்பூர், லக்னோ மற்றும் பல பகுதிகளில் கிளர்ச்சி வெடித்துள்ளதையும்  குறிப்பிடும் அவர், "புரட்சி எனும் பெருங்கடல் நடுவே தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவே பெரும்பிரயத்தனம் செய்ய வேண்டிய அளவுக்கு பிரிட்டிஷ் படைகள் சிறுசிறு துண்டுகளாக சிதறத்தொடங்கியிருந்தார்கள்"  என்று நிலைமையை மதிப்பிடுகின்றார். செப்டம்பர் 4க்குப்பின் அவர் எழுதிய செய்தியில் (நி.யா.டெ.ட். செப்டம்பர் 16, 1857), 1789 ஃப்ரெஞ்சு புரட்சியின் போக்கை நினைவுகூர்கின்றார்: "ஃப்ரெஞ்சு அரசாட்சிக்கு எதிரான முதல் தாக்குதல் விவசாய சமூகத்திலிருந்து வரவில்லை,  மாறாக உயர்குடி பிரபுக்களிடமிருந்தே வந்தது. இந்தியப்புரட்சியோ விவசாயிகளிடமிருந்தோ, பிரிட்டிஷாரால் சித்தரவதை செய்யப்பட்டவர்கள், அவமதிக்கப்பட்டவர்கள், நிர்வாணப்படுத்தப்பட்டவர்கள் போன்றோரால் தொடங்கப்படவில்லை; மாறாக, பிரிட்டிஷார் யாருக்கு நல்ல சீருடை அளித்து,  நல்ல உணவளித்து, சீராட்டிப் பாதுகாப்பாக வளர்த்தார்களோ அதே சிப்பாய்கள்கள்தான் பிரிட்டிஷாருக்கு எதிரான கொடியை உயர்த்தினார்கள்".  இதன் பொருள் தெளிவானது: "இக்கிளர்ச்சி சிப்பாய்களால் தலைமையேற்று நடத்தப்பட்டது, ஆனால் விரைவில் இந்திய மக்கள்சமூகமும், குறிப்பாக விவசாயிகள், இக்கிளர்ச்சியில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்கள்.  இதன் மூலம் கிளர்ச்சி ஒரு முழுப்புரட்சியென்று சொல்லத்தக்க நிலையை அடைந்தது".

இக்கிளர்ச்சியின்பால் மார்க்ஸ் அனுதாபம் கொண்டிருந்தார் என்பது அவரது கட்டுரைகளில் நன்றாகவே தெரிகின்றது. கிளர்ச்சி பற்றிய அவரது தொடக்ககால கட்டுரைகளில், டெல்லியை   கிளர்ச்சியாளர்கள் முற்றாகப் பிடித்துவிட்டதாகவும், அதை மீட்கும் முயற்சியை ஆங்கிலேயர்கள் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றார்.  தனது இக்கருத்தை அக்டோபர் மாதம் வரையிலும் கூட அவர் வலியுறுத்திக்கொண்டேயிருந்தார்.  தனது அக்டோபர் 7 செய்தியிலும் (நி.யா.டெ.ட். அக்டோபர் 23) அவ்வாறே எழுதியிருந்தார்.  ஆனால் செப்டம்பர் மாத மத்தியில் டெல்லி மீண்டும் பிரிட்டிஷார் கையில் வீழ்ந்த செய்தி மார்க்ஸுக்கு வருத்தமளித்த செய்தியாகும் (நி.யா.டெ.ட்.  நவம்பர் 14). தனது உற்ற நண்பர் எங்கெல்ஸுக்கு நவம்பர் 13, 1857, அன்று அவர் எழுதிய கடிதத்தில், டெல்லியின் வீழ்ச்சி "தனக்கும் டெய்லி ட்ரிப்யூனுக்கும் நிச்சயம் ஏமாற்றமளித்த ஒன்றுதான்" என்று ஒப்புக்கொள்கின்றார்.  ஆனால் தனது மற்றொரு செய்தியில் (நி.யா.டெ.ட்.  அக்டோபர் 11, 1857) தனது நிலை சரியானதுதான் என்று நிறுவ முற்படுகின்றார்.  பிரிட்டிஷார் தமது முழுக்கவனத்தையும் டெல்லி மீது திருப்பியதன் மூலம், "தமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத" நாட்டின் பிற பகுதிகள் "சிப்பாய்களின் பிடிக்குள் வருவதற்கான ஒரு வாய்ப்பை தம்மை அறியாமலேயே பிரிட்டிஷார் உருவாக்கியதாக” கணிக்கின்றார்.  இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தமது பிடிக்குள் வந்துவிட்ட மிகப்பெரும்பகுதியை (சரியாகச்சொன்னால் உத்தரப்பிரதேசம் முழுமையும்) சிப்பாய்கள் சரியாகத்திட்டமிட்டுப் பாதுகாப்பார்கள் என்று நம்பினார்.

இதன் பிறகு, சிப்பாய் கிளர்ச்சி பற்றிய செய்திகளை அளிக்கும் பொறுப்பை நண்பர் எங்கெல்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என விரும்பினார்.  அதேபோல் இதன் பிறகு கிளர்ச்சி பற்றிய அனைத்து செய்திகளையும் எங்கெல்ஸே  எழுதினார்.  டெல்லிமீது தாக்குதல் தொடுத்து பிரிட்டிஷார் பெற்ற வெற்றி பற்றி எங்கெல்ஸ் ஆய்வு செய்தார்.  "சிப்பாய்கள் தமது போரில் சில விஞ்ஞானப்பூர்வ அணுகுமுறைகளை கையாண்டார்கள்;  ஆனாலும் இப்போர்த்தந்திரங்களில் ஒரு முதிர்ச்சி இல்லை, வலிமை இல்லை" எனக் கருதினார் (நி.யா.டெ.ட். டிசம்பர் 5,1857). சிப்பாய்கள் கைப்பற்றியிருந்த லக்னோ இல்லத்தை, பிரிட்டிஷ் பிரதேச ராணுவ தளபதியான கேம்ப்பெல் (Campbell)  நவம்பர் 14 முதல் 23 வரையிலான பத்து நாட்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை விவரிக்கும் இரண்டு கட்டுரைகளிலும் தனது ஆய்வைத்தொடர்ந்தார்.  ஐந்து மாதங்களுக்கும் மேலாகத் தமது பிடிக்குள் வைத்திருந்த லக்னோ இல்லத்தை சிப்பாய்கள் தமது கையிலிருந்து இழந்ததை எங்கெல்ஸ் விமர்சிக்கின்றார்.  ஆனாலும், "கேம்ப்பெல்லின் வருகைக்குப்பின் உடனடியாக, ஒரு தேசிய எழுச்சியின் வலிமை எப்படியிருக்கும்  என்பதை அவுத்தை (Oudh) சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் நிரூபித்துக்காட்டினார்கள்."  இதன் பிறகு கேம்ப்பெல் லக்னோவிலிருந்து தனது படைகளுடன் பின்வாங்க நேரிட்டது.  "ஒரு தேசிய எழுச்சியின்  வலிமையென்பது, கடுமையான  போர்க்களத்தை சந்திப்பது என்பதில் இல்லை; மாறாக, அங்கங்கே தாக்குதல் நடத்துவது, நகரங்களை கைப்பற்றுவது, எதிரியின் தகவல்தொடர்பை சேதப்படுத்துவது ஆகியவற்றில்தான் அடங்கியுள்ளது" என எங்கெல்ஸ் விமர்சிக்கின்றார் (நி.யா.டெ.ட். ஃபிப்ரவரி 1, 1858).

லக்னோ, 1858 மார்ச்சில் பிரிட்டிஷாரிடம் மீண்டும் வீழ்ந்தது பற்றி விவாதிக்கும் தனது இரண்டு கட்டுரைகளில், ஒரு திறந்த போர்க்களத்தில் சண்டையிட்டு வெற்றிபெற இயலாத நிலையிலும், ஒரு "தேசிய எழுச்சி" என்பதை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்ற அம்சம் குறித்து எங்கெல்ஸ் மீண்டும் பேசுகின்றார்.   பிரிட்டிஷ் படைகள் மிகக்கடுமையான போரில் ஈடுபட்டன என்ற கருத்தையும், பிரிட்டிஷ் வீரதீரசாகசம் போன்ற புகழ்ச்சிகளையும் அவர் ஒதுக்கித்தள்ளுகின்றார்.  கிளர்ச்சியாளர்கள் தமது தற்காப்பு நடவடிக்கைகளில் வலிமையாக இல்லாததுதான் தோல்விக்கு காரணம் என்று குறிப்பிட்டு அது பற்றி அதிருப்தி தெரிவிக்கின்றார்.  ஆனாலும், கிளர்ச்சியாளர்கள் கும்பல் கும்பலாக சிதறி நாடெங்கிலும் பரவிச்சென்றுள்ளார்கள் என்பதைக் கணக்கில் கொண்டு, அவர்கள் "கெரில்லா யுத்தத்"தை தொடங்கக் கூடும் என்று எதிர்பார்த்தார் (நி.யா.டெ.ட். மே 25, ஜூன் 15, 1858).  அவரது இந்தப் பெரும் எதிர்பார்ப்பை நிறைவேற்றியவர்கள் இருவரே. ஜகதீஸ்பூரின் குன்வர் சிங், அவரது சகோதரர் அமர் சிங்.  அமர் சிங் பற்றி பின்னர் பேசும்போது, "அவருக்கு கெரில்லா யுத்த தந்திரம் பற்றி ஓரளவு ஞானம் இருந்தது;  அவரது போர்முறை, பிரிட்டிஷாரின் தாக்குதலுக்காக காத்திருப்பது என்பதல்ல, எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் தாமாகவே பிரிட்டிஷாரை தாக்குவது என்பதாகவே இருந்தது."  எங்கெல்ஸின் இக்கட்டுரை 1857 சிப்பாய் புரட்சி பற்றிய அவரது இறுதிக்கட்டுரையாக இருந்தது.    "கெரில்லாயுத்தம்" வெடிக்கும் என்ற அவரது நம்பிக்கை, 1858இன் இலையுதிர்காலத்தின்போதெல்லாம் உதிர்ந்து போன நம்பிக்கையாகிவிட்டது.    புரட்சி அதன் "போர்க்குணத்தை" இழந்து தேய்ந்து போனதாக அவர் முடிவு செய்தார்.  ஆனால் அவரிடம் ஒரு நம்பிக்கைக்கீற்று அப்போதும் இருந்தது: "பதினைந்து கோடி இந்தியமக்களின் சிந்தனையில் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வுகளை இப்புரட்சி விதைத்து சென்றுள்ளது; அந்த உணர்வு வீண் போகாது, அதன் விளைவு  இன்றில்லையென்றாலும் ஒரு நாள் வெளியே முளைத்துக்கிளம்பும் " (நி.யா.டெ.ட். அக்டோபர் 1, 1858).

.... .... ....

அரசியல் கூறுகள்

சிப்பாய்ப்புரட்சியின் போர்நுட்பக்கூறுகளை எங்கெல்ஸ் ஆராய்ந்தார் எனில், மார்க்ஸ் அதன் அரசியல் கூறுகளை ஆய்வு செய்தார். அவர் முதலில் கவனம் செலுத்தியது, கிளர்ச்சியாளர்கள் செய்த "அட்டூழியங்கள்" பற்றி இங்கிலாந்தில் செய்யப்பட்ட திட்டமிட்ட மூளைச்சலவைப்பிரச்சாரங்களை எதிர்கொள்ளவெண்டும் என்பதுதான்.  தனது கட்டுரை ஒன்றில்  கிளர்ச்சியாளர்கள் மோசமான "அட்டூழியங்கள்" செய்தார்கள் என்று ஒப்புக்கொள்கின்றார் (நி.யா.டெ.ட். செப்டம்பர் 16, 1857).  ஆனால் அவை எப்படிப்பட்ட "அட்டூழியங்கள்"?  "ஆளும்வர்க்கங்களுக்கு எதிரான போர்களிலும், தேசியஇனங்கள், இனங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக மதங்கள் ஆகியவற்றின் பேரால் நடக்கக்கூடிய  போர்களிலும் சாதாரணமாக என்ன மாதிரியான "அட்டூழியங்கள்' நடக்குமோ அவைதான் இப்போதும் நடந்துள்ளன."  தமது இக்கூற்றுக்கு ஐரோப்பாவின் சொந்த வரலாற்றிலிருந்தே அவர் உதாரணங்களை முன்வைக்கின்றார்.  சமீபத்தில் சீனாவுக்கு எதிராக இதே பிரிட்டிஷார் நடத்திய "அபினி யுத்தத்"தில் (Opium War), சீனப்பெண்களை பிரிட்டிஷார் நாசம் செய்தது, குழந்தைகளை தீயில்போட்டு வாட்டியெடுத்தது, கிராமங்களை ஒட்டுமொத்தமாக கொளுத்தியது போன்ற பிரிட்டிஷாரின் அட்டூழியங்களை பட்டியலிடுகின்றார்.  சிப்பாய்க்கிளர்ச்சியை ஒடுக்குவது என்ற பேரால் பிரிட்டிஷ் அதிகாரிகள் எத்தனை கொடூரமாக நடந்துகொண்டார்கள் என்பதற்கு பல சான்றுகளைத் தருகின்றார்.  கிளர்ச்சியில் ஈடுபட்டோர், ஈடுபடாதோர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் சித்ரவதைக செய்த்து, தூக்கில் இட்டது போன்ற கொடூர நடவடிக்கைகளைக் குறிப்பிடுகின்றார். ஆனால்  எங்கேயோ கண்காணாத தூரத்தில் கடல்கடந்து உட்கார்ந்து கொண்டு, விசமத்தனமான உள்நோக்கத்துடன், மிகைப்படுத்தப்பட்டு ஒரு சில "கோழைகள்" பரப்புகின்ற   கிளர்ச்சியாளர்களின் "அட்டூழியங்கள்" பற்றிய செய்திகளை மார்க்ஸ் கேள்வி கேட்கின்றார். 

இதனைத்தொடர்ந்து, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள் சந்திக்கும் உடல்ரீதியான சித்ரவதைகளை அவர் விவரிக்கின்றார் (நி.யா.டெ.ட். செப்டம்பர் 17, 1858).  நி.யா.டெ.ட். ஏப்ரல் 5, 1858, இதழில்,  கிளர்ச்சியாளர்களின் "அட்டூழியங்கள்" பற்றி பரப்பப்படும் செய்திகளை விமர்சித்தார். இத்தகைய "செய்திகளை"ப்பரப்பி, பிரிட்டன் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு கொதிப்படையச் செய்வதில் பிரிட்டிஷ் நிர்வாகம் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தாலும், பின்னர் இவை யாவும் பொய்கள் என்று கண்டறியப்பட்டன.  அதை அவர் விமர்சித்தார்.  கிளர்ச்சியாளர்கள், கிளர்ச்சியில் ஈடுபடாமல் அவர்களுக்கு உதவி செய்தவர்கள், சாதாரண பொதுமக்கள் ஆகியோர் மீது மிக சமீபத்தில் பிரிட்டிஷார் ஏவிவிட்ட கொடூர சித்தரவதைகளை அவர் பட்டியலிட்டார்.  பிரிட்டிஷாரின் ரத்தவெறியை அவர் கடுமையாக கண்டனம் செய்தார்.  "உங்களிடம் காணப்படும் அடங்கா ரத்தவெறி, ஒரேயொரு கொடுங்கோல் மன்னனிடம் இருந்தால் கூட  அதைத் தாங்க முடியாது;  ஆனால்  ஒரு தேசமே அத்தகைய வெறிகொண்டு அலையும்போது, ஐயோ, அது எத்தனை கொடுமையாக இருக்கும்!" என்று கடும் சொற்களை பயன்படுத்தியிருந்தார்.  லக்னோ, பிரிட்டிஷ் ராணுவவீரர்களின் கைகளில் சிக்கியதையும் அவர்கள் அந்நகரை  சூறையாடியதையும்  மிகுந்த வேதனையுடன் எங்கெல்ஸும் குறிப்பிடுகின்றார். பிரிட்டிஷ் படைகள் எந்த அளவுக்கு "நாகரிகமயம்” அடைந்துள்ளன, ”மனிதநேய”த்துடன் உள்ளன என்பதையே இவை காட்டுகின்றன என்றும் எங்கெல்ஸ் குத்திக்காட்டுகின்றார் (நி.யா.டெ.ட். மே 25, 1858). (... பிரிட்டிஷ் படைகள் செய்த கொடுமைகளில் பத்தில் ஒரு பகுதியை வேறு எந்த நாட்டின் ராணுவம் செய்திருந்தாலும் பிரிட்டனின் பத்திரிக்கைகள் எந்த அளவுக்கு கொதித்து கண்டனம் செய்திருப்பார்கள்! ஆனால் இச்’சாகசங்கள்’ யாவும் பிரிட்டிஷ் ராணுவம் செய்தவை ஆதலால், அவை யாவும் ஒரு சாதாரணப்போரில் வழக்கமாக நடக்கின்ற ஒன்றுதான் என்பதாக பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் கண்களை மூடிக்கொண்டிருந்ததாக எங்கெல்ஸ் கண்டனம் செய்கின்றார் – மொ-ர்).   பிரிட்டிஷார், போர்மரபுகளையெல்லாம் மீறி தாங்கள் சிறைப்பிடித்த போர்க்கைதிகளை சுட்டுக்கொன்றதை, லண்டன் பால் மால் கெஜெட்டில் (Pall Mall Gazette) (நவம்பர் 11, 1870) அவர் நினைவுகூர்ந்தார்.

மார்க்ஸின் அடுத்த கேள்வி சட்டப்பூர்வ உரிமை பற்றியது.  அவுத் மாகாணத்தை 1856இல் சட்டவிரோதமாக தனது ராஜ்யத்துடன் பிரிட்டிஷ் அரசு இணைத்துக்கொண்டது.  அவுத் மக்களின் விருப்பத்துக்கு எதிரான இந்த கேடுகெட்ட நடவடிக்கையில் பிரிட்டிஷார் ஈடுபட்டபின், தமது ராஜ்யத்துக்கு எதிராக அவுத் மக்கள் கிளர்ச்சியில் பங்கு பெற்றார்கள் என்று பிரிட்டிஷ் நிர்வாகம் அலறுவதில் அர்த்தமில்லை; இதில் அவுத் மக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசமாக இல்லை என்று கூறுவதிலும் அர்த்தமில்லை.  "உண்மையைச்  சொல்லவேண்டுமானால், கடந்த காலத்தில், இந்திய தேசத்து மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக பிரிட்டிஷார் செய்த நம்பிக்கைத்துரோக- கொடூர அடக்குமுறைகள் யாவும் இப்போது அவர்களுக்கு எதிராகவே திருப்பித் தாக்கத்தொடங்கியுள்ளன".  அவர்களது நம்பிக்கைத்துரோக- கொடூர அடக்குமுறைகளின் கிரீடமாக-சிகரமாக இப்போது  விளங்குவது, 1858 மார்ச் 3ஆம் தேதிய கானிங் பிரபுவின் ஆணை.  "அவுத் மாகாணத்தின் அனைத்து சொத்துக்களையும் அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து அரசு கைப்பற்றுகின்றது; அவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கான தமது விசுவாசத்தை நிரூபிக்கும்வரை இச்சொத்துக்கள் அரசின் கையில் இருக்கும்" என்பதே இந்த அரசாணை! (நி.யா.டெ.ட். மே 28, 1858).

1857 கிளர்ச்சி குறித்து மார்க்ஸ் தொடர்ந்து எழுதி வந்தமைக்கு மற்றுமொரு நோக்கமும் உண்டு.  அதாவது இங்கிலாந்தில் இந்திய மக்களுக்கு ஆதரவான மக்கள் உணர்வைத்திரட்டுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தேவையான ஆதாரங்களை அளிப்பதே அவரது நோக்கம்.  உதாரணமாக சார்ட் இயக்கத்தை சேர்ந்த எர்னெஸ்ட் ஜோன்ஸ் (சார்ட் இயக்கம், இங்கிலாந்தில் பாராளுமன்ற சீர்திருத்தம் கொண்டுவர நடந்த இயக்கம் (1837-48) -மொ-ர்). இந்தியாவில் இருக்கின்ற ஆங்கிலேய "ஆளும்வர்க்க"மும் இங்கிலாந்தில் இருக்கின்ற சில கூட்டங்களும் வசதிவாய்ப்புக்களுடன் வாழ்வதற்காக, பிரிட்டிஷ் ஆட்சி இந்திய மக்கள் மீது முறைகேடான ஆட்சி நடத்தி வருகின்றனர், வரம்புமீறிய வரிச்சுமையை மக்கள் தலையில் சுமத்துகின்றனர் என மார்க்ஸ் அம்பலப்படுத்தினார்.   ஆனால் சாமான்ய பிரிட்டிஷ் குடிமகனுக்கோ வரிசெலுத்துவோருக்கோ இந்தியாவிலிருந்து ஒரு பலனும் இல்லை; சரியாகச் சொன்னால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது எல்லையை விரிவு படுத்தும் நடவடிக்கைகளுக்காக அவர்கள்-சாமானிய பிரிட்டிஷ் மக்கள்- தமது பணத்தை இழக்கவேண்டியுள்ளது (காண்க:'British Incomes in India', நி.யா.டெ.ட். செப்டம்பர் 21,1857; 'Taxes in India' நி.யா.டெ.ட். ஜூலை 23, 1858).   சிப்பாய்க்கிளர்ச்சியை அடக்கி ஒடுக்க பிரிட்டிஷ் ஆட்சி எவ்வளவு பணம் செலவழித்தது, இந்த செலவை சரிக்கட்ட இங்கிலாந்தின் சாமானியக்குடிமகனின் தலை மீது பிரிட்டிஷ் அரசு எவ்வளவு வரிச்சுமையை ஏற்றப்போகின்றது என்பது பற்றி விளக்கமாக ஆய்வு செய்த மார்க்ஸ், ஏப்ரல் 1859இல் இவ்வாறு முடிக்கின்றார்: "'ஆரவாரமான' இந்த மறுவெற்றியின் மூலம் நாம் ஈட்டும் இந்த பணபலன்கள் அத்தனை எளிதில் நமக்கு கிடைத்துவிடவில்லை  என்று ஒப்புதல் வாக்குமூலம் தருவார்கள்; இந்திய வர்த்தகச்சந்தையின்  ஏகபோகத்தை மான்செஸ்டெரின் கட்டுப்பாடற்ற வர்த்தகர்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துவிட  வேண்டும்-இதற்காகவே   சாமான்ய இங்கிலாந்துக்குடிமகன்  அரசுக்கு அநியாய  இறக்குமதி வரி கொடுக்கின்றான்  என்று ஒப்புதல் வாக்குமூலம் தருவார்கள்". 

அந்த நாட்களில் கட்டுப்பாடற்ற பிரிட்டிஷ் வர்த்தகர்கள் காலனியாதிக்கத்திற்கு எதிராக பிரச்சாரம்  செய்து வந்தார்கள். ஆனால் மார்க்ஸுக்கு இவர்களது நடவடிக்கைகளில் பலத்த சந்தேகம் இருந்தது.  அவரது சந்தேகம்தான் மேலே கூறியுள்ள இறுதி வார்த்தைகளாக வெளிப்பட்டுள்ளது.   ஜான் கல்லாகர், ஆர்.ராபின்சன் ஆகிய இருவரும் 1953இல் "சுதந்திர வர்த்தகம் என்னும் ஏகாதிபத்தியம்" என்ற சொல்லைக் கண்டுபிடிப்பதற்கு சுமார் நூறு வருடங்களுக்கு முன்பே அச்சொல்லின் முழுமையான சாரத்தை  மிகக்கூர்மையாகவும் சுருக்கமாகவும் மார்க்ஸ் கூறியிருக்கின்றார்.  1857 இந்திய "தேசியப்புரட்சி" ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.  ஏன்? ஒரே நோக்கம்தான்: பிரிட்டிஷ் தொழில் மூலதனம், பிரிட்டிஷ் அரசாட்சி என்ற பெயரில் இந்தியாவை ஆள வேண்டும் - வன்முறையும் தீவிரவாதமும் ஆட்சி செய்தால் எப்படியிருக்குமோ அப்படி.  

... ... ....

செவ்வாய், டிசம்பர் 21, 2021

மஹாத்மா காந்தியை காப்பாற்றி இருக்க முடியாதா? (2)

காந்தி படுகொலை விசாரணை 27.5.1948இல் தொடங்கியது, 10.2.1949 அன்று நீதிபதி ஆத்மசரண் தீர்ப்பு வழங்கினார். சாவர்க்கர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். நாதுராம் கோட்ஸே, நாராயண் ஆப்தே இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 15.11.1949 அன்று அம்பாலா சிறையில் தூக்கில் இடப்பட்டனர். பிறருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. 

சாவர்கரின் மீதான குற்றச்சாட்டுகள், ஆதாரங்கள் சத்து இல்லாதவை இல்லை. அரசு தரப்பு திட்டமிட்டு அவர் விடுதலை ஆக வேண்டும் என்பதற்காகவே சொத்தை வாதம் செய்தது என்பதை வரலாறு சொல்கின்றது. 

அதேபோல் கோட்ஸே, ஆப்தே இருவரின் சாம்பலும் நதியில் கரைக்கப்பட்டது. எனில் இப்போதும் புனாவில் உள்ள வீட்டில் கலயத்தில் இருக்கும் கோட்ஸேயின் சாம்பல் எங்கிருந்து எடுக்கப்பட்டது? இந்து மத நம்பிக்கையின்படி கரைக்கப்பட்ட சாம்பலை மீண்டும் எடுப்பது கூடாது. அகண்டபாரதம் அடைவோம், அப்போது சாம்பலை கரைப்போம் என்று வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதிகள் கூவுகின்றார்கள், அவர்கள்தான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். மேலும் தமது இந்து ராஷ்டிர கனவுகளுக்கு தடையாய் இருப்பார் என்று அவர்கள் காந்தியை அப்புறப்படுத்தி 74 வருடங்கள் ஆகியும் அகண்ட பாரதமோ இந்து ராஷ்டிரமோ ஏன் இன்னும் அமையவில்லை என்ற கேள்விக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்.

... ....

இரண்டு தேசம் அல்லது பாகிஸ்தான் என்ற கோட்பாடு:

முஸ்லிம் லீக்கின் அல்லது முகமது அலி ஜின்னாவின் அஜெண்டாவில் பாகிஸ்தான் என்ற கருத்துருவாக்கம் இல்லாதபோதே காந்தி மீது 1934க்கு முன்பும், பின்பும் கொலை முயற்சிகள் நடந்தன, 1934க்கு பின் 6ஆவது முயற்சியில் அவரைக் கொன்றார்கள்.

உண்மையில் 1934க்கு முன்பே இந்த கும்பல் அவர் மீது தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார்கள் எனினும் அவை ஏன் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பதற்கான காரணங்களை சொல்ல வேண்டிய பொறுப்பில் 1947 ஆகஸ்ட் 15க்கு முன் பிரிட்டிஷ் அரசும் பின் இந்திய அரசும்தான் இருந்தார்கள். 

நான்கு முயற்சிகள் புனைவின் வலதுசாரி உயர்சாதி இந்துக்களால் நடத்தப்பட்டவை. அவற்றில் மூன்று முயற்சிகளில் கோட்ஸே, ஆப்தே கும்பல் ஈடுபட்டது. இரண்டு முயற்சிகளில் கோட்ஸே பிடிப்பட்டான்.

.... .....

முதல் கொலை முயற்சி:

புனா மாநகராட்சி அரங்கில் உரையாற்ற காந்தி தன் மனைவியுடன் காரில் சென்று கொண்டு இருந்தார். அவருடைய பாதுகாப்பு கருதி ஒரே வடிவிலான இரண்டு கார்கள் வாகன அணிவகுப்பில் சென்றன, ஒன்றில் அவர் பயணித்தார். பயணத்தின் பாதையில் ஒரு ரயில்வே தண்டவாள கிராசிங்கை கடக்கும்போது சற்றே பின் தங்கிய நேரத்தில், அதேபோல தோற்றமுடைய மற்றோரு காரின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அந்தகாரின் பின்னால்தான் அவரது கார் வந்தது. இந்த குண்டுவீச்சில் மாநகராட்சியின் முக்கிய அதிகாரி உட்பட போலீசார் பலர் மோசமாக காயமுற்றார்கள். இது மிக துல்லியமாக திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று காந்தியின் வரலாற்றை எழுதிய பியாரெலால் கூறுகிறார். மற்றுமொரு தாக்குதல் அன்றே நடந்தது. காந்தி மாநகராட்சி அரங்கத்துக்கு வந்து சேரும் முன்பே அவர் வந்து விட்டார் என்று எண்ணி ஒரு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

(தொடர்ந்து எழுதுவேன்)

திங்கள், டிசம்பர் 20, 2021

உன் மரணத்துக்கு நான் அழ வேண்டுமா?

மரணம் துயரமானது மட்டுமா?

உன் வாழ்வு கொண்டாடத்தக்கதாக இருந்திருப்பின்

உன் மரணமும் துயரப்பட வேண்டியதே


உன் மரணத்துக்குப்பின்

உன்னை கொண்டாடும்படியாக

நீ வாழும்போது என்னதான் செய்து இருந்தாய்?


எத்தனை பேர் வீடுகளில் நீ

கொண்டாட்டத்தின் ஒளியை ஏற்றி வைத்தாய்?


எத்தனை சாமானியன் தெருக்களில் நடமாட

நீ துணையாய் நின்றாய்?


எங்கள் வீட்டுப்பெண்கள் எத்தனை பேர்

உன்னை நம்பி வாசல்படி தாண்டி வெளியே வந்தார்கள்?


தெருக்களில் விளையாடும் எங்கள் குழந்தைகளின் குரலில்

என்றாவது நீ மகிழ்ச்சி அடைந்திருக்கின்றாயா?

உன் வாகனத்தை நிறுத்தி 

களங்கம் அற்ற குதூகலத்தின் காற்றை 

ஒரு நொடியாவது முகர்ந்திருப்பாயா?


சொல்,

எதன்பொருட்டு நான் போலிக்கண்ணீர் வடிக்க வேண்டும்?


தோட்டாக்களால் ஆன மாலைகளைவிடவும்

எங்கள் பிள்ளைகள் செய்யும் புளியங்கொட்டை மாலைகள்

மிக அழகானவை

வலிமை மிக்கவை

வீட்டுக்குள்ளும் வீதிகளிலும்  சந்தோசத்தின் ஒலியை சிதற விடுபவை


நினைவு படுத்திச்சொல்,

எதாவது ஒன்றாவது சொல்,

உன்னை கொண்டாடுகின்றேன்

உன் மரணத்துக்கு நான் அழுகின்றேன்

மஹாத்மா காந்தியை காப்பாற்றி இருக்க முடியாதா? (1)

"ஆகஸ்ட்15ஐ என்னால் கொண்டாட முடியாது. பொய் சொல்லி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் நீங்கள் கொண்டாட கூடாது என்று உங்களை கேட்டுக்கொள்ள மாட்டேன். கெடுவாய்ப்பாக இன்றைக்கு நமக்கு கிடைத்துள்ள இந்த விடுதலையில்தான் எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எழவுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் ஆன விதை பொதிந்துள்ளது. நாம் எவ்வாறு இன்று விளக்கேற்ற முடியும், சொல்லுங்கள்?"

- காந்தி

..... .... ....

1947 ஆகஸ்ட் 15 அன்று உலகமே உறங்கும் நடுநிசி நேரத்தில் இந்தியா விடுதலை பெற்ற நேரத்தில், டெல்லியில் பல லட்சம் மக்கள் திரண்டு விடுதலையை கொண்டாடிக்கொண்டு இருந்த நேரத்தில், இந்திய விடுதலை போராட்டத்தின் , காங்கிரஸ் பேரியக்கத்தின் முகமாக இருந்த காந்தி எங்கே இருந்தார்?

இந்தக் கேள்விக்குள் காந்தி அப்போது டெல்லியில் இல்லை என்ற பதில் அடங்கி உள்ளது. அப்படி எனில் அவர் அன்று எங்கே இருந்தார்?

... ... ....

காந்தியை சுட்டுக்கொன்ற ஆர் எஸ் எஸ் இந்துத்துவா அடிப்படைவாதிகள் காலம் நெடுகிலும் தம் கொடுஞ்செயலை நியாயப்படுத்துவதற்கான காரணங்களாக சொல்வது இவற்றையே:

1. தேசபிரிவினைக்கு அவரே காரணம்

2. அவர் முஸ்லிம்களை அரவணைத்தார்

3. அவர் உயிருடன் இருக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் ஹிந்து ராஷ்டிரம் அமைய தடங்கலாய் இருந்திருப்பார்

4. பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்குமாறு அவர் இந்திய அரசை வற்புறுத்தினார்

5. தேசபிரிவினையின்போது இந்து அகதிகளின் துயரங்களை பற்றி அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார். ஆனால் இந்தியாவிலேயே தங்கிவிட்ட இசுலாமியர்களை அவர் ஆதரித்தார்

6. பாரத்மாதாவை காப்பற்ற ஒரே வழி அவரை கொல்வதுதான்.

மேலும் பல காரணங்களையும் கட்டமைக்கின்றார்கள்.

இவற்றில் ஏதாவது உண்மை உள்ளதா? அவர் இப்போது உயிருடன் இல்லை என்ற யதார்த்தமான நிலையில், குறைந்தபட்சம், ஹிந்து ராஷ்டிரம் என்று அவர்கள் கனவு காணும் அகண்ட பாரதத்தை அவரை கொன்றபின் ஆன 73 வருடங்களுக்கு பின்னும் இவர்களால் ஏன் நிறுவ முடியவில்லை என்ற கேள்விக்கான பதிலை இவர்கள் மக்களிடம் சொல்லியாக வேண்டும்.

.... ... ....

காந்தி படுகொலையில் நேரடியாக தொடர்புடைய அனைவரும் மராட்டிய சித்பவன் பிராமணர்கள். 

1.அவர்களின் சித்தாந்த தந்தை விநாயக் தாமோதர் சாவர்க்கர், 1915இலேயே காங்கிரசுக்குள் இந்து மகா சபையை வளர்க்க முனைந்தார். அந்தமான் சிறையில் இருந்து இந்திய மண்ணில் உள்ள ரத்னகிரி சிறைக்கு மாற்றப்பட்டபோது 1922இல் இந்துத்துவா என்ற நூலை எழுதுகின்றார். பின்னாளில் சாவர்கரின் முயற்சியாலும் அவரது இந்த நூலை படித்து உற்சாகம் பெற்றிருந்த கேசவ பலிராம் ஹெட்கேவரின் முயற்சியாலும் 1925இல் ஆர் எஸ் எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்துமகாசபை நேரடியா அரசியல் பேசும், ஆர் எஸ் எஸ் ரகசிய வேலைகளை செய்யும்.

2. நாதுராம் கோட்ஸே: ஆர் எஸ் எஸ் உறுப்பினர், புனாவை சேர்ந்தவர்

3. நாராயண் ஆப்தே: பிரிட்டிஷ் ராணுவத்தில் சேவை செய்தவர், ஆசிரியர், புனாவை சேர்ந்தவர்

4. திகம்பர் பட்கே: ஆயுத வியாபாரி, ஊர் அஹமத் நகர்

5. தத்தாத்ரேய சதாசிங் பராச்சுரே: மருத்துவ துறையை சேர்ந்தவர், ஊர் க்வாலியர்

6. விஷ்ணு ராமகிருஷ்ண கார்கரே: இசை வல்லுநர், ஓட்டல் பணியாளர், பிற்காலத்தில் ஓட்டல் முதலாளி, ஊர் அஹமத் நகர்

7. மதன்லால் காஷ்மீரிலால் பாவா: முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ வீரர், பாகிஸ்தானில் இருந்த பஞ்சாபில் இருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்த அகதி, அஹமத் நகர் அகதிகள் முகாமில் இருந்தவர்

8. கோபால் கோட்ஸே: நாதுராமின் தம்பி, ஊர் புனா.

9. சங்கர் கிஷ்டய்யா: ரிக்சா ஓட்டும் தொழிலாளி, ஊர் புனா

காந்தி படுகொலைக்கு பின்னும் இப்போதும் கோட்ஸேவுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று ஆர் எஸ் எஸ் கூறிக்கொண்டே வருகின்றது. தி கேரவன் ஜனவரி2020 ஆங்கில இதழில் தீரேந்திர கே ஜா எழுதியுள்ள கட்டுரையில் ஒரு பகுதி இது: 

"கடந்த எட்டு மாதங்களாக நான் தேடி வாசித்து வரும் வரலாற்று ஆவணங்கள் சொல்வது என்னவென்றால் ஆர் எஸ் எஸ் உறுப்பினர் பொறுப்பில் இருந்து கோட்ஸே ஒருபோதும் விலகியது இல்லை என்பதுதான். 1948 மார்ச் மராத்திய மொழியில் அளித்த ஒரு வாக்குமூலத்தை இப்போதும் கூட பல வரலாற்று அறிஞர்கள் அறியாமல் இருக்கின்றார்கள். இந்த அறிக்கை உண்மையில் கோட்ஸேயின் தன்வரலாறு ஆகும். ஒரே நேரத்தில் ஆர் எஸ் எஸ், இந்து மகா சபை இரண்டிலும் தான் வேலை செய்ததை கோட்ஸே ஒப்புக்கொண்டு இருக்கின்றான். 18, 19ஆவது பக்கங்களில் அவன் தெளிவாக சொல்கின்றான், 'மீண்டும் இந்துமகாசபை வேலைகளை செய்ய தொடங்கி உள்ளேன், கூடவே ஆர் எஸ் எஸிலும் தொடர்ந்து இயங்குகின்றேன்".

1994 ஃபிரண்ட் லைன் இதழுக்கு கோபால் கோட்ஸே கொடுத்த வாக்குமூலம் முக்கியமானது: "காந்தி கொலைக்கு பின் கோல்வாக்கரும் ஆர் எஸ் எஸ்ஸும் மிகுந்த தொல்லைக்கு உள்ளானார்கள், இதை தவிர்க்க விரும்பித்தான் தான் ஆர் எஸ் எஸ்சில் இருந்து விலகிவிட்டதாக (நீதிமன்றத்தில்) அவர் சொன்னார். ஆனால் ஆர் எஸ் எஸ்சில் இருந்து அவர் விலகவில்லை. நாங்கள் நான்கு சகோதரர்களும் ஆர் எஸ்எஸ் உறுப்பினர்கள். நாங்கள் குடும்பத்தில் வளர்ந்தோம் என்பதை விடவும் ஆர் எஸ் எஸில் வளர்ந்தோம் என்று நீங்கள் சொல்லலாம். அதுவே எங்கள் குடும்பம் போன்றது". தன் தொண்டனை கைவிட்டது குறித்து இந்த பேட்டியில் அவர் ஆர் எஸ் எஸ்ஸை விமர்சித்துள்ளார், கைவிட்டுவிடாத இந்துமகாசபையை பாராட்டுகின்றார், அதாவது காந்தி கொலையில் இ ம சபை தன் பங்கை எப்போதும் மறுத்தது இல்லை.

(தொடர்ந்து எழுதுவேன்)

செவ்வாய், டிசம்பர் 07, 2021

கற்பனை செய்யுங்கள்! (Imagine)

 


கற்பனை செய்யுங்கள்! (Imagine)

சொர்க்கம் என்ற ஒன்றில்லை, கற்பனை செய்யுங்கள்

முயற்சி செய்யுங்கள், மிக எளிது

காலுக்கு கீழே நரகம் ஏதும் இல்லை

தலைக்கு மேலோ ஆகாயம் மட்டுமே


மக்கள் அனைவரும் 

இன்றைய வாழ்வை வாழ்கின்றார்கள், கற்பனை செய்யுங்கள்


தேசங்கள் என்று ஏதும் இல்லை, கற்பனை செய்யுங்கள்

கடினமான காரியம் இல்லை

எதையும் கொல்ல வேண்டாம்

எதற்காகவும் சாக வேண்டாம்

மதங்கள் என்று ஏதுமில்லை, ஆம்


கற்பனை செய்யுங்கள்,

மக்கள் அனைவரும் சமாதானமாக வாழ்கின்றார்கள்


நீங்கள் சொல்லலாம், நான் கனவு காண்கின்றேன் என்று

ஆனால் கனவு காண்பது நான் மட்டுமே அல்ல

என்றாவது ஒருநாள் நீங்களும் என்னுடன் இணைந்து கொள்வீர்கள்

அன்று உலகம் ஒரே உலகமாக இருக்கும்


சொத்து என்று ஏதுமில்லை, கற்பனை செய்யுங்கள்

உங்களால் முடியும் எனில் நான் வியப்புறுவேன்

பொறாமைக்கும் பசிக்கும் இடமில்லை

சகோதரத்துவம் மட்டுமே எங்கிலும்


கற்பனை செய்யுங்கள்,

உலக மக்கள் அனைவரும் 

இந்த உலகினை பகிர்ந்துகொள்கின்றார்கள்


நீங்கள் சொல்லலாம், நான் கனவு காண்கின்றேன் என்று

ஆனால் கனவு காண்பது நான் மட்டுமே அல்ல

என்றாவது ஒருநாள் நீங்களும் என்னுடன் இணைந்து கொள்வீர்கள்

அன்று உலகமக்கள் அனைவரும் ஒன்றாக வாழ்வார்கள்


- ஜான் லென்னான்

 9.10.1940-8.12.1980 (கொல்லப்பட்டார்)

வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்த நாட்களில் இக்கவிதையை எழுதினார் (மார்ச் 1971)

தமிழில்: மு இக்பால் அகமது