கடந்த சில நூறாண்டுகளில் எத்தனையோ அறிவாளிகளும் மகான்களும் புவிப்பரப்பெங்கும் தோன்றினார்கள். அவர்களில் பலரும் இந்த உலகையும் சமுதாயத்தையும் கருத்துமுதல்வாத அணுகுமுறையுடன்தான் தத்தமது பார்வையில் புரிந்தும் எழுதியும் வைத்தார்கள். இன்னும் சிலரோ மதவாத அடிப்படையில் அணுகினர். இன்னும் சிலரோ மதத்தையும் கடவுள் என்னும் கோட்பாட்டையும் புறந்தள்ளி ஒருபடி மேலே சென்று சிந்தித்தாலும் அவர்களின் அணுகுமுறையும் கருத்துமுதல்வாத அடிப்படையில்தான் இருந்தது, ஆனாலும் இந்த அணுகுமுறையில் ஒரு முன்னேறிய பார்வை இருந்தது என்பது உண்மையே. வேறு சிலரோ கடவுள் என்னும் கோட்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், ஆனால் உயிர்கள் இடத்து அன்பு செலுத்த வேண்டும், அடுத்த உயிருக்கு துன்பம் தரலாகாது, எல்லா உயிர்களும் சமம், கொல்லாமையை கடைப்பிடிப்போம் என்று வேறு ஒரு பார்வையுடன் அணுகினர், இதுவும் ஒரு படி முன்னேறிய பார்வைதான்.
கடவுள் நம்பிக்கை மிகுந்த வள்ளலார்தான், கடவுளைப்பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருந்தால் போதுமா? வயிறு என்ற ஒன்று இருக்கிறதே, பசித்தவனுக்கு ஏது பரஞ்சோதி என்று யதார்த்தமாக சிந்தித்தார். யோசித்துப்பார்த்தால், அவர் பற்ற வைத்த அணையாத பெரும் அடுப்பு, வெறும் அடுப்பு அல்ல, அது ஒருவகை பொருள்முதல்வாத அணுகுமுறையே என்று புரிகின்றது. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்ற சொல்லாடலுக்குள், எனக்கு தெரிவதெல்லாம் "அடுத்த மனிதன் பசியைப்போக்க அடுப்பைப் பற்றவை, அன்புடன் சமைத்துப்போடு, அவனை மகிழ்ச்சியாக வைத்திரு" என்ற மிக உயரிய தத்துவமே. சுருக்கமாக சொன்னால் சோத்துக்குள்ளே இருக்கான் சொக்கப்பன் என்ற பொருள்முதல்வாத அணுகுமுறை என்று நினைக்கின்றேன். வெயிலில் அலைந்து தெருவில் தலைச்சுமையாய் கீரை விற்பவளிடம் ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் பேரம் பேசாதே என்பதுதான்.
கருத்துமுதல்வாத ஞானிகளை கடந்து வந்ததுதான் வரலாற்றின் பாதை. சட்டென இவர்களை ஒத்துக்கித் தள்ளிவிட முடியாது. மிக நீண்ட நெடிய பல நூறு வருட வயதுள்ள தத்துவப்போராட்ட வரலாற்றில் இவர்களின் பங்களிப்பை மறுக்க முடியாது. 1800களில்தான் இந்த சிந்தனைப்போக்கில் வேறு மாதிரியான அணுகுமுறைகள் பிறந்ததை நாம் பார்க்க முடிகின்றது. ஆனால் அதற்கு முன்பாகவே, அதாவது கருத்துமுதல்வாதம் கோலோச்சிய காலத்திலேயே இரண்டு முக்கியமான மக்கள் எழுச்சியை பார்க்க முடிந்தது. முதலாவது, 1775-1783 அமெரிக்க விடுதலைப்போர். விளைவு தனிமனிதனின் விடுதலை நிலைநாட்டப்பட்டது. இரண்டாவது, பிரெஞ்சுப் புரட்சி. அப்போது ஆட்சியில் இருந்தவர் மன்னர் பதினாறாம் லூயி. 5.5.1789 முதல் 9.11.1799 வரையில் இந்தப் புரட்சி நீடித்தது. 14.7.1789 அன்று Bastille சிறையை மக்கள் உடைத்து எறிந்தனர். செப்டம்பர் 1792இல் முதல் பிரெஞ்சு குடியரசு பிரகடனப்படுத்தபட்டது. 1793இல் லூயி கொல்லப்பட்டார். நெப்போலியன் போனபார்ட்டே (15.8.1769-5.5.1821) 1799இல் பதவியேற்றார். மன்னர் ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது. இந்தப் புரட்சி சமத்துவம் என்ற தத்துவத்தை உயர்த்திப் பிடித்தது.
இதன் பின்னால் 1820 முதல் 1840 வரையிலான மூன்றாவது புரட்சி, தொழிற்புரட்சி நடந்தது. நவீன எந்திரங்களை கொண்டுவந்த புரட்சியாக இருந்தது. இது எதில் சென்று முடிந்தது? எல்லை கடந்து நாடுகளை அடிமைப்படுத்தியது. இவற்றின் பின்னால் நடந்த 1871 பிரெஞ்சு புரட்சிதான் மனித குல வரலாற்றில் முதலாவது பாட்டாளிவர்க்க புரட்சி அரசு. 18.3.1871 முதல் 27 நாட்கள் இந்த அரசு நீடித்தது. பல்லாயிரம் மக்கள் உயிர் போனது, பாரிஸ் நகரை மக்கள் ஆட்சி செய்தார்கள். 45 வருடங்களுக்கு பிறகு 1917இல் நடந்த சோவியத் புரட்சிக்கான ஒத்திகை என்று வரலாற்று அறிஞர்கள் சொல்வார்கள். பாரிஸ் கம்யூன் என்று அழைக்கப்பட்டது.
முதலில் சொன்ன மூன்று புரட்சிகளும் சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் ஆகிய மூன்று பேரும் கோட்பாடுகளை பாட்டாளி வர்க்கத்தின் முழக்கங்கள் ஆக கட்டமைத்தன.
1800களின் மைய கட்டத்தில், முதலில் குறிப்பிடப்பட்ட கருத்துமுதல்வாத கோட்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கியும் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை முன்வைத்தும் மானுட குலத்தின் முன் புதிய தத்துவத்தை, வர்க்க அரசியல் பேசிய புதிய தத்துவத்தை இருவர் முன்வைத்தார்கள். ஒருவர் காரல் மார்க்ஸ், மற்றவர் பிரடெரிக் எங்கெல்ஸ். மார்க்ஸ் பிறந்த நாள் 5.5.1818, எங்கெல்ஸ் பிறந்த நாள் 28.11.1820.
வரலாற்றில் முதல்முறையாக, நிலத்தின் மீதான உடைமை குறித்தும் சொத்து மீதான உடைமை குறித்தும் அரசு என்ற கோட்பாடு குறித்தும் கேள்வி எழுப்பினார்கள் இந்த இரண்டு இளைஞர்களும். ஆம்! மார்க்ஸும் எங்கெல்சும் 1847-52 காலக்கட்டத்தில் Communist League ஐ உருவாக்கும்போது அவர்களின் வயது முறையே 29, 27! முதல் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு அதுதான். கட்சி அறிக்கை வெளியிடப்பட்டது 21.2.1888. எழுதப்பட்டது 1847இல். Samuel Moore என்ற நண்பருடன் சேர்ந்து அதனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார் எங்கெல்ஸ்.
தற்செயல் நிகழ்வாக 22.2.1848 தொடங்கி 2.12.1848 வரையிலும் பிரான்சில் பிப்ரவரி புரட்சி நடந்தது. பிரான்சின் கடைசி மன்னர் முதலாம் பிலிப் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இரண்டாவது குடியரசு நிறுவப்பட்டது.
28.9.1864 அன்று முதலாவது அகிலம் லண்டனில் நிறுவப்பட்டது. அதன் பெயர் International Working men's Association. ஒன்பது ஆண்டுகள் நீடித்தது. இரண்டாம் அகிலம் 14.7.1889 அன்று நிறுவப்பட்டது. 1914இல் முதலாம் உலகப்போர் தொடங்கியது, 1916இல் அகிலம் தன் செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டது. குறிப்பான சாதனைகள் எனில் மே முதல் நாளை சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாட 1889 பிரகடனம் வழி செய்தது. மார்ச் 19ஐ சர்வதேச மகளிர் தினமாக கடைப்பிடிக்க 1910 பிரகடனம் வழி செய்தது. பின்னாளில் மார்ச் 8 ஆக மாற்றம் ஆனது.
இதன் பின்னர் நடந்த முக்கியமான வரலாற்று நிகழ்வு எனில் 1905இல் ரஷ்யாவில் ஜார் மன்னன் இரண்டாம் நிக்கோலஸ்க்கு எதிராக நடந்த முதல் புரட்சி. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனவரி மாத பனிபோர்த்திய வீதிகளில் கொல்லப்பட்டனர். 20 லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். ரஷ்யாவில் புரட்சியின் தொடக்கம் என லெனின் வர்ணித்தார். இப்புரட்சி தோல்வியில் முடிந்தது என்றாலும் சில மாற்றங்களுக்கு வழி செய்தது. டூமா என்ற நாடாளுமன்றம் உருவாக்கம், பல கட்சிகள் இயங்க அனுமதி, 1906 ரஷ்ய அரசியல் சாசனம் உருவாக்கம் ஆகியவை. பின்னர் நடந்த 1917 மாபெரும நவம்பர் புரட்சி. முன்னர் சொன்ன மூன்று புரட்சிகளில் இருந்தும் இதுவே முற்றிலும் வேறுபட்ட புரட்சி. ஏனெனில் இது முதல் முதலாக வர்க்க அடிப்படையில் நடந்த புரட்சி. சரியாக சொன்னால் மார்க்ஸும் எங்கெல்சும் பேசிய பாட்டாளி வர்க்க புரட்சி. 1917 என்பது முதல் உலகப்போர் முடிவுறும் காலம். லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்க அரசு பதவி ஏற்றபோது போர் நடந்துகொண்டுதான் இருந்தது. எனவே மன்னர் ஆட்சியின் போது நடந்து கொண்டு இருந்த பெரிய உலகப்போரின் பெரும் சீரழிவுகளையும் பொருளாதார சரிவையும் சீர் செய்து நாட்டை மீண்டும் நிலைநிறுத்தும் பெரும் கடமையை புதிய அரசு சந்திக்க வேண்டி இருந்தது. எந்த நாட்டுடனும் போர் செய்யவோ எந்த நாட்டையும் ஆக்கிரமிப்பு செய்யவோ மாட்டோம் என்பதே புதிய அரசு செய்த முதல் பிரகடனம். நிலம் அனைத்தும் அரசுடைமை என்பதே இரண்டாவது பிரகடனம்.
நீண்ட பல ஆயிரம் கால மனித குல வரலாற்றில் முதல் முறையாக நிலம் என்ற காரணியை அரசுடைமை ஆக்கியது பாட்டாளிவர்க்க புரட்சி அரசே. அதற்கான தத்துவ வெளிச்சத்தை பாய்ச்சியது கம்யூனிஸ்ட் அறிக்கையே. அதன் மூலவர்கள் மார்க்ஸும் எங்கெல்சும். 1917க்குப் பின் கடந்த 100 வருடங்களில் இந்த பூதம் முதலாளித்துவ அரசியலையும் முதலாளி வர்க்கத்தையும் எப்படி எல்லாம் ஆட்டுவித்தது, ஆட்டுவிக்கின்றது என்பது பெரும் வரலாறு.
உங்களை பெருமையுடன் நினைவு கூர்கின்றோம் தோழர் எங்கெல்ஸ்! தோழர் மார்க்ஸ்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக