திங்கள், நவம்பர் 09, 2020

வள்ளியப்பன் மெஸ்ஸும் மார்கரீட்டா ச்சீஸ் பிஸ்ஸாவும்

 

மதுரையில் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கல்லூரியில் எல்லாம் சேரவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக நானும் கைத்தறி நெசவுக்கு சென்றேன். இடையில் நெசவுக்கான புது ஜக்கார்ட் தறிகள் ஏராளமாக நிறுவப்பட்ட போது அவற்றுக்கான புதிய ஜக்கார்ட் டிசைன் அட்டை தயாரிப்பது, புதிய தறியையே நிறுவி, பாவும் ஊடுமாக புதிய கைத்தறி பூவேலைப்பாடு கொண்ட பூத்துவாலையை முதல் முதலில் நெய்து, வண்ணமயமாக மின்னும் துண்டை அதிசயமாக பார்ப்பது என கூலிக்கு வேலை செய்தேன். சோவியத் ரஷியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்த துண்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கட்சி, சி ஐ டி யு என அறிமுகம் ஆன புதிது என்பதால் நம் உழைப்பில் உருவாகும் ஒரு துண்டு சோவியத்துக்கு செல்கின்றது என்று பெருமைப்பட்டுக் கொண்டதும் உண்டு. தவிர வட மாநிலங்களுக்கும் இந்த துண்டுகள் விற்பனை ஆகின. வட இந்திய முதலாளிமார்களுடன் உரையாடும் பொருட்டு செல்லூரின் பண்ணாடிமார்கள் இந்தி ஆசிரியர்களை வைத்துக்கொண்டு இந்தி கற்றுக்கொண்டார்கள்!
மலையாளிகள் கணிசமான அளவுக்கு செல்லூரில் நெசவுத்தொழிலில் ஈடுபட்டனர். அவர்களுக்காக என்றே மாலை நேரத்தில் அரிசிப்புட்டு, கேழ்வரகுப்புட்டு, நல்லெண்ணெய், சுண்டக்கடலை, அப்பளம் என விற்கும் கடைகள் இருந்தன. வாய்க்கு ருசியான இந்த உணவுகளுக்கு நானும் பழகினேன். இதை சாப்பிட்டுவிட்டு மீனாட்சி காலேஜில் இருந்து கல்பாலம் செல்லும் வழியில் உள்ள தள்ளுவண்டிகளில் தோசை, கறி, குடல், ஆம்லெட் என அதையும் நிரப்பி வீட்டுக்கு சென்று 'இரவு உணவை' முடிப்பேன். எல்லாமும் 2, 3 ரூபாயில் முடிந்துவிடும். ஆனையூர் வெங்கடாசலபதி தியேட்டரில் படம் பார்க்கும் முன் வெளியே உள்ள பரோட்டா கடையில் கறி, ஆம்லெட், பரோட்டா என்று சாப்பிட்டால் 1.25 ரூபாயில் முடிந்து விடும்.
ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் ஆறு மாதங்கள் வேலை செய்தேன். தினசரி 5, 6 ரூபாய்தான் சம்பளம். ஓவர் டைம் செய்தால் மணிக்கு25 பைசா கிடைக்கும். 2 ரூபாய்க்கு தட்டு நிறைய மாட்டுக்கறி பிரியாணி கிடைக்கும், நெய் மணக்க மணக்க சாப்பிட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
பின்னர் ஆவடியில் பயிற்சியாளர் வேலை கிடைத்து சென்னை வந்தேன். ஊதியம் அல்ல, உதவித்தொகைதான். ஒரு வருடம் என் அண்ணனுடன் மிகவும் பிஸியான குடோன் தெருவில் தங்கி இருந்தேன். ஆவடிக்கு மாத சீசன் டிக்கெட் 18 ரூபாய்தான். காலை சிற்றுண்டி தொடங்கி இரவு உணவு வரை செலவு 7 ரூபாயை தாண்டாது. குடோன் தெரு முனையில் என் எஸ் சி போஸ் சாலையில் மாடியில் இருந்த முனியாண்டி விலாசில் 2 ரூபாயுடன் இரவு சாப்பாடு முடியும், ஆம்லெட் எனில் 50 பைசா எக்ஸ்ட்ரா. உடன் பயிற்சி பெற்ற சிராஜுதீனின் மரியாதைக்குரிய தந்தையார் வழக்கமாக ஒரு மெஸ்ஸில் சாப்பிடுவார். தம்பு செட்டி அல்லது மினர்வா தியேட்டர் அருகில் என்று ஞாபகம், ஞாயிறு ஆனால் நானும் சிராஜுடன் அங்கே இருப்பேன், கறி சோறுக்காக! (டிவி சீரியல் நடிகர் ஃபரினாவின் சித்தப்பாதான் சிராஜ், பிற்காலத்தில்!). அந்தப் பகுதியில் இப்போதும் நிறைய மெஸ்கள் உள்ளன. மூன்று மாதம் முன்புதான் சிராஜின் தந்தை காலமானார், அவர் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். எனது வாசிப்பு பழக்கம் காரணமாக என் மேல் அன்பு செலுத்தினார். பின்னர் ஆவடி வந்து குடியேறினேன்.
75 ரூபாய் மாத வாடகையில் அறை. மாதம் 175 ரூபாய், ஆம் 175, கொடுத்து வள்ளியப்பன் மெஸ்ஸில் மூன்று வேளையும் சாப்பிட்டேன். திருமணம் ஆகாமல் ஆவடிக்கு வேலைக்கு வந்த இளைஞர்களுக்கு சோறு போட்டவர் வள்ளியப்பன். ஏழு நாட்களுக்கும் ஏழு விதமான சிற்றுண்டி கள் கிடைக்கும் அவரிடம்! தவிர ஒரு சிறு எவர்சில்வர் அண்டாவில் தேநீர் வேறு, இலவசமாக! அந்த நேரத்தில் அண்ணா பல்கலையில் மாலை நேர பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் கிண்டியில் இருந்து பூந்தமல்லி வந்து அங்கிருந்து ஆவடிக்கு பேருந்திலோ லாரிகளிலோ ஏறி இரவு 11 மணிக்கு பசியுடன் மெஸ்க்கு வருபவர்களுக்கு தனியாக சோறு, குழம்பு என எடுத்து வைத்திருப்பார் வள்ளியப்பன். காலையில் பழைய சோறு வேண்டும் என சொல்லி வைத்தால் பத்திரமாக எடுத்து வைத்து கொடுப்பார் வள்ளியப்பன்.
மெஸ் நடத்திய மற்ற இருவர் எனில் பெரியசாமி ஒருவர், மற்றவர் சுப்ரமணி மெஸ். தோழர் கா சின்னையாவின் உறவினர் பெரியசாமி. அதிர்ந்து பேச தெரியாது அவருக்கு. ஆனால் நாம் கேட்கும் அனைத்தும் சத்தம் இல்லாமல் இலைக்கு வரும். அவரிடம் நான் சாப்பிட்ட மீன் குழம்பின் சுவை தனியானது. நம் முகத்தை பார்த்தே இலையில் வேண்டியதை கொண்டு வந்து கொட்டுவார். முருகேசன் மெஸ் கூரை வேயப்பட்ட ஒன்று. தோசை, இட்லி அங்கே அபாரம். காமராஜநகரில் வெங்கடாசலம் மெஸ். அவரும் அப்படியே. இலை காலியாக ஆக கொண்டு வந்து நிரப்பிக்கொண்டே இருப்பார். என்ன வேணும் என்று கேட்டுக்கொண்டே இருப்பார், வயிறு நிறையும். பசு மாடுகள் வளர்த்து வந்தார்.
அப்போது நான் வாங்கிய ஊதியம் மிக குறைவு. வள்ளியப்பனுக்கு 175 ரூபாய் மாதக்கடைசியில் கொடுக்க முடியாமல் ஒரு வாரம் தலைமறைவாக இருந்ததும் உண்டு.
இப்போது வள்ளியப்பன் மெஸ் இல்லை. பெரியசாமி மெஸ் அவர் ஓய்வுக்குப்பின் வித விதமான வடிவம் எடுத்து வந்தது. சில நாட்கள் முன்பு ஐஸ் க்ரீம் பார்லர் வடிவம் எடுத்து இருந்தது. பக்கத்தில் இருந்த சுப்ரமணி மெஸ் இடிக்கப்பட்டு பெரிய காம்ப்ளக்ஸ் ஆக உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் பிஸ்ஸா வேண்டும் எனக்கேட்டு நின்றான் மகன். பிஸ்ஸா சாப்பிடுவது இல்லை என்று உறுதியுடன் இருந்த என்னை இளக்கினான். டொமினோஸ் சென்றேன். முதல்முதலாக ஒரு பிஸ்ஸா கடையில் நுழைகின்றேன். உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த பலர் ஆங்கிலத்தில் டாக்கிக்கொண்டு இருந்தார்கள். இத்தாலிய மொழியில் பேசியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கலாம் என்று நினைத்தேன். டிவி திரையில் ஓடிக்கொண்டு இருந்த மெனுவில் இருந்து குத்துமதிப்பாக மார்கரீட்டா ச்சீஸ் பிஸ்ஸா என்று தெரிவு செய்தேன், 375 ரூபாய்க்கு பில் வந்தது. வள்ளியப்பன் மெஸ்ஸின் இரண்டு மாத பில்லுக்கும் மேல் 25 ரூபாய் அதிகம். காணாமல்போன பெரியசாமி மெஸ்சுக்கும் சுப்ரமணி மெஸ்சுக்கும் அருகில் இருந்த சில பழைய வீடுகளை இடித்துவிட்டு அதன் மேல்தான் டொமினோஸ் கண்ணாடி பளபளப்புடன் நிற்கின்றது.
வள்ளியப்பனும் பெரியசாமியும் வெங்கடாசலமும் மேல் சட்டை அணியாமல் லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு கண்ணுக்குத்தெரியாமல் டொமினோஸ் வாசலில் நின்று என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டு இருப்பதாகப்பட்டது.

கருத்துகள் இல்லை: