பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர் - வாழ்க்கைப் பயணம்
ஆங்கில மூலம்: Zai Whitaker
தமிழில்: கமலாலயன்
வெளியீடு வானதி பதிப்பகம், தொலைபேசி 044 24342810, 24310769
பாம்புகளைப் பற்றி நம் கருத்தும் அவை குறித்த நம் பயமும் வழி வழியாய் நம் மூதாதையர் இடமிருந்து நம் சிந்தனைக்கு கடத்தப்பட்ட ஒன்று என்றே தோன்றுகின்றது. உண்மையில் நாம் அச்சமுற்று விலகி ஓடும் அளவுக்கு பாம்புகள் அல்லது எல்லா பாம்புகளுமே அத்தனை கொடிய விலங்குகளா? எல்லா பாம்புகளுமே விசப்பாம்புகள்தானா? தவிர, சினிமாக்களில் நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளபடி பாம்புகளை, அதிலும் காதலர்களாக இருக்கின்ற பாம்புகளை ஒரு வேளை நாம் கொன்றுவிட்டால் அவை மறுபிறவி எடுத்து தகுந்த பின்னணி இசையுடன் நம்மை கொன்று பழி தீர்த்தே தீரும் என்பது உண்மையா?
சென்னைக்கு 80களின் தொடக்கத்தில் வந்த புதிதில் எல்லோரையும் போலவே சென்னையை சுற்றிப்பார்க்க விரும்பிய போது சொல்லப்பட்ட இடங்களில் கிண்டி பாம்பு பண்ணையும் முட்டுக்காடு முதலைப்பண்ணையும் இருந்தன. இரண்டையும் பார்த்தேன். பாம்புகள், முதலைகள், ஆமைகள் குறித்த ஒரு அறிமுகமாகவும் அன்றைய பொழுதுபோக்காகவும் அது முடிந்தது. தவிர நேஷனல் ஜ்யாக்ரபி, டிஸ்கவரி, அனிமல் பிளானேட் சேனல்கள் 90களின் இறுதியில் அறிமுகம் ஆனபோது ஊர்வன குறித்த சற்று அதிகமான செய்திகளையும் ரோமுலஸ் விட்டேகர் என்ற சாகச மனிதரையும் தெரிந்துகொள்ள முடிந்தது. அதன் பின்னர்தான் பாம்பு, முதலைப்பண்ணைகள் அவருடைய சொந்த முயற்சியில் நிறுவப்பட்டவை என்று தெரிந்தது. மட்டுமின்றி சென்னையின் புறநகர் பகுதியில் வீடு கட்டிக்கொண்டு வந்த பின் சுற்றியுள்ள காலி மனைகள், புதர்களில் இருந்து அடிக்கடி என் வீட்டுக்கு வருகை தரும் வித விதமான ஊரும் விருந்தினர்கள் குறித்து கவனமும் அவை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆர்வமும் வந்தது.
நாட்கள் செல்ல செல்ல, என் குடும்பத்தினர்க்கு பாம்புகள் குறித்த அச்சம் விலகியது. அதன் விளைவுதான் மலைப்பாம்பு என்று தவறாக கருதி கொடிய கண்ணாடி விரியனை உயிருடன் பிடித்து ஒரு நாள் இரவு முழுக்க வீட்டில் வைத்திருந்ததும் மறுநாள் வண்டலூர் விலங்கு காட்சி சாலை ஊழியரை தொலைபேசியில் அழைத்து விசயம் சொன்னபோது மிக மிக கவனமாக அதை ஊருக்கு வெளியே காட்டில் கொண்டு சென்று விடுவித்ததும். கமலாலயன் அவர்களின் மொழிபெயர்ப்பில் ரோமுலஸ் ராஜநாகத்தை வெறும் கையால் பிடித்த சாகசங்களை படித்து வியப்புற்றாலும், மிகுந்த பயிற்சி பெற்ற அவரே தொடக்க காலங்களில் பாம்புகளிடம் பெற்ற கடிகளால் இப்போதும் கூட கை விரல்களில் தொந்தரவை அனுபவித்து வருகின்றார் என்பதை தெரிய வரும்போது நான் உயிருடன் இருப்பதே உண்மையில் மிகப்பெரிய அதிசயம் என்றுதான் சொல்லவேண்டும்.
சென்ற வருடம் வடநெம்மேலியில் உள்ள முதலைப்பண்ணைக்கு சென்றிருந்த போது இருளர் சமூக சகோதரர்கள் பாம்பு விஷம் எடுக்கும் நிகழ்ச்சியை பார்த்தோம். இந்தியாவில் காணப்படும் அதிக விசமுள்ள பாம்புகளில் முதல் நான்கு இடங்கள் நாகப்பாம்பு, கட்டு வரியன் (விரியன் அல்ல), கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகியவற்றுக்கே. அமெரிக்காவில் பிறந்து, இளம் வயதில் கப்பலில் நல்ல ஊதியம் கொடுத்த வேலையை விட்டு விட்டு பல்லாயிரம் மைல்கள் கடந்து வந்து இங்கே தமிழகத்திலும் கர்நாடகாவின் ஆகும்பேயிலும் அந்தமானிலும் பாம்புகளுக்காகவும் முதலை, ஆமைகளுக்காகவும் பண்ணைகளை அமைக்கின்றார். இந்த உயிர்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்கின்றார், அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றார். புகழ்பெற்ற பறவை மனிதர் சாலிம் அலியின் சகோதரியின் மகளான ஜாயை 1974இல் திருமணம் செய்து கொள்கின்றார். இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள அடர்ந்த காடுகள், மலைகள் என சுற்றித்திரிகின்றார், காடுகளில் படுத்து உறங்குகின்றார், பாம்புகளிடம் கடிப்படுகின்றார். மனைவியுடன் தேனிலவு சென்ற இடமோ நிலாம்பூர் பள்ளத்தாக்கு. இருவரும் காட்டுக்குள் பாறையில் படுத்து இரவை கழிக்கின்றனர். "அந்த இரவு காதல்வயப்பட்ட இரவாக இருக்கவில்லை. ஆகப் பெரும்பான்மையான எங்களுடைய உரையாடலும் கூட, குழிவிரியன்களைப் பற்றியதாகவே இருந்ததால், அதுவும் காதல் மணம் கமழாத பேச்சுதான். ஆனால், ஊர்வன வகை உயிரினங்களின் மீது வலிமையான ஓர் ஆர்வப்பெருக்கின் தொடக்கமாக அமைந்தது அந்த இரவுதான். எங்களுடைய திருமண வாழ்வின் அஸ்திவாரமாக மாறியதும் கூட அந்த ஆர்வப்பெருக்குத்தான்" என தன் தேனிலவு பாம்புகள், எலிகள், பூச்சிகளுடன் கழிந்த அனுபவத்தை ஜாய் எழுதுகின்றார். உண்மையில் இந்த நூலின் மையமான கருவும் அதுவே - ஊர்வன வகை உயிரினங்களின் மீது வாசகருக்கும் மக்களுக்கும் ஒரு ஆர்வப்பெருக்கை உண்டாக்குவது, விசப்பிராணிகள் என நாம் வெறுத்து ஒதுங்கும் பாம்புகள், முதலைகள் உள்ளிட்ட ஊர்வன வகை உயிர்கள் இயற்கையை பேணுவதிலும் சுற்றுச்சூழல் சமநிலையை உறுதிப்படுத்துவதிலும் எத்தகைய தலையாய பங்கினை ஆற்றுகின்றன என்பதை நமக்குப் புரிய வைப்பது.
இது மட்டுமா? சென்னையின் புறநகர், செங்கல்பட்டு மாவட்டம் ஆகிய பகுதிகளில் வாழும் இருளர் இன மக்கள் இயற்கையிலேயே பாம்புகளை பிடிப்பதிலும் அவற்றை கையாள்வதிலும் மிகுந்த திறன் படைத்துள்ளவர்கள் என புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ஹாரி மில்லர் ரோமுக்கு அறிமுகம் செய்து வைத்தபின், அந்த மக்களின் பாரம்பரிய அறிவை பயன்படுத்தி, இந்தியாவில் பாம்புக்கடிக்கு மருந்து தயாரிக்கும் மிகப்பெரிய சமூகத்தேவையை ரோம் எப்படி நிறைவேற்றுகின்றார் என்பதையும் அவர்களுக்கான ஒரு கூட்டுறவு சங்கத்தை அவர் எப்படி வெற்றிகரமாக நிறுவி அந்த மக்களின் பொருளாதாரம் மேம்பட உதவினார் என்பதையும் ஒரு நாட்குறிப்பு போல இல்லாமல் மிக சுவாரஸ்யமான ஒரு சாகசக்கதை போல தொய்வு இல்லாமல் சொல்லிக்கொண்டே போகின்றார் ஜாய்.
நூலை வாசிக்கும்போது ரோம் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் நமக்கு மரியாதை பிறக்கின்றது. இயற்கை மீதும் சக உயிர்கள், மிருகங்கள், பறவைகள் மீதும் அன்பு பிறக்கின்றது, எல்லா உயிர்களும் ஒன்றாக கூடி சமாதான சக வாழ்வு வாழ்வதில்தான் வாழ்க்கை அர்த்தப்படும் என்று புரிகின்றது. இது நாள் வரையிலும் நாம் உயிர்கள் குறித்தும் இந்த பூமி குறித்தும் கொண்டுள்ள பார்வையில் ஒரு மாற்றத்தை இந்த நூல் உருவாக்குகின்றது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நூலை வாசிப்போர் உண்மையில் பாக்கியசாலிகள் என்று மட்டும் சொல்ல முடியும்.
1988இல் ஆங்கிலத்தில் வெளியான நூல் கமலாலயன் அவர்களின் உழைப்பால் இப்போது நமக்கு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. அழகு தமிழில் அவர் மொழியாக்கம், ஒரு குளிர்ந்த நீரோடையில் கால் நனைத்து நடப்பது போல சுகமாக உள்ளது. அவரையும் வெளியிட்ட வானதி பதிப்பகத்தாரையும் பாராட்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக