மணியடித்தாகி விட்டது. நேரம் சரியாக பிற்பகல் 2.20. வி.டி.ஸ்டேஷனில் இருந்து ரயில் மெதுவாக நகரத்தொடங்கியது. ரயில் நகர நகர வழியனுப்ப வந்தவர்கள் தம் சொந்தபந்தங்களிடம், நண்பர்களிடம் ஜன்னல் கம்பிகளை பிடித்தவாறே பேச மறந்த கடைசி வினாடி பேச்சுகளை பேசிவிடும் அவசரத்தில் இருந்தார்கள். எதிர்வரும் காலத்தில் நீண்ட பல மாதங்கள், வருடங்களுக்குப் பிறகே சந்திக்க முடியும் என்ற நிலையில் பிரிகின்றவர்கள் வார்த்தைகளை மறந்து கண்ணீரால் வழியனுப்பிக்கொண்டு இருந்தார்கள், கைகளின் இறுக்கமான பிணைப்பில் பேசிக்கொண்டு இருந்தார்கள். ரயிலின் வேகம் தொடர்ந்து அதிகரிக்க, கைகளை ஜன்னல் கம்பிகளில் இருந்து விடுவித்துக்கொண்டு மெதுவாக கைகளை மட்டும் அசைத்துக்கொண்டு பிளாட்பாரத்தில் ஒதுங்கிக்கொண்டார்கள். உணர்வுகளை நெருக்கமாக்கி தூரத்தை அதிகப்படுத்தி ரயில் நிலையத்தை விட்டு வெளியேறி ஓடத் தொடங்கியது.
நினைத்தால் சற்று வேடிக்கையாகத்தான் உள்ளது. சரியாக ஆறு மாதம் முன்புதான், பம்பாயில் விமானம் ஏறுவதற்காக இதே வி டி ஸ்டேஷனில் வந்து இறங்கினேன். நாரிமன் பாயிண்ட் செல்ல மின்சார ரயிலைப் பிடிக்க வேண்டும். கையில் இரண்டு சூட்கேஸ் பெட்டிகளை வைத்துக்கொண்டு ஏற முடியாமல், வந்த இரண்டு வண்டிகளையும் தவற விட்டேன், அவ்வளவு கூட்டம், சென்னையில் காணாதது. இறுதியில் ஒரு தந்திரம் செய்தேன். அடுத்த ரயில் வரும் முன் உத்தேசமாக பிளாட்பாரத்தின் முனையில் நெருங்கி நின்றேன், ஏற வந்த கூட்டம் அப்படியே என்னை உள்ளே தள்ளிவிட்டது, இறங்க வேண்டிய இடத்திலும் இதையே செய்தேன்.
எப்படி மறப்பது அந்த நாளை? ஜனவரியில் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் வழியனுப்ப வந்த அவள் ரயில் புறப்படும்போது இப்படித்தான் கூடவே கையை அசைத்துக்கொண்டு வந்தாள். நான் கோச் வாசலில் நின்றுகொண்டு கையை அசைத்து விடை கொடுத்துக்கொண்டு இருந்தேன். இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகே ஒருவரை ஒருவர் நேரில் பார்க்க முடியும் என்ற துயரமிகு எதிர்காலம் இருவர் கண்களில் இருந்தும் அடக்க முடியாமல் கண்ணீரை சிந்த வைத்தது. இடதுகையால் சேலைத்தலைப்பைக் கொண்டு வாயைப்பொத்திக்கொண்டு இருந்தாள். ரயில் வேகம் அதிகரித்து தூரத்தில் அவள் புள்ளியாக மறைந்தாள். ரயில் பேசின் பிரிட்ஜ் நிலையத்தை தாண்டிய பின்னும் கூட என்னால் உள்ளே சென்றுவிட தோன்றவில்லை, ரயிலின் ஓட்டத்தோடு அவள் காற்றில் மிதந்து கை அசைத்துக்கொண்டு வருவதாகவே நினைத்துக்கொண்டு தூரத்தில் பார்வையை நிலைகுத்திப் பார்த்துக்கொண்டே வந்தேன். டிக்கெட் பரிசோதகர் வந்து சார் என்று அழைத்து என்னை விலக்கி கதவை மூடினார்.
இரண்டு வருட இடைவெளி இப்படி ஆறு மாதங்களாக சுருங்கும் என்று யார்தான் நினைத்தார்கள்? நேற்று வெள்ளிக்கிழமை, இந்நேரம் விமானத்தில் இருந்தேன், இப்போது ரயிலில்!
ஜூலை மாதம் என்றாலும் கூட இரவு வளர வளர குளிர் அதிகரிக்கவே செய்தது. ஜன்னல் கதவுகளை இருக்க மூடி இருந்தாலும் கிடைத்த ஊசி இடைவெளியில் உள்ளே புகுந்த சிலீர் காற்று இரக்கமின்றி எலும்பை துளைத்தது. ஓ...ஓ....என காற்றின் பெருங்கூச்சலுடன் அந்த இரும்பு வாகனம் சிறகு போல பறந்து கொண்டிருந்தது. பேருக்கு சாப்பிட்டுவிட்டு, போர்வையை இழுத்து மூடி தூங்க முயற்சி செய்தேன். ரயிலின் வேகத்தோடு பெட்டி அசைந்து ஒருவிதமான தாலாட்டில் தள்ளியது. இப்படித்தான் மூன்று வாரங்கள் முன்பு அந்த சனிக்கிழமை இரவு எங்கள் அனைவருக்கும் தூங்காத இரவாக நீண்டது.
.... ....
அநேகமாக கம்பெனியின் அனைத்து இந்திய என்ஜினீயர்களும் க்வார்ட்டர்ஸில் என் அறைக்கு வந்து என்னை சந்தித்து சென்றார்கள். உற்பத்தி மேலாளர் ஆன சம்புநாத் லாஹாவுக்கும் எனக்கும் கண்ட நாள் முதலே ஆகாமல் இருந்தது. அவரே நேரில் வந்து என் கையைப் பிடித்து தூக்கி, ஆங்கிலத்தில் "ஏய், எல்லாரும் கேளுங்க, இவன் இன்றைக்கு நமது இந்தியக்கொடியை மிக உயரத்தில் பறக்கவிட்டான். இன்றைக்கு நடந்ததை இனிமேல் என் வாழ்நாளில் என்றைக்கும் மறக்க மாட்டேன்" என ஒரு பிரசங்கி போல சத்தமாக அறிவித்துக் கொண்டு இருந்தார். பங்களாதேசியான ஜெஸீம், வழக்கம் போலவே சிரிப்பை மட்டும் சிந்திக்கொண்டு தன் மேனரிசமான வலதுகையை உயர்த்தி தலையை வலதுபுறம் சாய்த்து சூப்பர் என்பது போல காட்டிக்கொண்டு வந்து என்னை தோளில் தட்டிவிட்டு என் பக்கத்தில் கட்டிலில் சாய்ந்து கொண்டான். ஆக ஒன்று புரிந்தது, இவர்கள் அனைவரின் பேச்சில் இருந்து, இன்று நடந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த தொழிற்சாலையும் பரபரப்பாகிப் போனது, க்வார்ட்டர்ஸ் முழுக்கவும் இதே பேச்சுதான் ஓடிக்கொண்டு இருக்கிறது.
என் அறை நண்பர்கள் ஆன மனோகரனும் காதரும் படுக்கையில் தலையணையை சுவரோடு சாய்த்தபடியே சிகரெட்டை ஊதித்தள்ளிக் கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனையில் ஆழ்ந்து இருந்தார்கள்.
நடந்தது இதுதான். புதிதாக தொடங்கப்பட்ட அந்த சிராமிக் ஓடுகள் தயாரிப்பு தொழிற்சாலையின் முதல் ஸ்டோர் மேனேஜர் நான்தான். சவுதி அரேபியாவின் மிக நவீனமான இத்தாலிய ப்ரொடக்சன் லைன் கொண்ட தொழிற்சாலை. ஓடுகள்தானே என சாதாரணமாக நினைத்திருந்தேன், ஆனால் அங்கு சென்ற பின்னரே தெரிந்தது, ஓடு தயாரிக்க ஐம்பதுக்கும் மேற்பட்ட கச்சாப்பொருட்கள் தேவை என்று. இவை தவிர எந்திர உதிரி பாகங்கள், பேக்கிங் சாமான்கள், அன்றாட பயன்பாட்டு பொருட்கள், கருவிகள் என அத்தனையும் என் பாதுகாப்பில்தான் என்பதும் தெரிந்தது.
கச்சாப்பொருட்கள் ஸ்பெயினில் இருந்து தமாம் துறைமுகம் வரும், அங்கிருந்து பெரிய கண்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு இங்கே ஸ்டோருக்கு, அதாவது என்னிடம் வந்து சேரும். வந்தால் ஒன்றிரண்டு லாரியாக வராது, பத்து, பதினைந்து லாரி என தொடர்ந்து நான்கு, ஐந்து நாட்களுக்கு வந்துவிடும். எனக்கு என லேபர்கள் இல்லை, எனவே உற்பத்தி பிரிவுக்கு சென்று மேலாளர் லாஹாவை சந்தித்து லேபர்களை வாங்கி கண்டெய்னர்களில் இருந்து சரக்குகளை சேதம் இன்றி இறக்க வேண்டும். இந்த வேலையில் இறங்கிவிட்டால் வேறு வேலை எதுவும் செய்ய முடியாது, சாப்பிடவும் நேரம் இருக்காது. ஏனெனில் லாரிகளை காத்திருக்க செய்ய முடியாது. ஒரு பெரிய ராட்சச ஃபோர்க்லிப்ட், ஒரு சிறிய ரக ஃபோர்க்லிப்ட் என இரண்டையும் வைத்து சரக்குகளை இறக்க வேண்டும். அதேசமயம் ஒரே நிறத்தில் உள்ள வேறு வேறு ரக மூட்டைகள் கலந்து விடாமல் அதனதன் இடத்தில் அடுக்கப்படுகின்றதா என்பதையும் கவனத்தில் வைத்து, கூடவே ரக வாரியாக மூட்டை எண்ணிக்கையையும் குறித்துக்கொண்டு, லேபர்களையும் சோம்ப விடாமல் வேலை வாங்கி...ஒரு வழியாகி விடுவேன்.
இப்படித்தான் அந்த சனிக்கிழமையும் சரக்கு லாரிகள் வந்தன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனைவரையும் சாப்பிடுமாறு சொல்லிவிட்டு, நானும் வேகமாக வந்து, எனது உணவு டப்பாவில் இருந்து கபூசை எடுத்து இரண்டு வாய் சாப்பிட்டு இருப்பேன், முர்த்தாசா என்ற பாகிஸ்தானிய லேபர் இடதுகை விரலைப் பிடித்துக்கொண்டு ஓடி வந்தான். "சார்..." என்று தொடங்கி உருது மொழியில் வேகமாக ஏதோ சொன்னான். அவன் இடதுகை நடுவிரல் அடிபட்டு சதை பிய்ந்து ரத்தம் கொட்டியது. அதை பார்த்த உடன் எனக்கு கோபம் தலைக்கு ஏறியது. "முட்டாளே, கவனமாக வேலை செய்யக் கூடாதா? என்ன மனுஷன் நீ?" என்று கத்தினேன். உடனடியாக முதலுதவி பெட்டியை திறந்து (சென்ற வாரம்தான் வாங்கி இருந்தோம்) வேண்டியதை செய்துவிட்டு, நிர்வாக அதிகாரி ஆன ஜாபருக்கு தொலைப்பேசியில் செய்தியை கூறினேன். ஜாபர் லெபனான் தேசத்தவன். "ரத்தம் நிற்கவில்லை, விரல் மோசமாக அடிபட்டு கிழிந்து உள்ளது, உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்" என்றேன். "இப்போது வண்டிகள் எதுவும் இல்லை, நீ அவனை என் ஆபீசுக்கு அழைத்து வா, ஆக்சிடெண்ட் ரிப்போர்ட் எழுதவேண்டும்" என்றான். கூடவே, "ஃபோர்க்லிப்ட் ட்ரைவர் யார்?" என கேட்டான். "பாலேர்மோ" என்றேன். எனக்கு கோபம் கிர்ரென ஏறினாலும் பணிவாக, "சார், ஆக்சிடெண்ட் ரிப்போர்ட் பிறகு எழுதலாம், முதலில் இவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்" என்றேன். "நான் சொல்வதை செய்" என்று கத்திவிட்ட தொலைபேசியை துண்டித்தான்.
முர்த்தாசா என்ற அந்த லேபர், தொழிற்சாலையின் எல்லாப்பகுதிகளிலும் வேலை செய்து லாயக்கு படமாட்டான் என துரத்தி அடிக்கப்பட்டு கடைசியாக என்னிடம் தள்ளிவிடப்பட்டவன். அவன் இங்கேயும் சரியில்லை என நான் ரிப்போர்ட் செய்தால் அத்தோடு அவன் வேலை காலி. அவனுக்கு மூன்று தங்கைகள், இரண்டு தம்பிகள் உள்ளதாக என்னிடம் சொல்லி இருந்தான். அநேகமாக அன்று அவனுக்கு இந்திய மதிப்பில் மாதம் 5000 ரூபாய் சம்பளமாக இருந்திருக்கும். இதை அவனுக்குப் புரியவைத்து தட்டிக்கொடுத்து மொழி புரியாத நிலையிலும் புத்தி சொல்லி முரட்டுத்தனத்தை தணிய வைத்து வேலை வாங்கிக்கொண்டு இருந்தேன்.
என்ன நடந்தது? நான் சாப்பிட வந்த ஒரு சில நிமிடங்களில், லாரியின் உள்ளே இருந்து கடைசியாக இருண்டன சரக்கு மூட்டையை எடுக்க கம்பியின் கொக்கியை இவன் மாட்டிக்கொண்டு இருந்தபோது, கம்பியின் மறுமுனையை சங்கிலியால் பிணைத்து இருந்த ஃபோர்க்லிப்ட்டினை சட்டென பின்னால் இழுத்து இருக்கின்றான் பாலேர்மோ என்ற ட்ரைவர், அவன் பிலிப்பைன்ஸ் தேசத்தவன். சட்டென இழுத்த நொடியில் மூட்டைக்கும் கொக்கிக்கும் இடையில் இருந்த முர்த்தசாவின் விரல் சிக்கி சேதம் அடைந்துள்ளது. விசயம் என்னவெனில் இருவருக்கும் ஏற்கனவே தகராறு நடந்து, பாலேர்மோ போலீஸ் வரை சென்று வந்தான். ஆக இவான் நிலைமையும் சிக்கல்தான். ஜாபர், யாரை எப்போது சீட்டுக்கிழித்து வீட்டுக்கு அனுப்பி முதலாளி ஷேக்கிடம் நல்ல பேர் வாங்கலாம் என காத்துக்கொண்டு இருக்கும் கயவன். பாலேர்மோ தெரிந்தேதான் இதை செய்தான் என்று முர்த்தாசா எழுதிக்கொடுத்தால் அவன் வேலை காலி. ஜாபரின் ஆபீசுக்கு இவனுடன் நான் போனவுடன் ஜாபர் அதையேதான் கேட்டான், "பாலேர்மோ வேண்டும் என்றே செய்தானா? சொல்" என்றான். ஜாபர் மட்டுமல்ல, யாருமே எதிர்பாராத விதத்தில் "இல்லை" என்று சொல்லிவிட்டான் முர்த்தாசா. உடனடியாக ஆக்சிடெண்ட் ரிப்போர்ட் எழுதப்பட்டது, நான் கையெழுத்து இட்டேன். இதனிடையே ரத்தம் கொட்டிக்கொண்டே இருக்க, ஜாபர் தன் காரிலேயே அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான். அடிப்பட்டபின் ஏறத்தாழ அரை மணி நேரத்திற்கு பின் அவன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டது குறித்து, நான் மறுநாள் காலையிலேயே ஒரு ரிப்போர்ட் எழுதி, மிகப்பெரிய எந்திரங்களும் மிகப்பெரிய ஸ்டோரும் இருக்கும் தொழிற்சாலையில் எப்போதும் ஒரு டாக்டர், ஆம்புலன்ஸ் தயாராக இருப்பது அவசியம் என்று எழுதி கம்பெனியின் தலைவரான உரிமையாளருக்கு அனுப்பினேன்.
மறுநாளும் லாரிகளிலிருந்து சரக்கு மூட்டைகளை இறக்கிக்கொண்டு இருந்தபோது கம்பெனியின் உதவிப் பொதுமேலாளரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவன் உரிமையாளரின் தம்பி. "உனக்கென்ன, கம்பெனியின் ஜி.எம். என்ற நினைப்பா? உடனே வந்து என்னை சந்தி"என்று கத்திவிட்டு அழைப்பை துண்டித்தான். விசயம் விவகார வடிவம் எடுப்பதாக உணர்ந்தேன். நான் அங்கே சென்றபோது ஜாபரும் இருந்தான். தம்பிக்காரன் கையில் நான் தலைவருக்கு எழுதிய கடிதம். என்னைப் பார்த்ததும்"வாட் ஈஸ் திஸ்?" என்று கடிதத்தை மேசை மேல் தூக்கி எறிந்தான். "சார், இது என் ஆலோசனை மட்டுமே. தவிர, விபத்து நடந்து அரை மணி நேரத்திற்கு பின்னரே அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றீர்கள். அதுவே தலையிலோ வேறு முக்கிய இடங்களிலோ அடி பட்டு இருந்தால் அது ஆபத்தில் அல்லவா முடிந்து இருக்கும்! இது என் ஆலோசனைதான், எடுத்துக்கொள்வதும் தள்ளுவதும் உங்கள் விருப்பம்!" என்று கூறினேன். வேறு எதுவும் பேசாத உதவிப்பொது மேலாளர் "உன்னை வேலையில் இருந்து நீக்குகின்றேன், உன் இக்காமாவை கொடு" என்றான். இக்காமா என்பது அரசு அடையாள அட்டை. அதை திருப்பி வாங்கிக்கொள்வது என்பது ஒருவரை வேலையில் இருந்து நீக்குவது மட்டுமே. நான் பேசாமல் இருந்தேன். இந்த நேரத்தில்தான் லாஹாவும் ஜெஸீமும் உள்ளே வந்தார்கள். ஜெஸீம் தம்பிக்காரனின் செயலாளர் . தம்பி மீண்டும் உறுமினான். நான் உடனே " அப்படித்தான் முடிவு எனில் நான் கம்பெனியின் தலைவரிடம், அதாவது உன் அண்ணனாகிய முதலாளியிடம்தான் கொடுப்பேன். உன்னிடம் தர மாட்டேன், நீ உதவிப்பொது மேலாளர்தான்" என்று கூற, எதிர்பாராத இந்த தாக்குதலால் அவன் அடிபட்டு, அவமானப்பட்டதாக உணர்ந்தான். முகத்தில் குப்பென ரத்தம் பாய, பல்லைக்கடித படியே "தருவாயா மாட்டாயா" என்று நாற்காலியில் இருந்து எழுந்தான். நானோ நாற்காலியில் இருந்து எழாமல் உறுதியாக "மாட்டேன்" என்று சொல்ல, அங்கே ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாவதை ஜாபர் உணர்ந்தான். "நீ கொடுத்துவிடு, நான் பிறகு வாங்கி தந்து விடுகின்றேன்" என்று என்னிடம் அவசர வேண்டுகோள் வைத்தான். காரணம், இதற்கு முன் இதே போன்ற ஒரு சூழ்நிலையில் எகிப்து நாட்டை சேர்ந்த கணக்காளர் ஒருவர் மீது தம்பிக்காரன் தாக்குதல் நடத்த, அவனோ தொழில்முறை குத்துச்சண்டை வீரனைப்போலவே ஓங்கி ஒரு குத்துவிட்ட பின்னர்தான் முறையாக குத்துச்சண்டை பயின்றவன் என்ற விசயம் தெரிந்ததாம்.
நான் தொடர்ந்து மறுக்க, இறுதியில் அவன் என் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்துடன் பாய, நான் நாற்காலியில் இருந்து எழ, ஜாபர் சரியான நொடியில் இடையில் புகுந்து தடுக்க ஒரு கைகலப்பு நடந்தது. ஜாபர் அவனை தள்ளிக்கொண்டு போய் அரபு மொழியில் ஏதோ சமாதானம் சொல்லி உட்கார வைத்தான். இப்போது நான், "மிஸ்டர்! நீ அந்நிய நாட்டுக்குடிமகனை தாக்கி விட்டாய். நான் இதை சும்மா விட மாட்டேன். உடனே என்னை இந்தியாவுக்கு அனுப்பு" என்று சொல்லிவிட்டு என் மேலங்கியை கழற்றி நாற்காலியில் வீசிவிட்டு வெளியே வந்தேன். லாஹாவும் ஜெஸீமும் நம்ப முடியாத கண்களுடன் நடந்தவற்றை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். சற்றே நேரத்தில் விசயம் காட்டுத்தீ போல பரவி விட்டது.
ஜாபர் வெளியே வந்து, "நீ உடனே சென்று அவனிடம் மன்னிப்புக்கேட்டு விட்டு வேலையைத் தொடர்ந்து செய்" என்றான். "இவ்வளவு நடந்தபின் இங்கே வேலை செய்ய எனக்கு விருப்பம் இல்லை, அதுவும் இவன் கீழ். விரைவில் விமான டிக்கெட்டை கொடு" என்று சொல்லிவிட்டு கம்பெனியில் இருந்து வெளியேறினேன்.
வேலைக்கு செல்லாமல் க்வார்ட்டர்ஸிலேயே இருந்தேன். என் மன உறுதியை குலைக்கும் வண்ணம் ஐந்தாயிரம் ரியால் அபராதம் கட்டினால் ஊருக்கு அனுப்புவதாக நிர்வாகம் தூது அனுப்பியது. நான் உறுதியாக மறுத்தேன். இதனால் வேண்டும் என்றே என்னை சோர்வடைய செய்யும் நோக்கில் நாளைக் கடத்தியது நிர்வாகம். இடைப்பட்ட நாட்களில் நான் பத்தா என்ற நகரின் பெரிய மார்க்கெட் வீதிக்கு செல்வதும் கடைகளில் வேடிக்கை பார்ப்பதும் ஆக இருந்தேன்.
இந்த நேரத்தில் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டு இருந்தது. கிரிக்கெட்டில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் பாகிஸ்தான், இந்தியா அணிகள் விளையாடும்போது அல்லது ஒன்றுடன் ஒன்று மோதும்போது, பாகிஸ்தான் அணியில் ஒருவர் அவுட் ஆகும்போது இங்கே இந்திய மக்களின் பிளாக்கில் ஆரவாரம் விண்ணை தொடுவதும், இந்திய வீரர்களை அவுட் ஆக்கும்போது அங்கே பாகிஸ்தானிய பணியாளர்கள் பிளாக்கில் ஆரவாரம் வானத்தை பிளப்பதும் ஆக கிரிக்கெட் ஜுரம் உச்சக்கட்ட வெப்பநிலையில் இருந்தது. இது ஒருவேளை தகராறில் முடியுமோ என்று நான் பயப்படும் அளவுக்கு போனது.
நேற்று முன் தினம் வியாழன் அன்று கம்பெனி டிக்கெட்டை ஒரு டிரைவரிடம் கொடுத்து அனுப்பியது. டிரைவரும் நானும் மட்டுமே சென்றோம். விமானம் புறப்பட இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே கால அவகாசம் இருந்தது, திட்டமிட்டு செய்ததாக நினைத்தேன். ஆனாலும் விமான நிலையம் சென்றோம், இருக்கை இல்லாமல் திரும்பினோம். டிக்கெட் வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.
வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாள், அன்றுதான் கிரிக்கெட் இறுதிப்போட்டி, தற்செயலாக பாகிஸ்தான் இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு வந்தன. டிரைவர் இக்பால் பாகிஸ்தான் தேசத்தவர், மென்மையான, மரியாதை மிக்க குணம் கொண்டவர். அங்கு இருந்த ஆறு மாதங்களில், லதா மங்கேஸ்கரின் பழைய பாடல்களை ஒலிக்கவிடாமல் அவர் வாகனத்தை இயக்கி நான் பார்த்தது இல்லை. சரி, இன்றும் நானும் அவரும்தான் என்று எண்ணி இருந்த எனக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. முர்த்தாசாவும் பிற பாகிஸ்தானிய தொழிலாளர்களும் என் அறைக்குள் வந்தார்கள். முர்த்தாசா என் காலில் விழுந்து அழுதான். சக பாகிஸ்தானிய தொழிலாளர்கள் என் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆதரவாகவும் பணிவாகவும் ஏதேதோ சொன்னார்கள். மட்டுமின்றி, என் இரண்டு சூட்கேஸ்களையும் சுமந்துகொண்டு பெரிய சைஸ் வேனில் ஏற்றியதுடன், நண்பர்கள் மனோகரன், காதர் ஆகியோருடன் விமானநிலையத்துக்கு என்னை வழியனுப்ப வந்தார்கள். "பாய், ஒரு இந்தியனை வழியனுப்ப நம்ம கம்பெனியில் பாகிஸ்தான் மக்கள் வர்றது இதுதான் முதல்முறை" என்று மனோகரன் என்னிடம் மெதுவாக கூறினார், காதர் தலை அசைத்து ஆமோதித்தார். செல்லும் வழி எங்கும் பணியாளர் குடியிருப்புக்களில் இருந்து கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண்போரின் ஆரவாரம் சாலை வரை எதிரொலித்தது.
... .....
ரயிலின் ஜன்னல் இறுக மூடியிருந்தாலும் அதையும் மீறி சிலீர் காற்று உள்ளே நுழைந்து சுதந்திரமாக உடலை தீண்டுவதை தடுப்பதில் போர்வை தோல்வி கண்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக